மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
9—சுவிஸ்சர்லாந்தின் சீர்திருத்தவாதி!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 171-184)
ச பையைச் சீர்திருத்தும் கருவிகளைத் தேர்ந்தெடுப்பதில் சபையை ஸ்தாபிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே தெய்வீகத்திட்டம் செயலாற்றியது. மக்களின் தலைவர்கள் என்ற போற்றுதல்களைப் பெறும் வழக்கத்தைக்கொண்டிருந்த பெரும் கல்விமான்களும் செல்வந்தர்களுமான உலகத்தின் பெரிய மனிதர்களைவிட்டுப் பரலோக ஆசிரியர் கடந்து சென்றார். அவர்கள் பெருமையான தங்களுடைய மேன்மையைக் குறித்து அகந்தையும், சுயத்தின்மீது நம்பிக்கைகொண்டவர்களாகவும் இருந்ததால், உடன் மனிதர்கள்மேல் அனுதாபம் கொள்ளவும் நாசரேத்தின் தாழ்மையான மனிதருக்கு உடன்வேலைக்காரராக இருக்கவும்வனையப்படமுடியாதவர்களாக இருந்தனர். “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிற வர்களாக்குவேன்” (மத்தேயு 4:19) என்ற அழைப்பு கலிலேயராகிய கல்வியற்ற உழைக்கும் மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தச் சீடர்கள் தாழ்மையுள்ளவர்களாகவும் கற்பிக்கப்படக்கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்களது காலத்திலிருந்த தவறான போதனைகளினால் எந்த அளவிற்கு ஆட்கொள்ளப்படாதவர்களாக இருந்தார்களோ, அந்த அளவிற்கு கிறிஸ்துவால் அவர்களை அவரது சேவைக்கு அதிக வெற்றிகரமாகப் பயிற்றுவிக்க முடிந்தது. பெரும் சீர்திருத்தத்தின் நாட்களிலும் இவ்வண்ணமாகவே இருந்தது. முன்னணியிலிருந்த சீர்திருத்தவாதிகள், மிகத் தாழ்மையான வாழ்க்கையிலிருந்து வந்த மனிதர்களாக இருந்தனர். அவர்களது காலத்திலிருந்த மேலான நிலைமையைப்பற்றிய பெருமையற்றவர் களான, மதவெறி, குருப்பயிற்சி ஆகியவைகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டவர்களாக அவர்கள் இருந்தனர். பெரும் பயன்களை உண்டுபண்ண மிகத் தாழ்மையான கருவிகளைப் பயன்படுத்துவது தேவனுடைய திட்டமாக உள்ளது. அப்படிச் செய்யும்போது, அதன் மகிமை மனிதர்களுக்குக் கொடுக்கப்படாமல், ஆண்டவரது மகிழ்ச்சிக்கென்று செயலாற்று கிறவர்களின் மூலமாக, தேவனுக்குக் கொடுக்கப்படும். (1) GCTam 187.1
சாக்சோனியிலுள்ள ஒரு சுரங்கத் தொழிலாளியின் வீட்டில் லுத்தர் பிறந்த சில வாரங்களுக்குப்பின், ஆல்ப்ஸ் மலைகளுக் கிடையிலுள்ள ஒரு மேய்ப்பனின் குடிசையில் உல்ரிக் ஸ்விங்ளி பிறந்தார். ஸ்விங்ளியின் பிள்ளைப்பருவச் சுற்றுப்புறங்களும் அவரது ஆரம்பகாலப் பயிற்சியும் அவரது எதிர்கால ஊழியத்திற்கென்று அவரை ஆயத்தப்படுத்துபவையாக இருந்தன. இயற்கையின் மகத்தான காட்சிகளின் அழகு, திகைக்கவைக்கும் கம்பீரம் ஆகியவைகளுக்கு நடுவில் வளர்க்கப்பட்ட அவரது மனம், ஆரம் பத்திலேயே தேவனின் மகா மேன்மையைப் பற்றிய உணர்வு, அவரது வல்லமை, அவரது மகத்துவம் ஆகியவைகளினால் உணர்த்தப்பட்டதாக இருந்தது. தனது பிறப்பிடமான மலைகளில் வீரச்செயல்களினால் சாதித்தவைகளைப் பற்றிய வரலாறு இளமையான அவரது ஆவலை அவரில் தூண்டிவிட்டது. ஆலயத்தில் சொல்லப்பட்டிருந்த கட்டுக்கதை களிலிருந்தும், பாரம்பரியங்களிலிருந்தும் அவரது பக்திமிக்க பாட்டி பொறுக்கியெடுத்துச் சொன்ன சில விலைமதிப்புமிக்க வேதாகமக் கதைகளை அவளது அருகிலமர்ந்து கேட்டார். முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகள் ஆகியோரின் மாபெரிய செயல்கள் குறித்தும், தேவதூதர்கள் பேசின பாலஸ்தீனக் குன்றுகளின் மேய்ப்பர்களைக் குறித்தும், பெத்லெகேமின் குழந்தை, கல்வாரி மனிதர் ஆகியோரைக் குறித்தும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். (2) GCTam 188.1
லுத்தரைப்போலவே ஸ்விங்ளியின் தந்தை தனது மகனின் கல்வியில் நாட்டம் கொண்டதால், அந்தச் சிறுவன் ஆரம்பத்திலேயே தனது பிறப்பிடமாகிய பள்ளத்தாக்கைவிட்டு அனுப்பப்பட்டார். அவரது மனம் வேகமாக முன்னேறவே, அவருக்குக் கல்விபுகட்டத் தகுதிவாய்ந்த ஆசிரியரை எங்கு கண்டுபிடிப்பது என்பது ஒரு கேள்வியாயிற்று. ஸ்விட்சர்லாந்தில் மிகச்சிறப்பான பள்ளியைக்கொண்டிருந்த பெர்ன் என்னும் இடத்திற்கு, அவர் தனது பதிமூன்றாம் வயதில் அனுப்பப்பட்டார். இங்கு அவரது நம்பிக்கைமிக்க வாழ்க்கையைப் பாழாக்கக்கூடிய ஒரு அபாயம் உண்டானது. அவரை மடாலயத்திற்குக் கவர்ந்து இழுக்கும் தீர்மானமான முயற்சிகள் குருமார்களால் மேற்கொள்ளப்பட்டன. வெகு ஜனங்களின் ஆதரவைப் பெறுவதற்காக டொமினிகன் பிரிவிலும் பிரான்சிஸ்கன் பிரிவிலும் இருந்த சந்நியாசிகள் போட்டிச் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். தங்களது ஆலயங்களை காணக்கூடிய விதத்தில் அலங்காரம் செய்வதினாலும், தங்களுடைய சடங்குகளின் ஆடம்பரத்தினாலும், புனிதப் பொருட்கள் மற்றும் அற்புதங்களைச் செய்யும் சிலைகளினால் உண்டாகும் கவர்ச்சியினாலும், இதை அடைந்துகொள்ள அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். தாலந்துகள் நிறைந்த இந்த இளைஞனை ஆதாயப்படுத்திக்கொண்டால், அதன் லாபத்தையும் மதிப்புகளையும் பெறலாம் என்று பெர்ன் நகர டொமினிகன் சபையினர் கண்டனர். அவரது இளமை, இயற்கையான பேச்சு மற்றும் எழுத்துத் திறமை, இசையிலும் கவிதையிலும் அவருக்கிருந்த நுண்ணறிவு ஆகியவை அவர்களது டாம்பீகத்தையும் அலங்காரங்களையும்விட, ஆராதனைகளுக்கு மக்களைக் கவருவதற்கும் அவர்களது வருமானத்திற்கும் அதிகப் பயன்தரும் என்று எண்ணி தங்களுடைய வஞ்சனையினாலும் முகஸ்துதியினாலும் ஸ்விங்ளியைத் தங்களது மடத்திற்கு இழுக்க அவர்கள் முயன்றனர். லுத்தர் பள்ளியில் ஒரு மாணவராயிருந்தபோது ஒரு மடாலயத்தில் அடைக்கப்பட்டிருந்தார். தெய்வீக ஏற்பாடு அவரை விடுவிக்காமல் இருந்திருந்தால், அவர் உலகத்தால் இழுக்கப்பட்டிருந்திருப்பார். அப்படிப்பட்ட ஆபத்தைச் சந்திக்கும்படி ஸ்விங்ளி அனுமதிக்கப்படவில்லை. குருமார்களின் திட்டங்களைப்பற்றிய தகவலை தெய்வாதீனமாக அவரது தந்தை அறிந்தார். சாமியார்களின் சோம்பேறித்தனமும் பயனற்றதுமான வாழ்க்கையை அவரது மகன் பின்பற்றுவதை அவர் விரும்பவில்லை. மகனின் எதிர்காலம் அழிவை நோக்கியிருப்பதைக் கண்ட அவர், தாமதமின்றி ஸ்விங்ளியை வீட்டிற்குத் திரும்பும்படியாகக் கட்டளையிட்டார். (3) GCTam 188.2
அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். ஆனால் அந்த இளைஞரால் அவரது சொந்த ஊரில் அதிக நாட்கள் திருப்தியாக இருக்கமுடியவில்லை. சில நாட்கள் ஓய்விற்குப்பின் அவர் பேசில் என்கிற இடத்திற்கு விரைந்துசென்று, தனது கல்வியை மீண்டும் தொடர்ந்தார். இங்குதான் அவர் முதன்முதலாக தேவனுடைய இலவசமான கிருபையைப்பற்றிக் கேட்டறிந்தார். பழங்கால மொழிகளைப்பற்றிப் போதிக்கும் ஆசிரியரான விட்டம்பர்க் என்பவர், எபிரெய கிரேக்க மொழிகளை ஆராயும்போது, பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்படியாக நடத்தப்படவே, இவ்வாறாக அவரால் போதிக்கப்பட்டுக்கொண்டிருந்த மாணவர்களின் மனங்களில் தெய்வீக வெளிச்சத்தின் ஒளிக்கதிர்கள் விழுந்தது. படித்தவர்கள் தத்துவசாஸ்திரிகள் ஆகியவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்த கோட்பாடுகளைவிட மிகப் பழமையானதும், எல்லையற்ற விதத்தில் பெரியதுமான ஒரு சத்தியம் இருக்கிறது. பாவியின் ஒரே பரிகாரம் கிறிஸ்துவின் மரணம்தான் என்பதுதான் அந்தப் பழமையான சத்தியம் என்று அவர் அறிவித்தார். இந்த வார்த்தைகள் காலை விடியலுக்கு முன் செல்லும் முதல் ஒளிக்கதிரின் ஒளிபோல இருந்தது ஸ்விங்ளிக்கு. (4) GCTam 189.1
ஸ்விங்ளி தனது வாழ்க்கைப் பயணத்தில் ஈடுபடும்படி பேசிலில் இருந்து விரைவில் அழைக்கப்பட்டார். தனது சொந்த இடமான பள்ளத்தாக்கிற்கு அருகிலிருந்த ஆல்பின் சபைவட்டம் அவரது ஊழியத்தின் முதல் களமாக இருந்தது. குருவாக அபிஷேகம் பண்ணப்பட்ட அவர் “அவரது முழு ஆத்துமாவோடும் தெய்வீக சத்தியத்தைத் தேடுவதில் ஈடுபட்டார். ஏனெனில் கிறிஸ்துவின் மந்தை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்போது, தான் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கவேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்” என்று, அவரது உடன் சீர்திருத்தவாதி ஒருவர் கூறினார். அவர் எந்த அளவிற்கு வேதவாக்கியங்களை ஆராய்ந்தாரோ அந்த அளவிற்கும் அதிகமாக சத்தியத்திற்கும் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் மதப்புரட்டிற்கும் இடையிலுள்ள வேற்றுமையை மிகத் தெளிவாக அறிந்தார். போதுமானதாகவும், தவறாத நியமமுமாக இருக்கிற தேவனுடைய வார்த்தைக்கு அவர் தன்னை கீழ்ப்படுத்தினார். அதுவேதான் அதன் விளக்கமாக இருக்கவேண்டும் என்பதையும் கண்டார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட கோட்பாடுகளைத் தாங்குவதற்கேற்ப, வேத வாக்கியங்களுக்கு விளக்கம்தர அவர் துணியாமல், அதன் நேரடியானதும் காணக்கூடியதுமான போதனை என்ன என்று அறிந்துகொள்ளுவதை தனது கடமையாகக்கொண்டார். அதன் பொருளை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள எல்லா உதவியையும் நாடி, பரிசுத்த ஆவிக்காக கெஞ்சி மன்றாடினார். உண்மையுடனும் ஜெபத்துடனும் வேதவிளக்கம் தேடுகிற அனைவருக்கும் அவர் வெளிப்படுத்துவார் என்றும் அறிவித்தார். (5) GCTam 190.1
தேவனுடைய வார்த்தை மனிதனிடமிருந்து வராமல், தேவனிடமிருந்து வருகிறது என்று ஸ்விங்ளி கூறினார். பேச்சுக்களும் தேவனிடமிருந்து வருகிறது என்பதை உங்களுக்குப் புரியவைக்கும் தேவன்தாமே வெளிப்படுத்துவார். தேவனுடைய வார்த்தை... தவறமுடியாதது. அது ஒளிமிக்கது. அது தன்னில்தானே போதனை உள்ளது. சகலவித இரட்சிப்பினாலும், கிருபையினாலும் அது ஆத்துமாவை ஒளிபெறச் செய்கிறது. தேவனுக்குள் ஆறுதல் தருகிறது. அது தன்னைத்தானே மறுத்து தேவனைத் தழுவுவதற்காக தன்னைத் தாழ்த்துகிறது. இந்த வார்த்தைகளின் உண்மையை ஸ்விங்ளியே மெய்ப்பித்தார். அவரது அனுபவத்தைப்பற்றிப் பின்னர் “என்னை முற்றிலுமாக நான் வேதவாக்கியத்திற்கு ஒப்புக்கொடுத்தபோது, தத்துவங்களும் இறையியலும் எப்பொழுதும் எனக்குள் முரண்பாடான கருத்தை உண்டு பண்ணுபவைகளாக இருந்தன. கடைசியாக ‘நீ இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, தேவனைப்பற்றிய பொருளை, அவருக்குச் சொந்தமான எளிய வார்த்தையிலிருந்தே முழுமையாகக் கற்றுக்கொள்ளவேண்டும்’ என்ற முடிவிற்கு வந்தேன். அதன்பின் அவரது ஒளிக்காக தேவனிடம் கேட்க ஆரம்பித்தேன். அப்போது வேத வாக்கியங்கள் எனக்கு மிகவும் எளிதாக இருந்தன” என்று எழுதினார். —D'Aubigne, b. 8, ch. 6. (6) GCTam 190.2
ஸ்விங்ளி பிரசங்கித்த கோட்பாடு, அவர் லுத்தரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக இருக்கவில்லை. அது கிறிஸ்துவின் கோட்பாடாக இருந்தது. லுத்தர் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார் என்றால், நான் என்னசெய்கிறேனோ அதையே அவரும் செய்கிறார். என்னைக் காட்டிலும் அவர் அதிக ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் நடத்தியிருக்கிறார். அப்படியே ஆகட்டும். அப்படியேயானாலும் கிறிஸ்துவின் வீரனாக இருக்கும் நான் கிறிஸ்துவின் பெயரையன்றி வேறொரு பெயரையும் எடுத்துக்கொள்ள மாட்டேன். அவர் மாத்திரமே எனக்குத் தலைவர். லுத்தரால் எனக்கோ அல்லது என்னால் லுத்தருக்கோ ஒருவரிகூடச் சொல்லப்படவில்லை. ஏன்? நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்களாக இருந்தும், கிறிஸ்துவைப்பற்றிய கோட்பாட்டில் மிகவும் நெருக்கமான இசைவுள்ளவர்களாக இருக்கிறோம். தேவஆவியின் சாட்சி எப்படி இசைவுள்ளதாக இருக்கிறதென்று எல்லோருக்கும் வெளிப்படும்படிக்கே என்றார்.--Ibid, b. 8, ch. 9. (7) GCTam 191.1
கி.பி.1516-ல் ஐன்சிடின் என்ற மடத்தின் பிரசங்கியாக இருக்கும்படி ஸ்விங்ளி அழைக்கப்பட்டார். இங்கு ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலுள்ள ஊழலை மிக அருகில் காணும் நிலை ஏற்பட்டு, தனது சொந்த இடமான ஆல்ப்ஸ்-ஐயும் தாண்டி உணரப்படும்வகையில், சீர்திருத்தவாதி என்ற செவல்வாக்கை பயன்படுத்த வேண்டியவரானார். ஐன்சிடினில் இருந்த அநேக கவர்ச்சிகளில் தலையாய ஒன்று, அற்புதங்களைச் செய்யும் ஆற்றலை உடையது என்று சொல்லப்பட்டிருந்த கன்னி மரியாளின் சிலையாகும். “பாவங்களுக்கான முழுப்பாவமன்னிப்பையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்” என்ற சொற்கள் அந்த மடத்தின் வாசலில் பொறிக்கப்பட்டிருந்தன.--Ibid, b. 8, ch. 5. மரியாளின் சிலை வைக்கப்பட்டிருந்த அந்தப் புதிய இடத்திற்கு, யாத்ரீகர்கள் சகல பருவகாலங்களிலும் வருவார்கள். ஆனால் அதைப் பிரதிஷ்டை செய்யும் பெரும் பண்டிகை நாளில், திரளான ஜனங்கள் ஸ்விட்சர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், பிரான்ஸ், ஜெர்மனியில் இருந்துங்கூட வருவார்கள். இந்தக் காட்சியினால் மிகவும் வேதனையடைந்த ஸ்விங்ளி, மூடநம்பிக்கைகளில் அடிமைகளாயிருந்தவர்களுக்கு, சுவிசேஷத்தின் மூலம் விடுதலையை அறிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். (8) GCTam 191.2
“சிருஷ்டிக்கப்பட்டுள்ள மற்ற எந்த இடத்தையும்விட இந்த ஆலயத் தில்தான் தேவன் இருக்கிறார் என்று எண்ணாதீர்கள், உங்கள் வாழ்விடத்தை எங்கெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரோ, அங்கெல்லாம் அவர் உங்களைச் சூழ இருந்து, நீங்கள் ஜெபிப்பதைக் கேட்கிறார். லாபமற்ற கிரியைகளிலும், களைப்பூட்டும் பக்திப் பயணங்களிலும், கன்னிமரியாளிடமும் பரிசுத்தவான்களிடமும், உங்கள் ஜெபங்களை ஏறெடுப்பதிலும் என்ன வல்லமை இருக்கிறது? ஜெபத்தில் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்து வது எதைக் காட்டுகிறது? தாடியை வளர்ப்பதிலோ, தலைமயிரைச் சிரைத்துக் கொள்ளுவதிலோ ஆசாரிய உடையை அணிவதிலோ, பொன்னாபரணங்களை அணிந்துகொள்ளுவதிலோ என்ன சிறப்பு இருக்கிறது? தேவன் இதயத்தைப் பார்க்கிறார். ஆனால் நமது இதயங்கள் தேவனைவிட்டு வெகுதூரமாக உள்ளன. ஒரேமுறையாக, அனைத்து விசுவாசிகளின் பாவங்களுக்காகவும், தன்னைத்தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்த கிறிஸ்து, நித்தியகாலத்திற்கும் திருப்தியை ஏற்படுத்துகின்ற தியாகமாகவும் பலியாகவும் இருக்கிறார்” என்று அவர் கூறினார். --Ibid, b. 8, ch. 5. (9) GCTam 191.3
கேட்ட அநேகருக்கு இது வரவேற்கமுடியாததாக இருந்தது. கடினமான அவர்களது பயணங்கள் வீணாக மேற்கொள்ளப் பட்டிருந்தன என்று சொல்லப்பட்டது, அவர்களுக்கு மிகுந்த கசப்பும் ஏமாற்றமும் உள்ளதாக இருந்தது. கிறிஸ்துவின் மூலமாக, அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டிருந்த மன்னிப்பை அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ரோம் அவர்களுக்கு குறித்துக்கொடுத்திருந்த பரலோகத்திற்கான பழைய பாதையிலேயே அவர்கள் திருப்தி அடைந்திருந்தனர். அதைவிடச் சிறந்த எதையும் தேட விரும்பாதிருந்தனர். இதயத்தின் தூய்மையைத் தேடுவதைவிட, தங்களின் இரட்சிப்பிற்காக குருமார்களையும், போப்புவையும் நம்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. (10) GCTam 192.1
ஆனால் வேறொரு வகுப்பினர், கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பைப்பற்றிய செய்தியை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். ரோமால் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்த சமயச் சடங்குகளனைத்தும் ஆத்துமாவிற்குச் சமாதானத்தைக் கொண்டுவருவதில் தோல்வியடைந்தால், தங்களின் பாவப் பரிகாரத்திற்காகச் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தை பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்ட விலைமதிப்புமிக்க ஒளியை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்துவதற்காக, தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். இவ்வாறாக, சத்தியம் சிற்றூர்களிலிருந்து சிற்றூர்களுக்கும், பேரூர்களிலிருந்து பேரூர்களுக்கும் எடுத்துச்செல்லப்படவே, கன்னிமரியின் புண்ணியஸ்தலத்திற்குச் செல்லும் புதிய யாத்ரீகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது! அதன் விளைவாக, காணிக்கைகள் குறையவே, அவைகளில் இருந்து ஸ்விங்ளிக்குக் கிடைத்திருந்த சம்பளமும் குறைந்தது. ஆனால் மதவெறி, மூடநம்பிக்கை ஆகியவைகளின் வல்லமையை உடைக்கும் காரணமாக அது அமைந்ததைக் கண்ட அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சியைத்தான் உண்டுபண்ணியது. (11) GCTam 192.2
ஸ்விங்ளி நிறைவேற்றிக்கொண்டிருந்த பணியை ரோமன் கத்தோலிக்க சபை காணாமலிருக்கவில்லை. ஆனால் தற்போதைக்கு அதில் குறுக்கிடவேண்டாம் என்று இருந்தனர். எப்படியும் அவரை தங்கள் வேலைக்கு ஈர்த்துவிடலாம் என்று, அவரை முகஸ்துதி செய்து ஆதாயப்படுத்த முயன்றனர். அந்த சமயத்தில் சத்தியம் மக்களின் இதயங்களைப்பற்றிப் பிடித்து, அவர்களை ஆதாயப்படுத்திக் கொண்டிருந்தது. (12) GCTam 193.1
ஐன்சினிலிருந்த அவரது ஊழியம் அவர் விரைவில் நுழைய இருந்த விசாலமான களத்திற்கு அவரை ஆயத்தம் செய்துகொண்டு இருந்தது. இங்கு அவர் மூன்று வருடங்கள் இருந்தபின்னர், ஜுரிச் பேராலயத்தின் பிரசங்கியார் பதவிக்கு அழைக்கப்பட்டார். ஸ்விஸ் நாட்டின் மிக முக்கியமான நகரமாக அது இருந்து, இங்கு செயலாற்றப்படும் செல்வாக்கு பரவலாக உணரக்கூடியதாயிருக்கும். எந்த சபைத் தலைவர்களின் விருப்பத்தினால் அவர் அங்கு அழைக்கப்பட்டாரோ, அவர்கள் அவரது புதிய கண்டுபிடிப்புகளைத் தடுக்க நினைத்து, அவரது பொறுப்புக்களை அவருக்கு வரையறுத்துக் கட்டளையிடப் புறப்பட்டனர். (13) GCTam 193.2
சின்னஞ்சிறு காரியத்தைக்கூட விட்டுவிடாமல், சபையின் வருமானத்தை அதிகப்படுத்த, நீங்கள் உங்களது மிகமேலான திறமையைப் பயன்படுத்தவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். பிரசங்க பீடத்திலிருந்தும் பாவ அறிக்கைசெய்யும் இடத்திலிருந்தும், சபைக்குச் சேரவேண்டிய தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கொடுத்து, தங்களது காணிக்கைகளின் மூலமாக, சபையின்மீது அன்புள்ளவர்களாக இருக்கிறார்களென்று சாட்சிபகரும்படி உபதேசம் செய்யுங்கள். நோயாளிகள், திருப்பலிபூசைகள், பொதுவான சபைச் சட்டதிட்டங்கள் ஆகியவைகளின் வழியாக வரும் வருமானத்தில் நீங்கள் மிகுந்த கவனமுடையவராக இருக்கவேண்டும். நற்கருணை கொடுத்தல், பிரசங்கம் செய்தல், சபையினரை நேரடியாகக் கவனித்தல் ஆகிய காரியங்களும் குருமார்களின் பணிக்கு உட்பட்டதாக உள்ளது. ஆனால் இவைகளைச் செய்வதற்கு குறிப்பாக பிரசங்கம் செய்வதற்கு உங்களுக்குப் பதிலாக ஒரு பதிலாளியை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். சிறப்பான நபர்களுக்கு மட்டுமே விசேஷமாக நீங்கள் அழைக்கப்படும்போது, நற்கருணை கொடுக்கவேண்டும். வேற்றுமைகளின்றி எல்லா நிலைமைகளிலும் இருக்கும் சாதாரணமானவர்களுக்கு நற்கருணை வழங்கும் அனுமதி உங்களுக்கில்லை என்று அவரது போதனையாளர்கள் கூறினார்கள். —Ibid, b. 8, ch. 6. (14) GCTam 193.3
அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளைப்பற்றி ஸ்விங்ளி மௌனமாகக் கேட்டபின், இந்த முக்கியமான இடத்திற்கு அவரை அழைத்துச் சிறப்பித்ததற்காக நன்றியைத் தெரிவித்தார். பின்னர், அவர் கடைப்பிடிக்க யோசித்திருக்கும் முறையைப்பற்றி விளக்கத் தொடங்கினார். “இயேசுவின் வாழ்க்கை வரலாறு மக்களின் பார்வையிலிருந்து வெகுகாலமாகவே விலக்கிவைக்கப்பட்டிருக்கிறது. வேதவாக்கியமாகிய ஊற்றுகளிலிருந்து மட்டும் எடுத்து, வசனத்துடன் வசனத்தை ஒப்பிட்டு, அதன் ஆழத்தைக் கண்டுபிடித்து, பரிசுத்த ஆவியானவரின் எண்ணத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் வண்ணம், ஆர்வமிக்க இடைவிடாத ஜெபத்துடன், மத்தேயு எழுதின சுவிசேஷத்திலிருந்த எடுத்துச் சொல்லுவதே எனது நோக்கமாக இருக்கிறது. தேவனுடைய மகிமைக்காகவும் அவரது ஒரே குமாரனின் மேன்மைக்காகவும் ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகவும், உண்மையான விசுவாசத்தின் உபதேசத்திற்காகவும், நான் எனது ஊழயத்தைப் பிரதிஷ்டைசெய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.-Ibid, b. 8, ch. 6. சபைத் தலைவர்களில் சிலர் அவரது திட்டத்தை அங்கீகரிக்க மறுத்து, அதிலிருந்து அவரைப் பின்வாங்கச்செய்யும்படி முயன்றபோதிலும், ஸ்விங்ளி உறுதியாக நின்றார். அவர் புதிய முறை ஒன்றையும் அறிமுகம் செய்யாமல், சபை முந்தின நாட்களில் கடைப்பிடித்திருந்த பழைய தூய்மையான முறைமையையே பின்பற்றப்போவதாகவும் அறிவித்தார். (15) GCTam 194.1
அவர் போதித்த சத்தியங்களின்மீது ஏற்கனவே ஒரு ஆர்வம் எழுப்பப்பட்டிருந்தது. அதனால் அவரது பிரசங்கத்தைக் கேட்க பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளாகக் கூடினார்கள். வெகு நாட்களாக ஆராதனையில் பங்குகொள்வதைவிட்டு விலகியிருந்த வர்களும் இப்போது அவரது சொற்பொழிவைக் கேட்பவர்களுக் கிடையில் இருந்தனர். அவர் தமது ஊழியத்தை சுவிசேஷங்களிலிருந்து ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள், மரணம் ஆகியவைகளைப்பற்றி ஏவப்பட்டு வரையப்பட்டுள்ளவைகளை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வாசித்தும் விளக்கியும் கூறினார். ஐன்சின் நகரில் செய்ததுபோலவே, இங்கும், தேவனுடைய வார்த்தை மாத்திரமே தவறாதது என்றும் கிறிஸ்துவின் மரணமே முழுமையான ஒரே தியாகபலி என்றும் எடுத்துக் கூறினார். நான் உங்களை இரட்சிப்பின் மெய்யான ஊற்றாகிய கிறிஸ்துவிடத்திற்கு மட்டுமே நடத்திச்செல்ல விரும்புகிறேன்.-Ibid, b. 8, ch. 6. நாட்டுத்தலைவர்கள் மேதாவிகளிலிருந்து கலைஞர், விவசாயிகள் ஆகிய அனைத்துத் தரப்பு மக்களும் அந்தப் பேச்சாளரைக் கூட்டமாகச் சூழ்ந்துகொண்டனர். மிகுந்த ஆர்வத்துடன் அவருடைய வார்த்தைகளை அவர்கள் கவனித்தனர். இலவசமான இரட்சிப்பை மட்டும் அவர் அறிவித்ததோடன்றி, அந்தக்காலத்தில் நிலவியிருந்த தீமைகளையும் ஊழல்களையும் அச்சமின்றிக் கடிந்துரைத்தார். பேராலயத்திலிருந்து அநேகர் தேவனைப் புகழ்ந்தவண்ணம் திரும்பிச் சென்றனர். “இந்த மனிதர் சத்தியத்தைப் பிரசங்கிக்கும் ஒரு நபர். இந்த எகிப்திய இருளிலிருந்து நம்மை நடத்திச்செல்லும் நம்முடைய மோசேயாக இவர் இருப்பார்” என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர்.-Ibid, b. 8, ch. 6. (16) GCTam 194.2
முதலில் அவரது ஊழியம் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டபோதிலும், சில காலத்திற்குப்பிறகு எதிர்ப்பு எழும்பியது. அவரது ஊழியத்திற்கு இடையூறு செய்யவும், அவரது போதனைகளைப் பழிக்கவும், சந்நியாசிகள் தாங்களாகவே புறப்பட்டனர். அநேகர் அவரைப் பரிகசித்து உறுமினார்கள். மற்றவர்கள் அகந்தையையும் பயமுறுத்துதலையும் உபயோகித்தனர். நாம் ஆத்துமாக்களைக் கிறிஸ்துவிற்காக ஆதாயப்படுத்த வேண்டுமானால், நமது பாதையில் வரும் அநேக காரியங்களுக்கு, நமது கண்களை மூடிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும் என்று அனைத்தையும் பொறுமையுடன் சகித்த ஸ்விங்ளி கூறினார்.-Ibid, b. 8, ch. 6. (17) GCTam 195.1
இந்தக் காலக்கட்டத்தில் சீர்திருத்தத்தின் வேலையை முன்கொண்டுசெல்ல, ஒரு புதிய இயக்கம் உண்டாயிற்று. பேசிலில் இருந்த லுத்தரின் சீர்திருத்த விசுவாசத்தின் நண்பரான ஒருவரால், லூசியன் ஒருவர் லுத்தரின் சில புத்தகங்களுடன் ஜுரிச் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். “இந்த லூசியன் போதுமான அளவு அறிவும் விலாசமும் உடையவராக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் அவ்வாறு காணப்பட்டால், நகரிலிருந்து நகருக்கும், பேரூரிலிருந்து பேரூருக்கும், கிராமத்திலிருந்து கிராமத் திற்கும், அதுமட்டுமல்ல வீட்டிலிருந்து வீட்டிற்கும், சுவிட்சர்லாந்து முழுவதற்கும் லுத்தர் எழுதிய சத்தியங்களை, மிகக் குறிப்பாக சாதாரண மக்களுக்காக விளக்கி எழுதப்பட்ட கர்த்தருடைய ஜெபத்தை எடுத்துச் செல்லட்டும். இது அதிகம் அறியப்பட்டால் அதிகமாக வாங்குகிறவர்களை கண்டுபிடிக்கும்” என்று ஸ்விங்ளிக்கு எழுதினார்.--Ibid, b. 8, ch. 6. இவ்வாறாக, ஒளியானது தான் நுழையும் வழியைக் கண்டது. (18) GCTam 195.2
அறியாமை, மூடநம்பிக்கை ஆகிய விலங்குகளை உடைக்க தேவன் ஆயத்தம் செய்யும் அதேநேரத்தில், மனிதர்களை இருளினால்மூடி அவர்களது விலங்கை உறுதியாக இறுக்கிட, பெரும்வல்லமையுடன் சாத்தான் செயலாற்றுகிறான். கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவமன்னிப்வையும், நீதிமானாவதையும் மக்களுக்கு அறிவிக்க, பல்வேறு இடங்களிலும் மனிதர்கள் எழும்பினபோது, பாவமன்னிப்பைப் பணத்தினால் பெற்றுக் கொள்ளலாம் என்கிற தனது வியாபாரத்தை கிறிஸ்தவ உலகச்சந்தை முழுவதிலும் விற்க ரோம சபை புதிய பலத்துடன் புறப்பட்டது. (19) GCTam 195.3
ஒவ்வொரு பாவத்திற்கும் விலை இருந்தது. குற்றம்புரிவதற்கு மனிதர்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டனர். சபையின் கருவூலம் நிரம்பிவழிந்தது. இவ்வாறாக, பணத்தினால் உண்டாகக்கூடிய பாவமன்னிப்பு என்ற ஒன்றும், கிறிஸ்துவினால் கிடைக்கும் பாவமன்னிப்பு என்ற மற்றொன்றும் ஆக இரண்டு இயக்கங்கள் முன்னேறின. ரோமசபை பாவத்திற்கு அனுமதி வழங்கி, அதை அதன் வருமானத்திற்கு ஆதாரம் ஆக்கியது. சீர்திருத்தவாதிகள் பாவத்தைக் கண்டித்து, பாவத்திற்கு பரிகாரமாகவும் விடுதலையை வழங்குபவராகவும் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டினார்கள். (20) GCTam 196.1
ஜெர்மனியில் பாவமன்னிப்புச் சீட்டு வியாபாரம், டொமினிக்கன் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இழிஞனான டெட்செல்லினால் அது நடத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில் இந்த வியாபாரம் பிரான்சிஸ்கன் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சாம்சன் என்னும் இத்தாலிய சந்நியாசியின் கட்டுப்பட்டில் இருந்தது. ஜெர்மனியிலிருந்தும் ஸ்விட்சர்லாந்திலிருந்தும் ஏராளமான தொகையை சேகரித்ததால் போப்புவின் கருவூலத்தை நிரப்புவதற்கு சாம்சன் ஏற்கனவே திறமையான சேவை செய்திருந்தான். இப்பொழுது அவன் சுவிட்சர்லாந்து எங்கும் சஞ்சரித்து, திரளான கூட்டத்தினரைக் கவர்ந்து, ஏழை மக்களின் சொற்பமான சம்பாத்தியத்தையும் செல்வந்தர்களிடமிருந்து விலைமதிப்புமிக்க பரிசுகளையும் பெற்று, அனைவரையும் கெள்ளையிட்டான். சீர்திருத்தத்தினால் இந்த வியாபாரத்தை நிறுத்தமுடியாவிட்டாலும், தன் செல்வாக்கினால் அதைக் குறைத்திருந்ததை உணரமுடிந்தது. சாம்சன் ஸ்விட்சர்லாந்தில் ஸ்விங்ளி இருந்த ஐன்சிடின் நகருக்கு அருகில் இருந்த ஒரு நகருக்கு விரைவில் தனது ஏற்பாடுகளுடன் வந்து சேர்ந்தான். அவனது வியாபாரத்தைப்பற்றி அறிந்த ஸ்விங்ளி, அவனை உடனே எதிர்க்கப் புறப்பட்டார். ஆனால் அந்த இருவரும் சந்திக்கவில்லை. பதிலாக அந்த சாமியாரின் பாசாங்கை ஸ்விங்ளி வெளிப்படுத்தினது மிகவும் வெற்றிகரமாக இருந்ததினால், அவன் வேறிடத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. (21) GCTam 196.2
பாவமன்னிப்புச் சீட்டை விரும்புபவர்களைப்பற்றி ஸ்விங்ளி ஜுரிச் நகரில் மிகவும் வைராக்கியமாகப் பிரசங்கம் செய்யவே, சாம்சன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கிருந்து உடனே கடந்துசெல்லும்படியான ஒரு தகவலுடன், சபைக் குழுவிலிருந்த ஒருவர் அவனைச் சந்தித்தார். இறுதியாக சாம்சன் தந்திரமாக அங்கு நுழைந்தான். ஆனால் ஒரு பாவமன்னிப்புச் சீட்டைக்கூட அங்கு அவனால் விற்கமுடியவில்லை. ஸ்விட்சர்லாந்தைவிட்டு விரைவாக அவன் வெளியேறினான். (22) GCTam 196.3
கி.பி.1519-ம் வருடத்தில் ஒரு கொள்ளைநோய் ஸ்விட்சர்லாந்தில் தோன்றவே, ஏராளமானவர்கள் இறந்தனர். இது சீர்திருத்தத்திற்கு பலத்த ஊக்கத்தைக் கொடுத்தது. சங்காரக்காரனை இவ்விதமாக மனிதர்கள் நேருக்குநேர் சந்தித்தபோது, அவர்கள் சமீப காலத்தில் விலைகொடுத்து வாங்கின பாவமன்னிப்புச் சீட்டுகள் எவ்விதம் வீணானவைகளாக இருக்கின்றன என்பதை உணர்ந்து, தங்களது விசுவாசத்திற்கு அதிக நிச்சயமான அஸ்திவாரத்திற்காக ஏங்கினார்கள். ஜூரிச் நகரில் ஸ்விங்ளி நோயால் அடித்து வீழ்த்தப்பட்டார். பிழைப்பார் என்னும் நம்பிக்கை அற்றுப்போகும் அளவிற்கு அவர் மிகவும் மோசமடைந்தார். அவர் இறந்துவிட்டார் என்று செய்தி எங்கும் பரவியது. சோதனையான அந்த நேரத்தில், அவரது நம்பிக்கையும் தைரியமும் அசைவற்றதாக இருந்தது. பாவப்பரிகாரத்திற்குப் பூரணமாகப் போதுமானதாயிருந்த கல்வாரியின் சிலுவையை அவர் விசுவாசத்துடன் நோக்கினார். முன்பிருந்ததைவிட ஒருபோதும் இல்லாத அதிகமான ஆர்வத்துடன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே, அவர் மரணத்தின் வாசலிலிருந்து திரும்பிவந்தார். அவரது வார்த்தைகள் அபூர்வமான வல்லமையுள்ளதாக இருந்தன. கல்லறையின் விளிம்பிலிருந்து திரும்பிவந்த அவர்களது சிறப்பான போதகரை, மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவர்களும் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்தவர்களை விட்டுவிட்டுத்தான் அவரைக் காண வந்திருந்தனர். இதற்குமுன் ஒருபோதும் இல்லாதவிதத்தில, அவர்கள் சுவிசேஷத்தின் மதிப்பை உணர்ந்தார்கள்.(23) GCTam 197.1
சுவிசேஷ சத்தியத்தின் உண்மைகளை ஸ்விங்ளி மிகத் தெளிவாகப் புரிந்து, புதுப்பிக்கும் அதன் வல்லமையை தனக்குள் முழுமையாக அனுபவித்தார். மனிதனின் வீழ்ச்சியும், இரட்சிப்பின் திட்டமும் அவர் அறிந் துணர்ந்த பொருட்பாடங்களாக இருந்தன. “ஆதாமுக்குள் நாம் அனைவரும் மரித்தவர்களாக, அழிவிற்குள் மூழ்கி தண்டனையின்கீழ் இருந்திருந்தோம். ஆனால் கிறிஸ்து நமக்காக ஒரு நித்திய விடுதலையை விலைக்கு வாங்கியிருக்கிறார். அவரது உருக்கம் நித்திய தியாகபலியாகவும், நிரந்தர சுகம் தருவதாகவும் இருக்கிறது. உறுதியான அசையாத விசுவாசத்தோடு அதைச் சார்ந்திருக்கும் அனைவருக்காகவும் உள்ள தெய்வீக நீதியை அது எப்போதும் திருப்திப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.—Wylie, b. 8, ch. 9. ஆனாலும் கிறிஸ்துவின் கிருபையினாலே பாவத்தில் தொடர்ந்து இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லை என்று அவர் மிகத்தெளிவாகப் போதித்தார். “எங்கெல்லாம் விசுவாசம் உள்ளதோ, அங்கெல்லாம் தேவன் தங்கி இருக்கிறார் எங்கெல்லாம் தேவன் தங்கியிருக்கிறாரோ அங்கெல்லாம் நற்செயல்களை செய்யும்படியான தூண்டுதல் எழுப்பப்படுகிறது” என்று அவர் கூறினார்.--D'Aubigne, b. 8, ch. 9. (24) GCTam 197.2
ஸ்விங்ளியின் சொற்பொழிவு அந்த அளவிற்கு ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருந்ததால், அவரது அருளுரையைக் கவனிக்கும் படியாக வந்திருந்த மனிதர்களால் பேராலயம் நிரம்பிவழிந்தது. கேட்பவர்கள் தாங்கிக்கொள்ளும்விதத்தில் சத்தியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவர் களுக்குத்திறந்து காட்டினார்.அவர்களைத் திகைப்படையச்செய்து, இறுமாப்பை உண்டுபண்ணக்கூடிய குறிப்புகளைத் தொடக்கத்திலேயே அறிமுகப் படுத்தாமலிருப்பதற்கு அவர் கவன முள்ளவராக இருந்தார். கிறிஸ்துவின் போதனைகளுக்கு அவர்களது இதயங்களை ஆயத்தப்படுத்துவதும், அவரது அன்பினால் அவர்களை மென்மையடையச்செய்வதும், அவரது உதாரணத்தை அவர்களுக்கு முன்வைப்பதும்தான் அவரது முதல் பணிகளாக இருந்தன. சுவிசேஷத்தின் கொள்கைகளை அவர்கள் பெற்றுக் கொள்ளும்போது, அவர்களது மூடநம்பிக்கைகளும் பழக்கங்களும் தவிர்க்க முடியாதபடி தூக்கி எறியப்படுமல்லவா? (25) GCTam 198.1
ஜுரிச் நகரில் சீர்திருத்தம் படிப்படியாக முன்னேறியது. அபாயக்குரலுடன் அதன் விரோதிகள் எதிர்ப்பைத் தீவிரமாகச் செயலாற்ற எழுந்தனர். ஒரு வருடத்திற்குமுன் விட்டன்பர்க் நகரவாசியான லுத்தர் போப்புவையும் பேரரசனையும் மறுத்து கத்தோலிக்க மார்க்கத்திற்குக் கீழ்ப்படியமுடியாதென்று வோம்ஸ் நகரில் அறிவித்தார். இப்போது அதேபோன்ற நிலைமை ஜுரிச் நகரிலும் உண்டாவதுபோல், ஒவ்வொரு காரியத்திலும் காணப்பட்டது. ஸ்விங்ளியின்மேல் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. ரோம ஆட்சியில் அவ்வப்போது சுவிசேஷத்தின் சீடர்கள் சுட்டெரிக்கப்படும்படி கொண்டுவரப்பட்டிருந்தபோதும், அது போதுமானதாக இருக்கவில்லை. மதவிரோதத்தைப் போதிப்பவர்கள் மௌனப்படுத்தப்பட்டாகவேண்டும். அதன்படி, சமுதாயத்தின் சமாதானமும் நற்சீரும் ஆபத்துக்குட்படும்வண்ணம் சபைச் சட்டங்களை மீறும்படி ஸ்விங்ளி மக்களுக்குப் போதனை செய்கிறார் என்று குற்றம்சாட்டி, ஜுரிச்சின் ஆலோசனைக் குழுவிற்கு மூன்று பிரதிநிதிகளை கான்ஸ்டன்டைன்ஸ் நகரப் பேராயர் அனுப்பிவைத்தார். சபையின் அதிகாரம் ஒதுக்கிவைக்கப்பட்டால், பொதுவான அராஜகம் உண்டாகும் என்று கூறினார். தான் நான்கு வருடங்களாக ஜுரிச் நகரில் சுவிசேஷத்தைப் போதித்துவருவதாகவும், “இந்த நகரம் இந்த நாட்டின் கூட்டமைப்பிலுள்ள மற்றெந்த நகரத்தையும்விட, மிகுந்த அமைதியும் சமாதானமும் உள்ளதாக இருக்கிறது எனவே, பொதுவான பாதுகாப்பிற்கு கிறிஸ்தவமார்க்கம் மிகச்சிறந்த பாதுகாவலனாக இருக்கிறதல்லவா” என்று ஸ்விங்ளி அவர்மீது சாட்டப்பட்ட குற்றத்திற்குப் பதில் கூறினார்.—Wylie, b. 8, ch. 11.(26) GCTam 198.2
வந்திருந்த பிரதிநிதிகள் சபை, ஆலோசனைக் குழுவினர்களை நோக்கி, அவர்கள் சபையில் தொடரவேண்டுமென்றும், அப்படியில்லா விட்டால் அவர்களுக்கு இரட்சிப்பு இல்லையென்றும் ஆலோசனை கூறினர். “இந்தக் குற்றச்சாட்டுக்கள் உங்களை வருத்தப்படுத்த வேண்டாம். பேதுரு கிறிஸ்துவை விசுவாசத்துடன் அறிக்கை செய்ததினால் அவனுக்கு, நீ பேதுருவாய் இருக்கிறாய் என்ற பெயரைக் கொடுத்த கிறிஸ்து, அதே கன்மலைதான் சபையின் அஸ்திவாரமாக இருக்கிறார். ஒவ்வொரு ஜனத்திலும் எவன் தன் முழு இதயத்துடனும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறானோ, அவன் தேவனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறான். இங்குதான் உண்மையான சபை இருக்கிறது. இதற்கு வெளியிலிருந்து ஒருவனாலும் இரட்சிபை அடைய இயலாது” என்றார்.—D’Aubigne, London ed., b. 8, ch. 11. அந்த மாநாட்டின் விளைவாக, பிரதிநிதிகளில் ஒருவராக வந்திருந்த ஒரு பேராயர், சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். (27) GCTam 199.1
அந்த ஆலோசனைக்குழு ஸ்விங்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பமற்றதாகிவிடவே, ரோம சபை அவர் மீது புதிய தாக்குதலை நடத்த ஆயத்தமானது. அவரது எதிரிகளின் சதித்திட்டங்களை அறிந்த சீர்திருத்தவாதி, “அவர்கள் வரட்டுமே, செங்குத்தான கற்பாறையானது அதன் பாதங்களின்மீது மோதும் அலைகளுக்கு அஞ்சுவதுபோல நானும் அவர்களுக்கு அஞ்சுகிறேன்” என்று வியந்து கூறினார்.—Wylie, b.8, ch. 11. எதைக் கவிழ்க்க சபைத் தலைவர்கள் முயன்றார்களோ, அம்முயற்சிகளெல்லாம் அதன் முன்னேற்றத்திற்கு உதவியது. சத்தியம் தெடர்ந்து பரவியது. ஜெர்மனியில் சீர்திருத்தத்தைப் பற்றிக்கொண்டிருந்து, லுத்தரின் மறைவினால் அதைவிட்டு விழுந்துபோனவர்கள், சுவிட்சர்லாந்தில் சுவிசேஷத்தின் முன்னேற்றத்தைக் கண்டு மறுபடியும் தங்கள் இதயத்தை அதற்கு ஒப்புக்கொடுத்தார்கள். (28) GCTam 199.2
ஜுரிச்சில் சீர்திருத்தம் அமைக்கப்பட்டதின் விளைவாக, தீயபழக் கங்கள் விட்டுவிடப்பட்டு, சுவிசேஷத்தின்கனிகளான ஒழுக்கம் ஒற்றுமை ஆகியவை முழுமையாகக் காணப்பட்டன. “எங்கள் நகரில் சமாதானம் குடி கொண்டிருக்கிறது. சண்டை இல்லை. மாய்மாலம் இல்லை. பொறாமையும் கலகமும் இல்லை. எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவிடமிருந்தும், இதயங் களைச் சமாதானத்தினாலும், பக்தியினாலுமான கனிகளால் நிரப்பும் எங்கள் கோட்பாடுகளில் இருந்தும் அல்லாமல், வேறெங்கிருந்து இந்த ஒருமைப்பாடு உண்டாகமுடியும்?” என்று ஸ்விங்ளி எழுதினார்.-Ibid, b. 8, ch. 11. (29) GCTam 199.3
சீர்திருத்தத்தின் விளைவாக உண்டான வெற்றிகள், ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தினரை, அதைக் கவிழ்ப்பதற்கு மேலும் அதிகமான முயற்சிகளைச் செய்வதற்கு அவர்களைத் தூண்டியது. உபத்திரவத்தின் மூலமாக ஜெர்மனியில் லுத்தரின் முயற்சியை ஒடுக்கும்படிக் கையாண்ட உபத்திரவங்கள், பயன்படாமல் போனதைக்கண்ட அது, சீர்திருத்தத்தை தன் சொந்த ஆயுதங்களி னாலேயே சந்திக்க முடிவுசெய்தது. ஸ்விங்ளியுடன் ஒரு விவாதம் செய்யவும், அதற்கான விஷயங்களைத் திட்டம்செய்யும்போது, அப்போருக்கான இடத்தை தாங்கள் தேர்ந்தெடுப்பதோடல்லாமல், விவாதம் செய்பவர்களுக்கிடையிலான, நீதிபதிகளையும் தாங்களே ஏற்படுத்தவேண்டும் என்று தீர்மானித்தனர். இவ்விதமாக ஒரு தடவை ஸ்விங்ளியை தங்களது வல்லமைக்குள் கொண்டுவந்துவிட்டால், தப்பிக்கமுடியாதபடி அவரைக் கவனித்துக்கொள்ளலாம். தலைவரை மௌனப்படுத்திவிட்டால், இயக்கத்தை தீவிரமாக நசுக்கிவிடமுடியும் என்று எண்ணினார்கள். இந்த நோக்கமானது மிகவும் கவனமாக மறைத்துவைக்கப்பட்டது. (30) GCTam 199.4
பாதன் என்னுமிடத்தில் இந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஸ்விங்ளி அங்கிருக்கவில்லை. போப்புமார்க்கவாதிகளின் சதித் திட்டங்களை சந்தேகித்ததாலும், சுவிசேஷத்தை அறிக்கைசெய்பவர்களை எரிக்கும்படி அவர்கள் நாட்டுப்புறங்களில் எரியவைக்கப்பட்டிருக்கும் நெருப்பைப்பற்றி எச்சரிக்கப்பட்டதாலும், இந்த அபாயத்திற்குத் தங்களது போதகர் ஆளாவதை ஜுரிச் ஆலோசனைக்குழு தடுத்தது. ரோமன் கத்தோலிக்க நிர்வாகம் அனுப்பக்கூடிய அதன் கட்சிக்காரர்கள் அனைவரையும் ஜுரிச்நகரில் சந்திக்க அவர் தயாராக இருந்தார். ஆனால் சத்தியத்திற்காக இரத்தசாட்சிகளின் இரத்தம் சற்று முன்பாக சிந்தப்பட்டிருந்த இடமான பாதனுக்குச் செல்லுவது நிச்சயமாக மரணத்தை நோக்கிச் செல்லுவதாக இருக்கும். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் சார்பாகப் புகழ்வாய்ந்த டாக்டர் ஈக் என்பவர், அவரது ஆதரவாளர்களான கற்றறிந்த டாக்டர்களுடனும் குருமார்களின் கூட்டத்துடனும் பிரதிநிதியாக வந்தபோது, சீர்திருத்தத்தின் பிரதிநிதிகளாக ஓகோலாம்பேடியஸும், ஹாலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (31) GCTam 200.1
அந்த மாநாட்டில் ஸ்விங்ளி காணப்படாவிட்டாலும், அவரது செல்வாக்கு உணரப்பட்டிருந்தது. குறிப்பெழுதும் செயலாளர்கள் அனைவரும் போப்புமார்க்கவாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்—வேறு யாராவது அதில் ஈடுபட்டால், கொல்லப்படுவார்கள் என்ற தடையிருந்தபோதிலும், அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய விசுவாசமிக்க விளக்கத்தை நாள்தோறும் அவர் பெற்றுக்கொண்டு இருந்தார். இந்த விவாதத்தைப் பார்க்கச் சென்றிருந்த ஒரு மாணவர், அந்த நாளில் முன்வைக்கப்பட்ட வாதத்தைப்பற்றி, ஒவ்வொருநாள் மாலையிலும் குறிப்பெடுத்து வைத்தார். இந்தக் காகிதங்களை வேறு இரு மாணவர்கள் ஓகோலாம்பேடியஸ் எழுதின கடிதத்துடன் சேர்த்து, ஜுரிச் நகரிலிருந்த ஸ்விங்ளியிடம் கொடுத்தனர். தனது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் சீர்திருத்தவாதி பதிலாக எழுதிக் கொடுத்தார். இந்தக் கடிதங்கள் இரவில் எழுதப்பட்டு, அந்த மாணவர்களுடன் மறுநாள் காலையில் பாதன் நகருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நகர வாசலைக் காவல் செய்திருந்த காவலாளிகளின் கவனத்திலிருந்து தப்புவதற்காக, இந்தத் தூதுவர்கள் தங்கள் தலைகளில் வியாபாரத்திற்கான கோழிக்கூடைகளைச் சுமந்துவரவே, எந்தவிதமான இடையூறுமின்றி கடந்துசெல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். (32) GCTam 200.2
இவ்வாறாக, ஸ்விங்ளி அவரது எதிரிகளாயிருந்த தீயவர்களுடன் போர்செய்திருந்தார். “அந்தப் போட்டியைப்பற்றித் தியானித்து அதைக் கவனித் திருந்தது, பாதன் நகருக்குத் தனது ஆலோசனைகளை அனுப்பிவைத்ததன் வழியாக, அவரது எதிரிகளுக்கு நடுவிலிருந்து வாதம்செய்வதைக்காட்டிலும் அதிகமாகவே அவர் உழைத்தார்” என்று மைக்கேபானியஸ் என்பவர் கூறினார்.--D'Aubigne, b. 11, ch. 13. (33) GCTam 201.1
ரோமன் கத்தோலிக்கவாதிகள் தாங்கள் அடையப்போகும் வெற்றியை எதிர்நோக்கி பெருமிதப்பட்டு, ஊதிப்பருத்தவர்களாக மிக விலை யுயர்ந்த ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து பாதன் நகருக்கு வந்திருந்தனர். ஆடம்பரமாகக் காணப்பட்டதோடு, அவர்களது உணவு மேஜைகளும் மிக விலையுயர்ந்த உணவுப் பொருட்களினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திராட்சைரசத்தினாலும் பரப்பப்பட்டிருந்தன. சபைப் பொறுப்புகளினால் உண்டாகக்கூடிய அவர்களது பாரம், உல்லாசங்களினாலும் களியாட்டுக்களினாலும் இலகுவாக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிராக, சிறு பிச்சைக்காரர்களின் கூட்டத்தைவிடச் சற்று மேலானவர்களாக சீர்திருத்த வாதிகள் காணப்பட்டு, சிக்கனமான உணவின் காரணமான, உணவு மேஜையின்மீது குறுகிய நேரத்தைச் செலவிடுபவர்களாக இருந்தனர். ஓகோலாம்பேடியசுக்குத் தங்குமிடம் கொடுத்திருந்தவர், அவரை அவரது அறையில், எப்பொழுதும் வாசிப்பவராகவும் ஜெபத்தில் ஈடுபட்டிருப்பவராகவும் கண்டு, பெரிதும் வியந்து “அந்த மதப்புரட்டர் மிகுந்த பக்தி உடையவராக இருக்கிறார்” என்றார். (34) GCTam 201.2
மாநில மன்றத்தில், மிகவும் அலங்கரிக்கப்பட்ட பிரசங்கபீடத்தின்மேல், மிகவும் அகந்தையுடன் ஈக் ஏறிய அதே நேரத்தில், தாழ்மையான ஓகோலாம்பேடியஸ் மிகச் சாதாரணமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேசையின் மீதமர்ந்தார். ஈக் அவர்களின் உரத்த குரலும் எல்லையற்ற வாக்குறுதிகளும் அவரை ஒருபோதும் தோற்கச்செய்யவில்லை. பொன், புகழ் ஆகியவைகளின்மீதிருந்த அவரது ஆர்வம் அவரை உற்சாகப் படுத்தியிருந்தது. ஏனெனில், அந்த விசுவாசத்தைச் சார்ந்து பேசுவதற்கு கைநிறைந்த சம்பளம் கிடைக்க இருந்தது. அவரது மேலான வாதங்கள் தோற்றுப்போனபோது. அவர் அவமரியாதையாகப் பேசுவதிலும் ஆணை யிடுவதிலுங்கூட ஈடுபட்டார். (35) GCTam 201.3
ஓகோலாம்பேடியஸ் அடக்கமும் சுயநம்பிக்கை அற்றவருமாக வாதத்திலிருந்து ஒதுங்கி, “தேவனுடைய வார்த்தை ஒன்றைத்தவிர நியாயம் தீர்க்கும் சட்டமாக வேற எதையும் நான் அடையாளம் காட்டுவதற்கு இல்லை” என்று பக்திவிநயத்துடனும் வெளிப்படையான உறுதிமொழியுடனும் அதில் பிரவேசித்தார்.-Ibid, b. 11, ch. 13. அவர் நடத்தையில் சாதுவாகவும் மரியாதைமிக்கவராகவும் இருந்தபோதிலும், தகுதி உடையவராகவும் பின்வாங்காதவராகவும் இருந்தார் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். ரோமன் கத்தோலிக்கர்கள் அவர்களது வழக்கத்தின்படி சபையின் சம்பிரதாயங்களின்மீதுள்ள வல்லமையைப்பற்றி உரிமைபாராட்டிப் பேசியபோது, சீர்திருத்தவாதி வேதவாக்கியங்களை மிக உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார். “எங்களுடைய சுவிட்சர்லாந்து நாட்டில் அறிவியல் அமைப்புச் சட்டத்திற்கு இசைவாக இல்லாதவரை, சம்பிரதாயங்களுக்கு வலிமை இல்லை. இப்பொழுது விசுவாசம் சம்பந்தப்பட்ட சகல காரியங்களிலும், வேதாகமம் தான் எங்களது அரசியலமைப்புச் சட்டமாக உள்ளது” என்றார்.-Ibid, b. 11, ch. 13. (36) GCTam 202.1
வாதிட்ட இருவருக்கும் இடையிலிருந்த வேற்றுமை பயன்தராததாக இல்லை. சீர்திருத்தவாதியால் அமைதியாகவும் தெளிவாகவும் மிகமென்மை யாகவும் பணிவுடனும் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள், மக்களின் மனங்களை ஈக்-ன் பெருமையையும் மூர்க்கமுமிக்க உபதேசங்களையும் விட்டு தூரமாக விலக்கி, சீர்திருத்தவாதியின் கருத்துக்களின் பக்கம் திருப்பின. (37) GCTam 202.2
அந்த விவாதங்கள் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதன் முடிவில் போப்புமார்க்கவாதிகள் மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றியை உரிமை பாராட்டினார்கள். பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவர்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை ஆதரித்தனர். அந்த மன்றமானது சீர்திருத்தவாதிகள் முற்றிலுமாகத் தோற்றுப்போனார்கள் என்றும், அவர்கள் தங்கள் தலைவரான ஸ்விங்ளியுடன் சேர்த்து சபையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்றும் தீர்ப்பை அறிவித்தது. ஆனால் அனுகூலம் யார் பக்கத்தில் இருக்கிறதென்பதை அந்த மாநாட்டின் கனிகள் வெளிப்படுத்தின. அந்த விவாதத்தில் வெளிப்பட்ட போதனைகள் புரொட்டஸ்டாண்டு இயக்கத்திற்குப் பலமான உற்சாகத்தை உண்டுபண்ணவே, அதன்பின் பெர்ன், பேசல் ஆகிய முக்கிய நகரங்களில் சீர்திருத்தத்தை அறிவிக்க அதிகக் காலம் செல்லவில்லை. (38) GCTam 202.3