கிறிஸ்தவச் சேவை
ஆவிக்குரிய பகுத்தறிவு மங்கிவிட்டது
கிறிஸ்துவின் ஊழியப்பணிகளை சபை செய்யாமல் இருப்பதால் உண்டாகிற விளைவை மட்டும் உலகத்தில் நாம் காணவில்லை. இவ்வாறு புறக்கணித்திருப்பது, தேவ பணியின் மேன்மையான, பரிசுத்த நலன்களை முடக்குகிற நிலை உருவாக்கியிருப்பதையும் காண்கிறோம். விமர்சனத்தின் ஆவியும், கசப்பின் ஆவியும் சபையில் நுழைந்திருக்கிறது. அநேகருடைய ஆவிக்குரிய பகுத்தறிவு மங்கிவிட்டது. இதனால் கிறிஸ்துவின் நோக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2 TamChS 56.1
நம்முடைய நிலையை யோசிக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆண்டவர் நமக்கு பரலோகத்தை அடைக்கவில்லை; மாறாக, நாம் தொடர்ந்து பின்வாங்கியே செல்வதுதான் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்திருக்கிறது. ஆக்கினைப் பயமும் தள்ளப்படுவோம் என்கிற பயமும் இல்லாமல், பெருமையும் இச்சையும் உலக ஆசையும் இருதயத்தில் குடிகொண்டுள்ளன. படுமோசமான, தகாத்துணிவுமிக்க பாவங்கள் நம்மத்தியில் காணப்படுகின்றன. ஆனாலும், சபை செழிப்பதாகவும், அதன் எல்லைகளுக்குள் ஆவிக்குரிய வளர்ச்சி காணப்படுவதாகவும் பொதுவாக நம்பப்படுகிறது. தன் தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றாமல், எகிப்தை நோக்கி சபை பின்நோக்கிச் செல்கிறது. தங்களிடம் ஆவிக்குரிய வல்லமை இல்லாதது குறித்து யாருமே எச்சரிப்போ திகைப்போ அடைவதில்லை. தேவ ஆவியானவருடைய சாட்சிகளின் மேலான சந்தேகமும் அவநம்பிக்கையும் எங்குமுள்ள நம் சபைகளைப் புளிக்கச் செய்கின்றன. இதைத்தான் சாத்தான் விரும்புகிறான். 3 TamChS 56.2