சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-62
புடமிடும் காலம்
“கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். ஆகையால் தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலர் சகோதரருக்குப் புத்திகூறுகின்றார். ஐயோ, எப்படிப்பட்ட நாள் நமக்கு முன்பாகவிருக்கிறது! தேவனுடைய பிள்ளைகளென்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களின் மத்தியிலே எத்தகைய புடமிடுதல் ஏற்படும்! நீதியுள்ளவர்களின் மத்தியிலே அநீதியுள்ளவர்களும் காணப்படுவார்கள். பெரும் வெளிச்சத்தை உடையவர்களாகவிருந்து, அதிலே நடவாதிருந்தவர்களை அவர்கள் புறக்கணித்த வெளிச்சத்தின் அளவின்படியே இருள் சூழ்ந்து கொள்ளும். பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகளிலே அடக்கமாயிருக்கின்ற இந்தப் பாடத்தை நாம் கவனிக்க வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நானே ஆகாதவனாக போகாதபடிக்கு என் சரீரத்தை அடக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” துரோகிகளின் வரிசையிலே நிற்க மனுஷரை ஆயத்தப்படுத்துவதற்காகச் சத்துருவானவன் சுறுசுறுப்புடனே உழைக்கின்றான். ஆயினும் கர்த்தர் விரைவிலே வருவார். ஒவ்வொருவருடைய காரியமும் விரைவிலே நித்தியத்திற்கென்று தீர்ப்பு பெறும். கிருபையாகத் தங்களுக்கு அளிக்கப்பட்ட வெளிச்சத்திற்கேற்ப கிரியை நடப்பிப்போர் கர்த்தருடைய பட்சத்தில் இருப்பவர்களாகக் கருதப்பட்டுத் தொகையிடப்படுவர். TM 163. CCh 713.1
ஆனால் சபை சுத்திகரிப்படைவதற்குரிய காலமானது அதிவிரைவுடனே கடந்து போகின்றது. சுத்தமும் உண்மையுமுடையதோர் ஜனமே தெய்வத்திற்கென்று இருப்பார்கள். விரைவில் ஏற்படும் புடமிடுதலின்போது, இஸ்ரவேலின் பலத்தை நாம் சரியாக எடைபோடுவது கூடும். கர்த்தருடைய சுத்திகரிப்பின் முறம் அவருடைய கரத்தில் இருக்கிறதென்றும், அவர் தம்முடைய களத்தைச் சுத்தமாகத் துலக்கும் காலம் சமீபமாயிற்றென்றும் அடையாளங்கள் காட்டுகின்றன. 5T 80. CCh 714.1