கிறிஸ்தவச் சேவை

9/289

உலக வேலைகளிலிருந்து அழைக்கப்படுதல்

சாமானிய மக்கள் ஊழியர்களாக மாறவேண்டும். மனிதர்களின் துக்கங்களில் இரட்சகர் பங்குகொண்டதுபோல, தங்கள் சக மனிதர்களுடைய துக்கங்களில் அவர்கள் பங்குகொள்ள வேண்டும். அப்போது அவர்கள்மத்தியில் அவர் கிரியை செய்வதை விசுவாசத்தால் காண்பார்கள். 2 TamChS 37.1

அருகிலும் தூரத்திலும் உள்ள அனைத்துக் களங்களிலும் இருந்து, மனிதர்கள் தங்கள் கலப்பைகளைவிட்டு வரும்படியும், தங்கள் எண்ணங்களை அதிகம் ஆக்கிரமித்துள்ள தொழில்களை விட்டு வரும்படியும் அழைக்கப்படுவார்கள்; அனுபவசாலிகள் மூலமாகக் கற்றுக்கொடுப்பார். திறமையாக ஊழியம் செய்ய அவர்கள் கற்றுக்கொள்ளும்போது, வல்லமையோடு சத்தியத்தை அறிவிப்பார்கள். தேவனுடைய வழிநடத்துதலின்மிக அற்புதமான கிரியைகளின்மூலம் பிரச்சனைகளாகிய மலைகள் அகற்றப்பட்டு, கடலில் தள்ளப்படும். பூமியில் வாசஞ்செய்கிறவர்கள் முக்கியமான செய்திக்குச் செவிகொடுத்து, அதைப் புரிந்துகொள்வார்கள். சத்தியம் என்னவென்பதை மனிதர்கள் அறிந்துகொள்வார்கள். பூமி முழுவதும் எச்சரிக்கப்பட்டுத் தீரும் வரை ஊழியமானது மேலும்மேலும் பரவும்; அதன்பிறகு முடிவு வரும். 3 TamChS 37.2

இவ்வுலகப் பள்ளிகளில் மேற்படிப்பு படிக்காதவர்களை தேவன்பயன்படுத்தமுடியும்; பயன்படுத்துவார். இதை அவருடைய வல்லமை செய்யமுடியுமா என்று சந்தேகிப்பதுதான் அவநம்பிக்கை; இது சர்வவல்லவரின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும், அவரால் செய்யக்கூடாதது ஒன்றுமில்லை. அவநம்பிக்கையுள்ள இப்படிப்பட்ட எச்சரிக்கை தேவையே இல்லை. சபையின் பல வல்லமைகளைச் செயல்படவிடாமல் இது தடுக்கிறது; பரிசுத்த ஆவியானவர் மனிதரைப் பயன்படுத்த முடியாதபடிக்கு வழியை இது அடைக்கிறது; கிறிஸ்துவின் பணிகளைச் செய்ய ஆவலோடும் விருப்பத்தோடும் இருப்பவர்களை இது சோம்பேறிகளாக வைக்கிறது; தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் தேவனோடு சேர்ந்து திறமையான ஊழியர்களாக மாறியிருக்கக் கூடியவர்களை இது அதைரியப்படுத்துகிறது. 4 TamChS 37.3

ஒவ்வோர் ஆத்துமாவும் மேம்படுவதற்கான பாக்கியம் இது. கிறிஸ்துவோடு இணைந்திருப்பவர்கள் பூரண புருஷர்களாகவும், ஸ்திரீகளாகவும் மாறும் வரையிலும் தேவனுடைய குமாரனை அறிகிற அறிவிலும் கிருபையிலும் வளருவார்கள். சத்தியத்தை நம்புவதாகச் சொல்லுகிறவர்கள், கற்றுக்கொள்ளவும் செயல்படவும் தங்களுடைய திறமைகளையும் வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்தியிருந்தால், கிறிஸ்துவில் பெலப்பட்டிருப்பார்கள். உழவர்கள், இயந்திர வல்லுனர்கள், ஆசிரியர்கள், போதகர்கள் என என்ன வேலைசெய்கிறவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களை முற்றிலும் தேவனுக்காகப் பிரதிஷ்டை பண்ணியிருந்தால், பரலோக எஜமானின் திறமைமிக்க ஊழியர்களாக மாறியிருப்பார்கள். 1 TamChS 38.1

ஆசிரியப்பணி, கட்டடப்பணி, உற்பத்திப்பணி, விவசாயப் பணி போன்ற பல்வேறு பணிகளில் ஏதாவது ஒன்றில் போதுமான திறமையைப் பெற்றவர்கள் சபையில் இருப்பார்களானால், சபையின் மேம்பாட்டிற்காகப் பிரயாசப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும். அவர்கள் நிர்வாகக்குழுக்களில் வேலை செய்யலாம்; ஓய்வுநாட் பள்ளி ஆசிரியர்களாகப் பணிசெய்யலாம்; ஊழியப்பணியில் ஈடுபடலாம்; சபை சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகளில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம். 2 TamChS 38.2

தம்முடைய பணியைச் செய்யும்படி கிறிஸ்து யூத சனகெரிம் சங்கத்திலுள்ள படித்தவர்களையோ, பேச்சு வல்லுநர்களையோ ரோம அரசாங்கத்தில் உள்ளவர்களையோ தெரிந்துகொள்ளவில்லை . நிபுணத்துவமிக்க ஊழியரான அவர் சுய நீதியுள்ள யூத ஆசிரியர்களைக் கண்டுகொள்ளவில்லை; எளிய, கல்வியறிவு இல்லாத மனிதர்களைத் தெரிந்துகொண்டார்; உலகத்தை அசைக்க விருந்த சத்தியங்களை அவர்கள்மூலம் அறிவித்தார். அவர்களை தம் சபையின் தலைவர்களாக்கப்பயிற்சிகொடுத்து, அறிவுள்ளவர்கள் ஆக்குவதே அவர் நோக்கமாக இருந்தது. அவர்கள் மற்றவர்களுக்கு அதை அறிவித்து, சுவிசேஷச் செய்தியை அறிவிக்கும்படி அவர்களை அனுப்பி வைக்கவேண்டியிருந்தது. தங்கள் ஊழியத்தில் அவர்கள் வெற்றியுள்ளவர்களாக விளங்கும்படி, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களுக்குக் கொடுக்கப்பட இருந்தது. சுவிசேஷத்தை மனித பெலத்தாலோ சுயஞானத்தாலோ அறிவிக்காமல், தேவவல்லமையால்அறிவிக்கவேண்டியிருந்தது. 3 TamChS 38.3

‘நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் உபதேசம் பண்ணுங்கள்’ என்கிற ஊழியக்கட்டளை கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்தவர்கள். ஆண்களும் பெண்களுமாகிய அவர்கள் தங்கள் ஆண்டவரை நேசிக்கக் கற்றவர்கள்; அவரைப்போல சுய நலமில்லாமல் சேவை செய்ய வேண்டும் என்பதில் உறுதிகொண்டவர்கள். அந்தச் சாமான்யர்களுக்கும், இரட்சகரின் பூலோக ஊழியத்தில் அவரோடு இருந்தவர்களுக்கும் விலையேறப்பெற்ற பொறுப்பை ஒப்படைத்தார். கிறிஸ்துவின்மூலம் கிடைக்கிற இரட்சிப்புகுறித்த சுவிசேஷத்தை உலகம் முழுவதிற்கும் அவர்கள் எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. 1 TamChS 39.1