கிறிஸ்தவச் சேவை
சபைப்பணியில் வாலிபர்கள்
நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி, பயிற்சிபெற்ற வாலிபத் தாலந்து நம் சபைகளுக்குத் தேவை. பொங்கியெழுகிற ஆற்றல்களை உடைய வாலிபர்கள் ஏதாவது சாதிப்பார்கள். அந்த ஆற்றல்களை சரியான வாய்க்கால்களில் திருப்பி விடாமல் போனால், தங்கள் சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும் விதத்திலும், தங்களோடு பழுகுகிறவர்களுக்குப் பாதிப்பு உண்டாகும் விதத்திலும் வாலிபர்கள் அவற்றைப் பயன்படுத்திவிடுவார்கள். 2 TamChS 45.1
தேவனிடம் வாலிபர்கள் தங்கள் இருதயங்களை ஒப்படைத்ததும் நம் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. தேவபணியில் அவர்களுக்கு ஆர்வமிருக்கவேண்டும்; தேவநோக்கத்தைப் பரப்பும் பணியில் அவர்கள் ஏதாவது செய்யவேண்டுமென்று தேவன் விரும்புவதை அவர்கள் உணரவேண்டும். செய்யவேண்டிய பணிகள் ஏராளம் என்பதைக்காட்டி, ஊழியம் செய்யும்படிவாலிபர்களை வற்புறுத்தினால்மட்டும் போதாது. எஜமானுக்காகப் பணிசெய்ய வேண்டிய விதத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கான மிகச் சிறந்த பாணிகளில் அவர்களைப்பயிற்றுவித்து, நல்வழிப்படுத்தி, தீவிரமாக ஈடுபடுத்தவேண்டும். அமைதியான, பாசாங்கற்ற வழிகளில் தங்கள் சகவாலிபர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். அவர்கள் பங்கெடுக்கும்படி ஊழியப் பணியில் பல பிரிவுகளை சரியாகத் திட்டமிட்டு ஆரம்பித்து, அவர்களுக்கு அறிவுரைகளும் உதவியும் வழங்கவேண்டும். அவ்வாறு தேவனுக்குப் பணிசெய்ய அவர்கள் கற்றுக்கொள்வார்கள். 3 TamChS 45.2