கிறிஸ்தவச் சேவை
முன்னேறிச்செல்லுங்கள்
கிறிஸ்தவ வாழ்க்கையில் பெரும்பாலும் ஆபத்துகள் இருக்கும்; கடமைகளைச் செய்வது கடினமாகத் தோன்றும். நமக்கு முன்னால் அழிவும், நமக்குப்பின்னால் கட்டும் மரணமும் நெருங்கியிருப்பதாக மனதில் தோன்றும். ஆனாலும், முன்னேறிச் செல்லுங்கள்’ என்று தேவனுடைய குரல் தெளிவாகச் சொல்கிறது. இருட்டை ஊடுருவி நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். தயக்கமும் சந்தேக ஆவியும் இருந்தால், நம் முன்னேற்றத்தைத் தடுக்கிற தடைகள் ஒருபோதும் அகலப்போவதில்லை. நிச்சயமற்ற நிலைகளெல்லாம் மறையட்டும்; தோல்விக்கான ஆபத்தெல்லாம் நீங்கட்டும்’ எனக் காத்து இப்போது கீழ்ப்படியாமல் இருப்பவர் ஒருபோதும் கீழ்ப்படியமாட்டார். சிரமங்களைத் தாண்டி விசுவாசம் பார்க்கிறது; அதரிசனமான சர்வ வல்லவரைப் பற்றிக்கொள்கிறது; அந்த விசுவாசம் குழம்பாது. அவசர நிலைகளில் கிறிஸ்துவின் கரத்தைப் பற்றிக்கொள்வதே விசுவாசம். 1 TamChS 147.3
நம் எண்ணங்கள் எல்லாமே குறுகியவைகளாக உள்ளன. பிறருக்கு வெளிச்சம் கொடுக்கிற பணியில் தொடர்ந்து முன்னேறுமாறு தேவன் அழைக்கிறார். மக்களைச் சந்திப்பதற்கு மேம்படுத்தப்பட்ட வழிகளையும் வழிமுறைகளையும் நாம் ஆராயவேண்டும். ஆண்டவருடைய சேனையின் பராக்கிரமம் மிகுந்த தளபதி’ முன்னேறுங்கள்” என்று சொல்வதை விசுவாசக் காதுகளுடன் கேட்க வேண்டும். நாம் செயல்பட வேண்டும். தேவன் நம்மைக் கைவிட மாட்டார். நாம் நம்முடைய பங்கை விசுவாசத்துடன் செய்யும்போது, தேவன் தம்முடைய பங்கைச் செய்வார். வெகுகாலமாக சத்தியத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளே, நீங்கள் செய்யும்படி தேவன் அழைத்த பணியை நீங்கள் இன்னும் செய்யவில்லை. ஆத்துமாக்கள் மேல் அன்பு எங்கே இருக்கிறது? 2 TamChS 148.1
ஆத்துமாக்களை இரட்சிப்பது கிறிஸ்துவின் மகிழ்ச்சியாக இருந்தது. அதுவே உங்கள் வேலையாகவும் உங்கள் மகிழ்ச்சியாகவும் மாறட்டும். கிறிஸ்துவுக்காக அனைத்துக் கடமைகளையும் எல்லாத் தியாகங்களையும் செய்யுங்கள். அவரே உங்களுக்கு நித்திய துணையாக இருப்பார். கடமை உங்களை எந்த இடத்திற்கு அழைக்கிறதோ அந்த இடத்திற்குச் செல்லுங்கள். இருப்பதுபோல் தெரிகிற பிரச்சனைகள் எதுவும் உங்களைத் தடுக்கவேண்டாம். தேவன் உங்களுக்குக் கொடுத்துள்ள பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பாரமான சுமைகளை நீங்கள் சுமக்கும்போது, “என் சகோதரன் ஏன் எதுவும் செய்யாமல் நிற்கிறான்? அவன்மேல் ஏன் எந்த நுகமும் இல்லை?” என்று கேட்காதீர்கள். உங்களுக்கு அருகிலுள்ள கடமையை, நீங்கள் முற்றும் முழுவதுமாகச் செய்யுங்கள்; அதற்கு உங்களை மற்றவர்கள் புகழவேண்டுமென்று எதிர் பார்க்காதிருங்கள். நீங்கள் உங்கள் எஜமானுக்குச் சொந்தமானவர்கள்; அதனால் நீங்கள் அவருக்காகச் செய்யுங்கள். 3 TamChS 148.2
தேவ பிள்ளைகள் வெற்றி அடைவதற்காக தொடர்ந்து மேல் நோக்கியும் முன்னோக்கியும் முன்னேறிச் செல்லவேண்டும். யோசுவாவைவிட பெரியவர் இஸ்ரவேலின் சேனைகளை வழி நடத்துகிறார். நம்மத்தியிலிருக்கும் நம் இரட்சிப்பின் தளபதி சொல்கிற ஊக்கமான வார்த்தைகளைக் கேளுங்கள்:“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று அவர் நம்மை ஊக்கப்படுத்துகிறார். TamChS 148.3
“திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று சொன்ன அவர் நிச்சயமாக நம்மை வெற்றிக்கு வழி நடத்துவார். தேவன் எதை வாக்குரைக்கிறாரோ அதை எப்போது வேண்டுமானாலும் அவர் நிறைவேற்றுவார். மக்களை என்னசெய்யச் சொல்லுகிறாரோ, அதை அவர்கள் செய்துமுடிக்க அவர்களைத் திறனுள்ளவர்களாக்குவார். 1 TamChS 149.1
கிறிஸ்துவின் ஆவியால் நாம் ஊக்கமடையாதது ஏன்? உபத்திரவத்திலுள்ள உலகின் பரிதாபமான கூக்குரல்கள் நம்மை அசைக்காதது ஏன்? கிறிஸ்துவின் கிரீடத்தில் ஒரு நட்சத்திரத்தை கூடுதலாகச் சேர்க்கிற மேன்மையான சிலாக்கியம் நமக்கிருப்பதை எண்ணுகிறோமா? சாத்தான் கட்டியுள்ள அந்த ஆத்துமாவை சங்கிலியிலிருந்து விடுவித்து, தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்தால் தானே அது நடக்கும்? தற்கால சத்தியத்தின் சுவிசேஷத்தை ஒவ்வொரு சிருஷ்டிக்கும் கொண்டுசெல்வது தன் கடமை என்பதை திருச்சபை உணர வேண்டும். சகரியா மூன்றாம், நான்காம் அதிகாரங்களை நீங்கள் வாசிக்க உங்களை வேண்டுகிறேன். இந்த அதிகாரங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டால், நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்களுக்கு ஓர் பணியைச் செய்யலாம், திருச்சபை “மேல் நோக்கியும் முன்னோக்கியும்” செல்லவேண்டியிருக்கும். 2 TamChS 149.2
பூலோகக் குடிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் மெய்ப் பற்றை சத்துருவின்மேல் வைத்துவிட்டார்கள். ஆனால், நாம் வஞ்சிக்கப்படவில்லை. சாத்தான் வெற்றிபெற்றதுபோலத் தெரிந்தாலும், பூமியிலும் பரலோகப் பரிசுத்த ஸ்தலத்திலும் கிறிஸ்து தம் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். கடைசி நாட்களில் உலகத்தில் காணப்படக்கூடிய துன்மார்க்கத்தையும் சீர்கேட்டையும் வேதவசனம் சித்தரிக்கிறது. தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலைக் காணும்போது, இறுதியில் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கே வெற்றி என்கிற நம் விசுவாசம் பெலப்படவேண்டும்; நமக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்துடன் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். 3 TamChS 149.3