மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
41—பூமி பாழாக்கப்படுதல்!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 653—661)
“அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். ... அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் ... அவளுக்காக அழுது புலம்பி, அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்”-வெளி. 18:5—10. (1) GCTam 777.1
அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களாக ஆகிய பூமியின் வர்த்தகர்கள் “அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்” (வெளி.18:3,11,15,16) (2) GCTam 777.2
தேவனுடைய கோபாக்கினை பாபிலோன்மீது ஊற்றப்படும்பொழுது, அதன்மேல் வரும் வாதைகள் மேலே சொல்லப்பட்ட விதமாகத்தான் இருக்கும். அவள் தனது பாவப்பாத்திரத்தை நிரப்பிவிட்டாள். அவளது வேளை வந்துவிட்டது. அழிவுக்கு அவள் ஆயத்தமாகிவிட்டாள். (3) GCTam 777.3
தேவ ஜனங்களுடைய சிறையிருப்பை மாற்றிப்போடும் தேவனுடைய குரல் ஒலிக்கும்போது, மற்றவர்கள் தங்களுடைய நிர்க்கதியான நிலையைக் குறித்த விழிப்புணர்வை அடைகிறார்கள். இவ்வுணர்வு அவர்களை பயங்கரமாகப் பற்றிப்பிடிக்கும். வாழ்க்கைப் போராட்டத்திலே தாங்கள் அனைத்தையுமே இழந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் மனந்திருந்தி தங்களது பாதையை மாற்றிக்கொள்ளுவதற்காக நிறையத் தருணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சாத்தானுடைய ஏமாற்று வார்த்தைகளையே கேட்டுத் தங்களது பாவமார்க்கத்தை நியாயப்படுத்திக்கொண்டார்கள். செல்வந்தர்களாக இருந்தவர்கள் அதைக்குறித்துப் பெருமைப்பட்டதினால் மற்றவர்களைவிடத் தாங்கள் சிறந்தவர்களே என்று எண்ணிக்கொண்டனர். ஆனால் அந்தச் செல்வம் பாவ வழியில் சம்பாதித்தது என்பதை மறந்துவிட்டனர். பசித்திருப்போருக்கு உணவுகொடுத்தல், ஆடையில்லாதோருக்கு ஆடைகொடுத்தல், எதிலும் நியாயமாக நடத்தல், இரக்கத்தை நேசித்தல் ஆகிய காரியங்களை விட்டுவிட்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தி, தங்களைப்போன்ற மனிதர்களின் புகழ்ச்சியை நாடினர். இப்பொழுதோ அவர்கள் தங்களுடைய பெருமைக்குக் காரணமாக இருந்த அனைத்தையும் இழந்து வழியற்றவர்களாயும் போக்கற்றவர்களாயும் நிற்கின்றனர். செல்வம், புகழ் முதலான எந்த விக்கிரகங்கள்மேல் நம்பிக்கைவைத்துப் படைத்தவரைப் புறக்கணித்தார்களோ, அந்த விக்கிரகங்கள் அவர்கள் கண்களுக்குமுன்பாக அழிந்து பாழாவதைப் பிரமை பிடித்தவர்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இவ்வுலகச் செல்வங்களுக்காகவும் இவ்வுலக இன்பங்களுக்காகவும் தங்களது ஆத்துமாக்களை விற்று, பரலோகச் செல்வங்களை சேகரிக்க மறுத்துவிட்டார்கள். விளைவு? வெற்றி என்று எண்ணிய வாழ்க்கை தோல்வியாகவும், இனிப்பு என்று எண்ணியிருந்தது கசப்பாகவும், செல்வம் என்று எண்ணியது செல்லரிப்பாகவும் மாறிவிட்டன. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தவைகளனைத்தும் ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. செல்வந்தர்களாக இருந்தவர்கள் தங்களது பெருமைவாய்ந்த இல்லங்கள் தகர்ந்து விழுவதையும், சேர்த்துவைத்த பொன்னும் வெள்ளியும் சிதறிப்போவதையும் பார்த்துவாய்விட்டு அழ முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த விக்கிரகங்களோடு சேர்ந்து அவர்களும் அழியப்போவதை உணர்ந்ததும், அழுகை நின்றுபோகிறது. நடுக்கமெடுக்கிறது. (4) GCTam 778.1
இந்த அக்கிரமக்காரர்கள் இப்பொழுது அடையும் வருத்தம் பெரியது. ஆனால் அவ்வருத்தம் தாங்கள் மனிதனுக்கும் தெய்வத்திற்கும் பெருந்துரோகம் செய்தோமே என்பதற்காக அல்ல. தங்களது பாவத் துரோகத்தை தேவன் முறியடித்துவிட்டாரே என்பதற்காகத்தான். தங்களுக்கு நேர்ந்துவிட்ட துன்பங்களுக்காகத்தான் வருந்துகிறார்களேயன்றி, தாங்கள் செய்த அக்கிரமங்களுக்காக அல்ல. இப்பொழுதுங்கூட தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை முறியடிக்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமானால், அதையும் பயன்படுத்தத் தயாராகவேதான் இவர்கள் இருக்கிறார்கள். (5) GCTam 779.1
தாங்கள் யாரைப் பரிகாசம் செய்தோமோ, யாரை இழிவாகப் பேசினோமோ யாரை அழித்துப்போட்டுவிட முயன்றோமோ அந்தக் கூட்டத்தார் கொள்ளைநோய்களாலும் கொந்தளிப்புகளாலும் பூமி அதிர்ச்சிகளாலும் கொஞ்சமும் சேதப்படாமல் தப்பிப் பிழைத்திருப்பதை காணுவார்கள். தம்முடைய பிரமாணங்களை மீறி நடப்போருக்குப் பட்சிக்கும் அக்கினியாக இருக்கும் தேவன், தம் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியும் தமது ஜனங்களுக்குப் பாதுகாப்பான கூடாரமாக இருக்கிறார் என்பதை அப்பொழுது அவர்கள் உணர்ந்து கொள்ளுவார்கள். (6) GCTam 779.2
மனிதர்களின் புகழ்ச்சியை வேண்டி, அதற்காகச் சத்தியத்தைப் புறக்கணித்த போதகன், தான் செய்த போதனைகளின் தன்மையையும் அவற்றின் விளைவுகளையும் இப்பொழுது தெளிவாகக் காணுகிறான். எல்லாவற்றையும் பார்க்கிற அந்த தேவனுடைய கண்ணுக்கு தானும் தன்னுடைய செயல்களும் தப்பிவிடவில்லை என்பது தெளிவாக அவனுக்குத் தெரிகிறது. தான் போதக மேடையில் நின்றுகொண்டு இருந்தபோது, தெருக்களில் நடந்துசென்றபோது பலவிதமான சூழ்நிலைகளில் மனிதர்களோடு கலந்த திரிந்தபோது என்று எல்லாச் சமயங்களிலும் தான் கண்காணிக்கப்பட்டது அவனுக்குத் தெரிகிறது. தனது ஆத்துமா வெளிப்படுத்திய ஒவ்வொரு உணர்ச்சியும், தான் எழுதிய ஒவ்வொரு வரியும், தான் சொன்ன ஒவ்வொரு சொல்லும், தான் செய்த ஒவ்வொரு செய்கையும், மனிதர்களைப் பொய்யான புகலிடங்களில் கூட்டிச்சேர்த்தது என்பதையும், அவைகள் விஷமான விதைகளை விதைத்துக்கொண்டிருந்தது என்பதையும் காண்கிறான். இன்று இரட்சிப்பை இழந்துவிட்டுப் பரிதாபமான நிலையில் தன்னைச் சுற்றிலும் நிற்கும் ஆத்துமாக்கள்தாம் தன்னுடைய அறுவடை என்பதை அவன் காண்கிறான். (7) GCTam 779.3
தேவன்: “சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரே. 8:11) என்கிறார். “நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங்கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்”-எசே. 13:22(8) GCTam 779.4
“என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்”-எரே. 23:1-2. “மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது”-எரே. 25:34,35. (9) GCTam 780.1
போதகர்களும் ஊழியர்களும் தாங்கள் தேவனோடு சீரான உறவுகொண்டிருக்கவில்லை என்பதை உணர்கின்றனர். தர்மமும் நீதியுமான பிரமாணங்களைத் தந்தவருக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்ததை உணர்கின்றனர். தெய்வீகப்பிரமாணங்களைப் புறக்கணித்து நடந்ததன் மூலம் தீமையின் ஊற்றுகள் ஆயிரக்கணக்கில் உண்டாகவும் வேறுபாடுகளும் வெறுப்பும் பாவமும் நிறைந்து இவ்வுலகம் கலகங்களின் இருப்பிடமாகவும் சீர்கேடுகளின் நிறைவிடமாகவும் ஆகிவிட்டது. இவ்வுண்மைகள் இப்பொழுது தெளிவாகின்றன. நித்திய வாழ்வை அவர்கள் இழந்தேவிட்டார்கள். அதனைத் தாங்கள் இழந்துவிட்டதை எண்ணி, பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களும் தேவன்மேல் விசுவாசம் வைக்காதவர்களும் அடையும் வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அரிய திறமைகளுக்காவும் வல்லமையான பேச்சிற்காகவும் இந்த உலகம் எத்தனையோ மனிதர்களுக்குத் துதிபாடியிருக்கிறது. அந்த மனிதர்களின் உண்மை நிலை என்ன என்பது இப்பொழுது தெரிகிறது. இந்தப் பெரிய மனிதர்கள் தாங்கள் தேவனின் பிரமாணங்களில் முறைதவறி நடந்திருப்பதையும் அதன் மூலம் அடைந்திருக்கும் பேரிழப்பையும் உணர்கிறார்கள். தேவனுக்கு விசுவாசமாக இருந்ததற்காக எந்த மனிதர்களை வெறுத்துப் பழித்தார்களோ அந்த மனிதர்களினால் இப்பொழுது விழுகிறார்கள். தேவன் தங்களை நேசித்து அறிவுறுத்தியதையும் தாங்கள் அந்த நேசத்தைப் புறக்கணித்ததையும் அறிக்கையிடுகிறார்கள். (10) GCTam 780.2
உலகத்தார் யாவரும் தாங்கள் ஏமாந்துவிட்டிருப்பதை உணரு கிறார்கள். தங்களை அழிவிற்கு வழிநடத்தியதற்காக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ளுகிறார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து மிகவும் கசப்பான குற்றச்சாட்டுகளைக் குவிப்பது போதகர்கள்மேல்தான். தேவன்மேல் விசுவாசம் இல்லாத போதகர்கள் சமாதானத்தையே தீர்க்கதரிசனமாக உரைத்தார்கள். தங்கள் பேச்சைக் கேட்டவர்கள் தேவப்பிரமாணங்களை ஒன்றுமில்லை என்று சொல்லும்படியும் அப்பிரமாணங்களைப் புனிதமாகக் கருதியவர்களை உபத்திரவப்படுத்தும்படியும் தூண்டிவிட்டார்கள். இனி தப்பவழியில்லை என்கிற நிலையில் தாங்கள் செய்துவந்த வேலைகள் ஏமாற்றுத்தனமானவையே என்பதை அந்தப் போதகர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அதைக்கேட்ட மக்கள் கூட்டம் மிகவும் கொதிப்படைகிறது. நாங்கள் அழியப்போகிறோமே! நீங்கள் அல்லவா அதற்குக் காரணம் என்று கத்திக்கொண்டே அந்த பொய்யான மேய்ப்பர்கள்மேல் பாய்கிறார்கள். அந்தப் போதகர்களை மிகவும் புகழ்ந்து போற்றியவர்கள் எவர்களோ, அவர்களே இப்பொழுது பயங்கரமாக சபிக்கிறார்கள். அவர்களது தலையில் மகுடங்களும் பட்டங்களும் சூட்டிய அதே கரங்கள் அவர்களை அழிக்க ஓங்கி நிற்கின்றன.தேவ ஜனங்களை ஒழிப்பதற்காக உயர்த்தப்பட்ட பட்டயங்கள் அவர்களின் எதிரிகள் மேலேயே விழுகின்றன. எங்கு நோக்கினும் கலகமும் இரத்த ஆறுமாக இருக்கிறது. (11) GCTam 781.1
“ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது;மாம்சமானயாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்”எரே 25:31. ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த ஆன்மீகப் போராட்டம் நடந்துவந்துகொண்டிருக்கிறது. தேவகுமாரனும் அவரது தூதர்களும் தீமையின் அதிபதியோடு யுத்தம்செய்துவருகிறார்கள். மனிதர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு அவர்களை அறிவுறுத்தியும் எச்சரித்தும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது மனிதர்கள் அனைவரும் தங்களுக்கு யார்வேண்டும் என்பதைத் தெரிவுசெய்துகொண்டார்கள். தேவனுக்கு எதிரான யுத்தத்தில் அக்கிரமக்காரர்களாகிய மனிதர்கள் சாத்தானோடு முற்றுமாகச் சேர்ந்துகொண்டார்கள். தேவனுடைய பிரமாணங்களைக் கீழே போட்டு மிதித்தார்கள். அந்தப் பிரமாணங்களுக்குள்ள அதிகாரம் என்ன என்பதைக் காண்பிக்கவேண்டிய வேளை இப்பொழுது வந்து விட்டது. இப்பொழுது தேவனுக்கு சாத்தானோடு மட்டுமல்ல, மனிதர்களோடும் வழக்கு இருக்கிறது. ஜாதிகளோடு கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது என்றும் அக்கிரமக்காரர்களை அவர் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பார் என்றும் வேதாகமம் கூறுவது இதனால்தான். (12) GCTam 781.2
செய்யப்படும் அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிற மனிதர்களின்மேல் இரட்சிக்கப்படுவதற்கான அடையாளம் இடப்படுகிறது. இப்பொழுது எசேக்கியேலின் தரிசனத்தில் காட்டப்பட்ட சங்காரத்தூதன் கொலைக்கருவிகளோடுமனிதர்களுக்கு நடுவிலே பாய்கிறான். முதியோரையும் வாலிபரையும் கன்னிகைகளையும் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள். அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள். (எசே. 9:1-16). மனிதர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகள் என்று தங்களைக் குறித்துச் சொல்லிக்கொண்டு, அவர்களை மாறுபாடான வழியில் நடத்தினவர்கள் யாரோ அவர்கள்மீதுதான் முதல் சங்காரம் விழுகிறது. மனித ஆத்துமாக்களுக்குப் பொய்க்காவல் காத்தவர்களே முதலில் விழுவார்கள். இரக்கம் காட்டவோ, தப்புவதற்கு உதவவோ அங்கே யாரும் இருக்கமாட்டார்கள். ஆண்கள் பெண்கள் கன்னிகைகள் சிறு குழந்தைகள் எல்லோருமே ஒருமித்து அழிவார்கள். (13) GCTam 782.1
“இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்” ஏசா. 26:21. “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்து போகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்”-சகரியா 14:12,13. தேவன் கலப்பில்லாத தமது கோபாக்கினையை மனிதர்கள்மேல் ஊற்றுகிறார். மனிதர்கள் தங்களுக்குள் எழும்பும் அடக்கமுடியாத வெறியுணர்வோடு ஒருவர்மேல் ஒருவர் பாய்ந்து தாக்குகிறார்கள். இப்படியாகப் பூமியில் குடியிருப்பவர்கள் அனைவரும் அழிகிறார்கள். போதகர்கள், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண ஜனங்கள், செல்வந்தர், வறியவர், பெரியவர்கள், சிறியவர்கள் என்கிற வித்தியாசம் இன்றி அனைவரும் மடிகிறார்கள். “அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்”எரே. 25:33. (14) GCTam 782.2
கிறிஸ்துவின் வருகையின்போது தேவனுடைய பிரமாணத்தை வேண்டுமென்றே மீறிநடந்து, தேவனின் பார்வையில் அக்கிரமம்செய்த அனைவருமே பூமி முழுவதிலுமிருந்து அழித்துப்போடப்படுவார்கள். தன்னுடைய ஜனங்களைக் கிறிஸ்து பரலோகில் உள்ள தேவப்பட்டணத்திற்கு அழைத்துச் செல்லுவார். இப்படியாகக் குடியிருப்போர் யாருமின்றி பூமி வெறுமையாக ஆகிவிடும். “இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார். தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை. தேசம் தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்”-ஏசா. 24:1,3,5,6. (15) GCTam 782.3
பூமி முழுவதுமே ஒரு அவாந்தர வெளியைப்போலத் தோன்றுகிறது. பூமியதிர்ச்சியினாலே அழிந்துபோன பட்டணங்கள் கிராமங்கள் சிதிலங்கள் வேரோடு எறிந்துவிடப்பட்ட மரங்கள் கடலிலிருந்து வீசப்பட்டதும் பூமியிலிருந்து பெயர்க்கப்பட்டதுமான கரடுமுரடான பாறைகள் இவைகளெல்லாம் பூமி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. மலைகளிருந்த இடங்களெல்லாம் அந்த மலைகள் பெயர்க்கப்பட்டுப்போனதால் பெருங்குழிகளாகக் காணப்படுகின்றன. இப்பொழுது பாவநிவாரணப் பண்டிகையின் சடங்குகள் ஒவ்வொன்றும் இரட்சிப்பின் திட்டத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சுட்டிக்காட்டுபவைகளாக இருக்கின்றன. அதில் கடைசி நிகழ்ச்சி நிறைவேற வேண்டிய வேளை இப்பொழுது வந்துவிட்டது. ஆண்டுமுழுவதும் இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்கள் குற்ற நிவாரணபலியின் மூலமாக ஆசரிப்புக் கூடாரத்திலே சேர்க்கப்பட்டுவந்தன. அவ்வாறு சேர்க்கப்பட்டுவந்த அந்தப் பாவங்கள் எல்லாம் பாவநிவாரணப் பண்டிகையன்று மகா பரிசுத்த ஸ்தலத்திலே நடக்கிற ஆசாரிய ஊழியத்தின் மூலமாக ஆசரிப்புக் கூடாரத்திலேயிருந்து களையப்பட்டு, தேவனுக்கு முன்பாகவும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் போக்காட்டின் மேலே அறிக்கையிடப்படுகின்றன. போக்காட்டினுடைய தலையின்மேல் பிரதான ஆசாரியன் தன் இரண்டு கைகளையும் வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிடுகிறான் (லேவி. 16:21). இது இஸ்ரவேலர்கள் காலத்தில் பூமியிலே ஆசரிப்புக்கூடாரம் இருந்த காலத்தில் நிழலாக நடந்த காரியம். இதைச்சுட்டிக்காட்டும் நிஜமான காரியம் இப்பொழுது நடக்கவேண்டும். அதன்படி பரலோகத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்திலே பாவநிவாரணம் நடந்தேறிய பிறகு, தேவ ஜனங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தேவனுக்கு முன்பாகவும் பரலோக தூதர்களுக்கு முன்பாகவும் அழித்துப்போடப்படுவார்கள். மீட்கப்பட்ட கூட்டத்தார் முன்பாகவும் சாத்தானின்மேல் வைக்கப்படும். அவர்கள் செய்த எல்லாப் பாவங்களுக்கும் காரணம் அவனே என்பது அறிவிக்கப்படும். போக்காடு மனிதர்கள் வசிக்காத வனாந்தரத்திற்குஅனுப்பி விடப்பட்டது. அதற்கு ஒப்பாகவே இப்பொழுது சாத்தான் மனிதர்களில்லாத அசதிதரும் வனாந்திரம்போன்று விளங்குகிற பூமியிலே விடப்படுவான். (17) GCTam 783.1
சாத்தான் பூமியிலே விடப்படுவான் என்பதையும், பூமி அழிந்து நாசமடைந்த நிலையிலே இருக்கும் என்பதையும் இந்த நிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதையும் தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்துவோனாகிய யோவான் அறிவிக்கிறான். தேவனுடைய இரண்டாம் வருகையின் காட்சிகளையும் அக்கிரமக்காரர்களின் அழிவையும் விவரித்த பிறகு தீர்க்கதரிசனம் தொடர்ந்து உரைப்பதாவது: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாக வேண்டும்”-வெளி. 20:1-3. (18) GCTam 784.1
மேலே சொல்லப்பட்ட வசனத்தில் பாதாளம் என்கிற வார்த்தை பூமி தனது ஒழுங்கை இழந்து இருண்டுபோய் இருக்கிற நிலையைக் குறிப்பிடுகிறதேயன்றி மற்றபடி அல்ல. இது வேதாகமத்தின் மற்ற வசனங்களைப் பார்க்கும்போது மிகவும் தெளிவாகிறது. உதாரணமாக, பூமி ஆதியிலே இருந்த நிலையை “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (ஆதி. 1:2) எனகிறது. (இதில் வருகிற ஆழம் என்கிற எபிரெய வார்த்தையும் பாதாளம் என்கிற கிரேக்க வார்த்தையும் ஒரே பொருளுள்ளவை என்பதை வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பை வாசித்தால் தெளிவாகத் தெரிகிறது). ஆகவே பூமி முதலில் இருந்த அதே நிலையைத் திரும்பவும் அடையும் என்பதுதான் வெளி. 20:1-3 வசனங்கள் அறிவிக்கும் தீர்க்கதரிசனம். தேவனின் மகா நாளைத் தீர்க்கதரிசனத்தில் பார்த்த எரேமியா, இதே உண்மையை” பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின” (எரே. 4:23—26) என்று அறிவிக்கிறான். (19) GCTam 784.2
பாழடைந்த இந்தபூமிதான் சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் தங்குமிடமாக ஆயிரம் வருடங்கள் இருக்கும். பூமியோடு கட்டப்பட்டிருப்பதால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற உலகங்களுக்குச் செல்லவோ அங்கே பரிசுத்த பிள்ளைகளைப் பாவம்செய்யும்படிக்குத் தூண்டவோ வேறு எந்தத் தொந்தரவும் அவர்களுக்குத் தரவோ அவனுக்கு இயலாது. சாத்தான் சங்கிலியால் கட்டப்பட்டான் என்பதற்கு இதுதான் பொருள். தன்னுடைய வஞ்சகம் செய்யும் வேலையை அவன் யார்மீதும் காட்டமுடியாது என்பதுதான் அது. பலப்பல நூற்றாண்டுகளாக அவன் வஞ்சிப்பதும் ஏமாற்றி நாசம் செய்வதுமாகிய தன்னுடைய தொழிலை மகிழ்ச்சியாகச் செய்துவந்தான். இப்பொழுது அது சற்றும் இயலாதது என்னும்படி அவன் கட்டப்பட்டிருக்கிறான். (20) GCTam 785.1
சாத்தான் இவ்வாறு தோற்கடிக்கப்படுவான் என்பதை தீர்க்கதரிசனத்தில் பார்த்த ஏசாயா: “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து, உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்” (ஏசா. 14:12-17) என்று எழுதுகிறார்.(21) GCTam 785.2
ஆறாயிரம் வருடங்களாக சாத்தான் தான் தேவனுக்கு எதிராகச் செய்த கலகங்களினால் பூமியை அதிரவைத்தான். அவன் உலகத்தை வனாந்தரமாக்கி, அதன் நகரங்களை அழித்துப்போட்டான். அதுமட்டுமன்றி, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாதிருந்தான். ஆறாயிரம் வருடமாக சாத்தான் கட்டுவித்த சிறைகளிலே தேவ ஜனங்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவன் அவர்களை என்றென்றும் தனது கைதிகளாகவே வைத்துக்கொண்டிருந்தான். ஆனால் கிறிஸ்து சாத்தான் கட்டிவைத்திருந்த தளைகளை அறுத்து, அந்தக் கைதிகளை விடுவித்தார். (22) GCTam 785.3
அதற்குப்பின் பரிசுத்த ஜனங்கள்மேல் மட்டுமல்ல, பாவிகள் மேலுங்கூட எவ்வித அதிகாரமும் செலுத்தமுடியாதவனாக சாத்தான் இருக்கிறான். அவனும் அவனுடைய தீயவழியைப் பின்பற்றின தூதர்களும் மட்டும் தனியாக இருக்கிறார்கள். பாவத்தினால் வந்த சாபவிளைவுகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தருணமே இது. “ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய். நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை, நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக்கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை” (ஏசா. 14:18-20) என்று ஏசாயா கூறுகிறார். (23) GCTam 786.1
ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை, அவன் நாசமாகிப்போன இப்பூமியிலே குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிவான். அப்பொழுது தான் தேவப்பிரமாணங்களுக்கு எதிராகச் செய்த கலகத்தின் விளைவுகளைத் தன் கண்களால் பார்ப்பான். இந்தக் காலத்தில் அவன் அனுபவிக்கும் வேதனை கடுமையாக இருக்கும். அவன் தேவனை விட்டு விலகிவந்த நாளில் இருந்து, இதுவரை அவனது வாழ்க்கை முழுவதும் ஓய்வில்லாத வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், தான் செய்வது இன்னதென்று சிந்தித்துப்பார்க்க அவனுக்கு நேரம் இருந்ததில்லை. இப்பொழுது அவனது நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டுவிட்டன. ஆதியிலே தான் பரலோக ராஜ்யத்திற்கு எதிராக முதன்முதல் கலகம்செய்த நாள் முதல் இன்றுவரை தான் சாதித்திருப்பது என்ன என்பதைக் குறித்து சிந்தித்துப்பார்க்க இப்பொழுது விடப்பட்டிருக்கிறான். இதுவரை தான் செய்த எல்லாத் தீமைகளுக்கும் மற்ற அனைவரையும் செய்வைத்த பாவங்களுக்கும் உரிய தண்டனைகளையும் அவற்றின் வேதனைகளையும் குறித்து எண்ணிப்பார்த்துப் பயந்து நடுங்கும்படியும் பீதியடையும்படியும் இப்பொழுது விடப்பட்டிருக்கிறான்.(24) GCTam 786.2
சாத்தான் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தேவஜனங்களுக்கு மகிழ்ச்சி யையும் பேரானந்தத்தையும் கொடுக்கும். இதைக் குறித்துத் தீர்க்கதரிசி “கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே, நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே! கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்” (ஏசா. 14:3-6) என்று கூறுகிறார். (25) GCTam 786.3
முதலாவது உயிர்த்தெழுதலுக்கும் இரண்டாவது உயிர்த்தெழுத லுக்கும் இடைப்பட்ட ஆயிரம் வருடகாலத்தில் மனந்திரும்பாத பாவிகளைக் குறித்த நியாயவிசாரணை நடைபெறும். அந்த நியாயவிசாரணை கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின்னர் இருக்கும் என்பதைப் பவுல் அப்போஸ்தலன்: “ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” (1 கொரி. 4:5) என்று விவரிக்கிறான். இதைக்குறித்து தானியேல் “நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும்” (தானி. 7:21) என்கிறார். இந்தக் காலத்தில் நீதிமான்கள் தேவனுடைய ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து அரசாளுவார்கள். வெளிப்படுத்தல் புத்தகத்தில் யோவான் சொல்லுவதாவது: “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்”-வெளி. 20:4,6. பவுல் 1 கொரி. 6:2-ல் கூறியபடி பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பது இந்தக் காலத்திலேதான். கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்கள் பாவிகளை நியாயந்தீர்ப்பார்கள். பாவிகள் தங்களது சரீரத்திலே செய்த ஒவ்வொரு செய்கையும் வேதாகமமாகிய சட்டப்புத்தகத்தோடு ஒப்பிடப்பட்டு அவர்கள் செய்தது அநீதியானதே என்பது தீர்மானிக்கப்படும். பிறகு அவரவர் செய்த பாவக் கிரியைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் அடையவேண்டிய தண்டனையின் கடுமை தீர்மானிக்கப்படும். இவை யாவும் மரணபுத்தகத்திலே அவரவர் பெயர்களுக்கு நேராக எழுதப்படும். (26) GCTam 787.1
கிறிஸ்துவும் அவரது ஜனங்களும் பாவம் செய்த மனிதர்களை மட்டுமல்ல, சாத்தானையும் அவனது தூதர்களையுங்கூட நியாயந்தீர்ப்பார்கள். “தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?” (1 கொரி. 6:3), யூதாவும் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்” (யூதா 1:6) என்கிறார்.(27) GCTam 788.1
ஆயிரமாண்டு முடியும்பொழுது, இரண்டாவது உயிர்த்தெழுதல் நடைபெறும். அப்பொழுது தங்களுக்கென்று எழுதப்பட்டிருக்கிற தண்டனையைப் பெற்றுக்கொள்ளும்படியாக அக்கிரமக்காரர்கள் உயிர்த் தெழுந்து தேவன் முன்பாக நிற்பார்கள். இதைப்பற்றி ஏசாயா: “அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்” (ஏசாயா 24:22) என்கிறார். (28) GCTam 788.2