கிறிஸ்தவச் சேவை
விடாய்த்துப்போன படைகளை அணிதிரட்டுதல்
அமைதியாகவும் அலங்கம்நெடுகிலும் நெகேமியா சுற்றிவந்தான். “நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்க வில்லை” என்கிறான். நோட்டமிடுகிற வேதனைமிக்க அந்தப்பணி குறித்து எதிரிகளுடைய கவனமும் நண்பர்களுடைய கவனமும் தன்பக்கம் திரும்புவதை நெகேமியா விரும்பவில்லை. ஏனென்றால் பரபரப்பான செய்தி கிளம்பி, அந்தச் செய்திகள் பரவி, தன் பணி கெடுவதையோ தடைபடுவதையோ அவன் விரும்பவில்லை. பின், அந்த இராத்திரி வேளை முழுவதிலும் நெகேமியா ஜெபித்தான். ஏனென்றால், விடாய்த்தும் பிரிவுபட்டும் கிடந்த தன் தேசத்தாரை காலையில் எழுப்பி, ஒன்றுசேர்ப்பதற்கு ஊக்கமாக முயலவேண்டுமே! 1 TamChS 228.2
நகரத்தின் மதில்களைக் கட்டும் பணியில் குடிமக்கள் தன்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று ராஜாவிடம் அதிகாரம் பெற்று வந்திருந்தாலும், அதிகாரத்தினால்மட்டுமே அதைச் சாதிக்க நெகேமியா விரும்பவில்லை. மாறாக, மக்களுடைய நம்பிக்கையையும் அனுதாபத்தையம் பெறமுயன்றான். தான் மேற்கொண்ட மாபெரும் பணியின் வெற்றிக்கு மக்களுடைய இருதயங்களும் கைகளும் ஒன்றுபடவேண்டியது மிகவும் முக்கியமென்பதை அறிந்திருந்தான். TamChS 229.1
மறு நாளில் மக்கள் அனைவரையும் அவன் அழைத்தபோது, தூங்கிக்கொண்டிருந்த அவர்களுடைய ஆற்றல்களை எழுப்பவும், சிதறிக்கிடந்தவர்களை ஒன்று சேர்க்கவும் ஏற்றவாறு தன் வாதங்களை முன்வைத்தான். பெர்சிய ராஜாவின் அதிகாரமும் இஸ்ரவேலின் தேவனுடைய அதிகாரமும் தனக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டி, அதுகுறித்த அனைத்தையும் அவர்களிடம் சொல்லி, அந்தச் சாதகமான சூழலைப்பயன்படுத்திக்கொண்டு, தன்னோடு எழுந்து, ‘மதிலைக்கட்டுவதற்கு வரமுயுமா, முடியாதா?’ என்கிற கேள்வியை நேரடியாக மக்களிடம் எழுப்பினான். இந்த வேண்டுகோள் அவர்களுடைய இருதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பரலோகத்தின் தயவு தங்களுக்கு இருப்பதை அறிந்ததும், தாங்கள் பயந்ததை எண்ணி அவர்கள் வெட்கப்பட்டார்கள். புதிய தைரியத்தோடு, “எழுந்து கட்டுவோம்” என்று ஏககுரலில் பெரும்சத்தமாய் சொன்னார்கள். 2 TamChS 229.2
நெகேமியாவின் பரிசுத்த ஆற்றலும் நம்பிக்கையும் மக்களையும் பற்றிக்கொண்டன.அந்த ஆவியைப் பெற்றதும், தங்கள் தலைவனுக்கொத்த ஒழுக்கநிலைக்கு எழுந்துநின்றார்கள். அவனவன் தன் திராணிக்குத் தக்கதாக ஒரு நெகேமியாவாகக் காணப்பட்டான். ஒவ்வொருவனும் தன் சகோரனை அந்த வேலையில் பெலப்படுத்தி, திடப்படுத்தினான். 1 TamChS 229.3