மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
37—வேதாகமம் என்னும் அரண்!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 593—602)
“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” —ஏசாயா 8:20. தவறான ஆசிரியர்களின் செல்வாக்கிற்கும், அந்தகார ஆவிகளின் வஞ்சிக்கும் வல்லமைக்கும் எதிராக, பாதுகாப்பாக இருக்கும்படி தேவனுடைய மக்கள் வேதவாக்கியங்களினிடத்திற்கு நடத்தப்படுகின்றனர். வேதாகமத்தைப்பற்றிய அறிவை மனிதர்கள் அடைந்து கொள்ளுவதைத் தவிர்ப்பதற்காக தன்னால் முடிந்த ஒவ்வொரு உபாயத் தையும் சாத்தான் செயலாற்றுகிறான். ஏனெனில், அதின் தெளிவான வார்த்தைகள் அவனது வஞ்சகங்களை வெளிப்படுத்துகின்றன. தேவனுடைய ஒவ்வொரு எழுப்புதல் பணியின்போதும், தீமையின் பிரபு உக்கிரமாகச் செயலாற்ற எழும்புகிறான். கிறிஸ்துவிற்கும் அவரது அடியார்களுக்கும் எதிரான இறுதிப் போருக்காக இப்பொழுது அவனது முயற்சிகளனைத்தையும் செயல்படுத்துகிறான். இறுதிப் பெரும் வஞ்சகம் நம்முன் விரைவில் திறக்க உள்ளது. நமது பார்வையில் அந்திக் கிறிஸ்து அவனது ஆச்சரியமான செயல்களைச் செய்ய இருக்கிறான். வேதவாக்கியங்களினால் அல்லாமல் வித்தியாசத்தை வேறுபடுத்தி அறியமுடியாதபடி போலியான அந்த அற்புதங்கள் உண்மையானவைகளுக்கு மிக நெருக்கமாக ஒத்தவை போலிருக்கும். வேதாகம் சாட்சியாகமத்தினுடைய ஆதாரத்தினால் மட்டுமே, ஒவ்வொரு அறிக்கையும் அற்புதமும் சோதிக்கப்பட வேண்டும். (1) GCTam 699.1
தேவனுடைய கற்பனைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய முயற்சிப்பவர்கள் எதிர்க்கப்பட்டு ஏளனம் செய்யப்படுவார்கள். தேவனுக்குள்ளாக மட்டுமே அவர்களால் நிற்கமுடியும். தங்களுக்கு முன்னுள்ள சோதனையைத் தாங்கிக்கெள்ள, தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது சித்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவரது சுபாவம், அரசாங்கம், நோக்கங்கள், அவைகளுக்கு இசைவான செயல்கள் ஆகியவைகளைப்பற்றிய சரியான கருத்து அவர்களிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் அவரை மேன்மைப்படுத்தமுடியும். வேதாகம சத்தியங்களினால் தங்கள் மனதைப் பலப்படுத்தியிருப்பவர்கள் மட்டுமே மாபெரும் இறுதிப் போருக்கு மத்தியில் நிலைநிற்பார்கள். நான் மனிதனுக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிவேனா என்று ஆராயும் சோதனை ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் உண்டாகும். இந்த முடிவான நேரம் இப்போதுங்கூட சமீபித்திருக்கிறது. சிதைவுபடாத தேவனுடைய வார்த்தை என்னும் கற்பாறையின்மீது நமது பாதங்கள் ஊன்றி நடப்பட்டுள்ளனவா? தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் உறுதியாகக் காத்துநிற்க நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? (2) GCTam 699.2
இரட்சகர் சிலுவையில் அடிக்கப்படுவதற்குமுன், அவர் மரித்த பின்னர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ இருக்கிறார் என்பதை அவரது சீடர்களுக்கு அவர் விளக்கினபோது, அவர்களது உள்ளங்களிலும் இருதயங்களிலும் அவரது வார்த்தைகளை உணர்த்திக்காட்ட தேவ தூதர்கள் அங்கு இருந்தனர். ஆனால் சீடர்கள் ரோமர்களின் ஆட்சியாகிய நுகத்தின் கீழிருந்து உலகப்பிரகாரமான விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததினால், அவர்களது நம்பிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருந்தவர் கேவலமான மரணத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களால் சகிக்கமுடியவில்லை. அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுவதற்கு அவசியமாக இருந்த அவரது வார்த்தைகள் அவர்களது உள்ளத்திலிருந்து துரத்தப்பட்டிருந்தன. சோதனையின் நேரம் வந்தபோது, அவர்கள் ஆயத்தம் இல்லதவர்களாக இருப்பதை வெளிப்படுத்தியது. இயேசுவின் மரணம் அவர்களை முன்னதாக எச்சரிக்காமலிருந்ததைப் போல அவர்களது நம்பிக்கைகள் முற்றிலுமாக அழிந்ததைப் போலிருந்தது. கிறிஸ்துவின் வார்த்தைகளினால் எதிர்காலம் சீடர்களுக்கு திறக்கப்பட்டிருந்ததுபோல, தீர்க்கதரிசனங்களின் மூலம் எதிர்காலம் நமக்குத் தெளிவாகத் திறக்கப்பட்டிருக்கிறது. தவணையின் காலத்தின் முடிவுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் இக்கட்டுக்காலத்திற்கென்று ஆயத்தம் செய்யவேண்டிய வேலைகளும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கியமான சத்தியங்களைப் பற்றி அவைகள் வெளிப்பபடுத்தப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதைப்போன்றே புரிந்துகொள்ளுதல் இல்லாதவர்களாகவே திரளானவர்கள் உள்ளனர். அவர்களை இரட்சிப்பிற்குரிய ஞானம் உள்ளவர்களாக்கக்கூடிய ஒவ்வொரு உணர்த்துதலையும் அவர்களை விட்டு நீக்கவும் இக்கட்டுக்காலத்தில் அவர்கள் ஆயத்தமற்ற நிலையில் இருக்கும்படியாகச் செய்வதிலும் சாத்தான கவனமாக இருக்கிறான்.(3) GCTam 700.1
மிகவும் முக்கியமான எச்சரிக்கைகளை தேவன் மனிதர்களுக்கு அனுப்பும்போது, அவை வானத்தின் மத்தியில் பறக்கும் தூதர்களால் அறிவிக்கப்படுவதாக எடுத்துக்காட்டப்பட்டு, பகுத்தறியும் சக்தி உள்ள ஒவ்வொருவரும் அதற்குச் செவிகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவதினால் வரவிருக்கும் பயங்கரமான நியாயத்தீர்ப்பைப்பற்றிய பகிரங்கமான குற்றச்சாட்டு, மிருகத்தின் முத்திரை என்றால் என்ன என்பதை அறியவும், அதைப் பெறுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை அறியவும் தீர்க்கதரிசனங்களை அக்கரையுடன் ஆராயும்படி அனைவரையும் நடத்தவேண்டும். ஆனால் மக்கள் கூட்டத்தினர் சத்தியத்தைக் கேட்பதிலிருந்த அவர்களது செவிகளைத் திருப்பி, கட்டுக்கதைகளிடத்திற்குத் திரும்பியுள்ளனர். “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” (2 தீமோத்தேயு 4:3-4) என்று கடைசி நாட்களைக் கண்டு, பவுல் அப்போஸ்தலன் அறிவித்தார். அந்தநேரம் முழுவதுமாக வந்திருக்கிறது. பாவத்தின்மீது விருப்பமுள்ள உலகை நேசிக்கும் இருதயத்துடன் இருப்பவர்களை வேதாகம சத்தியங்கள் குறுக்கிடுவதினால் திரளானவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்கள் நேசிக்கும் வஞ்சகங்களை சாத்தான் அவர்களுக்கு வழங்குகிறான். (4) GCTam 701.1
சகலவிதமான கோட்பாடுகளையும் தரநிர்ணயம் செய்வதும், சகலவிதமான சீர்திருத்தங்களுக்கும் அடிப்படையானதும் வேதாகமமே! ஆம்! வேதாகமம் ஒன்றினால் மட்டுமே என்று எண்ணி, அதனைச் செயல்படுத்தும் ஒரு கூட்டம் மக்களை பூமியின்மீது உடையவராக தேவன் இருப்பார். கற்றவர்களின் கணிப்புகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மதக்கொள்கைகள் அல்லது முடிவுகள் அல்லது அவைகளை முக்கியப்படுத்தும் ஏராளமான அதிருப்திமிக்க சபைகள் ஆகிய இவைகளில் ஒன்றையும் அல்லது இவைகள் முழுவதையும் மதவிசுவாசத்தின் எந்த ஒரு காரியத்திற்கும் சான்றாகக் கருதக்கூடாது. எந்த ஒரு கோட்பாட்டையும் கட்டளையையும் ஏற்றுக்கொள்ளுமுன் அதற்கு ஆதரவாக கர்த்தர் உரைக்கிறார் என்னும் தெளிவான ஆதரவு இருக்கிறதா என்று நாம் கேட்கவேண்டும். (5) GCTam 701.2
தேவனுக்குப் பதிலாக, மனிதனின்மீது கவனம் வைக்கும்படி சாத்தான் தொடர்ச்சியாகக் கவர்ச்சியான ஈர்ப்பை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறான். அவர்கள் செய்யவேண்டிய அவர்களுடைய கடமையை அறிந்துகொள்ளுவதற்காக, வேதவாக்கியங்களைத் தேடுவதற்குப் பதிலாக, பேராயர்கள், போதகர்கள், இறையியல் பேராசிரியர்கள் ஆகியோரைத் தங்களுடைய வழிகாட்டிகளாகப் பார்க்கும்படி அவன் மக்களை நடத்துகிறான். அதற்குப்பின் இந்தத் தலைவர்களுடைய மனங்களைக் கட்டுப்படுத்துவதினால், தனது விருப்பத்தின்படி திரளானவர்களை அவனது செல்வாக்கிற்குள் அவனால் உட்படுத்தமுடியும். (6) GCTam 702.1
ஜீவ வார்த்தைகளைப் பேசுவதற்கு கிறிஸ்து வந்தபோது, பொது மக்கள் அவர் பேசியதை மகிழ்ச்சியுடன் கேட்டனர். அநேக ஆசாரியர்களாகவும் அதிபதிகளாகவும் இருந்தவர்களுங்கூட அவரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் ஆசாரியர்களுக்குத் தலைவனாக இருந்தவனும் அந்த ஜனத்தின் பெரிய மனிதர்களும் அவரைக் குற்றப்படுத்தி, அவரது போதனைகளை மறுக்கத் தீர்மான முள்ளவர்களாக இருந்தனர். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் அனைத்திலும் திணறின போதிலும் அவர்கள் தங்களைத் தவறான எண்ணத்திற்குள் வைத்து அடைத்துக்கொண்டிருந்தனர். அவரது சீடர்களாகும்படி வற்புறுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மேசியா என்னும் அவரது அந்தஸ்தின் தெளிவான சான்றினை நிராகரித்தனர். இயேசுவின் எதிரிகளாயிருந்த இந்த மனிதர்களிடம் பக்திசெலுத்தும்படி, மக்கள் குழந்தைப்பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட்டு அவர்களது அதிகாரத்திற்கு முழு மனதுடன் பணியும்படியாக பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். நமது அதிபதிகளும் கல்விமான்களான வேதபாரகர்களும் இயேசு பெருமானை நம்பாமலிருக்கிறார்களே இது எப்படி என்று அவர்கள் கேட்டார்கள். இவர் கிறிஸ்துவாக இருந்தால் பக்திமான்களான இந்த மனிதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமலிருப்பார்களா? அப்படிப்பட்ட ஆசாரியர்களின் செல்வாக்குதான் யூதரைத் தங்களது மீட்பரை நிராகரிக்கும்படி வழிநடத்தினது. (7) GCTam 702.2
அந்த ஆசாரியர்களையும் அதிபதிகளையும் ஏவிவிட்ட அதே ஆவிதான் பக்தியின் உயர்வை அறிவிக்கும் அநேகரால் இப்பொழுதும் வெளிக்காட்டப்படுகிறது. இந்தக் காலத்திற்குரிய சிறப்பான சத்தியங்களைப்பற்றிய வேதவாக்கியங்களின் சாட்சியைப் பரீட்சிக்க அவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணிக்கை, செல்வம், மக்கள்செல்வாக்கு ஆகியவைகளை சுட்டிக்காட்டி, சிலராக ஏழையாக புகழற்றவர்களாக தங்களை உலகத்திலிருந்த பிரிக்கும் ஒரு விசுவாசத்தை உடையவர்களாகமட்டுமே இருக்கிறார்கள் என்று சத்தியத்திற்குப் பரிந்துபேசுகிறவர்களை அவமதிப்புடன் பார்க்கின்றனர். (8) GCTam 702.3
வேதபாரகர்களாலும் பரிசேயர்களாலும் எடுத்துக்கொள்ளப் பட்டிருந்த தகாத அதிகாரங்கள், யூதர்கள் சிதறடிக்கப்படுவதுடன் மட்டும் நிற்காது என்பதைக் கிறிஸ்து முன்னதாகவே கண்டார். மனச்சாட்சியை ஆளுவதற்காக மனித அதிகாரத்தை உயர்த்தும் செயல் காலங்கள் நெடுகிலும் சபைக்கு பயங்கரமான ஒரு சாபமாக இருந்திருக்கிறது என்னும் ஒரு தீர்க்கதரிசியின் பார்வையை உடையவராக அவர் இருந்தார். வேதபாரகர்கள், பரிசேயர்கள் ஆகியோரைப்பற்றிய அவரது பயங்கரமான பகிரங்கமான குற்றச்சாட்டும் இந்தக் குருட்டுத்தலைவர்களைப் பின்பற்றக்கூடாது என்ற மக்களுக்கான அவரது எச்சரிக்கையும், பின்வரும் தலைமுறையினருக்கு ஒரு எச்சரிப்பாக இருப்பதற்காக, ஆவணங்களில் பதிந்துவைக்கப்பட்டன. (9) GCTam 703.1
வேதவாக்கியங்களுக்கு விளக்கம் தரும் உரிமையை ரோமசபை அதன் குருமார்களிடம் வைத்திருந்தது. அதன் அடிப்படையில், சபை அதிகாரிகள் மட்டுமே தேவனுடைய வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கத் தகுதியானவர்களாக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து அது பிடித்து வைக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் வேதவாக்கியங்களை அனைவருக்கும் கொடுத்தபோதிலும் ரோமசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அதேவிதமான கொள்கைகள் புரொட்டஸ்டாண்டு சபைகளில் உள்ள திரளானவர்களைத் தங்களுக்கென்று வேதாகமத்தை ஆராய்வதைத் தடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் போதனைகளை சபையினால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் என்று ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய மதபோதனை அல்லது தங்களது சபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான போதனைகள் வேதவாக்கியங்களினால் எவ்வளவுதான் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவைகளில் எதையும் ஏற்பதற்குத் துணியாத ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.(10) GCTam 703.2
தவறான ஆசாரியர்களுக்கெதிரான எச்சரிக்கைகள் நிறைந்ததாக மட்டும் வேதாகமம் இராமல், தங்களுடைய ஆத்துமாக்களைப் போதகர்களிடம் ஒப்புவிக்கத் தயாராக இருக்கும் அநேகருக்கு எதிரானதாகவும் அது இருக்கிறது. அவர்கள் கடைப்பிடித்துவரும் விசுவாசத்திற்கு அவைகள் தங்களது சமயத்தலைவர்களால் போதிக்கப்பட்டவை என்பதைத்தவிர வேறு எந்தக் காரணங்களையும் காட்டமுடியாதவர்களாக உள்ள ஆயிரக்கணக்கான சமயத்துறைப் பேராசிரியர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இரட்சகரின் போதனைகளைக் கிட்டத்தட்ட கவனிக்காதவர்களாகக் கடந்துசென்று, ஊழியக்காரர்களின் வார்த்தைகளில் கேள்விக்கிடமில்லாத நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் அந்த ஊழியக்காரர்கள் தவறாமையை உடையவர்களா? அவர்கள் ஒளியை சுமக்கிறவர்களா என்பதை தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் அறியாதவரை நம்மால் நமது ஆத்துமாக்களை அவர்களது வழி காட்டுதலுக்கு எப்படி ஒப்படைக்க முடியும்? உலகம் நடந்து சென்றுள்ள பாதையிலிருந்து விலகிச் செல்லுவதற்கு சன்மார்க்க தைரியம் இல்லாமை அநேகரைக் கற்றிறிந்த மனிதர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நடத்துகிறது. அவர்கள் தங்களுக்கென்று தாங்களே விசாரித்துப் பார்க்கவேண்டும் என்ற விருப்பமின்மையால், நம்பிக்கையற்ற விதத்தில் தவறு என்னும் சங்கிலியால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தக் காலத்திற்குரிய சத்தியம் வேதாகமத்தில் தெளிவாகப் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அவர்கள் பார்க்கின்றனர். அதை அறிவிப்பதிலுள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்கள் உணருகின்றனர். அப்படியிருந்தும் ஒளியிலிருந்த அவர்களைத் திருப்பும் போதகர்களின் எதிர்ப்பை அவர்கள் அனுமதிக்கின்றனர். பகுத்தறிவும் மனச்சாட்சியும் மனதிருப்தியை அடைந்திருந்தபோதிலும் ஏமாற்றப்பட்ட இந்த ஆத்துமாக்கள் அந்த ஊழியக்காரரிலிருந்து மாறுபட்ட விதத்தில் சிந்திக்கத் துணியாதவர்களாக உள்ளனர். அவர்களது தனிப்பட்ட நியாயத்தீர்ப்பு அவர்களது நித்தியமான ஆசை ஆகியவைகள் மற்றவருடைய அவநம்பிக்கை, பெருமை, தவறான எண்ணங்கள் ஆகியவைகளுக்காகத் தியாகம் செய்யப்படுகின்றன. (11) GCTam 703.3
மனித செல்வாக்கின் மூலமாகத் தனது அடிமைகளைக் கட்டிவைக்க பல வழிகளிலும் சாத்தான் செயலாற்றுகிறான். கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாக இருக்கும் திரளானவர்களை ஆசை என்னும் பட்டக்கயிற்றினால் அவன் தன்னுடன் பிணைத்துக் கட்டிக்கொள்ளுகிறான். இந்தப் பிணைப்பு பெற்றோரும் பிள்ளைகளும் கணவனும் மனைவியும் மற்றும் சமுக சம்பந்தமான யாராக இருந்தாலும்சரி, பலன் ஒன்றுதான். சத்தியத்தை எதிர்ப்பவர்கள் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தத் தங்களுடைய வல்லமையை செயல்படுத்துகின்றனர். இவர்களுக்குக் கீழாக இழுத்துவைக்கப்பட்டுள்ள ஆத்துமாக்கள், தங்களுடைய கடமையைப்பற்றிய சுயமான அல்லது சுதந்திரம் இல்லாதவர்களாகவே உள்ளனர். (12) GCTam 704.1
சத்தியமும் தேவனுடைய மகிமையும் பிரிக்கமுடியாதவைகள். வேதாகமம் நமக்கு எட்டுமளவிற்கு நமக்கருகில் இருக்கும்போது, தவறான அபிப்பிராயங்களால் தேவனைக் கனப்படுத்துவது நம்மால் முடியாததாக உள்ளது. ஒருவனுடைய வாழ்க்கை சரியானதாக இருக்குமானால் அவன் எதை நம்புகிறான் என்பது காரியமல்ல என்று அநேகர் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால் வாழ்க்கை விசுவாசத்தினால் வனையப்படுகிறது. ஒளியும் சத்தியமும் நமக்கு எட்டக்கூடிய அளவில் இருந்தால், அதைக் கேட்கக்கூடியதும் பார்க்கக்கூடியதுமாக உள்ள சலுகைகளை நாம் முன்னேற்றமடையச் செய்யாவிட்டால், நாம் அதை உண்மையில் நிராகரிக்கிறோம். நாம் ஒளியைவிட இருளை அதிகமாகத் தெரிந்துகொள்ளுகிறோம். (13) GCTam 704.2
“மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்”-நீதி. 14:12. தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பமும் இருக்கும்போது, தவறையும் பாவத்தையும் செய்ததற்கு அறியாமை ஒரு சாக்குப்போக்காக இருக்கமுடியாது. ஒரு மனிதன் பயணம் செய்து பல சாலைகள் சந்திக்கும் ஒவ்வொரு சாலையும் எங்கு செல்கிறது என்பதைக் காட்டுகின்ற வழிகாட்டும் பலகைகள் உள்ள ஒரு இடத்திற்கு வருகிறான். அவன் அந்த வழிகாட்டும் பலகையைக் கருத்தில் கொள்ளாமல், அவனுக்கு எந்தச் சாலை சரி என்று தோன்றுகிறதோ அதில் செல்லத் தொடங்கினால், அவன் எந்த அளவிற்கு நேர்மை உள்ளவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட அவன் தவறான பாதையில் செல்லக்கூடிய ஒரு நிலையில்தான் இருக்கிறான். (14) GCTam 705.1
நாம் தேவனுடைய போதனைகளுடன் அறிமுகமானவர்களாகும் படியும், அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை நாம் அறிந்துகொள்ளவும் தேவன் அவரது வார்த்தையை நமக்குக் கொடுத்திருக்கிறார். நியாயசாஸ்திரி ஒருவன் நித்திய ஜீவனை அடைந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்? என்ற விசாரிப்புடன் இயேசுவிடம் வந்தபோது, நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ எப்படி வாசிக்கிறாய்? என்றுகூறி, அவர் வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டார். தேவனுடைய பிரமாணங்களை மீறினதற்காகக் கிடைக்கக்கூடிய தண்டனையில் இருந்து இளையவர்களையோ அல்லது முதியவர்களையோ அறியாமையின் தன்மை மன்னிக்கவோ அல்லது விடுவிக்கவோ முடியாது. ஏனெனில், அவர்களது கரங்களில் நியாயப்பிரமாணமும் அதன் கொள்கைகளும் அதன் உரிமைகளும் விசுவாசத்துடன் வைக்கப்பட்டுள்ளன. நல்ல விருப்பங்கள் இருப்பது மட்டும் போதுமானதாகாது. ஒருமனிதன் தனக்குச் சரியென்றுதோன்றுவதை செய்வதுமட்டும் போதுமானதல்ல. அல்லது ஊழியக்காரர் அவனிடத்தில் கூறுவது சரி என்றும் ஆகாது. அவனது ஆத்துமாவின் இரட்சிப்பு சிதையின்மேல் உள்ளது. அவன் தனக்காக வேதவாக்கியங்களை ஆராயவேண்டும். அவனது மனஉணர்த்துதல்கள் எவ்வளவு பலமுள்ளதாக இருந்தாலும் சத்தியம் என்ன என்பதைப்பற்றி அவனது ஊழியக்காரர் அறிந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவன் உடையவனாக இருந்தாலும், அது அவனுடைய அஸ்திவாரமல்ல! அவனது பரலோகப்பயணத்திற்கான ஒரு வரைபடம் அவனது கரத்தில் உள்ளது. அந்த வழியின் அடையாளங்களை எல்லாம் அது சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது. அவன் எந்தப் பொருளையாவது யூகித்துக்கொண்டிருக்கக்கூடாது. (15) GCTam 705.2
சத்தியம் என்ன என்பதை வேதாகமத்திலிருந்து அறிந்துகொள்ள வேண்டியதும், பின்னர் அந்த வெளிச்சத்தில் நடக்க வேண்டியதும் தனது உதாரணத்தைப் பின்பற்றும்படி பிறரை தைரியப்படுத்துவதும் அறிவுள்ள ஒவ்வொருவருடைய முதலாவதும் மிக உயர்ந்ததுமான கடமையாக இருக்கிறது. நமது ஒவ்வொரு சிந்தனையையும் எடைபோட்டு, வேதவாக்கியத்துடன் வேதவாக்கியத்தை ஒப்பிட்டு, நாம் நாள்தோறும் வேதாகமத்தை அக்கரையுடன் வாசிக்கவேண்டும் நாம் நமக்காக தேவனிடம் பதில்கூற வேண்டியவர்களாக இருப்பதினால், தெய்வீக ஒத்தாசையுடன் நமக்காக நாமே அபிப்பிராயங்களை அமைத்துக்கொள்ளவேண்டும். (16) GCTam 706.1
வேதாகமத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள், கற்றறிந்த மனிதர்களால் சந்தேகத்திற்கும் இருட்டடிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக எண்ணப்படுகின்றன. இவர்கள் மிகுந்த ஞானமுள்ளவர்களைப் போல பாவனை செய்துகொண்டு, (விவிலியத்தின்) வேதவாக்கியங்கள் புரிந்துகொள்ளமுடியாத இரகசியமான ஆவிக்குரிய அர்த்தமுடையவைகள் என்றும் அவைகள் வெளிப்படையாகப் பயன்படுத்தப் பட்டுள்ள பொருளை உடையவைகள் அல்ல என்றம் போதிக்கின்றனர். இந்த மனிதர்கள் தவறான ஆசிரியர்களாக உள்ளனர். “நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததி னாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்” (மாற்கு 12:24) என்று இப்படிப்பட்ட வகுப்பினருக்கு இயேசு அறிவித்தார். ஒரு அடையாளமாவது உருவகமாவது பயன்படுத்தப்படாதவரை வேதாகமத்தின் பொருள் அதன் வெளிப்படையான அர்த்தத்தில் விளக்கப்படவேண்டும். “அவருடைய சித்தத்தின்படிச் செய்ய மனதுள்ளவனெவனோ, அவன் இந்த உபதேசத்தை அறிந்துகொள்ளுவான்” (யோவான் 7:17) என்ற வாக்குத்தத்தத்தை கிறிஸ்து கொடுத்திருக்கிறார். மனிதர்கள் வேதாகமத்தை வாசிக்கும்வண்ணம் எடுத்துக்கொண்டால், அவர்களது மனங்களைத் தவறாக நடத்தவும் குழப்பவுங்கூடிய தவறான ஆசிரியர்கள் இல்லாமலிருந்தால், தூதர்களை மகிழ்விக்கக்கூடிய ஒரு பணி நிறைவேறியிருக்கும். இப்பொழுது தவறுக்குள் அலைந்துகொண்டு இருக்கும் ஆயிரமாயிரமானவர்களை அது கிறிஸ்துவின் தொழுவத்திற்குள் கொண்டு வந்திருக்கும். (17) GCTam 706.2
அழிவுக்குரிய மனிதர்கள் தேவனுடைய ஆழமான காரியங்களை எந்தஅளவிற்கு அறிந்துகொள்ளமுடியுமோ, அந்தஅளவிற்கு அறிந்துகொள்ள நமது மனதின் வல்லமைகள் அனைத்தையும் வேத வாக்கியங்களை ஆராய்வதில் ஈடுபடுத்தி புரிந்துகொள்ளும் சக்தியை தெரிந்துகொள்ளுவதற்காகச் செயல்படுத்தவேண்டும். இருந்தபோதிலும் அறிந்துகொள்ள விரும்புபவரின் உண்மையான ஆவி, ஒரு சிறு பிள்ளையைப்போன்ற சுலபமாகப் பழகும் தன்மையும் கீழ்ப்படிதலும் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தத்துவப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்காகப் பயன்படுத்தும் அதே முறைகளினால், வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளுவதிலுள்ள சிரமங்களை மேற்கொள்ள முடியாது. விஞ்ஞானத்தை அறிந்துகொள்ளுவதற்காக, அநேகர் சுயத்தைச் சார்ந்தவர்களாக அதன் இராஜ்ஜியத்திற்குள் நுழைவதைப் போல, நாம் வேதாகமத்தை ஆராயும் பணிக்குள் ஈடுபடவேண்டும். மகத்தான இருக்கிறவராக இருக்கிறேன் என்பவரிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ள மிகவும் தாழ்மையுடனும் போதிக்கப்படக்கூடிய ஆவியுடனும் நாம் வரவேண்டும். அப்படியில்லையெனில் நாம் சத்தியத்தால் உணர்த்தப்படாமல் இருக்கும்படி, தீயதூதர்கள் நமது மனங்களைக் குருடாக்கி, நமது இருதயங்களைக் கடினப்படுத்திவிடுவார்கள். (18) GCTam 707.1
கற்றிந்த மனிதர்கள் இரகசியம் என்று அறிவிக்கின்ற அல்லது முக்கியமில்லாதவை என்று கடந்துசெல்லும் அநேக வேதவாக்கியப்பகுதிகள், கிறிஸ்துவின் பள்ளியில் கற்றறிந்தவர்களுக்கு ஆறுதலையும் உபதேசத்தையும் நிறைய கொண்டிருக்கின்றன. அநேக தேவயியல் வல்லுநர்கள், தேவனுடைய வார்த்தையைப்பற்றி தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாதவர்களாக இருப்பதற்கான ஒரு காரணம் என்னவெனில், அவர்கள் கடைப்பிடிக்க விரும்பாத சத்தியத்திற்கு தங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுவதாகும். நீதியின் மேலுள்ள ஆர்வமிக்க நமது ஏக்கம் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுதலினாலும் அதைத் தேடுவதற்காக உள்ள நுண்ணறிவின் வல்லமையைச் சார்ந்ததாகவும் இல்லை. (19) GCTam 707.2
ஜெபம் செய்யாமல் வேதாகமத்தை ஒருபோதும் வாசிக்கக்கூடாது. புரிந்துகொள்ளுவதற்கு எளிதாக இருக்கக்கூடியவைகளின் முக்கியத்துவத்தை நாம் உணரவும், அல்லது புரிந்துகொள்ளுவதற்குக் கடினமாக இருக்கும் சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவதற்காக நாம் கஷ்டப்படுவதைத் தவிர்க்கவும், பிசுத்தஆவியால் மட்டுமே உதவ முடியும். தேவனுடைய வார்த்தையிலுள்ள அழகினால் நாம் கவரப்படுவதற்கும் அதின் வாக்குத்தத்தங்களினால் நாம் அசைக்கப்படுவதற்கும் பலப்படுத்தப்படுவதற்கும் நம் இருதயத்தை தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்ளுவதற்கு ஆயத்தப்படுத்துவது பரலோக தேவதூதர்களின் பணியாகும். “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங். 119:18) என்ற சங்கீதக்காரனின் விண்ணப்பத்தை நாம் நமதாக்கிக்கொள்ளவேண்டும். ஜெபத்தை அலட்சியம் செய்வதின் மூலமாகவும், சோதிக்கப்படுபவர் வேதவாக்கியமாகிய ஆயுதங்களினால் சாத்தானைச் சந்திப்பதற்கு தேவனுடைய வாக்குத்தத்தங்களை உடனே நினைவிற்குக் கொண்டுவரமுடியாதவராகவும் இருப்பதினால், சோதனைகள் அடிக்கடி தடுக்கப்படமுடியாதவைகளாக உள்ளன. ஆனால் தெய்வீகக் காரியங்களில் போதிக்கப்பட விருப்பமுள்ளவர்களைச் சுற்றி தூதர்கள் இருந்து மிக அவசியமான நேரத்தில் அவசியமுள்ள சத்தியங்களை அவர்களது நினைவிற்குக் கொண்டுவருவார்கள். “வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்”- ஏசாயா 59:19. (20) GCTam 707.3
“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்று இயேசு சீடர்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார். ஆனால் ஆபத்தான வேளையில் தேவ ஆவியானவர் நமது ஞாபகத்திற்குக் கொண்டுவருவதற்காகக் கிறிஸ்துவின் உபதேசம் முன்னதாகவே மனதில் சேகரித்துவைக்கப்படவேண்டும். “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங். 119:11) என்று தாவீது கூறினான். (21) GCTam 708.1
தங்களுடைய நித்திய வாஞ்சைகளை மதிக்கும் அனைவரும் சந்தேகவாதம் உள்ளே நுழைவதற்கெதிராக காவல்காத்து நிற்கவேண்டும். சத்தியத்தின் மிக முக்கியமான தூண்களின்மீது தாக்குதல் நடத்தப்படும். நவீன நாத்திகத்தின் பரிகாசம் ஏமாற்றும் பேச்சு, கபடமான சாவை உண்டாக்கக்கூடிய போதனைகள் ஆகியவைகளை எட்டாத அளவிற்குத் தூரமாக வைப்பது முடியாததாகும். சாத்தான் அவனது சோதனைகளை சகலவகுப்பினருக்கும் பொருந்தத்தக்கதாகச் செய்கிறான். கல்வி அறிவற்றவர்களை அவன் பரிகாசச் சைகைகளினாலும் உறுமல்களினாலும் தாக்குகிறான். வேதவாக்கியங்களின்மீது அவமதிப்பையும் நம்பிக்கையின்மை யையும் எழுப்புவதற்கென்று கணக்கிடப்பட்டவிதமாக விஞ்ஞானரீதியான மறுப்புக்களுடனும் தத்துவார்த்தமான பகுத்தறிவுடனும் அவன் கற்றவர் களைச் சந்திக்கிறான். கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீது சந்தேகத்தை நுழைக்க அனுபவக்குறைவுமிக்க இளைஞர் களுங்கூட இறுமாப்பு கொள்ளுகின்றனர். மேலெழுந்தவாரியாக இருக்கும் இந்த இளமையிலுள்ள நாத்திகவாதம் அதன் செல்வாக்கை உடையதாக இருக்கிறது. இவ்விதமாக அநேகர் தங்கள் தந்தைமார்களின் நல்விசுவாசத்தைக் கேலி செய்யவும், கிருபையின் ஆவிக்கு எதிராக அப்படிச் செய்யும்படியாகவும் நடத்தப்படுகின்றனர். தேவனுக்கு மேன்மையையும் உலகத்திற்கு ஆசீர்வாதத்தையும் கொண்டுவரக்கூடியவர்களாக இருப்பார் கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் நாத்திக வாதத்தின் நச்சுக்காற்றின் சுவாசத்தினால் அழியக்கூடிய நோய்வாய்ப்பட்டவர்களாக உள்ளனர். மனிதனின் பகுத்தறிவு என்னும் பெருமையடிக்கும் முடிவுகளில் நம்பிக்கை வைக்கும் அனைவரும், தெய்வீக இரகசியங்களைத் தங்களால் விளக்கமுடியும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கும் அனைவரும், தேவஞானத்தின் உதவி இல்லாமல் சத்தியத்தினிடம் வருகின்ற அனைவரும் சாத்தானின் கண்ணியில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.(22) GCTam 708.2
இந்த உலக வரலாற்றின் பக்திவிநயமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். பூமியில் பெருகிவரும் திரளானவர்களின் முடிவு நித்திய ஜீவனுக்கென்றோ அல்லது நித்திய அழிவிற்கென்றோ தீர்மானம் செய்யப்படவுள்ளது. நமது எதிர்கால சுகவாழ்வும் மற்ற ஆத்துமாக்களின் இரட்சிப்பும் நாம் இப்பொழுது பின்பற்றும் நடவடிக்கையைச் சார்ந்ததாக உள்ளது. சத்திய ஆவியினால் நாம் வழிகாட்டப்படவேண்டியது அவசியம். ஆண்டவரே! நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் வாஞ்சையுடன் கேட்கவேண்டும். உபவாசத்துடனும் ஜெபத்துடனும் அவருடைய வசனத்தைத் தியானம் செய்து கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துவது அவசியம். தேவனுடைய காரியங்களில் ஒரு ஆழ்ந்த உயிருள்ள அனுபவத்தை நாம் தேடவேண்டும். இழப்பதற்கு நம்மிடம் வினாடி நேரங்கூட இல்லை. மிக முக்கியமான நிகழ்ச்சிகள் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சாத்தானால் வசியப்படுத்தப்பட்ட களத்தில் நாம் இருக்கிறோம். நீங்கள் அசந்தும் மயங்கியும் இருக்கும்போது, உங்கள்மீது பாய்ந்து உங்களைத் தனது இரையாக்கிக்கொள்ள எந்த விநாடியிலும் ஆயத்தமுள்ளவனாக எதிரி உங்களைச் சுற்றிப் பதிவிருப்பதினால், தேவனுடைய காவற்காரராகிய நீங்கள் உறங்கிவிடாதீர்கள்! (23) GCTam 709.1
அநேகர் தேவனுக்கு முன்பாக உள்ள தங்களுடைய உண்மையான நிலையைப்பற்றி வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவறான செய்கைகளைச் செய்யாமல் இருந்ததற்காகத் தங்களைத் தாங்களே வாழ்த்தி, அவர்களைச் செய்யும்படி தேவன் எதிர்பார்க்கின்ற நல்லதும் மேன்மைமிக்கதுமான செயல்களைச் செய்யாமல் அலட்சியமாயிருந்துவிட்டதைக் கணக்கிட மறந்துவிடுகின்றனர். அவர்கள் தேவனுடைய தோட்டத்தில் மரங்களாக இருப்பதுமட்டும் போதுமானதாகாது. கனிகொடுப்பதின் மூலமாக அவரது எதிர்பார்ப்பிற்கு பதில் கொடுக்கவேண்டும். அவர்களைப் பலப்படுத்தும் அவரது கிருபையின் மூலமாக அவர்கள் செய்திருந்திருக்கக்கூடிய நல்லவைகளனைத்தையும் குறித்து அவர்கள் அவருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். பரலோக புத்தகங்களில் அவர்களது பெயர்கள் நிலத்தைக் கெடுப்பவர்கள் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தபோதிலும் அந்த வகுப்பினரின் விவகாரங்கூட முற்றிலுமாக நம்பிக்கை அற்றதாக இல்லை. தேவனுடைய இரக்கத்தை அலட்சியம் செய்தவர்களுக்கும் அவரது கிருபையை வீணாக்கியவர்களுக்கும் மிகுந்த சகிப்புத்தன்மைமிக்க அவருடைய அன்பின் இருதயம் பரிந்து பேசுகிறது. “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.... ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” எபே. 5:14-16. (24) GCTam 709.2
சோதிக்கின்ற நேரம்வரும்போது, தங்களுடைய வாழ்க்கையின் சட்டமாக தேவனுடைய வார்த்தையை ஏற்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். வசந்த காலத்தில் எப்பொழுதும் பச்சை நிறமாக இருப்பவைகளுக்கும் மற்ற மரங்களுக்கும் காணக்கூடிய வேற்றுமை இருப்பதில்லை. ஆனால் கோடைகாலத்தின் வறட்சி வரும்போது, மற்ற மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்துவிடும்போது, எப்பொழுதும் பச்சையாக இருப்பவைகள் மாறாதவையாக இருக்கின்றன. அதைப்போலவே, உண்மையான கிறிஸ்தவனிலிருந்து தன்னைக் கிறிஸ்தவன் என்று கூறிக்கெள்ளும் போலிக் கிறிஸ்தவன் இப்பொழுது பிரித்தறிய முடியாதவனாக இருக்கலாம். ஆனால் வேற்றுமை வெளிப்டையாகத் தெரியக்கூடிய நேரம் நம்மீது விரைவாக வந்துகொண்டிருக்கிறது. எதிர்ப்பு உண்டாகட்டும். உபத்திரவம் என்னும் நெருப்பு எரியட்டும். அப்பொழுது அரைமனதுள்ளவர்களும் மாயக்காரர்களும் தங்களுடைய விசுவாசத்தை விட்டுவிடுவார்கள். ஆனால் உண்மையான கிறிஸ்தவன் செழுமையான நாட்களில் இருந்ததைவிட ஒரு கற்பாறையைப் போல் ஒளிமிக்க நம்பிக்கை உள்ளவனாக உறுதி உள்ளவனாக நிற்பான். (25) GCTam 710.1
“உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.” “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்”-சங். 119:99,104. (26) GCTam 710.2
“ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்”-நீதி. 3:13. “அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்”-எரே. 17:8. (27) GCTam 711.1