கிறிஸ்தவச் சேவை
துதியும் ஸ்தோத்திரமும்
ஜெபம் செய்வது ஒரு கடமை; அதைப்போல, உள்ளத்தின் நிறைவோடும் உண்மையோடும் தேவனைத் துதிப்பதும் ஒரு கடமைதான். விழுந்துபோன மனிதர்கள்மேல் தேவன் காட்டின அற்புத அன்பை நாம் புரிந்து போற்றுவதையும், முடிவேயில்லாத அவருடைய நிறைவிலிருந்து பெரிய பெரிய ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பதையும் உலகத்திற்கும் பரலோக ஜீவிகளுக்கும் நாம் காட்டவேண்டும். பரிசுத்த ஆவியின் விசேஷித்த அருள்மாரியைப் பெற்றவர்கள், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காகச் செய்கிற அற்புதக் கிரியைகளையும், அவருடைய நற்குணங்களையும் எண்ணிப்பார்ப்பார்கள். அப்போது, கர்த்தரில் மகிழ்ச்சியடைவதும், அவர் சேவையைப் பயன்மிக்கவகையில் செய்வதும் பெருமளவில் அதிகரிக்கும். இவ்வாறு செய்வது, சாத்தானின் வல்லமையை முறியடிக்கிறது; முறுமுறுக்கிற, குறை கூறுகிற ஆவியை அகற்றுகிறது. அதனால் சோதனைக்காரன் செயல்பட இடமிருக்காது. பூமியில் வாசஞ்செய்கிறவர்கள் பரலோகவாசஸ்தலங்களைச் சுதந்தரிக்கிற தகுதியை வளர்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட சாட்சி மற்றவர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை ஆதாயம்பண்ண இதைவிட சிறந்த வழி வேறு இல்லை. 2 TamChS 279.1
கர்த்தர் நல்லவர், வல்லமையுள்ளவர் என்று நாம் சாட்சி கூறுவதை அவர் விரும்புகிறார். அவரைத் துதித்து நன்றி கூறும்போது, நாம் அவரைக் கனப்படுத்துகிறோம். “ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” என்று கர்த்தர் சொல்லுகிறார். வனாந்தர வழியாய் பயணம் செய்த இஸ்ரவேல் ஜனங்கள், பரிசுத்த பாடல்களால் தேவனைத் துதித்தார்கள். கர்த்தருடைய பிரமாணங்களையும் வாக்குத்தத்தங்களையும் அந்தப் பயணிகள் வழிநெடுகிலும் இசைத்துப் பாடிக்கொண்டே சென்றார்கள். கானானிலும் பரிசுத்த பண்டிகைகளுக்காகக் கூடிவந்தபோது, தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளை எண்ணிப்பார்த்து, நன்றியால் நிறைந்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரிக்க வேண்டியிருந்தது. தமது ஜனங்களின் வாழ்க்கை முழுவதுமே துதியின் வாழ்க்கையாக விளங்க வேண்டுமென்று தேவன் விரும்பினார். 1 TamChS 279.2