கிறிஸ்தவச் சேவை

259/289

மேய்ப்பனுக்கேற்ற அக்கறை

ஒரு ஆடு தொலைந்துபோனதைக் கண்டதும், மந்தையில் பத்திரமாக இருக்கும் ஆடுகளைப் பார்த்து, “எனக்கு தொண்ணுற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; வழிதவறிப்போன ஒரு ஆட்டைத் தேடிச்செல்வதால் அதிக தொந்தரவுதான் மிஞ்சும். அது தானாகத் திரும்பி வரட்டும். அது உள்ளே செல்லும்படி பட்டியின் கதவைத் திறந்துவிடுவேன்” என்று அக்கறையின்றி கூறமாட்டான். ஆடு காணாமல்போனது தெரிந்ததுமே வருத்தமும் பதற்றமுமடைகிறான். ஆடுகளை மறுபடியும் மறுபடியும் எண்ணுகிறான். ஒரு ஆடு தொலைந்துபோனதென உறுதிசெய்தபின், தூக்கம் வராமல் போகிறது. தொண்ணூற்றொன்பதையும் மந்தையில் விட்டுவிட்டு, காணா மல் போன ஆட்டைத் தேடிச்செல்கிறான். வெளிச்சம் மறைந்து இருள் அதிகமாக அதிகமாக, செல்லும் பாதையில் ஆபத்து மேலும் மேலும் அதிகரிக்கும்; மேய்ப்பனின் பதற்றமும் அதிகரிக்கும்; தேடுதலும் தீவிரமாகும். தொலைந்துபோன அந்த ஒரு ஆட்டைக் கண்டு பிடிக்க, தன்னால் முடிந்த முயற்சிகளை எல்லாம் ஓய்வின்றிச் செய்கிறான். TamChS 320.3

எங்கேயோ தொலைவில், முதன்முதலாக லேசாக ஆட்டின் சத்தம் கேட்டதும், பதற்றம் தணிகிறது; சத்தம் வந்த திசையில் செங்குத்தான மேடுகளில் ஏறுகிறான்; செங்குத்துப் பாறையின் விளிம்பிற்கே செல்கிறான். ஆட்டின் சத்தம் வரவர குறைவதைக் கேட்டு, அது சாகிற நிலையில் இருப்பது புரிகிறது. இறுதியில் அவனது முயற்சிக்கு பலன்கிடைக்கிறது; தொலைந்ததைக் கண்டுபிடிக்கிறான். தனக்கு ஏராளமான தொந்தரவைக் கொடுத்துவிட்டதாக அதை அவன் திட்டவில்லை. சாட்டையால் அதை அடிக்கவுமில்லை. அதை நடத்திச் செல்லவும் அவன் முயலவில்லை. நடுங்கிக்கொண்டிருக்கும் அந்த ஆட்டை மகிழ்ச்சியோடு தன் தோள்களில் போட்டுக் கொள்கிறான்; அது அடிபட்டு, காயப்பட்டிருந்ததாகக் கண்டால், அதை தன்னுடைய மடியில் வைத்து, கரங்களுக்குள் அணைத்து, தன்னுடைய இதய வெப்பத்தால் அது பிழைக்கும்படி அனல்மூட்டுகிறான். தன் முயற்சி வீண்போகவில்லையென்கிற நன்றியுணர்வோடு, அதை மீண்டும் தன்னுடைய மந்தைக்குக்கள் கொண்டு செல்கிறான். 1 TamChS 321.1