கிறிஸ்தவச் சேவை

24/289

சாத்தானிய மரணத்துக்கேதுவான மயக்க நிலை

தேவமக்கள் எச்சரிப்புக்குச் செவிகொடுத்து, காலங்களின் அடையாளங்களைப் பகுத்தறியவேண்டும். கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக உள்ளன; எனவே, சத்தியத்தின்படி வாழ்வதாகச் சொல்கிறவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு, உண்மையோடு போதிக்கவேண்டும். போதகர்களும் விசுவாசிகளும் விழித்துக்கொள்ள வேண்டுமென்று தேவன் அழைக்கிறார். பரலோகம் முழுவதும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பூலோகவரலாற்று நிகழ்வுகள் முடிவைநோக்கி வேகமாக நகருகின்றன. கடைசிநாட்களின் அழிவுகளுக்கு மத்தியில் வாழ்கிறோம். இன்னும் கொடிய அழிவுகள் காத்திருக்கின்றன; ஆனாலும், இன்னும் நாம் விழிக்கவில்லை.தேவநோக்கத்திற்காகச் செயல்படாமலும், ஆர்வமில்லாமலும் இருப்பது கொடுமையான நிலைமை ஆகும். இந்த மரணத்துக்கேதுவான மயக்கத்தை சாத்தானே கொண்டுவருகிறான். 2 TamChS 54.1

அவநம்பிக்கையானது மரணத்தின் மேகத்தைப்போல நம் சபைகளைச் சூழ்ந்துள்ளது. ஏனென்றால், விலையேறப்பெற்ற சத்தியத்தை அறியாதோருக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள தாலந்துகளை சபையார் பயன்படுத்தாததே அதற்கு காரணம். பாவம் மன்னிக்கப்பட்டு, ஒளியில் களி கூருகிற ஆத்துமாக்கள் மற்றவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க வேண்டுமென்று ஆண்டவர் அழைக்கிறார். 3 TamChS 54.2

தேவமக்கள் இறுதியாக தராசில் நிறுக்கப்பட்டு, குறைவுள்ளவர்களாகக் காணப்படும்படிக்கு, சத்தியத்தைப் பரப்பும் பணியில் அவர்கள் தங்களுடைய பங்கைச் செய்யாமலிருப்பதற்காக அவர்களைச் செயல்படாத நிலையில் வைக்கவேண்டுமென்று சாத்தான் இப்போது முயல்கிறான். 4 TamChS 54.3

மனிதர்கள் அழிவில் இருக்கிறார்கள். ஏராளமானோர் அழிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவைப்பின்பற்றுவதாகச் சொல்கிறவர்களில் இந்த ஆத்துமாக்கள்மேல் பாரமுள்ளவர்கள் வெகுசிலர்தானே. உலகத்தின் இறுதி முடிவு தராசில் ஆடிக் கொண்டிருக்கிறது; ஆனால், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலேயே மிக ஆழமான சத்தியத்தை விசுவாசிப்பதாகச் சொல்கிறவர்களை இது கொஞ்சமும் அசைப்பதில்லை. ஒரு மனிதனாக வந்து மனிதர்களைத் தொடுவதற்கும், மனிதர்களை தேவனிடம் இழுப்பதற்கும் கிறிஸ்துவை தம் பரலோக வீட்டையே விடச்செய்த அன்பு இவர்களிடம் காணப்படுவதில்லை. தேவமக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலை, முடக்கதன்மை காணப்படுகிறது; இப்போதைய கடமை பற்றி அறியவிடாமல் அது தடுக்கிறது. 1 TamChS 55.1

கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்வோரிடம் காணப்படுகிற கொஞ்சமும் ஆர்வமற்ற சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி சாத்தான் தன் ஆற்றல்களைப்பலப்படுத்துகிறான். ஆத்துமாக்களை தன் பக்கம் சேர்க்கிறான். கிறிஸ்துவுக்காக எதுவுமே செய்யாமலிருந்தும் அவருடைய பக்கம் இருப்பதாக நினைக்கிற அநேகர், சத்துருவானவன் அனுகூலத்தைப்பெற உதவி செய்கிறார்கள். எஜமானுக்காக விழிப்புமிக்க ஊழியர்களாகப் பணியாற்றுவதில்லை; செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதில்லை; பேச வேண்டியவற்றைப் பேசாமல் இருக்கிறார்கள். ஆகையால், கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தியிருக்கவேண்டிய ஆத்துமாக்களை சாத்தான் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இவர்கள் அனுமதிக்கிறார்கள். 2 TamChS 55.2

வேதவாக்கியங்களை நான் ஆராயும்போது, இந்தக் கடைசி நாட்களில் உள்ள தேவனுடைய இஸ்ரவேலரை நினைத்து அஞ்சுகிறேன். விக்கிரகாராதனையை விட்டு ஓடும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்கள் தூங்கி, தேவனைச் சேவிப்பவர்களுக்கும் அவரைச் சேவிக்காதவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறியமுடியாத அளவுக்கு உலகத்திற்கு ஒத்த வேஷத்தைத் தரித்து விட்டார்களோவென்று நான் அஞ்சுகிறேன். கிறிஸ்துவுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையேயுள்ள தூரம் அதிகரித்து வருகிறது. உலகத்திற்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள தூரம் குறைந்து வருகிறது. கிறிஸ்துவின் மக்களெனச் சொல்பவர்களுக்கும் உலகத்தாருக்கும் இடையேயுள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட மறைந்தே போய் விட்டது. பண்டைய இஸ்ரவேலைப்போல, தங்களைச் சுற்றிலுமுள்ள தேசத்தாருடைய அருவருப்புகளைத் தெரிந்துகொண்டார்கள். 1 TamChS 55.3