மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
24—மகா பரிசுத்த ஸ்தலத்தில்!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 423—432)
கி.பி. 1844 -ல் நிகழ்ந்த ஏமாற்றத்தின் இரகசியத்தை திறந்துவைக்கும் திறவுகோலாகப் பரிசுத்தஸ்தலம் என்னும் பொருள் இருந்தது. அது தேவனுடைய ஜனங்கள் ஆற்றவேண்டிய நிகழ்காலப் பணியையும், நிலையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து வெளிக்காட்டியதினால், இசைவும் தொடர்புமுள்ள பூரணமான ஒரு சத்தியத்தின் அமைப்பை காட்சிக்குத் திறந்து, அட்வெந்து இயக்கத்தை தேவனுடைய கரம் இயக்கியது என்பதைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இயேசுவின் சீடர்கள் வேதனையும் ஏமாற்றமும் நிறைந்த பயங்கரமான இரவிற்குப்பின் கர்த்தரைக் கண்டபோது, மகிழ்ச்சியடைந்ததைப்போன்று, அவரது வருகைக்காக விசுவாசத்துடன் நோக்கினவர்கள் இப்போது மகிழ்ந்தனர். அவரது ஊழியக்காரர்களுக்குப் பரிசளிப்பதாக அவர் மகிமையில் வருவதை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது நம்பிக்கையில் ஏமாற்றம் உண்டானபோது, இயேசுவைப்பற்றிய பார்வையை இழந்தனர். கல்லறையின் அருகில் மரியாளுடன் “கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை” என்றனர். பிரதான ஆசாரியராகவும் அவர்களது அரசராகவும் விடுதலை வழங்குபவராகவும் விரைவில் தோன்ற இருக்கும் அவரை, இப்பொழுது அவர்கள் மகா பரிசுத்தஸ்தலத்தில் மறுபடியும் கண்டனர். கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவைகளை பரிசுத்தஸ்தலத்திலிருந்து உண்டான ஒளி வெளிச்சமாக்கியது. கர்த்தர் தமது தவறாத தெய்வீக ஏற்பாட்டினால் அவர்களை நடத்தினார் என்பதை அவர்கள் அறிந்தனர். சீடர்களைப் போலவே அவர்களும் அவர்கள் எடுத்துச்சென்ற தூதைப் புரிந்துகொள்ளாமலிருந்தபோதிலும், அது எல்லா வகையிலும் சரியானதாக இருந்தது. அந்தத் தூதை அறிவித்ததினால் அவர்கள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினார். கர்த்தருக்குள் அவர்களது ஊழியம் வீணாக இருக்கவில்லை. அவர்கள் மறுபடியும் ஒரு ஜீவனுள்ள விசுவாசத்திற்குள் பிறந்து, சொல்லிமுடியாததும் முழுவதுமாக மகிமையை உடையதுமான சந்தோஷத்தில் களிகூர்ந்தனர். (1) GCTam 491.1
“இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது:” (தானி. 8:14; வெளி. 14:6) என்கிற இரண்டு தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்து தம்முடைய ஜனங்களின் மீட்பிற்காகவும் துன்மார்க்கரை அழிப்பதற்காகவும் வருவதைக் காட்டாமல், பரலோக மகா பரிசுத்தஸ்தலத்தில் நுட்ப நியாயவிசாரணையில் கிறிஸ்து செய்யும் ஊழியத்தைச் சுட்டிக்காட்டினது. தீர்க்கதரிசனக் காலக்கணக்குகளில் தவறு இல்லை. ஆனால் 2300 நாட்களின் முடிவில் நடைபெற இருந்த நிகழ்ச்சியை அறிவதில் தவறு இருந்தது. அந்தத் தவறின் மூலமாக, விசுவாசிகள் ஏமாற்றத்தை அனுபவித்தனர். ஆனாலும் தீர்க்கதரிசனத்தினால் முன்னுரைக்கப்பட்டிருந்த அனைத்தும், அவர்கள் எதிர்பார்க்க வேண்டியவைகளாயிருந்த வேதவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேறின. அவர்களது நம்பிக்கையின் தோல்வியைப்பற்றி, அவர்கள் புலம்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தத் தூதின் மூலமாக முன்னறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நடந்தது. அது கர்த்தர் அவரது வேலைக்காரர்களுக்குப் பரிசளிக்கும்படி தோன்றுவதற்கு முன்பாக நிறைவேறியாக வேண்டும். (2) GCTam 492.1
அவர்கள் எதிர்பார்த்ததுபோல் கிறிஸ்து பூமிக்கு வராமல், பொருட்பாடங்களின் மூலமாகக் காட்டப்படும்படி பரலோக தேவாலயத்திலுள்ள மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வந்தார். “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்” (தானி. 7:13) என்ற அந்த நேரத்தில் சம்பவிப்பது தானியேல் தீர்க்கதரிசியால் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. (3) GCTam 492.2
“நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”-மல்கியா 3:1. இதோ வருகிறார் என்று இந்த வருகையைப்பற்றி மல்கியா தீர்க்கதரிசியினாலும் முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் அவரது ஆலயத்திற்கு வருவது அவரது ஜனங்களுக்கு எதிர்பாராததாகவும் திடீரென்றுமாக இருந்தது. “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்” (2 தெச. 1:7,8) என்றபடி பூமிக்கு வருவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். (4) GCTam 492.3
ஆனால் ஜனங்கள் தங்களுடைய கர்த்தரைச் சந்திக்க இன்னும் ஆயத்தமாக இல்லை. அவர்களுக்காக இன்னும் நிறைவேற்றப்படவேண்டிய ஒரு ஆயத்தம் என்னும் பணி இருந்தது. பரலோக தேவ ஆலயத்திற்கு அவர்களது மனங்களை நடத்தும் ஒளி கொடுக்கப்படவேண்டியதாக இருந்தது. விசுவாசத்தினால் அவர்கள் தங்களது பிரதான ஆசாரியருடன் ஊழியத்தில் அவரைப் பின்தொடரவேண்டியதாக இருந்தபோது, புதிய கடமைகள் வெளிப்படுத்தப்பட்டாக வேண்டும். வேறொரு எச்சரிப்பு, போதனை சபைக்குக் கொடுக்கப்படவேண்டியதாக இருந்தது. (5) GCTam 493.1
“அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும் படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்” (-மல். 3:2,3) என்று தீர்க்கதரிசி கூறுகிறான். பரலோக பரிசுத்த ஸ்தலத்திலுள்ள கிறிஸ்துவின் பரிந்துபேசுதல் நின்றுவிடும்போது, பரிசுத்தமான ஒரு தேவனின் பார்வையில் நின்றாகவேண்டும். இரத்தம் தெளிக்கப்படுதலினால் பாவத்திலிருந்து தூய்மை அடைந்தவையாகவும் மாறிட வேண்டும். தீமையுடனுள்ள போராட்டத்தில் அவர்கள் தேவனுடைய கிருபையினாலும் தங்களது அக்கரைமிக்க சுயமுயற்சியினாலும் வெற்றியடைந்தவர்களாக இருக்கவேண்டும். நுட்ப நியாய விசாரணை பரலோகத்தில் நடந்துகொண்டிருக்கும்போது, பாவத்திற்காக வருந்துகின்ற விசுவாசிகளின் பாவங்களானது பரிசுத்தஸ்தலத்திலிருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, விலகுதல் என்னும் தூய்மைப்படுத்துதல் என்பதான ஒரு முக்கியமான பணி உள்ளது. வெளி. 14 -ம் அதிகாரத்தில் அந்தப் பணி என்னவென்று மிகத் தெளிவாக நமக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. (6) GCTam 493.2
அந்தப் பணி நிறைவேறும்போது, கிறிஸ்துவின் அடியார்கள் அவரது வருகைக்கு ஆயத்தமாக இருப்பார்கள். “அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்’-மல்3:4. அப்பொழுது கர்த்தர் தமது வருகையின்போது தாம் ஏற்றுக்கொள்ள இருக்கும் சபையானது “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக” இருக்கும் எபே 5:27. “அப்பொழுது அவள் சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல்” இருப்பாள்-உன்னதப்பாட்டு 6:10. (7) GCTam 494.1
கர்த்தர் தமது ஆலயத்திற்கு வருவதைப்பற்றி மட்டுமன்றி, அவரது இரண்டாம் வருகையைப்பற்றியும் அவர் நியாயத்தீர்ப்பை நடத்துவதற்காக வருவதைப்பற்றியும் மல்கியாவும் இவ்விதமாக முன்னுரைக்கின்றான். “நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” -மல். 3:5. இதே காட்சியைப்பற்றிக் குறிப்பிடும்போது, யூதா இவ்விதமாகக் கூறுகிறான். “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்க ளோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” யூதா 14,15. இந்த வருகையும் கர்த்தர் தமது ஆலயத்திற்கு வருவதும் இரு வேறுபட்ட தெளிவான நிகழ்ச்சிகளாகும். (8) GCTam 494.2
தானி. 8:14; 7:13 ல் நமது பிரதான ஆசாரியராகக் கிறிஸ்து பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரிப்பதற்காக மகா பரிசுத்தஸ்தலத்திற்கு வருவது காட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல், மனுஷகுமாரன் நீண்ட ஆயுசுள்ளவர் மட்டுமாக வருவதும் கர்த்தர் தமது ஆலயத்திற்கு வருவதைப்பற்றி மல்கியாவினால் முன்னுரைக்கப்பட்டுள்ளதும், அதே நிகழ்ச்சியை விளக்குபவையாக உள்ளன. கல்யாணத்திற்கு மணவாளன் வருவதாக மத்தேயு 25 -ம் அதிகாரத்திலுள்ள பத்துக் கன்னிகைகளைப் பற்றிய கிறிஸ்துவின் உவமையில் கூறப்பட்டுள்ளதுங்கூட இதையே எடுத்துக்காட்டுகின்றன. (9) GCTam 494.3
இதோ, மணவாளன் வருகிறார் என்னும் அறிவிப்பு 1844 -ம் ஆண்டின் கோடைகாலத்திலும் இலையுதிர்காலத்திலும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது புத்தியுள்ளவர்களும் புத்தியில்லாதவர்களுமாகிய இரு வகுப்பினர் உருவானார்கள். மணவாளனைச் சந்திப்பதற்கு அக்கரையுடன் ஆயத்தம் செய்துகொண்டிருந்து, மகிழ்ச்சியுடன் ஒரு வகுப்பினர் நோக்கிக்கொண்டிருந்தனர். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, உணர்ச்சி களினால் செயல்பட்டு, சத்தியத்தைப்பற்றிய தத்துவ விளக்கத்தினால் திருப்தி அடைந்தவர்களாக இருந்து, ஆனால் தேவனுடைய கிருபை இல்லாத அநாதைகளாக மற்றொரு பிரிவினர் இருந்தனர். அந்த உவமையில் ஆயத்தமாயிருந்தவர்கள் அவருடன் கல்யாண வீட்டிற்குள் சென்றனர். இங்கு காட்சிக்குக் கொண்டுவரப்படும் மணவாளனின் வருகை திருமணத்திற்குமுன் நிகழுகிறது. கிறிஸ்து தமது இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளுவதை இந்தக் கலியாணம் எடுத்துக்காட்டுகிறது. அந்த இராஜ்யத்தின் தலைநகரமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள பரிசுத்த நகரமாகிய எருசலேம் மணவாட்டி— ஆட்டுக்குட்டியானவரின் மனைவி என்று அழைக்கப்படுகிறாள். (10) GCTam 495.1
“நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்”-வெளி. 21:9,10 அப்படியானால் பரிசுத்த நகரம் மணவாட்டியையும், மணவாளனைச் சந்திக்கச்செல்லும் கன்னிகைகள் சபையையும், அடையாளமாகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வெளி.19:9. அவர்கள் விருந்தினர்களாக இருந்திருந்தால், அவர்களை மணவாட்டி என்று எடுத்துக்காட்டுவதாகக் கூறிட இயலாது. தானியேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டுள்ளபடி, கிறிஸ்து பரலோகத்தில் உள்ள நீண்ட ஆயுசுள்ளவரிடமிருந்து கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரீகத்தையும் பெற்றுக்கொள்ளுவார். தானி. 7:14. மணவாளனுக்காக அலங்காரம்செய்யப்பட்ட மணவாட்டியைப் போன்றே அவருடைய இராஜ்யதின் தலைநகரமாகிய புதிய எருசலேமை அவர் பெற்றுக்கொள்ளுவார். (வெளி. 21:2; தானி 7:14). இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டபின், அவர் ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் அவரது மகிமையுடன் அவரது மக்களின் மீட்பிற்காக வருவார். அவர்கள் அவருடைய பந்தியில் போஜபானம் பண்ணும்படி ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருக்கும்படி(லூக்கா 22:30; மத்தேயு 8:11) ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்குகொள்ள வருவார்கள். (10) GCTam 495.2
கி.பி.1844-ம் ஆண்டின் கோடைகாலத்தில் இதோ, மணவாளன் வருகிறார் என்று கொடுக்கப்பட்ட அறிவிப்பு, கர்த்தருடைய விரைவான வருகையை எதிர்பார்க்கும்படி ஆயிரக்கணக்கானவர்களை நடத்தினது. குறிக்கப்பட்ட நேரத்தில், மக்கள் எதிர்பார்த்திருந்தபடி மணவாளன் பூமிக்கு வராமல், அவரது கலியாணத்திற்காக அவருடைய இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்காக, பரலோகத்தில் உள்ள நீண்ட ஆயுசுள்ளவர் இடத்திற்கு வந்தார். ” ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது”-மத்தேயு 25:10. அந்தக் கலியாணத்தில் அவர்கள் நேரடியாக இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் பூமியிலிருக்கும்போது, அது பரலோகத்தில் நடைபெறுகிறது! கிறிஸ்துவின் அடியார்கள் தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் (லூக். 12:36) என்று காத்திருக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர் தேவனுக்கு முன்பாகச் செல்லும் போது, அவர்கள் அவரது ஊழியத்தைப் புரிந்துகொண்டு, விசுவாசத்தினால் அவரைப் பின்பற்றவேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதைத்தான் இவ்விதமான அர்த்தத்தில் அவர்கள் கலியாணத்திற்குள் செல்லுவதாகக் கூறப்பட்டுள்ளது. (11) GCTam 496.1
அந்த உவமையில் தீவட்டிகளுடன் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் உடையவர்களாக இருந்தவர்கள் கலியாணத்திற்குள் சென்றனர். வேதவாக்கியங்களில் உள்ள சத்தியத்தைப்பற்றிய அறிவை உடையவர்களாயிருந்தவர்கள் தேவனுடைய ஆவியையும் கிருபையையும் உடையவர்களாக இருந்து, அவர்களது கசப்பான சோதனைமிக்க இரவில், தெளிவான வெளிச்சத்திற்காக வேதாகமத்தை ஆராய்ந்தனர். இவர்கள் பரலோக பரிசுத்தஸ்தலத்தைப்பற்றிய சத்தியத்தையும், இரட்சகரின் ஊழியத்திலுள்ள மாற்றத்தையும் கண்டு, பரலோக பரிசுத்தஸ்தலத்திலுள்ள அவரது ஊழியத்திற்கு விசுவாசத்தினால் அவரைப் பின்தொடர்ந்தனர். கவியாணத்திற்குள் செல்லுவது என்பது, வேதவாக்கியங்களிலுள்ள சாட்சியின் மூலமாக, அதே சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் மத்தியஸ்த ஊழியத்தின் கடைசிப் பகுதியைச் செய்யும்படிக்கு கிறிஸ்து தேவனுக்கு முன்பாகப் பிரவேசித்து, அதன் முடிவில் இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பின்தொடர்வது ஆகிய அனைத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. (12) GCTam 496.2
மத்தேயு 22-ம் அதிகாரத்திலுள்ள கலியாணத்தில் இதே சாயல் அறிமுகப்படுத்தப்பட்டு, நுட்ப நியாய விசாரணை கலியாணத்திற்கு முன்னர் நடைபெறுவதாகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கலியாணத்திற்கு முன்னர், அனைவரும் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் தோய்த்து வெளுக்கப்பட்ட, கரையற்ற சுபாவமாகிய வஸ்திரமான கலியாண வஸ்திரம் தரித்திருக்கிறார்களா என்பதைக் காண அரசர் வருகிறார். (மத்தேயு 22:11 வெளி. 7:14). கலியாண வஸ்திரம் இல்லாதவனாகக் காணப்பட்டவன் புறம்பாகத் தள்ளப்படுகிறான். ஆனால் சோதனையின்போது கலியாண வஸ்திரம் தரித்திருப்பவர்களாகக் காணப்படும் அனைவரும், தேவனால் அங்கீகரிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்திலும் அவருடைய சிங்காசனத்திலும் அமர்ந்திடத் தகுதி உள்ளவர்களாகக் கணக்கிடப்படுகின்றனர். தேவனுடைய இராஜ்யத்திற்கு ஆயத்தமாக உள்ளவர்கள் யாரென்று முடிவுசெய்திட சுபாவத்தைச் சோதிக்கும் இந்த ஊழியம் பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் நடைபெறும் நுட்ப நியாய விசாரணையின் முடிவில் நிகழும். (13) GCTam 496.3
நுட்ப நியாயவிசாரணையின் பணி முடிவடையும்வரை, யகங்கள் நெடுகிலுமாகத் தங்களைக் கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்களின் காரியங்கள் சோதிக்கப்பட்டு, முடிவுசெய்யப்படும்வரை, முடிவடையாமலிருந்த தவணையின் காலமானது அதன் பின்னர் முடிவடையும். அப்போது இரக்கத்தின் கதவு மூடப்படும். இவ்விதமாக சுருக்கமான ஒரு வார்த்தையில் ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. இரட்சகரின் ஊழியத்தின் கடைசிப்பகுதி வரையில், மனித இரட்சிப்பு என்னும் பெரும் ஊழியமானது நிறைவடையும் காலம் வரையிலும் நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம். (14) GCTam 497.1
நாம் கண்டதுபோல, பரலோக ஆராதனையின் சாயலாக இருந்த, பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்திலுள்ள ஆராதனைகளில் பிரதான ஆசாரியன் பாவநிவாரண நாளில் மகா பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசித்தபோது, முதலாம் பகுதியின் ஊழியம் முடிவடைந்தது. பாவநிவர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும், இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்திசெய்து வெளியே வருமளவும், ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது (லேவி. 16:17) என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். அப்படியே பாவ நிவிர்த்தி செய்யும் ஊழியத்தின் கடைசிப்பகுதியைச் செய்யும்படி கிறிஸ்து மகா பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசித்தார். முதலாம் பகுதியின் அவரது ஊழியத்தை நிறுத்தினார். ஆனால் முதலாம் பகுதியின் ஊழியம் முடிவடைந்தவுடன், இரண்டாம் பகுதியின் ஊழியம் ஆரம்பமாயிற்று. சாயலாயிருந்த ஆராதனையில், பாவநிவாரண நாளில் பிரதான ஆசாரியன் பரிசுத்தஸ்தலத்தைவிட்டு பாவங்களுக்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்ட அனைத்து இஸ்ரவேலர்களுக்காகவும் செய்யப்பட்ட பாவநிவாரண பலியின் இரத்தத்தைப் படைக்க,தேவனுக்கு முன் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தான். அப்படியே கிறிஸ்துவும், நமது பரிந்துபேசுபவராக, தமது ஊழியத்தின் ஒரு பகுதியை நிறைவேற்ற, தமது ஊழியத்தின் மற்றொரு பகுதியில், பாவிகளின் சார்பாக பிதாவின் சமூகத்தில் தமது இரத்தத்துடன் பிரவேசித்து, பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். (15) GCTam 497.2
கி.பி.1844 -ல் இந்தப் பொருளை அட்வெந்துக்கள் அறியாதவர்களாக இருந்தனர். இரட்சகரை எதிர்பார்த்திருந்த நேரம் கடந்து சென்ற பின்னும், அவர்கள் தொடர்ந்து அவரது வருகை சமீபம் என்று நம்பி இருந்தனர். மேலும் ஒரு முக்கியமான நெருக்கடியை அடைந்து விட்டதாகவும், தேவனுக்கு முன்பாக மனிதனின் பரிந்துபேசுபவராகச் செயல்படும் கிறிஸ்துவின் ஊழியம் முடிந்துவிட்டது என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையாகவே கர்த்தர் வானமேகங்களின்மீது வருவதற்குச் சிறிது காலத்திற்குமுன் மனிதனின் தவணையின் காலம் முடிவடையவேண்டும் என்று வேதாகமத்திலிருந்து போதிக்கப்பட வேண்டியதாகக் காணப்பட்டது. மனிதன் இரக்கத்தின் கதவைத் தேடி, அதைத் தட்டி அழும்போது, அது திறக்கப்படமாட்டாது என்னும் காலத்தைக் குறித்த வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டும் சான்றுகளில் காணப்பட்டன. அவர்கள் கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருந்த காலம், ஒருவேளை அவரது வருகைக்கு முன்னர் உடனடியாக ஆரம்பமாகக்கூடிய இந்தக் காலத்தைக் குறித்ததாக இருக்கிறதோ? என்பது அவ்களிடமிருந்த ஒருகேள்வியாக இருந்தது. பக்தியற்றவர்களின் தேவதூஷணமான பரிகாசங்கள் அவரது இரக்கத்தை நிராகரித்தவர்களிடமிருந்து தேவனுடைய ஆவி நீக்கப்பட்டதற்கான மற்றொரு சான்றுபோல் காணப்பட்டபோது, நியாயத்தீர்ப்பு சமீபம் என்னும் எச்சரிப்பைக் கொடுத்து முடித்தபின், உலகத்திற்கான அவர்களது ஊழியம் முடிவடைந்துவிட்டதென்று அவர்கள் உணர்ந்து, பாவிகளின் இரட்சிப்பிற்கான, ஆத்துமாக்களின் மீதிருந்த பாரத்தை அவர்கள் இழந்துவிட்டனர். இவை அனைத்தும், தவணையின் காலம் முடிவடைந்துவிட்டது அல்லது இரக்கத்தின் கதவு மூடப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உறுதிசெய்தது. (16) GCTam 498.1
ஆனால் பரிசுத்தஸ்தலம் என்னும் கேள்விபற்றிய விசாரணையுடன் அதிகத் தெளிவான ஒளி வந்தது. கி.பி.1844 -ல் முடிவடையும் 2300 நாட்கள் மிக முக்கியமான ஒரு நெருக்கடியைக் குறிப்பிடுகிறது என்று அவர்கள் நம்பினது சரியானது என்பதைக் கண்டனர். ஆனால் 1800 ஆண்டுகளாக மனிதனைத் தேவனிடத்திற்கு நடத்துவதற்கான மார்க்கமாகக் காணப்பட்ட நம்பிக்கை, இரக்கம் ஆகியவைகளின் வாசல் அடைக்கப்பட்டுவிட்டது. அதே சமயத்தில் மற்றொரு கதவு திறக்கப்பட்டு, மகா பரிசுத்தஸ்தலத்திலுள்ள கிறிஸ்துவின் ஊழியத்தின் மூலமாக பாவங்களுக்கான மன்னிப்பு மனிதருக்கு அருளப்பட்டது மற்றொன்றிற்கு இடம் கொடுக்கும்படி அவரது ஊழியத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது. பாவிகளின் சார்பில் கிறிஸ்து ஊழியம் செய்யும் பரலோக பரிசுத்தஸ்தலத்தில் திறக்கப்பட்ட ஒரு வாசல் இன்னும் இருந்தது. (17) GCTam 498.2
“பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” (வெளி. 3:7-8) என்று அதே நேரத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் கிறிஸ்தவ சபைக்குப் பொருந்தக்கூடியதாகக் காணப்பட்டன. (18) GCTam 499.1
தங்களுக்காகச் செய்யப்படும் ஊழியத்தைக் காட்சிக்குக் கொண்டுவரும் ஒளியை நிராகரிப்பவர்கள், நன்மையை அடைந்து கொள்ளாதபோது, தங்கள் சார்பாகச் செய்யப்படும் கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியமாகிய மாபெரும் பாவ நிவாரண ஊழியத்தில், விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே நன்மையைப் பெறுவார்கள். கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது, யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒளியை அவர்கள் நிராகரித்து, அவர் உலகத்தின் இரட்சகராக இருக்கிறார் என்பதை நம்ப மறுத்தவர்களால், அவர் மூலமாக மன்னிப்பைப் பெறமுடியவில்லை. தமது மத்தியஸ்த ஊழியத்தினால் உண்டாகக்கூடிய ஆசீர்வாதங்களைத் தமது சீடர்களின்மீது பொழியும்படி பரலோக பரிசுத்த ஸ்தலதிற்குள் தமது சொந்த இரத்தத்துடன் இயேசு பிரவேசித்தபோது, யூதர்கள் தங்களுடைய பயனற்ற பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவதில் தொடரும்படி முழுமையான இருளுக்குள் விடப்பட்டனர். சாயலும் நிழலுமாக இருந்த ஊழியங்கள் முடிவடைந்து இல்லாமலாயின. மனிதன் தேவனை நெருங்க எந்த வாசல் திறக்கப்பட்டதாகக் காணப்பட்டிருந்ததோ, அது அதற்கும் மேலாகத் திறந்து வைக்கப்பட்டு இருக்கவில்லை. பரலோக பரிசுத்தஸ்தலத்தில் நிகழ்ந்த அவரது ஊழியமாகிய எந்த ஒரே வழியினால் மட்டும் அவர் காணப்படக்கூடியவராக இருந்தாரோ, அந்த ஒரே வழியில் அவரைத் தேடுவதற்கு யூதர்கள் மறுத்தனர். ஆகையால் அவர்கள் தேவனுடனுள்ள தொடர்பைக் காணாதவர்களாக இருந்தனர். அந்த வாசல் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருந்தது. மெய்யான பலியாகவும், தேவனுக்கு முன்பாக உள்ள ஒரே மத்தியஸ்தராகவும் கிறஸ்து இருக்கிறார் என்பதைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும் இருந்தனர். எனவே, அவரது மத்தியஸ்த ஊழியத்தினாலுண்டாகும் நன்மைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.(19) GCTam 499.2
விசுவாசமில்லாத யூதர்களின் நிலை, கவனமும் விசுவாசமும் இல்லா கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டிருப்பவர்களின் நிலையைச் சித்தரிக்கிறது. அவர்கள் நமது இரக்கமுள்ள பிரதான ஆசாரியரின் ஊழியத்தைப்பற்றி வேண்டுமென்றே அறியாமை உள்ளவர்களாக இருக்கின்றனர். சாயலயிருந்த ஆராதனையில், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தபோது, அனைத்து இஸ்ரவேலர்களும் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவும், சபையில் இருந்து அறுப்புண்டு போகமலிருக்கவும், ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்து, பக்திவிநயமான விதத்தில் தங்களது ஆத்துமாக்களை தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தவேண்டியது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. சாயலற்றதாக இல்லாத உண்மையான பாவநிவாரண நாளில் உள்ள நமது பிரதான ஆசாரியரின் ஊழியத்தையும், நம்மிடம் அவசியப்படுத்தப்பட்டுள்ள கடமைகள் என்ன என்பதுபற்றியும், நாம் அறிந்துகொள்ளவேண்டியது எவ்வளவு முக்கியமானதாக உள்ளது. (20) GCTam 500.1
தேவன் தமது இரக்கத்தினால் அனுப்பும் எச்சரிக்கைகளை மனிதர் தீமை உண்டாகும் என்கிற பயமில்லாமல் நிராகரிக்கக்கூடாது. நோவாவின் காலத்தில் பரலோகத்திலிருந்து ஒரு தூது இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களது இரட்சிப்பு அந்தத் தூதை அவர்கள் சார்ந்திருந்த விதத்தை அனுசரித்ததாக இருந்தது. அவர்கள் அந்த எச்சரிப்பை நிராகரித்தினால், பாவமுள்ள இடத்திலிருந்து தேவஆவி விலக்கிக்கொள்ளப்படவே, ஜலப்பிரளயத்தினால் அழிந்தனர். ஆபிரகாமின் காலத்தில் குற்றமிக்க சோதோமின்குடிமக்களிடம் பரிந்து பேசுவதிலிருந்து இரக்கம் நின்றுபோனபோது, பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அக்கினியால் லோத்தும், அவனது இரண்டு குமாரத்திகளும் தவிர மற்றனைவரும் பட்சிக்கப்பட்டுப்போனார்கள். அப்படியே கிறிஸ்துவின் நாட்களிலும் நடக்கும். “இதோ உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்” (மத்தேயு 23:38) என்று அந்தத் தலைமுறையில் விசுவாசமில்லாதவர்களாக இருந்த யூதர்களை நோக்கி தேவகுமாரன் அறிவித்தார். “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்” (2 தெச. 2:10 -12) என்று அவர்களைப்பற்றி எல்லையில்லாத வல்லமை அறிவிக்கிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையின் போதனையை நிராகரிக்கும்போது, அவர்கள் நேசிக்கும் வஞ்சகங்களுக்குள் அவர்களை விட்டுவிட்டு, தேவன் தமது ஆவியை விலக்கிக்கொள்ளுகிறார்.(21) GCTam 500.2
ஆனால் கிறிஸ்து இன்னும் மனிதனின் சார்பாகப் பரிந்துபேசிக் கொண்டிருப்பதினால் ஒளியைத் தேடுபவர்களுக்கு அது கொடுக்கப்படும். அவரது வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஆரம்பத்தில் தெரியாமல் போனாலும் பின்னர், வேதவாக்கியங்கள் மூலம் அவர்களது உண்மையான நிலைமை அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. (22) GCTam 501.1
கி.பி.1844-ஐ கடந்துசென்ற காலத்திற்குப் பின்வந்த காலம் அட்வெந்து விசுவாசத்தை தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சோதனையாக இருந்தது. அவர்களது உண்மையான நிலைமையைப் பற்றி அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்தது சம்பந்தமாக அவர்களுக்கு உண்டான ஒரே தெளிவு, மேலே உள்ள பரிசுத்தஸ்தலத்தை நோக்கி, அவர்களது உள்ளங்களை நடத்திய ஒளி ஒன்றே இருந்தது. முந்திய தீர்க்கதரிசன காலக்கணக்குகளின் கணிப்பின்மீதிருந்த தங்களது விசுவாசத்தைச் சிலர் மறுத்து, அட்வெந்து இயக்கத்தில் காணப்பட்டிருந்த பரிசுத்த ஆவியின் வல்லமைமிக்க செல்வாக்கை, மனிதர்களாலும் சாத்தானின் ஏதுகரங்களினாலும் ஆனவை என்றனர். மற்றொரு வகுப்பினர் தங்களுடைய கடந்தகால அனுபவங்களில் கர்த்தர் அவர்களை நடத்தினார் என்பதை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் காத்திருந்து— விழித்திருந்து தேவனுடைய சித்தத்தை அறிவதற்காக ஜெபித்தபோது, அவர்களது பிரதான ஆசாரியர் வேறொரு ஊழியத்தைச் செய்யும் பணியில் பிரவேசித்திருக்கிறார் என்பதைக் கண்டு விசுவாசத்தினால் அவரைப் பின்தொடர்ந்து, சபையின் முடிவான ஊழியத்தைக் காணும்படி அவர்கள் நடத்தப்பட்டனர். முதலாம் இரண்டாம் தூதர்களின் தூதைப்பற்றிய தெளிவான அறிவை உடையவர்களாக இருந்து, வெளி. 14-ம் அதிகாரத்திலுள்ள மூன்றாம் தூதனின் பக்திவிநயமான எச்சரிப்பைப் பெற்றுக்கொள்ளவும் அதை உலகத்திற்குக் கொடுக்கவும் அவர்கள் ஆயத்தமடைந்தனர். (23) GCTam 501.2