கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்
65 - தாவீதின் தயாளகுணம்
ஆண்டவருடைய ஆசாரியர்களைக் கொலை செய்த சவுலின் கோரமான செயலுக்குப்பிறகு அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய், சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்று போட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றைய தினமே அறிந்திருந்தேன், உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே. நீ என்னிடத்தில் இரு, பயப்பட வேண்டாம், என் பிராணனை வாங்கத் தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத் தேடுகிறான், நீ என் ஆதரவிலே இரு என்றான். PPTam 868.1
இன்னமும் இராஜாவினால் வேட்டையாடப்பட, தாவீது இளைப்பாறுகிற அல்லது பாதுகாப்பான எந்த இடத்தையும் காணவில்லை. கோகிலாவில் தைரியமான அவனுடைய படை பெலிஸ்தரின் பிடியிலிருந்து பட்டணத்தைத் தப்புவித்தது. ஆனால் தாங்கள் விடுவித்த மக்களின் நடுவிலும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. கோகிலாவிலிருந்து சீப் வனாந்தரத்திற்கு அவர்கள் சென் றனர். PPTam 868.2
தாவீதின் பாதையில் வெகு சில பிரகாசமான இடங்களே இருந்த இந்த நேரத்தில், அவனுடைய அடைக்கல் இடத்தை அறிந்து கொண்ட யோனத்தானிடமிருந்து எதிர்பாராத ஒரு சந் திப்பைப் பெற்றதினால் அவன் மகிழ்ந்தான். இந்த இரண்டு நண்பர்களும் பெற்ற தோழமையின் மணித்துளிகள் எவ்வளவு மதிப்பானதாயிருந்தன. தங்களுடைய வெவ்வேறு அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். நீர் பயப்பட வேண்டாம், என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன், அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்று கூறி யோனத்தான் தாவீதின் இருதயத்தைப் பலப்படுத்தினான். தாவீதிடம் ஆண்டவர் நடந்து கொண்ட ஆச்சரியமான நடத்துதலைக் குறித்து பேசி னபோது வேட்டையாடப்பட்ட அந்த நாடோடி அதிகமாக தைரி யப்படுத்தப்பட்டான். அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான், யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான். PPTam 869.1
யோனத்தானின் சந்திப்பிற்குப்பிறகு தாவீது துதியின் பாடல் களால் தன் ஆத்துமாவை தைரியப்படுத்தி, நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி : பட்சியைப் போல உன் மலைக்குப் பறந்து போ என்று சொல்லுகிறீர்கள். இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும் படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்ன செய்வான்? கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது (சங். 11:1 - 5) என்று பாடினபோது, தன்னுடைய சுலமண்டலத்தோடு தன் குரலையும் இணைத்தான். PPTam 869.2
கோகிலாவிலிருந்து தாவீது சென்றிருந்த சீப் வனாந்திர மக்கள் கிபியாவிலிருந்த சவுலுக்கு தாவீது எங்கே மறைந்திருக்கிறான் என்று தாங்கள் அறிந்திருப்பதாக வார்த்தை அனுப்பி, அவனுடைய இளைப்பாறும் இடத்திற்கு இராஜாவை நடத்தக்கூடும் என்று அறிவித்தார்கள். ஆனால் தாவீது அவர்களுடைய நோக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்பட்டு, தன் இடத்தை மாற்றி, மாகோனுக்கும் ச வக்கடலுக்கும் இடையே இருந்த மலைகளில் அடைக்கலம் பெற்றான். PPTam 869.3
மீண்டும் இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்து கொள்ளப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப் போனான். தாவீது அறு நூறு மனிதர்களை மாத்திரமே தன் கூட்டத்தில் கொண்டிருந்தான். சவுல் மூவாயிரம் மனிதர்கள் கொண்ட படையோடு அவனுக்கு எதிராக முன்னேறினான். தனிமையான ஒருகுகையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தேவனுடைய வழிநடத்துதலுக்காக ஈசாயின் PPTam 870.1
குமாரனும் அவன் மனிதர்களும் காத்திருந்தனர். சவுல் மலையின் மேல் முன்னேறின் போது சற்று விலகி, தனியாக, தாவீதும் அவனுடைய கூட்டமும் ஒளிந்திருந்த அதே குகையில் நுழைந்தான். தாவீதின் மனிதர்கள் அதைக் கண்டபோது சவுலைக் கொல்லும்படி தங்கள் தலைவனை நிர்ப்பந்தித்தார்கள். இராஜா தங்களுடைய வல்லமையில் இருக்கிறான் என்ற உண்மை, அழிக்கும் படியாக தேவன்தாமே சத்துருவை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்திருப்பதன் நிச்சயமான சான்றாக அவர்களால் அர்த்தப்படுத்தப்பட்டது. இவ்விதம் கண்ணோக்கும் படி தாவீது சோதிக்கப்பட்டான். எனினும் அபிஷேகம் பண்ணப்பட்டவனைத் தொடாதே என்று அவனுடைய மனசாட்சியின் சத்தம் அவனோடு பேசினது. PPTam 870.2
தாவீதின் மனிதர்கள் சவுலை சமாதானமாக அனுப்ப இன்னமும் மனமின்றி இருந்து, அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்ற தேவனுடைய வார்த்தைகளை தங்கள் அதிபதிக்கு நினைவுபடுத்தினர். தாவீது எழுந்திருந்து போய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக் கொண்டான். ஆனால் இராஜாவின் அங்கியை கெடுத்ததினால் அவனுடைய மனது பின்னர் அவனை அடித்துக்கொண்டிருந்தது. PPTam 870.3
சவுல் எழுந்து தன்னுடைய தேடலைத் தொடரும் படி குகையிலிருந்து வெளியே சென்றான். அப்போது ராஜாவாகிய என் ஆண்டவனே என்ற சத்தம், திகைத்த அவன் காதுகளில் விழுந்தது. தன்னை அழைக்கிறவனை பார்க்கும்படித் திரும்பினான். இதோ ஈசாயின் மகன் ! கொல்லும்படி தன் வல்லமைக்குள் கொண்டுவர அநேக்காலம் அவன் வாஞ்சித்திருந்தவன். அரசனைத் தன்னுடைய அதிபதியென்று காண்பித்து தாவீது அவன் முன் பணிந்தான். பின்னர் சவுலை நோக்கி . தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்று போட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள், ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது, என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன், அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவராமே என்றேன். என் தகப்பனே பாரும், என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும், உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக் கொண்டேன், என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்து கொள்ளும், நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர் என்று அவனோடு பேசினான். PPTam 870.4
தாவீதின் வார்த்தைகளை சவுல் கேட்டபோது தாழ்மைப்பட்டு, அவர்களுடைய உண்மையை ஒப்புக்கொண்டான். கொல்லும் படியாக தான் தேடிக்கொண்டிருந்த மனிதனின் வல்லமையில் தான் முழுமையாக இருந்ததை கண்ட அவனுடைய உணர்வுகள் ஆழமாக அசைக்கப்பட்டன. மனதில் குற்றமற்றவனாக தாவீது அவன் முன் நின்றிருந்தான். மென்மையான ஆவியோடு சவுல் : என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுதான். பின்னர் : நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான், நீ எனக்கு நன்மை செய்தாய், நானோ உனக்கு தீமை செய்தேன். நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய் ........... ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலை வரப்படும் என்றும் அறிவேன் என்றான். அது நடக்கும் போது சவுலின் பெயர் அழிக்கப்பட்டுவிடாதபடி அவனுடைய குடும்பத்திற்கு தயவு காண்பிப்பதாக தாவீது சவுலோடு ஒரு ஒப்பந்தம் பண்ணினான். PPTam 871.1
சவுலின் கடந்தகால் நடத்தையை அறிந்ததினால் தாவீதினால் அரசனின் உறுதியை நம்பவோ அல்லது அவனுடைய மனந் திரும்பின் நிலை தொடரும் என்று எதிர்பார்க்கவோ முடியவில்லை. எனவே சவுல் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பின் போது தாவீது மலைகளின் அரண்களிலேயே தங்கியிருந்தான். PPTam 872.1
தேவனுடைய ஊழியக்காரருக்கு எதிராக சாத்தானுடைய வல்லமைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் போற்றுகிற பகை, தயவு காண்பிப்பதாகவும் ஒப்புரவாகுவதாகவும் சில வேளைகளில் மாறுகிறது. ஆனால் மாற்றம் எப்போதும் நீண்ட காலம் நிலைப்பதில்லை. தீய குணம் கொண்ட மனிதர்கள் ஆண்டவருடைய ஊழியக்காரருக்கு எதிராக தீமையான காரியங்களைச் செய்யவும் சொல்லவும் மூர்க்கங்கொள்ளும்போது, தவறில் இருப்பதாக உணர்த்தும் மனசாட்சி சில வேளைகளில் அவர்களுடைய மனங்களில் ஆழமாகப் பதிகிறது. ஆண்டவருடைய ஆவியானவர் அவர்களோடு போராடுகிறார். அவர்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாகவும் யாருடைய செல்வாக்கை அழிக்கத் தேடினார்களோ அவர்களுக்கு முன்பாகவும் தாழ்த்துகிறார்கள். அவர்களுக்கெதிரான தங்களுடைய வழிமுறைகளை மாற்றவும் கூடும். ஆனால் மீண்டும் தீமையானவனின் ஆலோசனைகளுக்கு கதவைத் திறக்கும்போது பழைய சந்தேகங்கள் உயிர்பெற, கொஞ்சகாலம் விட்டுவிட்டிருந்த அதே வேலையைச் செய்யும் படி மீண்டும் திரும்புகிறார்கள். மீண்டும் அவர்கள் தீமையைப் பேசுகிறார்கள். யாரிடம் மிகவும் தாழ்மையான பாவ அறிக்கை செய்தார்களோ அவர்களையே குற்றப்படுத்தி மிகவும் கசப்பான விதத்தில் கடிந்து கொள்ளவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாற்றம் வந்த பின்னர் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிக அதிக பலத்தோடு சாத்தான் அந்த ஆத்துமாக்களை உபயோகிக்க முடியும். ஏனெனில் அவர்கள் மிகவும் அதிகமான வெளிச்சத்திற்கு எதிராகப் பாவஞ் செய்திருக்கிறார்கள். PPTam 872.2
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத்துக்கங் கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; சாமுவேலின் மரணம் சரிசெய்யக்கூடாத நஷ்டமாக இஸ்ரவேல் அனைத்தாலும் கருதப்பட்டது. மிகச்சிறந்த நல்ல தீர்க்கதரிசியும் மேம்பட்ட நியாயாதிபதியும் மரித்து விட்டான். ஜனங்களின் துக்கம் ஆழமானதும் இருதயத்திலிருந்து வந்ததுமாயிருந்தது. சாமுவேல் வாலிபத்திலிருந்து தன் இருதயத்தின் உண்மையோடு இஸ்ரவேலின் முன் நடந்திருந்தான். அவனுடைய பதிவு உண்மையானதும் கீழ்ப்படிதலானதும் பக்தியானதுமாயிருந்ததால், சவுல் ஒப்புக் கொள்ளப்பட்ட இராஜாவாக இருந்தபோதும் அவனைக் காட்டிலும் வல்லமையான செல்வாக்கை சாமுவேல் கொண்டிருந்தான். அவன் தன் வாழ்நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான் என்று நாம் படிக்கிறோம். PPTam 872.3
ஜனங்கள் சவுலின் வழியை சாமுவேலோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தங்களைச் சுற்றியிருந்த தேசங்களைக்காட்டிலும் வேறுபட்டிருக்கக்கூடாதென்று ஒரு இராஜாவை வாஞ்சித்ததில் என்ன ஒரு தவறு செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டார்கள். மதமற்ற தேவனற்ற புளித்த நிலைக்கு வேகமாகச் சென்று கொண்டிருக்கிற சமுதாயத்தின் நிலையை எச்சரிக்கையோடு அநேகர் பார்த்தனர். அவர்களுடைய அதிபதியின் உதாரணம் பரந்த செல் வாக்கை செயல்படுத்திக்கொண்டிருந்தது. ஆண்டவருடைய தீர்க்கதரிசியான சாமுவேல் மரித்ததற்காக இஸ்ரவேல் நன்றாகவே துக்கங் கொண்டாட வேண்டும். PPTam 873.1
பவித்திரமான பள்ளிகளை ஸ்தாபித்தவரும் அதிபதியுமாயிருந்தவரை தேசம் இழந்திருந்தது. அதுமாத்திரமல்ல, தங்களுடைய மாபெரும் பிரச்சனைகளில் யாரிடம் செல்லப் பழகியிருந்தார்களோ அந்த ஜனங்களின் மிகச் சிறந்த நன்மைக்காக தேவனிடம் இடைவிடாது மன்றாடின் ஒருவரை இழந்திருந்தனர். சாமுவேலின் மத்தியஸ்தம் பாதுகாப்பான ஒரு உணர்வைக் கொடுத்திருந்தது. ஏனெனில் நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக். 516. தேவன் தங்களை கைவிட்டிருந்ததாக ஜனங்கள் உணர்ந்தனர், இராஜா பயித்தியகாரனைப்போலத் தோன்றினான். நீதி புரட்டப்பட்டது. ஒழுங்கு குழம்பிப் போயிருந்தது. PPTam 873.2
உள்நாட்டுப் போராட்டங்கள் தேசத்தில் அடுக்கப்பட்டிருந்த போது, தேவனுக்குப் பயப்படுகிற சாமுவேலின் அமைதலான ஆலோசனைகள் மிக அதிகம் அவசியப்பட்டதாகத் தோன்றிய போது, தேவன் தமது ஊழியக்காரனுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்திருந்தார். அவனுடைய மௌனமான இளைப்பாறும் இடத்தைப் பார்த்தபோது அவனை நிராகரித்திருந்த தங்களுடைய மதியீனத்தைக் குறித்த நினைவுகள் மக்களுக்குக் கசப்பானதாக இருந்தது. ஏனெனில் பரலோகத்தோடு அவனுக்கிருந்த மிக நெருங்கின இணைப்பால் இஸ்ரவேல் அனைத்தையும் யெகோவா வின் சிங்காசனத்தோடு கட்டுகிறவனைப்போல் அவன் காணப்பட்டான். சாமுவேல் தான் தேவனை நேசிக்கவும் அவருக் குக் கீழ்ப்படியவும் அவர்களுக்குக் கற்பித்திருந்தான் இப்போது அவன் மரித்து விட்டதால், சாத்தானோடு இணைந்திருந்து தேவனிடமிருந்தும் பரலோகத்திடமிருந்தும் தங்களைப் பிரிக்கிற ஒரு அரசனின் இரக்கத்திற்குத் தாங்கள் விடப்பட்டதாக மக்கள் உணர்ந்த னர். PPTam 873.3
சாமுவேலின் அடக்கத்திற்கு தாவீதால் வரமுடியவில்லை. ஆனால் அர்ப்பணிப்பான தகப்பனுக்காக உண்மையுள்ள குமாரன் துக்கிப்பதைப்போல மிக ஆழமாகவும் உணர்வுகளோடும் அவன் சாமுவேலுக்காகத் துக்கித்தான். சவுலின் செயல்களைக் கட்டுப்படுத்துகிற மற்றொரு கட்டை சாமுவேலின் மரணம் உடைத்துவிட்டது என்று அறிந்து, தீர்க்கதரிசி உயிரோடிருந்த காலத்தைப் பார்க்கிலும் இப்போது இன்னும் குறைவான பாதுகாப்பில் இருப்பதாக உணர்ந்தான். சாமுவேலின் மரணத்திற்காக துக்கிப்பதில் சவுலின் கவனம் இருந்தபோது, இன்னும் அதிகமாக பாதுகாப்பைத் தேடுவதற்கு தாவீது அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டான். அவ்வாறே அவன் பாரான் வனாந்தரத்திற்கு ஓடினான். இங்கேதான் 120 மற்றும் 121-ம் சங்கீதங்களை அவன் இயற்றினான். தீர்க்கதரிசிமரித்துவிட்டதையும் இராஜா தன்னுடைய சத்துருவாக இருப்பதையும் உணர்ந்தவனாக, இந்த பாழான இடங்களில் : வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். உன் காலைத் தள்ளாட வொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக்காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை ...... கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார் (சங். 121:1-3) என்று அவன் பாடினான். PPTam 874.1
தாவீதும் அவன் மனிதர்களும் பாரான் வனாந்தரத்தில் இருந்தபோது அந்த பகுதியில் மிக அதிக சொத்துக்களைக் கொண்டிருந்த நாபால் என்னும் பெயர் கொண்ட ஒரு செல்வந்தனுடைய மந்தைகளை கொள்ளையரின் கொள்ளையிலிருந்து பாதுகாத்திருந்தார்கள். நாபால்காலே பின் சந்ததியில் வந்திருந்தான். ஆனால் அவனுடைய குணம் மிராண்டித்தனமானதும் கஞ்சத்தனமானதுமாக இருந்தது. PPTam 874.2
அது ஆடுகளை மயிர்கத்தரிக்கிற, உபசரிக்கும் காலமாக இருந்தது. தாவீதும் அவன் மனிதர்களும் மிக அதிகமான ஆகாரத் தேவையில் இருந்தார்கள். அப்போதைய வழக்கத்தின்படியே ஈசாயின் குமாரன் பத்து வாலிபர்களை தங்களுடைய தலைவனின் நாமத்தினால் வாழ்த்தும்படி நாபாலிடம் அனுப்பினான். கூடவே, நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும் உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், உம்முடைய மேய்ப்பர் எங்களோடே கூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலிலிருந்த (கர்மேல் பர்வதமல்ல, யூதா தேசத்தில் மலைப்பட்டணமாகிய மாகோனுக்கு அருகிலிருந்த ஒரு பகுதி ) நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்த வில்லை, அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும், அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களில் தயை கிடைக்க வேண்டும்; நல்ல நாளில் வந்தோம், உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்று சே ர்த்து கூறினான். PPTam 875.1
தாவீதும் அவன் மனிதரும் நாபாலின் மேய்ப்பருக்கும் மந்தைகளுக்கும் பாதுகாப்பின் சுவர்களாக இருந்திருந்தனர். இப்போது இந்த ஐசுவரியவான் தனக்கு அப்படிப்பட்ட மதிப்புள்ள சேவை செய்திருந்தவர்களுக்கு அவர்களுடைய தேவையில் உதவ தன்னுடைய ஏராளத்திலிருந்து அனுப்பும்படி கேட்கப்பட்டான். தாவீதும் அவன் மனிதர்களும் மந்தையிலிருந்து தங்களுக்கு எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை, உண்மையுள்ளவர்களாகதங்களை நடத்தினார்கள். அவர்களுடைய தயவு நாபாலால் எண்ணப்படவில்லை . தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார் ? தங்கள் எஜமான்களைவிட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. நான் என் அப்பத் தையும், என் தண்ணீ ரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர் களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷ ருக்குக் கொடுப்பேனோ என்று தாவீதிற்கு அவன் திரும்ப அனுப்பின் பதில் அவனுடைய குணத்தை காட்டுவதாக இருந்தது. PPTam 875.2
அந்த வாலிப் மனிதர்கள் வெறுங்கையோடு திரும்பி, நடந்ததை தாவீதிற்குத் தெரிவித்தபோது அவன் மூர்க்கத்தினால் நிரம்பினான். ஒரு யுத்தத்திற்குத் தங்களைத் தயார் பண்ணும்படி அவன் தன் மனிதருக்குக் கட்டளையிட்டான். தனக்கு உரிமையாயிருந்ததை மறுத்து, தன்னுடைய காயத்தோடு அவமானத்தையும் சேர்த்த மனிதனை தண்டிக்க அவன் தீர்மானித்தான். இந்த உணர்ச்சி வசமான மணித்துளிகள் தாவீதின் குணத்தைக் காட்டிலும் சவுலின் குணத்தோடு இணைந்து போயிருந்தது. ஆனாலும் ஈசாயின் குமாரன் உபத்திரவத்தின் பள்ளியில் பொறுமையை இன்னமும் கற்றுக்கொள்ளவேண்டியதிருந்தது. PPTam 876.1
நாபால் தாவீதின் வாலிபர்களை அனுப்பிவிட்ட பிறகு, நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் நாபாலின் மனைவியான அபிகாயிலிடம் விரைந்து, நடந்தவைகளை, இதோ, நம்முடைய எஜமானுடைய சுக செய்தி விசாரிக்கத்தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார். அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும் போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை, நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்ய வேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது என்று கூறினான். PPTam 876.2
தனது கணவனை ஆலோசிக்காமலும் தன்னுடைய நோக்கத்தை அவனுக்கு அறிவிக்காமலும், அபிகாயில் தாராளமான உணவுகளை ஆயத்தப்படுத்தி, கழுதைகளின்மேல் வைத்து வேலைக்காரர் வசமாக அனுப்பி, அவள்தானும் தாவீதின் கூட்டத்தைச் சந்திக்கும்படி புறப்பட்டாள். அவள் அவர்களை ஒரு மலையின் மறைவிடத்தில் சந்தித்தாள். அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவன் PPTam 876.3
பாதத்திலே விழுந்து : என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும், உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேச வேண்டும் என்றாள். ஏதோ முடிசூட்டப்பட்ட அரசனிடம் பேசுவதைப்போல் அபிகாயில் மிகுந்த பயபக்தியோடு தாவீதிடம் பேசினாள். நாபால். தாவீது என்பவன் யார்? என்று பரிகாசமாக பேசியிருந்தான். ஆனால் அபிகாயில் அவனை : என் ஆண்டவனே என்று அழைத்தாள். காயப்பட்டிருந்த அவனுடைய உணர்வுகளை கனிவான வார்த்தைகளினால் குணப்படுத்தத் தேடி, அவள் தன் கணவனுக்காக அவனிடம் மன்றாடினாள். எவ்வித ஆடம்பரமும் அகந்தையும் இல்லாத முழுமையானஞானத்தோடும், தேவன் மேலிருந்த அன்போடும் அபிகாயில் தன் வீட்டார் மேலிருந்த அர்ப்பணிப்பின் பலத்தை வெளிக்காட்டினாள். கூடவே, அவளுடைய கணவனின் தயவற்ற வழிமுறை அவனுக்கு எதிராக தனிப்பட்ட விதத்தில் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு காரியமல்ல என்றும், மகிழ்ச்சியற்ற சுயநலமான குணத்தின் வெளிப்பாடு மாத்திரமே என்றும் தாவீதிற்கு தெளிவுபடுத்தினாள். PPTam 876.4
இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன், இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள். தாவீதை அவனுடைய அவசரமான நோக்கத்திலிருந்து திருப்ப அபிகாயில் கொடுத்த இந்த காரணத்தின் நன்மையை அவள் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, தேவனுக்கு கனத்தையும் துதியையும் கொடுத்தாள். பின்னர் தாவீதின் மனிதருக்கு தன்னுடைய ஏராளமான உணவுகளை சமாதான காணிக்கையாகச் செலுத்தி, அந்தத் தலைவனின் மனக்கசப்பை தானே தூண்டிவிட்டதைப்போன்று இன்னமும் மன்றாடினாள். PPTam 877.1
உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயம் கட்டுவார், என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே ; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக என்று அவள் கூறினாள். தாவீது தொடரவேண்டிய வழியை மன்றாட்டின் வழியாக அபிகாயில் வைத்தாள். அவன் ஆண்டவருடையயுத்தங்களை நடத்தவேண்டும். அவன் ஒரு துரோகியாக துன்பப்படுத்தப்பட்டபோதும் தனிப்பட்ட தவறுகளுக்கு பழிவாங்கத் தேடக்கூடாது. மேலும், உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகை தேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; ..... கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது, நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும் போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக (1 சாமு. 25. 2931) என்று அவள் தொடர்ந்தாள். PPTam 877.2
இந்த வார்த்தைகள் உன்னதத்திலிருக்கிற ஞானத்தில் பங்குபெற்ற ஒருவருடைய உதடுகளிலிருந்து மாத்திரமே வரக்கூடும். அபிகாயிலின் பக்தி ஒரு மலரின் மணத்தைப் போல நினைவின்றியே முகத்திலும் வார்த்தையிலும் செய்கையிலும் வெளியாகியது. தேவகுமாரனுடைய ஆவி அவள் ஆத்துமாவில் தங்கியிருந்தது. கிருபையினால் பக்குவப்படுத்தப்பட்டு முழுமையான தயவும் சமாதானமும் நிறைந்திருந்த அவளுடைய பேச்சு பரலோக செல்வாக்கை வீசியது. மேன்மையான தூண்டுதல்கள் தாவீதிடம் வர, தன்னுடைய கண்மூடித்தனமான நோக்கத்தினுடைய விளைவுகள் என்னவாக இருந்திருக்கும் என்று அவன் நடுங்கினான். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கிய வான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் - மத் 59. காயப்பட்ட உணர்வுகளை குணப்படுத்தும் அவசரமான உணர்ச்சிகளைத் தடுக்கிற அமைதியும் நன்கு நடத்தப்பட்ட ஞானமும் கொண்ட வார்த்தைகளினால் மாபெரும் தீமைகளை தடுக்கிற இஸ்ரவேலின் இந்தப் பெண்மணியைப்போல் இன்னும் அநேகர் இருந்தால் நலமாயிருக்கும். PPTam 878.1
அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை எப்போதும் வெளிச்சத்தையும் ஆறுதலையும் சமாதானத்தையும் வீசுகிறது. அது தூய்மையினாலும் திறமையினாலும் எளிமையினாலும் உபயோகத்தினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. அது செல்வாக்கை பரிசுத்தப்படுத்துகிற சுயநலமற்ற அன்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அது கிறிஸ்துவைக் கொண்டிருந்து, அதை வைத்திருப்பவர் போகுமிடமெல்லாம் வெளிச்சத்தின் ஒரு அடித்தடத்தை விட்டுவருகிறது. அபிகாயில் ஞானமுள்ள கடிந்து கொள்ளுகிறவளும் ஆலோசகருமாயிருந்தாள். அவளுடைய செல்வாக்கு மற்றும் காரணத்தின்கீழ் தாவீதின் உணர்ச்சி மரித்துப் போனது. ஞானமில்லாத ஒருமுறையை தெரிந்தெடுத்திருந்ததாகவும் தன் சொந்த ஆவியின் மேல் கட்டுப்பாட்டை இழந்திருந்ததாகவும் அவன் உணர்ந்தான். PPTam 878.2
தாழ்மையான இருதயத்தோடு, நீதிமான் என்னைத் தயவாய் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும், அது என் தலைக்கு எண் ணெயைப் போலிருக்கும், என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை (சங். 141:5) என்ற தன்னுடைய சொந்த வார்த்தைகளுக்கு இசை வாக கண்டனையை அவன் ஏற்றுக்கொண்டான். அவள் நீதியாக தனக்கு ஆலோசனை கூறியதினால் நன்றி சொல்லி ஆசீர்வதித்தான். கண்டிக்கப்படும் போது பொறுமையோடு அதைப் பெற்றுக் கொள்ளுவதால் அது புகழப்படக்கூடியது என்று நினைக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை குறைவானவர்கள் கண்டனையை நன்றியான இருதயத்தோடு எடுத்துக்கொண்டு, தீமையான வழியைப் பின்தொடருவதிலிருந்து தங்களைக் காக்கத் தேடினவர்களை ஆசீர்வதிக்கிறார்கள்? PPTam 879.1
அபிகாயில் வீட்டிற்குத் திரும்பின்போது நாபாலும் அவனுடைய விருந்தாளிகளும் பெரிய விருந்தை அனுபவித்துக்கொண்டிருந்ததைக் கண்டாள். அதை அவர்கள் குடி மற்றும் களிப்பின் காட்சியாக மாற்றியிருந்தார்கள். தாவீதுடனான நேர்முகத்தில் நடந்தவைகளை அடுத்தநாள் காலை வரையிலும் அவள் தன் கணவனிடம் அறிவிக்கவில்லை . நாபால் இருதயத்தில் ஒரு கோழையாயிருந்தான். தன்னுடைய மதியீனம் தன்னை சடிதியான மரணத்திற்கு எவ்வளவு அருகே கொண்டு வந்திருந்தது என்பதை உணர்ந்தபோது, வாதத்தினால் அடிக்கப்பட்டதைப் போலத் தோன்றினான். பழிவாங்கும் தனது நோக்கத்தை தாவீது இன்னமும் தொடருவான் என்கிற பயத்தில் திகிலடைந்தவனாக, உதவக்கூடாத உணர்ச்சியற்ற நிலைக்கு அவன் சென்றான். பத்து நாட்களுக்குப்பின் அவன் மரித்தான். தேவன் அவனுக்குக் கொடுத்திருந்த வாழ்க்கை உலகத்திற்கு ஒரு சாபமாகவே இருந்தது. அவனுடைய களிப்பிலும் சந்தோஷத்திலும் தேவன் உவமையில் ஐசுவரியவானிடம் சொல்லியிருந்ததைப்போலவே அவனிடமும் : உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும் (லூக். 1220) என்று சொல்லியிருந்தார். PPTam 879.2
தாவீது பின்னர் அபிகாயிலை மணம் செய்து கொண்டான். அவன் ஏற்கனவே ஒரு மனைவிக்குக் கணவனாயிருந்தான். ஆனால் அந்தக்காலத்து தேசங்களின் வழக்கம் அவனுடைய நியாயத்தீர்ப்பை முறை கேடாக்கி, அவன் செய்கைகளைப் பாதித்திருந்தது. உலகத்தின் வழக்கங்களைப் பின்பற்றுவதினால் பெரிய நல்ல மனிதர்கள் கூட தவறு செய்திருக்கிறார்கள். அநேக மனைவிகளை திருமணம் செய்ததன் கசப்பான விளைவுகள் தாவீதின் வாழ்க்கை முழுவதிலும் வருத்தமாக உணரப்பட்டது. PPTam 879.3
சாமுவேலின் மரணத்திற்குப்பிறகு சில மாதங்கள் தாவீது சமாதானமாயிருந்தான். மீண்டும் சீப் வனாந்தரத்தின் தனியிடங்களுக்குச் சென்றான். ஆனால் அந்த சத்துருக்கள் இராஜாவின் தயவை அடையும் நம்பிக்கையில் தாவீதின் மறைவிடங்களைக் குறித்து அவனுக்கு அறிவித்தனர். இந்த அறிவு சவுலின் இருதயத்தில் தூங்கிக்கொண்டிருந்த உணர்ச்சியின் பிசாசை எழுப்பிவிட்டது. மீண்டும் தாவீதைப் பின்தொடரும்படி அவன் தன் படைவீரரை நடத்தினான். ஆனால் நட்பாயிருந்த வேவுகாரர்கள் சவுல் மீண்டும் அவனைத் தொடருகிற இந்தச் செய்தியை ஈசாயின் மகனுக்குக் கொண்டு வந்தனர். தன்னோடு இருந்த சில மனிதர்களோடு தாவீது தன் சத்துருவின் இடத்தை அறிந்தான். எச்சரிக்கையோடு முன்னேறி அவர்களுடைய பாளயத்திற்கு வந்து இராஜாவுடைய மற்றும் அவன் ஊழியக்காரருடைய கூடாரங்களை தங்கள் முன் கண்ட நேரம் இரவாயிருந்தது. பாளயம் தூக்கத்தில் மௌனமாயிருந்ததால் அவர்கள் கவனிக்கப்படவில்லை. தாவீது சத்துருவின் நடுமையத்திற்கு தன்னோடு வரும்படி தன் நண்பர்களை அழைத்தான். என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கி வருகிறவன் யார் என்ற அவனுடைய கேள்விக்கு அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்று உடனடியாக பதில் கொடுத்தான். PPTam 880.1
குன்றுகளின் ஆழ்ந்த நிழலினால் மறைக்கப்பட்டு, தாவீதும் அவனுடைய வேலையாளும் சத்துருவின் பாளயத்திற்குள் நுழைந்தனர். தங்களுடைய சத்துருக்களின் சரியான எண்ணிக்கையை நிச்சயப்படுத்தத் தேடினபோது, தன் ஈட்டி நிலத்திலே குத்தப்பட்டு தலைமாட்டில் ஒரு தண்ணீர் பாத்திரம் வைக்கப்பட்டிருக்க தூங்கிக்கொண்டிருந்த சவுலினருகே வந்தனர், அவனுக்கு அருகே அவனுடையதளபதி அப்னேர் படுத்திருந்தான். அவனைச் சுற்றிலும் படைவீரர்கள் தூக்கத்தில் அசந்திருந்தனர். அபிசாய் தன் ஈட்டியை ஓங்கி, இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்று தாவீதிடம் வினவினான். அனுமதியின் வார்த்தைகளுக்காக அவன் காத்திருந்தான். ஆனால் அவன் காதுகளில் : அவரைக் கொல்லாதே, கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன்கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்?... கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு, PPTam 880.2
கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்ற வார்த்தைகள் மெதுவாக விழுந்தன. தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்ட பின்பு, புறப்பட்டுப் போனார்கள். அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை ஒருவரும் விழித்துக் கொள்ளவுமில்லை, கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள். எவ்வளவு எளிதாக ஆண்டவர் பலமுள்ளவனை பலமற்றவனாக்கி, ஞானியிடமிருந்து மதிநுட்பத்தை அகற்றி, மிகவும் ஜாக்கிரதையுள்ளவனின் திறமையை தடுக்க முடியும் ! PPTam 881.1
தாவீது பாளயத்திலிருந்து பாதுகாப்பான தூரத்திற்குச் சென்ற பின்பு, குன்றின் உயரத்தில் நின்று ஜனங்களிடமும் அப்னேரிடமும் உரத்த குரலில். நீர்வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஐனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும் படி வந்திருந்தானே. நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல ; கர்த்தர் அபிஷே கம்பண்ணின் உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான். அப்பொழுது சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி, பின்னும் என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின்தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது? இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த் தைகளைக் கேட்பாராக என்று கூறினான். மீண்டும் இராஜாவின் உதடுகளிலிருந்து : நான் பாவஞ் செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா, என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன், இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ் செய்தேன் என்ற ஒப்புதல் வந்தது. தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது, வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும் என்றான். இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன் என்ற வாக்குறுதியை சவுல் கொடுத்த போதும் தாவீது தன்னை அவனுடைய வல்லமையில் வைக்கவில்லை. PPTam 881.2
தன்னுடைய உயிர்மேல் தாவீதிற்கு இருந்த மரியாதையைக் குறித்த இரண்டாவது நிகழ்ச்சி சவுலின் மனதில் இன்னும் ஆழமான பதிவை ஏற்படுத்தி, அவனுடைய குற்றத்தைக் குறித்த இன்னும் தாழ்மையான ஒப்புதலைக் கொண்டு வந்தது. அவன் அதிர்ச்சி யடைந்து, காட்டப்பட்ட அப்படிப்பட்ட தயவினிமித்தம் தன்னைத் தாழ்த்தினான். சவுல் தாவீதிடமிருந்து பிரிந்து போது, என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்று கூறினான். ஆனால் இந்த மனநிலையில் எவ்வளவு காலம் இராஜா தொடருவான் என்பதைக் குறித்து ஈசாயின் மகன் நம்பிக்கை யற்றிருந்தான். PPTam 882.1
சவுலோடு ஒப்புரவாகுவதைக் குறித்து தாவீது விரக்தியடைந் திருந்தான். இராஜாவின் வன்மத்திற்கு தான் கடைசியில் பலியாவோம் என்பது தவிர்க்கக்கூடாததாகத் தோன்ற, பெலிஸ் தரின் தேசத்தில் மீண்டும் அடைக்கலம் தேட அவன் தீர்மானித்தான். தன் கட்டளையின் கீழிருந்த அறுநூறு மனிதரோடு காத்தின் இராஜாவான ஆகீஸிடம் சென்றான். PPTam 882.2
சவுல் நிச்சயமாக தன்னுடைய கொலைகார நோக்கத்தை நிறைவேற்றுவான் என்ற தாவீதின் முடிவு, தேவனுடைய ஆலோசனையின்றி உண்டானது. சவுல் அவனை அழிக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றத் தேடிக்கொண்டிருந்தபோது தாவீதிற்கு அந்த இராஜ்யத்தைக் கொடுக்க தேவன் வேலை செய்துகொண்டிருந்தார். மனித கண்களுக்கு தேவனுடைய திட்டங்கள் இரகசியத்தில் திரையிடப்பட்டிருந்த போதும் ஆண்டவர் அவைகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். மனிதனால் ஆண்டவருடைய வழிகளை புரிந்து கொள்ள முடியாது. தங்கள் மேல் வரும்படி தேவன் அனுமதிக்கிற போராட்டங்களையும் சோதனைகளையும் தங்களுக்கு எதிரானதாகவும், அவைகள் தங்களை அழிவிற்கே நடத்துமென்றும் வெளித்தோற்றத்தைப் பார்த்து அர்த்தப்படுத் துகிறார்கள். இவ்விதம் தாவீது தேவனுடைய வாக்குத்தத்தங்களை யல்ல, தோற்றத்தைப் பார்த்தான். தான் சிங்காசனத்திற்கு வரமுடியுமோ என்று சந்தேகப்பட்டான். நீண்ட போராட்டங்கள் அவனுடைய விசுவாசத்தையும் பொறுமையையும் சோர்வடையச் செய்தது. PPTam 882.3
இஸ்ரவேலின் மிகக் கசப்பான சத்துருக்களாயிருந்த பெலிஸ் தரிடம் பாதுகாப்பிற்காக ஆண்டவர் தாவீதை அனுப்பவில்லை. இந்த தேசம்தானே கடைசி வரையிலும் அவருடைய மிக மோசமான சத்துருவாயிருக்கும். எனினும் தேவையான நேரத்தில் உதவிக்காக அவர்களிடம் அவன் ஓடியிருந்தான். சவுலின் மேலும் அவனை சேவித்தவர்களின் மேலுமிருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்தவனாக அவனுடைய ஜனத்தின் சத்துருக்களுடைய இரக்கத்திற்கு அவன் தன்னை ஒப்புவித்தான். தாவீது தைரியமான தளபதியாக இருந்து, தன்னை ஞானமும் வெற்றியுமுள்ள போர்வீரனாக காண்பித்திருந்தான். ஆனால் பெலிஸ்தரிடம் சென்ற போது தன்னுடைய சொந்த நலனுக்கு எதிராகவே செயல் பட்டான். யூதா தேசத்தில் தம்முடைய கொடியை நாட்ட வேண்டும் என்று தேவன் அவனை நியமித்திருந்தார். ஆண்டவரிடமிருந்து கட்டளையில்லாது தன்னுடைய கடமையை விட்டுச் செல்ல அவனை நடத்தியது அவனுடைய விசுவாசக் குறைவே. PPTam 883.1
தாவீதின் அவிசுவாசத்தினால் தேவன் கனவீனமடைந்தார். பெலிஸ்தியர் சவுலுக்கும் அவனுடைய படைக்கும் பயப்பட்டதைவிடவும் தாவீதிற்கு அதிகம் பயப்பட்டார்கள். பெலிஸ்தரின் பாதுகாப்பின் கீழ் தன்னை வைத்ததினால் தன்னுடைய சொந்த ஜனத்தின் பெலவீனங்களை தாவீது அவர்களுக்குத் திறந்து காண்பித்தான். இவ்விதம் இஸ்ரவேலை ஒடுக்குவதற்கு இந்த இரக்கமற்ற சத்துருக்களை அவன் உற்சாகப்படுத்தினான். தேவனுடைய மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும்படிதாவீது அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். தம்முடைய மக்களின் பெலவீனங்களை வெளிப்படுத்துவதினாலோ அல்லது அவர்களின் நன்மையில் ஒரு ஈடுபாட்டைக் காண்பிக்காது இருப்பதினாலோ அவருடைய ஊழியக்காரர் துன்மார்க்கரை உற்சாகப்படுத்துவதை ஆண்டவர் விரும்பமாட்டார். மேலும், புறஜாதிகளுடைய தேவர்களை சேவிக்கும்படியாக அவன் அவர்களிடத்தில் சென்றான் என்கிற எண்ணப்பதிப்பை அவனுடைய சகோதரர்கள் பெற்றனர். இந்தச் செயலினால் தன்னுடைய நோக்கங்களை தவறாகப் புரிந்துகொள்ள அவன் சந்தர்ப்பம் கொடுத்தான். அவனுக்கெதிராக தப்பெண்ணம் கொள்ளவும் தீர்மானிக்கவும் அநேகர் நடத்தப்பட்டனர். அவன் செய்ய வேண்டும் என்று சாத்தான் வாஞ்சித்திருந்த அதே காரியத்தை செய்யும் படி, அவன் நடத்தப்பட்டான். பெலிஸ்தரின் நடுவே அடைக்கலம் தேடினதில் தேவன் மற்றும் அவருடைய ஜனத்தின் சத்துருக்களுக்கு தாவீது மிகுந்த களிப்புண்டாக்கினான். தேவனை ஆராதிப்பதை தாவீது விட்டுவிடவில்லை, அவருடைய சேவைக்கான தன்னுடைய அர்ப்பணிப்பையும் நிறுத்தவில்லை. ஆனால் தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்மேல் வைத்த நம்பிக்கையை தியாகம் செய்து, இவ்விதம் தம்முடைய ஊழியக்காரர் பெற்றிருக்கவேண்டும் என்று ஆண்டவர் கோருகிற உண்மையும் நேர்மையுமான குணத்தை கறைப்படுத்தினான். PPTam 883.2
பெலிஸ்திய இராஜாவினால் தாவீது உள்ளன் போடு ஏற்றுக்கொள்ளப்பட்டான். இந்த வரவேற்பின் வெதுவெதுப்பு, பாதி இராஜாவிற்கு அவன் மேலிருந்த மதிப்பிலும், மீதிப்பாதி எபிரெயன் தன்னுடைய பாதுகாப்பை தேடுகிறான் என்று தன்னை புகழ்ந்து கொண்டதிலும் இருந்தது. ஆகிஸின் எல்லையில் காட்டிக்கொடுக்கப்படுவதிலிருந்து தான் பாதுகாப்பாக இருப்பதாக தாவீது உணர்ந்தான். அவன் தன் குடும்பத்தையும் தன் வீட்டாரையும் தன் சொத்துக்களையும் மனிதர்களையும் அங்கு கொண்டுவந்தான். அவனுடைய மனிதரும் அவ்வாறே செய்தனர். அனைவருடைய பார்வைக்கும் அவன் நிரந்தரமாக பெலிஸ்திய தேசத்தில் தங்கப்போவதாகத் தோன்றியது. இவை அனைத்தும் ஓடிவந்த இஸ்ரவேலனைப் பாதுகாப்பதாக வாக்கு கொடுத்திருந்த ஆசீஸை திருப்திப்படுத்துவதாக இருந்தது. PPTam 884.1
அரசப் பட்டணத்திற்கு வெளியே தங்கும்படியான தாவீதின் விண்ணப்பத்திற்கு இராஜா தயவாக சிலாகைக் கொடுத்தான். விக்கிரகாராதனைக்காரரின் செல்வாக்கின் கீழ் வைப்பது தனக்கும் தன் மனிதருக்கும் ஆபத்தாயிருக்கும் என்று தாவீது உணர்ந்தான். தங்களுடைய உபயோகத்திற்காக முழுமையாக பிரிக்கப்பட்டிருந்த ஒரு பட்டணத்தில், தீமையின் ஆதாரமாகவும் எரிச்சலாகவும் இருக்கும் புறஜாதி சடங்குகள் இருக்கிற காத்தில் இருப்பதினால் கிடைக்கும் சுதந்தரத்தைவிடவும் அதிக சுதந்தரத்தோடு தேவனை ஆராதிக்கலாம். PPTam 884.2
தனிமைப்படுத்தப்பட்ட இந்தப் பட்டணத்தில் தங்கியிருந்த போது தாவீது கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர் மேலும் படையெடுத்து, செய்தியைக் காத்திற்குக் கொண்டுவர ஒருவரையும் உயிரோடு விடாதிருந்தான். யுத்தத்திலிருந்து திரும்பி வரும்போது தன்னுடைய சொந்த தேசமான யூதாவின் மனிதருக்கு எதிராக சண்டையிட்டதாக ஆகீஸ் புரிந்துகொள்ளும்படிச் செய்திருந்தான். இவ்விதம் உண்மையை மறைத்து வைத்ததில் பெலிஸ்தரின் கரத்தைப் பலப்படுத்தும் கருவியாயிருந்தான். ஏனெனில் அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்று இராஜா கூறினான். அந்தப் புறஜாதி கோத்திரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமென்றும் அந்த வேலையைச் செய்ய தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தாவீது அறிந்திருந்தான். ஆனால் வஞ்சகத்தைச் செயல்படுத்தின் போது, அவன் தேவனுடைய ஆலோசனையின்படி நடக்கவில்லை. PPTam 885.1
அந்நாட்களிலேபெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல்யுத்தம் பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடே கூடயுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். தனது ஜனத்திற்கு எதிராக கரத்தை உயர்த்த தாவீதிற்கு எந்த எண்ணமும் இல்லை. ஆனால் சூழ்நிலை அவன் கடமையைக் குறிப்பிட்டு காண்பிக்கும் வரையிலும் என்ன வழியை எடுக்க வேண்டும் என்பதைக் குறித்து அவன் நிச்சயமற்றிருந்தான். இராஜாவிற்கு பதில் கொடுப்பதைத் தட்டிக்கழித்து, உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்து கொள்வீர் என்றான். நெருங்கிவரும் யுத்தத்தில் தனக்கு உதவி செய்யும் வாக்குறுதியாக ஆகீஸ் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டு, தாவீதின் மேல் மிகப்பெரும் கனத்தை வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, பெலிஸ்திய அவையில் உயர்ந்த பதவியையும் கொடுத்தான். PPTam 885.2
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் தாவீதின் விசுவாசம் தள்ளாடியிருந்தபோதும் சாமுவேல் தன்னை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்ததை அவன் இன்னமும் நினைத்திருந்தான். கடந்த காலத்தில் அவனுடைய சத்துருக்களின் மேல் தேவன் அவனுக்குக் கொடுத்திருந்த வெற்றிகளை அவன் திரும்பவும் நினைவுகூர்ந்தான். சவுலின் கரத்திலிருந்து தன்னைப் பாதுகாத்த தேவனுடைய மாபெரும் தயவை திரும்பிப்பார்த்து, பவித்திரமான நம்பிக்கையை காட்டிக்கொடுக்காதிருக்க தீர்மானித்தான். இஸ்ரவேலின் இராஜா அவனுடைய வாழ்க்கையை தேடிக்கொண்டிருந்தபோதும் அவன் தன்னுடைய படைகளை தன் மக்களின் சத்துருக்களுடைய படைகளோடு இணைக்க மாட்டான். PPTam 885.3