மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

29/43

28—வாழ்வின் வழக்குகள் சந்திக்கப்படுகின்றன!

(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 479—491)

“நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது”-தானியேல் 7:9- 10. (1) GCTam 559.1

இப்படியாக, பெரிதும் பக்திவிநயமுமான அந்தநாள் தீர்க்கதரிசிக்குத் தரிசனத்தில் காட்டப்பட்டது. பூமி முழுவதற்கும் நீதிபதியாக இருப்பவருக்குமுன், மனிதர்களின் சுபாவங்களும் வாழ்க்கை முறைகளும், திருப்பிப்பார்க்கும்படி அவர்முன் கடந்துசெல்லவேண்டும். அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்க பலன் அவனவனுக்குக் கிடைத்தாகவேண்டும். பிதாவாகிய தேவன்தான் நீண்ட ஆயுசுள்ளவர். “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்'‘-சங். 90:2. சகல ஜீவன்களுக்கும் சகல பிரமாணங்களுக்கும் ஆதாரமாகவும் ஊற்றாகவும் இருக்கும் அவர்தான், நியாயவிசாரணையில் தலைமை தாங்குபவர். ஆயிரமாயிரமாகவும் கோடானகோடியாகவும் இருக்கும் பரிசுத்த தேவதூதர்கள், சாட்சிகளாகவும் ஊழியக்காரர்களாகவும் இதில் பங்கு கொள்ளுகின்றனர். (2) GCTam 559.2

“இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்”-தானி. 7:13,14. இங்கு விவரிக்கப்படும் கிறிஸ்துவின் வருகை, பூமிக்கு வரும் அவரது இரண்டாம் வருகை அல்ல. தமது மத்தியஸ்த ஊழியத்தின் முடிவில் தமக்குக் கொடுக்கப்பட உள்ள ஆளுகையையும் மகிமையையும் ராஜ்யத்தையும் பெற்றுக்கொள்ள அவர் பரலோகத்தில் நீண்ட ஆயுசுள்ளவரிடம் வருகிறார். 2300 நாட்களின் முடிவில், கி.பி.1844-ல் நடைபெறுமென்று தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்த வருகை இந்த வருகைதான், இரண்டாம் வருகை அல்ல. மனிதனின் சார்பாக அவர் செய்யும் ஊழியத்தின் கடைசிப் பகுதியில் ஈடுபட—நுட்ப நியாயவிசாரணையை நடத்த, அதன் நன்மைக்குத் தகுதியானவர்கள் எனக்காட்டப்படும் அனைவருக்காகவும் பாவ நிவர்த்தி செய்ய, தேவதூதர்கள் புடைசூழ நமது பிரதான ஆசாரியர் (பரலோக மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிதாவின் சமூகத்தில் தோன்றுகிறார். (3) GCTam 560.1

சாயலாக இருந்த ஆராதனையில், பாவ அறிக்கையுடனும் மனந்திரும்புதலுடனும் தேவனுக்கு முன்பாக வந்து, பாவப்பரிகார பலியின் இரத்தத்தின் மூலமாக தங்களுடைய பாவங்களை பரிசுத்தஸ்தலத்திற்குள் மாற்றியிருந்தவர்களுக்கு மாத்திரமே பாவநிவாரண நாளின் ஆராதனையில் பங்கு இருந்தது. அப்படியே இறுதிப் பாவநிவாரண, நுட்பநியாயவிசாரணை என்னும் பெரும் நாளில், தேவனுடைய ஜனங்களின் வழக்குகள் மட்டுமே ஆலோசிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. துன்மார்க்கரின் நியாயத் தீர்ப்பு குறிப்பிட்ட வேறொரு பணியாக இருந்து, பின்னொரு சமயத்தில் நடைபெறவிருக்கிறது. “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங் காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?”-1 பேதுரு 4:17. (4) GCTam 560.2

மனிதர்களின் பெயர்களும் செயல்களும் எழுதப்பட்டுள்ள பரலோகத்திலுள்ள புத்தகங்கள்தான் நியாயத்தீர்ப்பின் தீர்மானிக்கும். தானியேல் தீர்க்கன், தீர்மானத்தை “புஸ்தகங்கள் திறக்கப்பட்டது” என்கிறார். இதே காட்சியை விவரிக்கும் வெளிப்படுத்துபவர், “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” (வெளி 20:12) என்கிறார். (5) GCTam 560.3

தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அனைவரது பெயர்களையும் ஜீவ புஸ்தகம் கொண்டுள்ளது. “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (லூக்கா 10:20) என்று இயேசு தமது சீடர்களிடம் கூறினார். பவுல் விசுவாசமிக்க அவரது உடன் வேலைக்காரர்களைப்பற்றி, “அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது” (பிலிப் 4:3) என்றார். “யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம்” வருவதை தானியேல் பார்த்து, “புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்” (தானி. 12:1) என்றார். “ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்” (வெளி. 21:27) என்று யோவானாகிய வெளிப்படுத்தல்காரரும் கூறுகிறார். (6) GCTam 561.1

“கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது”-மல்கியா 3:16. அவர்களுடைய விசுவாச வார்த்தைகள், அவர்களது அன்பின் செயல்கள் ஆகியவை பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெகேமியா இதைக் குறிப்பிட்டு: “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்” (நெகேமியா 13:14) என்று கூறினார். நீதியான செயல்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய ஞாபகப் புஸ்தகத்தில் அழியாதவைகளாக உள்ளன. தடுக்கப்பட்ட ஒவ்வொரு சோதனையும், மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தீமையும், மென்னைமிக்க இரக்கத்துடன் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், உண்மையாக காலக்கிரமமாக அதில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தியாகச்செயலும், கிறிஸ்துவினிமித்தம் தாங்கிக்கொண்ட ஒவ்வொரு பாடும் துயரமும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” (சங். 56:8) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். (7) GCTam 561.2

மனிதர்களின் பாவங்களைப்பற்றிய ஒரு பதிவேடும் உள்ளது. “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்”-பிர. 12:14. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்.... உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” (மத்தேயு 12:36,37) என்று இரட்சகர் கூறினார். தவறு இல்லாத அந்தப் பதிவேட்டில் இரகசியமான நோக்கங்களும் உள்ளெண்ணங்களும் காணப்படுகின்றன. ஏனெனில் “இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்”-1 கொரி. 4:5, உங்கள் அக்கிரமங்களும் ... பிதாக்களுடைய அக்கிரமங்களும் ...“இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது;”-ஏசாயா 65:6,7. (8) GCTam 561.3

ஒவ்வொரு மனிதனுடைய செயலும் தேவனுக்கு முன்பாகத் திரும்பிப்பார்ப்பதற்கென்று கடந்துசென்று, அதுநம்பிக்கைக்குரியதாயிருந்தாலும் நம்பிக்கையற்றதாயிருந்தாலும் பதிவுசெய்யப்படுகிறது. பரலோகப் புத்தகங்களில் ஒவ்வொருவருடைய பெயருக்கும் எதிராக, அவர்களது ஒவ்வொரு தவறான வார்த்தையும், சுயநலமிக்க ஒவ்வொரு செயலும், நிறைவேற்றப்படாமல் விட்டுவிடப்பட்ட ஒவ்வொரு கடமையும், இரகசியமான ஒவ்வொரு பாவமும், சாமர்த்தியத்துடன் மறைக்கப்பட்ட ஒவ்வொன்றும் மிகப் பயங்கரமான விதத்தில், மிகச் சரியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பரலோகம் அனுப்பின எச்சரிப்புக்கள் அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட கடிந்துகொள்ளுதல்கள், வீணாக்கப்பட்ட வினாடிகள், முன்னேற்றம் அடையச்செய்யாமல் விட்டுவிடப்பட்ட வாய்ப்புகள், நன்மைக்கானாலும் தீமைக்கானாலும் செயல்படுத்தப்பட்ட செல்வாக்குகள் ஆகிய அனைத்தும் பதிவு செய்யும் தேவதூதனால் காலக்கிரமமாகப் பதிவு செய்யப்படுகின்றன. (9) GCTam 562.1

நியாயத்தீர்ப்பில் தேவனுடைய கற்பனையே மனிதர்களின் சுபாவங்கள், வாழ்க்கை முறைகளைச் சோதிக்கும் தரமாக இருக்கிறது. “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; ... ஒவ்வொரு கிரியையையும், ... தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிர. 12:13,14) என்று ஞானி சொல்லுகிறான். அப்போஸ்தலனாகிய யாக்கோபு “சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்” (யாக். 2:12) என்று அவரது சகோதரர்களை எச்சரிக்கிறார். (10) GCTam 562.2

நியாயத்தீர்ப்பில் தகுதியானவர்களாகக் கணக்கிடப்படுபவர்கள், நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள். “மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிற வர்களோ உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்” (லூக்கா 20: 35,36) என்று இயேசு கூறினார். மீண்டும் “அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், புறப்படுவார்கள்” (யோவன் 5:29) என்றார். மரித்த நீதிமான்கள், உயிர்த்தெழுதலுக்குத் தகுதியானவர்கள் என்று நியாயத்தீர்ப்பின் முடிவில் தீர்மானிக்கப்படும் வரை எழுப்பப்படமாட்டார்கள். எனவே, அவர்களைப்பற்றிய பதிவேடுகள் சோதிக்கப்பட்டு, அவர்களது வழக்குகள் முடிவுசெய்யப்படும்போது, அவர்கள் நியாயவிசாரணைச்சங்கத்தில் பிரத்தியட்சமாகமாட்டார்கள். (11) GCTam 562.3

அவர்கள் சார்பாக தேவனுக்குமுன் பேசுவதற்காக, பரிந்து பேசுபவரான இயேசு தோன்றுவார். “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்”-1 யோவான் 2:1. “அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” -எபி. 9:24. “மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்”-எபி. 7:25.(12) GCTam 563.1

நியாயத்தீர்ப்பில் புத்தகங்கள் திறக்கப்படும்போது, இயேசுவின் மீது விசவாசம் வைத்த அனைவரது வாழ்க்கையும், திரும்பிப் பார்க்கப்படும்படி தேவனுக்குமுன் வருகிறது. இந்த உலகத்தில் முதலில் வாழ்ந்திருந்தவர்களிடத்திலிருந்து ஆரம்பித்து, பின்னர் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு தலைமுறையினரின் வாழ்க்கையையும், நமக்காகப் பரிந்து பேசுபவர் (பிதாவின்) முன் கொண்டுவந்து, உயிருள்ளவர்களுடன் முடிக்கிறார். ஒவ்வொரு பெயரும் குறிப்படப்படுகிறது. ஒவ்வொரு வழக்கும் திட்டமாக விசாரிக்கப்படுகிறது. பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, பெயர்கள் நிராகரிக்கப்படுகிறது. எவருடைய புத்தகத்திலாவது மனம் வருந்தாத, மன்னிக்கப்பட்டிராத பாவங்கள் இருக்குமானால், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து நீக்கப்படும். அவர்களது நற்செயல்களின் பதிவுகளும் தேவனுடைய ஞாபகப் புத்தகத்திலிருந்து அழித்து நீக்கப்படும். “கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்” (யாத்.32: 33) என்றார். எசேக்கியேல் தீர்க்கதரிசி: “நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்” (எசே. 18:24) என்கிறார். (13) GCTam 563.2

யாரெல்லாம் பாவத்தைப்பற்றி உண்மையாக மனம் வருந்தி விசுவாசத்தினால் தங்களுடைய பாவநிவாரணமாகக் கிறிஸ்துவின் இரத்தத்தின்மீது உரிமைபாராட்டினரோ, அவர்கள் பரலோகப் புத்தகத்தில் அவர்களது பெயர்களுக்கு எதிராக மன்னிப்பு என்று எழுதப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவின் நீதியில் பங்கு பெறுபவர்களாக இருப்பதால், அவர்களுடைய சுபாவங்கள் தேவனுடைய கற்பனைக்கு இசைவுள்ளதாகக் காணப்பட்டதால், அவர்களது பாவங்கள் துடைத்து நீக்கப்படும். அவர்கள் மட்டுமே நித்திய ஜீவனுக்குத் தகுதி உள்ளவர்களென்று கணக்கிடப்படுவார்கள். “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் கர்த்தர் அறிவிக்கிறார். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்” (வெளி. 3:5) “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (மத்தேயு 10:32,33) என்று இயேசு சொன்னார். (14) GCTam 564.1

பூமியிலுள்ள நியாய சங்கங்களில் உண்டாகும் முடிவுகளின் மீது மனிதர்களுக்கிடையில் காட்டப்படும் மிக ஆழமான ஆர்வம், சர்வபூமிக்கும் நியாதிபதியாக இருப்பவருக்குமுன், பரலோக நீதிமன்றத்தில் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களின் வாழ்க்கை திருப்பிப்பார்க்கப்படுவதற்காக வரும்போது மங்கலாகவே இருக்கிறது. தமது இரத்தத்தின் மூலமாக வெற்றி பெரும் அனைவருக்கும், மீறுதல்களிலிருந்து மன்னிப்பு அருளப்பட்டு, அவர்களுடைய ஏதேன் தோட்டத்தில் மீண்டும் குடிவைக்கப்பட்டு, அவருடன் புத்திரசுவீகாரமுள்ளவர்களாக முந்தின ஆளுகைக்கு முடிசூட்டப்படுவர் என்ற மன்றாட்டை தெய்வீகப் பரிந்துரையாளர் முன்வைக்கிறார். நமது இனத்தை வஞ்சிக்கவும் சோதிக்கவும் செய்யும் முயற்சிகளில் மனிதப்படைப்பில் இருந்த தெய்வீகத் திட்டத்தை தொய்ந்துபோகச்செய்ய சாத்தான் எண்ணியிருந்தான். ஆனால், மனிதன் ஒருபோதும் வீழ்ச்சியடையவேயில்லை என்பதைப்போல அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று கிறிஸ்து இப்போது கேட்கிறார். அவர் தமது மக்களுக்காக முழுமையான-நிறைவான மன்னிப்பையும், நீதியையும் மட்டும் கேட்காமல், அவரது மகிமையில் ஒரு பங்கும், அவருடைய சிங்காசனத்தில் இடமும் கேட்கிறார்! (15) GCTam 564.2

இயேசு அவரது கிருபையின் கீழ்ப்பட்டவர்களுக்காகப் பரிந்து பேசும்போது, சாத்தான் அவர்களை மீறுதல்காரர்கள் என்று தேவனுக்கு முன்பாக குற்றப்படுத்துகிறான். அவர்களைக் கடவுள் நம்பிக்கையற்ற கோட்பாட்டில் நடத்தி, தேவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்து, அவரது அன்பிலிருந்து பிரித்து, அவரது பிரமாணத்தை மீறச்செய்ய பெரும் வஞ்சகனாகிய அவன் வகைதேடியிருந்தான். இப்பொழுது, அவர்களது வாழ்க்கையின் பதிவேடுகளையும், சுபாவத்திலுள்ள குறைகளையும், மீட்பருக்கு அவமதிப்பைக் கொண்டுவந்த கிறிஸ்துவற்ற குணத்தின்படி செய்யும்படியாக அவர்களைத் தூண்டிவிட்ட எல்லாப் பாவங்களையும் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக அவர்கள் தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்று அவன் உரிமைபாராட்டுகிறான். (16) GCTam 565.1

இயேசு அவர்களது பாவங்களை தவிர்க்காமல், பாவத்திற்கான அவர்களது மனம் வருந்துதலையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறார். அவர்களுடைய மன்னிப்பை உரிமைகோருகிறார். பிதாவுக்கும் தூதர்களுக்கும் முன்பாக, தமது காயம்பட்ட கரங்களை உயர்த்திக்காட்டி, “அவர்களை பேர்பேராக நான் அறிந்திருக்கிறேன். அவர்களை என்னுடைய உள்ளங்கையில் நான் வரைந்திருக்கிறேன். ‘தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:17) என்கிறார். சாத்தானை நோக்கி: “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா” (சகரியா 3:2) என்று அறிவிக்கிறார். கிறிஸ்து தமது உண்மையானவர்களை “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக” (எபே.5:27) பிதாவின் சமூகத்தில் நிறுத்தும்படி, அவரது நீதியின் ஆடையால் போர்த்துகிறார். அவர்களது பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களைக்குறித்து, “அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்” (வெளி. 3:4) என்று எழுதப்பட்டிருக்கிறது. (17) GCTam 565.2

இப்படியாக, “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” “அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்” (எரேமியா 31:34 50:20) “இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்... சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்” (ஏசாயா 4:2-4) என்கிற புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் பூரணமான நிறைவேறும்.(18) GCTam 566.1

நுட்பநியாயவிசாரணை, பாவங்களைத் துடைத்து நீக்கிவிடுதல் ஆகிய பணிகள் கர்த்தரின் இரண்டாம்வருகைக்கு முன் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்து மரித்தோர் நியாயந்தீர்க்கப்படவேண்டியதிருப்பதால், வழக்குகளை விசாரிக்கும் நியாயத்தீர்ப்பு நடந்து முடியும்வரை, மனிதர்களின் பாவங்களைத் துடைத்து நீக்குவது முடியாது. ஆனால் கர்த்தருடைய சந்திதானத்திலிருந்த இளைப்பாறுதலின் காலங்கள் வரும.போதும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்போதும் (அப். 3:19,20) விசுவாசிகளின் பாவங்கள் நீக்கப்படும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பாகச் சொல்லுகிறார். நுட்ப நியாயவிசாரணை முடிவடையும்போது, கிறிஸ்து வருவார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனுடைய கிரியைக்குத் தக்கதாக அளிக்கும் பலன் அவருடன் வருகிறது. (19) GCTam 566.2

சாயலாக இருந்த ஆராதனையில், பிரதான ஆசாரியன் இஸ்ரவேலர்களுக்குப் பாவநிவாரணம் செய்தபின், வெளியே வந்து, சபையை ஆசீர்வதித்தான். அப்படியே கிறிஸ்துவும் அவரது மத்தியஸ்த ஊழியத்தின் முடிவில் அவருக்காகக் காத்திருக்கும் அவருடைய மக்களை நித்தியஜீவனைக் கொடுத்து ஆசீர்வதிக்கும்படி, “பாவமில்லாமல் தரிசனமாவார்” (எபி. 9:28). ஆசாரியன் பரிசுத்தஸ்தலத்திலிருந்து பாவத்தை நீக்குவதில், பாவங்களைப் போக்காட்டின் தலையில் சுமத்தினதுபோல, கிறிஸ்து இந்தப் பாவங்கள் அனைத்தையும் பாவத்திற்குக் காரணமாகவும் பாவங்களைச் செய்ய தூண்டுபவனாகவும் இருந்த சாத்தான்மேல் சுமத்துவார். இஸ்ரவேலின் பாவங்களைச் சுமந்து கொண்டு அந்த போக்காடு குடியில்லாத தேசத்துக்கு அனுப்பப்பட்டது (லேவி. 16:22). அப்படியே தேவனுடைய மக்களைப் பாவம் செய்யும்படிச் செய்த குற்றங்கள் அனைத்தையும் சாத்தான் தன்மீது சுமந்துகொண்டு, குடிமக்கள் ஒருவரும் இல்லாமல் பாழாகியிருக்கும் இந்தப் பூமியில் சிறைப்பட்டவனாக இருப்பான். இறுதியில் துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிக்கும் அக்கினியில், முழுமையான பாவத்தின் தண்டனையை அனுபவிப்பான். இவ்வாறாக, பாவத்தை முற்றிலுமாக நீக்குவதிலும், தீமையைவிட்டு விலக விரும்பியிருந்த அனைவரது விடுதலையிலும், மாபெரும் இரட்சிப்பின் திட்டம் நிறைவேறும். (20) GCTam 566.3

நியாயத்தீர்ப்புக்கென்று குறிப்பிடப்பட்டிருந்த வேளையில் - 1844 ல் 2300 நாட்களின் முடிவில், பாவங்களைப்பற்றி விசாரணையும் அவைகளைத் துடைத்து நீக்கும் பணியும் ஆரம்பமாயிற்று. கிறிஸ்துவின் பெயரை அணிந்துகொண்ட அனைவரும், அதன் நுட்பமான ஆராய்ச்சியில் தேற வேண்டும். உயிருள்ளவர்களும், மரித்தவர்களும் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக, அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டபடியே, நியாயத்தீர்ப்படைய வேண்டும். (21) GCTam 567.1

மனம் வருந்தாத, விட்டுவிடப்படாத பாவங்கள் மன்னிக்கப்படாமல், புத்தகங்களிலிருந்தும் அழித்து நீக்கப்படாமல், தேவனுடைய நாளில் பாவிக்கு எதிரான சாட்சியாக நிற்கும். ஒருவன் தனது தீய செயல்களைப் பகலின் வெளிச்சத்திலோ அல்லது இரவின் இருளிலோ செய்திருக்கலாம். ஆனால் அவைகள் நாம் சந்திக்க வேண்டிய அவருக்குமுன் திறக்கப்பட்டு வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. தேவதூதர்கள் ஒவ்வொரு பாவத்திற்கும் சாட்சியாக இருந்து, தவறில்லாத ஆவணங்களில் அவைகளைப் பதிவு செய்துள்ளனர். அன்னை, மனைவி, மக்கள் உடனுள்ளவர்கள் ஆகியோரிடமிருந்து பாவம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருக்கலாம். குற்றம்செய்தவரைத் தவிர, வேறு ஒருவரும் அந்தத் தவறைப்பற்றி சந்தேகப்படமுடியாத விதத்தில் நடந்துகொள்ளலாம். ஆனால், பரலோகத்தின் நுண்ணறிவின்முன், அது திறக்கப்பட்டதாக வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த இருண்ட இரவின் இருளும், சாமர்த்தியமிக்க அனைத்து வஞ்சகச் செயல்களின் இரகசியமும், நித்தியகாலமாக உள்ளவரின் அறிவிலிருந்து, ஒரே ஒரு எண்ணத்தைக்கூடத் திரையிட்டு மறைக்கப் போதுமானதாக இல்லை. நியாயமற்ற கணக்கு, முறைதவறிய கொடுக்கல் வாங்கல்கள், ஆகியவைபற்றிய மிகச் சரியான பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் தேவனிடம் உள்ளது. பக்தியின் வெளிவேஷத்தினால், அவர் ஏமாற்றப்படுவதில்லை. சுபாவத்தை அளவிடுதலில் அவர் தவறு செய்வதில்லை. ஊழல் மலிந்த இருதயம் உள்ளவர்களால் மனிதர்கள் வஞ்சிக்கப்படலாம். ஆனால் மறைக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஊடுருவி, நமது உள்ளான வாழ்க்கையை அவர் வாசிக்கிறார்.(22) GCTam 567.2

இந்த எண்ணம் எவ்விதம் பக்திவிநயமாக உள்ளது! நித்திய காலத்திற்குள்ளாக ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்துசெல்லும் நாட்கள் பரலோகப் புத்தகத்தின் பதிவுகளைத் தாங்கியவையாக உள்ளன. ஒரு தடவை பேசப்பட்ட பேச்சு, ஒருமுறை செய்யப்பட்ட செயல் ஆகியவைகளை ஒருபோதும் திரும்பிப் பெற இயலாது. நன்மை தீமை ஆகிய இரண்டையும் தேவதூதர்கள் பதிவு செய்துள்ளனர். பூமியின் மீதுள்ள அனைவரிலும், மிகவும் பலமிக்க வெற்றி வீரனாலுங்கூட, ஒரே ஒரு நாளின் பதிவைக் கூட பின் அழைக்க இயலாது. நமது செயல்கள், சொற்கள், இரகசியமான நோக்கங்களுங்கூட, நன்மைக்கோ அல்லது தீமைக்கோ முடிவுசெய்யும் மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அவைகள் நம்மால் மறக்கப்படலாம். ஆனால் நியாயப்படுத்தவோ அல்லது குற்றப்படுத்தவோ, அவைகள் சாட்சிபகரும்.(23) GCTam 568.1

கலைஞனின் மெருகேற்றப்பட்ட தட்டினைப் பார்க்கும்போது, பார்ப்பவரது முகத்தோற்றம் அவர் இருக்கிற வண்ணமாகவே வெளிப்படுத்தப்படும். அதே விதத்தில், மேலே உள்ள புத்தகங்களில், சுபாவம் இருக்கிறவண்ணமாகவே வரையப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் பரலோகவாசிகளின் பார்வையை சந்திக்கவேண்டியதாக இருக்கும் இந்த ஆதாரங்களைப் பற்றிய வரவேற்பு எந்த அளவிற்கு அற்பமாக உணரப்பட்டுள்ளது! காணக்கூடியதிலிருந்து காணமுடியாததைப் பிரிக்கும் திரையானது பின்னிழுக்கப்படுமானால், நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண்டிய ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் ஒரு தேவதூதன் பதிவுசெய்வதை மக்கள் அனைவரும் காணக்கூடுமானால், நாள்தோறும் பேசப்படுபவைகளில் எத்தனை வார்த்தைகள் பேசப்படாதவைகளாக இருந்திருக்கும்! எத்தனை செயல்கள் செயலாற்றப்படாதவைகளாக இருந்திருக்கும்.(24) GCTam 568.2

பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு திறமையும் நியாயத்தீர்ப்பில் நுணுக்கமாக சோதிக்கப்படும். பரலோகத்தினால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மூலதனத்தை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறோம்? கர்த்தர் அவரது வருகையின்போது, அவருக்குச் சொந்தமானதை அதிக வட்டியுடன் பெற்றுக்கொள்வாரா? நமது கரத்திலும் இருதயத்திலும் மூளையிலுமாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வல்லமைகளை தேவனுடைய மகிமைக்கென்றும், இந்த உலகத்தின் ஆசீர்வாதத்திற்கென்றும் நாம் முன்னேற்றமடையச் செய்திருக்கிறோமா? நமது நேரம், நமது எழுதுகோல், நமது பேச்சு, நமது செல்வாக்கு ஆகியவைகளை நாம் எவ்விதமாகப் பயன்படுத்தியிருக்கிறோம்? ஏழை, துன்பப்பட்டவர், அநாதை, விதவை ஆகியவர்களின் வடிவில் இருந்த கிறிஸ்துவிற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? தேவன் அவரது வார்த்தையின் கருவூலமாக இருக்கும்படி நம்மை இந்த உலகில் ஏற்படுத்தியிருக்கிறார். இரட்சிக்கப்படும்படி மனிதர்களை ஞானமுள்ளவர்களாக்குவதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒளியையும், சத்தியத்தையும்கொண்டு, நாம் என்ன செய்திருக்கிறோம்? கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பெயரளவில் அறிவிப்பதில் எவ்விதமான மதிப்பும் இல்லை. செயலின் மூலமாகக் காட்டப்பட்ட அன்பு ஒன்று மட்டுமே, எந்தச் செயலையும் மதிப்புள்ளதாக்குகிறது. மனிதர்களின் அனுமானத்தில் எவ்வளவுதான் சிறிதாகத் தோன்றினாலும், அன்பினால் செய்யப்பட்ட அனைத்தும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பலன் அளிக்கப்படுகிறது. (25) GCTam 568.3

மனிதர்களின் மறைத்துவைக்கப்பட்டுள்ள சுயநலம், பரலோகப் புஸ்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டதாக நிற்கிறது. உடன் மனிதர்களுக்காக நிறைவேற்றப்படாமல் விட்டுவிடப்பட்ட கடமைகள், இரட்சகரின் உரிமைகளைப்பற்றிய மறதி, ஆகியவைபற்றிய ஒரு பதிவுப்பட்டியல் உள்ளது. கிறிஸ்துவிற்குச் சொந்தமான காலம், சிந்தனை, பலம் ஆகியவை எவ்விதமாக சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டன என்பதை அவர்கள் காண்பார்கள். தேவதூதர்கள் பரலோகத்திற்கு எடுத்துச்செல்லும் இந்தக் குறிப்பு வருத்தம் தருபவையாக உள்ளது. நுண்ணறிவு மிக்கவர்களும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களுங்கூட உலகப்பிரகாரமான உடைமைகளை சம்பாதிப்பதில், அல்லது பூமிக்குரிய இன்பங்களை அனுபவிப்பதில் ஈடுபட்டுள்ளனர். தன்னை வெளிக்காட்டும் அலங்காரம், சுயவிருப்பங்களைப் பூர்த்திசெய்கின்ற பழக்கங்கள் ஆகியவைகளுக்காக செல்வம், காலம், பலம் ஆகியவை செலவிடப்படுகின்றன. ஜெபம் செய்வதற்கும், வேதவாக்கியங்களை ஆராய்வதற்கும், ஆத்துமாவைத் தாழ்த்துவதற்கும், பாவத்தை அறிக்கைசெய்வதற்கும் செலவிடப்படும் நேரங்கள் மிகக் குறைவாக உள்ளன. (26) GCTam 569.1

நாம் ஏதாவது பணியின்மேல் ஈடுபாடு உள்ளவர்களாகும்படி, நமது மனங்களை வேறு காரியங்களில் ஈடுபடச்செய்வதற்காக, எண்ணிலடங்காத திட்டங்களை சாத்தான் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். பாவநிவாரணம் செய்யும் ஒரு பலியையும் சர்வவல்லமையுள்ள ஒரு மத்தியஸ்தரையும் காட்சிக்குக் கொண்டுவரும் பெரும் சத்தியங்களைத் தலைமை வஞ்சகன் வெறுக்கிறான். மனங்களை இயேசுவிடமிருந்தும் அவரது சத்தியத்தில் இருந்தும் திசைதிருப்பிவிடுவதைச் சார்ந்துதான் அவனுடைய காரியங்கள் அனைத்தும் உள்ளன என்பதை அவன் அறிந்திருக்கிறான். (27) GCTam 569.2

இரட்சகரின் மத்தியஸ்தத்தினால் உண்டாகும் நன்மைகளில் பங்குபெறுபவர்கள், பூரணமான பரிசுத்தத் தன்மையை அடைய, தேவனுக்குப் பயந்து, செய்யவேண்டிய தங்களது கடமைகளில் வேறு எதுவும் குறுக்கிட அனுமதிக்கக்கூடாது. இன்பங்கள், அலங்கரிப்புகள் அல்லது இலாபம்தேடுதல் ஆகியவைகளுக்காக விலையேறப்பெற்ற நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, ஆர்வத்துடனும், ஜெபத்துடனும் சத்திய வார்த்தைகளை ஆராய்வதில் ஈடுபடவேண்டும். தேவனுடைய ஜனங்கள், பரிசுத்தஸ்தலம், நுட்ப நியாயவிசாரணை என்னும் பொருள்களைப்பற்றித் தெளிவாகப் புரிந்தவர்களாக இருக்கவேண்டும். தங்களுடைய பிரதான ஆசாரியரின் நிலை, அவரது பணி, ஆகியவை பற்றிய ஒரு அறிவு அனைவருக்கும் அவசியமானதாக உள்ளது. அப்படி இல்லாவிட்டால், இந்த நேரத்திற்கு மிகவும் அவசியமான விசுவாசத்தைச் செயல்படுத்துவது அவர்களால் இயலாததாகிவிடும். அல்லது அவர்களை நிரப்பும்படி தேவன் நியமிக்கும் நிலையை பற்றிக்கொள்ள அவர்களால் இயலாமலாகிவிடும். காக்கவோ இழக்கவோ வேண்டிய ஒரு ஆத்துமா ஒவ்வொருவரிடமும் உள்ளது! மேன்மையான நீதிபதியை ஒவ்வொருவரும் முகமுகமாகச் சந்தித்தாக வேண்டும்! அப்படியிருக்க, தானியேலுடன் தனது வீதத்திற்கென்று ஒவ்வொரு தனி நபரையும் எழுந்து நிற்கச்செய்கிற, நியாயசங்கம் உட்காருவதும் புத்தகங்கள் திறக்கப்படுவதுமாகிய பக்திவிநயமான காட்சியைப்பற்றி ஒவ்வொரு மனமும் அடிக்கடி தியானிக்கவேண்டியது எவ்வளவு முக்கியமானதாக உள்ளது! (28) GCTam 569.3

இந்தப் பொருட்பாடங்களின் ஒளியை அடைந்துள்ள அனைவரும் தேவன் அவர்களிடம் ஒப்படைத்துள்ள பெரும் சத்தியங்களுக்குச் சாட்சிபகரவேண்டியவர்களாக உள்ளனர். மனிதனின் சார்பில் கிறிஸ்து ஆற்றும் பணியின் முக்கிய மையமாக, பரலோக பரிசுத்தஸ்தலம் உள்ளது. பூமியின்மீது வாழும் ஒவ்வொரு ஆத்துமாவுடனும், அது சம்பந்தப்பட்டதாக உள்ளது. இரட்சிப்பின் திட்டத்தை அது நமது காட்சிக்குக் கொண்டுவந்து, நீதிக்கும் பாவத்திற்கும் இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் போட்டியில் உள்ள வெற்றிகரமான பலன்களை வெளிப்படுத்துகிறது. இந்தப் பொருள்களைப்பற்றி அனைவரும் பூரணமாக ஆராய்ந்தறிந்து, தங்களிலுள்ள நம்பிக்கையைக்குறித்து விசாரித்துக் கேட்கும் யாவருக்கும் பதில் தரும்படி தகுதி உள்ளவர்களாக இருக்கவேண்டியதை, எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதாக்கவேண்டும். (29) GCTam 570.1

இரட்சிப்பின் திட்டத்தில், கிறிஸ்துவின் சிலுவை மரணம் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதைப்போலவே, மனிதனின் சார்பில் பரலோகப் பரிசுத்தஸ்தலத்தில், அவர் மத்தியஸ்தம் செய்வதும் அவ்வளவு முக்கியமானதாக உள்ளது. உயிர்த்தெழுந்தபின், பரலோகத்தில் செய்து முடிக்கும்படி எழுந்தருளிச்சென்ற அவரது ஊழியத்தை அவர் தமது மரணத்தினால் ஆரம்பித்தார். நமது முன்னோடியாக உள்ளவர் நமக்காக எங்கு பிரவேசித்திருக்கிறாரோ, அந்தத் திரைக்குள் விசுவாசத்தினால் நாமும் பிரவேசிக்கவேண்டும். (எபி. 6:20). கல்வாரிச் சிலுவையிலிருந்து அங்கு ஒளி பிரதிபலிக்கிறது. மீட்பின் தேவ இரகசியம்பற்றித் தெளிவான உட்பார்வையால் நாம் ஆதாயமடையலாம். பரலோகத்தின் எண்ணமுடியாத செலவினால், மனிதனின் இரட்சிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட அந்தத் தியாகபலியானது, உடைக்கப்பட்ட தேவ கற்பனையின் மிக விசாலமான கோரிக்கைகளுக்குச் சமமாக உள்ளது. பிதாவின் சிங்காசனத்திற்கான பாதையை இயேசு திறந்திருக்கிறார். விசுவாசத்தினால் அவரிடம் வரும் அனைவரின் உண்மையான வாஞ்சையும் அவரது மத்தியஸ்த ஊழியத்தின் மூலமாக தேவ சமுகத்தில் வைக்கப்படவிருக்கிறது.(30) GCTam 570.2

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” நீதி. 28:13. தங்களுடைய பாவங்களை மறைத்து, அவைகளுக்குச் சாக்குப்போக்கு கூறுபவர்கள்மீது சாத்தான் எவ்விதமாக வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான் என்பதையும், அவர்களது நடத்தை காரணமாகக் கிறிஸ்துவையும் பரிசுத்த தூதர்களையும் அவன் எவ்விதமாக ஏளனம் செய்கிறான் என்பதையும் அவர்கள் காண்பார்களானால், தங்கள் பாவங்களை அறிக்கைசெய்து அவைகளைத் தூரமாக விட்டுவிட அவர்கள் விரைவார்கள். சுபாவத்தில் உள்ள குறைபாடுகளின் மூலமாக, மனம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள சாத்தான் செயலாற்றுகிறான். இந்தக் குறைபாடுகள் போற்றி வளர்க்கப்படுமானால், அவன் வெற்றி அடைவான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனவே, கிறிஸ்துவின் அடியார்களை அவர்களால் மேற்கொள்ளமுடியாத சாவுக்கேதுவான ஏமாற்றும் பேச்சினால் வஞ்சிப்பதற்கென்றுத் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறான். ஆனால் இயேசு பெருமான் காயப்பட்ட அவரது கரங்களினாலும், சிதைக்கப்பட்ட அவரது சரீரத்தினாலும் அவர்கள் சார்பாகப் பரிந்துபேசி, அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் “என் கிருபை உனக்குப் போதும்” என்கிறார். “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” (மத்தேயு 11:29,30) என்கிறார். எனவே, ஒருவரும் தங்களுடைய குறைபாடுகள் நலமடையமுடியாதவை என்று எண்ணாமலிருப்பார்களாக. அவைகளை மேற்கொள்ள தேவன் விசுவாசத்தையும் கிருபையையும் தருவார். (31) GCTam 571.1

இப்பொழுது நாம் பாவநிவாரண நாள் என்னும் மிக முக்கியமான நாளில் (நாளைச் சுட்டிக்காட்டும் காலத்தில் இருக்கிறோம். சாயலாக இருந்த ஆராதனையில், பிரதான ஆசாரியன் இஸ்ரவேலருக்காக பாவநிவர்த்திசெய்த அந்தநேரத்தில், இஸ்ரவேலர் ஜனங்களில் இருந்து அறுப்புண்டு போகாமலிருப்பதற்காக பாவத்திற்காக மனம் வருந்தி, கர்த்தருக்கு முன்பாகத் தங்களது ஆத்துமாக்களைத் தாழ்த்தவேண்டியது அனைவருக்கும் அவசியமாக இருந்தது. அதேவிதமாகத் தங்களது பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் இப்பொழுது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சில நாட்களாகிய தவணையின் காலத்தில், பாவத்திற்கான வருத்தத்துடனும், உண்மையான மனந்திரும்புதலுடனும், ஆத்துமாக்களை தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தவேண்டும். விசுவாசத்துடன் இருதயத்தை ஆழமாக ஆராய்தல் வேண்டும். கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளுபவர்களிடம் உள்ள லேசான, வேடிக்கையாக எண்ணும் ஆவி தூரமாக நீக்கப்படவேண்டும். மேலாதிக்கம் செய்வதற்கென்று முயலும் தீய சுபாவத்தைக் கீழ்ப்படுத்த விரும்பும் அனைவர் முன்பும் அக்கரைமிக்க போராட்டம் உள்ளது. ஆயத்தம் செய்யும் பணி தனிப்பட்டவருடைய பணியாக உள்ளது. நாம் கூட்டங்களாக இரட்சிக்கப்படுவதில்லை. ஒருவரில் உள்ள தூய்மையும் பக்தியும், அடுத்தவர்களில் இல்லாத இந்தத் தன்மைகளை ஈடுசெய்யாது. உலக மக்களனைவரும் தேவனுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் கடந்துசெல்ல வேண்டியதிருந்தபோதிலும், உலகத்தில் வேறொருவரும் இல்லை என்பதுபோல், ஒவ்வொரு தனிப்பட்டவருடைய வழக்கினையும் மிக நெருக்கமாக உற்று விசாரிப்பார். ஒவ்வொருவரும் சோதிக்கப்பட்டு கறைதிரை இல்லதவர்களாக காணப்படவேண்டும்.(32) GCTam 572.1

பாவநிவாரண ஊழியத்தின் முடிவுப் பகுதியின் காட்சிகள் பக்திவிநயமானவை. அதிலுள்ள ஆர்வங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. உன்னதத்திலுள்ள பரிசுத்தஸ்தலத்தில் இப்பொழுது நியாயத்தீர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது. அநேக வருடங்களாக இந்தப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. விரைவில் எவ்வளவு விரைவில் உயிருள்ளவர்களின் வழக்குகளை விசாரிக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது. பயங்கரமிக்க தேவ சமுகத்திற்கு முன்பாகத் திருப்பிப் பார்க்கும்படி நமது வாழ்க்கை வர உள்ளது. “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்”-மாற்கு 13:33. “ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்” (வெளி. 3:3) என்றபடி, இந்த நேரத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்சகரின் எச்சரிப்பிற்குச் செவிசாய்ப்பதே நமக்கு அனுகூலமாயிருக்கிறது. (33) GCTam 572.2

நுட்ப நியாய விசாரணையின் பணி முடியும்போது, அனைவரது வாழ்வும் ஜீவனுக்கென்றோ மரணத்திற்கென்றோ முடிவு செய்யப்பட்டிருக்கும். கர்த்தர் வானத்தின் மேகங்களின்மீது தோன்றுவதற்குச் சற்று நேரத்திற்குமுன் தவணையின் காலம் முடிவடைகிறது. “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி. 22:11,12) என்று அந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கும் கர்த்தர் கூறுகிறார். (34) GCTam 573.1

நீதிமான்களும் துன்மார்க்கரும் இன்னும் தங்களது அழிவுக்குரிய நிலையில் பூமியின்மீது வாழ்ந்துகொண்டிருப்பார்கள். மனிதர்கள் நட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும், குடித்துக்கொண்டும், புசித்துக்கொண்டும் இருப்பார்கள். பின்னிழுக்கப்படமுடியாத இறுதியான முடிவு உன்னதத்தில் உள்ள பரிசுத்தஸ்தலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிய உணர்வில்லாதவர்களாக அனைவரும் இருப்பார்கள். ஜலப்பிரளயத்திற்குமுன், நோவா பேழைக்குள் பிரவேசித்தபின், அவனை உள்ளே வைத்தும், தெய்வபக்தி இல்லாதவர்களை வெளியே வைத்தும் கர்த்தர் கதவை அடைத்தார். ஆனால் தங்களது தண்டனை குறிக்கப்பட்டாகிவிட்டது என்பதை அறியாது, கவலையற்று, இன்பங்களை அனுபவிக்கும் தங்களுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து, வரவிருக்கும் தவிர்க்கமுடியாத நியாயத்தீர்ப்பின் எச்சரிக்கையை ஏழு நாட்களாக மக்கள் பரிகசித்துக்கொண்டிருந்தனர். “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:39) என்று இரட்சகர் கூறுகிறார். கவனமற்றிருக்கும் நடு இரவில் வரும் திருடனைப்போல, மௌனமாக ஒவ்வொரு மனிதனுடைய முடிவையும் அந்த மணிநேரம் குறிக்கும். குற்றமுள்ள மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரக்கத்தின் ஈவின் பின்வாங்குதலை முடிவுசெய்யும் நேரமாக அது இருக்கும். (35) GCTam 573.2

“அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்”-மாற்கு 13:35,36. விழித்திருப்பதைவிட்டு, அசதியாக இருந்து, உலகத்தின் கவர்ச்சிகளின்மீது கவனம் செலுத்தத் திரும்புபவர்களின் நிலைமை அபாயகரமானது. வியாபாரம் செய்யும் மனிதன் இலாபத்தின்மீது நோக்கமாயிருக்கும்போது, இன்பம் அனுபவிப்பவன் அதில் ஈடுபட வகைதேடி இருக்கும்போது, நாகரிகம் என்னும் மகளானவள் அவளது அலங்காரத்தைச் செய்துகொண்டிருக்கும்போது, அந்த நேரத்தில் பூமி முழுவதற்கும் நீதிபதியாக இருப்பவர் “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவாகக் காணப்பட்டாய்” என்னும் தீர்ப்பைக் கூறுவார். (36) GCTam 573.3