கிறிஸ்தவச் சேவை
14—மதச்சுதந்திரம்
பொருத்தமான ஒரு ஜெபம்
“நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்” என்று தாவீது ஜெபித்தான். இந்த ஜெபம் இக்காலத்திற்குப் பொருந்தும் என்பது எவ்விதத்திலும் பொய்யாகாது. உலகம் தேவனைவிட்டு விலகிச் சென்றது. அதன் நீதிக்குப்புறம்பான நிலை இருதயத்தைப் பதைக்கச்செய்ய வேண்டும். ராஜாதி ராஜாவின்மேல் மெய்ப்பற்றுள்ள அனைவரையும் ஒரு சீர்திருத்தப்பணிக்கு வழிநடத்த வேண்டும். யெகோவாவின் ஓய்வுநாளுக்குப்பதிலாக பொய்யான ஓர் ஓய்வு நாளைப் புகுத்தி, தேவனுடைய பிரமாணத்தை மாற்றுவதற்கு போப்பு வல்லமை யோசித்தது; இன்று கிறிஸ்தவ மார்க்கம் முழு வதிலும் பொய் ஓய்வுநாள் பயபக்திக்குரியதாக எண்ணப்படுகிறது; அதேசமயம் மெய்யான ஓய்வுநாள் பரிசுத்தமற்ற கால்களின் கீழ் மிதிக்கப்படுகிறது. TamChS 204.1
கிறிஸ்துவுக்கும் அவருடைய தூதர்களுக்கும் சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையேயான இறுதி மாபெரும் போராட்டமானது தேவனுடைய பிரமாணம் பற்றியதாக இருக்கும்; உலகம் முழுவதும் இதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படும். பொறுப்புமிக்க பதவிகளிலுள்ள மனிதர்கள் ஓய்வுநாளைப் புறக்கணித்து, ஒதுக்குவது மட்டுமன்றி, பரிசுத்த மேடையின்மேல் நின்று வாரத்தின் முதலாம் நாளைக் கைக்கொள்ளும்படி மக்களை வலியுறுத்துவார்கள்; மனிதன் ஏற்படுத்தின அந்த ஏற்பாட்டிற்கு ஆதரவாக சம்பிரதாயத்தையும் பழக்கவழக்கங்களையும் காட்டுவார்கள். கடும் புயல்கள், வெள்ளங்கள், பூமியதிர்ச்சிகள், அக்கினி அழிவு போன்று நிலத்திலும் சமுத்திரத்திலும் உண்டாகும் பேரழிவுகளை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தமாக ஆசரிக்காததால்தான் தேவன் கோபப்பட்டு அந்த நியாயத் தீர்ப்புகளை அனுப்பியதாகச் சொல்லுவார்கள். இந்தப் பேரழிவுகள் போகப்போக அதிகரிக்கும். ஒன்றன்பின் ஒன்றாக அவை நிகழ்ந்து கொண்டே இருக்கும். தேவபிரமாணத்தை கைக்கொள்ளாதவர்கள், நான்காம் கற்பனையைக் கைக்கொள்கிற ஒரு சிலரைச் சுட்டிக் காட்டி, உலகத்தின்மேல் கோபத்தைக் கொண்டுவருகிறவர்கள் அவர்கள்தாம் என்று சொல்வார்கள். எச்சரிக்கையோடு இல்லாதவர்களைச் சிக்கவைக்க சாத்தான் பயன்படுத்துகிற கண்ணியே இந்தப் பொய். 1 TamChS 204.2