கிறிஸ்தவச் சேவை
மெய்யான தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டு
வேலை இப்போது துவங்கிவிட்டாலும் கூட நெகேமியாவின் வைராக்கியமும் ஆற்றலும் தணியவே இல்லை. பாரம் நீங்கிவிட்டதென நினைத்து, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கவில்லை. கொஞ்சமும் களைத்துப்போகாமல் விழிப்புடன் அந்த வேலையை தொடர்ந்து மேற்பார்வை செய்தான்; பணியாளர்களுக்கு வழி காட்டினான்; தடை ஏதாவது ஏற்படுகிறதாவெனக் கவனித்து வந்தான்; ஒவ்வொரு அவசர நிலையிலும் உதவினான். மூன்று மைல் தூர அலங்கம் நெடுகிலும் அவனுடைய செல்வாக்கு கொஞ்சமும் குறையாமல் உணரப்பட்டது. பயந்தோரை சமயத்திற்கேற்ற வார்த் தைகளால் தேற்றினான்; கருத்தோடு வேலைசெய்தவர்களைப் பாராட்டினான்; சுணங்கினவர்களைத் துரிதப்படுத்தினான். எதிரிகளின் நடமாட்டத்தை கழுகுக்கண்களோடு பார்த்துக்கொண்டே இருந்தான். ஏனென்றால், அவர்கள் அவ்வப்போது தூரத்தில் கூடினார்கள்; கேடு விளைவிக்க சதித்திட்டம் போடுவதுபோல ஒருவரோடு ஒருவர் மும்முரமாகப் பேசிக்கொண்டார்கள். அதன் பிறகு வேலை செய்தவர்களின் அருகில் வந்தார்கள்; வேலை செய்தவர்களுடைய கவனத்தைத்திருப்பவும், வேலையைத்தடுக்க வும் முயன்றார்கள். TamChS 230.3
ஒவ்வொரு பணியாளின் கண்களும் அவ்வப்போது நெகேமியாவை நோக்கின; நெகேமியாவிடமிருந்து சிறு சமிக்ஞை கிடைத்தாலும் உடனே செயல்பட ஆயத்தமாக இருந்தார்கள். ஆனால், நெகேமியாவின் கண்களும் இருதயமும் ஒட்டுமொத்த வேலையையும் கண்காணித்து வந்த மாபெரும் கண்காணியை நோக்கியது. கட்டவேண்டுமென்கிற நோக்கத்தை அவரே பணியாளர்களின் இருதயத்தில் வைத்திருந்தார். அவனுடைய இருதயம் தைரியத்திலும் விசுவாசத்திலும் பெலப்பட்ட போது, “பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப் பண்ணுவார்” என்று நெகேமியா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அங்கே எதிரொலித்தன; அலங்கம் நெடுகிலும் வேலை செய்துவந்த பணியாளர்களுடைய இருதயங்களைப் பரவசப்படுத்தின. 1 TamChS 231.1
நெகேமியாவும் அவனுடைய கூட்டாளிகளும் கஷ்டங்களைக் கண்டு முடங்கவில்லை; சோதனைமிக்க வேலைகளைச் செய்யாமல் சாக்குப்போக்குச் சொல்லவில்லை. பகலிலோ இரவிலோ, தூங்குவதற்குக் கிடைத்த சொற்ப நேரத்திலோகூட அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் களையவில்லை; தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவுமில்லை . ‘நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது” என்றார் நெகேமியா. TamChS 231.2