கிறிஸ்தவச் சேவை

182/289

16—திருச்சபை விரிவாக்க இயக்கம்

தெய்வீக திட்டம்

தம் மக்கள் ஒரே பகுதியில் பெரிய குடியிருப்பாகக் குடியமர வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமல்ல. கிறிஸ்துவின் சீடர்கள் பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். உலகத்திலுள்ள இருளின் ஊடே பிரகாசிக்கிற விளக்குகளாக கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் என தேசம் முழுவதிலும் அவர்கள் பரவிச்செல்லவேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். 1 TamChS 234.1

குறிப்பிட்ட ஒரு பகுதியில் குடியேறவேண்டும்; குறைவான எண்ணிக்கையும் செல்வாக்கும் உடைய இடங்களிலிருந்து புறப்பட்டு அநேகராக ஒரே இடத்தில் குவியவேண்டும் என்பது தவறு. உங்கள்மூலம் தேவன் வெளிச்சம் கொடுக்க விரும்புகிற இடங்களிலிருந்து உங்கள் செல்வாக்கை விலக்குவது ஆகும். 2 TamChS 234.2

கிறிஸ்துவின் திருச்சபை நம் ஆண்டவருடைய நோக்கத்தை நிறைவேற்றியிருந்தால், மரண இருளின் பகுதிகளிலும் இருப்பவர்களுக்கு வெளிச்சம் வீசப்பட்டிருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடி, பொறுப்பையும் சிலுவை சுமத்தலையும் தவிர்ப்பதற்குப் பதிலாக, திருச்சபையின் அங்கத்தினர்கள் சகல பகுதிகளுக்கும் பரவிச் சென்று, கிறிஸ்துவின் ஒளி தங்களிலிருந்து பிரகாசிக்கச்செய்து, ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவர் செய்ததுபோல கிரியை செய்திருக்கவேண்டும்; அப்போது ‘ராஜ்யத்தின் சுவிசேஷம்’ உலகம் முழுவதிலும் விரைவாகக் கொண்டுசெல்லப்பட்டிருக்கும். 1 TamChS 234.3

சகோதர சகோதரிகளே, ஏன் ஆலயத்தைச்சுற்றியே மொய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? காணாமல்போன ஆடு குறித்த உவமையை வாசியுங்கள். மெய்யான மேய்ப்பர்கள் போல புறப்பட்டுச் செல்லுங்கள். பாவம் எனும் வனாந்தரத்தில் தொலைந்துபோன ஒருவரைத் தேடுங்கள். அழிந்துபோகிறவரைக் காப்பாற்றுங்கள். 2 TamChS 235.1

நம் திருச்சபைகளின் அங்கத்தினர்கள் இதுவரையிலும் துவங்கியிருக்காத ஒரு பணியைச் செய்துமுடிக்கலாம். வெறும் உலக ஆதாயத்திற்காக யாரும் புதிய இடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டாம். ஆனால், எங்கே பிழைப்புக்கான வழி இருக்கிறதோ, சத்தியத்தில் நன்கு உறுதிப்பட்ட ஒன்று அல்லது இரண்டு குடும்பத்தினர் அங்கே சென்று, நற்செய்தியாளர்களாகப் பணியாற்றலாம். அவர்களுக்கு ஆத்துமாக்கள்மேல் அன்பும், ஆத்துமாக்களுக்காக வேலைசெய்யவேண்டிய பாரமும் இருக்க வேண்டும்; மற்றவர்களை சத்தியத்திற்குள் கொண்டு வருகிற விதத்தை தங்கள் ஆராய்ச்சியாக்கவேண்டும். அவர்கள் நம் வெளியீடுகளை விநியோகிக்கலாம்; தங்கள் வீடுகளில் கூட்டங்கள் நடத்தலாம்; அக்கம்பக்கத்தாரோடு நன்றாகப்பழகி, கூட்டங்களுக்கு வரும்படி அவர்களை அழைக்கலாம். இவ்வாறு நற்கிரியைகளில் தங்களுடைய வெளிச்சம் பிரகாசிக்கும்படி செய்யலாம். 3 TamChS 235.2

தங்கள் இருப்பிடத்தை மாற்ற விரும்புகிற சகோதரர்கள், தேவ மகிமை குறித்த தரிசனத்தைப் பெற்றவர்களாக, மற்றவர்களுக்கு நன்மை செய்வதையும், கிறிஸ்து தம் அருமையான ஜீவனையே கொடுத்த ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு பயனுள்ளவர்களாக இருப்பது தங்களுடைய தனிப்பட்ட கடமையென்றும் உணர்கிறவர்களாக அதிகவெளிச்சம் காணப்படாத அல்லது வெளிச்சமே சென்றிராத பகுதிகளுக்குச் செல்லவேண்டும். அங்கே அவர்கள் தங்களது அனுபவத்தாலும் பிரயாசத்தாலும் மெய்யான சேவை செய்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கலாம். தேவனுடைய சாட்சிகள் தேசம்முழுவதிலும் பரவவேண்டும்; சத்தியத்தின் வெளிச்சம் இதுவரையிலும் சென்றிராத பகுதிகளில் ஊடுருவிச் செல்லவேண்டும்; சத்தியம் இதுவரை அறியப்படாத பகுதிகளில் அதன் கொடி ஏற்றப்படவேண்டும்; அதற்காக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று, சத்தியத்தின் கொடியை ஏற்றுகிற நற்செய்தியாளர்கள் தேவைப்படுகிறர்கள். 1 TamChS 235.3

சுயதியாக வைராக்கியத்தை எழுப்பவேண்டுமா? குணத்தை விஸ்தாரமாக்கிப் பெலப்படுத்தவேண்டுமா? பிறருக்கான பணியில் ஈடுபடுவதை போன்று இவற்றைச் சாதிக்கக்கூடியது வேறு எதுவுமில்லை. கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்ளும் பலர், தன்னலத்திற்காகமட்டுமே திருச்சபையில் சேர விரும்புகிறார்கள். திருச்சபை ஐக்கியத்தையும் திருச்சபை ஆதரவையும் பெற்று அனுபவிக்க விரும்புகிறார்கள். பெரிய, வசதியான சபைகளில் அங்கத்தினர்களாகிறார்கள்; பிறருக்காக எதுவும் செய்யாவிட்டாலும் மன நிறைவோடு இருக்கிறார்கள். இவ்வாறு இருப்பதால், மிக அருமையான ஆசீர்வாதங்கள்தங்களுக்குக்கிடைக்காதபடி செய்துவிடுகிறார்கள். சுயமகிழ்ச்சிக்கும், இலகுவான போக்கிற்குமான பழக்கவழக்கங்களைத் தியாகம் செய்வதால் அநேகர் அதிக நன்மைகளைப் பெற முடியும். கிறிஸ்தவ ஊழியத்தில் தாங்கள் அதிகமாகப் பிரயாசப்பட வேண்டிய இடத்திற்குச் செல்லவேண்டும்; அப்போது பொறுப்புகளை ஏற்றுச் செயல்படக் கற்றுக்கொள்ளலாம். 2 TamChS 236.1

அமெரிக்காவில் சத்தியம் ஒருபோதும் அறிவிக்கப்படாத, சத்தியத்தின் கொடி ஒருபோதும் ஏற்றப்படாத இடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்போது அறுவடைக்களத்திற்குள் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கானோர் ஆவிக்குரிய வாழ்வில் எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள்; அதனால் பரலோகத்தை நோக்கிநொண்டிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள்தானா என்கிற சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்துவோடு உயிருள்ள உறவு அவர்களுக்கு தேவை. அப்படி இருந்தால்,அவர்களைப் பற்றி நீங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்கள்’ என்று சொல்லப்படும். பலரிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்: ‘உங்களை யாராவது திராட்சத்தோட்டத்திற்குச் சுமந்துசென்று, வேலை செய்ய வைக்கவேண்டுமென்று காத்திருக்கிறீர்கள்; அல்லது, திராட்சத்தோட்டத்தை உங்களிடம் கொண்டுவந்து, உங்கள் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். நீங்கள் காத்திருப்பது வீண். உங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தால், பயிர் விளைந்து அறுப்புக்கு ஆயத்தமாக இருப்பதைக் கண்டுகொள்ளலாம். அருகிலும் தொலைவிலும் செய்யவேண்டிய வேலை இருப்பதைக் காணலாம். நியாயத்தீர்ப்பில் எத்தனை பேரிடம் கிறிஸ்து, “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று சொல்லப்போகிறார்? தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்திருப்பதாகச் சொல்கிறவர்கள் கூட்டமாக ஒரே இடத்தில் குடியேறி, ஆலயத்துக்குச் சென்று, தாங்கள் எதுவுமே செய்யாமலிருந்தும் தங்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மையாக, சபை பெலப்படுகிற அளவுக்கும் எதுவும் சபையில் பிரசங்கிக்கப்படவில்லை என்று அதிருப்தியடைகிறார்கள். முடிவு நெருங்கிவருவதைப் பார்க்கும் தூதர்கள் இதைக்குறித்து என்ன நினைப்பார்களென யோசித்துப் பார்க்கிறேன். சத்தியம் அறிவிக்கப்படாத இடங்கள், அல்லது அதிக வெளிச்சம்பெறாத இடங்களுக்கு நீங்கள் குடிபெயரும்போது, அங்கு லௌகீகப் பொருளாதார வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவர்களை இரட்சிக்க இயேசு எவ்வாறு செயல்பட்டாரோ, அவ்வாறுதானே அவர்களும் செயல்படுகிறார்கள்? 1 TamChS 236.2

அயல்நாடுகளுக்கு மட்டுமல்ல, நமக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கும் சத்தியத்தைக்கொண்டு செல்வதற்கு நற்செய்தி ஊழியம் அவசியமென்பதைக் காண்கிறோம். ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக எந்த முயற்சிகளும் எடுக்கப்படாத பெருநகரங்களும் சிறுநகரங்களும் நம்மைச் சுற்றிலும் உள்ளன. கிறிஸ்துவின் கொடியை ஏற்றவேண்டும்; வெளிச்சம் குறித்த அறிவே இல்லாதவர் களுக்கு தங்களுடைய பாணியில் அல்ல, தேவனுடைய பாணியில் வெளிச்சத்தைக் கொண்டுவர தாழ்மையோடு செயல்படவேண்டும்; அந்த வேலையைச் செய்வதற்காக, தற்கால சத்தியத்தை அறிந்தவர்கள் அந்த நகரங்களிலும் கிராமங்களிலும் ஏன் குடியேறக்கூடாது? TamChS 237.1

நம்மிடமுள்ள தூதைப்பற்றிய உணர்வு மெய்யாகவே சபையில் காணப்பட்டால், கிறிஸ்து எந்த ஆத்துமாக்களுக்காக மரித்தாரோ அந்த ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஊழியம் செய்ய களங்களுக்குச் செல்வார்கள். நியமனப் போதகர்களாக அல்லாத சிலர் தேவனுடைய உடன் வேலையாட்களாக திருச்சபைகளைச் சந்திப்பார்கள்; அழிந்துபோகிற நிலையிலிருக்கும் விஷயங்களைப் பெலப்படுத்த முயல்வார்கள். சுயாதீன ஊழியர்கள் சிறு நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும், ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் சென்று, தேவன்தங்களுக்கு அருளின வெளிச்சத்தை மற்றவர்களுக் குப் பிரகாசிக்கச் செய்வார்கள். நீங்கள் சந்திக்கிற சிலர் மாறக்கூடிய வர்களாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், கிறிஸ்துவைப் போல நீங்கள் செயல்படுவீர்களா? அவருடைய ஆவியைப் பெற்றவர் களாக, போதனையாலும் முன்மாதிரியாலும் நீங்கள் ஏற்படுத்துகிற தாக்கமானது நீதிக்கும் சத்தியத்திற்கும் ஆதாரமானவருடைய நன்மைகளை எடுத்துக்காட்டுமா? இதுதான் கேள்வி. TamChS 237.2

சத்தியம் அறிவிக்கப்படாத இடங்களில், நற்செய்தி ஊழியத்தில் பழக்கப்பட்ட சகோதரர்கள் ஓர் அறை அல்லது கூடுவதற்கு வசதியான ஏதாவது இடத்தை வாடகைக்கு எடுத்து, வாஞ்சையுள்ள அனைவரையும் அங்கே கூட்டி, சத்தியத்தைப் போதிக்கலாம். பிரசங்கம் செய்யவேண்டியதில்லை; வேதாகமத்தை எடுத்து, தேவனை தம் வார்த்தையிலிருந்து நேரடியாகப் பேச அனுமதிப்பார்களாக. சிலர் மட்டுமே கலந்துகொண்டால், ஆராவாரம் இல்லாமல் ‘கர்த்தர் சொல்லுகிறதாவது’ என்று வேதபகுதிகளை வாசிக்கலாம். எளிய சுவிசேஷசத்தியத்தை வாசித்து, விளக்கம் கொடுத்து, அவர்களோடு சேர்ந்து பாடல்பாடி, ஜெபிக்கலாம். 1 TamChS 238.1