கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

13/73

13 - விசுவாசச் சோதனை

ஒரு குமாரனைக் குறித்த வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் கேள்வி கேட்காது ஏற்றுக்கொண்டான். என்றாலும் தேவன் தமது வார்த்தையை தமது நேரத்திலும் தமது வழியிலும் நிறைவேற்ற அவன் காத்திருக்கவில்லை . தேவனுடைய வல்லமையின் மேலிருக்கும் அவனுடைய விசுவாசத்தை சோதிக்கும்படியாக ஒரு தாமதம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சோதனையைத் தாங்குவ தில் அவன் தோல்வியடைந்தான். தனது வயதில் தனக்கு ஒரு குமாரன் கொடுக்கப்படுவது நடக்கக்கூடாத காரியம் என்று நினைத்தவளாக, தனது பணிப்பெண்களில் ஒருத்தியை இரண் டாவது மனைவியாக ஆபிரகாம் எடுத்துக் கொள்ளுவது, தெய்வீக நோக்கம் நிறைவேறுவதற்கேதுவான திட்டமாக சாராள் ஆலோசனை கூறினாள். பலதார மணங்கள் பிரபலமாகியிருந்ததால், அது பாவம் என்று கூட நினைக்கப்படாமல் போயிற்று. என்றாலும், அது எந்தவிதத்திலும் தேவனுடைய பிரமாணங்களை மீறுவதும், குடும்ப உறவின் புனிதத்திற்கும் சமாதானத்திற்கும் ஆபத்தானதுமாக இருந்தது. PPTam 160.1

ஆபிரகாமின் மனைவி என்ற புதிய தகுதியினால் கிடைத்த கனத்தில் அவனிடமிருந்து வரப்போகிற மகா பெரிய ஜனத்திற்கு தான் தாயாகப் போவதை நம்பி ஆகார் பெருமையும் அகந்தையு முள்ளவளாகி, தன் நாச்சியாரை இழிவாக நடத்தினாள். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பொறாமை ஒருகாலத்தில் மகிழ்ச்சியான இல்லமாக இருந்ததன் சமாதானத்தை கலைத்தது. இருவருடைய குற்றச்சாட்டுகளையும் கவனிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த ஆபிரகாம், மீண்டும் ஒரு இணக்கத்தைக் கொண்டுவர வீணாகவே முயற்சித்தான். சாராளின் மனப்பூர்வமான மன்றாட்டினிமித்தம் அவன் ஆகாரை திருமணம் பண்ணியிருந்தபோதும், அவன்தான் தவறு செய்திருக்கிறான் என்பதைப்போல் அவள் அவனை நிந்தித் தாள். தனது போட்டியாளரை விரட்ட அவள் விரும்பினாள். ஆனால் வாக்குத்தத்தத்தின் மகன் என்று ஆசையோடு தான் நம்பியிருந்த தன் பிள்ளையின் தாயாக ஆகார் இருந்ததால், ஆபிரகாம் அதை அனுமதிக்க மறுத்துவிட்டான். என்றாலும் அவள் சாராளுடைய வேலைக்காரி . எனவே தன் எஜமானியின் கட்டுப்பாட்டிற்கே அவன் அவளை விட்டிருந்தான். தனது மரியாதையற்ற நடக்கை தூண்டிவிட்டிருந்த கண்டிப்பை ஆகாரின் கர்வமான ஆவி சகித்துக் கொள்ளாது. சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள். PPTam 160.2

அவள் வனாந்தரத்தை நோக்கிச் சென்றாள். ஒரு ஊற்றண்டையில் தனிமையாகவும் துணையின்றியும் அவள் ஓய்வெடுத்திருந்த போது, மனித உருவில் ஒரு தேவதூதன் அவளுக்குக் காணப்பட்டான். அவளுடைய இடம் எது என்பதையும் அவள் கடமை என்ன என்பதையும் அவளுக்கு நினைப்பூட்டும் படி சாராயின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே என்று அவளை அழைத்து, நீ உன் நாச்சி யாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்று கூறினான். என்ற போதும் கடிந்துகொள்ளுதலோடு ஆறுத லான வார்த்தைகளும் கலந்திருந்தது. கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன். அது பெருகி, எண்ணி முடியாததாயிருக்கும் என்றான். அவருடைய கிருபையை எந்நாளும் நினைவில் வைத்திருக்கும்படி அவளுடைய குழந்தைக்கு தேவன் கேட்பார் என்று பொருள் கொள்ளும் விதத்தில் இஸ்மவேல் என்று பெயர் வைக்கக் கூறினார். PPTam 161.1

ஆபிரகாமுக்கு ஏறக்குறைய நூறு வயதாகியிருந்தபோது, எதிர்கால வாரிசு சாராளின் பிள்ளையாகவே இருப்பான் என்னும் உறுதியோடு ஒரு குமாரனைக்குறித்த வாக்குத்தத்தம் அவனுக்குத் திரும்பக்கூறப்பட்டது. ஆனால் ஆபிரகாம் அந்த வாக்குத்தத்தத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இஸ்மவேலின் வழியாக தேவனுடைய கிருபையுள்ள நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை பற்றினதாக அவன் மனது இஸ்மவேலிடம் திரும்பியது . தனம் மகன்மேல் இருந்த பாசத்தில் இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்றான். மீண்டும் தவறாக எடுத்துக்கொள்ளவே முடியாத உன் மனைவியாகிய சாராள் நிச்சய மாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக, என் உடன்படிக்கையை அவனுக்கும் ..... ஸ்தாபிப்பேன் என்ற வார்த்தைகளில் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. என்றாலும் தகப்பனுடைய ஜெபத்தை தேவன் கவனிக்காது இல்லை. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன், நான் அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெரிய ஜாதி யாக்குவேன் என்றார். PPTam 161.2

ஈசாக்கின் பிறப்பு, வாழ்நாள் முழுவதும் காத்திருந்த பின்பு அவர்களுடைய மிகப்பிரியமான நம்பிக்கைகளை நிறைவேற்றி, ஆபிரகாம் சாராளின் கூடாரத்தை ஆனந்தத்தால் நிரப்பியது. ஆனால் ஆகாருக்கு, அவள் போற்றியிருந்த உயர்ந்த நோக்கத்தை இந்தச் சம்பவம் கவிழ்ப்பதாக இருந்தது. இப்போது வாலிபனாக இருந்த இஸ்மவேல், ஆபிரகாமுடைய சொத்தின் சுதந்தரவாளியா கவும், அவனுடைய சந்ததிக்கு வாக்குப்பண்ணப்பட்டிருந்த ஆசீர் வாதங்களை சுதந்தரிப்பவனாகவும் பாளயத்திலிருந்த அனைவ ராலும் கருதப்பட்டிருந்தான். சடிதியாக இப்போது அவன் ஒதுக்கப் பட்டான். தங்களுடைய ஏமாற்றத்தில் தாயும் மகனும் சாராளின் குழந்தையை வெறுத்தார்கள். பொதுவாக இருந்த மகிழ்ச்சி, தேவ னுடைய வாக்குகளின் சுதந்தர வாளியை வெளிப்படையாக பரிக சிக்கத் துணியும் வரைக்கும் அவர்களுடைய பொறாமையை அதி கரிக்கச் செய்தது. சாராள் இஸ்மவேலிடம், கொந்தளித்துக் கொண்டிருந்த மனநிலையை, ஒரு இணக்கமற்ற தொடர்நிலையைக் கண்டாள். எனவே ஆகாரும் இஸ்மவேலும் பாளயத்திலிருந்து அனுப்பப்படவேண்டும் என்று அவள் ஆபிரகாமிடம் முறையிட் டாள். முற்பிதா, மாபெரும் துயரத்திற்குள் தள்ளப்பட்டான். இன்னமும் அன்பாக நேசிக்கப்பட்டிருந்த தனது மகன் இஸ்மவேலை அவன் எப்படித் துரத்துவான்? தனது குழப்பத்தில் தெய்வீக நடத்துதலுக்காக மன்றாடினான். சாராளின் விருப்பத்துக்கு இணங்கும்படி ஆண்டவர் ஒரு பரிசுத்த தூதன் மூலமாக அவனை நடத்தினார். இஸ்மவேல் மீதாகிலும் அல்லது ஆகார்மீதாகிலும் அவன் கொண்டிருந்த அன்பு, வழியில் நிற்கக்கூடாது. ஏனெனில் இவ்விதமாகத்தான் அவனுடைய குடும்பத்தின் இணக்கத்தையும் மகிழ்ச்சியையும் அவன் மீண்டும் கொண்டு வரமுடியும். தகப்ப னுடைய குடும்பத்தைவிட்டு, பிரிக்கப்பட்டாலும், இஸ்மவேல் தேவனால் மறக்கப்படமாட்டான் என்கிற ஆறுதலளிக்கும் வாக்குறுதியை தூதன் அவனுக்குக் கொடுத்தான். அவன் உயிர் பாதுகாக்கப்பட்டு, அவன் பெரிய ஜாதிக்குத் தகப்பனாக வேண்டும். ஆபிரகாம் தூதனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான். என்ற போதும் அது கூரிய வேதனையின்றி இருக்கவில்லை. ஆகாரையும் அவனுடைய குமாரனையும் வெளியே அனுப்பின போது தகப்பனுடைய இருதயம் சொல்லப்படாத வருத்தத்தால் பாரமாகியிருந்தது. PPTam 162.1

திருமண உறவின் புனிதத்தைக் குறித்து ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட போதனை அனைத்து காலத்துக்குமான போதனையாக இருந்தது. இந்த உறவின் உரிமைகளும் மகிழ்ச்சியும் மாபெரும் தியாகங்கள் செய்தும் கவனமாக காக்கப்பட வேண்டும். சாராளோ, ஆபிரகாமின் ஒரே உண்மையான மனைவி. மனைவி மற்றும் தாய் என்ற அவளுடைய உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள எவருக்கும் உரிமம் இல்லை . அவள் தன் கணவனிடம் பயபக்தியாயிருந்தாள். இதினிமித்தம் புதிய ஏற்பாட்டில் தகுதியான உதாரண மாக காட்டப்பட்டிருக்கிறாள். ஆனால் ஆபிரகாமின் பிரியம் மற்றொருவருக்குக் கொடுக்கப்படுவதை அவள் ஏற்றுக்கொள்ள வில்லை. தனது போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என்ற அவளுடைய கோரிக்கையை ஆண்டவர் கடிந்துகொள்ளவில்லை. சாராளும் ஆபிரகாமும் தேவனுடைய வல்லமையை நம்பாமற்போனார்கள். இந்தத் தவறே, ஆகாருடனான திருமணத்திற்கு வழிநடத்தியது. PPTam 163.1

விசுவாசிகளின் தகப்பனாயிருக்கும்படியும், தொடர்ந்துவரு கின்ற தலைமுறைகளுக்கு அவனுடைய வாழ்க்கை விசுவாசத்திற்கான உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் தேவன் ஆபிரகாமை அழைத்தார். ஆனால் அவனுடைய விசுவாசம் பூரணமானதாக இல்லை. சாராளை தன் மனைவி என்பதை மறைத்ததிலும், ஆகாரை திருமணம் செய்ததிலும் தேவன்மேல் அவநம்பிக்கையை அவன் காண்பித்தான். உயர்ந்த தரத்தை அவன் எட்டும்படியாக, சகிக்கும் படி மனிதன் அழைக்கப்பட்டிருக்கிற மிக நெருக்கமான மற்றொரு பரீட்சைக்கு தேவன் அவனை உட்படுத்தினார். ஒரு இராத்தரிசனத்தில், மோரிய தேசத்துக்குச் செல்லும் படியும், அங்கே அவனுக்குக் காட்டப்படும் மலை ஒன்றில் அவன் மகனை தகனபலியாக பலியிடும் படியும் நடத்தப்பட்டான். PPTam 163.2

இந்தக் கட்டளையைப் பெற்றபோது, ஆபிரகாம் 120 வயதை அடைந்திருந்தான். அவனுடைய அந்தக் காலத்திலேயே அவன் வயதான மனிதனாகக் கருதப்பட்டிருந்தான். அவனுடைய இள மைக் காலங்களில் கஷ்டத்தைத் தாங்கவும் ஆபத்துக்களை சந்திக் கவும் அவன் பலவானாயிருந்தான். ஆனால் இப்போது வாலிபத் தின் தீவிரம் தாண்டிப் போயிருந்தது. கால்கள் கல்லறையை நோக் கிப்போய்க்கொண்டிருக்கிற பின் நாட்களில் ஒருவனுடைய மனதை சோர்வடையச் செய்யக்கூடிய கஷ்டங்களையும் உபத்திர வங்களையும், அவன் தன் வாலிபத்தின் பலத்தில் தைரியமாக சந்திக்கலாம். ஆனால் ஆபிரகாமின் மேல் அவனுடைய வயதின் பாரம் அதிகமாக இருக்கும் போது, கொடுப்பதற்கென்று தமது கடை சியான மிகவும் பரீட்சிக்கக்கூடிய சோதனையை தேவன் வைத் திருந்தார். அவன் வேதனையிலும் உழைப்புகளிலுமிருந்து இளைப் பாற ஏங்கினான். PPTam 164.1

முற்பிதா, செழிப்பாலும் கனத்தாலும் சூழப்பட்டு, பெயர்செபா வில் குடியிருந்தான். அவன் பெரிய ஐசுவரியவானாயிருந்து, வல்லமையான அதிபதியாக அத்தேசத்தை ஆட்சி செய்தவர்களால் கனப்படுத்தப்பட்டிருந்தான். அவனுடைய பாளயத்தைத்தாண்டி விரிந்திருந்த சமபூமிகளை ஆயிரக்கணக்கான ஆடுகளும் மாடு களும் மூடியிருந்தன. எப்பக்கத்திலும் அவனோடு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான விசுவாசமான ஊழியக்காரர்களின் வீடுகள் இருந்தன. அவன் அருகிலே வாக்குத்தத்தத்தின் மகன் வாலிபனாக வளர்ந்திருந்தான். தாமதிக்கப்பட்டிருந்த நம்பிக்கைக்காக பொறுமையோடு காத்திருந்த தியாகம் செய்திருந்த வாழ்க்கையை, பரலோகம் அதனுடைய ஆசீர்வாதங்களால் முடிசூட்டியிருந்ததைப்போலத் தோன்றியது. PPTam 164.2

விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்ததினால் ஆபிரகாம் தனது சொந்த தேசத்தை தனது தகப்பன்களுடைய கல்லறைகளும் தன் இனத் தாரின் தேசமுமாயிருந்ததை கைவிட்டிருந்தான். தான் சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் ஒரு அந்நியனைப்போல் அலைந்தான். வாக்குத் தத்தம் பண்ணப்பட்டிருந்த சுதந்திரவாளியின் பிறப்பிற்காக நீண்ட காலம் காத்திருந்தான். தேவனுடைய கட்டளையின்படி தனது குமா ரன் இஸ்மவேலை வெளியே அனுப்பிவிட்டான். தான் நீண்டகாலம் வாஞ்சித்திருந்த குழந்தை தனது வாலிபத்தில் நுழைந்தபோது, தனது நம்பிக்கைகளின் கனிகளை முற்பிதாவால் காண முடிந்தது. இந்த நேரத்தில் மற்ற எல்லாவற்றையும் விட பெரிய பரீட்சை அவன் முன் இருந்தது. PPTam 164.3

அந்தத் தகப்பனுடைய இருதயத்தை வேதனையால் பிழிந் தெடுத்திருக்கக்கூடிய வார்த்தைகளில் . உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை ... அங்கே .... தகனபலியாகப்பலியிடு என்கிற கட்டளை வெளிப்படுத்தப்பட்டது. ஈசாக்கு அவனுடைய இல்லத்தின் வெளிச்சமாகவும், அவனுடைய வயதான காலத்தின் ஆறுதலாகவும் அனைத்திற்கும் மேலாக, வாக்குப் பண்ணப்பட்டிருந்த ஆசீர்வாதங்களின் சுதந்தரவாளி யாகவும் இருந்தான். அப்படிப்பட்ட மகனை விபத்திலோ அல்லது வியாதியிலோ இழப்பது கூட அந்த பிரியமான தகப்பனுடைய இருதயத்தை கிழிக்கிறதாயிருக்கும். அது அவனுடைய நரைத் தலையை துக்கத்தில் குனியச் செய்திருக்கும். ஆனால் அந்த குமாரனுடைய இரத்தத்தை அவனுடைய சொந்தக் கைகளாலேயே சிந்தும்படியாக அவன் கட்டளை பெற்றான். அது அவனுக்கு பயம் நிறைந்த நடக்கக்கூடாத காரியமாகத் தோன்றியது. PPTam 165.1

தெய்வீக கட்டளை : கொலை செய்யாதிருப்பாயாக என்று சொல்லுகிறபடியால் அவன் வஞ்சிக்கப்படுவான் என்றும், தேவன் ஒருமுறை விலக்கியிருப்பதை மீண்டும் கோரமாட்டார் என்றும் ஆலோசனை கூறும் படி சாத்தான் ஆயத்தமாயிருந்தான். தன் கூடாரத்தைவிட்டு வெளியே சென்று, மேகமில்லாத வானங்களின் அமைதியான பிரகாசத்தை ஆபிரகாம் பார்த்தான். நட்சத்திரங்களைப்போன்று அவனுடைய சந்ததி எண்ணக்கூடாததாயிருக்கும் என்று ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுக்குக் கொண்டுவந்தான். அந்த வாக்குறுதி ஈசாக்கின் வழியாக நிறைவேறும் என்றால், அவனை எப்படி மரணத்திற்குக் கொடுக்கமுடியும், தான் ஏதோ ஒருவஞ்சகத்தின் கீழ் இருப்பதாக நம்பும்படி ஆபிரகாம் சோதிக்கப்பட்டான். தனது சந்தேகத்திலும் வேதனையிலும் தரையில் பணிந்து, இதற்கு முன் ஒருபோதும் ஜெபித்திராதவிதத்தில், இந்த பயங்கரமான கடமையை கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்கிற கட்டளையை உறுதிப்படுத்தும்படி ஜெபித்தான். சோதோமை அழிக்கும் படியான தேவனுடைய நோக்கத்தை தனக்கு வெளிப்படுத்த அனுப்பப்பட்ட தூதனையும், இதே குமாரன் ஈசாக்கைக் குறித்த வாக்குத்தத்தத்தை தனக்குக் கொண்டு வந்த தூதனையும் நினைவு கூர்ந்தான். அநேகந்தடவை பரலோகத் தூதுவர்களை தான் சந்தித்திருந்த இடத்திற்கு, மீண்டும் அவர்களைச் சந்தித்து கூடுதலான நடத்துதலை பெறும் எதிர்பார்ப்பில் சென்றான். இருள் அவனை அடைத்துப் போடுவதாகத் தோன்றியது. ஆனால் உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, என்கிற தேவனுடைய கட்டளை அவன் காதுகளில் தொனித்துக்கொண்டிருந்தது. இந்தக் கட்டளை கீழ்ப்படியப்பட வேண்டும். தாமதிக்க அவனுக்கு தைரியமில்லை. பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் பிரயாணப்படவேண்டும். PPTam 165.2

தன் கூடாரத்துக்குத் திரும்பினவனாக, தன் வாலிபத்தின் குற்றமின்மையில் ஈசாக்கு ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த இடத் திற்குச் சென்றான். ஒரு நொடி, தகப்பன் தன் மகனுடைய பிரியமான முகத்தைப் பார்த்து, நடுக்கத்தோடு திரும்பினான். தூங்கிக்கொண்டிருத சாராளின் அருகில் சென்றான். தன் குமாரனை இன்னும் ஒரு முறை அணைத்துக்கொள்ளும்படியாக அவளை எழுப்ப வேண்டுமா? தேவனுடைய கோரிக்கையை அவன் அவளிடம் சொல்ல வேண்டுமா? தனது மனதின் பாரத்தை அவள் மேல் வைத்து, இந்த பயங்கரமான பொறுப்பை அவளோடு பகிர்ந்து கொள்ள ஏங்கி னான். ஆனால் அவள் தடுத்துவிடுவாள் என்ற பயத்தால் அவன் கட்டுப்படுத்தப்பட்டான். ஈசாக்கு அவளுடைய மகிழ்ச்சியும், பெரு மிதமுமாயிருந்தான். அவனில் அவள் வாழ்க்கை கட்டப்பட்டிருந்தது. தாயின் அன்பு இந்தப் பலியை மறுத்துவிடலாம். PPTam 166.1

தூரத்திலிருக்கிற மலையில் பலிகொடுக்கும் படியான கட்ட ளையைச் சொல்லி, ஆபிரகாம் கடைசியாக தன் குமாரனை அழைத் தான். அவனுடைய அலைச்சல்களைக் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பலி பீடத்தில் ஆராதிக்கும்படி ஈசாக்கு தன் தகப்பனோடு பல வேளைகளில் சென்றிருக்கிறான். இந்த அழைப்பு அவனில் எந்த ஆச்சரியத்தையும் உண்டாக்கவில்லை. PPTam 166.2

பிரயாணத்திற்கான ஆயத்தங்கள் விரைவாக முடிக்கப்பட்டன. கட்டைகள் ஆயத்தப்படுத்தப்பட்டு, கழுதையின்மேல் வைக்கப்பட்டது. இரண்டு ஆண் வேலைக்காரர்களோடு அவர்கள் பிரயாணப் பட்டார்கள், PPTam 166.3

தகப்பனும் மகனும் பக்கம் பக்கமாகமெளனமாக பயணித்தார்கள். பாரமான இரகசியத்தைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்த முற்பிதாவிற்கு, பேச மனம் இல்லை . அவனுடைய எண்ணங்கள் பிரியமான மனநிறைவோடிருந்த தாயின் மேலும், தான் அவளிடம் தனியாகத் திரும்பும் நாளைக்குறித்ததுமாக இருந்தது. தனது குமார னுடைய உயிரை எடுக்கும் போது, அந்தக் கத்தி, தனது இருதயத்தை குத்தும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். PPTam 166.4

ஆபிரகாம் அனுபவித்திருந்த மிக நீண்ட நாள் அந்த நாள் மெதுவாக முடிவுக்கு வந்தது. தனது குமாரனும் வாலிபர்களும் தூங்கிக்கொண்டிருந்தபோது, பரீட்சை போதும் என்றும், அந்த வாலிபன் எந்த பாதிப்புமின்றி அவனுடைய தாயினிடத்துக்குத் திரும்பலாம் என்றும் சொல்லும்படியாக சில பரலோகத் தூதுவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று இன்னும் நம்பினவனாக ஆபிரகாம் அந்த இரவை ஜெபத்தில் செலவிட்டான். ஆனால் வாதிக்கப்பட்ட ஆத்துமாவிற்கு எந்த விடுதலையும் வரவில்லை. அவனை பிள்ளையற்றவனாக ஆக்குகிற கட்டளை காதுகளில் எப்போதும் தொனித்துக்கொண்டிருக்க, மற்றொரு நீண்ட நாளும் மற்றொரு தாழ்மையும் ஜெபமும் கொண்ட இரவும் கடந்தது. சந்தேகங்களையும் அவிசுவாசத்தையும் காதுகளில் முணுமுணுக்க சாத்தான் அருகி லேயே இருந்தான். ஆனால் ஆபிரகாம் அவனுடைய ஆலோசனைகளைத் தடுத்தான். மூன்றாம் நாளில் அவர்கள் தங்கள் பிரயாணத்தை துவங்க இருந்தபோது, வடக்கு நோக்கிப் பார்த்த முற்பிதா, மோரியா மலையின் மீது தங்கியிருந்த மகிமையின் மேகத்தை வாக்குத்தத்தத் தின் அடையாளத்தைக் கண்டான். தன்னோடு பேசின சத்தம் வானத் திலிருந்துதான் வந்திருக்கிறது என்கிறதை அவன் அறிந்தான். PPTam 166.5

இப்போதுங்கூட அவன் தேவனுக்கு எதிராக முறுமுறுக்க வில்லை. மாறாக, ஆண்டவருடைய நன்மைக்கும் உண்மைக்குமான சான்றுகளின் மேல் திளைத்தவனாக, தன் ஆத்துமாவை பலப் படுத்தினான். இந்தக் குமாரன் எதிர்பாராமல் கொடுக்கப்பட்டான். இந்த விலையேறப்பெற்ற பரிசை கொடுத்தவருக்கு தமக்குச் சொந்தமானதை திரும்ப எடுத்துக்கொள்ள உரிமையில்லையா? பின்னர் : ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்ற கடற்கரை மணலைப் போன்ற எண்ணக் கூடாத சந்ததியைக் குறித்த வாக்குத்தத்தத்தை விசுவாசம் திரும்பத்திரும்பச் சொன்னது. ஈசாக்கு அற்புதமாகக் கொடுக்கப்பட்ட பிள்ளை. அவனுக்கு ஜீவனைக் கொடுத்த வல்லமைக்கு மீண்டும் அதைத் தரமுடியாதா? காணப்பட்டதைத் தாண்டி பார்த்தவனாக, இப்படிப்பட்ட வாக்குத் தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து மெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறார் (எபி. 11:19) என்கிற தெய்வீகவார்த்தையை ஆபிரகாம் இறுகப் பற்றிக்கொண்டான். PPTam 167.1

என்றாலும், தனது குமாரனை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பதில் இருக்கும் தகப்பனுடைய தியாகம் எவ்வளவு மகா பெரியது என் கிறதை தேவனைத்தவிர வேறு எவரும் புரிந்துகொள்ள முடியாது. பிரிந்துபோகும் அந்த காட்சியை தேவனைத் தவிர்த்து வேறு எவரும் பார்க்கக்கூடாது என்று ஆபிரகாம் வாஞ்சித்தான். நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுது கொண்டு, உங்களிடத்துக்குத்திரும்பிவருவோம் என்று கூறி, வேலைக்காரரை பின்தங்கச் சொன்னான். கட்டைகள் பலியாக்கப்படவேண்டியவன் மேல்வைக்கப்பட்டு, கத்தியையும் நெருப்பையும் எடுத்துக் கொள்ள, இருவரும் சேர்ந்து மலைச்சிகரத்தை நோக்கி ஏறினார்கள். தொழுவங்களும் மந்தைகளும் வெகு தூரத்திலிருக்க எங்கேயிருந்து காணிக்கை வந்து சேரும் என்று வாலிபன் சிந்தித்துக்கொண்டிருந் தான். கடைசியாக என் தகப்பனே ... இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது. தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று அவன் கேட்டான். ஓ! இது என்ன சோதனை! என் தகப்பனே என்ற பிரிய மான வார்த்தைகள் ஆபிரகாமின் இருதயத்தை குத்தின! இப்போதே அல்ல அவனுக்கு இப்போது அவனால் செல்லமுடியாது. என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான். PPTam 167.2

குறிக்கப்பட்ட இடத்தில் அவர்கள் பலிபீடத்தைக் கட்டி, கட் டைகளை அதன்மேல் அடுக்கினார்கள். பின்னர், நடுங்கும் குரலில் தனது குமாரனுக்கு தெய்வீகச் செய்தியைத் திறந்து காண்பித்தான் ஆபிரகாம் . திகைப்போடும் ஆச்சரியத்தோடும் ஈசாக்கு தன் முடிவை அறிந்து கொண்டான். என்றாலும் எந்தவித எதிர்ப்பையும் அவன் காட்டவில்லை . அவன் தனது அழிவிலிருந்து தப்பித்திருக் கலாம் விரும்பியிருந்தால் ! துக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த மூன்று பயங்கரமான நாட்களின் போராட்டத்தால் பெலவீனமடைந்திருந்த அந்த வயதான மனிதன், பலங்கொண்ட வாலிபனின் தீர்மானத்தை எதிர்த்திருக்க முடியாது. ஆனால் ஈசாக்கு தன் குழந்தைப்பருவத் திலிருந்தே உடனடியாக நம்பிக் கீழ்ப்படியும் பழக்கத்தில் பயிற்று விக்கப்பட்டிருந்தான். தேவனுடைய நோக்கம் அவன் முன்பாகத் திறக்கப்பட்டபோது, அவன் மனதார ஒப்புக்கொடுத்தான். அவன் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பகிர்ந்து கொண்டான். தனது ஜீவனை தேவனுக்குக் கொடுக்க அழைக்கப்பட்டதினால், தான் கனப்படுத்தப்பட்டதாக அவன் உணர்ந்தான். தன் தகப்பனுடைய துக்கத்தை இலகுவாக்க மென்மையாக நாடி, அவனை பலிபீடத் தோடு இணைக்கிற கயிறுகளால் கட்டும் படி பெலமிழந்த அவனுடைய கரங்களை உற்சாகப்படுத்தினான். PPTam 168.1

இப்போது அன்பான கடைசி வார்த்தைகள் பேசப்பட்டன, கடைசி கண்ணீர் சிந்தப்பட்டது, கடைசியாகத் தழுவிக்கொண்டார்கள். தன் மகனை கொல்லும்படியாக தகப்பன் கத்தியை உயர்த்து கிறான். அப்போது சடிதியாக அவன் கரம் நிறுத்தப்பட்டது. ஒரு தேவதூதன் முற்பிதாவை வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிர காமே என்று கூப்பிட்டார், அவன் உடனே : இதோ, அடியேன் என்றான். மீண்டுமாக, பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே, நீ அவனை உன் புத் திரன் என்றும், உன் ஏக்சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்ற சத்தம் கேட்கப்பட்டது. PPTam 168.2

பின்னர் ஆபிரகாம், பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக் கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். துரிதமாக அந்தப் புதிய பலியைக் கொண்டுவந்து, தன் குமாரனுக்குப் பதி லாகச் செலுத்தினான். தனது மகிழ்ச்சியிலும் நன்றியிலும் ஆபிரகாம் அந்த பரிசுத்தமான இடத்துக்கு கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று பொருள் கொள்ளும் யேகோவாயீரே என்று பெயரிட்டான். PPTam 169.1

மோரியா மலையில் தேவன் தமது உடன்படிக்கையை மீண்டும் புதுப்பித்து, ஆபிரகாமுக்கும் அவன் வித்துக்கும் அனைத்து காலங்களுக்குமான ஆசீர்வாதங்களை : நீ உன் புத்திரன் என்றும், உன் எக்சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால் நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல் லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்ற பவித்திரமான ஆணையின் வழியாக உறுதிப் படுத்தினார். PPTam 169.2

பின் வந்த அனைத்து காலங்களுக்கும் ஆபிரகாமுடைய மாபெரும் விசுவாச கிரியை ஒரு அக்கினி ஸ்தம்பமாக நின்று தேவனுடைய ஊழியக்காரரின் பாதைகளைப் பிரகாசிக்கிறது. தேவனுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆபிரகாம் தேடவில்லை. அந்த மூன்று நாட்கள் பிரயாணத்தில் சந்தேகிக்க இடம் கொடுத்திருந்தால், காரணங்கள் சொல்லி தேவனை சந்தேகிக்க அவனுக்குப் போதுமான நேரமிருந்தது. தன் குமாரனை கொல்லுவது அவனை ஒரு கொலைகாரனாக இரண் டாம் காயீனாக பார்ப்பதற்கு நடத்தும் என்றும், அது அவனுடைய போதனைகளை நிராகரித்து ஒதுக்க வழி நடத்தியிருக்கும் என்றும், இவ்விதமாக தனது சக மனிதருக்கு நன்மை செய்யும் தனது வல்ல மையை அது அழித்திருக்கும் என்றும் அவன்காரணப்படுத்தியிருக் கலாம். தனது வயதினிமித்தம் கீழ்ப்படிவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க அவன் மன்றாடியிருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட எந்தவித தப்பிக்கும் வழியிலும் முற்பிதா அடைக்கலம் பெற வில்லை . ஆபிரகாம் ஒரு மனிதன், அவனுடைய உணர்ச்சிகளும் இணைப்புகளும் நம்முடையதைப்போலவே இருந்தது. என்றாலும் ஈசாக்கு கொல்லப்பட்டால் எவ்வாறு வாக்குத்தத்தம் நிறைவேற முடியும் என்று கேள்வி கேட்க அவன் நிற்கவில்லை. வலித்துக் கொண்டிருந்த தன் மனதோடு பேச அவன் தாமதிக்கவில்லை. தேவன் தமது கோரிக்கைகளிலெல்லாம் நீதியும் நியாயமுமுள்ள வரென்று அவன் அறிந்திருந்து, கட்டளையின் வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தான். PPTam 169.3

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதி யாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று, அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்யாக் 2:23; பவுல் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று (கலா 3:9) சொல்லுகிறான். ஆபிரகாமின் விசு வாசம் அவனுடைய கிரியைகளால் வெளிக்காட்டப்பட்டது. நம் முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத் தின்மேல் செலுத்தின் போது, கிரியைகளினாலே அல்லவோ நீதி மானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப் பட்டதென்று காண்கிறாயே - யாக். 221, 22. விசுவாசத்திற்கும் கிரியைக்குமான உறவை புரிந்துகொள்ள அநேகர் தவறுகிறார்கள். கிறிஸ்துவை விசுவாசி, நீ பாதுகாப்பாயிருப்பாய், கற்பனைகளை கைக்கொள்ளுவதால் ஒன்றுமாகாது என்கிறார்கள். ஆனால் உண் மையான விசுவாசம் கீழ்ப்படிதலில் காட்டப்படும். விசுவாசியாத யூதர்களைப் பார்த்து, இயேசு: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே (யோவான் 8:39) என்றார். விசுவாசத்தின் தகப்பனைப் பார்த்து : ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால் (ஆதி. 24) என்றார். அப்போஸ்தலனாகிய யாக்கோபு : விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் (யாக். 2:17) என்கிறான். யோவான்: நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம் (1 யோவான் 5:3) என்கிறான். PPTam 170.1

அடையாளங்கள் மற்றும் வாக்குறுதிகளின் வழியாக தேவன் : ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தார். கலா. 38. முற்பிதாவின் விசுவாசம் வரப்போகிற மீட்பரின் மேல் தங்கியிருந்தது. இயேசு யூதர்களிடம் உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான் கண்டு களி கூர்ந்தான் (யோவான் 8:56 ) என்றார். ஈசாக்குக்குப் பதிலாக பலியிடப்பட்ட ஆடு, நமக்குப் பதிலாக பலியாகவிருந்த தேவனுடைய குமாரனை எடுத்துக்காட்டியது. மனிதன் தேவனுடைய பிரமாணங்களை மீறினதினால் மரணத்திற்கென்று குறிக்கப்பட்டபோது, பிதா, தமது குமாரனைப் பார்த்தவராக, பாவியிடம் : பிழைத்திரு, மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்று சொன்னார். PPTam 171.1

சுவிசேஷத்தின் சத்தியத்தினால் ஆபிரகாமின் மனதில் பதிவை உண்டாக்கவும், கூடவே அவனை சோதிக்கவுந்தக்கதாக அவனது குமாரனைக் கொல்லும்படி தேவன் கட்டளையிட்டார். மனிதரின் மீட்பிற்காக நித்திய தேவனால் செய்யப்பட்ட தியாகத்தின் மேன்மையைக் குறித்த சிலவற்றை ஆபிரகாம் தன் சொந்த அனுபவத்தினால் புரிந்து கொள்ளும்படியாக அந்தப் பயங்கரமான பரீட்சையின் இருண்ட நாட்கள் அவன் சகித்த வேதனை அனுமதிக் கப்பட்டது. தமது குமாரனைக் கொடுக்கிற அதைப்போன்ற வேறு எந்த சோதனையும் ஆபிரகாமின் ஆத்துமாவிற்கு அத்தகைய உபத்திரவத்தைக் கொண்டுவந்திருக்காது. தேவன் தமது குமாரனை வேதனையும் அவமானமும் கொண்ட மரணத்துக்கு ஒப்புக்கொடுத் தார். தேவனுடைய குமாரனின் அவமானத்தையும் ஆத்தும் வேதனையையும் கண்ட தூதர்கள் ஈசாக்கின் அனுபவத்தில் அனு மதிக்கப்பட்டதைப்போல் அனுமதிக்கப்படவில்லை. போதும் என்று சொல்லும் சத்தம் ஒன்றும் அங்கே இல்லை. விழுந்து போன இனத்தை இரட்சிக்கும்படி மகிமையின் இராஜா தமது ஜீவனை விட்டார். தேவனுடைய அன்பு மற்றும் நித்திய மனவுருக்கத்திற்கு என்ன வல்லமையான சான்று கொடுக்கப்பட முடியும்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32. PPTam 171.2

ஆபிரகாமிடம் கோரப்பட்ட தியாகம் அவனுடைய சொந்த நன்மைக்காக மாத்திரமல்ல, பின்னர் வந்த சந்தியின் நன்மைக்காக மாத்திரமுமல்ல, பாவமில்லாத ஜீவிகளின் போதனைக்காவும் ஆகும். கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்கும் இடையே உண்டான போராட்டக்களம் PPTam 171.3

மீட்பின் திட்டம் செயல்படுத்தப்பட்ட களம், பிரபஞ்சத்தின் பாடபுத்தமாக இருக்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மேல் ஆபிரகாம் அவிசுவாசம் காண்பித்ததால், உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கைக்கொள்ளு வதில் தோல்வியடைந்ததால், அதன் ஆசீர்வாதங்களுக்கு அவன் தகுதியற்றவனாகிறான் என்று சாத்தான் அவனை தூதர்கள் முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் குற்றப்படுத்தினான். பூரணமானதற்கு குறைவான எந்தவித கீழ்ப்படிதலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று விளக்கிக்காட்டவும், மீட்பின் திட்டத்தை அதிக முழுமையாக அவர்கள் முன் திறந்து காண்பிக்கவும் பரலோகம் முழுவதற்கும் முன்பு தேவன் தமது ஊழியக்காரனின் உண்மையை நிரூபித்துக்காண்பிக்கவிரும்பினார். PPTam 172.1

ஆபிரகாமின் விசுவாசமும் ஈசாக்கின் ஒப்புக்கொடுத்தலும் சோதிக்கப்பட்டபோது, பரலோகவாசிகள் அந்தக் காட்சிகளுக்கு சாட்சிகளாக இருந்தார்கள். அந்தச் சோதனை ஆதாமின்மேல் கொண்டுவரப்பட்டதை விடவும் மிக கடினமான ஒன்றாக இருந்தது. நமது முதல் பெற்றோரின்மேல் வைக்கப்பட்ட தடையோடு எந்தத் தியாகமும் இணைந்திருக்கவில்லை. ஆனால் ஆபிரகா முக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை மிக வேதனையான தியாகத் தைக் கோரியது. ஆபிரகாமின் தவறாத கீழ்ப்படிதலை முழுபரலோ கமும் வியப்போடும் புகழ்ச்சியோடும் பார்த்தது. அவனுடைய விசுவாசத்தை முழு பரலோகமும் பாராட்டியது. சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் பொய்யென்று காட்டப்பட்டன. தேவன் தமது ஊழியக்காரரிடம் : நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக் கொடுத்தபடியினால் நீ தேவ னுக்குப் பயப்படுகிறவன் (சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருந்தும்) என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று அறிவித்தார். மற்ற உலகவாசிகளின் முன்பாக, ஆபிரகாமுக்கு ஒரு ஆணையினால் உறுதி பண்ணப்பட்ட தேவனுடைய உடன்படிக்கை, கீழ்ப்படிதல் பலனளிக்கப்படும் என்று சாட்சி பகர்ந்தது. PPTam 172.2

மீட்பின் இரகசியத்தை பரலோகத்தின் அதிபதி, தேவகுமாரன் குற்றமுள்ள இனத்திற்காக மரிக்க வேண்டும் என்பதைப் பற்றிக்கொள்வது தூதர்களுக்கும் கடினமாக இருந்தது. தனது குமாரனை பலியாகக் கொடுக்க வேண்டும் என்ற கட்டளை ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டபோது, அனைத்து பரலோகவாசி களின் ஆர்வமும் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கட்டளையை நிறைவேற்றும் ஒவ்வொரு அடியையும் ஆழ்ந்த ஊக்கத்தோடு அவர்கள் கவனித்தார்கள். தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்ற ஈசாக்கின் கேள்விக்கு தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்று ஆபிரகாம் பதிலளித்தபோது, தமது குமாரனைக் கொல்லப்போகும் நேரம் தகப்பனுடைய கரம் தடுக்கப்பட்டபோது, ஈசாக்கின் இடத்தில் தேவன் ஏற்படுத்தின ஆடு பலியிடப்பட்டபோது, அப்போது, மீட் பின் இரகசியத்தின் மேல் வெளிச்சம் காட்டப்பட்டது. மனிதனின் இரட்சிப்பிற்காக தேவன் ஏற்படுத்தியிருந்த ஆச்சரியமான ஏற்பாட்டைதூதர்களும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். (1 பேதுரு 1:12). PPTam 172.3