கிறிஸ்தவச் சேவை
10—வழிமுறைகள்
வீடுவீடாக
பொதுக்கூட்டங்கள் நடத்துவதுபோல, வீடுவீடாகச் செல்வதும் மிகமுக்கியமானது. பொதுக் கூட்டங்களால் சந்திக்க முடியாத மக்கள் பெரிய நகரங்களில் உள்ளனர். தொலைந்த ஆடுகளைத் தேடுவதுதான் மேய்ப்பனின் வேலை என்பதால், இந்த ஆடுகளையும் தேடவேண்டும். அவர்களுக்காக கருத்தோடு தனிமுயற்சி செய்யவேண்டும். தனிமுயற்சியைப் புறக்கணிக்கும்போது, விலை மதிப்பற்ற பல வாய்ப்புகளை இழக்கிறோம். தனிமுயற்சியை மேம்படுத்தினால், வேலை வேகமாக முன்னேறும். 1 TamChS 152.1
அனுதாபச்சொற்களோடு செயல்களும் தேவை. கிறிஸ்து அன்பான செயல்களைச் செய்துவிட்டே பிரசங்கம் பண்ணினார். ஊழியர்கள் வீடு வீடாகச் செல்லட்டும்; உதவி தேவைப்படும் இடங்களில் உதவட்டும்; வாய்ப்பு கிடைக்கும்போது, சிலுவையைப் பற்றிச் சொல்லட்டும். கிறிஸ்துவைப் பற்றியே பேசவேண்டும். கோட்பாடுகளை அல்ல, கிறிஸ்து செய்த ஊழியத்தையும் தியாகத்தையும் பேச வேண்டும். அவருடைய தூய்மையை வெளிப்படுத்தும்படி வாழ்ந்து, அவருடைய நீதியை அவர்கள் நிலைநிறுத்த வேண்டும். 2 TamChS 152.2
தேவனிடம் பட்சபாதம் இல்லை. ஒருவரிடம் தாழ்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் ,பிறரைப்போல பெரிய கல்வி பெறாவிட்டாலும், தேவன் அவரைப் பயன்படுத்துவார். அத்தகையவர் வீடு வீடாகச் சென்று, ஊழியம் செய்யட்டும். தாழ்மையும் விவேகமும் தெய்வபக்தியும் இருந்தால், பிறர் வீட்டில் உட்கார்ந்தே, ஒரு போதகரைக் காட்டிலும் அதிகமாக அந்தக்குடும்பங்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்ய அவரால் முடியும். 1 TamChS 153.1
விசுவாசிகள் வீடுவீடாகச் சென்று, வேதப்பகுதிகளை வாசித்து, ஆவிக்குரிய புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். 2 TamChS 153.2
வீடு வீடாக உழைக்கும்போது, ஊழியத்திற்கான வாய்ப்புகள் பல வழிகளில் கிடைக்கும். நோயாளிகளுக்காக ஜெபிக்கவேண் டும்; அவர்கள் துன்பத்திலிருந்து அவர்களை விடுவிக்க, தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டும். எளியவர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும். ருசியைக் கட்டுப்படுத்த வலிமை இல்லாதவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஆர்வம் தூண்டப்பட்டவர்களின் இரட்சிப்புக்கு ஆர்வத்தோடும் விடாமுயற்சியோடும் முயற்சிசெய்ய வேண்டும். சுயநலமற்ற, தயவான செயல்களால் மட்டுமே பலரைச் சந்திக்க முடியும். அவர்களின் உலகத்தேவைகளை முதலில் சந்திக்கவேண்டும். நம் தன்னலமற்ற அன்புக்கான சான்றுகளை அவர்கள் காணும்போது, கிறிஸ்துவின் அன்பை நம்புவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். 3 TamChS 153.3
ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று,வேதவசனங்களை விளக்க வேண்டும்; புத்தகங்களைக் கொடுக்கவேண்டும்; தங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்த வெளிச்சத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். 4 TamChS 153.4
நம் இரட்சகர் வீடு வீடாகச் சென்று, சுகவீனர்களுக்குச் சுகம்தந்தார்; அழுதவர்களுக்கு ஆறுதல் தந்தார்; உபத்திரவப்பட்டவர்களுக்கு அமைதி தந்தார்; திக்கற்றவர்களுக்கு சமாதானம் தந்தார். சிறுவர்களைக் கையில் ஏந்தி ஆசீர்வதித்தார். சோர்வுற்ற தாய்மார்களிடம் நம்பிக்கைதரும் ஆறுதலின் வார்த்தைகளைப் பேசினார். கனிவுடன் மனிதரின் ஒவ்வொரு துயரத்தையும் துன்பத்தையும் நீக்கினார். தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக உழைத்தார். அனைவருக்கும் வேலைக்காரனாக வேலை செய்தார். தம்முடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நம்பிக்கையும் வலிமையும் தருவதே அவருடைய போஜனம். 1 TamChS 153.5
வீடு வீடாகச் சென்று அன்போடு எளிமையாகச் சத்தியத்தை சொல்வதே சரியானதே. முதன் முறையாக சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பியபோது, அப்படிச் செய்யுமாறே கிறிஸ்து சொன்னார். துதிப்பாடல்களும் இதயப்பூர்வமான ஜெபங்களும் பலர் உள்ளங்களை தொடும். உள்ளத்தில் உணர்வை உருவாக்க, தெய்வீக ஊழியர் நம்மோடு இருப்பார். ‘எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்’ என்பது அவர் வாக்குறுதி. அத்தகையவரின் உறுதிமொழி இருப்பதால், நாம் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் உழைக்கலாம். 2 TamChS 154.1
வீடுசந்திக்கும் ஊழியர்கள் தேவை. வேதாகமச் சத்தியத்தை அறியாத மக்களுக்கு அதைச் சொல்ல நாம் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று கர்த்தர் அழைக்கிறார். வீடுகளுக்குச்சென்று பாடுதல், ஜெபித்தல், வேதம் வாசித்தல் போன்றவற்றைச் செய்யவேண்டும். ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்’ என்கிற கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய நேரம் இது. இந்த வேலையைச் செய்பவர்களுக்கு வேதவசனங்களைப் பற்றிய அறிவு இருக்கவேண்டும். ‘எழுதப்பட்டுள்ளது’ என்பது அவர்களின் பாதுகாப்பு ஆயுதமாக இருக்கவேண்டும். 3 TamChS 154.2
சகோதர சகோதரிகளே, உங்களுக்கு அருகில் வசிப்பவர்களைச் சந்தியுங்கள். அனுதாபமும் கனிவும் காட்டி அவர்கள் உள்ளத்தைத் தொடுங்கள். தப்பெண்ணம் உருவாகாமல், ஏற்கனவே இருக்கிற தப்பெண்ணம் நீங்கும் வகையில் செயல்பட வேண்டும். சத்தியத்தை அறிந்தவர்கள் தங்களுடைய ஆலயத்தில் மாத்திரம் அதைப் பேசிக்கொண்டிருந்து, அதை அறியாதவர்களுக்குச் சொல்லாமலிருந்தால், தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பதற்குக் கணக்கு கொடுக்கவேண்டும். 4 TamChS 154.3
இயேசு முன்பு சென்று நண்பர்களை ஏற்படுத்தியிருந்த இடங்களுக்கு மட்டுமே முதல் ஊழியப்பயணத்தில் சீஷர்கள் செல்ல வேண்டியிருந்தது. பயணத்திற்கான ஆயத்தம் எளிமையானது. செய்யவேண்டிய பெரிய வேலையிலிருந்து அவர்கள் மனது திசை திரும்பக்கூடாது. எந்த வகையிலும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு, ஊழியக்கதவை மூடிவிடக்கூடாது. போதகர்களின் உடையை உடுத்தக்கூடாது. தாழ்மையான விவசாயிகளின் உடையை விட வித்தியாசமாக உடுத்தக்கூடாது. ஜெபாலயங்களுக்குச் சென்று, பொது ஆராதனை நடத்தக்கூடாது. வீடுசந்திக்கவேண்டும். தேவையற்ற வாழ்த்துரைகளில் நேரத்தை வீணடிக்கவோ, பொழுது போக்குக்காக வீடு வீடாகச் செல்லவோ கூடாது. கிறிஸ்துவை உபசரிப்பதுபோல் சீஷர்களை மனதார வரவேற்கிறவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக’ எனும் ஆசீர்வாதத்துடன் வீடுகளுக்குள் நுழைய வேண்டும். இவர்களுடைய ஜெபத்தாலும் துதிப்பாடல்களாலும் வேதவாசிப்புகளாலும் அந்த வீடு ஆசீர்வதிக்கப்படும். 1 TamChS 154.4
உங்கள் அண்டைவீட்டுக்கு நட்போடு சென்று அவர்களோடு பழகுங்கள். இந்த வேலையைச் செய்யாதவர்கள், அல்லது அலட்சியத்தோடு செய்பவர்கள், விரைவில் தங்கள் ஆதி அன்பை இழந்துவிடுவார்கள்; தங்கள் சொந்தச் சகோதரர்களைக் கண்டனம் பண்ணி, விமர்சித்து, குறைகூறத் தொடங்குவார்கள். 2 TamChS 155.1
பவுல் அப்போஸ்தலன் பொதுக்கூட்டங்களில் பேசுகிற ஊழியத்தைமட்டும் செய்யவில்லை; அந்த விதத்தில் சந்திக்க முடியாத மக்கள் இருந்தார்கள். எனவே, வீடு வீடாகச் சென்று, குடும்பத்தாரோடு பழகுவதன்மூலமாக ஊழியம் செய்தான். நோயுற்றோரை யும் துயருற்றோரையும் நேரில் சந்தித்து, துன்புற்றோருக்கு ஆறுதல் சொல்லி, ஒடுக்கப்பட்டோரை உற்சாகப்படுத்தினான். தன் சொல் லிலும் செயலிலும் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தினான். இவ்வாறு பலவீனத்தோடும்பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும்’ உழைத்தான். தன் உபதேசத்தில் தேவனைவிட தான் முக்கியம் ஆகி விடக்கூடாது என்கிற பயம் அவனுக்கு இருந்தது. 3 TamChS 155.2
அயலகத்தாரை ஒவ்வொரு குடும்பமாகச் சந்தியுங்கள். சுயநலமற்ற அக்கறையாலும் அன்பினாலும் அவர்கள் மனதை ஈர்த்து, அவர்களுக்காக ஜெபியுங்கள். நன்மை செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். அழுவாரோடு அழுங்கள். ஒருசிலரை ஒன்றாகக்கூட்டி, இருண்டு கிடக்கிற உள்ளங்களுக்கு வேத வசனங்களை விளக்குங்கள். ஆத்துமாக்களுக்காக நீங்கள் கணக்கு கொடுக்கவேண்டும். இதை மனதில் வைத்து விழிப்போடு செயல்படுங்கள். ஒழுக்கக்களத்தில் தேவனோடு வேலைசெய்வதற்குக் கிடைக்கிற சிலாக்கியங்கள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். அண்டை வீட்டாரோடு பேசுவதைத் தவிர்க்காதீர்கள். ஒரு சிலரையாவது இரட்சிப்பதற்காக உங்களால் முடிந்தளவு கனிவோடு நன்மை செய்யுங்கள். பவுல் அப்போஸ்தலன் வீடு வீடாகச் சென்று, ‘தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் கண்ணீருடன் மன்றாடியது போன்ற சிந்தையை நாமும் நாடவேண்டும். 1 TamChS 155.3
நகரங்களில் செய்யவேண்டிய வேலையை கர்த்தர் எனக்கு காட்டினார். விசுவாசிகள் தங்கள் அண்டை வீட்டார்மத்தியில் தேவனுக்காக வேலை செய்ய வேண்டும். அமைதியாக, பணிவுடன் உழைக்கவேண்டும். தாங்கள் செல்லும் இடமெல்லாம் பரலோக சுபாவத்தை வெளிப்படுத்தவேண்டும். 2 TamChS 156.1