மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
21—ஒரு எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டது!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 375—390)
இ ரண்டாம் வருகையைப்பற்றிய செய்தியைக் கொடுத்ததில் வில்லியம் மில்லரும் அவரது சகாக்களும், நியாயத்தீர்ப்பிற்கென்று மனிதர்களை ஆயத்தப்படுத்த எழும்பும் ஒரே நோக்கத்துடன் உழைத்தனர். தங்களை மதச்சார்புடையவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்களை, சபையின் உண்மையான நம்பிக்கைக்காகவும், ஒரு ஆழமான கிறிஸ்தவ அனுபவத்தின் தேவையை உணரவும் எழுப்பும்படி அவர்கள் வகைதேடினர். மனம் மாறாதவர்கள் உடனடியாக மனம் வருந்தி தேவனிடத்திற்கு திரும்பவேண்டிய அவர்களது கடமைக்கு அவர்களை எழுப்பிவிடவும் உழைத்தனர். “மனிதர்களை மதத்தின் ஒரு பிரிவிற்கோ அல்லது கட்சிக்கோ மாற்றுவதற்கு அவர்கள் முயலவில்லை. எனவே, அவர்கள் அனைத்துக் கட்சிக்காரர்களுக்கும், பிரிவினர்களுக்கும் இடையில், அவர்களது நிர்வாக அமைப்பிலும் ஒழுக்கத்திலும் குறுக்கிடாமல் பணியாற்றினர்.” (1) GCTam 433.1
“எனது ஊழியத்திலெல்லாம், இப்போதுள்ள சபைகளிலிருந்து வேறுபட்ட ஒரு சபையை அமைக்கும் விருப்பமோ, அல்லதுஒருவரின் செலவில் வேறொருவருக்கு இலாபத்தை உண்டுபண்ணும் விருப்பமோ, ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை. எல்லோருக்கும் நன்மை உண்டாகவேண்டும் என்று நான் நினைத்தேன். கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய நல்ல நம்பிக்கையில் அனைத்து கிறிஸ்தவர்களும் சந்தோஷப்படுவார்கள் என்று வைத்துக்கொண்டால், நான் பார்க்கிறதுபோல பார்க்கமுடியாவிட்டாலும், இந்தக் கோட்பாட்டைத் தழுவுகிறவர்களை எவ்விதத்திலும் குறைவாக நேசிக்கமாட்டார்கள். இதற்கென்று தனிப்பட்ட கூட்டங்கள் தேவையாக இருக்கும் என்னும் கருத்து ஒருபோதும் எனக்குள் உண்டாகவில்லை. எனது முழு நோக்கமும், ஆத்துமாக்களை தேவனிடம் மனம்மாறச்செய்வதும், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றி உலகத்திற்கு அறிவிப்பதும், தேவனை சமாதானத்துடன் சந்திக்க தகுதிப்படுத்தும் இருதய ஆயத்தம் செய்திட எனது உடன் மனிதர்களைத் தூண்டும் விருப்பமாகவே இருந்தது. எனது ஊழியத்தின் கீழ் மனம்மாறின பெரும்பான்மையினர், இப்போது உள்ள பல்வேறுபட்ட சபைகளில் ஐக்கியப்பட்டிருந்தனர்” என்று மில்லர் கூறினார்.- Bliss,page 328. (2) GCTam 433.2
அவரது ஊழியம் சபைகளை வளர்க்க வழிகோலியபோது, சிறிது காலத்திற்கே அது ஆதரவாகக் கருதப்பட்டிருந்தது. ஆனால் போதகர்களும் மதத்தலைவர்களும், திருவருகையின் கோட்பாட்டிற்கு எதிராக தீர்மானமெடுத்து, அந்த விஷயத்தைப்பற்றிய அனைத்து கிளர்ச்சியையும் அமர்த்த விரும்பினபோது, அவர்கள் அதைப் பிரசங்கமேடையில் இருந்துமட்டும் எதிர்க்காமல், சபை உறுப்பினர்கள் இரண்டாம் வருகையைப் பற்றின சொற்பொழிவைக் கேட்பதற்குச் செல்லும் வாய்ப்பகளையும் மறுத்தனர். அல்லது சபையின் சமூகக் கூட்டங்களில் தங்களது நம்பிக்கையைப்பற்றிப் பேசுவதையுங்கூட மறுத்தனர். இவ்வாறாக, விசுவாசிகள் பெரும் சோதனையும் குழப்பமுமிக்க நிலையில் தாங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் தங்களது சபையை நேசித்தனர். அதிலிருந்து பிரிந்து செல்லுவதை விரும்பவில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையின் சாட்சி அடக்கப்படுவதை அவர்கள் கண்டபோது, தீர்க்கதரிசனங்களை ஆராயும் அவர்களது உரிமை மறுக்கப்பட்டபோது, சபைக்குக் கீழ்ப்படிவதைத் தேவனுக்கு பக்திவிசுவாசமாக இருப்பது தடுக்கிறதை உணர்ந்தனர். தேவனுடைய வார்த்தையின் சாட்சியை மூடிவைத்துவிட வகைதேடினவர்களை, “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமான” கிறிஸ்துவின் சபையைச் சார்ந்தவர்களாக அவர்களால் கருதமுடியவில்லை. எனவே, அவர்களது முந்திய பிணைப்பிலிருந்து பிரிந்துசெல்லுவது நியாயமானது என அவர்கள் தாங்களாகவே உணர்ந்தனர். 1844-ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஏறக்குறைய 50,000 பேர் தங்கள் சபைகளிலிருந்து பின்வாங்கினர். (3) GCTam 434.1
இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் முழவதிலுமிருந்த பெரும்பான்மையான சபைகளில் குறிப்பிடப்பட்ட வெளிப்படையான மாறுதல் காணப்பட்டது. அநேக வருடங்களாக, உலக நடத்தைகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் இசைவான மாற்றம், சீராக ஆனால் நிலையாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அதற்குச்சமமாக உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கையின் சரிவும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த வருடத்தில், அந்த நாட்டிலிருந்த ஏறத்தாழ அனைத்து சபைகளிலும் சடிதியான குறிப்பான சரிவின் சான்றுகள் காணப்பட்டன. அதற்கான காரணத்தை ஒருவராலும் தெரிவிக்க முடியாதென்று காணப்பட்டபோது, அச்சகங்கள் பிரசங்க மேடைகளிலிருந்து இந்த உண்மை விரிவாகக் குறிக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருந்தது. (4) GCTam 434.2
பிலதெல்பியாவிலிருந்த பிரிஸ்பிட்டேரியன் சபைக்கூட்டம் ஒன்றில், பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்த வேதாகம விளக்க நூலின் ஆசிரியராகவும், அந்த நகரத்தின் தலையாய சபைகளில் ஒன்றின் போதகருமாயிருந்த திரு.பார்ன்ஸ் என்பவர்: “தான் இந்த ஊழியத்தில் இருபது வருடங்களாக இருந்திருப்பதாகவும், அவர் நடத்திய கடந்த திருவிருந்து ஆராதனைவரை, அதைப் பெற்றுக்கொள்ளாதவர்களாக சபையில் அதிகமானவர்களும் இருந்தனர். ஆனால் இப்பொழுது எழுப்புதல்கள் இல்லை. மனம் மாறுதல்கள் இல்லை. தங்களை விசுவாசிகள் என அறிவிப்பவர்களில் கிருபையின் வளர்ச்சி காணக்கூடியதாக இல்லை. அவருடைய ஆராய்ச்சிக்கு தங்களுடைய ஆத்தும இரட்சிப்பைப் பற்றி உரையாட ஒருவரும் வருவதில்லை. தொழில்களின் அதிகரிப்போடும் வியாபாரம் உற்பத்தியாளர்களின் பிரகாசமான வாய்ப்புகளோடும் உலகப் பிரகாரமான எண்ணங்கள் அதிகரித்துள்ளன. எல்லாச் சபைகளிலும் இப்படித்தான் உள்ளது” என்று அறிவித்தார். Congregational Journal,May 23,1844(5) GCTam 435.1
அதே வருடம் பிப்ரவரி மாதத்தில் ஓபெர்லின் கல்லூரிப் பேராசிரியரான பின்னே என்பவர்: “பொதுவாக நமது நாட்டிலுள்ள புரொட்டஸ்டாண்டு சபைகள், காலத்தின் சன்மார்க்க சீர்திருத்தத்தில் ஒன்று ஆர்வமில்லாதவையாக அல்லது எதிர்க்கிறவையாக உள்ளன என்கிற உண்மையை நமது மனங்களுக்கு முன் நாம் பெற்றிருக்கிறோம். இதில் ஒரு பகுதி விதிவிலக்கும் இருக்கிறது. இருந்தபோதிலும் பொதுவான உண்மையைத்தவிர வேறுவிதமாக இருப்பதற்கு அவை போதுமானவையாக இல்லை. இணையான வேறொரு உண்மையும் சபைகளில் எழுப்புதலின் செல்வாக்கு, ஏறத்தாழ உலகிலெங்குமே இல்லை என்பதும் இருக்கிறது. ஆவிக்குரிய ஆர்வமின்மை ஏறத்தாழ எங்கும் பரவி, பயங்கரமான விதத்தில் ஆழமாகவும் இருக்கிறது. இப்படித்தான் நாடு முழுவதற்குமான மத அச்சகம் சாட்சிபகருகிறது. மிகவும் பரவலான அளவிற்கு, சபை அங்கத்தினர்கள் நாகரீகத்தின் பக்தர்களாகவும், நாட்டியங்களிலும் விழாக்கொண்டாட்டங்களிலும் களியாட்டக்கூடங்களிலும் பக்தியில்லாதவர்களுடன் கரம்கோர்த்துச் செல்லுபவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் வேதனையாக இந்தக் காரியத்தை நாம் விரிவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. சபைகள் பொதுவாக வருந்தத்தக்கவிதத்தில் சீரழிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்றுகள் பெருகி நம்மீது பாரமாகச் சுமருகின்றது. அவர்கள் கர்த்தரைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். அவர் அவர்களைவிட்டு தம்மை விலக்கிக்கொண்டார்” என்று கூறினார்.(6) GCTam 435.2
Religious Telescope-ன் ஒரு எழுத்தாளர்: “இன்று உள்ளதுபோன்ற ஒரு பொதுச் சரிவை நாம் ஒருபோதும் சாட்சியாகக் கண்டதில்லை. சபை நிச்சயமாகத் துயிலெழுந்து, இந்தத் துன்பத்திற்கான காரணத்தைத் தேடவேண்டும். சீயோனை நேசிக்கும் ஒவ்வொருவரும் அதைத் துன்பமாகப் பார்க்கவேண்டும். உண்மையான மனமாற்றங்கள் எத்தனை சிலதாயும், ஒன்றுக்கொன்று தூரமாயும் இருக்கிறது என்பதையும், ஒப்பிடமுடியாத மனஸ்தாபத்தையும் பாவிகளின் இருதயக்கடினத்தையும், நாம் மனதில் எண்ணிப்பார்க்கும்போது, ‘தேவன் கிருபையாக இருப்பதை மறந்துவிட்டாரா? அல்லது கிருபையின் கதவு அடைக்கப்பட்டதா?’ என்று ஏறத்தாழ நம்மையும் அறியாமலேயே நாம் வியக்கிறோம்” என்று சாட்சிபகர்ந்தார். (7) GCTam 436.1
சபையிலும் காரணமில்லாமல் அப்படிப்பட்ட ஒரு நிலைமை எப்போதும் உண்டாயிருக்கவில்லை. நாடுகள், சபைகள், தனிப்பட்டவர்களின்மீது படியும் ஆவிக்குரிய இருள், ஒத்தாசையாக இருக்கும் தேவ கிருபையை விலக்கிக்கொள்ளும் தேவனின் ஒருதலைப்பட்சமான செயலினால் இல்லாமல், தெய்வீக ஒளியை மனிதர்கள் அவர்களது பங்காக அலட்சியம் செய்வதால் அல்லது நிராகரிப்பதால் உண்டாகிறது. இந்த சத்தியத்தைப்பற்றிய தெளிவான உதாரணம், கிறிஸ்துவின் காலத்திலிருந்த யூதர்களின் வரலாற்றினால் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகின்மீதுள்ள அவர்களது நாட்டத்தினாலும், தேவனையும் அவரது வார்த்தையையும் மறந்ததினாலும், அவர்களது புரிந்துகொள்ளும் தன்மை இருளடைந்தது. அவர்களது இருதயங்கள் பூமிக்குரியதாகவும் சிற்றின்பங்களை நாடுவதாகவும் இருந்தன. இவ்விதமாக அவர்கள் மேசியாவின் வருகையைப்பற்றிய விஷயத்தில் அறியாமை உள்ளவர்களாக இருந்து, அவர்களது அகந்தையினாலும், நம்பிக்கையின்மையினாலும் அவர்கள் மீட்பரை நிராகரித்தனர். அவ்வா றிருந்த பின்னரும், சத்தியத்தைப்பற்றிய அறிவிலிருந்தும், அல்லது இரட்சிப்பின் ஆசீர்வதங்களில் பங்கு பெறுவதிலிருந்தும் யூத இனத்தை அவர் நீக்கவில்லை. ஆனால் சத்தியத்தை நிராகரித்தவர்கள், பரலோக ஈவின்மீதிருந்த வாஞ்சைகள் அனைத்தையும் இழந்தனர். அவர்கள் தங்களி லிருந்த ஒளி இருளாகும்வரை “ஒளியை இருளாகவும் இருளை ஒளியாக வும்” பாவித்தனர். அந்த இருள் எவ்வளவு அடர்த்தியாக இருந்தது. (8) GCTam 436.2
முக்கியமான தெய்வபக்தியின் ஆவி இல்லாதிருந்தும், பக்தியின் தோற்றங்களை மனிதர்கள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பது, சாத்தானின் கொள்கைக்குப் பொருந்துகிறது. யூதர்கள் சுவிசேஷத்தை நிராகரித்தபின், தங்களுடைய பண்டைய மதச்சடங்குகளை அனுசரிப்பதில் வைராக்கியமாகத் தொடர்ந்திருந்தனர். தேவப்பிரசன்னத்தின் வெளிக்காட்டுதல் இப்போது அவர்களுக்குள் இல்லை என்பதை தாங்களாகவே ஒப்புக்கொண்டிருந்தபோதும், தங்களது இனத்தின் தனித்தன்மையை அவர்கள் வைராக்கியமாகப் பாதுகாத்திருந்தனர். மேசியாவின் வருகையின் காலத்தை தானியேலின் தீர்க்கதரிசனம் தவறில்லாமல் சுட்டிக்காட்டியிருந்தது. அவரது மரணத்தைப்பற்றியும் அது நேரடியாக முன்னறிவித்திருந்தது. ஆனால், அதை ஆராய்வதை அவர்கள் அதைரியப்படுத்தி, முடிவில் அந்தக் காலத்தைப்பற்றிக் கணக்கிட முயல்பவர்களின்மீது ரபிமார்கள் ஒரு சாபத்தைக் கூறியிருந்தனர். குருட்டுத்தனத்திலும் பாவத்தைக்குறித்த மனஸ்தாபமின்றியும், இஸ்ரவேல் மக்கள் 1800 ஆண்டுகளாக, இரட்சிப்பின் கிருபைமிக்க ஈவைக்குறித்து அலட்சியத்தோடு, சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களையும்,பரலோகத்திலிருந்து வரும் ஒளியை நிராகரிப்பதன் ஆபத்தைப்பற்றிய பக்கிவிநயமான எச்சரிப்பையும் குறித்த எண்ணமற்றவர்களாகவும் இருந்தனர். (9) GCTam 436.3
காரணம் இருக்கும்போதெல்லாம் அதன் விளைவுகள் பின்தொடரும். கடமையைக்குறித்த மனஉணர்த்துதலை, அது தனது ஆசைகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதற்காக வேண்டுமென்றே அழித்துவிடுபவன், இறுதியில் சத்தியத்திற்கும் தவறுக்கும் இடையிலுள்ள வேற்றுமையைப் பிரித்தறியும் வல்லமையை இழந்துவிடுவான். புரிந்துகொள்ளும்தன்மை இருளடைகிறது, மனச்சாட்சி தழும்பாகிறது, இருதயம் கடினமாகிறது. அந்த ஆத்துமா தேவனிடமிருந்து பிரிந்துசெல்லுகிறது. எங்கு தெய்வீகத்தூது அவமதிக்கப்படுகிறதோ அல்லது அலட்சியப்படுத்தப்படுகிறதோ, அங்கு சபை இருளால் மூடப்பட்டிருக்கும் விசுவாசமும் அன்பும் குளிர்ந்து போகும் விலகிச்செல்லுதலும் பிரிவினைகளும் நுழையும் சபை அங்கத்தினர்கள் தங்கள் விருப்பங்களையும் சக்திகளையும் உலகத்தைத் தேடுவதற்கு அர்ப்பணிப்பர் பாவிகள் தங்களது பாவத்திற்காக வருந்தாமல், கடினமுள்ளவர்களாகிவிடுவர்.(10) GCTam 437.1
தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வேளையை அறிவித்து, அவருக்குப் பயந்து, அவரைத் தொழுதுகொள்ளும்படி அழைக்கும் வெளி.14-லிலுள்ள முதலாம் தூதனின் தூது, தங்களைத் தேவனுடைய மக்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களை, கறைப்படுத்தும் உலகச் செல்வாக்கிலிருந்து பிரிக்கவும், அவர்களுடைய உலகப்பிரகாரமான, பின்னிட்டு விழுந்திருக்கும் உண்மையான நிலையைப் பார்ப்பதற்கு அவர்களை எழுப்புவதற்குமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏற்றுக்கொண்டிருந்தால், தேவனைவிட்டு அவர்களை விலக்கியிருக்கும் தீமைகளை சீர்செய்திருந்திருக்கும் ஒரு எச்சரிப்பை, தேவன் இந்தத் தூதில் சபைக்கு அனுப்பியிருந்தார். பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதைப் பெற்றிருந்தால், கர்த்தருக்கு முன்பாகத் தங்கள் இருதயங்களைத் தாழ்த்தி, அவருடைய சமூகத்தில் நிற்பதற்கான ஒரு ஆயத்தத்தை உண்மையாகத் தேடி இருந்தால், தேவனுடைய ஆவியும் அவரது வல்லமையும் அவர்களுக்கிடையில் வெளிப் பட்டிருக்கும். சபை மீண்டும் ஐக்கியம் விசுவாசம், அன்பு என்று அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்த, “ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” “தேவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 4:32 2:47) என்ற அந்த ஆசீர்வாதமான நிலையை அடைந்திருந்திருக்கும். (11) GCTam 437.2
தங்களைத் தேவனுடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தேவனுடைய வார்த்தையிலிருந்து பிரகாசிக்கும் ஒளியைப் பெற்றுக் கொள்வார்களானால், கிறிஸ்து ஜெபித்த—அப்போஸ்தலர் விவரித்த “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமை” “உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” (எபே. 4:3—5) என்கிற அதே ஐக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். (12) GCTam 438.1
வருகையின் தூதைப் பெற்றுக்கொண்டவர்கள் அனுபவித்த ஆசீர்வாதமிக்க பலன்கள் அப்படிப்பட்டவையாக இருந்தன. “அவர்கள் வேறுபட்ட பல சபைகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களது சபை வேறுபாடுகள் என்னும் தடைகள் தரைமட்டமாயின. ஒன்றையொன்று மோதும் கொள்கைகள் அணுக்களாகச் சிதறிப்போயின. ஆயிரவருட உலக அரசாட்சி என்னும் வேத வாக்கிய ஆதாரமற்ற நம்பிக்கை கைவிடப்பட்டது. இரண்டாம் வருகையைப்பற்றிய தவறான நோக்குகள் சரிசெய்யப்பட்டன. அகந்தையும் உலகோடு இணைந்திருப்பதும் அடித்துச் செல்லப்பட்டன. தவறுகள் சரிசெய்யப்பட்டன. இனிமையான சகோதரத்துவத்திற்குள் இருதயங்கள் பிணைக்கப்பட்டன. அன்பும் சந்தோஷமும் மேலாக ஆட்சி செய்தன. இந்தக்கொள்கை, இதை ஏற்றுக்கொண்ட சிலருக்கு இப்படிச் செய்திருந்தால், அனைவரும் இதை ஏற்றுக்கொண்டிருப்பார்களானால், அத்தனைபேருக்கும் அதையே செய்திருந்திருக்கும்.” (13) GCTam 438.2
ஆனால் பொதுவாக சபைகள் அந்த எச்சரிப்பை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களின் ஊழியக்காரர்கள், இஸ்ரவேல் வீட்டாருக்குக் காவல்காரர்களாக, இயேசுவின் வருகையின் அடையாளத்தை முதலாவதாக அறிந்திருக்கவேண்டும். ஆனால் தீர்க்கதரிசன சாட்சியங்களிலிருந்தாவது அல்லது காலங்களின் அடையாளங்களிலிருந்தாவது அந்த சத்தியத்தை அறிந்துகொள்ள அவர்கள் தவறியிருந்தனர். உலகப்பிரகாரமான நம்பிக்கை களும், மேலான ஆசைகளும் இருதயத்தை நிரப்பினபோது, தேவன்மீதுள்ள அன்பும், அவரது வார்த்தையின்மீதுள்ள விசுவாசமும் குளிர்ந்துவிடவே, வருகையின் கோட்பாடு பிரசங்கிக்கப்பட்டபோது, அது அவர்களது அவநம்பிக்கையையும் தவறான எண்ணத்தையுமே எழுப்பினது. அந்தத் தூது சபை விசுவாசிகளால் பெருமளவிற்குப் பிரசங்கிக்கப்பட்டிருந்தது என்பது, அதற்கு எதிரான வாதமாக கொண்டுவரப்பட்டது. பழங்காலத்தைப் போலவே, தேவனுடைய வார்த்தையின் தெளிவான சாட்சி: “அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?” என்ற பதிலையே சந்தித்தது. தீர்க்கதரிசன காலங்களில் இருந்து கொண்டுவரப் பட்டிருந்த வாதத்தை மறுப்பது என்பது எவ்வளவு கடினமான ஒரு காரியம் என்பதைக் கண்டு, அவைகள் முத்திரிக்கப்பட்டிருக்கின்றன் அவைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டாதவை என்று போதித்து, தீர்க்கதரிசன நூல்களை ஆராய்வதை அநேகர் அதைரியப்படுத்தினர். திரளானவர்கள் அவர்களது போதகர்களை மனதார (மறைமுகமாக?) நம்பி, அந்த எச்சரிப்பைக் கவனிக்க மறுத்துவிட்டனர். மற்றவர்கள் சத்தியத்தைப்பற்றிய உணர்வடைந்திருந்தபோதும், “ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப் படுவோம்” என்ற பயத்தால் அதை அறிக்கை செய்யத் துணியவில்லை. சபையைச் சோதிக்கவும், தூய்மைப்படுத்தவும் தேவன் அனுப்பி இருந்த தூது, எவ்வளவு அதிகமானவர்கள் தங்களுடைய நேசத்தை கிறிஸ்துவின்மீது வைப்பதைவிட, உலகத்தின்மீது நிச்சயமாக வைத்திருந்தனர் என்பதை வெளிக்காட்டியது. உலகத்துடன் அவர்களைக் கட்டியிருந்த பிணைப்புகள் பரலோகத்தை நோக்கிய கவர்ச்சிகளைவிட மிகவும் பலமிக்கதாக இருந்து, உலகஞானத்தின் சத்தத்தைக் கவனிப்பதை தெரிந்துகொண்டு, இருதயத்தை ஆராயும் சத்தியத்தின் தூதைவிட்டுத் திரும்பினர். (14) GCTam 438.3
முதலாம் தூதனின் எச்சரிப்பை மறுத்ததால், அவர்களைத் திரும்ப எடுத்துக்கட்டுவதற்காக, பரலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உபாத்தியை அவர்கள் நிராகரித்தனர். தேவனைவிட்டு அவர்களைப் பிரித்திருந்த தீமைகளை சீர்படுத்தியிருக்கக்கூடிய கிருபையின் தூதனை அவர்கள் அவமரியாதையாக நடத்தி, உலகத்தின் நட்பைத் தேட மிகுந்த ஆர்வத்துடன் திரும்பிச்சென்றனர். 1844-ல் சபைகளில் இருந்த உலகப்பற்று, பின்வாங்கிச்செல்லுதல், ஆவிக்குரிய மரணம் ஆகியவைக்கு காரணம் இங்கிருந்தது. (15) GCTam 439.1
வெளி 14-ம் அதிகாரத்தில் முதலாம் தூதனை “பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன்வேசித்தனமாகிய உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே” என்று அறிவிக்கும் இரண்டாம் தூதன் பின்தொடர்ந்தான். பாபிலோன் என்னும் சொல் பாபேல் என்கிற சொல்லிலிருந்து வந்து, குழப்பத்தைக் குறிக்கிறது. அது பலவிதமான தவறான அமைப்புகளையும் அல்லது மருள் விழுந்த மதத்தையும் சுட்டிக்காட்ட வேதவாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளி. 17-ம் அதிகாரத்தில் பாபிலோன் ஒரு பெண்ணாக வேதாகமத்தில் சபையை அடையாளப்படுத்தும் உருவகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கற்புடைய ஒரு பெண் தூய்மையான சபையையும், இழிவான பெண் மருளவிழுந்த சபையையும் சுட்டிக்காட்டுகிறது. (16) GCTam 439.2
வேதாகமத்தில் கிறிஸ்துவிற்கும் அவரது சபைக்கும் இடையில் உள்ள பரிசுத்தமானதும், நிலையானதுமான உறவு, திருமண ஐக்கியத்தால் குறிப்பிடப்படுகின்றன. பக்திவிநயமான ஒரு உடன்படிக்கையின்மூலமாகக் கர்த்தர் அவரது மக்களைத் தம்முடன் சேர்த்துக்கொண்டார். அவர் அவர்களது தேவனாக இருப்பாரென்று வாக்குத்தத்தம் செய்ய, அவர்கள் அவருடையவர்களாக, அவருடையவர்களாகமட்டுமே இருப்பார்கள் என்று உறுதிமொழி கூறினர். “நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்” (ஓசியா 2:19) என்று அவர் அறிவிக்கிறார். “நான் உங்கள் நாயகர்” (எரே. 3:14) என்று மறுபடியும் அவர் அறிவிக்கிறார். “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்” (2 கொரி. 11:2) என்று கூறும் போது, பவுல் அதே உருவகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். (17) GCTam 440.1
தனது நம்பிக்கையையும் அன்பையும் அவரைவிட்டு விலக அனுமதித்து, உலகப்பொருள்களைப்பற்றிய ஆசையை ஆத்துமாவை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கும் சபையின் உண்மையின்மை, திருமணப் பொருத்தனையை மீறுதலுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. கர்த்தரைவிட்டு விலகிச்சென்ற இஸ்ரவேலின் பாவம் இதே உருவகத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் வெறுத்த தேவனுடைய அதிசயமான அன்பு, இதயத்தைத் தொடும்வண்ணம்: “உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்”-எசே. 16:8. “நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய். உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று ... நீயோ வென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து,”-எசே. 16:13-15... “ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்”—எரே 3:20. “தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப் போல இருக்கிறாய்'‘ (எசே. 16:32) என்று வருணிக்கப்பட்டிருக்கிறது. (18) GCTam 440.2
புதிய ஏற்பாட்டில், தேவனுடைய ஆதரவைவிட உலகத்தின் நட்பைத் தேடும் கிறிஸ்தவர்களைப் பார்த்து, அதே விதமான மொழியில்: “விபசாரரே, விபசாரிகளே, உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக். 4:4) என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார். (19) GCTam 441.1
வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் பாபிலோன் எனப்படும் ஸ்திரீ “இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதை” (வெளி. 17:3) யோவான் கண்டார். “நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம்” (வெளி 17:18) என்றும் பாபிலோனைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அநேக நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ உலகிலிருந்த அரசர்களின்மீது எதேச்சாதிகாரம் செலுத்தியிருந்த வல்லமை ரோமன் கத்தோலிக்க சபையாக உள்ளது. இரத்தாம்பரமும் சிவப்பான நிறமும், பொன்னும் இரத்தினங்களும் முத்துக்களும், ரோமின் சிறப்பையும், அரசர்களுக்கும் மேலான ஆடம்பரத்தையும் தெளிவாகச் சித்திரிக்கிறது. கிறிஸ்துவின் பின்னடியார்களை கொடூரமாக உபத்திரவப்படுத்தினதால் அந்தச் சபையைப்போல வேறு எந்த வல்லமையையும், பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறித்திருந்ததென்று அவ்வளவு உண்மையாக அறிவிக்கமுடியாது. பூமியிலுள்ள ராஜாக்களுடன் தகாத விதத்தில் வேசித்தனம் செய்தாள் என்னும் பாவம் பாபிலோன்மீது சுமத்தப்பட்டுள்ளது. கர்த்தரிடத்திலிருந்து பிரிந்துசென்று, அஞ்ஞான மார்க்கங்களுடன் உறவுகொண்டதினால், யூதரின் சபை ஒரு வேசியாயிற்று. ரோமும் உலக வல்லமைகளின் ஆதரவைத் தேடினதால் அதே விதமாகத் தன்னைக் கறைப்படுத்தி, அதைப்போன்ற பழியைப் பெறுகிறது. (20) GCTam 441.2
பாபிலோன் வேசிகளின் தாயாக இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதன் கோட்பாடுகளையும் பாரம்பரியங்களையும் பிடித்துக்கொண்டு, உலகத்துடன் சட்ட விரோதமான ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளுவதற்காக சத்தியத்தையும் தேவனுடைய அங்கீகாரத்தையும் பலியிடுகிற அதன் உதாரணத்தைப் பின்பற்றும் சபைகள், அதன் குமாரத்திகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும். பாபிலோனின் விழுகையைப்பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்தில் அறிவிக்கப்படும் தூது, ஒரு காலத்தில் தூய்மையாக இருந்து, பின்னர் கறைபட்டவைகளாகிவிட்ட சபைகளுக்குப் பொருந்தியாகவேண்டும். இந்த தூதை நியாயத்தீர்ப்புபற்றிய எச்சரிப்புப் பின்தொடர்வதால், அது கடைசி நாட்களில் கொடுக்கப்படவேண்டும். எனவே, அது ரோமன்கத்தோலிக்க சபையை மட்டும் குறிப்பதாக இருக்காது. ஏனெனில் அந்த சபை நூற்றாண்டுகளாக விழுந்துபோன நிலையில் உள்ளது. அதற்கும் மேலாக, வெளிப்படுத்தின விசேஷம் 18-ம் அதிகாரத்தில், இன்னமும் எதிர்காலத்தில் கொடுக்கப்பட இருக்கும் ஒரு தூதில், தேவனுடைய ஜனங்கள் பாபிலோனைவிட்டு வெளியே வரும்படி அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வேதவாக்கியங்களின்படி, தேவனுடைய மக்களில் அநேகர், இன்னும் பாபிலோனில் இருந்தாகவேண்டும். எந்த மத அமைப்புக்களில் கிறிஸ்துவின் அடியார்களில் பெரும்பகுதியினர் இப்பொழுது காணப்படுகின்றனர்? சந்தேகத்திற்கிடமின்றி அவை புரொட்டஸ்டாண்டு விசுவாசத்தை அறிக்கைபண்ணும் பலவேறுபட்ட சபைகளில்தான். அவைகளின் தோற்றத்தின்போது இந்த சபைகள் தேவனுக்காவும் சத்தியத்திற்காகவும் மேலானவையாக நின்றன. அவரது ஆசீர்வாதங்கள் அவைகளின் மீதிருந்தன. அவநம்பிக்கை உள்ள உலகமுங்கூட, சுவிசேஷத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதைப் பின்தொடர்ந்த நன்மையான பலன்களை அறிக்கை செய்யும்படி நெருக்கி ஏவப்பட்டது. இஸ்ரவேலுக்கான தீர்க்கதரிசியின் தூதில்: “உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” என்றார். ஆனால் இஸ்ரவேலுக்கு சாபமாகவும் அழிவாகவும் இருந்த அதே ஆசையினால் பக்தியில்லாதவர்களின் பழக்கங்களை பிரதிபலித்து, அவர்களின் நட்பை விரும்பினதால், அவர்களும் விழுந்தார்கள். “நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து” (எசே. 16:14,15) என்கிறார்.(21) GCTam 442.1
அநேக புரொட்டஸ்டாண்டு சபைகள் பூமியின் ராஜாக்களோடு ரோம் வைத்திருந்த அநீதியான தொடர்பை பின்பற்றுகின்றன. மதச்சார்பற்ற அரசாங்கங்களுடனும் மற்ற சபைகளுடனும் உள்ள தனது உறவினாலும், உலகத்தின் ஆதரவைத் தேடுவதினாலும், பூமியின் ராஜாக்களுடன் அக்கிரமமான உறவை உடையதாக உள்ளது. தங்களுடைய கோட்பாடுகளை வேதாகமத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த அமைப்புகள் அனைத்தும், மிக அதிகமான ஒன்றையொன்று எதிர்க்கும் மதநம்பிக்கைகளையும் தத்துவ விளக்கங்களையும் உடையவைகளாக, எண்ணிலடங்காத பிரிவுகளாகப் பிரிந்திருப்பதினால், இந்த அமைப்புகள் அனைத்திற்கும் (பாபிலோன்) குழப்பம் என்னும் பெயர் மிகச்சரியாகப் பொருந்தக்கூடியதாக உள்ளது. (22) GCTam 442.2
உலகத்துடன் பாவ உறவு வைத்திருப்பதைத்தவிர, ரோமன்கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்துசென்ற சபைகள் அதனுடைய மற்ற குணங்களையும் கொண்டுள்ளன. (23) GCTam 443.1
“கத்தோலிக்க கிறிஸ்தவனுக்குப் போதனை” என்ற ஒரு ரோமன்கத்தோலிக்க நூல், கீழ்க்காணும் குற்றத்தைச் சாட்டுகிறது. பரிசுத்தவான்கள் சம்பந்தப்பட்ட காரியத்தில், ரோம சபை எப்போதாவது விக்கிரக ஆராதனை என்னும் குற்றத்தை உடையதாக இருந்திருந்தால், அதன் மகளான, பத்து சபையை மரியாளுக்கும் ஒன்றை கிறிஸ்துவிற்கும் பிரதிஷ்டை செய்திருக்கிற இங்கிலாந்து சபையும் அதே குற்றத்தையே உடையதாக இருக்கிறது.-Richard Challoner,The Catholic Christian Instructed,Preface, pages 21,22. (24) GCTam 443.2
மேலும் ஆயிரவருட ஆளுகையைப்பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் ஹாப்கின்ஸ் என்பவர்: “அந்திக் கிறிஸ்துவின் ஆவியும் பழக்கங்களும் ரோமன் கத்தோலிக்க சபையில் மட்டும்தான் அடங்கியிருக்கிறது என்று கருதுவதற்கான காரணம் எதுவும் இல்லை. புரொட்டஸ்டாண்டு சபைகளும் அதிகமான அந்திக் கிறிஸ்துக்களை கொண்டுள்ளன. மேலும், கறைகள், துன்மார்க்கம் ஆகியவைகளில் இருந்து சீர்திருத்தம் அடைவது வெகுதூரத்தில் உள்ளது” என்கிறார். --Samuel Hopkins, Works, vol. 2, p. 328. (25) GCTam 443.3
பிரிஸ்பிட்டேரியன் சபை ரோமிலிருந்து பிரிந்துசென்றதைப்பற்றி டாக்டர் குத்ரீ என்பவர்: “முந்நூறு வருடங்களுக்குமுன், நமது சபை, தன் கொடியில் திறந்த வேதாகமத்துடன், ‘வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்’ என்ற இலட்சியத்தைக் கொண்ட தனது புத்தச்சுருளுடனும் ரோமின் வாசலிலிருந்து வெளியே வந்தது. ஆனால் அவர்கள் பாபிலோனைவிட்டுச் சுத்தமாக முற்றிலுமாக வெளியே வந்துவிட்டார்களா?” என்ற முக்கியமான கேள்வியைக் கேட்கிறார். -Thomas Guthrie,The Gospel in Ezekiel,page 237. (26) GCTam 443.4
“நற்கருணைக் கோட்பாட்டின் மூலமாக, இங்கிலாந்து சபை விழுங்கப்பட்டுவிட்டதுபோல் காணப்படுகிறது. ஆனால் அதன் இசைவற்ற தன்மை தத்துவத் துரோகத்தினால் மிகவும் மோசமாக துளைக்கப்பட்டு உள்ளதாகக் காணப்படுகிறது. நாம் எவர்களைப்பற்றி நல்லவிதமாக எண்ணியிருந்தோமோ, அவர்களனைவரும் ஒருவர்பின் ஒருவராக அடிப்படையான விசுவாசத்திலிருந்து வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். குறைகூறத்தக்க நாத்திகவாதத்தினால் இங்கிலாந்தின் இருதயமானது தேன்கூட்டைப்போல் அரிக்கப் பட்டிருக்கிறதென்று நான் நம்புகிறேன். அது பிரசங்க மேடைக்கும் சென்று, தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்ளும் துணிவுள்ளதாகவும் இருக்கிறது” என்று இங்கிலாந்து சபையைப்பற்றி ஸ்பர்ஜன் கூறுகிறார்.(27) GCTam 444.1
பெரும் மருளவிழுகையின் தொடக்கம் என்ன? சுவிசேஷத்தின் எளிமையிலிருந்து சபை முதலில் விலகிச்சென்றது எப்படி? கிறிஸ்தவ மார்க்கத்தை அஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளுவதற்கு வசதி செய்துகொடுப்பதற்காக, பிற சமயங்களின் பழக்கங்களுடன் இசைந்ததினால் இது நிகழ்ந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் அவருடைய நாளிலேயே: “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது” (2 தெச. 2:7) என்றார். அப்போஸ்தலர்களின் காலத்தில், சபை தூய்மையானதாக இருந்தது. ஆனால் “இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும்பான்மையான சபைகள் ஒரு புது வடிவை ஏற்றுக்கொண்டன. ஆரம்பத்திலிருந்த எளிமை மறைந்துவிட்டது. முதிர்வயதான சீடர்கள் தங்கள் கல்லறைகளில் ஓய்ந்தபோது, உணர்ந்துகொள்ளாதவிதத்தில், அவர்களது பிள்ளைகள் புதிதாக மதம் மாறினவர்களுடன் சேர்ந்துகொண்டு, நோக்கத்திற்குப் புது வடிவம் கொடுத்தனர்.”—Robert Robinson,Ecclesiastical Researches, ch. 6, par. 17, p. 51. மத மாற்றத்தினால் அங்கத்தினர்களைச் சேர்க்க, கிறிஸ்தவ விசுவாசத்தின் உயர்ந்த தரம் தாழ்த்தப்பட்டது. அதன் விளைவாக, “அஞ்ஞான வெள்ளம், அதன் சம்பிரதாயங்கள், பழக்கங்கள், விக்கிரகங்கள் ஆகியவற்றுடன் சபைக்குள் புகுந்தது.”—Gavazzi,Lectures,page 278. மதச்சார்பற்றவர்களின் ஆதரவையும் துணையையும் கிறிஸ்தவ மதம் பெற்றுக்கொண்டபோது, திரளானவர்களால் அது பெயரளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தோற்றத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த அநேகர், தங்கள் நடத்தையில் இரகசியமாக விக்கிரகங்களை ஆராதனை செய்வதில் அஞ்ஞானிகளாகவே இருந்தனர்.—Ibid., page 278. (28) GCTam 444.2
தன்னைப் புரொட்டஸ்டாண்டு என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு சபையிலும் இதே செயல் மறுபடியும் செய்யப்பட்டிருக்கவில்லையா? உண்மையான ஆவியையும் அல்லது சீர்திருத்தத்தையும் கொண்டிருந்த அதன் ஸ்தாபகர்கள் மறைந்தபோது, அவர்களுக்குப் பின்னர் தோன்றினவர்கள் முன்வந்து நோக்கத்திற்குப் (உயரளந) புது வடிவம் கொடுக்கின்றனர். தங்களுடைய முற்பிதாக்களின் மதநம்பிக்கையை குருட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டிருந்து, அவர்கள் அறிந்ததைக் காட்டிலும் அதிகமான எந்த சத்தியத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்து, சீர்திருத்தக்காரர்களின் முன்மாதிரியான தாழ்மை, சுயமறுப்பு, உலகத்தை மறுத்துவிடுதல் ஆகியவைகளிலிருந்து பெரிய அளவில் விலகிச்செல்லுகின்றனர். இவ்வாறாக, முதலில் இருந்த எளிமை மறைகிறது. சபைக்குள் பாய்கிற உலகம் என்கிற வெள்ளம், அதனுடன் அதன் சம்பிரதாயங்களையும், பழக்கங்களையும், விக்கிரகங்களையும் கொண்டுவருகிறது. (29) GCTam 444.3
ஐயோ! கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கிடையில் பேணப்படும் தேவனுக்கு விரோதமான பகையாகிய உலகநேசம் எவ்வளவு பயங்கரமான அளவிற்குப் பரவியிருக்கிறது! கிறிஸ்தவ உலகம் முழுவதிலுமுள்ள பிரபலமான சபைகள் எவ்வளவு அதிகமாக வேதாகமத்தின் தரமாகிய தாழ்மை, சுயமறுப்பு, எளிமை, தெய்வபக்தி ஆகியவைகளில் இருந்து விலகிச்சென்றிருக்கின்றன. “விலைமதிப்பு வாய்ந்த தாலந்தாக இருக்கக்கூடிய பணத்தின் எந்தப் பகுதியையும் அதிக விலையுள்ள ஆடைகளுக்காவும், தேவையற்ற அணிகலன்களுக்காவும் கண்களின் இச்சையைத் திருப்திப்படுத்தவும் வீணாகச் செலவுசெய்துவிடாதீர்கள். அதன் எந்த பகுதியையும், அதிக விலைமிக்க பகட்டான ஆசனங்கள், படங்கள், வண்ணச்சித்திரங்கள் ஆகியவைகளால் உங்கள் வீடுகளை அலங்கரிக்க வீணாகச் செலவுசெய்யாதீர்கள்.” “ஜீவனத்தின் பெருமையைத் திருப்திப்படுத்துவதற்காக, பிறர்முன் நல்லவர்களாகக் காணப்படும்படியாக, அல்லது மனிதர் உங்களைப் புகழவேண்டும் என்பதற்காக எதையும் செய்யாதீர்கள்.” “நீங்கள் நன்றாக இருக்கும்வரை அவர்கள் உங்களைப்பற்றி நல்லவிதமாக பேசுவார்கள். நீங்கள் இரத்தாம்பரத்தையும் மெல்லிய உடைகளையும் அணிந்திருக்கும்வரை, நாள்தோறும் தாராளமாகச் செலவுசெய்யும்வரை, உங்களது சுவையின் உயர்வைக்குறித்தும், தர்ம குணத்தையும், விரும்தோம்பலையும் அநேகர் பாராட்டுவார்கள். ஆனால் அவர்களது பாராட்டலை சம்பாதிக்காதீர்கள் எனக்கு அருமையானவர்களே. மாறாக, தேவனிடத்திலிருந்து வரக்கூடிய மேன்மையில் திருப்தி உடையவர்களாக இருங்கள்” என்று பணத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்துவதைப்பற்றி ஜான் வெஸ்லி கூறினார்.- Wesley,Works,Sermon 50. ஆனால் நமது காலத்திலுள்ள அநேக சபைகளில் அப்படிப்பட்ட போதனைகள் மதிக்கப்படுவதில்லை. (30) GCTam 445.1
மதப்பற்று உள்ளதுபோல் பாசாங்குசெய்யும் தன்மை, உலகில் புகழ்மிக்கதாகிவிட்டது. சமுதாயத்தின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறவும், தங்களுடைய உலகப்பிரகாரமான நன்மைகளை மேற்கொண்டு வளரச்செய்யவும், அதிபதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் ஆகியோர் சபைகளில் சேருகின்றனர். இவ்வாறாக அவர்கள் தங்களது அநீதிமிக்க கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் கிறிஸ்தவம் என்னும் பெயரின்கீழ் மூடிக்கொள்ள வகைதேடுகின்றனர். ஞானமுழுக்கெடுத்த இந்த உலகத்தாரின் செல்வத்தினாலும் செல்வாக்கினாலும், தங்களை வலிமைப்படுத்திக்கொண்டுள்ள பல்வேறுபட்ட சபை அமைப்புக்கள், அதனால் மேலான புகழையும் ஆதரவையும் அடைந்துகொள்ள இன்னும் உயர்ந்த அழைப்புக்களை விடுக்கின்றன. மிகச்சிறந்த, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஆலயங்கள், பிரபலமான சாலைகளில் கட்டப்படுகின்றன. ஆராதனைசெய்ய வருபவர்கள் விலைமதிப்புமிக்க நாகரீகமான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்தவர்களாக வருகின்றனர். அந்த மக்களை மகிழ்விக்கவும் ஈர்த்திடவும் திறமைமிக்க ஒரு ஊழியருக்கு மிக அதிகமான சம்பளம் தரப்படுகிறது. அவரது பிரசங்கங்கள் மக்கள் விரும்புகிற பாவங்களைத் தொடாமல், நாகரீகமிக்க செவிகளுக்கு மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கவேண்டும். இவ்வாறாக, நாகரீகமான பாவிகள் சபை அங்கத்தினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர். தெய்வபக்தி என்னும் பாசாங்கின்கீழ் நாகரீகமான பாவங்கள் மறைக்கப்படுகின்றன. (31) GCTam 446.1
தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களின் உலகத்தைக் குறித்த சுபாவத்தைப்பற்றிய வர்ணனையில், முன்னணியிலுள்ள ஒரு சமயச்சார்பற்ற பத்திரிகை: “உணர்வில்லாமல் சபை காலத்தின் ஆவிக்கு இணங்கி, நவீன தேவகைளுக்கேற்ப தன் ஆராதனையின் வடிவைப் பொருத்தியிருக்கிறது.” “உண்மையாகவே மதத்தைக் கவர்ச்சிமிக்கதாக ஆக்குவதற்கு உதவும் அனைத்தையும், சபை அதன் கருவிகளாகப் பயன்படுத்துகிறது” என்று கூறுகிறது. மெதடிசம் அது இருக்கும் விதத்தைக்குறித்து, நியூயார்க் ஐனெநிநனெநவெ பத்திரிக்கையில் ஒரு எழுத்தாளர்: “பக்தி உள்ளவர்களையும் இல்லாதவர்களையும் பிரிக்கும் கோடு, மங்கிய நிழலாக மறைந்துகொண்டிருக்கிறது. அவர்களது செயல்முறைகளிலும், சந்தோஷ அனுபவங்களிலுமுள்ள அனைத்து வேற்றுமைகளையும் அழிப்பதற்கு, இரு பகுதியிலுமுள்ள வைராக்கியமான மனிதர்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.” “மதத்தின் பிரபல்யம், மக்கள் அதன் கடமைகளை முழுமையாகச் செய்யாமலே, அதன் நன்மைகளை அடைந்துகொள்ளுபவர்களை அதிகமாகப் பெருக்கும்படிக்கு பெரும்பாலும் முனைகிறது” என்கிறார். (32) GCTam 446.2
“தேவனுடைய சபை இன்று உலகத்துடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் அங்கத்தினர்கள் அதனை தெய்வ பக்தியற்றவர்களின் நிலைக்குக் கீழே கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர். நடனங்கள், அரங்குகள், நிர்வாணம், காமவெறியூட்டும் கலை, ஆடம்பரங்கள்,தளர்ந்துபோன சன்மார்க்க நெறிகள்ஆகியவைசபையின் புனிதமான மறைவிற்குள் வர பாதையை அமைத்துக்கொண்டிருக்கின்றன. மேலும், உலகப்பிரகாரமான இந்தத்காரியங்கள் அனைத்திலும் ஒரு திருப்திக்காக கிறிஸ்தவர்கள் லெந்து நாட்களையும், ஈஸ்டரையும் சபை அலங்காரங்களையும் ஆசரித்துக்கொண்டிருக்கின்றனர். இது சாத்தானின் பழைய தந்திரம். யூத சபை அந்தப் பாறையின்மீதுதான் மோதியது. ரோமசபை அதில்தான் நொறுங்கியது. புரொட்டஸ்டாண்டு சபை அதே வீழ்ச்சியை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஹோவார்டு கிராஸ்பி என்பவர் கூறியுள்ளார்.-The Healthy Christian: An Appeal to the Church, pages 141,142. (33) GCTam 447.1
உலகப்பிரகாரமான தன்மை, இன்பங்களைத் தேடுதல் என்னும் அலையில், கிறிஸ்துவிற்காகச் செய்யப்படவேண்டிய சுயமறுப்பு தற்தியாகம் ஆகியவை ஏறத்தாழ முழுவதுமாக இழக்கப்பட்டுள்ளன. “இன்று நமது சபையில் செயலாற்றிக்கொண்டிருக்கும் சில ஆண்களும் பெண்களும் சிறுவர்களாக இருந்தபோதே தியாகம் செய்து கிறிஸ்துவிற்காகக் கொடுக்கவும் எதையாவது செய்யவும் கற்பிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது நிதி தேவையானால்... கொடுப்பதற்கு ஒருவரும் அழைக்கப்படலாகாது! இல்லை இல்லை. ஒரு விசேஷ நிகழ்ச்சியை நடத்துங்கள், கேலி விளையாட்டுகள் நடத்துங்கள், பழங்கால உணவு வகைகள் உள்ள விருந்து நடத்துங்கள் அல்லது உண்பதற்கு எதையாவது செய்யுங்கள் அல்லது மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேடிக்கையாக பொழுதுபோக்காக எதையாவது செய்யுங்கள். அதன் மூலமாகத் தேவைகளைச் சந்தியுங்கள் என்ற நிலை!” (34) GCTam 447.2
விஸ்கன்சின் மாநிலத்தின் ஆளுநரான வாஷ்பர்ன் என்பவர் தனது வருடாந்திரத் தூதில்: சூதாட்டக்காரர்களை உருவாக்கும் பள்ளிகளை நிறுத்த சில சட்டங்கள் தேவையானது போல காணப்படுகிறது. இவைகள் எல்லா இடங்களிலுமுள்ளன. சபையுங்கூட (அறியாமல் அதில் சந்தேகமில்லை) சிலநேரங்களில் பிசாசின் செயலை செய்வதாக காணப்படுகிறது. பரிசளிக்கும் கச்சேரிகள், நிதி சேகரிப்பிற்கான அதிர்ஷ்டச்சீட்டு விற்பனைகள், சமயசம்பந்தமான அல்லது நல்ல காரியங்களுக்காக, ஆனால் அநேக சமயங்களில் மதிப்பில்லாத நோக்கங்களுக்காக, அதிர்ஷ்ட சீட்டுக்கள், பரிசுப்பொட்டலங்கள், ... இவை அனைத்தும் மதிப்பில்லாத காரியத்திற்காக பணம் பெறுவதற்காக. உழைப்பில்லாமல் பணத்தையோ அல்லது உடமையையோ அடைவதுபோன்று மக்களை குறிப்பாக வாலிபர்களை சீரழிப்பது அல்லது போதையேற்றுவது வேறு எதுவும் இருக்காது. இந்த சந்தர்ப்ப நிறுவனங்களில் மரியாதைக்குரிய மனிதர்கள் ஈடுபடுவதும், இந்தப் பணம் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே போகப்போகிறது என்று தங்கள் மனச்சாட்சியை எளிதாக்கிவிடுவதும் ... ஆபத்தான இந்த விளையாட்டுகளின் கிளர்ச்சி நிச்சயமாக உண்டாக்கும் பழக்கங்களில், வாலிபர்கள் அடிக்கடி விழுந்துவிடுவது விசித்திரமல்ல” என்று அறிவித்தார். (35) GCTam 447.3
உலகத்துடன் இசைந்திருக்கும் ஆவி, கிறிஸ்தவ உலகம் முழுவதிலுமுள்ள சபைகளில் எல்லைமீறி நுழைந்துகொண்டிருக்கிறது. ராபர்ட் அட்கின் என்பவர் லண்டனில் பேசிய ஒரு பிரசங்கத்தில்: “மெய்யான நீதிமான்கள் பூமியிலிருந்து குறைந்துபோகிறார்கள். ஆனால் அதை ஒருவரும் மனதில் வைப்பதில்லை. இந்நாளின் எல்லா சபைகளிலும் உள்ள கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், உலகத்தை நேசிப்பவர்களாகவும் உலகத்துடன் இசைந்துள்ளவர்களாகவும், சுக சௌகரியங்களின்மீது நாட்டமுள்ளவர்களாகவும் மரியாதையை வாஞ்சிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். கிறிஸ்துவுடன்கூடப் பாடுகளை அனுபவிக்கும்படி அவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் நிந்திக்கப்படுவதிலிருந்துங்கூடப் பின்வாங்குகின்றனர். மருள விழுகை! மருள விழுகை!! மருள விழுகை!!! என்பது ஒவ்வொரு ஆலயத்தின் முன்னும் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை அறிவார்களானால், அவர்கள் அதை உணர்வார்களானால், நம்பிக்கை இருக்கும். ஆனால் ஐயோ! ‘நாங்கள் ஐசுவரியவான்களென்றும், எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை என்றும்’ அவர்கள் சத்தமிடுகின்றனர்” என்று இங்கிலாந்தில் நிலவியிருந்த ஆவிக்குரிய விழுகையைக் குறித்த ஒரு இருண்ட படத்தை வரைகிறார்.- Second Advent Library,tract No. 39. (36) GCTam 448.1
பாபிலோனுக்கு எதிராகக் கூறப்படும் பெரும் குற்றச்சாட்டு அவள் “தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே” என்பதுதான். அவள் உலகத்திற்குக் கொடுக்கும் இந்தப் போதையூட்டும் பாத்திரம் என்பது, பூமியில் பெரியவர்களாக இருந்தவர்களுடன் சட்டவிரோதமாக அவள் கொண்டிருந்த தொடர்பின் பலனாக, அவள் ஏற்றுக்கொண்ட தவறான கோட்பாடுகளைக் குறிக்கிறது. உலகத்துடனுள்ள அவளது நட்பு அவளது விசுவாசத்தைக் கெடுக்கிறது. அவள் தன் பங்காக, பரிசுத்த எழுத்துக்களின் தெளிவான அறிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளைப் போதிப்பதனால் கறைப்படுத்தும் தன் செல்வாக்கை உலகத்தின்மீது செயல்படுத்துகிறாள்.(37) GCTam 448.2
ரோம சபை வேதாகமத்தை மக்களிடமிருந்து தடைசெய்து, அந்த இடத்தில் மனிதர்கள் அனைவரும் தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியது. சீர்திருத்தத்தின் பணி, தேவனுடைய வார்த்தைகளை மனிதர்களுக்கு மீண்டும் கிடைக்கச்செய்வதே. ஆனால் நமது காலத்திலுள்ள சபைகளில், மனிதர்கள் தங்களுடைய விசுவாசத்தை வேத வாக்கியங்களின்மீது வைப்பதைவிட, சபை நம்பிக்கைகளின்மீதும் போதனைகளின்மீதும் வைக்கும்படி போதிக்கப்படுகின்றனர் என்பது பெரிய உண்மையாக இருக்கவில்லையா? சார்லஸ் பீச்சர் புரொட்டஸ்டாண்டு சபைகளைக்குறித்துப் பேசும்போது: “தாங்கள் வளர்த்துவந்த பரிசுத்தவான்களையும் இரத்தசாட்சிகளையும் வணங்கும் வழக்கத்திற்கு எதிரான கடுமையான வார்த்தையைச்சொல்ல பரிசுத்த தந்தைகள் எவ்விதமாகத் தயங்கியிருந்திருப்பார்களோ, அதே விதமான உணர்வுடன் அவர்கள் சபை நம்பிக்கைக்கு எதிரான எந்தக் கடுமையான வார்த்தையையும் கூறுவதற்குத் தயங்கினர்.... எந்த ஒரு மனிதனும் வேதாகமம் மட்டுமன்றி வேறு புத்தகத்தை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், ஒரு பிரசங்கியாக உட்புக முடியாது என்னும் விதத்தில் புரொட்டஸ்டாண்டு சுவிசேஷ சபைகள் ஒருவருடன் ஒருவர் கரத்தையும், தங்களது சொந்தக் கரங்களையும் கட்டியிருந்தன. ரோம சபை வேதாகமத்தைத் தடைசெய்ததைப்போல, இப்பொழுதுள்ள சபை நம்பிக்கையின் வல்லமை அதைவிட இன்னமும் தந்திரமான விதத்தில் வேதாகமத்தைத் தடைசெய்ய ஆரம்பித்திருக்கிறது என்னும் அறிக்கையில் கற்பனையாக எதுவும் இல்லை” என்று கூறினார்.--Sermon on “The Bible a Sufficient Creed,” delivered at Fort Wayne, Indiana, Feb. 22,1846. (38) GCTam 449.1
விசுவாசமிக்க ஆசிரியர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும்போது, சரியான கோட்பாடுகளை மதப்புரட்டு என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டி, இவ்வாறாக சத்தியத்தைப்பற்றி விசாரிப்பவர்களை திசைதிருப்பிவிடக் கற்றிறிந்த மனிதர்களும் வேதவாக்கியங்களைப் புரிந்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஊழியர்களும் எழுகின்றனர். பாபிலோனின் மதுவினால், நம்பிக்கையற்ற விதத்தில் உலகம் போதையூட்டப்படாமல் இருந்திருந்தால், தேவனுடைய வார்த்தையின் தெளிவான கூர்மையான சத்தியங்களால், திரள்கூட்டமானவர்களின் மனம் உணர்த்தப்பட்டு மதமாற்றம் அடைந்திருப்பார்கள். ஆனால் மதவிசுவாசம் குழப்பமிக்கதாகவும் இசைவற்றதாகவும் தோன்றுவதால், சத்தியமென்று எதை நம்புவது என்று மக்கள் அறியாமலிருக்கிறார்கள். பாவத்திற்காக வருந்தாத நிலையிலிருக்கும் உலகத்தின் பாவம், சபைகளின் வாசற்படிகளில் படுத்துக்கிடக்கிறது! (39) GCTam 449.2
வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்திலுள்ள இரண்டாம் தூதனின் தூது, முதலில் 1844-ம் ஆண்டின் கோடைகாலத்தில் பிரசங்கிக்கப்பட்டது. அது அப்போது, நியாயத்தீர்ப்பின் தூது மிகப் பரந்த அளவிற்கு அறிவிக்கப்பட்டு, பொதுவாக மிக அதிகமாக நிராகரிக்கப்பட்ட, சபைகளின் சரிவு மிக விரைவானதாக இருந்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு சபைகளின்மீது நேரடியாகப் பொருந்தக்கூடியதாக இருந்தது. ஆனால் இரண்டாம் தூதனின் தூது 1844-ல் அதன் முழுமையான நிறைவேறுதலை அடையவில்லை. வருகையின் தூதைப்பற்றிய ஒளியை மறுத்ததின் பலனால், சபைகள் சன்மார்க்க விழுகை அடைந்தன. ஆனால் அந்த விழுகை முழுமையானதாக இருக்கவில்லை. இந்தக்காலத்திற்குரிய விசேஷமான சத்தியங்களை அவர்கள் தொடர்ந்து நிராகரித்தபோது, அவைகள் மேலும் மேலும் கீழ்நோக்கி விழுந்தன. இருந்தபோதிலும், “தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே!” என்று கூற முடியாது. ஏனெனில் அவள் இன்னும் சகல ஜாதிகளையும் குடிக்கச் செய்யவில்லை. உலகத்துடன் இசைந்திருக்கும் ஆவியும், நமது காலத்திற்குரிய சோதிக்கும் சத்தியங்களுக்கு வித்தியாசமற்ற வகையில் இருப்பதுமாகிய ஆவியும் இருந்துகொண்டிருக்கிறது. கிறிஸ்தவ உலகில் புரொட்டஸ்டாண்டு விசுவாசத்தை உடைய சகல சபைகளிலும் இடம் பிடித்துக்கொண்டும் வருகிறது. இரண்டாம் தூதனின் பக்திவிநயமும் பயங்கரமுமான கண்டிப்பிற்கு இந்தச் சபைகள் உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மருளவிழுகையின் செயல் அதன் உச்ச கட்டத்தை இன்னும் அடையவில்லை. (40) GCTam 450.1
கர்த்தருடைய வருகைக்கு முன்பாக சாத்தான், “சகல வல்லமை யோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்.... அநீதி யினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும்” செயலாற்றுவான் என்று வேதாகமம் சொல்லுகிறது. “இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால்… பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்”-2 தெச. 2:9-11. இந்த நிலையை எட்டும்வரை, சபை உலகத்தோடு முற்றிலும் ஒன்றுபடுவது கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் முழுமையாக நிறைவேறாதவரை, பாபிலோனின்விழுகை முடிவடையாது. இந்த மாறுதல் படிப்படியாக முன்னேறக்கூடிய ஒன்று. வெளிப்படுத்தின விசேஷம் 14:8-ன் பூரணமான நிறைவேறுதல் இன்னும் எதிர்காலத்தில் உள்ளது. (41) GCTam 450.2
பாபிலோனை உருவாக்கியிருக்கிற, சபைகளிலே இருக்கிற ஆவிக்குரிய இருள், தேவனை விட்டு விலகிச்செல்லுதல் போன்ற நிலைகளையும் தாண்டி, கிறிஸ்துவின் உண்மையான அடியார்களின் பெரும் கூட்டத்தை அவர்களுடைய சபைகளிலிருந்து கண்டுபிடிக்கப படவேண்டியதாயிருக்கிறது. இவர்களில் அநேகர் இந்தக் காலத்திற்குரிய சிறப்பான சத்தியங்களை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. தங்களுடைய நிகழ்கால நிலைமையில் அதிருப்தி உள்ளவர்களாக இருந்து, தெளிவான வெளிச்சத்திற்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்கள் ஒருசிலர் மட்டுமல்ல. அவர்கள் இணைக்கப்பட்டிருக்கும் சபைகளில் கிறிஸ்துவின் உருவத்தைக்காண அவர்கள் வீணாக நோக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த அமைப்புகள் சத்தியத்தை விட்டுத் தூரம் தூரமாக விலகிச்சென்று, உலகத்துடன் தங்களை நெருக்கமாகப் பிணைத்துக்கொள்ளும்போது, இந்த இரண்டு வகையினருக்கும் இடையில் உள்ள பிளவு மிக அகலமாகி, கடைசியில் பிரிவினையில் முடியும். தேவனை அதிகமாக நேசிப்பவர்கள், “தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும்” இருப்பவர்களுடன் இனிமேலும் இணைந்திருக்க முடியாத காலம் வரும். (42) GCTam 451.1
வெளிப்படுத்தின விசேஷம் 14:6-12-ல் உள்ள முப்பெரும் எச்சரிப்புகளை நிராகரிப்பதின் விளைவாக, இரண்டாம் தூதனால் முன்னுரைக்கப்பட்ட நிலையை சபை முழுமையாக அடையும்போது, இன்னமும் பாபிலோனிலுள்ள தேவனுடைய ஜனங்கள், அவளுடனுள்ள உறவைவிட்டுப் பிரிந்துவரும்படி அழைக்கப்படும் நேரத்தை, வெளி. 18—ம் அதிகாரம் சுட்டிக்காட்டுகிறது. உலகத்திற்கு கொடுக்கப்படவுள்ள தூதுகளில் இதுவே கடைசியானதாக இருந்து, அதன் பணியை நிறைவேற்றி முடிக்கும். ‘சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும்”- (2தெச. 2:12) பொய்யை விசுவாசிக்கத் தக்கதாகக் கொடிய வஞ்சகத்தில் விட்டுவிடப்படுவர். அப்போது சத்திய ஒளி, அதை ஏற்றுக்கொள்ளத் தங்கள் இருதயங்களைத் திறந்திருக்கும் அனைவர்மீதும் பிரகாசிக்கும். அப்பொழுது பாபிலோனிலுள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் “என் ஜனங்களே அவளை விட்டு வெளியே வாருங்கள்”- வெளி. 18:4 என்கிற அழைப்பிற்குச் செவிசாய்ப்பார்கள். (43) GCTam 451.2