மாரநாதா! (இயேசு வருகிறார்!)
வெகுமதிகளும் தண்டனைகளும்!, நவம்பர் 30
அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவார். — மத்தேயு 25:34. Mar 667.1
வலதுபக்கம் நிற்கிரவர்களுக்கு வெகுமதியும், இடதுபக்கம் நிற்கிரவர்களுக்கு கண்டனத் தீர்ப்பளிக்கிற இறுதி நியாயத்தீர்ப்பின் காட்சியையும் இரட்சகர் நமக்கு முன்பாக வைக்கிறார். இவ்வளவு தாராளமாக வெகுமதி பெற்றுக்கொள்வதற்கு, தாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோமென்று எண்ணி, ஆச்சரியப்படுகிறவர்களாக நீதிமான்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தை தங்கள் இதயங்களில் எப்பொழுதும் பெற்றிருந்தார்கள்; அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்கள்; எனவே, பெரும் முயற்சி இல்லாமலேயே அவருடைய பரிசுத்தவான்களுக்கு உதவுவதின்மூலமாக, கிறிஸ்துவிற்காக ஊழியஞ்செய்துவந்திருக்கிறார்கள்; இவ்வாறாக, அந்த நித்தியமான பரிசைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும், பெறப்போகிற பரிசை அவர்கள் எப்பொழுதும் நிலைத்துக்கொண்டே இருக்கவில்லை. அதாவது அதை எதிர்பார்த்து, அவர்கள் எந்த நற்கிரியையையும் செய்யவில்லை. கிறிஸ்துவிற்காகவும் அவர்களது உடன்மனிதர்களுக்காகவும், வைத்திருந்த அன்பினாலே அவர்கள் அந்த நற்காரியங்களைச் செய்தார்கள். துன்பம் அனுபவிக்கும் மானிட ஜாதியோடு, கிறிஸ்து தம்மை இணைத்துக்கொண்டதால், இரக்கப்பட்டு அன்போடும் பரிவோடும் செய்யப்பட்ட ஒவ்வொரு நன்மையையும் தனக்காகவே செய்யப்பட்டதைப்போல எண்ணுகிறார்.... Mar 667.2
ஒரு தாழ்மையான உணர்வுடன் நாம் அனைவரும் அந்த வெகுமதியை மதித்துப் போற்றவேண்டும். ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களை நாம் பாராட்டிப் பெற்றுக்கொள்ளும்போது, இயேசு கிறிஸ்து சரியானதைத்தான் செய்வார் என்றும், நம்முடைய கிரியைகளுக்குத்தக்க பலனை அவர் தருவார் என்றும் முழுமனதோடு நம்பவேண்டும். நித்திய ஜீவனே தேவன் நமக்குக் கொடுக்கும் பரிசாகும். வெகுமதியைக்குறித்து நாம் அதிகமாகக் கவலைப்படுவதை இயேசு விரும்பவில்லை. அனைத்து ஆதாயத்தையும் கணக்கில் வைக்காமல், தேவனுடைய சித்தத்தை நாம் செய்யலாம்; ஏனெனில், அவருடைய சித்தத்தைச் செய்வதே சரியான காரியமாகும். Mar 667.3
யாரெல்லாம் தங்களுடைய அன்றாட அலுவல்களுடன், விருப்பமுள்ள ஆர்வத்தோடும் இன்முகத்தோடும் ஏழைகளிடத்திலும் அனாதைகளிடத்திலும் ஒடுக்கப்பட்டவர்களிடத்திலும் துன்பப்பட்டவர்களிடத்திலும் மென்மையான பரிவோடு பழகுதலையும் கலந்து உதவிசெய்கிறார்களோ, அவர்களே மிக ஏராளமான வெகுமதியைப் பெற்றுக்கொள்வார்கள்... சாந்தமும் மனத்தாழ்மையுமான ஆவியோடு - கிறிஸ்துவின் ஆவியோடு, தங்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு, எந்த எதிர்பார்ப்புமின்றி அநேக சின்னஞ்சிறு உதவிகளை செய்கிறவர்கள், அதைப்பற்றி சிறிதும் நினைக்காதிருக்கிறவர்கள், நம்மைச் சுற்றிலுமிருக்கிறார்கள். மனஞ்சோர்ந்தவர்களிடம் தாங்கள் பேசின சிறிய அன்பின் வார்த்தைகளைக் கிறிஸ்து கவனித்திருக்கிறார் என்பதை இறுதியில் அறியும்பொழுது, மிகச் சிறிய தியாகம் செய்து, ஏழை மக்களுக்குச்செய்த சிறிய நன்மைகளையும் கிறிஸ்து கவனித்திருக்கிறார் என்பதை அறியும்பொழுதும், அவர்கள் ஆச்சரியமடைவார்கள். ஆண்டவர் ஆவியை நிறுத்துப்பார்க்கிறார்; அதற்கேற்ற பரிசுகளை அருளுகிறார். தூய்மையான-தாழ்மையான-குழந்தையைப்போன்ற-அன்பான-ஆவியே அவர்களுடைய நற்கிரியைகளை அவரது பார்வையில் விலையேறப்பெற்றதாக ஆக்குகிறது.⋆ Mar 668.1
வாக்குத்தத்த வசனம்: Mar 668.2
“எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்ளெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.” - 2 கொரிந்தியர் 1:20. Mar 668.3