கிறிஸ்தவச் சேவை

22/289

3—தேவ மக்கள் மத்தியில் காணப்படுகிற நிலை

அருட்பணி மனநிலை இல்லை

ஓய்வுநாளைக் கைக்கொள்ளுகிற அட்வென்டிஸ்டுகள் மத்தியில் அருட்பணிமனநிலை மிகக்குறைவாகவே காணப்படுகிறது. தேவன் தம்முடைய பிரமாணத்தை அவர்களுடைய சிந்தைகளில் பதித்து, அவர்களுடைய இருதயங்களில் எழுதி, தம் பிரமாணத்தின் களஞ்சியங்களாக அவர்களை ஆசீர்வதித்திருக்கையில் ஊழியர்களும் விசுவாசிகளும் போதுமான விழிப்பைப் பெற்றிருந்தால், இவ்வாறு அக்கறையற்று இருக்கமாட்டார்கள்;. 1 TamChS 51.1

செய்கிற பணியை மேன்மையுள்ளதாக்குகிற மெய்யான அருட்பணி மனநிலையானது சபையாரைவிட்டு நீங்கியுள்ளது; அவர்களுடைய இருதயங்கள் ஆத்துமாக்கள் மேலான அன்பால் கொழுந்துவிட்டு எரிவதில்லை; ஆத்துமாக்களை கிறிஸ்துவின் மந்தைக்குள் வழிநடத்துகிற விருப்பமும் காணப்படுவதில்லை. ஊக்கமிக்க ஊழியர்கள் தேவை. இங்கே வந்து எங்களுக்கு உதவுங்கள் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் எழும்புகிற கூக்குர லுக்குப் பதிலளிப்பவர்கள் யாருமே இல்லையா? 1 TamChS 51.2

நாம் குறைவுள்ளவர்களாக இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. நம்முடைய கிரியைகள் நம்முடைய விசுவாசத்திற்கு ஏற்றதாக இல்லை. மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலேயே மிகவும் பக்திக்குரிய, மிக முக்கியமான செய்திப் பிரகடனத்தின்கீழ் நாம் வாழ்கிறோம் என்று நம் விசுவாசம் சாட்சியிடுகிறது. ஆனால் இந்த உண்மையை முற்றிலும் கருத்தில்கொண்டால், நம் முயற்சிகளும் நம் சுயத்தியாகமனநிலையும் நம் ஊழியத்தின் தன்மைக்கு ஒத்ததாக இல்லை. மரித்த நிலையிலிருந்து நாம் விழிக்கவேண்டும். கிறிஸ்து நமக்கு வாழ்வு தருவார். 2 TamChS 52.1

சபையாருக்கு தேவன் கொடுத்துள்ள பரிசுத்த பொறுப்புகள் குறித்த உணர்வே நமக்கு இல்லையென்பதை நினைக்கும்போது என் உள்ளம் வேதனைப்படுகிறது. ஊழியர்மட்டுமல்ல, கிறிஸ்துவின் படையில் இணைந்துள்ள ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கிறிஸ்துவின்படை வீரர்தான். சுயமறுப்புக்கும் தியாகத்திற்கும் முன்மாதிரியாக கிறிஸ்து வாழ்ந்துகாட்டியதுபோல, ஒரு வீரனுக்குரிய விலையை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார்களா? சபை முழுவதுமாக எவ்விதமான சுயமறுப்பை வெளிப்படுத்தியுள்ளது? காணிக்கை கொடுத்துவிட்டு, தங்களைக் கொடுக்கவில்லையே. 3 TamChS 52.2

கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்கிற பலர் உலகத்தாரைப் போலவே ஆத்துமாக்கள்மேல் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொண்டாலும் கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும், ஆடம்பர நாட்டமும், உழைக்காமல் வாழவேண்டுமென்கிற ஆசையும் தேவனைவிட்டு அவர்களைப் பிரிக்கின்றன; அருட்பணி மனநிலை உண்மையிலேயே ஒரு சிலரிடம்தான் காணப்படுகிறது. சீயோனில் உள்ள இந்தப்பாவிகளின் கண்களைத் திறக்கவும், மாய்மாலக்காரர்களை நடுங்கப்பண்ணவும் என்ன செய்யலாம்? 4 TamChS 52.3

மேரோஸ் பட்டணத்தார் போன்று ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அருட்பணி மனநிலை அவர்களுடைய ஆத்துமாவில் வேர்விடவில்லை. அயல்நாட்டு ஊழியங்களுக்கு அழைக்கும் போது, அவர்கள் செயல்படுவதில்லை. தேவநோக்கத்திற்காக எதுவுமே செய்யாதவர்கள், கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த எதுவுமே செய்யாதவர்கள் அவரிடம் என்ன கணக்குக்கொடுப்பார்கள்?’ பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே’ என்று கடிந்துகொள்ளப்படுவார்கள். 5 TamChS 52.4

உங்களுக்கு சிலாக்கியமாக இருந்த தேவனுடைய வேலையைச் செய்யத்தவறியதற்கு ஓர் உதாரணமாக, பின்வரும் வார்த்தைகள்தாம் எனக்குச் சுட்டிக்காட்டப்பட்டன: “மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்கவரவில்லை ; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.” 1 TamChS 53.1