மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
11—இளவரசர்களின் எதிர்ப்பு!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 197—210)
சீ ர்திருத்தத்திற்கு ஆதரவான மிக மேன்மைமிக்க சாட்சிகளில் ஒன்று, கி.பி.1529—ல் ஜெர்மனியிலுள்ள ஸ்பைர்ஸ் நகரில் கிறிஸ்தவ ஜெர்மன் இளவரசர்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கு எதிராக அறிவித்த எதிர்ப்பாகும். தேவனுடைய இந்த மனிதர்களால் காட்டப்பட்ட தைரியம், விசுவாசம், உறுதி ஆகியவை பின்வந்த காலங்களில் சிந்தனை மற்றும் மனசாட்சி சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அவர்களது எதிர்ப்புத்தான் சீர்திருத்த சபைக்கு புரொட்டஸ்டாண்ட் என்கிற பெயரைக் கொடுத்தது. அதன் கொள்கைகள் கிறிஸ்தவத்தின் மிக முக்கியமான கருப்பொருள்களாக உள்ளன. D’Aubigne, b. 13, ch. 6. (1) GCTam 217.1
இருளும் பயமுமிக்க ஒரு நாள் கிறிஸ்தவத்திற்கு வந்திருந்தது. லுத்தருடைய போதனைகளையும் கோட்பாடுகளையும் தடைசெய்து, அவரை ஒரு சட்டவிரோதியாக வோம்ஸ் நகரம் கட்டளை பிறப்பித்திருந்தபோதிலும், மத சகிப்புத்தன்மை இதுவரை அந்தப் பேரரசில் தெடர்ந்துகொண்டிருந்தது. சத்தியத்திற்குத் தடையாக இருந்த சக்திகளை தெய்வீகப் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியிருந்தது. சீர்திருத்தத்தை நசுக்கவேண்டுமென்ற வைராக்கிய முடையவனாக ஐந்தாம் சார்லஸ் இருந்தான். ஆனால் அதை நொறுக்கும்படி அவன் தன் கரத்தை உயர்த்தியபோதெல்லாம் அந்த அடி வேறிடத்தில் விழும்படி பலவந்தமாக திசைமாற்றப்பட்டான். ரோமை எதிர்க்கத் துணிந்த அனைவர்மீதும் மீண்டும் மீண்டும் வந்த உடனடி அழிவு தவிர்க்க முடியாததுபோல் காணப்பட்டாலும், மிகவும் நெருக்கடியான நேரத்தில், துருக்கிப் படைகள் கிழக்கு எல்லையில் தோன்றின, அல்லது பிரான்ஸ் அரசன் அல்லது தனது பேரரசைப் பெரிதாக்க விரும்பிய போப்புதானே, அவன்மீது போர் செய்தார். இவ்வாறாக, யுத்தங்களினாலும் நாடுகளின் கலகங்களினாலும் சீர்திருத்தம் பலமடைந்து பரவும்படி விடப்பட்டது. (2) GCTam 217.2
எப்படியிருந்தாலும் இறுதியில் போப்புமார்க்க மேலாண்மை, சீர்திருத்தத்திற்கெதிரான ஒரு பொதுக் காரணத்தை உண்டுபண்ணும் படி தனது சண்டைகளை விட்டது, கி.பி.1526-ல் ஸ்பைர்ஸ் என்னும் இடத்தில் கூடிய விசாரணைக்குழு பொதுவான மகா சபை கூடும்வரை, மாநிலங்களுக்கு மதசம்பந்தமான காரியங்களில் முடிவெடுக்க முழுச் சுதந்திரம் கொடுத்தது. ஆனால் இந்தச் சலுகையை அடைவதற்குண்டான அபாயம் கடந்துபோனதும், கி.பி.1529-ல் தனது மார்க்கத்துக்கெதிரான மதவிரோதத்தை நசுக்கும்படி பேரரசன் இரண்டாவது விசாரணை மன்றத்தைக் கூட்டினான். சீர்திருத்தத்திற்கு எதிராகச் செயல்படும்படி இளவரசர்களை சமாதானமான முறையில் தன் பக்கம் இழுத்துக்கொள்ளவும், அது முடியாமற்போனால், பட்டயத்தைக் கையாளவும் சார்லஸ் ஆயத்தமாயிருந்தான். (3) GCTam 218.1
போப்புமார்க்கவாதிகள் களிகூர்ந்தனர். அவர்கள் பெரும் எண்ணிக் கையில் ஸ்பைர்ஸ் நகரில் தோன்றி, சீர்திருத்தவாதிகளுக்கும் அவர்களது ஆதாரவாளர்களுக்கும் எதிரான தங்களது பகையை பகிரங்கமாக காட்டி னார்கள். “நாங்கள் பூமியின் இழிவுகளாகவும் குப்பைகளாகவும் இருக்கிறோம். ஆனால் ஏழைகளான அவரது மக்களைக் கிறிஸ்து நோக்கிபார்த்து பாதுகாப்பார்” என்று மெலாங்தன் கூறினார்.-Ibid., b. 13, ch. 5. விசாரணை மன்றத்தில் தோன்றிய சுவிசேஷ இளவரசர்கள் தங்களது வீடுகளிலுங்கூட சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஸ்பைர்ஸ் நகர மக்கள் தேவனுடைய வார்த்தையின்மீது தாகத்தோடிருந்து, தடையுத்தரவு இருந்தபோதிலும், சாக்சோனிய தேர்தல் அதிகாரியின் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனைக்கு ஆயிரக்கணக்கில் கூடினர். (4) GCTam 218.2
அந்தச் செயல் நெருக்கடியை விரைவுபடுத்தியது. மனசாட்சிக்குச் சுதந்திரம் வழங்கிய தீர்மானம் ஒழுக்கக்கேடுகளுக்கு காரணமாகிவிட்டதினால், அது நீக்கப்படவேண்டும் என்று பேரரசர் விரும்புகிறார் என்கிற அரசகட்டளை அறிவிக்கப்பட்டது. இந்த நியாயமற்ற சட்டம், சுவிசேஷக் கிறிஸ்தவர்களின் கோபத்தையும் அபாயக் குரலையும் தூண்டிவிட்டது. “கிறிஸ்து மறுபடியும் காய்பா, பிலாத்து ஆகியோரின் கரங்களில் வீழ்ந்துவிட்டார்” என்று ஒருவர் கூறினார். ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகமான வன்முறையாளர்களானார்கள். துருக்கியர் லுத்தரன்களைவிட மேலானவர்கள், ஏனெனில், அவர்கள் உபவாச நாட்களை ஆசரிக்கின்றனர். லுத்தரன்கள் அவைகளை மீறுகின் றனர். தேவனுடைய பரிசுத்த வேதவாக்கியங்கள், சபையின் பழைய தவறுகள் ஆகிய இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால், முன்சொல்லப்பட்டதை நாம் நிராகரிக்கவேண்டும்” என்று குரோதமுள்ள ஒரு போப்புமார்க்கவாதி அறிவித்தார். “ஒவ்வொரு நாளும், முழுக்கூட்டத்திலும் பேபர் சுவிசேஷகர்களின் மீது புதிய கற்களை வீசுகிறார்” என்று மெலாங்தன் கூறினார்.-Ibid., b. 13, ch. 5. (5) GCTam 218.3
சபையின் சகிப்புத் தன்மையானது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. சுவிசேஷ மாநிலங்கள் தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்தன. வோம்ஸ் நகரிலிருந்து கொடுக்கப்பட்ட தடை உத்தரவின் கீழ் லுத்தர் இருந்ததினால், அவர் ஸ்பைர்ஸ் நகரில் தோன்றுவது அனுமதிக்கப்படாமலிருந்தது. ஆனால் அவரது இடம், உடன் ஊழியக்காரர்களாலும், இந்த அவசர நேரத்தில் தேவனுடைய காரியத்திற்குப் பாதுகாப்பாக நிற்கும்படி தேவன் எழுப்பியிருந்த இளவரசர்களாலும் நிரப்பப்பட்டது. லுத்தரின் முந்தைய பாதுகாவலராக இருந்த மேன்மை தங்கிய சாக்சோனியின் பிரெட்ரிக் மரணத்தால் பிரிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது சகோதரரும் பின்னுரிமையாளருமாயிருந்த ஜான் பிரபு சீர்திருத்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று, சமாதானத்தின் நண்பராயிருந்து, விசுவாசம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்திலும் பெரும் சக்தியையும் தைரியத்தையும் காட்டினார். (6) GCTam 219.1
சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து மாநிலங்களும் ரோமன் கத்தோலிக்க ஆட்சியின் எல்லைக்குள் தவறாமல் கீழ்ப்பட்டு வரவேண்டும் என்று குருமார்கள் கோரினர். மறுபக்கம் சீர்திருத்தவாதிகள் தங்களுக்கு இதற்குமுன் அனுமதிக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை உரிமைபாராட்டினர். பெருமகிழ்ச்சியுடன் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்ட அம்மாநிலங்களை ரோம் மீண்டும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதை சகிக்கமாட்டாதிருந்தார்கள்.(7) GCTam 219.2
முடிவாக, சீர்திருத்தம் எங்கு அமைக்கப்படவில்லையோ அந்த இடங்களில், வோம்ஸ் நகரில் வெளியிடப்பட்ட கட்டளை கட்டாயமாக அமுல்படுத்தப்படவேண்டும். மேலும் சுவிசேஷ மாநிலங்களில் எங்கெல்லாம் கலகம் உண்டாகும் அபாயம் இருக்கிறதோ, அங்கு புதிய சீர்திருத்தத்தை அறிமுகம் செய்யக்கூடாது; கருத்து வேற்றுமையுள்ள வேதாகம விஷ யங்கள் பற்றி விவாதம் செய்யக்கூடாது; திருப்பலி பூசை கொண்டாடுவதை எதிர்க்கக் கூடாது; கத்தோலிக்கர்கள் லுத்தரின் மார்க்கத்தைத் தழுவ அனுமதிக்கக் கூடாது என்ற சமரசம் முன்வைக்கப்பட்டது. —Ibid., b. 13, ch.5. விசாரணை மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, போப்புமார்க்கக் குருக்களுக்கும் சந்நியாசிகளுக்கும் மிகுந்த மனநிறைவைக் கொண்டு வந்தது. (8) GCTam 219.3
இந்தக் கட்டளை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், சீர்திருத்தம் இதுவரை சென்றடையாத இடத்திற்குப் பரவமுடியாததுடன், அது ஏற்கனவே எங்கு பரவி உள்ளதோ அங்கும் அது உறுதியான அஸ்திவாரத்தின்மீது அமைக்கப்படமுடியாது.-Ibid., b. 13, ch. 5. பேச்சு சுதந்திரம் தடை செய்யப்பட்டிருக்கும். மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்காது. இந்தத் கட்டளை களுக்கும் தடை உத்தரவுகளுக்கும் சீர்திருத்தத்தின் நண்பர்கள் உடனடி யாகக் கீழ்ப்படிய கோரப்பட்டனர். உலகத்தின் நம்பிக்கைகள் அணைந்து விடப்போவதுபோல் காணப்பட்டது. போப்புமார்க்க ஆராதனை முறைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டால், பண்டைய அத்துமீறல்களை தவிர்க்கமுடியாதபடி மீண்டும் எழுப்பும். அது மதவெறியினாலும், பிரிவினைகளினாலும் ஏற்கனவே அசைந்திருக்கும் பணியின் அழிவைப் பூர்த்திசெய்யும் சந்தர்ப்பத்தையும் உடனடியாக உண்டாக்கிவிடும். --Ibid., b. 13, ch. 5. (9) GCTam 220.1
சுவிசேஷக்கட்சி ஆலோசனைக்காகக் கூடினபோது, திகைப்பு கலந்த அச்சத்தினால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “என்ன செய்யப்படவேண்டும்” என்ற கேள்வி ஒருவரை விட்டு ஒருவருக்குக் கடந்து சென்றது. உலகிற்கான பலம்மிக்க காரியங்கள் இடர்பாட்டில் இருந்தன. “சீர்திருத்தத் தலைவர்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உண்மையில் மிகப்பிரமாண்டமானதாயிருந்த இந்த நெருக்கடியைத் தவறானவிதத்தில் எவ்வளவாக தங்களுக்குள் விவாதம் செய்திருந்திருப்பார்கள் இந்த சீர்திருத்தவாதிகள்? கீழ்ப்படிவதற்குச் சாதகமான நியாயம்போல் தோன்றுகின்ற எத்தனை சாக்குப்போக்குகளையும் இசைவான காரணங்களையும் அவர்களால் கண்டிருந்திருக்க முடியும்? லுத்தரின் இளவரசர்கள் தங்களது மத அனுஷ்டானங்களைப் பின்பற்றும் சுதந்திரம் அவர்களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்டளை நடைமுறைக்கு வருவதற்குமுன், சீர்திருத்தக் கொள்கையைத் தழுவிய இளவரசர்களின் பிரஜைகளாக இருந்தவர்களுக்கும் இந்த வரம்பு விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இது அவர்களைத் திருப்திப்படுத்தக் கூடாதா? பணிதல் எத்தனை அபாயங்களைத் தவிர்த்திருக்கும். இந்த எதிர்ப்பு எப்படிப்பட்ட அறியாத இடையூறுகளிலும் சிக்கல்களிலும் அவர்களை சிக்கவைக்கும்? எதிர்காலம் எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைக் கொண்டுவரும் என்பது யாருக்குத் தெரியும்? நாம் சமாதானத்தைத் தழுவிக்கொள்ளுவோமாக. ரோமன் கத்தோலிக்க மார்க்கம் வைத்திருக்கும் ஒலிவக்கிளையை நாம் பற்றிக்கொண்டு, ஜெர்மனியின் காயங்களை மூடுவோமாக. இவ்விதமான வாதங்களினால் தாங்கள் எடுக்கவேண்டிய முடிவை நியாயப்படுத்தியிருந்தால், அதன் மூலமாக உண்டாகக்கூடியவைகள் குறைந்த காலத்தில் அவர்களது நோக்கத்தையே கவிழ்த்திருந்திருக்கும். (10) GCTam 220.2
இந்த ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த கொள்கைகளை அவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு, விசுவாசத்துடன் செயலாற்றினார்கள். அந்தக் கொள்கை என்ன? மனசாட்சியை பலவந்தம் செய்வதும், சுதந்திரமான விசாரணையைத் தடுப்பதும் ரோமின் உரிமையாக இருந்தது. ஆனால் அவர்களும் அவர்களுக்குக் கீழிருந்த புரொட்டஸ்டண்டுகளும் மதச்சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடாதா? ஆம். அவர்களது ஏற்பாட்டில் குறிப்பிடப் பட்டிருந்ததுபோல், சலுகையாக அனுபவிக்கலாம், உரிமையாக அல்ல. அந்த ஏற்பாட்டிற்கு வெளியில் இருந்த அனைத்தையும் ஆளுகைசெய்யவேண்டும் என்பதுதான் அதிகாரத்தின் பெரும் கொள்கையாக இருந்தது. மனசாட்சிக்கு இடமில்லை. ரோம் தவறாத நீதிபதி, அதற்குக் கீழ்ப்படிந்தாகவேண்டும். முன்வைக்கப்பட்ட இந்த ஏற்பாட்டை ஒத்துக்கொள்வது, சுதந்திரம் சாக்சோனிய சீர்திருத்தவாதிகளுக்குள் மட்டும்தான் இருக்கும் என்பதைக் குற்றமற்றவிதத்தில் ஒப்புக்கொள்ளுவதாயிருக்கும். ஏனைய கிறிஸ்தவ சமூகம் முழுவதிலும் சுதந்திரமான விசாரணையும், சீர்திருத்த விசுவாசத்தை அறிக்கைசெய்தலும் குற்றமாயிருந்து நிலவறைத்தண்டனையையோ தீயையோ ஏற்றுக்கொள்ள வேண்டும். மதச்சுதந்திரத்தைச் சுருங்கச்செய்வதை அவர்களால் ஒப்புக்கொள்ள முடியுமா? சீர்திருத்தம் அதன் கடைசி மதமாற்றத்தை செய்துவிட்டது என்று அறிவிப்பது, அது அதன் கடைசி எல்லையைத் தொட்டுவிட்டது என்றாகாதா? இந்த நேரத்தில் ரோம் எங்கெல்லாம் ஆட்சிசெய்ததோ, அங்கெல்லாம் அதன் நிரந்தர ஆட்சி தொடராதா? போப்புமார்க்க நாடுகளில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் உயிர்விட்டவர்களின் இரத்தம்பற்றி நாங்கள் குற்றமற்றவர்கள் என்று சீர்திருத்தவாதிகள் பரிந்துபேசியிருக்க முடியுமா? சுவிசேஷத்தின் நோக்கத்தையும் கிறிஸ்தவத்தின் சுதந்திரங்களையும் மிகமேலான அந்த நேரத்தில் காட்டிக்கொடுக்கும் செயலாக அது இருந்திருக்கும். —Wylie, b. 9, ch. 15. அதைவிட, அவர்கள் தங்களது ஆளுகைகளையும் பட்டங்களையும் சொந்த உயிர்களையும் தியாகம்செய்வார்கள்.—D'Aubigne, b. 13, ch. 5. (11) GCTam 221.1
“இந்தக் கட்டளையை நாம் நிராகரிப்போம். மனசாட்சி சம்மந்தப்பட்ட விஷயங்களில் பெரும்பான்மைக்கு வல்லமை கிடையாது” என்று இளவரசர்கள் கூறினார்கள். தான் அனுபவித்துவரும் சமாதானத்திற்குக் காரணமான சகிப்புத்தன்மை கட்டளைக்கு ஜெர்மனி கடமைப்பட்டுள்ளதாக இருக்கிறது. இந்தச் சட்டத்தை நீக்குவது பேரரசைத் தெல்லைகளுக்கும் பிரிவினைகளுக்கும் உள்ளாக்கும் என்று பிரதிநிதிகள் அறிவித்தனர்.--Ibid., b. 13, ch. 5. “மதச்சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டவைகளைச் செய்வதற்காக ஒரு ஆலோசனைக்குழு கூடும்வரை எதையும் செய்வதற்குப் பிரதிநிதிகளின் சபைக்குத் தகுதி இல்லை” என்று அவர்கள் கூறினார்கள். மனசாட்சியின் சுநந்திரத்தைக் காப்பது மாநிலத்தின் கடமையாகும். இதுதான் மதசம்மந்தமான காரியங்களில் அதற்குள்ள அதிகாரத்தின் எல்லையுமாகும். மதச் சார்பற்ற ஒவ்வொரு அரசும் சமூக அதிகாரத்தின்மூலமாக, சமய நெறிகளை ஒழுங்குபடுத்தவும், வற்புறுத்தவும் முயலும்போது, அது சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் எவைகளுக்காக மேன்மையாகப் போராடினார்களோ, அந்தக் கொள்கையைத் தியாகம்செய்வதாக இருக்கும் (12) GCTam 221.2
போப்புமார்க்கவாதிகள் எவைகளைத் துணிவான பிடிவாதம் என்றார்களோ, அவைகளை அடக்கியாளத் தீர்மானம் செய்தனர். சீர்திருத்தத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் பிரிவினை உண்டாக்க அவர்கள் முயன்று, அதன் ஆதரவைப் பகிரங்கமாக அறிக்கைசெய்யாதவர்களை அச்சுறுத்த முயன்றனர். சுதந்திரமாக இருந்த நகரங்களின் பிரதிநிதிகளை இறுதியில் சபையின் முன்பாக அழைத்து, உறுதிப்படுத்தப்பட்டநிபந்தனை களுக்கு அவர்கள் இணங்குவார்கள் என்று அறிவிக்கும்படிக் கட்டாயப்படுத்தப் பட்டனர். அவகாசத்திற்காக அவர்கள் வீணாக மன்றாடினார்கள். சோதிக்கப்படும்படி கொண்டுவரப்பட்டபோது, ஏறத்தாழ பாதிப்பேர்தான் சீர்திருத்தத்தின் அணியில் நின்றிருந்தனர். மனசாட்சியின் சுதந்திரத்தையும், நியாயம்தீர்க்கின்ற தனிப்பட்டவர்களின் உரிமையையும் இவ்வாறாகத் தியாகம்செய்ய மறுப்பவர்களின் நிலைமை, எதிர்கால விமர்சனத்திற்கும், பழிக்கும், உபத்திரவத்திற்கும் ஆளாகும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந் தனர். நாம் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும் என்று ஒரு பிரதிநிதி கூறினார்.--Ibid., b.13, ch.5. (13) GCTam 222.1
பிரதிநிதிகளின் சபையில் பேரரசனின் பிரதிநிதியாயிருந்த பெர்டினண்ட் என்ற அரசன், இளவரசர்கள் இந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு அதைத் தாங்கும்படி கவரப்படாவிட்டால், அது அபாயகரமான பிரிவினைகளை உண்டாக்கும் என்பதைக் கண்டார். எனவே, இப்படிப்பட்ட மனிதர்களைப் பலவந்தம்செய்தல் என்பது அவர்களை அதிகப் பிடிவாதமுள்ளவர்களாக்கிவிடும் என்பதை நன்கு அறிந்து, அவர்களை இணங்கச்செய்யும் தந்திரத்தைக் கையாண்டார். இந்தச் செயல் பேரரசனை மிகவும் மகிழ்ச்சியடையச்செய்யுமென்று அவர்களுக்கு நிச்சயம் கொடுத்து, அந்தக் கட்டளையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களைக் கெஞ்சினார். ஆனால் விசுவாசமிக்க இந்த மனிதர்கள், பூமியின் அதிபதிகளைவிட மேலான அதிகார முள்ளவரை அறிக்கைசெய்து, சமாதானத்தை நிலைநாட்டவும் தேவனை மேன்மைப்படுத்தவுங்கூடிய ஒவ்வொரு காரியத்திலும் நாங்கள் பேரரசனுக்குக் கீழ்ப்படிவோம் என்றார்கள்.-Ibid., b. 13, ch. 5. (14) GCTam 222.2
இறுதியாக, அந்த அரசன் பிரதிநிதிகளின் சபையின்முன் அரசாங்கச் சட்டமாக வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டளையை அறிவித்து, தேர்தல் அதிகாரிக்கும் அவரது நண்பர்களுக்கும் உள்ள ஒரே வழி பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிவதுதான் என்றார். இவ்வாறாகப்பேசியபின், சீர்திருத்தவாதிகளின் நிதானமான யோசனை மிக்க பதிலுக்கு வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பிரதிநிதிகளின் சபையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவரைத் திரும்பிவரும்படி அவர்கள் வீணாகக் கெஞ்சினார்கள். அவர்களது காரணங்களுடனுள்ள ஆட்சேபனைக்கு இது தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு காரியம். பணிதல் மட்டும்தான் மீதியாக இருக்கிறது என்று மட்டும் அவர் பதில் கூறினார்.-Ibid., b. 13, ch. 5. (15) GCTam 223.1
கிறிஸ்தவ இளவரசர்கள் மனிதக் கோட்பாடுகளையும் சட்டங் களையும்விட, பரிசுத்த வேதவாக்கியங்கள் உயர்ந்தவையென்று அவைகளைப் பற்றிக்கொள்ளுவார்களென்று ஆளும்கட்சியினர் உணர்ந்திருந்தனர். மேலும் எங்கெல்லாம் இக்கொள்கை ஏற்கப் படுமோ அங்கெல்லாம் காலப்போக்கில் போப்புமார்க்கம் தூக்கியெறியப் படும் என்பதையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்களது காலத்திலிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் காணப்படுகிறவைகளை மட்டும் நோக்கிப்பார்த்து, பேரரசன்,போப்பு ஆகியோரின் நோக்கம் வலுவுள்ளதாகவும், சீர்திருத்தவாதிகள் பலவீனர்களாகவும் இருப்பதாக, தங்களுக்குள் தற்புகழ்ச்சியாகப் பேசிக்கொண்டனர். போப்புமார்க்கத்தினர் நினைத்திருந்ததைப்போல், சீர்திருத்தவாதிகள் மனித உதவியைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தார்களானால் அவர்களும் போப்புமார்க்கவாதிகள் நினைத்ததைப்போல வல்லமையற்றவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பலவீனர்களாயிருந்தாலும், ரோமநிர்வாகத்துடன் கருத்துவேறுபாடு உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு அவர்களது பலம் இருந்தது. பிரதிநிதிகள் சபையின் முடிவிலிருந்து வேதவாக்கியங்களின் சத்தியத்தினிடத்திற்கும், ஜெர்மன் நாட்டின் பேரரசனிடமிருந்து, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் அரசராயிருக்கிறவரிடத்திற்கும் முறையிட்டார்கள்.—Ibid., b. 13, ch. 6. (16) GCTam 223.2
இளவரசர்களின் மனசாட்சியில் உண்டான உணர்வுகளை அங்கீகரிக்க பெர்டினாண்ட் மறுத்துவிட்டதினால், இளவரசர்கள் அவர் சபையில் இல்லாமல்போனதைப்பற்றிக் கருதாமல், தங்களது எதிர்ப்பைத் தேசிய சபையின் முன் உடனடியாக வைக்க முடிவுசெய்தனர். எனவே பக்திவிநயமான முறையில் ஒரு அறிக்கை வரையப்பட்டு அதில்: “எங்களது ஒரே சிருஷ்டிகரும் பாதுகாப்பவரும் மீட்பரும் இரட்சகரும், ஒருநாள் எங்களது நீதிபதியாக இருக்கக்கூடியவருமான தேவனுக்கு முன்பாகவும், அதேபோல அனைத்து மனிதர்கள் சிருஷ்டிகளுக்கு முன்பாகவும், நாங்கள், எங்களுக்காகவும் எங்களுடைய மக்களுக்காகவும், தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும், எந்தவிதத்திலும் எங்களுடைய சரியான மனசாட்சிக்கும், அல்லது எங்களது ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்கும் எதிராக முன்மொழியப்பட்டிருக்கும் கட்டளைக்கு சம்மதிக்கவும் மாட்டோம் அதைப்பற்றிக்கொள்ளவும் மாட்டோம்.” (17),(18) GCTam 223.3
“சர்வவல்லமை உள்ள தேவன் மனிதனை அவனது அறிவுக்கு அழைக்கும்போது, அவன் அந்த தெய்வீக அறிவைத் தழுவத் துணியக்கூடாது என்று எங்களால் உறுதிகூறமுடியாது. தேவனுடைய வார்த்தைகளுக்கு இசைவாக இருப்பதை அல்லாமல் வேறு மெய்யான கோட்பாடு கிடையாது. வேறுவிதமான எந்த விசுவாசத்தைப்பற்றிய போதனையையும் கர்த்தர் தடுக்கிறார். ஒரு வசனம் மற்றொரு வசனத்தால் விளக்கப்படுகிற, தெளிவான, புரிந்துகொள்ள எளிமையான, ஒளியடைவதற்கேதுவாக பற்றிக்கொள்ளக்கூடிய பரிசுத்த வேதவசனங்கள் எல்லாக் காரியங்களிலும் கிறஸ்தவனுக்கு அவசியம். எனவே தெய்வீகக் கிருபையினால், தேவனுடைய வார்த்தை ஒன்றைமட்டும் அது பழைய புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ளபடி அதனுடன் எதையும் கூட்டாமல், பிரசங்கிப்பதை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். இந்த வார்த்தை ஒன்றுமட்டும்தான் சத்தியம். சகலவிதமான கோட்பாடுகளுக்கும் வாழ்க்கைக்கும் நிச்சயமான சட்டம். ஒருபோதும் தோல்வி அடையாதது அல்லது எங்களை வஞ்சிக்காதது. இந்த அஸ்திவாரத்தின்மீது கட்டுகிற எவனும் நரகத்தின் சகலவித வல்லமைகளுக்கும் எதிராக நிற்பான். அதற்கு எதிராக ஏற்படுத்தப்படும் சகலவிதமான மாயைகளும் தேவனுடைய முகத்துக்குமுன் விழுந்துவிடும்.” (19) GCTam 224.1
“ஆகையால், எங்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த நுகத்தை நங்கள் நிராகரிக்கிறோம்.” “அதே சமயத்தில், மாட்சிமை தங்கிய அரசர் எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவ இளவரசனைப் போல் எங்களிடம் நடந்து கொள்ளுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். நாங்கள் அவருக்கும் அதைப்போலவே கிருபைமிக்க பிரபுக்களாயிருக்கின்ற உங்களனைவருக்கும் செலுத்தப்படவேண்டிய சட்டப்படியான எங்களது சகலவிதமான அன்பையும் கீழ்ப்படிதலையும் செலுத்துவோம்” என்று எழுதப்பட்டிருந்தது.--Ibid., b. 13, ch. 6. (20) GCTam 224.2
பிரதிநிதிகளின் சபையின்மீது ஆழ்ந்த உணர்த்துதல் உண்டானது. மறுப்பாளர்களின் தைரியத்தை அறிந்து, பெரும்பான்மையினர் வியப்பாலும் அபாய எச்சரிப்பாலும் நிரப்பப்பட்டனர். எதிர்காலம் புயல் மிக்கதாகவும் நிச்சய மற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. பிரிவினைகள்,சண்டைகள், இரத்தம்சிந்துதல் ஆகியவை தவிர்க்க முடியாதவைகளாகக் காணப் பட்டது. ஆனால் அவர்களது காரியத்தில் உள்ள நீதியைப்பற்றி நிச்சயமுடையவர் களாயிருந்த சீர்திருத்தவாதிகளோ, சர்வவல்லமையுள்ளவரின் கரத்தின்மீது சார்ந்து, முழுமையான தைரியமும் உறுதியுமுள்ளவர்களாயிருந்தனர். (21) GCTam 224.3
“இந்த போற்றப்பட்ட எதிர்ப்பின் கொள்கைகள்தான்.... புரொட்டஸ்டண்டு மார்க்கத்தில் மைய சாரம். ஆத்துமாவிற்கும் தேவனுக்கும் இடையிலுள்ள காரியங்களில் சட்டங்களை உண்டுபண்ணும் உரிமை சமூக அதிபதிகளுக்கில்லை என்று இந்த எதிர்ப்பாளர்கள் மறுத்து, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, நாங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று, தீர்க்கதரிசிகளுடனும் அப்போஸ்தலர்களுடனும் சேர்ந்து அறிவித்தனர். சகலவிதமான மனிதப் போதனைகளும், ஒருபோதும் தவறாத தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதாக இருக்க வேண்டும்” என்பதை அது முன்வைத்தது.—Ibid., b. 13, ch. 6. மனிதனின் மேலாண்மை என்னும் நுகத்தை மறுப்பாளர்கள் தூக்கி எறிந்தனர். சபையில் கிறிஸ்துவை மேலானவராக உயர்த்தினர். மனசாட்சியின் வல்லமையை நாட்டின் வல்லமையைவிட மேலானதாகவும், தேவனுடைய வார்த்தையைக் காணக்கூடிய சபைக்கும் மேலானதாகவும் வைத்தது. போப்புவின் மூன்றடுக்குக் கிரீடத்தையும் அரசனின் கிரீடத்தையும்விட, இயேசுவின் கிரீடம் உயர்த்தப்பட்டது. சத்தியத்தைப்பற்றிய அறிவுறுத்துதலை தாராளமாகக்கூறும் தங்களது உரிமையை மறுப்பாளர்கள் மேலும் உறுதிப்படுத்தினர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்பவதும் கீழ்ப்படிவதும் மட்டுமன்றி தேவனுடைய வார்த்தை எவைகளைக் காட்டுகிறதோ அவைகளைப் போதிப்போம் என்றும் அறிவித்து, குருமார்களும் நீதிபதிகளும் இதில் குறிக்கிடுகின்ற உரிமையை மறுத்தனர். ஸ்பைர்சில் உண்டான மறுப்பானது மதச்சகிப்புத்தன்மையின்மைக்கும், எல்லா மனிதர்களும் தங்களது மனசாட்சி கூறுகின்றபடி தேவனைத் தொழுதுகொள்ளும் உரிமையை மறுப்பதற்கும் எதிரான பக்திவிநயமான சாட்சியாக இருந்தது. (22) GCTam 225.1
அந்த அறிக்கை வெளியிடப்பட்டாகிவிட்டது. ஆயிரக்கணக்கானவர் களின் ஞாபகத்தில் அது எழுதப்பட்டு, மனித முயற்சிகளினால் அழிக்க முடியாதவிதத்தில் பரலோகப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டது. சுவிசேஷ ஜெர்மனி முழுவதும், தனது விசுவாசத்தின் அறிக்கையாக இந்த மறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்த அறிவிப்பில் ஒரு நல்லகாலத்தின் நிச்சயத்தை ஒவ்வொரு மனிதனும் கண்டான். “பக்தியுடனும் தாராளமாகவும் பயமில்லாமலும் அறிக்கை செய்யும் கிருபையை உங்களுக்குத்தந்த சர்வவல்லமையுள்ள தேவன் நித்தியத்தின் நாள்வரை உங்களை அந்தக் கிறிஸ்தவ உறுதியில் பாதுகாப்பாராக” என்று இளவரசர்களில் ஒருவர் ஸ்பைர்சில் இருந்த ஒரு புரொட்டஸ்டாண்டு விசுவாசியிடம் கூறினார்.(23) GCTam 225.2
சீர்திருத்தம் வெற்றியின் ஒரு நிலையை அடைந்தபின், உலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுவதற்காக வளைந்து கொடுத்திருந்தால், தேவனுக்கும் தனக்கும் உண்மையற்றதாக இருந்து, இவ்வாறாக அதன் சொந்த அழிவை அதுதானே காப்பீடு செய்திருந்திருக்கும். மேன்மைமிக்க இந்த சீர்திருத்தவாதிகளின் அனுபவத்தில் பின்வரும் காலங்களிலுள்ள தலைமுறையினருக்கு ஒரு பாடம் இருக்கிறது. தேவனுக்கும் அவரது வார்த்தைக்கும் எதிராக சாத்தான் நடந்துகொள்ளும் விதத்தில் எந்த மாறுதலும் உண்டாகவில்லை. தேவனுடைய வார்த்தை வாழ்க்கையின் வழிகாட்டியாக பதினாறாம் நூற்றாண்டில் இருந்தபோது, அதை எப்படி அவன் எதிர்த்தானோ அப்படிப்போலவே இன்றும் அவன் எதிர்க்கிறான். நமது காலத்தில் அவர்களது கோட்பாடுகளிலும் கற்பனைகளிலுமிருந்து அகலமான பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. விசுவாசத்திற்கும் கடமைகளுக்கும் வேதாகமம்! வேதாகமம் ஒன்று மட்டுமே சட்டமாக இருக்கிறது என்ற பெரும் புரொட்டஸ்டண்ட் கொள்கைகளுக்கு வரவேண்டிய ஒரு அவசியம் உள்ளது. மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அதை அழிப்பதற்கு ஒவ்வொரு உபாயத்தின் மூலமாகவும் சாத்தான் இன்றும் செயலாற்றிக் கொண்டிருக்கிறான். ஸ்பைர்ஸ் நகரப் புரொட்டஸ்டாண்டுகள் நிராகரித்த அந்திக்கிறிஸ்துவின் வல்லமையானது, அதன் மேலாண்மையை நிலைநாட்ட இப்போதும் புதிய சக்தியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. சீர்திருத்தத்தின்போது காட்டப்பட்ட வளைந்துகொடுக்காமல் தேவனுடைய வார்த்தையை மட்டும் சார்ந்திருந்த அதே தன்மை ஒன்றுமட்டுந்தான் இன்றைய சீர்திருத்தத்தின் நம்பிக்கையாக உள்ளது. (24) GCTam 226.1
புரொட்டஸ்டாண்டுகளுக்கு ஆபத்து ஏற்படும் அடையாளங்கள் தோன்றின. விசுவாசமுள்ளவர்களைக் காக்கும்வண்ணம் தெய்வீகக்கரம் நீட்டப்பட்டதன் அடையாளங்களும் இருந்தன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் மெலாங்தன்ஸ்பைர்ஸ் நகரத் தெருக்களின் வழியாகச் சென்று, தனதுநண்பரான சைமன் கிரிநெயஸ் என்பவரை தாமதமின்றி ரைன் நதியைக் கடந்துசெல்லும்படி அவசரப்படுத்தினார். இப்படி அவசரமாக ஓடிப்போகவேண்டியதன் காரணம் என்ன? என்று கிரிநேயஸ் ஆச்சரியத்துடன் அறிய விரும்பினார். “எனக்கு அறிமுகமில்லாத வயது முதிர்ந்த பக்தி விநயமான ஒரு மனிதர் என்முன் தோன்றி ‘கிரிநேயஸ் அவர்களைக் கைதுசெய்யும்படி, பெர்டினாண்டினால் நீதிமன்றத்தின் அதிகாரிகள் சிலநிமிடங்களில் அனுப்பப்படுவார்கள்’ என்று கூறினார்” என்றார். ரைன் நதியின் நீர் அவரது நண்பரையும் அவரது உயிரை வாங்கத் தேடின எதிரிகளையும் பிரிக்கும்வரை, மெலாங்தன் அந்த நதிக்கரையில் காத்துநின்றார். கிரிநேயஸ் ரைன் நதியின் அக்கரையில் கடந்துசென்றதைக் கண்டபின்னர்: “குற்றமற்றவரின் இரத்தத்தின்மீது தாகம் கொண்டிருந்தவர்களின் கொடுமைமிக்கத் தாடைகளுக்கிடையிலிருந்து அவர் கிழித்தெடுக்கப்பட்டிருக்கிறார்” என்றார். (25) GCTam 226.2
அந்நாளில் போப்புமார்க்கத்தின் முன்னனி முனைவர் ஃபேபர், தனது பிரசங்கத்தில் கிரிநேயஸ்மீது பொய்ப் பழி சாற்றியிருந்தார். பிரசங்கமுடிவில் “குறிப்பிட்ட வெறுக்கத்தக்க தவறுகளை” சரி என்று கிரிநேயஸ் சாதித்ததால் அவர் ஆட்சேபித்தார். தனது கோபத்தை மறைத்துவைத்திருந்த ஃபேபர் உடனே அரசனிடம் சென்று, அந்த மறுப்பாளரைக் கைது செய்யும் அதிகாரத்தைப் பெற்றார். கர்த்தர் தனது நண்பரைக் காக்கும்படி ஒரு பரிசுத்த தேவதூதனை அனுப்பினார் என்று மெலாங்தன் நம்பினார். (26) GCTam 227.1
“கிரிநேயஸை உபத்திரவப்படுத்துகிறவர்களிடமிருந்து ஓடையின் தண்ணீர்கள் தப்புவிக்கும்வரை, ரைன் நதியின் கரைகளில் மெலாங்தன் அசைவின்றி காத்திருந்தார். ‘குற்றமற்ற இரத்தத்தின்மீது தாகமுடைய கொடிய பற்களுக்கிடையிலிருந்து கடைசியாக அவர் கிழித்தெடுக்கப்பட்டார்’ என்று கிரிநேயஸை அக்கரையில் பார்த்தவுடன் மெலாங்தன் கூறினார். அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றபின் கிரிநேயஸைத் தேடிய அதிகாரிகள், அவரது வீடு முழுவதையும் மேலிருந்து கீழ்வரை தேடினார்களென்று அவர் வீட்டிற்குத் திரும்பியபின் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.”—Ibid., b. 13, ch. 6. (27) GCTam 227.2
பூமியின்மேல் வல்லமைமிக்கவர்களுக்குமுன் சீர்திருத்தம் பெரும் முக்கியத்துவம் மிகுந்ததாகக் கொண்டுவரப்பட வேண்டியதாக இருந்தது. பெர்டினாண்டு அரசன் சுவிசேஷ இளவரசர்களின் நீதிமன்ற முறையீட்டைக் கேட்க மறுத்துவிட்டான். ஆனால் தங்களது காரியத்தை பேரரசன், சபை மற்றும் நாட்டுத் தலைவர்கள் கூடியுள்ள மாபெரும் மன்றத்தின் முன் வைக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேரரசு முழுவதிலும் உண்டாயிருந்த பிரிவினையை அமைதிப்படுத்துவதற்காக ஐந்தாம் சார்லஸ், ஸ்பைர்ஸ் நகரிலுண்டான மறுப்புக்கு அடுத்தவருடம் ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு பிரதிநிதிகளின் சபையைக்கூட்டி, அதற்குத் தலைமைதாங்கும் தனது விருப்பத்தை அறிவித்திருந்தான். இந்த இடத்திற்கு வரும்படியாக புரொட்டஸ்டாண்டு தலைவர்கள் அழைக்கப்பட்டார்கள். (28) GCTam 227.3
பெரும் ஆபத்துக்கள் சீர்திருத்தத்தை பயமுறுத்தின. ஆனால் அதன் பரிந்துரையாளர்கள், தங்களது காரியத்தில் தேவன்மீது நம்பிக்கைவைத்து, சுவிசேஷத்திற்காக உ உறுதியாக நிற்போமென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சாக்சோனியத் தேர்தல் அதிகாரியை அவரது ஆலோசகர்கள், பிரதிநிதிகளின் சபைக்குச் செல்லவேண்டாம் என்று வற்புறுத்தினர். இளவரசர்களை ஒரு கண்ணியில் பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பிரதிநிதிகளின் குழுவின் முன்பாகத் தோன்ற வேண்டும் என்று பேரரசர் வலியுறுத்தியிருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். “ஒரு நகரின் சுவருக்குள் வல்லமையான எதிரியுடன் ஒன்றாக அடைக்கப்படுவது எல்லாவற்றையும் ஆபத்துக்குள்ளாக்குவதாக இருக்காதா?” என்றார்கள். அதற்கு மற்றவர்கள்: “இளவரசர்கள் தங்களை மட்டும் தைரியப்படுத்திக்கொள்ளட்டும். தேவனுடைய காரியம் காக்கப்படும்” என்று பெருமிதமாக அறிவித்தனர். “நமது தேவன் உண்மையுள்ளவர். அவர் நம்மைக் கைவிடமாட்டார்” என்று லுத்தர் கூறினார்.-Ibid., b. 14, ch. 2. தேர்தல் அதிகாரி அவரது பரிவாரங்களுடன் ஆக்ஸ்பர்க் நகருக்குப் புறப்பட்டார். அவரைப் பயமுறுத்தியிருந்த ஆபத்தை அனைவரும் அறிந்து, துக்கம் நிறைந்த முகத்துடனும் துயரம்மிக்க இதயங்களுடனும் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் கோபர்க் என்னுமிடம்வரை அவர்களுடன் சென்ற லுத்தர் அப்பயணத்தில் அவர் எழுதின “நமது தேவன் பலத்த கோட்டையாக இருக்கிறார்” என்ற பாடலைப்பாடி, மூழ்கிக்கொண்டிருந்த அவர்களது விசுவாசத்தை உற்சாகப்படுத்தினார். எதிர்நோக்கியிருந்த துன்பத்தைப்பற்றிய அநேக கவலைகள் நீக்கப்பட்டு, பாரமாக இருந்த இருதயங்கள் அந்தப் படலினாலும் அதன் இசையினாலும் இலகுவடைந்தன. (29) GCTam 227.4
தங்கள் கருத்துக்களை ஒரு முறையான வேதவாக்கியங்களை ஆதாரமாகக்கொண்ட அறிக்கையின்வழியாக பிரதிநிதிகளின் சபையின் முன் வைக்கவேண்டும் என்று சீர்திருத்தத்தைச் சார்ந்த இளவரசர்கள் முடிவு செய்திருந்தனர். இதை ஆயத்தம் செய்யும் பொறுப்பு லுத்தர், மெலாங்தன் மற்றும் அவரது சகாக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை, புரொட்டஸ்டாண்டுகளால் அவர்களது விசுவாசத்தின் அறிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த முக்கியமான சாசனத்தின்மீது தங்களது பெயர்களை எழுத அவர்கள் கூடினர். அது பக்திவிநயமான சோதனைமிக்க நேரமாக இருந்தது. அவர்களது நோக்கத்தில் அரசியல் கேள்விகளோடு குழும்பிவிடக்கூடாது என்பதை அவர்கள் வரவேற்றிருந்தனர். தேவனுடைய வார்த்தையிலிருந்து புறப்படும் ஒரு செல்வாக்கு அல்லாமல், வேறெதையும் சீர்திருத்தம் செயல்படுத்தக்கூடாது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். (30) GCTam 228.1
கிறிஸ்தவ இளவரசர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திட முன்வந்தபோது, மெலாங்தன் குறுக்கிட்டு, “இறையியல் வல்லுநர்களும் ஊழியக்காரர்களும்தான் இதைச் செய்யவேண்டும், பூமியின் வல்லமைமிக்க அதிகாரிகள் வேறு காரியங்களுக்காகத் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். “என்னைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிறதை தேவன் தடுப்பாராக. எனது கிரீடத்தைப்பற்றி நான் கவலைப்படாமல், எனது கடமையைச் செய்ய நான் தீர்மானித் திருக்கிறேன். ஆண்டவரை அறிக்கை செய்ய நான் விரும்புகிறேன். எனது அரச உடைகளும் கிரீடமும் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைவிட எனக்கு விலைமதிப்புள்ளவைகளல்ல” என்று ஜான் சாக்சோனி பதில் சொல்லி, தனது பெயரை அந்தக் கடிதத்தில் எழுதினார். வேறொரு இளவரசர் தனது எழுதுகோலை எடுத்தபோது “எனது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேன்மைக்கு அது அவசியமானால், எனது பொருட்களையும் உயிரையும் புறம்பாக விட்டுவிட நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த அறிக்கையில் அடங்கி உள்ளதைவிட வேறெந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளுவதைவிட, எனது மக்கள் எனது நாடு ஆகிய அனைத்தையும் மறுத்து, கையில் எனது கோலைப் பிடித்துக்கொண்டு எனது தந்தையின் நாட்டைவிட்டு வெளியேறுவேன்” என்று தொடர்ந்தார். Ibid., b. 14, ch. 6. அந்த தேவனுடைய மனிதர்களின் விசுவாசமும் துணிவும் அப்படிப்பட்டதாக இருந்தது! (31) GCTam 228.2
பேரரசனின் முன்பாக நிற்கும் நேரம் வந்தது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாலும் இளவரசர்களாலும் சூழப்பட்டு, அரியணையில் அமர்ந்த ஐந்தாம் சார்லஸ் பேரரசன், புரொட்டஸ்டாண்டு சீர்திருத்தவாதிகளைப் பேசும்படி அழைத்தார். அவர்களது விசுவாச அறிக்கை வாசிக்கப்பட்டது அந்த அரச மேன்மைமிக்க மன்றத்தில் சுவிசேஷத்தின் சத்தியங்கள் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டு, போப்புமார்க்க சபையின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. “சீர்திருத்தத்தின் மிகப்பெரும்நாள், கிறிஸ்தவம், உலகம் ஆகியவைகளின் வரலாற்றில், மகிமைமிக்க நாட்களில் ஒன்று” என்று அது நன்கு அறிவிக்கப்பட்டது.--Ibid., b. 14, ch. 7. (32) GCTam 229.1
விட்டன்பர்க் சந்நியாசி (லுத்தர்) வோம்ஸ் நகரில் அந்த தேசிய ஆலோசனைக் குழுவின்முன் தன்னந்தனியாக நின்று சில வருடங்கள் கழிந்திருந்தன. இப்பொழுது அவர் நின்றிருந்த இடத்தில், அந்தப் பேரரசின் மிக மேன்மை தங்கியவர்கள், வல்லமையுள்ள இளவரசர்கள் நின்றிருந்தனர். ஆக்ஸ்பர்க்-ல் தோன்றுவதற்கு, லுத்தர் தடைசெய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரது வார்த்தையினாலும், ஜெபங்களினாலும் அவர் அங்கு இருந்தார். “மிகத் தெளிவாக அறிக்கை செய்யக்கூடியவர்களால் இவ்வளவு மகிமைமிக்க மன்றத்தில் பகிரங்கமாக கிறிஸ்து உயர்த்தப்பட்ட இந்த நேரம்வரை நான் வாழ்ந்திருப்பதற்காக பூரிப்படைகிறேன்” என்று அவர் எழுதினார்.-Ibid., b. 14, ch. 7. “உம்முடைய சாட்சியை நான் இராஜாக்களுக்கு முன்பாக அறிவிப்பேன்” (சங்கீதம் 119:46) என்று வேதவாக்கியம் கூறிய தீர்க்கதரிசனம் இங்கு நிறைவேறியது. (33) GCTam 229.2
பவுலின் நாட்களில் எதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டாரோ, அந்த சுவிசேஷம் ரோம் நகரத்திலிருந்த இளவரசர்களுக்கும் மேன்மக்களுக் கும் முன்பாக இவ்விதமாக கொண்டுவரப்பட்டது. “இந்தச் சந்தர்ப்பத்தில் பிரசங்கபீடத்திலிருந்து பிரசங்கிக்கக்கூடாது என்று பேரரசன் எவைகளைத் தடைசெய்திருந்தானோ, அவைகள் அரண்மனையில் அறிவிக்கப்பட்டன. வேலைக்காரர்கள் கேட்பதற்குக்கூடத் தகுதியற்ற கருத்துக்கள் என்று அநேகர் கருதியிருந்த அது, பேரரசில் இருந்த எஜமானர்களாலும் பிரபுக் களாலும் வியப்புடன் கேட்கப்பட்டது, முடிசூடிய இளவரசர்கள் பிரசங்கித்த அந்தப் பிரசங்கம் ராஜரீக சத்தியம்பற்றியதாயிருக்க, அவர்களும் பெரிய மனிதர்களும் செவிமடுத்தனர். அப்போஸ்தலர்களுடைய காலத்திலிருந்து அன்றுவரை, மிக உயர்வான விதத்தில் இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணின அப்படிப்பட்ட ஒரு பெரும்பணி ஒருபோதும் இருந்ததில்லை” என்று ஒரு எழுத்தாளர் கூறினார்.--Ibid., b. 14, ch. 7. (34) GCTam 230.1
“லுத்தரன்கள் கூறியது அனைத்தும் உண்மை. அவைகளை நம்மால் மறுக்க இயலாது” என்று ஒரு போப்புமார்க்கப் பேராயர் அறிவித்தார். “தேர்தல் அதிகாரியினாலும் அவரது அணியைச் சோர்ந்தவர்களாலும் தரப்பட்ட அறிக்கையை உங்களது பலத்த நியாயத்தினால் மறுக்க முடியுமா?” என்று டாக்டர் ஈக் அவர்களைப் பார்த்து வேறொருவர் கேட்டார். “அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளின் சபைக் குழுக்களும் எழுதியுள்ளவை களிலிருந்து எடுத்து பதில் கூறமுடியும்” என்பது பதிலாக இருந்தது. “அப்படி யானால், லுத்தரன்கள் வேதவாக்கியங்களில் மூழ்கி எழுந்தவர்களாக உள்ளனர். நாம் அதற்கு வெளியில் மட்டும்தான் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுகிறேன்” என்று கேள்விகேட்டவரே பதில் கூறினார். --Ibid., b. 14, ch. 8. (35) GCTam 230.2
ஜெர்மன் இளவரசர்களில் சிலர் சீர்திருத்த விசுவாசத்திற்கு ஆதாயப்படுத்தப்பட்டனர். புரொட்டஸ்டாண்டுகளின் அறிக்கை சத்தியமாக இருக்கின்றன என்று பேரரசர் தானும் அறிக்கைசெய்தார். அந்த அறிக்கை அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பா எங்கும் பரப்பப்பட்டது. பின்பு தோன்றிய தலைமுறைகளில் இலட்சக்கணக்கானவர்களால் தங்கள் விசுவாசத்தின் அறிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. (36) GCTam 230.3
விசுவாசமிக்க தேவனுடைய வேலைக்காரர்கள் தனியாக உழைக்க வில்லை. துரைத்தனங்களும், வல்லமைகளும், உயர்ந்த இடத்திலுள்ள தீய ஆவிகளும், அதற்கெதிராக அணிவகுத்தபோது, கர்த்தர் அவருடைய மக்களைக் கைவிட்டுவிடவில்லை. அவர்களது கண்கள் திறக்கப்பட்டிருந் திருக்கக்கூடுமானால், பழைய காலத்தில் இருந்த தீர்க்கதரிசிக்கு, தெய்வீகப் பிரசன்னம் அருளப்பட்டது போன்ற காட்சியை அவர்களால் இப்போதும் கண்டிருந்திருக்க முடியும். எலிசாவின் வேலைக்காரன் தனது எஜமானுக்கு, பொல்லாங்குமிக்க சேனை அவர்களைச் சூழ்ந்து, அவர்கள் தப்பிக்கக்கூடிய எல்லா வாய்ப்புக்களையும் அடைத்துப்போட்டதை சுட்டிக்காட்டியபோது, எலிசா விண்ணப்பம்பண்ணி: “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” (2 இராஜா. 6:17) என்றார். உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அதைப்போலவே, சீர்திருத்தப்பணியில் இருந்த ஊழியக்காரர்களை தேவதூதர்கள் பாதுகாத்தனர்.(37) GCTam 230.4
சீர்திருத்தத்திற்கு ஆதரவாக சமயச் சார்பற்ற வல்லமைகளின் ஆதரவைத்தேடக்கூடாது என்பது லுத்தர் மிகமிக உறுதியாக நடைமுறைப் படுத்தியிருந்த கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. அதற்குப் பாதுகாப்பாக ஆயுத உதவியையும் கேட்கக்கூடாது என்று இருந்தது. பேரரசில் இருந்த இளவரசர்களால் சுவிசேஷம் அறிக்கை செய்யப்பட்டதில் லுத்தர் மகிழ்ந்தார். ஆனால் அவர்கள் ஒரு தற்காப்புச் சேனையாகத் திரளவேண்டுமென்று உத்தேசித்தபோது, சுவிசேஷத்தின் கோட்பாடு தேவனால் மட்டுமே காக்கப்படவேண்டும் என்று அறிவித்தார். மனிதர்கள் எவ்வளவு குறைவாக இந்த வேலையில் தலையிடுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அதன் சார்பாக தேவன் குறுக்கிடுவது தெரியும். அரசியல் முன்னெச்சரிக்கையாகக் கருதப்பட்டவைகள் அனைத்தும் அவரது பார்வையில் தேவையற்ற பயமும், பாவமிக்க அவநம்பிக்கையுமாக இருந்தது.--Ibid., b. 10, ch. 14. (38) GCTam 231.1
சீர்திருத்த விசுவாசத்தைக் கவிழ்க்க, வல்லமைமிக்க எதிரிகள் ஒன்றுசேரும்போது, அதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பட்டயங்கள் உருவப் பட்டதாக காணப்படும்போது, “சாத்தான் கொந்தளிக்கிறான். தெய்வபக்தியற்ற இளவரசர்கள் ஒருமித்து ஆலோசனை செய்கிறார்கள். யுத்தத்தால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம். நமது எதிரிகள் தேவஆவியினால் மேற்கொள்ளப்பட்டு சமாதானத்திற்கு இணங்கி வரும்படி தேவ சிங்காசனத்திற்கு முன்பாக விசுவாசத்துடன் ஜெபத்துடனும் போரிட மக்களுக்கு உபதேசியுங்கள். நமது அவசரத்தேவைகளில் மிக முக்கியமானது நாம் முதன்முதலில் செய்யவேண்டியது ஜெபம்! மக்கள் பட்டயத்தின் விளிம்பிற்கும் பேயின் கோபத்திற்கும் இந்த நேரத்தில் ஆளாகி இருப்பதை அறிந்து, அவர்கள் ஜெபம் செய்வார்களாக” என்று லுத்தர் எழுதினார்.--Ibid., b. 10, ch. 14. (39) GCTam 231.2
மறுபடியும் சில நாட்களுக்குப்பின், சீர்திருத்தவாதிகளான இளவரசர்கள் சிந்தித்த போரைப்பற்றிக் குறிப்பிட்டு, “முன்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை நமது மனசாட்சியில் ஏற்றுக்கொள்ளமுடியாது. நமது கர்த்தராகிய கிறிஸ்து போதுமான பலமிக்கவராக இருக்கிறார். ஆபத்திலிருந்து நம்மைக் காத்து, பக்தியற்ற இளவரசர்களின் நினைவுகளை ஒன்றுமில்லாமல் போகச்செய்ய வழிகளையும் முறைகளையும் கண்டுபிடிக்க அவரால் முடியும். அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய விருப்பமாக இருக்கிறோமா இல்லையா என்றும் இதைச் சத்தியமாகக் கொண்டிருக்கிறோமா இல்லையா என்றும் கிறிஸ்து நம்மைச் சோதிக்கிறார். எவ்விதமாகவும் நமது செயல்களினாலும், இரத்தம் சிந்துவதற்கும் உபத்திரவத்திற்கும் சுவிசேஷம் காரணமாக இருந்துவிடக் கூடாது. அதைவிட சுவிசேஷத்திற்காக நாம் பத்துதடவை மரிக்கலாம். அதற்குமேலும் சங்கீதக்காரன் சொல்வதைப்போல், வெட்டப்படுவதற்காகக் கொண்டுசெல்லப்படும் ஆடுகளைப்போல, நாம் கணக்கிடப்படுவோமாக. நாம் பழிவாங்கும் அல்லது தற்காப்புச்செய்யும் பணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தேவனுடைய கோபத்திற்கு இடம்கொடுப்போம். கிறிஸ்துவின் சிலுவை சுமக்கப்பட்டாகவேண்டும். மேன்மைதங்கிய நீங்கள் அஞ்சாதவர்களாக இருங்கள். நமது எதிரிகள் அவர்களது பெருமை பாராட்டுதலால் செய்வதைவிட அதிகமாக நாம் நமது ஜெபங்களால் செயலாற்றலாம். உங்களது கரங்கள் மட்டும் உங்களது சகோதரர்களின் இரத்தத்தால் கறைபடாதவைகளாக இருக்கட்டும். நாம் பேரரசனின் விசாரணைக்குச் செல்லவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டால், அங்கு தோன்ற தயாராக இருக்கிறோம். உங்களால் விசுவாசத்தைப் பாதுகாக்க இயலாது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் ஆபத்திலும் அபாயத்திலும் நம்பிக்கை வைக்கவேண்டும்” என்று சாக்சோனி யின் தேர்தல் அதிகாரிக்கு எழுதினார்.-Ibid., b. 14, ch. 1. (40) GCTam 232.1
மாபெரும் சீர்திருத்தத்தில் உலகை அசைத்த வல்லமை, இரகசிய ஜெபத்திலிருந்து வந்தது. கர்த்தருடைய வேலைக்காரர்கள் அங்கு அவருடைய வாக்குத்தத்தம் என்னும் கன்மலையின்மீது பரிசுத்தமான அமைதியுடன் தங்கள் பாதங்களை ஊன்றினார்கள். ஆக்ஸ்பர்கில் நிகழ்ந்த அந்தப் போராட்டத்தின்போது, தினந்தோறும் ஜெபத்தில் மூன்றுமணி நேரத்திற்குக் குறையாமல் லுத்தர் ஈடுபட்டிருக்கத் தவறவில்லை. அந்த நாளில் முக்கியமாக ஆராயப்படுவதற்கென்று எடுத்துக்கொள்ளப்பட்ட காரியங்கள் இவைதான். ஒரு நண்பனிடம் பேசுவதுபோல், அவர் தனது அறையின் தனிமைலிருந்து துதித்தல், பயம், நம்பிக்கை ஆகியவைகளுடன் தனது ஆத்துமாவை தேவனுக்கு முன்பாக ஊற்றுவது கேட்கப்பட்டது. “நீர் எங்களது பிதாவாகவும் தேவனாகவும் இருக்கிறீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீர் உமது பிள்ளைகளை உபத்திரவப் படுத்துகிறவர்களைச் சிதறடிப்பீர். ஏனெனில் எங்களுடன் சேர்ந்து நீரும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறீர். இந்தக் காரியங்கள் அனைத்தும் உம்முடையது. உமது ஏவுதலினால்தான் நாங்கள் எங்கள் கைகளை இதில் வைத்திருக்கிறோம். அப்படியானால் ஓ! பிதாவே, எங்களைக் காத்துக்கொள்ளும்” என்று அவர் கூறினார்.--Ibid., b. 14, ch. 6. (41) GCTam 232.2
“கிறிஸ்துவினால் கிருபையும் சமாதானமும் உண்டு. இந்த உலகத்தி னால் அல்ல, கிறிஸ்துவினால் மட்டுமே என்று நான் கூறுகிறேன். ஆமென்! உங்களை எரித்துக்கொண்டிருக்கும் கவலையை நான் மிக அதிகமாக வெறுக்கிறேன். இந்த நோக்கம் அநீதியாயிருக்குமானால், அதைவிட்டொழித்து விடுங்கள். நீதியாக இருக்குமானால், பயமில்லாமல் நித்திரைசெய்யும்படி நமக்குக் கட்டளையிட்டவரின் வாக்குத்தத்தத்தை நாம் ஏன் பொய்யாக்கவேண்டும்? நீதியும் சத்தியமும் உள்ள வேலையைச் செய்வதற்கு கிறிஸ்து போதுமான வல்லமையற்றவராக இருக்கமாட்டார். அவர் உயிருடன் இருக்கிறார். அவர் ஆளுகை செய்கிறார். அப்படி யிருக்கும்போது, நாம் பயப்படவேண்டிய அவசியம் என்ன?” என்று வேதனையினாலும் பயத்தினாலும் நொறுங்கிப்போயிருந்த மெலாங்தானுக்கு அவர் எழுதினார்.--Ibid., b. 14, ch. 6. (42) GCTam 233.1
தேவன் அவரது ஊழியக்காரரின் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். இந்த உலகத்தின் அந்தகாரலோகாதிபதிகளுக்கு எதிராக சத்தியத்தைக் காத்துநிற்பதற்கான கிருபையையும் தைரியத்தையும் இளவரசர்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் அவர் கொடுத்தார். “அந்தப்படியே இதோ தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாய் இருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவ தில்லை” (1பேதுரு 2:16) என்று கர்த்தர் கூறுகிறார். புரொட்டஸ்டாண்டு சீர்திருத்தவாதிகள் கிறிஸ்துவின்மேல் கட்டினார்கள். பாதாளத்தின் திறவு கோல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. (43) GCTam 233.2