மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!
14—பிற்காலத்திய ஆங்கிலேய சீர்திருத்தவாதிகள்!
(மூலநூல் : The Great Controversy, பக்கம்: 245—264)
மூ டப்பட்டிருந்த விவிலியத்தை ஜெர்மன் மக்களுக்கு லுத்தர் திறந்துகொண்டிருந்த நேரத்தில், இங்கிலாந்து நாட்டிற்காக அதே பணியைச் செய்யும்படி திண்டேல் என்பவர் ஆவியானவரால் ஏவப்பட்டார். விக்ளிப்பின் வேதாகமம் இலத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தது, அதில் அநேக பிழைகளிருந்தது. அது ஒருபோதும் அச்சிடப்படவில்லை. கையெழுத்துப் பிரதிகளின் விலை மிக அதிகமாக இருந்ததினால், ஒரு சில செல்வந்தர்களால் மட்டுமே அதை வாங்க முடிந்தது. மேலும், சபை கடுமையாகத் தடைசெய்திருந்ததால், ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்த அளவில்தான் அது பரவியிருந்தது. கி.பி.1516-ல் லுத்தரின் கோட்பாடுகள் தோன்றுவதற்கு ஒரு வருடத்திற்குமுன், எரேஸ்மஸ் என்பவர் கிரேக்க, இலத்தீன் மொழிகளிலான புதிய ஏற்பாட்டை வெளியிட்டிருந்தார். இப்பொழுது முதல் தடவையாக தேவனுடைய வார்த்தை அதன் மூலமொழியில் அச்சிடப்பட்டது. இந்தப் பணியில் முந்தைய பதிப்பிலிருந்த பிழைகள் நீக்கப்பட்டு, சரியான அர்த்தங்கள் மிகத்தெளிவாக அமைக்கப்பட்டிருந்தன. இது, கற்றறிந்தவர்களுக்கு இடையிலிருந்த அநேகருக்கு, சத்தியத்தைப் பற்றிய நல்ல அறிவை உண்டாக்கி, சீர்திருத்தப்பணிக்கு உத்வேகம் கொடுத்தது. ஆனால் சாதாரண மக்களுக்கு இன்னமும் பெருமளவில் தேவனுடைய வார்த்தை தடைசெய்யப்பட்டிருந்தன. தனது நாட்டு மக்களுக்கு வேதாகமத்தைக் கொடுக்கும் விக்ளிஃபின் பணியை திண்டேல் நிறைவுசெய்ய வேண்டியவராக இருந்தார். (1) GCTam 277.1
மிகுந்த கவனமிக்க மாணவரும், சத்தியத்தைத் தேடுபவருமாக இருந்த அவர், எரேஸ்மஸ் என்பவரால் எழுதப்பட்ட கிரேக்க மொழியின் புதிய ஏற்பாட்டிலிருந்து சுவிசேஷத்தைப்பெற்றுக்கொண்டார். சகலவிதமான கோட்பாடுகளும் வேதவாக்கியங்களால் சோதிக்கப்படவேண்டும் என்ற தனது நம்பிக்கைகளை அச்சமின்றிப் பிரசங்கித்தார். சபைதான் வேதாக மத்தைக் கொடுத்தது, அதனால் சபையினால் மட்டுமே அதை விளக்க முடியுமென்ற போப்புமார்க்கவாதிகளின் உரிமைக்குத் திண்டேல்: “கழுகு களுக்கு அவைகளின் இரையைக் காணக் கற்றுக்கொடுத்தவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே தேவன் பசியுள்ள அவரது பிள்ளைகளுக்கு அவருடைய வார்த்தைகளிலிருந்து அவர்களது பிதாவைக் கண்டுகொள்ள கற்றுக்கொடுக்கிறார். தூரமாக வைத்ததுமட்டுமல்லாது, அதனை எங்களிடமிருந்து மறைத்தவர்களும் நீங்கள்தான். அதைப் போதிப்பவர்களை எரிப்பவர்களும் நீங்கள்தான். உங்களால் முடியுமானால் வேதாகமத்தையுங்கூட நீங்கள் எரித்துவிடுவீர்கள்.—D'Aubigne, History of the Reformation in Europe in Sixteenth Century, b. 18, ch. 4. (2) GCTam 277.2
திண்டேலின் பிரசங்கம் மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணியது. அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். ஆகையால் பாதிரிமார்கள் எச்சரிக்கை அடைந்தனர். அவர் தனது களத்தைவிட்டுச்சென்ற உடனே, அவர்களது அச்சுறுத்தல்களினாலும் திரித்துக் கூறுவதினாலும் அவரது பணியை அழிக்க முயன்றனர். அடிக்கடி வெற்றியும்பெற்றனர். “என்ன செய்யவேண்டும்? நான் ஒரு இடத்தில் விதைக்கும்போது, நான் விதைத்து விட்டுச்சென்ற அந்த இடத்தை எதிரி அழித்துப்போடுகிறான். என்னால் எல்லா இடங்களிலும் இருக்கமுடியாது. ஓ! கிறிஸ்தவர்கள் அவர்களது மொழிகளில் பரிசுத்த வேதவாக்கியங்களைச் சொந்தமாக வைத்திருந்தால், இந்தக் குதர்க்கவாதிகளை தாங்களாகவே எதிர்த்து நிற்க இயலுமே. வேதாகமம் இல்லாமல், சாதாரண விசுவாசியை சத்தியத்தில் நிலைவரப்படுத்துவது முடியாத காரியம்” என்று நடுக்கமடைந்தார்.—Ibid., b. 18, ch. 4. (3) GCTam 278.1
இப்பொழுது அவரது மனதை ஒரு புதிய நோக்கம் ஆட்கொண்டது. “யேகோவாவின் ஆலயத்தில் தாவீதின் சங்கீதங்கள் இஸ்ரவேலின் மொழியில் பாடப்பட்டன. அப்படியிருக்க, சுவிசேஷம் நமக்கு நடுவில் இங்கிலாந்தின் மொழியில் பேசாதா?... சபை காலை நேரத்தைவிட மத்தியான வேளையில் வெளிச்சம் குறைவாக பெற்றிருக்க வேண்டுமா?.... கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டைத் தங்களின் தாய்மொழியில் வாசிக்கவேண்டும்” என்றார். சபையிலுள்ள வல்லுநர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள் இசைவில்லாத வர்களானார்கள். வேதாகமத்தினால் மட்டுமே மனிதர்கள் சத்தியத்திற்கு வந்து சேர முடியும். “ஒருவர் இந்தக் கொள்கையைப் பிடித்துக் கொள்ளுகிறார். வேறொருவர் மற்றொன்றை.... இப்பொழுது இந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மற்றவருடன் முரண்படுகின்றனர். அப்படியிருக்க எவர் கூறுவது சரி-எவர் கூறுவது தவறு என்று நம்மால் எப்படி வேறுபடுத்திக் கூறமுடியும்?... எப்படி?... மெய்யாகவே தேவனுடைய வார்த்தையினால் மட்டும்தான்” என்று அவர் கூறினார். —Ibid., b. 18, ch. 4. (4) GCTam 278.2
இதற்குப்பின் சில நாட்களுக்குள் அவருடன் எதிர்வாதத்தில் ஈடுபட்ட கற்றறிந்த கத்தோலிக்க முனைவர் ஒருவர்: “போப்புகள் இல்லாமல் இருப்பதைவிட, தேவனுடைய பிரமாணங்கள் இல்லாமலிருந்தால், அது நமக்கு நன்றாக இருந்திருக்கும்” என்று கூறினார். அதற்கு திண்டேல்: “நான் போப்புவையும் அவரது சட்டங்களையும் அவமதிக்கிறேன். இன்னும் அநேக வருடங்களுக்கு தேவன் எனது ஆயுளை நீட்டிக்கொடுத்தால், வேத வாக்கியங்களை நீங்கள் அறிந்திருப்பதைவிட அதிகமாக அறிய கலப்பையை ஓட்டும் ஒரு சிறுவனுக்குங்கூட கற்பிப்பேன்” என்று பதில் கூறினார். -Anderson, Annals of the English Bible, p. 19. (5) GCTam 279.1
புதிய ஏற்பாட்டு வசனங்களை மக்களுக்கு அவர்களது சொந்த மொழியில் வழங்கவேண்டும் என்று அவர் தனது இதயத்தில் போற்றிக் காத்துவந்த நோக்கமானது இப்பொழுது, உறுதிப்படுத்தப்பட்டதினால், அவர் உடனே அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்தினார். உபத்திரவத்தினால் தனது வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அவர், லண்டன் நகரம் சென்று, அங்கு சில காலம் அவரது பணியை இடையூறின்றித் தொடர்ந்தார். ஆனால் மறுபடியும் போப்புமார்க்கத்தினரின் பலாத்காரம் அவரை ஓடுவதற்கு வற்புறுத்தியது. இங்கிலாந்து முழுவதும் அவருக்கு அடைக்கப்பட்டதுபோல் காணப்படவே, ஜெர்மனியில் அடைக்கலம் தேடத் தீர்மானித்தார். அங்கு அவர் ஆங்கில புதிய ஏற்பாட்டை அச்சிடும் பணியைத் தொடங்கினார். இரண்டு தடவைகள் இந்தப் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் அச்சிடுவது ஒரு நகரத்தில் தடைசெய்யப்பட்ட போது, அவர் வேறொரு நகரத்திற்குச் சென்றார். கடைசியாக சில வருடங்களுக்கு முன் சுவிசேஷத்தைத் தற்காத்து பிரதிநிதிகளின் குழுவின்முன் லுத்தர் பேசியிருந்த அதே வோம்ஸ் நகரைச் சென்றடைந்தார். அந்தப் பழங்காலநகரில் சீர்திருத்தத்தின் நண்பர்கள் அநேகர் இருக்கவே, மேற்கொண்டு எவ்விதமான இடையூறுமின்றி, திண்டேல் தனது பணியைத் தொடர்ந்தார். விரைவில் புதிய ஏற்பாட்டின் மூவாயிரம் பிரதிகள் முடிக்கப்பட்டு, அதேவருடத்தில் அடுத்த பதிப்பும் தொடர்ந்தது. (6) GCTam 279.2
பெரும் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் அவர் தனது பணிகளைத் தொடர்ந்தார். ஆங்கில அதிகாரிகள் அவர்களது துறைமுகங்களை மிகுந்த விழிப்புடன் கண்காணித்திருந்தபோதும், பலவிதமான வழிகளில் தேவனுடைய வார்த்தை லண்டனுக்குள் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து அந்த நாடு முழுவதற்கும் சுற்றுக்கு விடப்பட்டது! போப்புமார்க்கவாதிகள் சத்தியத்தை அமிழ்த்த முயன்றனர். ஆனால் அது வீணாயிற்று. டர்ஹாம் நகரின் பேராயர் ஒருசமயம், வேதாகமங்களை அழித்துவிட்டால், அது இந்தப் பணிக்குப் பெரும் இடையூறாகிவிடும் என்ற எண்ணத்தில், திண்டேலின் நண்பராயிருந்த ஒரு புத்தக வியாபாரியிடமிருந்து, வேதாகம இருப்பு முழுவதையும் விலைக்கு வாங்கினார். ஆனால் அதற்கு நேர் எதிராக இவ்விதமாகக் கிடைத்த பணம் அப்படிக் கிடைக்காமல் இருந்திருந்தால், ஒரு புதிய பதிப்பினை வெளியிட்டிருக்கமுடியாது என்னும்படி, ஒரு புதிய சிறந்த பதிப்பிற்கான பொருட்களை வாங்குவதற்குப் பயன்பட்டது. அதன்பின் திண்டேல் சிறைக்கைதியானபோது. வேதாகமத்தை அச்சிடும் செலவுக்கு எவர்கள் அவருக்கு உதவினார்களோ, அவர்களின் பெயர்களை அறிவித்தால், அவர் விடுதலைசெய்யப்படுவார் என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டது. டர்ஹாம் நகரப் பேராயர்தான் மற்றவர்களையும்விட உதவினார். எப்படியெனில் மீதியாக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அவர் அதிக விலைகொடுத்து வாங்கினதால் தைரியத்துடன் முன்செல்ல அவர் என்னைத் தகுதிப்படுத்தினார் என்று பதில் கூறினார். (7) GCTam 279.3
திண்டேல் அவரது எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு சமயம் அநேக மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இறுதியில் அவர் இரத்தசாட்சியின் மரணத்தினால் தன் விசுவாசத்திற்குச் சாட்சியானார். ஆனால் அவர் ஆயத்தம் செய்த ஆயுதங்கள், நமது நாட்கள்வரை மட்டுமல்ல, யுகங்கள் நெடுகிலும் போரிட மற்ற வீரர்களைத் தகுதிப்படுத்தியது! (8) GCTam 280.1
வேதாகமம் மக்களின் சொந்த மொழியில் வாசிக்கப்படவேண்டும். வேதவசனங்களின் ஆசிரியராக தேவன்தாமே இருக்கிறார். அவரது வேத வசனங்கள் அதன் ஆசிரியரின் பலத்தையும் நித்தியத்துவத்தையும் உடையவையாக இருக்கின்றன. அதற்குக் கட்டுப்படாத அரசனோ, நீதிபதிகளோ, ஆளுநர்களோ, பேரரசனோ இல்லை. குறுக்கு வழிகளைப்பற்றி நாம் எச்சரிக்கை உள்ளவர்களாக இருப்போமாக. தேவனுடைய வார்த்தை நம்மை நேர்பாதையில் நடத்தட்டும். முன்னோர்கள் சென்ற வழிகளில் நாம் செல்லவேண்டியதில்லை. நமது முற்பிதாக்கள் என்ன செய்தார்கள் என்பது நம் சம்பந்தப்பட்டதல்ல. ஆனால் அதைவிட அவர்கள் என்னசெய்திருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம் என்று லாட்டிமர் என்பவர் பிரசங்கப் பீடத்திலிருந்து கூறினார்.-Hugh Latimer, “First Sermon Preached Before King Edward VI.” (9) GCTam 280.2
சத்தியத்தைப் பாதுகாத்து நிற்க, திண்டேலின் விசுவாசமிக்க நண்பர்களான பார்னெசும், பிரித் என்பவரும் எழும்பினர். ரிட்லியும் கிரேன்மரும் பின்சென்றனர். ஆங்கிலேய சீர்திருத்தத்தில் இந்த இரு தலைவர்களும் கற்றவர்களாகவும், அவர்களில் அநேகர் ரோம சமுதாயத்தில் வைராக்கியத்திற்கும் பக்திக்கும் உயர்வாக மதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் போப்பு மார்க்கத்திற்கு எதிராக நின்றது, அதன் தவறுகளை அறிந்துகொண்டதின் விளைவாக இருந்தது. பாபிலோனுடைய இரகசியங்களின் அறிமுகம் அவளுக்கெதிரான சாட்சி பகருவதற்கு அதிக வல்லமையைக் கொடுத்தது. (10) GCTam 280.3
“இங்கிலாந்தில் மிகுந்த ஜாக்கிரதையான பேராயர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் அவரது பெயரைக் கூறவேண்டும் என்று நீங்கள் செவிமடுத்துக் கவனிப்பதை நான் காண்கிறேன். நான் சொல்லுகிறேன். அதுதான் பிசாசு. அவன் தனது மண்டலத்தைவிட்டு ஒருபோதும் வெளியே சென்றதில்லை. அவன் ஓய்ந்திருப்பதை உங்களால் ஒருபோதும் காண இயலாது. உங்களுக்குத் தோன்றும்போது நீங்கள் அவனை அழையுங்கள். அவன் எப்போதும் வீட்டிலேயே இருக்கிறான். எப்போதும் ஆயத்தமாக இருக்கிறான். அவனை அஜாக்கிரதை உள்ளவனாக உங்களால் ஒருபோதும் காண இயலாது என்று நான் உங்களுக்கு நிச்சயமாகச் சொல்லுகிறேன். பேயின் வீடு எங்கே இருக்கிறதோ அங்கு புத்தகங்கள் விலக்கிவைக்கப்பட்டு— மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்கும்; வேதாகமங் கள் நீக்கப்பட்டு ஜெபமாலைகள் உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும்; சுவிசேஷத்தின் வெளிச் சம் நீக்கப்பட்டு மத்தியான வேளையிலும் மெழுகுதிரிகளும், மெழுகு வர்த்திகளும் எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்; கிறிஸ்துவின் சிலுவை ஒழிக்கப்பட்டிருக்கும் உத்தரிக்கும் ஸ்தலத்தின் பணப்பைகள் ஊதிப் பெருத்திருக்கும் வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கப்படாமல், ஏழையையும் வல்லமையற்றவனையும் விலக்கி வைத்து—சிலைகளும் கல்லும் கம்பங்களும் ஆடைஅணிகளினால் உயிருள்ளதுபோல் அலங்கரிக்கப் பட்டிருக்கும் தேவவசனமும் அவரது மிகப் பரிசுத்தமான வார்த்தைகளும் கீழாக்கப்பட்டிருக்கும் பாரம்பரியங்களும் மனித ஆலோசனைக் குழுக்களும் குருடாக்கப்பட்ட போப்புவும் மேலாக்கப்பட்டிருப்பர். களைகளையும் செத்தைகளையும் விதைக்கும் சாத்தானைப்போல, நமது குருமார்கள் நல்ல கோட்பாடுகளாகிய தானியத்தை விதைப்பதில் அக்கரை உள்ளவர்களாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!--Ibid., “Sermon of the Plough.” (11) GCTam 281.1
பெரும் கொள்கையாகிய தவறாத அதிகாரமுடைய வேதவாக்கியங் கள்தான் விசுவாசத்திற்கும் நடைமுறைக்குமான கட்டளைகள் என்பது சீர்திருத்தவாதிகளினால் காக்கப்பட்டு, வால்டென்னியர்கள், விக்ளிப், ஜான் ஹஸ், ஸ்விங்ளி அவர்களுடன் இணைந்தவர்களாலும் காக்கப்பட்டிருந்தது. இது மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மனசாட்சியைக் கட்டுப்படுத்தும் உரிமை, போப்புக்கள், ஆலோசனைக்குழுக்கள், முற்பிதாக்கள், அரசர்கள் ஆகியோருக்கு இல்லை என்கிறது. வேதாகமம் மாத்திரமே அவர்களது அதிகாரியாயிருந்தது. அதனைக்கொண்டே மற்ற எல்லா கொள்கைகளையும் உரிமைகளையும் பரிசோதித்தனர். (12) GCTam 281.2
இந்தப் பரிசுத்த மனிதர்கள் நெருப்பின்மீது உயிர் விட்டபோது, தேவன்மீதும் அவருடைய வார்த்தைமீதும் அவர்கள் வைத்திருந்த விசுவாசம் அவர்களைத் தாங்கினது. தீ நாக்கு தங்களுடைய சத்தத்தை அடக்கும் நேரம் “நல்ல ஆறுதல் கொண்டிரு, தேவனுடைய கிருபையினால் ஒருபோதும் அணைக்கமுடியாத மெழுகுவர்த்தியை இங்கிலாந்தில் இன்றுமுதல் நாம் எரியவைப்போம் என்று நான் நம்புகிறேன்” என்று லாட்டிமர் சக இரத்தசாட்சியைப் பார்த்து உரத்துக் கூறினார்.-Works of Hugh Latimer, vol. 1, p. xiii. (13) GCTam 282.1
ஸ்காட்லாந்தில் கொலம்பா என்பவராலும், அவரது உடன் ஊழியர்களாலும் பரப்பப்பட்ட சத்தியத்தின் விதை முற்றிலுமாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை. ஏனெனில், இங்கிலாந்து சபை, ரோம சபைக்குப் பணிந்திருந்ததினால் நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப்பின்பும், ஸ்காட்லாந்து அதன் சுதந்திரத்தைக் காத்துக்கொண்டது. இருந்தபோதும் பன்னிரண்டாம்நூற்றாண்டில் போப்புமார்க்கம் இங்கு அமைக்கப்பட்டு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு முழுமையாக அதன் அதிகாரம் நடப்பட்டது. வேறு எந்த இடத்திலும் இருள் அந்த அளவிற்கு ஆழமாக இருக்கவில்லை. அப்படியிருந்தும் அந்த இருளைத் துளைக்கத்தக்க ஒளியின் கதிர்கள் நுழைந்து, வரவிருக்கும் நாட்களுக்கு வாக்குத்தத்தம் செய்தது. வேதாகமத்துடனும், விக்ளிப்பின் போதனைகளுடனும் இங்கிலாந்திலிருந்து வந்த லோலார்ட்ஸ் இனத்தவர்கள், சுவிசேஷத்தின் அறிவைப் பாதுகாக்க அதிகமாகச் செயல்படவே, அதன் சாட்சிகளும் இரத்தசாட்சிகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்தனர். (14) GCTam 282.2
பெரும் சீர்திருத்தத்தின் துவக்கத்துடன் லுத்தரின் எழுத்துக்களும் அதன்பின் திண்டேலின் புதிய ஏற்பாடும் வந்தது. கத்தோலிக்க மதத்தலைவர்களால் கவனிக்கப்படாதவர்களாக இந்தத் தூதர்கள், ஒடுக்கப்பட்டிருந்த நான்கு நூற்றாண்டுகளாக ரோமமார்க்கம் செய்திருந்த பணியை தகர்த்து, ஸ்காட்லாந்தில் கிட்டத்தட்ட அணைந்துபோயிருந்த சத்தியத்தின் தீபத்தைத் தூண்டி புத்துயிர் கொடுத்து, மௌனமாக மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் குறுக்காகக் கடந்து சென்றனர். (15) GCTam 282.3
அதன்பின் இரத்தசாட்சிகளின் இரத்தம் இந்த இயக்கத்திற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. போப்புமார்க்கத் தலைவர்கள் அவர்களது நேக்கத்திற்கு அபாயத்தை உண்டுபண்ணும் பயமுறுத்தலால் திடீரென்று விழித்தெழுந்து, ஸ்காட்லாந்தின் மேன்மையும் சிறப்புமிக்கவர்களின் மகன்களில் சிலரை கம்பத்தில் கட்டி எரித்துக்கொல்லும்படி கொண்டுவந்தது. இதன்வழியாக அவர்கள் பிரசங்க மேடைகளையே ஆயத்தம்செய்தார்கள். அதிலிருந்து இரத்தசாட்சிகளாக மரித்துக்கொண்டிருந்தவர்களின் வார்த்தைகள், அந்த நாடு முழுவதும் கேட்கப்பட்டு, ரோமினுடைய நுகத்தை எறிந்து போடும் அழியாத நோக்கத்தால் மக்களின் ஆத்துமாக்களை கிளர்ச்சியுறச்செய்தது. (16) GCTam 283.1
பிறப்பைப்போலவே பண்பிலும் இளவரசர்களாயிருந்த தாழ்மையான சீடர்களைக் கொண்டிருந்த ஹாமில்டன், விஷார்ட் என்கிற இருவரும் தங்களது உயிரைச் சிதைக்கு ஒப்புக்கொடுத்தனர். ஆனால் எரிந்துகொண்டிருந்த விஷார்ட்-ன் நெருப்புக் குவியலிலிருந்து அக்கினி ஜுவாலைகளால் மௌனப்படுத்த முடியாத ஸ்காட்லாந்தில் போப்புமார்க்கத்திற்கு தேவனின் ஏவுதலால் சாவுமணியை அடிக்கக்கூடிய ஒருவர் வந்தார்! (17) GCTam 283.2
ஜான் நாக்ஸ் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தினால் போஷிக்கப்படும்படி, பாரம்பரியங்களிலிருந்தும், தியானத்தால் இறைவனை அறியலாம் என்னும் கொள்கைகளிலிருந்தும் திரும்பினார். விஷார்ட் அவர்களின் போதனை, ரோமின் தோழமையை விட்டுவிலகவும் உபத்திரவப்படுத்தப்பட்ட சீர்திருத்தவாதிகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளவும் அவர் செய்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியது. (18) GCTam 283.3
பிரசங்கியின் ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவரது நண்பர்களால் வற்புறுத்தப்பட்டபோது, அந்தப் பொறுப்பிலிருந்து நடுக்கத்துடன் பின்வாங்கி, பல நாட்கள் தனிமையிலிருந்து தனக்குள் உண்டான வேதனைமிக்க போராட்டங்களுக்குப் பின்னர் இணங்கினார். ஆனால் ஒரு முறை அந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டபின் வளையாத தீர்மானத்துடனும், உயிருடனிருந்தவரை அசைக்கமுடியாத தைரியத்துடனும் அவர் முன்நோக்கிச் சென்றார். உண்மையான இதயத்தை உடைய இந்த மனிதர், மனிதனின் முகத்தைக் கண்டு அஞ்சவில்லை. இரத்தசாட்சியாகும்படி அவரைச் சுற்றி எரிந்த நெருப்பு அவரது வைராக்கியத்தைத் தீவிரப்படுத்தத்தான் செய்தது. அச்சுறுத்தும் கோடாரி தலைக்குமேல் வைக்கப்பட்டிருக்க, சிலை வணக்கத்தை அழித்தொழிக்க முழுமையாக உழைத்தார். (19) GCTam 283.4
அநேக புரொட்டஸ்டாண்டு தலைவர்களின் வைராக்கியத்தை கீழே வீழ்த்திய ஸ்காட்லாந்து அரசியின் முன்பாக நேருக்கு நேராகக் கொண்டுவரப்பட்டபோது, ஜான் நாக்ஸ் அசையாதவராக சத்தியத்திற்குச் சாட்சியாக நின்றார். முகஸ்துதிகளினாலும் பயமுறுத்தல்களினாலும் மேற்கொள்ளப்பட முடியாதவராக இருந்தார். அரசியினால் மதப்புரட்டர் என்று குற்றம்சாட்டப்பட்டார். நாட்டினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒரு மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி மக்களுக்குப் போதித்து, அதனால் இளவரசர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற தேவனுடைய கட்டளையை மீறினார் என்று அரசி அறிவித்தார். நாக்ஸ் உறுதியுடன்: (20) GCTam 283.5
“சரியான மதம் அதன் பிறப்பையோ அல்லது அதிகாரத்தையோ இளவரசர்களிடமிருந்து பெறாமல், தேவனிடமிருந்து மட்டுமே பெற்றிருப் பதுபோல், அவருக்குக் கீழுள்ளவர்களும் தங்களது மதத்தை இளவரசர் களின் விருப்பங்களுக்கு இசைவாக ஏற்படுத்தமுடியாது. ஏனெனில் அநேக நேரங்களில் தேவனின் உண்மையான மதத்தைப்பற்றி மற்றெல்லாரையும்விட இளவரசர்கள்தான் அறிவில்லாதவர்களாயுள்ளனர். ஆபிரகாமின் சந்ததியா ரெல்லாரும் பர்வோனின் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், அரசி அவர்களே, இந்த உலகத்தில் எந்த மதம் இருந்திருக்கமுடியும் என்று உங்களை மன்றாடிக் கேட்கிறேன். அப்போஸ்தலர்கள் இருந்த நாட்கள்முழுவதும் ரோமப்பேரரசனின் மதமாக இருந்திருந்தால், இப்போது பூமியில் எந்த மதம் இருந்திருக்கும் என்ற உங்களை நான் மன்றாடிக் கேட்கிறேன். எனவே, அரசி அவர்களே, குடிமக்கள் அவர்களது இளவரசர்களிடம் மரியாதை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தாலுங்கூட, மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் இளவரசர்களின் மதத்தால் அவர்கள் கட்டப்பட்டில்லை என்பதை நீங்கள் உணரக்கூடும்” என்றார். (21) GCTam 284.1
“நீங்கள் வேதவாக்கியங்களுக்கு ஒரு விதமாக விளக்கம் கொடுக்கிறீர்கள். அவர்கள் (ரோமன் கத்தோலிக்க ஆசிரியர்கள்) வேறொரு விதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். நான் யாரை நம்புவது? யார் நீதிபதியாக இருப்பது?” என்று மேரி அரசி கூறினார். (22) GCTam 284.2
“தமது வார்த்தையின் மூலமாகத் தெளிவாகப் பேசும் தேவனை நீங்கள் நம்பலாம். அந்த வசனம் போதிப்பதற்கும் அதிகமாக நீங்கள் ஒருவரையோ அல்லது மற்றவரையோ நம்பவேண்டியதில்லை. தேவனுடைய வார்த்தை தன்னில்தானே தெளிவானதாக உள்ளது. ஒரு இடத்தில் ஒரு காரியம் கருகலாகத் தோன்றினால், தனக்குள் எதுவும் மாறுபாடில்லாத பரிசுத்தஆவியானவர் வேறொரிடத்தில் அதை விளக்கி இருப்பதால், எந்தச் சந்தேகமும் இருக்காது. ஆனால் பிடிவாதமாக அறியாமையில் இருக்கிறவர்களுக்குக் கருகலாகவே இருக்கும்” என்று பதில் அளித்தார். David Laing, The Collected Works of John Knox, vol. 2, pp. 281, 284. (23) GCTam 284.3
அரச மேன்மையின் செவிகளில் தனது உயிரின் ஆபத்துக்கிடையில், பயமின்றி சீர்திருத்தவாதி உரைத்த சத்தியங்கள் அப்படிப்பட்டதாக இருந்தது. போப்புமார்க்கத்தின் பிடியில் இருந்து ஸ்காட்லாந்து விடுதலையடையும்வரை, ஜெபித்துக்கொண்டும் கர்த்தருடைய யுத்தத்தை நடத்திக்கொண்டும் அசையாத தைரியத்துடன் அவரது நோக்கத்தைக் காத்துக்கொண்டிருந்தார். (24) GCTam 285.1
இங்கிலாந்தில் தேசிய மதமாக அமைக்கப்பட்டிருந்த புரொட்டஸ்டாண்டு மதம் மங்கியது. ஆனால் உபத்திரவம் முற்றிலுமாக நிற்கவில்லை. ரோம சபையின் கோட்பாடுகளில் ஏராளமானவைகள் மறுக்கப்பட்டபோதிலும், அவைகளின் வடிவங்களில் தக்கவைக்கப் பட்டிருந்தவை ஒருசில மட்டுமல்ல. போப்புவின் மேலாண்மை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவரது இடத்தில் அரசன் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டான். சுவிசேஷத்தின் தூய்மையிலிருந்தும் எளிமையிலிருந்தும் சபை ஆராதனை ஒழுங்கு மிகத் தூரமாக விரிவாக விலகிச்சென்றிருந்தது. சமயச் சகிப்புத்தன்மை என்னும் பெரும் கொள்கையானது இன்னமும் புரிந்துகொள்ளப்படாததாகவே இருந்தது. மதவிரோதத்திற்கு எதிராக ரோம சபை செயலாற்றியிருந்த பயங்கரமான கொடுமைகள் புரொட்டஸ்டாண்டு அதிபதிகளால் மிக அபூர்வமாகவே செயல்படுத்தப்பட்டிருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் அவனது மனசாட்சி கூறும்வண்ணமாக தேவனைத் தொழுதுகொள்ளலாம் என்னும் மனிதனின் உரிமையானது அங்கீகரிக்கப்படாமலிருந்தது. அமைக்கப்பட்டுவிட்ட சபையினால் கொடுக்கப்படும் கோட்பாடுகளையும், தொழுகை வடிவங்களையும் அனைவரும் பின்பற்றியாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பட்டிருந்தனர். ஒப்புக்கொள்ளாதவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ உபத்திரவத்தை அனுபவித்திருந்தனர். (25) GCTam 285.2
பதினேழாம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான போதகர்கள் அவர்களது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். கொடிய அபராதங்கள் சிறைவாசம், சபைக்குப் புறம்பாக்கப்படுதல் ஆகிய வேதனைமிக்க தண்டனைகளுடன் சபையால் அனுமதிக்கப்பட்டிருந்தவை தவிர, மற்ற எந்த மதக்கூட்டத்திலும் மக்கள் பங்குகொள்ளுவதும் தடைசெய்யப்பட்டிருந்தது. தேவனை ஆராதிப்பதற்காகக் கூடுவதைத் தவிர்க்க இயலாதவர்களாக இருந்த விசுவாசமிக்க ஆத்துமாக்கள் குறுகிய இருண்ட சந்துகளிலும் பரண்களிலும் சில பருவகாலங்களில் நடு இரவில் காடுகளிலுங்கூட தொழுதிடும் நிலைக்காளாயினர். தேவனுடைய சொந்த ஆலயமாயிருந்த அடைக்கலம்தரும் காடுகளின் நடுவில் உபத்திரவப்படுத்தப்பட்டு சிதறிப்போன தேவனுடைய பிள்ளைகள், ஜெபத்திலும் துதியிலும் தங்கள் ஆத்துமாக்களை ஊற்றிவிடக் கூடினார்கள். இவ்விதமான எல்லா முன்னெச்சரிக்கைகளுக்குப் பின்னுங்கூட, அநேகர் தங்களது விசுவாசத்திற்காகப் பாடுகளைச் சகித்தனர். சிறைகள் நிரம்பின. குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. அநேகர் அயல் நாடுகளுக்குக் கடத்தப்பட்டனர். அப்படியிருந்தும் தேவன் அவரது ஜனங்களுடன் இருக்கவே, அவர்களது சாட்சியை உபத்திரவத்தினால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த நாட்டின் பெரும்கோட்டையும் மகிமையுமா யிருக்கும்படியான சமூக சமய சுதந்திரத்திற்கான அஸ்திவாரத்தை அவர்கள் அங்கு போட்டனர். (26) GCTam 285.3
மறுபடியும் அப்போஸ்தலர்களின் காலத்தைப்போல், உபத்திரவமானது சுவிசேஷம் முன்செல்ல வகைசெய்தது. தீயவர்களும் பெரும் குற்றவாளிகளும் நிரம்பிய ஒரு வெறுக்கப்படத்தக்க நிலவறையில் ஜான் பனியன் பரலோகக் காற்றைச் சுவாசித்து, அங்கு மிகவும் ஆச்சரியமான உருவகமாகிய “பரதேசியின் மோட்சப் பிரயாணம்” என்னும் காவியமாகிய, அழிவின் பூமியிலிருந்து வானவர்களின் நகரத்திற்கான பயணம்பற்றி எழுதினார். பெட்போர்ட் சிறையிலிருந்த அந்தக்குரல், இருநூறு ஆண்டுகளுக்கு அதிர்ச்சிதரும் வல்லமையுடன் மனிதர்களின் இதயங்களில் பேசியது. “பரதேசியின் மோட்சப் பிரயாணம்”, “பாவிகளில் பிரதானமானவனுக்கு அருளப்பட்ட ஏராளமான கிருபை” என்னும் நூல்கள், அநேகரின் பாதங்களுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் காட்டியது. (27) GCTam 286.1
திறமையிலும் கல்வியிலும் அனுபவம் மிக்கவர்களாக இருந்த பாக்ஸ்டர், பிளேவெல், அலினி ஆகியோரும் மற்ற அநேகரும் பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகத் துணிவுள்ளவர்களாக நின்றனர். இந்த உலகத்தின் அதிபதிகளால் தடைசெய்யப்பட்டு, சட்டவிரோதிகளாக எண்ணப்பட்ட இந்த மனிதர்களால் நிறைவேற்றப்பட்ட பணிகள் ஒருபோதும் அழியாது! பிளேவெல் அவர்களின் “ஜீவனின் ஊற்று”, “கிருபையின் மார்க்கம்” என்னும் நூல்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தங்களது ஆத்துமாக்களைக் கிறிஸ்துவிற்கு ஒப்புவித்துக் காத்துக்கொள்ளுவது எப்படி என்று கற்றுக்கொடுத்தது. பாக்ஸ்டர் எழுதிய “சீர்திருந்திய போதகர்” என்னும் நூல் தேவனுடைய ஊழியத்தில் எழுப்புதலை விரும்பிய அநேகருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. அவர் எழுதிய “பரிசுத்தவான்களின் நித்திய இளைப்பாறுதல்” என்னும் நூல் தேவனுடைய ஜனங்களை ஒரு இளைப்பாறுதலின் காலத்திற்கு நடத்துவதாக இருந்தது. (28) GCTam 286.2
நூறு வருடங்களுக்குப் பின் ஆவிக்குரிய பெரும் இருள் சூழ்ந்திருந்த ஒரு நாளில் ஒயிட்பீல்ட் என்பவரும் வெஸ்லியும் தேவனுக் கென்று ஒளிவீசுபவர்களாகத் தோன்றினர். இங்கிலாந்து நாட்டுமக்கள் அமைக்கப்பட்டிருந்தசபையின்ஆளுகையின்கீழ், அஞ்ஞானமார்க்கத்திலிருந்து வேறுபடுத்திப்பார்க்கமுடியாத சமய வீழ்ச்சியிலிருந்தனர். இயற்கையின் மதம் என்பது வேத மாணவர்களுக்குப் பிடித்தமான பாடமாக இருந்து, அவர்களது இறையியல் கல்வியில் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. மேல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பக்தியைப்பற்றி உறுமி, அதை மதவெறி என அழைத்து, அதற்கும்மேலாக தாங்கள் இருப்பதாக எண்ணி, தங்களைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். கீழ் வகுப்பைச் சார்ந்தவர்களோ பெரிதும் அறியாமையில் இருந்து, தீயபழக்கங்களுக்கு விட்டுவிடப்பட்டிருந்தனர். சபையோ விழுந்துபோன சத்தியத்தை எடுத்து நிறுத்தித் தாங்குவதற்கு தைரியமும் விசுவாசமும் இல்லாததாக இருந்தது. (29) GCTam 286.3
லுத்தர் போதித்த “விசுவாசத்தினால் உண்டாகும் நீதி” என்னும் மிகத்தெளிவான மாபெரும் கோட்பாடு மக்கள் பார்வையிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துபோய், இரட்சிப்பிற்காக நற்செயல்களின்மீது நம்பிக்கைவைத்தல் என்ற ரோமன் கத்தோலிக்கக் கொள்கை அந்த இடத்தைப் பற்றிக்கொண்டது. ஒயிட்பீல்ட், வெஸ்லி ஆகியோர் அமைக்கப்பட்டிருந்த சபையின் அங்கத்தினர்களாக இருந்து, தேவனுடைய ஆதரவை உண்மையாகத் தேடி, தூய்மையான ஒரு வாழ்க்கையின் மூலமாகவும் சமயச் சடங்குகளைக் கடைபிடிப்பதன் மூலமாகவும் இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருந்தனர். (30) GCTam 287.1
ஒரு சமயம் சார்லஸ் வெஸ்லி என்பவர் நோய்வாய்ப்பட்டிருந்து, மரணம் அவரைச் சமீபிப்பதுபோல் தோன்றிய சமயத்தில் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு அவர் எந்த நம்பிக்கையைச் சார்ந்திருக்கிறார் என்று கேட்கப்பட்டது. “தேவனைச் சேவிக்க நான் எனது மிகச் சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன்” என்று பதில் தந்தார். கேள்வியைக் கேட்ட நண்பருக்கு கொடுக்கப்பட்ட இந்த பதிலினால் முழுமனநிறைவு கிடைக்கவில்லை என்று தோன்றியபோது, “என்ன? எனது முயற்சிகள் நம்பிக்கைக்கு போதுமானவையாக இல்லையா? எனது முயற்சிகளை அவர் திருடிக்கொள்வாரா? நம்புவதற்கு வேறு ஒன்றுமே எனக்கில்லை” என்றார்.- துழா ெறூாவைநாநயனஇ டுகைந ழக ஊாயசடநள றுநள்டநல்இயபந 102. பாவநிவாரணத்தை மறைத்து, கிறிஸ்துவின் மகிமையை அவரிடமிருந்து கொள்ளையிட்டு, மனிதர்களின் மனங்களை இரட்சிப்பின் ஒரே நம்பிக்கையான சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரின் இரத்தத்தைவிட்டு திருப்பினதால், சபையின்மீது படிந்த இருள் அதிக அடர்த்தியாயிருந்தது என்றார். (31) GCTam 287.2
உண்மையான மதம் இதயத்தில் இருக்கிறது. தேவப்பிரமாணம் எண்ணங்களில் இருப்பதைப்போலவே வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் விரிவடைகிறது என்பதைக் காணும்படி வெஸ்லியும் அவரைச் சார்ந்தவர்களும் நடத்தப்பட்டனர். வெளிப்படையான சுபாவத்தைப்போலவே, இதயத்திலும் பரிசுத்தம் அவசியம் என்பதைப்பற்றிய தெளிவை உணர்ந்து, ஒரு புதிய வாழ்வைத் தேடி, அவர்கள் ஆர்வத்துடன் புறப்பட்டனர். மிகுந்த அக்கரையும் ஜெபமுமிக்க முயற்சியினால் இயல்பான இதயத்திலுள்ள தீமையை அமர்த்த முயன்றனர். அவர்கள் விரும்பியதை தேவனுடைய தயவைப்பெறும் பரிசுத்தத்தை அடைய எவைகளைச் செய்யவேண்டும் என எண்ணினார்களோ, அந்தச் செயல்களை மிகவும் சரியாகச் செய்து, சுயமறுப்பு, உதாரத்துவம், தாழ்மை ஆகியவை மிகுந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் தேடிய இலக்கை அவர்களால் அடையமுடியவில்லை. பாவத்தினால் உண்டாகும் பழியிலிருந்து விடுதலை பெறவும், அதன் வல்லமையை உடைக்கவும் அவர்கள் எடுத்த முயற்சிகள் வீணானவையாக இருந்தன. “மனிதன் எப்படி தேவன்முன் நீதிமானாயிருக்க முடியும்” என்று எர்பார்டிலிருந்த தன் அறையில் லுத்தர் அனுபவித்த அதே போராட்டம்தான் அவரது ஆத்துமாவைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது, (32) GCTam 287.3
புரொட்டஸ்டாண்டுமார்க்கபீடத்தின்மீதிருந்து சமீபகாலத்தில் அணைந்து போன தெய்வீக சத்தியமாகிய நெருப்பு, பொஹிமியக் கிறிஸ்தவர்களால் மீண்டும் பிற்காலங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த பண்டைய தீவட்டி, எரியவைக்கப்படவேண்டியதாக இருந்தது. சீர்திருத்தத் திற்குப்பின் ரோமன் கத்தோலிக்கப் பெருங்கூட்டத்தினால், பொஹிமியாவிலிருந்த புரொட்டஸ்டாண்டுமார்க்கம், காலின்கீழ் மிதிக்கப் பட்டது. சத்தியத்தை மறுதலிக்க மறுத்த அனைவரும் ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களில் சிலர் சாக்சோனியில் அடைக்கலம் கண்டு, பழைய விசுவாசத்தை அங்கு பராமரித்தனர். இந்த கிறிஸ்தவ பின்சந்ததியினரின் வழியாகத்தான் வெஸ்லிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒளி வந்தது. (33) GCTam 288.1
ஜானும், சார்லஸ் வெஸ்லியும் தேவனுடைய ஊழியத்திற்கென்று அபிஷேகம் செய்யப்பட்டபின்னர் ஊழியத்தினிமித்தம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டனர். மொரேவியன்களின் ஒரு கூட்டத்தினர் அவர்கள் சென்ற கப்பலில் இருந்தனர். அவர்களது பயணத்தில் பெரும்புயல் உண்டாகி, ஜானும் வெஸ்லியும் மரணத்திற்கு நேராக முகமுகமாகக் கொண்டுவரப்பட்டபோது, தேவனோடுள்ள சமாதானத்தின் நிச்சயம் தங்களுக்கு இல்லை என்று உணர்ந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக, அவர்களுக்கு அந்நியமாயிருந்த அமைதியையும் நம்பிக்கையையும் ஜெர்மானியர்கள் வெளிக்காட்டினர். (34) GCTam 288.2
“அவர்களது அக்கரையுள்ள சுபாவத்தை நான் மிகவும் முன்னதாகவே கவனித்தேன். ஆங்கிலேயர்களில் ஒருவரும் செய்ய விரும்பாத தாழ்மையான சேவையை, அவர்கள் மற்ற பயணிகளுக்குச் செய்து, அகந்தைமிக்க தங்களது இதயங்களுக்கு இது நன்மையாக உள்ளது என்றும், அவர்களை நேசிக்கும் மீட்பர் அவர்களுக்காக அதிகமாகச் சேவை செய்திருக்கிறார் என்றும் கூறி, தங்களது சேவைக்குச் சம்பளம் வாங்காமல் இருந்தது, அவர்களது தாழ்மைக்கு அவர்கள் பகர்ந்த சாட்சியாக இருந்தது. எவ்வித காயமும் நீக்கமுடியாத அவர்களுடைய தாழ்மையைக் காட்டும் வாய்ப்பு நாள்தோறும் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. அவர்கள் தள்ளப்பட்டாலும் அடிக்கப்பட்டாலும் அல்லது கீழே எறியப்பட்டாலும், மறுபடியும் எழுந்துசென்றார்கள். என்றாலும் அவர்களது வாயிலிருந்து எவ்வித குற்றச்சாட்டும் உண்டாகவில்லை. இப்பொழுது பயத்தின் ஆவி, அகந்தை, கோபம், பழிவாங்குதல் ஆகியவைகளிலிருந்தும் விடுதலை யடைந்துவிட்டனரா என்பதைச் சோதிக்கும் ஒரு வாய்ப்பு உண்டானது. அவர்கள் தங்களது ஆராதனையை ஆரம்பித்து, தாவீதின் சங்கீதத்தைப் பாடினபோது கடல் கொந்தளித்து, கப்பல் பாய்மரத்துடன் உடைந்து, கப்பலின் தளங்களுக்கிடையில் தண்ணீர் வேகமாக நுழைந்து, பெரும்ஆழம் அதை விழுங்கிவிட்டதுபோல காணப்பட்டது. ஆங்கிலேயர் களுக்கிடையில் பயங்கரமான அலறுதல் உண்டானது. ஜெர்மானியர்கள் அமைதியுடன் பாடிக்கொண்டிருந்தனர். நீங்கள் பயப்படவில்லையா? என்று அவர்களில் ஒருவரைக் கேட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்படி ஒன்றும் இல்லை என்று அவர் பதில் கூறினார். உங்களுடைய பெண்களும் சிறுவர்களும் பயப்படவில்லையா? என்றும் நான் கேட்டேன். இல்லை. எங்களது பெண்களும் சிறுவர்களும் சாவதற்குப் பயப்படுவதில்லை என்று அமைதியாக கூறினார். -Whitehead, Life of Charles Wesley, page 10.(35) GCTam 288.3
சாவன்னா என்னுமிடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபின், அந்த மொரேவியன்களுடன் வெஸ்லி சற்று நேரம் கப்பலில் தங்கியிருந்தார். அவர்களது கிறிஸ்தவ சுபாவத்தைப்பற்றி அவர் மிகவும் ஆழமாக உணர்த்தப்பட்டார். இங்கிலாந்து சபையின் உயிரற்ற சம்பிரதாயமான தங்களது ஆராதனைகளிலிருந்து வேறுபட்டிருந்த மொரேவியன்களின் ஒரு ஆராதனையைக் குறித்து: “அவர்களது ஆராதனையிலிருந்த பெரும் எளிமையும் பக்திவிநயமுமாகிய முழுமையும், இடையிலிருந்த கிட்டத்தட்ட ஆயிரத்து எழுநூறு வருடங்களை நான் மறக்கும்படியும் வடிவமும் ஆதிக்கமும் அல்ல, கூடார வேலை செய்த பவுலோ அல்லது மீன்பிடிக்கிற வனாயிருந்த பேதுருவோ தலைமை தாங்கியிருந்த அந்தக் கூட்டத்தில் ஒன்றில் நான் இருப்பதுபோலவும் கற்பனை செய்ய வைத்தது. என்றபோதும் ஆவியானவர் அவரது வல்லமையின் வெளிப்பாட்டோடு இருந்தது” என்று எழுதினார்.—Ibid., pages 11, 12. (36) GCTam 289.1
வெஸ்லி இங்கிலாந்திற்குத் திரும்பி வந்தபின், ஒரு மொரேவியப் போதகரின் உபதேசத்தின்கீழ், வேதாகம விசுவாசத்தைப்பற்றிய தெளிவாகப் புரிந்துகொண்டார். இரட்சிப்பிற்காகத் தான் சார்ந்திருக்கும் தனது சொந்தக் கிரியைகள் அனைத்தையும் மறுத்துவிட்டு, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” யின்மீது முற்றிலுமாக நம்பிக்கை வைக்கவேண்டும் என்று உணர்ந்தார். உ லண்டனிலுள்ள மொரேவியன் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், விசுவாசியின் இதயத்தில் தேவஆவியானவர் உ உண்டுபண்ணுகின்ற மாறுதலைப்பற்றி லுத்தர் விவரித்திருந்த ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. வெஸ்லி அதைக் கவனித்தபோது, அவரது ஆத்துமாவில் விசுவாசம் பிறந்தது. “என் இதயம் அற்புதமாக அனலடைந்ததை உணர்ந்தேன். இரட்சிப்பிற்காக கிறிஸ்துவை, கிறிஸ்துவை மாத்திரம் நான் நம்புவதாக உணர்ந்தேன். என் பாவங்களை, என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் அகற்றி, பாவம் மரணம் ஆகியவைகளின் பிரமாணத்திலிருந்து, என்னை இரட்சித்தார் என்கிற உறுதி எனக்குக் கொடுக்கப்பட்டது.”-[bid., pages 52. (37) GCTam 290.1
அநேக ஆண்டுகளாகச் செய்யப்பட்ட களைப்பூட்டும் ஆறுதலற்ற முயற்சிகளால் நிந்தையும் தாழ்மையும் சுயமறுப்பும் நிறைந்த பல ஆண்டுகளால் தேவனைத் தேடுவது என்கிற தனது ஒரே நோக்கத்தைப் பற்றிக்கொண்டவராக வெஸ்லி இருந்தார். இப்பொழுது அதைக் கண்டு கொண்டார். ஜெபத்தினாலும், உபவாசங்களினாலும், தானதருமங்களினாலும், தன்னை வருத்திக்கொள்ளுவதினாலும் அடையவேண்டும் என்று அவர் போராடிய கிருபை, பணமுமின்றி விலையும் இன்றி இலவசமாக அருளப்பட்ட ஈவு என்பதையே அவர் கண்டுகொண்டார். (38) GCTam 290.2
கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையினால், ஒரு தடவை ஸ்திரப் படுத்தப்பட்டபின், தேவனுடைய இலவசமான கிருபை என்னும் சுவிசேஷ த்தின் மகிமையைப்பற்றிய அறிவை எங்கும் பரப்பும் வாஞ்சையில், அவருடைய முழு ஆத்துமாவும் கொழுந்துவிட்டு எரிந்தது. உலகத்தை என் ஆலயமாக நான் பார்க்கிறேன். அதன் எப்பகுதியில் நான் இருந்தாலும், கேட்கவிரும்பும் யாவருக்கும், இரட்சிப்பைப்பற்றிய மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கவேண்டியது சரி என்றும் அது என்மேல் விழுந்த கடமை என்றும் நிதானிக்கிறேன்” என்று அவர் கூறினார்.--Ibid., pages 74. (39) GCTam 290.3
அவர் தன் கடினமான சுயமறுப்புமிக்க வாழ்க்கையை இப்பொழுது இரட்சிப்பை அடைவதற்கான செயலாக அல்லாமல், விசுவாசத்தின் விளைவாகச் செய்தார். அது வேராக இராமல், பரிசுத்தத்தின் கனிகளாக இருந்தன. கிறிஸ்துவிலுள்ள தேவகிருபைதான் கிறிஸ்தவ நம்பிக்கையின் அஸ்திவாரமாக உள்ளது. அந்தக் கிருபை கீழ்ப்படிதலினால் வெளிக் காட்டப்படும். கிறிஸ்துவின் பாவநிவாரண இரத்தத்தின்மீதுள்ள விசுவாசத் தினால் நீதிமானாக்கப்படுதல், இதயத்தைப் புதுப்பிக்கும் பரிசுத்தஆவியின் வல்லமை, கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு இசைவான கனிகளை வாழ்க்கையில் கொண்டுவருதல் என்ற, அவர் பெற்றுக்கொண்ட பெரும் சத்தியங்களை, மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கு வெஸ்லியின் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. (40) GCTam 290.4
தங்களுடைய இழந்துபோன நிலையைக்குறித்த கூர்மையான நாள்பட்ட உணர்த்துதல்களினால் ஒயிட்பீல்டும் வெஸ்லியும் அவர்களது ஊழியத்துக்கு ஆயத்தப்பட்டனர். கிறிஸ்துவின் நல்ல போர்வீரர்களாக துன்பங்களைச் சகிக்கும்படி, பரிகாசம், அலட்சியம் போன்றவற்றிற்கு பல்கலைக்கழகத்திலும், ஊழியம்செய்யத் தொடங்கியபோதும் ஆளாக்கப்பட்டனர். அவர்களும் அவர்களிடம் அனுதாபம் காட்டிய வேறுசிலரும் மெதடிஸ்ட் என்று இழிவாக அவர்களுடைய தேவபயமற்ற சக மாணவர்களால் அழைக்கப்பட்டனர். இன்று இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் மிக மேன்மைமிக்கதாகக் கருதப்படும் மிகப்பெரிய ஸ்தாபனங்களில் அதுவும் ஒன்று. (41) GCTam 291.1
இங்கிலாந்து சபையின் அங்கத்தினர்களான அவர்கள் அதன் ஆராதனைமுறைகளைப் பலமாகப் பற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் தேவன் அவரது வார்த்தையினால், ஒரு மேலான அந்தஸ்தை அவர்கள் முன்வைத்தார். கிறிஸ்துவையும் சிலுவையில் அறையப்பட்ட அவரையும் பற்றிப் பிரசங்கிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை நெருக்கி ஏவினார். ஆயிரக்கணக்கானவர்கள் அறிவுறுத்தப்பட்டு, உண்மையான மதமாற்றம் அடைந்தனர். இரத்தவெறிபிடித்த ஓநாய்களிடமிருந்து இந்த ஆடுகளைக் காக்கவேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது. புதிய பெயருடன் ஒரு சபையைத் தொடங்கவேண்டும் என்று வெஸ்லி நினைக்கவில்லை. ஆனால் அவர் மெதடிஸ்ட் உறவு என்னும் பெயரில் அவர்களைத் திரட்டினார். (42) GCTam 291.2
அமைக்கப்பட்டிருந்த சபைகளினால் இந்தப் பிரசங்கிகள் சந்திக்கவேண்டியதிருந்த எதிர்ப்பு, புதிராகவும் சோதிப்பதாகவும் இருந்தது. அப்படியிருந்தும் சீர்திருத்தம் சபைக்குள்ளாகவே ஆரம்பமாகும்படி தேவன் அவரது ஞானத்தினால், நிகழ்ச்சிகளை விலக்கினார். முற்றிலுமாக அது வெளியில் இருந்து வந்திருந்தால், எங்கு அதிகமாக அவசியமாயிருந்ததோ, அதற்குள் அது நுழைந்திருக்க முடியாது. ஆனால் எழுப்புதலைப் பிரசங்கிப்பவர்கள், சபையின் மனிதர்களாக இருந்து, சபையின் எல்லைக்குள்ளேயே இருந்ததால் எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைத்ததோ அங்கெல்லாம் சத்தியம் நுழைந்தது. அப்படிச் செய்யாதிருந்தால் சாத்தப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டிருக்காது. சில போதகர்கள் தங்களது சன்மார்க்க உறக்கத்திலிருந்து எழுந்து, தங்களது சபைக்கோட்டங்களில் வைராக்கியமாகப் பிரசங்கம் செய்பவர்களானார்கள். சம்பிரதாயங்களினால் அசையாத கற்களைப்போல் இருந்த சபைகள் உயிரடையும்படி எழுப்பப்பட்டன. (43) GCTam 291.3
வெஸ்லியின் காலத்திலும் சபையின் வரலாறு முழுவதிலும் இருந்ததைப் போலவே பல்வேறுபட்ட வரங்களை உடைய மனிதர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச்செய்தனர். அவர்கள் கோட்பாடு களின் ஒவ்வொரு கருத்திலும் உடன்பட்டிருக்கவில்லை. (கோட்பாடுகள் பலவற்றில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தன) என்றபோதும் அனைவரும் தேவஆவியினால் அசைக்கப்பட்டிருந்தனர். கிறிஸ்துவிற்கென்று ஆத்துமாக்களை ஆதாயம்செய்யும் குறிக்கோள் உடையவர்களாக இருந்தனர். ஒயிட்பீல்ட் க்கும் வெஸ்லிக்கும் இடையில் ஒரு சமயம் உண்டான வேற்றுமை, பிரிவினையை உண்டுபண்ணக்கூடிய அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் அவர்களிருவரும் கிறிஸ்துவின் பள்ளியில் தாழ்மையைக் கற்றிருந்ததால் ஒருவருக்கொருவர் சகிக்கும் தன்மையினாலும், அன்பினாலும் ஒப்புரவானார்கள். தவறுகளும் அக்கிரமங்களும் எங்கும் பெருகி, பாவிகள் அழியக்கூடிய நிலைமைகள் உண்டானபோது, தங்களுக்குள் வாக்கு வாதம்செய்ய அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. (44) GCTam 292.1
தேவனுடைய ஊழியக்காரர்கள் ஒரு கரடுமுரடான பாதையில் நடந்தார்கள். செல்வாக்கும் கல்வி அறிவும்மிக்க மனிதர்கள் அவர்களுக்கு எதிராகத் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தினர். சிலநாட்களுக்குப்பின் குருமார்களில் அநேகர் தீர்மானமான எதிர்ப்பைக் காட்டவே, தூய்மையான விசுவாசத்திற்கும், அதை அறிவித்தவர்களுக்கும் எதிராக சபைகளின் கதவுகள் மூடப்பட்டன. இந்த குருமார்கள் பிரசங்கபீடத்தின்மீதிருந்து கொடுத்த மறுப்புகள் அனைத்தும் இருளின் மூலக்கூறுகளையும், அறியாமையையும், அக்கிரமங்களையும் எழுப்பிவிட்டன. தேவனுடைய இரக்கமாகிய அற்புதத்தால் மீண்டும் மீண்டும் ஜான் வெஸ்லி சாவிலிருந்து தப்பினார். வன்முறையாளர்களின் கூட்டம் கோபத்தால் எழும்பினபோது, தப்பிக்கும் வழிகள் இல்லையென்று தோன்றியபோது, மனித உருவில் ஒரு தேவதூதன் அவருக்குப் பக்கத்தில் வரவே, அந்தக் கூட்டத்தினர் பின்னிட்டுவிழவே, கர்த்தரின் ஊழியக்காரன் அபாயகரமான இடத்திலிருந்து அபாயமற்ற இடத்திற்குக் கடந்துசென்றார். (45) GCTam 292.2
ஒரு தருவாயில் வெறிகொண்டிருந்த கூட்டத்தினரிடமிருந்து தப்பின விதத்தை: “நாங்கள் சறுக்கலான பாதை வழியாக கீழ்நோக்கி ஒரு பேரூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு தடவை கீழே விழுந்துவிட்டால் என்னால் மறுபடி எழுந்திருக்கமுடியாது என்று நிதானித்து அநேகர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றனர். நான் அவர்களது பிடிக்கு எட்டாதபடி தூரமாகும்வரை நான் தடுமாறவும் இல்லை சறுக்கவும் இல்லை. அநேகர் என்னைக் கீழே விழுச்செய்ய எனது கழுத்துப்பட்டையையோ அல்லது ஆடையையோ பிடிக்கமுயன்றும், அவர்களால் பிடிக்கமுடியவில்லை. ஒரே ஒருவரால் மட்டும் எனது சட்டையின் தொங்கலைப் பிடிக்க முடிந்தது. அவர் அப்படிச்செய்தபோது, எனது சட்டையின் ஒரு பாதி அவரது கைக்குச் சென்றுவிட்டது. பாங்க் நோட்டுகளிருந்த பையையுடைய அடுத்த தொங்கல் பாதியாக மட்டும்தான் கிழிந்தது. எனக்குப் பின்னிருந்த ஒரு வெறிபிடித்த மனிதன் அவனது கையிலிருந்த நீண்ட ஓக் மரக் கம்பினால், பலதடவைகள் என்னை அடித்தான். அவன் என் பின்தலையில் ஒரு அடி அடித்திருந்தால் மேற்கொண்டு சிரமப்படவேண்டிய அவசியத்தை அது தவிர்த்திருந்திருக்கும். ஆனால் இந்த அடிகள் ஒவ்வொரு தடவையும் வேறு பக்கம் சென்றன. இது எப்படி என்பதை நான் அறியேன். ஏனெனில் என்னால் வலது புறமாகவோ இடதுபுறமாகவோ திரும்பமுடியாது. வேறொரு மனிதன் நெருக்கத்திலிருந்து கையை உயர்த்தியபடி என்னை அடிக்க ஓடிவந்து, திடீரென்று தன் கையை என்மீது நழுவவிட்டு, ‘இவனுக்கு எவ்வளவு மிருதுவான தலைமயிர் இருக்கிறது’ என்றான். எந்த மனிதர்களின் இதயங்கள் முதலாவதாகத் திரும்பினதோ அவர்கள் அந்தப் பேரூரின் நாயகர்களாக, எல்லாச் சந்தர்ப்பங் களிலும் கீழ்மக்களின் தலைவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவன் கரடிகளுடன் பந்தையச் சண்டை செய்பவன்” என்று விவரித்தார். (46) GCTam 292.3
“தேவன் தம்முடைய சித்தத்திற்கு எப்படி மென்மையாக எங்களை ஆயத்தப்படுத்துகிறார்! இரண்டுவருடங்களுக்குமுன் ஒரு செங்கல் கட்டி என் தோள்களின்மேல் உரசி விழுந்தது. இதற்கு ஒரு வருடத்திற்குப்பின் எனது கண்களுக்கு நடுவில் ஒரு கல் விழுந்தது. கடந்தமாதம் ஒரு அடி கிடைத்தது. இன்று மாலை இரு அடிகள் கிடைத்தன. ஒரு அடி நாங்கள் பேரூருக்கு வருவதற்கு முன்னும், ஒரு அடி அதைவிட்டுச் சென்றபின்னும் கிடைத்தன. ஆனால் இரண்டும் ஒன்றுமில்லாதவைபோல் தோன்றின. ஏனெனில் ஒரு மனிதன் அவனது முழுபலத்துடனும் என் மார்பின்மேல் அடித்தாலும், அடுத்தவன் எனது வாயிலிருந்து உடனே இரத்தம் ஒழுகும்படி மிகப்பலமாக குத்தினாலும், இந்த இரண்டு அடிகளிலும், அவர்கள் என்னை வைக்கோலினால் தொடுவதைவிட அதிகமான வலியை நான் உணரவில்லை” என்று கோபமிக்க ஜனக்கூட்டத்திலிருந்து பல சமயங்களில் அவருக்குக் கிடைத்த விடுதலையைப்பற்றி வெஸ்லி கூறினார்.-John Wesley, Works, vol. 3, pp. 297, 298. (47) GCTam 293.1
அந்த ஆரம்பகாலத்திலிருந்த மெதடிஸ்டுகள் போதகர்களும் மக்களும் சபை அங்கத்தினர்களிடமிருந்தும், தவறாகக் கூறப்பட்டதினால் கோபமூட்டப்பட்ட வெளியிலிருந்த மதப்பற்றில்லாதவர் களிடமிருந்தும், கேலியையும் உபத்திரவத்தையும் சகித்தனர். பெயரளவில் இருந்த நீதிமன்றங்களின்முன் அவர்கள் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தனர். ஏனெனில் அக்காலத்திலிருந்த நீதிமன்றங்களில் நீதிகிடைப்பதென்பது மிகவும் அரிதாயிருந்தது. அவர்கள் உபத்திரவப் படுத்தினவர்களால் அடிக்கடி பலாத்தகாரத்தை அனுபவித்தனர். கலகக்காரர்கள் வீட்டில் இருந்து வீட்டுக்குச்சென்று அவைகளிலிருந்த மேஜை நாற்காலி போன்ற பொருட்களை உடைத்து, அவர்களுக்குத் தோன்றின இடங்களில் சூறையிட்டு. பெண்களையும் குழந்தைகளையும் மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்கினார்கள். குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளில், மெதடிஸ்டுகளின் வீடுகளைக் கொள்ளையடிக்கும்படி, அவர்களது வீட்டுச் சன்னல்களை உடைப்பதற்குத் துணைசெய்ய விரும்புபவர்கள் கூடும் நேரமும் இடமும் குறிக்கப்பட்டபோது, அதற்கான அறிவிப்புகள் ஒட்டப்பட்டன. மனிதச் சட்டங்கள் தேவப் பிரமாணங்கள் ஆகிய இவ்விரண்டையும் பகிரங்கமாக மீறுகின்ற இந்த வன்முறைகள் கண்டிக்கப்படாமல், தொடர்ந்து நிகழும்படி அனுமதிக்கப்பட்டன. பாவிகளின் பாதங்களை அழிவின் பாதையிலிருந்து பரிசுத்தம் அடைகிற பாதைக்குத் திருப்ப வழிகாட்டின ஒரே குற்றத்திற்காக, அந்த மக்களுக்கெதிராக திட்டமிடப்பட்ட உபத்திரவம் செய்யப்பட்டது. (48) GCTam 294.1
தன்மேலும் தன்குழுவினர்மேலும் தொடுக்கப்பட்ட குற்றங்களைக் குறிப்பிட்டு: “இந்த மனிதர்களின் கோட்பாடுகள் பொய்யானவை, தவறானவை, உணர்வுகளைத் தூண்டக்கூடியவை, இதுவரை கேட்டிராத புதியவைகள், அது ஏமாற்றும் கொள்கை, மதவெறிகொண்டது” என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் இந்த குற்றங்களனைத்தும் ஏற்கனவே வேறோடு வெட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்பாடுகளின் ஒவ்வொரு பிரிவும், நமது சபை குறுக்கிட்டு தடைசெய்திருக்கிற வேதவாக்கியங்களிலுள்ள எளிமையான கோட்பாடுகளென மிகப்பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளது. எனவே இது பொய்யானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கமுடியாது.” “மற்றவர்கள், அவர்களது கோட்பாடுகள் கடினமானவை, பரலோகப் பாதையை மிகவும் இடுக்கமானதாக்குகிறார்கள் என்கிறார்கள். உண்மையில் அதுவே பூர்வாங்கமான எதிர்ப்பாக இருக்கிறது. சில காலம் அது ஒன்று மட்டுமே, வெவ்வேறுவடிவங்களில் காணப்பட்ட ஆயிரம் காரியங்களுக்கு அடியில் இரகசியமாக இருந்தது. ஆனால் உண்மையாகவே நமது கர்த்தரும் அவரது அப்போஸ்தலர்களும் இடுக்கமாக்கினதைவிட இவர்கள் அதிக இடுக்கமாக்கி உள்ளனரா? வேதத்தில் இருப்பதைக் காட்டிலும் கடினமான வேறு கொள்கை இருக்கிறதா? தெளிவான சில வேத வசனங்களைமட்டும் கவனித்துப் பாருங்கள். ‘அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்’ லுக்கா 10:27. ‘மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’-மத். 12:36. ‘ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1கொரி. 10:31) என்று வெஸ்லி பதில்கூறினார்.(49) GCTam 294.2
“அவர்களது கோட்பாடுகள் இதைவிடக் கடினமானதாக இருந்தால், அவர்கள் குறை சொல்லப்படவேண்டியவர்கள். ஆனால் அது அப்படி இல்லை என்பதை நீங்கள் உங்கள் மனசாட்சியில் அறிவீர்கள். வேத வாக்கியங்களுக்குத் தவறு இழைக்காமல் யார் ஒரு சிறு புள்ளி அளவு கவனக்குறைவாக இருக்கமுடியும்? தேவ இரகசியத்தின் உக்கிராணக்காரன் யாராவது பரிசுத்தமான அந்த கருவூலத்திலிருந்து ஏதாவதொரு பகுதியை மாற்றினால், அவன் உண்மையுள்ளவனாக இருக்கமுடியுமா? முடியாது. அவனால் ஒன்றையும் நீக்க இயலாது. அவனால் எதையும் மென்மையாக்க முடியாது. எல்லா மனிதர்களுக்கும் அறிவிக்கும்படி அவன் நெருக்கி ஏவப்பட்டிருக்கிறான். உங்களது சுவைக்கு ஏற்ற வண்ணமாக என்னால் வேத வசனத்தைக் கொண்டுவர இயலாது. நீங்கள் அதன் தரத்திற்கு வரவேண்டும் அல்லது நிச்சயமாக அழியவேண்டும். “இந்த மனிதர்களின் கடுமை’ என்பது பிரபலமான குரலாக உள்ளது. கடுமை? அவர்கள் கடுமையானவர்களா? எந்த வகையில்? அவர்கள் பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுப்பதில்லையா? அது காரியமல்ல. அவர்கள் இதில் குறை உள்ளவர்களாக இல்லை. ஆனால் நியாயந்தீர்ப்பதில் அவர்கள் பட்சம் அற்றவர்களாக உள்ளனர். அவர்களது பாதையைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு எவரும் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.-Ibid., vol. 3 pp. 152, 153. (50) GCTam 295.1
வெஸ்லியின் காலத்திற்குச் சற்றுமுன், இங்கிலாந்தில் காணப்பட்ட ஆவிக்குரிய வீழ்ச்சி, ஆண்டிநோமியன் போதனையின் விளைவாக இருந்தது. கிறிஸ்து சன்மார்க்கப் பிரமாணங்களை நீக்கி விட்டார் எனவே அவைகளைக் கடைப்பிடிக்கும் கடமை கிறிஸ்தவர்களுக்கு இனி இல்லை. “நற்செயல்களைச் செய்யும் அடிமைத்தனத்தில்” இருந்து ஒரு விசுவாசி, விடுதலையாக்கப் பட்டிருக்கிறார் என்று அநேகர் உறுதியாகக் கூறுகின்றனர். மற்றவர்கள் சன்மார்க்கப் பிரமாணத்தின் நித்தியத்துவத்தை ஒப்புக்கொண்ட போதிலும், அதன் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படியவேண்டும் என்று ஊழியக்காரர்கள் கடிந்துரைப்பது அவசியமற்றது, ஏனெனில் இரட்சிப்பிற்காக தேவன் தெரிந்துகொண்டவர்கள், “எதிர்க்கமுடியாத தெய்வீக உந்துதலினால் பக்தியையும் நற்குணத்தையும் செயல்படுத்த நடத்தப்படுவார்கள்.” நித்திய அழிவிற்காக சபிக்கப்பட்டவர்கள் “தெய்வீகப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும் வல்லமையை தங்களிடம் பெற்றிருக்கவில்லை” என்று கூறுகி றார்கள். (குறிப்பு: சுவிசேஷத்தின் முன்வைக்கப்பட்டுள்ள கிருபையின் மகத்துவத்தினால், சன்மார்க்கப் பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவதிலிருந்து கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்னும் கோட்பாட்டை போதிக்கின்ற யேகோவாவின் சாட்சிகள், பெந்தகொஸ்தெ சபையினர் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் உட்படுவார்கள்). (51) GCTam 295.2
“தெரிந்துகொள்ளப்பட்டவர்களால் கிருபையிலிருந்து விழமுடியாது அல்லது தெய்வீக ஆதரவு அவர்களுக்கு மறுக்கப்பட மாட்டாது” என்று சொன்ன மற்றவர்கள், “அவர்கள் செய்யும் கெட்ட செயல்கள் உண்மையில் பாவமுள்ளவை அல்ல் அவைகள் தெய்வீகப் பிரமாணங்களை மீறிய செயல்கள் என்றும் கருதப்பட முடியாது. அதனால், தங்களது பாவங்களை அறிக்கை செய்யவோ அல்லது மனம்வருந்திவிட்டு விலகவோ வேண்டிய வாய்ப்பு இல்லை” என்கிற இன்னும் பயங்கரமான முடிவுகளுக்கு வந்தார்கள். எனவே, மிகக்கொடிய பாவங்களில் ஒன்றானாலும், தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவரால் செய்யப்பட்டிருந்தால், “உலகம் முழுவதிலும் தெய்வீகச்சட்டத்தை மீறின மிக மோசமான பாவம் என்று அது கருதப்பட்டிருந்தாலும், தேவனுடைய பார்வையில் அது பாவமல்ல” —McClintock and strong, Cyclopedia, art. “Antinomians.” ஏனெனில், தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் தவிர்க்கமுடியாத குறிப்பிடக்கூடிய குணலட்சணங்களில் ஒன்று, தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும் அல்லது பிரமாணத்தால் தடைசெய்யப்பட்டிருக்கிற எதையும் அவர்களால் செய்யமுடியாது” என அறிவித்தார்கர். (52) GCTam 296.1
இந்த இராட்சதக் கோட்பாடு, “போப்பு, பிரமாணத்திற்கு மேலானவரா யிருந்து பிரமாணத்தை திருத்துவதன் மூலமும் மாற்றுவதின்மூலமும், தவறானவைகளைச் சரியாக்கலாம். தேவப் பிரமாணத்திற்கும் மனித நியதிக்கும் முரண்பட்டவிதத்தில் நியாயத்தீர்ப்பு செலுத்த அவரால் முடியும்” என்று ரோமமார்க்கம் உரிமை பாராட்டுவதைப் போலவே, தவிர்க்க முடியாதபடி இருக்கிறது. “இவை இரண்டும், பாவமில்லாதவர்களான பரலோகவாசிகளுக்கிடையிலும் தேவப் பிரமாணத்திலுள்ள நீதிமிக்க கட்டுப்பாட்டை உடைப்பதற்குச் செயலாற்றிய அதே தலைவனின் ஆவியின் ஏவுதலையே வெளிக்காட்டுகிறது. (53) GCTam 296.2
மாற்றமில்லாத வகையில், மனிதனுடைய சுபாவத்தை நிலைப்படுத்தும் இந்தத் தேவ கட்டளையின் கொள்கை, அநேகரை தேவப்பிரமாணத்தை நிராகரிக்கும்படியாக வழிநடத்தியது. ஆண்டிநோமிய ஆசிரியர்களின் போதனைகளை உறுதியுடன் எதிர்த்துநின்று, இந்த ஆண்டிநோமியனிசக் கோட்பாடு வேத வாக்கியத்திற்கு எதிரானது என எடுத்துக்காட்டினார் வெஸ்லி. “ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி”-தீத்து 2:11. “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷ ருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது”-1 தீமோ. 2:3,6. “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி-யோவான் 1:9. ஜீவனின் ஈவாகிய இரட்சிப்பை மனிதர் தங்களுடைய மனப்பூர்வமான மறுப்பினால் மட்டுமே இழந்துவிடுகின்றனர். (54) GCTam 297.1
கிறிஸ்துவின் மரணத்தினால் (மோசேயின் சடங்காச்சாரப் பிரமாணங்களுடன் சேர்ந்து, சன்மார்க்கப்பிரமாணத்திலுள்ள கட்டளைகளும் நீக்கப்பட்டுவிட்டன என்று உரிமைபாராட்டுதலுக்கு விடையாக “பத்துக் கற்பனைகளில் அடங்கியுள்ள சன்மார்க்கப் பிரமாணத்தை, தீர்க்கதரிசி களால் வலியுறுத்தப்பட்டவைகளை அவர் நீக்கவில்லை. அவரது வருகையின் நோக்கம் அதன் எந்தப் பகுதியையும் நீக்குவது அல்ல. ‘பரலோகத்தில் விசுவாசமிக்க சாட்சியாக நிற்கும்’ அது ஒருபோதும் மீறப்பட முடியாதது. அது சிருஷ்டிகரின் கரத்திலிருந்து மக்கள் அனைவரும் வந்தபோது, ‘கற்பலகைகளில் மட்டும் எழுதப்பட்டவையாக’ இராமல், உலகத்தோற்றமுதல் அவர்களது இதயத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆயினும் தேவனுடைய விரலினால் முன்பொரு சமயம் எழுதப்பட்ட அது, பாவத்தின் காரணமாக பெருமளவிற்கு உருக்குலைந்து போயுள்ளது என்றாலும், நாம் நன்மை தீமையைப் பற்றிய மனசாட்சியை உடையவர்களாக இருக்கும்போது, அவைகளை முற்றிலுமாக நீக்கமுடியாது. மனித இனம் முழுவதின்மேலும் எக்காலத்திலும் இந்தப் பிரமாணத்தின் ஒவ்வொரு பகுதியும் வலிமை உள்ளதாக, காலத்தையும், இடத்தையும், வேறு எந்த சூழ்நிலையையும் சாராமல், தேவனுடைய இயல்பையும், மனிதனுடைய இயல்பையும் இவர்களுக்கிடையிலுள்ள மாறாத உறவையும் சார்ந்ததாகவும் அது இருக்க வேண்டும். (55) GCTam 297.2
“’அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.’ கேள்விக்கிடமற்ற வகையில் இங்கு இதன் பொருள் என்னவெனில் (இசைவுடன் இதற்கு முன்னும் பின்னும் செல்லும் அனைத்துடனும்) மறைக்க முயலுவதையும் தாண்டி, அதன் முழுமையை நிலைநாட்டவே நான் வந்திருக்கிறேன். அதில் எவைகளெல்லாம் புரியாதவைகளாகவும், இருளானதாகவும் இருந்தனவோ அவைகளை முழுமையாகக் காணக்கூடிய அளவிற்குத் தெளிவாக்க நான் வந்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு பகுதியின் உண்மையும் முழுமையுமான முக்கியத்துவத்தை அறிவிக்க நான் வந்திருக்கிறேன். அவைகளில் அடங்கிய ஒவ்வொரு கற்பனைகளின் நீளம் அகலம் ஆகியவற்றின் முழு எல்லையையும், உயரத்தையும் ஆழத்தையும் அதன் எல்லாக் கிளைகளிலுமுள்ள அறிவுக்கெட்டாத அதன் தூய்மையையும், அதன் ஆவிக்குரிய தன்மையையும், காட்டவே நான் வந்திருக்கிறேன்” என்பதேயாகும்?-Wesley, sermon 25. (56) GCTam 298.1
சுவிசேஷம், பத்துக் கற்பனைகள் ஆகியவைகளிலுள்ள பரிபூரண மான இசைவை வெஸ்லி அறிவித்தார். “எனவே சுவிசேஷத்திற்கும் கற்பனைக்கும் இடையில் அறிந்துகொள்ளக்கூடிய மிகமிக நெருக்கமான உறவு இருக்கிறது. ஒருபுறம் கற்பனை தொடர்ச்சியாக சுவிசேஷத்திற்கான பாதையை வகுத்து, அதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. மறுபக்கம் கற்பனையை மிகச் சரியாக நிறைவேற்றும்படி சுவிசேஷம் நம்மைத் தொடர்ந்து நடத்துகிறது. உதாரணத்திற்கு, தேவனை நேசிக்கவும் நமது அயலாரை நேசிக்கவும் சாந்தமாகவும் தாழ்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்கவும் கற்பனை நமக்குக் கற்பிக்கிறது. இவைகளைச் செய்வதற்கு நம்மால் முடியாது என்று நாம் உணருகிறோம். ஆம், ‘மனிதனால் இது கூடாதுதான்.’ ஆனால் அந்த அன்பை நமக்குத் தரவும், நம்மைத் தாழ்மையும் சாந்தமும் பரிசுத்தமுமானவர்களாகச் செய்யும் தேவனுடைய ஒரு வாக்குத்தத்தத்தைக் காண்கிறோம். இந்த சுவிசேஷத்தை நற்செய்தியை நாம் பற்றிக்கொள்ளுகிறோம். நமது விசுவாசத்திற்குத்தக்கதாக நமக்குச் செய்யப்படுகிறது. இப்படியாக நியாயப்பிரமாணத்தின் நீதி ‘கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தின்’ மூலமாக நம்மில் வருகிறது.” (57) GCTam 298.2
“கற்பனையில் மிகவும் சிறிதான அல்லது மிகவும் பெரிதான ஒன்றையோ அல்லாமல், எல்லாவற்றையும் ஒரே அடியில் நீக்கிவிடும்படி, பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் ‘பிரமாணத்தையே நியாயந்தீர்த்து’, ‘நியாயப்பிரமாணத்தைப்பற்றித் தீமையாகப் பேசி’ (அதைக் கலைக்கவும் தளர்த்தவும் அது கோரும் கடமையைக் கட்டவிழ்க்கவும் பேசி), அதை மீறும்படி மனிதர்களுக்குப் போதிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் எதிரிகளில் முன்னணியில் இருக்கிறார்கள். பலமிக்க இந்த வஞ்சகத்தின் சகல சூழ்நிலைகளிலும் ஆச்சரியப்படக்கூடியது என்னவென்றாால், அந்த வஞ்சகத்திற்குத் தங்களை ஒப்புவித்தவர்கள், அவரது கொள்கைகளை அழித்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, கிறிஸ்துவின் பிரமாணத்தைக் கவிழ்ப்பதின் மூலம் அவரை மேன்மைப்படுத்துவ தாகவும், அவரது பணியைப் பெரிதுபடுத்துவதாகவும் உண்மையாகவே நம்பிக்கொண்டிருப்பதுதான்! ஆம், கிறிஸ்துவை நோக்கி: ‘ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்து’, யூதாஸ் அவரை கௌரவித்ததுபோலவே அவர்கள் அவரை கௌரவிக்கிறார்கள். ‘முத்தத்தினால் மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாயா?’ என்று அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் கேட்பது நியாயமாயிருக்கும். சுவிசேஷத்தை முன்கொண்டு செல்லும் பாவனையில், அவரது பிரமாணத்தின் எந்தப் பகுதியையும் கனப்படுத்தாமலிருப்பது, முத்தத்தினால் அவரைக் காட்டிக்கொடுப்பதைத் தவிர, அவரது இரத்தத்தை சிந்துவதைத்தவிர, அவரது கிரீடத்தை எடுத்துக்கொள்ளுவதைத் தவிர வேறொன்றுமல்ல. அல்லாமலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, கீழ்ப்படிதலின் எந்த ஒரு பகுதியையாவது நீக்கிவைக்கும்படி விசுவாசத்தைப் பிரசங்கிக்கிற, தேவனுடைய பிரமாணங்களில் மிகவும் சிறிதான ஒன்றையும் எவ்வகையிலாவது பலவீனப்படுத்தும்படி அல்லது நீக்கிப்போடும்படி கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிற எந்த ஒருவரும் நிச்சயமாக இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பமாட்டார்கள்.”—Ibid., sermon 35. (58) GCTam 298.3
“சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்பது பிரமாணத்தின் அனைத்து எல்லைகளுக்கும் முடிவான பதிலாக இருக்கிறது. நாங்கள் இதை முற்றிலுமாக மறுக்கின்றோம். பாவத்தைப்பற்றி மனிதனுக்கு அறிவுறுத்துதல், நரகத்தின் விளிம்பில் இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடுதல் என்கிற பிரமாணத்தின் முதல் எல்லைக்குக்கூட இது விடை பகரவில்லை” என்று அவரை நெருக்கியவர்களிடம் வெஸ்லி கூறினார். “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது” என்று பவுல் அறிவிக்கிறார். “பாவத்தைப்பற்றிய குற்ற உணர்வு மனிதனுக்கு உண்டாகாதவரை, அவன் கிறிஸ்துவின் பாவநிவாரண இரத்தத்தின் அவசியத்தை உண்மையாக உணரமாட்டான். ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதே அல்லாமல், சுகமுள்ளவர்களுக்கு வேண்டியது இல்லை’ என்று கர்த்தரே கூறுகிறார். எனவே, சுகமுள்ளவர்களுக்கோ அல்லது குறைந்தபட்சம் நாங்கள் சுகமாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கோ ஒரு வைத்தியன் தேவையென்பது கேலியானது. பிணியாளிகளாக இருக்கிறார்கள் என்று முதலில் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். அப்படியில்லாவிட்டால், அவர்கள் உங்களது ஊழியத்திற்கு நன்றி கூறமாட்டார்கள். ஒருபோதும் நொறுங்காத இதயத்தையுடையவர்களுக்கு கிறிஸ்துவைக் கொடுப்பதும் பொருத்தமில்லாததுதான்” என்று வெஸ்லி கூறினார்.--Ibid., sermon 35. (59) GCTam 299.1
இவ்வாறாக சுவிசேஷத்தின் கிருபையைப் பிரசங்கித்தபோதே, வெஸ்லி அவரது எஜமானரான கிறிஸ்துவைப் போலவே, வேதத்தை முக்கியப்படுத்தி, அதை மகிமையுள்ளதாக்குவதற்குச் செயலாற்றினார். தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை அவர் விசுவாசத்துடன் நிறைவேற்றினார். அவர் காணும்படி அனுமதிக்கப்பட்ட அதன் விளைவுகள் மகிமைமிக்கவைகளாக இருந்தன. எண்பது வருடங்களுக்கு மேலான, நீண்ட அவரது வாழ்க்கையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஊர்ஊராகச் செல்லும் ஊழியத்தில் செலவிடப்பட்டது. வெளிப்படையாக அவரைப் பின்பற்றினவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் ஆத்துமாக்களுக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் அவரது ஊழியத்தினால் அழிவிலிருந்தும் பாவத்தினாலான கீழான நிலையிலிருந்தும் மேலான தூய்மைமிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, அவரது போதனையினால் ஆழமான செல்வமிக்க அனுபவத்தை அடைந்தவர்களின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட முழுகுடும்பமும் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படும்வரை ஒருபோதும் அறியப்படமாட்டாது. விலைமதிக்கமுடியாத மதிப்புள்ள ஒரு பாடத்தை அவரது வாழ்க்கை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வைத்திருக்கிறது. தேவனுடைய ஊழியக்காரனிடமிருந்த அப்படிப்பட்ட விசுவாசமும் தாழ்மையும், களைப்படையாத வைராக்கியமும் தன்னைத்தான் தியாகம் செய்தலும், பக்தியும் இக்காலத்திலுள்ள சபைகளிலும் காணப்படுவதாக.(60) GCTam 300.1