கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

41/55

பேச்சாற்றல்

பேச்சாற்றல் என்பது ஒரு தாலந்து; கருத்தோடு அதைப் பேணி வளர்க்கவேண்டும். தேவனிடமிருந்து நாம் பெறுகிற ஈவுகளி லெலலாம், இதைவிட மேலான ஆசீர்வாதம் எதுவுமில்லை . பிறரை நம்பச்செய்யவும் இணங்கச் செய்யவும், ஜெபம் ஏறெடுக்கவும் தேவனைத் துதிக்கவும், பிறரிடம் மீட்பரின் அன்பைச் சொல்லவும் பேச்சாற்றல் தான் உதவுகிறது. அப்படியானால் பிறருக்கு அதிகப்பட்ச நன்மையுண்டாகும்படி இதைப் பயிற்றுவிப்பது எவ்வளவு முக்கியம்.! COLTam 336.1

பேச்சாற்றலை எவ்வாறு பண்போடு, சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை யாரும் அதிகம் கண்டுகொள்வதில்லை; அறிவுத்திறன் மிக்க, கிறிஸ்தவப் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களும் கூட . உடனே புரிந்துகொள்ள முடியாத விதத்தில், தாழ்வான குரலிலோ மிகவேகமாகவோ வாசிப்பவர்கள் அல்லது பேசு கிறவர்கள் அநேகர் உண்டு. சிலர் உரத்தக்குரலில், தெளி வற்ற முறையில் பேசுகிறார்கள்; வேறுசிலர் கேட்கிறவர்களின் காதைக் கிழிக்கும் வகையில் தொனியை உயர்த்தி, கீச்குரலில் கத்துகிறார்கள். சிலசமயங்களில் கூடியிருக்கும் மக்களுக்குப் புரியாத வகையிலும், அவற்றின் தாக்கமும் முக்கியத்துவமும் அடிபட்டுப் போகும் விதத்திலும் வசனங்களையும் அறிக்கைகளையும் பிற செய்திகளையும் வாசிக்கிறார்கள், பாடல்களைப் பாடுகிறார்கள். COLTam 336.2

இது ஒரு தீமை ; இதைச் சரிசெய்யலாம், சரிசெய்ய வேண்டும். இதைக்குறித்து வேதாகமத்தில் அறிவுரை உள்ளது. எஸ்றாவின் நாட்களில் ஜனங்களுக்கு வேதாகமத்தை வாசித்த லேவியர்களைப்பற்றி, அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்த கத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” என்று சொல்லப்பட் டுள்ளது. நெகேமியா 8:8. COLTam 336.3

புரியும்படியாக வாசிக்கவும், பிறருக்குப்பிடிக்கும் வகையில், தெளிவாக, சரியான தொனியில், தனித்துவமான விதத்தில், தாக்கத்தை ஏற்படுத்துகிற பாணியில் பேசவும் கருத்தோடு முயற்சி த்தால் அனைவரும் அந்த ஆற்றலைப் பெறலாம். இவ்வாறு செய்வதால், கிறிஸ்துவின் ஊழியர்களாக பெருமளவில் நம் திறமையை அதிகரிக்கச் செய்யலாம். COLTam 336.4

கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி ஒவ்வொருகிறிஸ்தவனும் அழைக்கப்பட் டிருக்கிறான்; ஆகவே பேச்சாற்றலில் நிறைவுடன் விளங்க அவன் வகை தேடவேண்டும். கேட்பவர்கள் அங்கீகரிக்கும் விதத்தில் அவன் பேசவேண்டும். தமது ஊழியர்கள் பண்பற்றவர்களாகக் காணப்பட வேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல. மனிதன் தன் மூலமாக உலகத்திற்குப் பாய்ந்தோடும் பரலோக ஆற்றலின் மதிப்பைக் குறைப்பதும் அல்லது தரங்கெடச் செய்வதும் அவரது சித்தமல்ல. COLTam 337.1

நாம் இயேசுவைப் பார்க்கவேண்டும்; அவரே பூரண முன் மாதிரி . பரிசுத்த ஆவியானவரின் உதவிக்காக ஜெபிக்க வேண்டும்; ஒவ்வோர் உறுப்பும் சரியாகச் செயல்படும் படி அவருடைய பெலத்தால் முயலவேண்டும். COLTam 337.2

குறிப்பாக, பொது சேவைக்காக அழைக்கப்பட்டோரின் விஷயத்தில் இது முற்றிலும் உண்மை . நித்திய நலன்கள் சம்பந்தப்பட்ட செய்தியை ஜனங்களுக்கு அறிவிக்கிறோம் என்பதை ஒவ்வொரு ஊழியனும், ஒவ்வொரு போதகனும் மனதில் பதித்திருக்கவேண்டும். அவர்கள் பேசுகிற ஒவ்வொரு சத்தியமும், இறுதியாகக்கணக்குக் கொடுக்கவேண்டிய மகா நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும். சில ஆத்துமாக்களைப் பொருத்தவரை, செய்தி கொடுக்கிறவர் அதைக் கொடுக்கிற விதத்தைப் பொறுத்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். எனவேசிந்தையில் உரைக்கும் படியும், இருதயத்தில் பதியும்படியும் வார்த்தையைப் போதிக்க வேண்டும். மெதுவாக, தெளிவாக, பக்திவிநயத்தோடு பேசவேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உற்சாகம் மிகுதியோடு பேசவேண்டும். COLTam 337.3

கிறிஸ்தவ பணியின் ஒவ்வொரு துறையிலும் பேச்சில் பண்பு நயமும் ஆற்றலும் காணப்பட வேண்டும்; குடும்ப வாழ்க்கையிலும் ஒருவரோடு ஒருவரான சகல வித உறவுகளிலும் இது காணப்படவேண்டும். இனிய தொனியில் பேசவும், தூய்மையும் தகுதியும், அன்பும் மரியாதையுமிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தவும் பழகவேண்டும். இனிய, அன்புள்ள வார்த்தைகள் ஆத்துமா வில் பனிபோல, சாரல் போல பொழிகின்றன. ‘இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல கிறிஸ்துவின் உதடு களிலிருந்து அருள் பொழிந்ததாக” வேதாகமம் சொல்கிறது. சங் 45:2; ஏசா. 50:4. கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாகும்படி” நம்முடைய வசனம் கிருபை பொருந்தினதாக” இருக்க வேண்டு மென ஆண்டவர் நமக்குக் கட்டளையிடுகிறார். கொலோ 4:6, எபே 4:29. COLTam 337.4

மற்றவர்களை திருத்தவும், சீர்திருத்தவும் முயலும் போது, வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தவேண்டும். அவை மரணத்துக்கேதுவான மரண வாசனையாக அல்லது ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கின்றன. கண்டிக்கும் போதோ, ஆலோசனை கூறும் போதோ குத்தலான, கடுமையான, காயப்பட்ட ஆத்துமாவைக் குணப்படுத்த தகுதியற்ற வார்த்தைகளை அநேகர் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய மதியற்ற வார்த்தைகளால் மனம் புண்படுபடுகிறது. தவறிழைத்தவர்களும் கூட பெரும்பாலும் கலகஞ்செய்யத் தூண்டப்படுகிறார்கள். சாத்தியத்தின் நியதிகளைப் பரிந்துரைக்க விரும்புகிற அனைவரும் அன்பென்னும் பரலோக தைலத்தைப் பெற வேண்டியது அவசியமாகும். எந்தச் சூழ்நிலையிலும் அன்பான வார்த்தைகளால் தான் கடிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் வார்த்தைகள் சீர்திருந்தச் செய்யுமே தவிர எரிச்சலூட்டாது. கிறிஸ்து தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம் ஆற்றலையும் வல்லமையையும் அருளுவார். இது அவரது பணி. COLTam 338.1

நன்கு ஆலோசிக்காமல் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவரின் வாயிலிருந்த எவ்வித தீய வார்த்தைகளும், அற்பமான கேலிப்பேச்சுகளும், அதிருப்தியால் எழும் அலட்டல்களும் அல்லது பரிசுத்தமற்ற ஆலோசனைகளும் புறப்படக்கூடாது. கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்... என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். எபே 4:29. கேடான பேச்சு என்றால் தீய வார்த்தைகளைப் பேசுவது மட்டு மல்ல . பரிசுத்த நியதிகளுக்கும் தூய்மையும் மாசற்றதுமான மார்க்கத்திற்கும் முரணான சகலவித வெளிப்பாடும் அதில் அடங்கும். அசுத்தமான சாடை வார்த்தைகளும் உண்மையை மறைத்து கொடுக்கிற தீய ஆலோசனைகளும் இதில் அடங்கும். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட உடனே முயலாவிட்டால், மிகப்பெரிய பாவத்திற்கு இது வழிநடத்தும். COLTam 338.2

சீர்கேடான பேச்சுக்கு எதிரான போக்கைக் கையாளுகிற கடமை ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ஒவ்வொரு கிறிஸ்தவன் மேலும் சுமத்தப்பட்டுள்ளது. முட்டாள் தனமாக பேசுபவர்கள் மத்தியில் இருக்கும் போது, முடிந்தமட்டும் பேச்சை வேறு விஷயத்திற்குத் திருப்பி விடுவது நம் கடமையாகும். தேவகிருபையின் உதவியால் யோசித்து வார்த்தைகளைப் பேசவேண்டும் அல்லது நன்மையான விதத்தில் பேச்சை மாற்றுகிற ஏதாவது விஷயத்தைப் பேச ஆரம்பிக்கவேண்டும். COLTam 339.1

சரியான முறையில் பேசுவதற்கு தங்கள் பிள்ளைகளை பயிற்று விக்கவேண்டியது பெற்றோரின் பணியாகும். இந்தப் பண்பாட்டை உருவாக்க மிகச்சிறந்த பள்ளி குடும்பம்தான். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் மரியாதையுடனும் அன்புடனும் பேசுவதற்கு சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். மென்மையான, உண்மையான, தூய்மையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுடைய வாயி லிருந்து புறப்பட வேண்டு மென்று சொல்ல வேண்டும். பெற்றோர்கள்தாமே கிறிஸ்துவின் பள்ளியில் ஒவ்வொருநாளும் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான், “குற்றம் பிடிக்கப் படாத ஆரோக்கியமான வசனத்தை” பேசும்படி நல்லொழுக்கப் போதனையாலும் முன்மாதிரியாலும் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் போதிக்க முடியும். தீத்து 2:8. அவர்களுடைய மிகப் பெரிய, பொறுப்புமிக்க கடமைகளில் இதுவும் ஒன்றாகும். COLTam 339.2

கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நாம், கிறிஸ்தவ வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் உதவக் கூடிய, உற்சாகமூட்டக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும். அதைக்காட்டிலும் அதிகமாக, நம்முடைய அனுபவத்தின் அற்புதமான பக்கங்கள் குறித்துப் பேசவேண்டும். தேவனுடைய இரக்கத்தையும், கருணைமிக்க அன்பையும் குறித்துப் பேசவேண்டும். துதியும் ஸ்தோத்திரமும் ஏறெடுக்கிற வார்த்தைகளைப் பேசவேண்டும். மனதிலும் இருதயத்திலும் தேவ அன்பு நிறைந்திருந்தால், நமது பேச்சில் அது வெளிப்படும். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஊடுருவிச் செல்வதை பிறரிடம் பகிர்ந்து கொள்வது கடினமாக இருக்காது. உயர்வான சிந்தனைகளும், மேலான இலட்சியங்களும், சத்தியம் குறித்த தெளிவான அறிவும், சுயநலமற்ற நோக்கங்களும், தேவபக்தி மற்றும் பரிசுத்தம் மேலானவாஞ்சையும் வார்த்தைகளாக வெளிப்படும்; இருதயத்தின் பொக்கிஷத்தை அவை பிரதிபலிப்பவையாக இருக்கும். நமது பேச்சில் அவ்வாறு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் போது, அவருக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் வல்லமை அதில் காணப்படும். COLTam 339.3

கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும். கிறிஸ்து செய்ததையே நாமும் செய்யவேண்டும். அவர் ஜெபாலயத்திலும், வழியருகேயும், நிலத்திலிருந்து சற்றே தள்ளப் பட்ட படகிலும், பரிசேயன் வீட்டில் விருந்திலும் அல்லது ஆயக்காரனின் பந்தியிலும் என தாம் இருந்த இடங்களிலெல்லாம் உன்னத வாழ்வு குறித்த விஷயங்களையே மனிதர்களிடம் பேசி னார். இயற்கையின் விஷயங்களையும், அனுதினவாழ்வின் நிகழ்வுகளையும் சத்தியத்தின் வார்த்தைகளோடு சம்பந்தப் படுத்திப் பேசினார். அவருடைய போதகத்தைக் கேட்டவர்களின் இருதயங்கள் அவர்பால் இழுக்கப்பட்டன; ஏனென்றால், அவர் களில் வியாதியஸ்தர்களைக் குணமாக்கினார்; துயரப்பட்டவர்களை ஆறுதல் படுத்தினார்; அவர்களுடைய பிள்ளைகளை தம் கரங்களில் எடுத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் தம் வாயைத் திறந்து பேசியபோது, அவர்களது முழுக்கவனமும் அவர்மேல் திரும்பியது; ஒவ்வொரு வார்த்தையும் ஏதாவது ஆத்துமாக்களுக்கு ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாக இருந்தது. COLTam 340.1

இதுவே நம்மிடமும் காணப்படவேண்டும். நாம் எங்கிருந்தாலும் மற்றவர்களிடம் இரட்சகரைப்பற்றி பேசு வதற்கான வாய்ப்புகளுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும். நன்மை செய்வதில் கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் பின்பற்றினால், அவருக்கு மக்கள் தங்கள் இருதயங்களைத் திறந்தது போல, நமக்கும் திறப்பார்கள். எடுத்த எடுப்பில் சொல்லாமல், தெய்வீக அன்பினால் பிறந்த சாமர்த்தியத்தோடு, “பதினாயிரம் பேரிலும் சிறந்த ” முற்றிலும் அழகான ” அவரைப் பற்றி அவர்களிடம் நாம் கூறலாம். உன்னதப்பாட்டு 5:10, 16. உன்னதமான இந்தப் பணியில் தானே நம்முடைய பேச்சு தாலந்தை நாம் பயன்படுத்த முடியும். பாவத்தை மன்னிக்கும் இரட்சகரென கிறிஸ்துவை அறிவிப்பதற்கு இந்த தாலந்து நமக்கு வழங்கப் பட்டுள்ளது. COLTam 340.2