கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்
69 - தாவீது முடி சூட்டப்படுகிறார்
தாவீதை நாடு கடத்தியிருந்த ஆபத்துகளை சவுலின் மரணம் அகற்றியது. தன் சொந்த தேசத்திற்குத் திரும்ப அவனுக்குப் பாதை இப்போது திறந்திருந்தது. சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் துக்கிக்கும் நாட்கள் முடிந்த பின்பு, தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர் : போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர் எப்ரோனுக்குப் போ என்றார். PPTam 916.1
பெயர்செபாவிற்கு வடக்கே இருபது மைல் தொலைவில் அந்த பட்டணத்திற்கும் எருசலேமின் எதிர்கால இடத்திற்கும் நடுவே எப்ரோன் இருந்தது. அது முதலில் கீரியாத் அர்பா ஆனாக்கின் தகப்பனாகிய அரபாவின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது மம்ரே என்று அழைக்கப்பட்டது. இங்கேதான் முற்பிதாவின் அடக்க ஸ்தலமான மக்பேலா குகை இருந்தது. எப்ரோன் காலே பின் சுதந்தரமாயிருந்து PPTam 916.2
இப்போது யூதாவின் முதன்மைப் பட்டணமாக இருந்தது. சுற்றிலும் செழிப்பான மலைநாடுகளாலும் வளமான நிலங்களாலும் சூழப்பட்டிருந்த பள்ளத்தாக்கில் அது அமைந்திருக்கிறது. ஒலிவ மற்றும் ஏனைய களி விருட்சங்களோடு கூட பாலஸ்தீனத்தின் மிக அழகான திராட்சத்தோட்டங்கள் அதன் எல்லைகளிலிருந்தன. PPTam 916.3
தாவீதும் அவன் பின்னடியார்களும் தேவனிடமிருந்து பெற்றிருந்த போதனைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிய ஆயத்தமாயினர். அறுநூறு ஆயுதமணிந்தவர்களும் தங்களுடைய மனைவிகளோடும் குழந்தைகளோடும் மந்தைகளோடும் மாடுகளோடும் விரைவில் எப்ரோனுக்கான பாதையில் இருந்தனர். கூண்டுவண்டிகள் எப்ரோனுக்குள் நுழைந்தபோது எருசலேமின் எதிர்கால அரசனாக தாவீதை வரவேற்க யூதாவின் மனிதர் காத்திருந்தனர். அவனுக்கு முடிசூட்டுவதற்கான ஆயத்தங்கள் உடனடியாகச் செய்யப்பட்டன. அங்கே தாவீதை யூதாவம்சத்தாரின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். எனினும் மற்ற கோத்திரங்களின் மேல் அவனது அதிகாரத்தை பலவந்தப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை . PPTam 917.1
புதிதாக முடிசூட்டப்பட்ட அரசனின் முதல் வேலைகளில் ஒன்றாக, சவுல் மற்றும் யோனத்தானின் நினைவிற்கான தன்னுடைய தயவான கவனத்தை வெளிப்படுத்துவது இருந்தது. விழுந்து போன தலைவர்களின் சரீரங்களை கைப்பற்றி அவைகளுக்கு கனமான அடக்கத்தைக் கொடுத்த கிலேயாத் தேசத்து யாபேசின் தைரியமான மனிதருடைய செயல்களை அறிந்த தாவீது: நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம் பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக, நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன் என்ற செய்தியோடு அப்பட்டணத்தின் மனிதருக்கு ஒரு தூது அனுப்பினான். கூடவே தான் யூதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததையும் அறிவித்து, உண்மையான நபர்களாக தங்களை நிரூபித்தவர்களோடு ஒரு நட்பை அறிவித்தான். PPTam 917.2
தாவீதை அரசனாக்கின யூதாவின் செய்கையை பெலிஸ்தர் எதிர்க்கவில்லை. சவுலின் இராஜ்யத்தை அலைக்கழிக்கவும் பெலவீனப் படுத்தவும் நாடுகடத்தப்பட்டிருந்தபோது தாவீதை அவர்கள் நண்பனாக்கியிருந்தனர். தாவீதிற்கு அவர்கள் காண்பித்த தங்களுடைய முந்தைய தயவினால் அவனுடைய எல்லையின் விஸ்தரிப்பு முடிவாக தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று இப்போது அவர்கள் நம்பினர். தாவீதின் ஆட்சி தொல்லை களிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. அவனுடைய முடிசூட்டுதலோடு சூழ்ச்சி மற்றும் கலகத்தின் இருண்ட பதிவுகள் துவங்கின. தாவீது துரோகம் செய்து சிங்காசனத்தில் அமரவில்லை. தேவன் இஸ்ரவேலின் இராஜாவாக இருக்க அவனைத் தெரிந்தெடுத்திருந்தார். அதை நம்பாதிருக்கவோ அல்லது எதிர்க்கவோ எந்த சந்தர்ப்பமும் அங்கே இல்லை. அவனுடைய அதிகா யூதமனிதரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிலகாலம் கூட சென்றிருக்கவில்லை, அதற்குள்ளாக அப்னேரின் செல்வாக்கினால் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் அரசனாக அறிவிக்கப்பட்டு, இஸ்ரவேலில் போட்டி சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டான். PPTam 917.3
இஸ்போசேத் பெலவீனமும், சவுலின் குடும்பத்தை எடுத்துக்காட்டும் தகுதியற்றவனுமாயிருந்தான். தாவீது இராஜாங்கத்தின் பொறுப்புகளைச் சுமக்கும் முதன்மை தகுதியைப் பெற்றிருந்தான். இஸ்போசேத்தை அரச வல்லமைக்கு உயர்த்தும் முகவனாயிருந்த அப்னேர் சவுலின் படைக்கு தளபதியாயிருந்து, இஸ்ரவேலில் மிகவும் புகழ்பெற்றவனாயிருந்தான். தாவீது ஆண்டவரால் இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறதை அப்னேர் அறிந்திருந்தான். எனினும் இவ்வளவு காலம் அவனை வேட்டையாடி தொடர்ந்திருந்ததால், சவுல் ஆட்சி செய்திருந்த இராஜாங்கத்தை ஈசாயின் குமாரன் தொடரவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனதில்லாதிருந்தான். PPTam 918.1
அப்னேர் வைக்கப்பட்டிருந்த சூழ்நிலை அவனுடைய உண்மையான குணத்தை விருத்தி செய்து, பேராசையும் கொள்கையற்றவனுமாக அவனைக் காண்பித்தது. அவன் ச வுலோடு நெருக்கமாக இணைந்திருந்து, இஸ்ரவேலை ஆட்சி செய்ய தேவன் தெரிந்து கொண்டிருந்த மனிதனை நிந்தித்த இராஜாவின் ஆவியினால் பாதிக்கப்பட்டிருந்தான். சவுல் பாளயத்தில் தூங்கின்போது, பக்கத்திலிருந்த இராஜாவின் தண்ணீர் செம்பையும் ஈட்டியையுங்குறித்து தாவீது அவனுக்குக் கொடுத்த கண்டனையினால் அவனுடைய வெறுப்பு அதிகரித்திருந்தது. இராஜாவின் செவிகளிலும் இஸ்ரவேல் மக்களின் செவிகளிலும் : நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன?.... நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல ; கர்த்தர் அபிஷேகம்பண்ணின் உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள் என்று தாவீது எவ்வளவு சத்தமாகப் பேசினான் என்பதை அவன் நினைவு கூர்ந்தான். இது அவனுடைய மனதில் உறுத்திக்கொண்டிருக்க தன்னுடைய பழிவாங்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவும் இஸ்ரவேலில் பிரிவினையை உண்டாக்கி அதன் வழியாக தான் உயர்த்தப்படவும் அவன் தீர்மானித்திருந்தான். பிரிந்து சென்ற இராஜ பதவியின் பிரதிநிதியை தன்னுடைய சொந்த சுயநலமான பேராசைகளையும் நோக்கங்களையும் முன்னேற்ற அவன் பிரயோகித்தான். மக்கள் யோனத்தானை நேசித்திருந்ததை அவன் அறிவான். அவனுடைய நினைவு போற்றப்பட்டிருந்தது. சவுலின் முதல் வெற்றிகரமான யுத்தம் படையினால் மறக்கப்பட்டிருக்க வில்லை. மேன்மையான காரணத்திற்கேற்ற தகுதியான தீர்மானத்தோடு இந்த கலகத்திற்குத் தலைவன் தன்னுடைய திட்டங்களைச் செயல்படுத்த முன் சென்றிருந்தான். PPTam 918.2
யோர்தானுக்கு அடுத்தப் பக்கத்திலிருந்த மக்னாயீம் அரச வீடாகத் தெரிந்து கொள்ளப்பட்டது. ஏனெனில் தாவீதாலோ அல்லது பெலிஸ்தராலோ வரும் படையெடுப்பிற்கு எதிராக மிக அதிக பாதுகாப்பை PPTam 919.1
அது கொடுத்திருந்தது. இங்கே இஸ்போசேத்தின் முடிசூட்டு விழா நடத்தது. யோர்தானுக்கு கிழக்கே இருந்த கோத்திரங்களால் அவனுடைய ஆட்சி முதலாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முடிவாக அது யூதாவைத்தவிரமற்ற அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. இரண்டு வருடங்கள் சவுலின் குமாரன் தனிமைப்படுத் தப்பட்ட தன் தலைநகரில் தன்னுடைய கனத்தை அனுபவித்திருந் தான். ஆனால் அப்னேர் இஸ்ரவேல் அனைத்தின் மேலும் தன்னுடைய வல்லமையை விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு வலிய தாக்கும் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தான். சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவரப் பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள். PPTam 919.2
கடைசியாக வன்மமும் பேராசையும் ஸ்தாபித்திருந்த சிங்காச னத்தை துரோகம் கவிழ்த்தது . பெலவீனமும் தகுதியற்றவனுமாயிருந்த இஸ்போசேத்திற்கு எதிராக சீற்றமடைந்த அப்னேர், இஸ்ரவேல் கோத்திரங்கள் அனைத்தையும் திருப்பிக்கொண்டு வருவதாகச் சொல்லி தாவீதிடம் சென்றான். அவனுடைய திட்டம் தாவீதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன் நோக்கத்தை நிறைவேற்ற மரியாதையோடு அவன் அனுப்பப்பட்டான். ஆனால் அதிக வீரமும் புகழும் கொண்ட வீரனை மிகுந்த தயவோடு ஏற்றுக்கொண்டது தாவீதின் படைத்தளபதியான யோவாபின் பொறாமையை தூண்டி விட்டது. இஸ்ரவேலுக்கும் யூதாவிற்கும் இடையே நடந்த யுத்தத்தில் அப்னேர் யோவாபின் சகோதரனான ஆசகேலை கொன்றிருந்ததால் அப்னேருக்கும் யோவாபிற்கு மிடையே இரத்தப் பகை ஒன்று இருந்தது. இப்போது தன் சகோதரனுடைய மரணத்திற்குப் பழிவாங்கும் சந்தர்ப்பத்தைக் கண்டு, எதிர்காலப் போட்டியாளனை முடிவுகட்டும் படி வழியில் காத்திருந்து அப்னேரைக் கொல்ல யோவாப் இந்த சந்தர்ப்பத்தைக் கீழ்த்தரமாக பயன்படுத்திக்கொண்டான். PPTam 919.3
தாக்குதலைக் குறித்துக் கேள்விப்பட்ட தாவீது: என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை . அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக என்று கூறினான். கொலையாளிகளின் (யோவாபின் சகோதரன் அபிசாயும் அவனோடு இணைந்திருந்தான்) வல்லமை மற்றும் பதவியின் கண்ணோட்டத்திலும் இராஜ்யத்தின் நிலையில்லாத நிலையிலும் தாவீதால் இந்தக் குற்றத்திற்கு நீதியான தண்டனை கொடுக்கமுடியவில்லை. எனினும் இரத்தம் சிந்தினதில் தன்னுடைய அருவருப்பை அவன் வெளிப்படையாகக் காண்பித்தான். அப்னேரின் அடக்கம் பொது மரியாதையோடு செய்யப்பட்டது. படை யோவாபின் தலைமையில் PPTam 920.1
கிழிந்த உடையோடும் சணல் வஸ்திரத்தோடும் துக்க ஆராதனையில் பங்கெடுக்க கட்டளையிடப்பட்டது. அடுத்த நாளன்று உபவாசத்தை அறிவித்து இராஜா தன் வருத்தத்தை வெளிக்காட்டினான். அவனுடைய பாடையை முதன்மை துக்கிப்பவனாக பின்தொடர்ந்து, கொலையாளிகளை குறிப்பாக கடிந்து கொள்ளும் இரங்கல் பாட்டை அவனுடைய கல்லறையில் அவன் கூறினான். PPTam 920.2
ராஜா அப்னேருக்காகப் புலம்பி : மதிகெட்டவன் சாகி றது போல, அப்னேர் செத்துப்போனானோ? உன் கைகள் கட்டப்படவும் இல்லை, உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை ; துஷ்டர் கையில் மடிகிறது போல மடிந்தாயே என்றான். PPTam 920.3
தன்னுடைய கசப்பான எதிரியை தாவீது தாராளமாக ஒப்புக்கொண்டது அனைத்து இஸ்ரவேலின் நம்பிக்கையையும் புகழ்ச்சியையும் சம்பாதித்தது . ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள்; அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது. நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்று போட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்து கொண்டார்கள். அவனுடைய தனிப்பட்ட நம்பிக்கைக் கேதுவான ஆலோசகர்கள் மற்றும் பணியாட்களின் வட்டத்தில் இராஜா குற்றத்தைக்குறித்தும் தான் விரும்பியிருந்தபடி கொலையாளிகளை தண்டிக்கக் கூடாதிருந்த தன்னுடைய தகுதியின்மையைக் குறித்தும் பேசி, இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா? நான் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும், நான் இன்னும் பலவீனன் ; செருயாவின் குமாரராகிய இந்த மனுஷர் என் பலத் துக்கு மிஞ்சியவர்களாயிருக்கிறார்கள், அந்தப் பொல்லாப்பைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவன் பொல்லாப்புக்குத்தக்கதாய்ச் சரிக்கட்டுவாராக என்று தேவனுடைய நியாயத்திற்கு அவர்களை விட்டான். PPTam 920.4
தாவீதிற்குக் கொடுத்த வார்த்தைகளிலும் பிரதிநிதித்துவத்திலும் அப்னேர் உண்மையாயிருந்தான். எனினும் அவனுடைய நோக்கங்கள் கீழ்த்தரமானதும் சுயநலமானதுமாயிருந்தது. தனக்கு கனத்தைச் சம்பாதிக்கும் எதிர்பார்ப்பில் தேவன் தெரிந்து கொண்ட இராஜாவை தீர்மானமாக தொடர்ந்து எதிர்த்திருந்தான். இத்தனை நாட்கள் செய்திருந்த வேலையை விட்டுவிட அவனை நடத்தினது மனக்கசப்பும் காயமடைந்த அகந்தையான உணர்வுமே . தாவீதிடம் வந்ததில் மிக உயர்ந்த கனமான இடத்தைப் பெற்றுக்கொள்ளவே அவன் நம்பியிருந்தான். அவன் நோக்கத்தில். PPTam 921.1
வெற்றியடைந்திருப்பானானால் அவனுடைய திறமைகளும் பேராசையும் மாபெரும் செல்வாக்கும் பக்தியின்மையும் தாவீதின் சிங்காசனத்திற்கும் தேசத்தின் சமாதானத்திற்கும் செழிப்பிற்கும் ஆபத்தை விளைவித்திருக்கும். PPTam 921.2
அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச்சவுலின் குமாரன் கேட்ட போது, அவன் கைகள் திடனற்றுப் போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள். இராஜ்யம் இதற்கு மேல் பராமரிக்கப்படமுடியாது என்பது வெளிப்படையாக இருந்தது. மற்றொரு துரோகச் செயலின் விளைவு நலிந்து கொண்டிருந்த வல்லமையை கீழே தள்ளிற்று. இஸ்போசேத் அவனுடைய தளபதிகள் இரண்டு பேரால் கேவலமாக கொலை செய்யப்பட்டான். யூதாவின் அரசனுடைய தயவில் மதிப்பைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவனைக் கொலை செய்து அவனுடைய தலையை வெட்டி, அதோடு அவன் முன் சென்றனர். PPTam 921.3
பயங்கரமான தங்களுடைய குற்றத்திற்கான இரத்தம் தோய்ந்த சாட்சியோடு தாவீதின் முன்தோன்றி : இதோ, உம்முடைய பிராணனை வாங்கத்தேடின உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை, இன்றையதினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழி வாங்கினார் என்று கூறினர். ஆனால் தேவன்தாமேஸ்தாபித்து அவர்தாமேசத்துருக்களிடமிருந்து விடுதலை பண்ணியிருந்த தாவீது, தன்னுடைய வல்லமையை ஸ்தாபிக்க துரோகத்தின் உதவியை விரும்பவில்லை. சவுலை கொன்றதாக பெருமையோடு கூறினவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அந்தக் கொலையாளிகளுக்கு அவன் கூறினான். தமது வீட்டிற்குள் தமது படுக்கையின் மேல் படுத்திருந்த நீ திமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்ய வேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்கள் கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப் போடாதிருப்பேனோ என்று சொல்லி, .... சேவகருக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம் பண்ணினார்கள். PPTam 922.1
இஸ்போசேத்தின் மரணத்திற்குப்பின்பு இஸ்ரவேலின் முன்னணியில் இருந்தவர்கள் நடுவே தாவீது அனைத்து கோத்திரங்களுக்கும் இராஜாவாக வேண்டுமென்ற பொதுவான விருப்பம் இருந்தது. அக்காலத்தில் இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். PPTam 922.2
சவுல் எங்கள் மேல் ராஜாவாயிருக்கும் போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போனவரும் நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே ; கர்த்தர் : என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின் மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இவ்விதம் தேவனுடைய ஏற்பாட்டினால் சிங்காசனத்திற்கு வர அவனுக்குப் பாதை திறக்கப்பட்டிருந்தது. திருப்தி செய்யும் படியான எந்த சொந்த பேராசையும் அவனிடம் இல்லை . ஏனெனில் அவன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த கனத்தை அவன் தேடியிருக்கவில்லை. PPTam 922.3
ஆரோன் மற்றும் லேவியரின் சந்ததியில் எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் தாவீதிற்காகக் காத்திருந்தனர். மக்களின் உணர்வு களில் வந்த மாற்றம் குறிப்பிடப்பட்டதும் தீர்மானமானதுமாயிருந்தது. புரட்சி அமைதியானதும் கனமானது மாயிருந்து, அவர்கள் செய்த மாபெரும் வேலைக்குத் தகுதியானதாயிருந்தது. முன்னர் சவுலின் பிரஜைகளாயிருந்த ஏறக்குறைய ஐந்து இலட்சம் ஆத்துமாக்கள் எப்ரோனிலும் அதன் சுற்றுப்புறத்திலும் கூடினர். குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் திரளான கூட்டங்களால் நிறைந்தது. முடிசூட்டும் மணிநேரம் குறிக்கப்பட்டது. சவுலின் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் உயிரை காப்பாற்றும்படி மலைகளுக்கும் குன்றுகளுக்கும் பூமியின் குகைகளுக்கும் ஓடியிருந்தவன், மனிதன் தன் சக மனிதன் மேல் வைக்கக்கூடிய மிக உயர்ந்தகனத்தைப் பெற்றுக்கொள்ள இருந்தான். தங்களுடைய பரிசுத்த வேலையின் அங்கியை அணிந்தவர்களாக ஆசாரியரும் மூப்பரும், மின்னுகிற ஈட்டி தலை சீராக்களோடு அதிபதிகளும் படைவீரர்களும், வெகு தூரத்திலிருந்து வந்த அந்நியரும் தெரிந்து கொள்ளப்பட்ட அரசனின் முடிசூட்டு விழாவைக் காண நின்றிருந்தனர். தாவீது அரச ஆடையால் அலங்கரிக்கப்பட்டான். பரிசுத்தமான எண்ணெய் அவன் சிரசின் மேல் பிரதான ஆசாரியனால் ஊற்றப்பட்டது. ஏனெனில் சாமுவேலின் அபிஷேகம் அரசனின் துவக்க விழாவில் நடக்கவிருப்பதன் தீர்க்கதரிசனமாக இருந்தது. நேரம் வந்தது. தாவீது பவித்திரமான சடங்கோடு அவனுடைய வேலைக்கு தேவனுடைய பிரதிநிதியாக அர்ப்பணிக்கப்பட்டான். செங்கோல் அவனுடைய கைகளில் கொடுக்கப்பட்டது. அவனுடைய நீதியுள்ள அரசாட்சியின் உடன்படிக்கை எழுதப்பட்டது. மக்கள் உண்மையாயிருப்பதற்கான தங்கள் உறுதிமொழியைக் கொடுத்தனர். அவன் தலையின் மேல் கிரீடம் வைக்கப்பட்டது. முடிசூட்டு விழா முடிவடைந்தது, தெய்வீக நியமனத்தின்படி இஸ்ரவேலுக்கு ஒரு அரசன் இருந்தான். ஆண்டவருக்காக பொறுமையோடு காத்திருந்தவன் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் கண்டான். தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். 2 சாமு . 5:10. PPTam 923.1