கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்
பொக்கிஷத்தின் மதிப்பு
இலாபம் ஈட்டுவதில் மனிதர்கள் மூழ்கி இருந்ததையும், நித்தியத்திற்கடுத்த நிஜங்களைக் காணமறந்ததையும் இரட்சகர் கண்டார். அந்தத் தீமையை திருத்த முயன்றார். ஆத்துமாவை முடக்கிவந்த வசீகரநிலையிலிருந்து விடுவிக்க விரும்பினார்; உரத்தசத்தமாக: மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று கேட்டார். மத்தேயு 16:26. விழுந்து போன மனு குலத்தார் நித்தியத்திற்கடுத்த நிஜங்களைக் காணும் படி, அவர்கள் காணமறந்த மேலான உலகத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். தேவனுடைய சொல்லொண்ணா மகிமை யால் பிரகாசித்த முடிவேயில்லாத அந்த உலகத்தின் வாசலுக்கே அவர்களை அழைத்துச்சென்று, அங்குள்ள பொக்கிஷத்தைக் காட்டுகிறார். COLTam 103.1
அந்தப் பொக்கிஷத்தின் மதிப்பு வெள்ளியையும் அல்லது பொன்னையும் விட மேலானது. இவ்வுலக சுரங்கங்களில் கிடைக்கும் ஐசுவரியங்கள் அதற்கு ஒப்பாகாது. COLTam 103.2
“ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அதற்கு ஈடாகத்தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக்கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல ; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப் பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது” யோபு 28:14-18. COLTam 103.3
அப்படிப்பட்ட பொக்கிஷம் வேதவாக்கியங்களில் உள்ளது. வேதாகமமானது தேவனுடைய மகத்தான பாடப்புத்தகமாகும்; அவருடைய மகா ஆசானாகும். மெய்யான அறிவியலின் அஸ்திபாரம் வேதகாமத்தில் அடங்கியுள்ளது. தேவ்வார்த்தையை ஆராய்ந்தால், ஒவ்வொரு வகை அறிவையும் கண்டடையலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவியல்களுக்கெல்லாம் மேலான அறிவியல் அதிலுள்ளது; அது இரட்சிப்பின் அறிவியல். ஆராய்ந்தறிய முடியாத கிறிஸ்துவின் ஐஸ்வரியங்கள் அடங்கிய சுரங்கம்தான் வேதாகமம். COLTam 103.4
தேவவார்த்தையை ஆராய்ந்து, அதற்குக் கீழ்ப்படிவதால் தான் மெய்யான மேற்கல்வியைப் பெற முடியும்; ஆனால், தேவனி டத்திற்கும் பரலோகத்தினிடத்திற்கும் வழிநடத்தாத புத்தகங்களை ஆராய்வதற்காக தேவவார்த்தையைப் புறக்கணித்தால், அத்தகைய படிப்பு அதன் பெயருக்கே எதிரானதாகும். COLTam 104.1
இயற்கையில் அற்புதமான சாத்தியங்கள் உள்ளன. பூமியும், சமுத்திரமும், ஆகாயமும் சத்தியத்தால் நிரைந்துள்ளன. அவை நம் ஆசிரியர்கள். பரலோக ஞானத்தையும் நித்திய சத்தியத் தையும் பற்றிய பாடங்களை இயற்கை நடத்துகிறது; ஆனால், விழுந்து போன மனிதனால் அதைப் புரிந்துகொள்ளான். பாவம் அவன் பார்வையை மறைத்து விட்டது; தேவனுக்கும் மேலாக இயற்கையை உயர்த்தாமல், அதை விவரிக்க அவனால் இயலாது. தேவவார்த்தையைப் புறக்கணிப்பவர்களின் மனதில் சரியான பாடங்கள் பதியா. தங்கள் சிந்தையை தேவனிட மிருந்து விலகச்செய்யுமளவிற்கு இயற்கையின் போதனையைப் புரட்டிப் பேசுவார்கள். COLTam 104.2
அநேகர் மனிதனுடைய ஞானத்தை தெய்வீக ஆசிரியரின் ஞானத்தை விட மேலானதாகக் கருதி, தேவனுடைய பாடப்புத்தகத்தை வழக்கொழிந்த, சலிப்பூட்டுகிற, ஆர்வத்தைத் தூண்டாத ஒன்றாகப் பார்க்கிறார்கள். ஆனால், பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைப் பெற்றவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்கள். ஈடு இணையற்ற அந்தப் பொக்கி ஷத்தை அவர்கள் பார்த்து, அனைத்தையும் விற்றாவது அது இருக்கிற நிலத்தை வாங்க விரும்புவார்கள். பிரசித்திபெற்ற ஆசிரியர்களின் ஊகங்கள் அடங்கிய புத்தகங்களுக்கு பதிலாக, உலகம் கண்டிராத தலைசி றந்த போதகரின், பிரசித்திப்பெற்ற ஆசிரியரின் புத்தகத்தைத் தெரிந்துகொள்வார்கள். அவர் மூலமாக நாம் நித்தியஜீவனைப் பெறும்படி, நமக்காக அவர் ஜீவனைக் கொடுத்தார். COLTam 104.3