கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

61/73

61 - புறக்கணிக்கப்பட்ட சவுல்

கில்காலில் சோதனையான நிலையில் விசுவாசசோதனையைத் தாங்குவதில் தவறி, சவுல் தேவனுடைய ஊழியத்தின் மேல் அவமரியாதையைக் கொண்டுவந்தான். எனினும் அவனுடைய தவறுகள் திருத்த முடியாதது அல்ல. அவருடைய வார்த்தையின் மேலுள்ள கேள்வி கேட்காத விசுவாசத்தையும், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதில் உள்ள பாடத்தையும் கற்றுக்கொள்ள ஆண்டவர் அவனுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பார். PPTam 822.1

கில்காலில் தீர்க்கதரிசியினால் கடிந்துகொள்ளப்பட்டபோது தான் பின்பற்றின் வழிமுறையில் எந்த மாபெரும் பாவத்தையும் சவுல் காணவில்லை. தான் அநியாயமாக நடத்தப்பட்டதாக உணர்ந்து, தன்னுடைய செயல்களை சரியென்று நிரூபிக்கவும் முயற்சித்து, தன்னுடைய தவறுகளுக்கு காரணம் கற்பிக்க முயன்றான். அந்த நேரத்திலிருந்து தீர்க்கதரிசியோடு அவனுக்குக் குறைவான தொடர்பே இருந்தது. சவுல் தைரியமும் தீவிரமுமான மனநிலையைக் கொண்டிருந்து தீர்க்கதரிசியை மிகவும் உயர்வாகக் கருதியிருந்தபோது, சாமுவேல் சவுலை தன்னுடைய சொந்த குமாரனாக நேசித்தான். எனினும் சாமுவேலின் கண்டனையால் கோபமடைந்து அதிலிருந்து கூடுமானவரையிலும் தன்னைத் தவிர்த்தான். PPTam 822.2

எனினும் சவுலுக்கான மற்றொரு செய்தியோடு ஆண்டவர் தமது ஊழியக்காரனை அனுப்பினார். தன்னுடைய கீழ்ப்படிதலினால் தேவன் மேலிருக்கும் பற்றையும் இஸ்ரவேலின் முன்பு பிழைக்கவிருக்கும் தன் தகுதியையும் இன்னும் அவன் நிரூபிக்கலாம். சாமுவேல் இராஜாவிடம் வந்து தேவனுடைய வார்த்தையை அறிவித்தான். இராஜா அந்தக் கட்டளையைக் கருத்தில் கொள்ளும் அவசியத்தை உணரும்படியாக சவுலை சிங்காசனத்திற்கு அழைத்த அதே அதிகாரமான தெய்வீக நடத்துதலின்படியே தான் பேசினதாக சாமுவேல் தெளிவாக அறிவித்தான். PPTam 823.1

தீர்க்கதரிசி சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன் மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று கூறினான். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களோடு யுத்தம் பண்ணுவதில் அமலேக்கியர்கள் முதலாவது இருந்தனர். இந்தப் பாவத்திற்காகவும் தேவனை அவமதித்ததற்காகவும் கீழ்த்தரமான விக்கிரகாராதனைக்காகவும் ஆண்டவர் மோசேயின் மூலமாக அவர்கள் மேல் தீர்ப்பை அறிவித்திருந்தார். தெய்வீக நடத்துதலின்படி இஸ்ரவேலுக்கு நேரான அவர்களுடைய கொடுமை நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின் கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்க வேண்டாம் (உபா. 25:19) என்ற கட்டளையின்படி பதிவு செய்யப்பட்டது. நானூறு வருடங்களுக்கு இந்தத் தீர்ப்பு செயல்படுத்தாமல் தாமதிக்கப்பட்டது. ஆனால் அமலேக்கியர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்பவில்லை. முடிந்தால் இந்த துன்மார்க்க ஜனங்கள் அவருடைய ஐனங்களையும் அவருடைய ஆராதனையையும் இந்த பூமியிலிருந்து ஒழித்து விடுவார்கள் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார். இதுகாரும் தாமதிக்கப் பட்டிருந்த தீர்ப்பு செயல்படுத்தப்படும் நேரம் இப்போது வந்தது. PPTam 823.2

துன்மார்க்கரிடம் காண்பிக்கப்படும் தேவனுடைய நீடிய பொறுமை மனிதர்களை மீறுதலில் தைரியப்படுத்துகிறது. ஆனாலும் நீண்ட காலம் தாமதிக்கப்பட்டிருந்ததினால் அவர்களுடைய தண்டனை எவ்வளவு குறைவான நிச்சயமானதாகவோ அல்லது குறைவான பயங்கரமானதாகவோ இருக்காது . கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராக்சீம் மலையிலே எழும்பினது போல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல கோபங்கொள்வார் - ஏசாயா 28:21. நம்முடைய இரக்கமுள்ள தேவனுக்கு தண்டிக்கும் செயல் ஒரு அபூர்வமான செயல். நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன், - எசே. 33:11. ஆண்டவர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். PPTam 824.1

அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர், எனினும் குற்றவாளியைக் குற்றமற்றவனாக (யாத் 34:6, 7) விடாதவர். பழிவாங்குவதில் விருப்பங்கொள்ளாவிடினும் தமது பிரமாணங்களை மீறினவர்கள் மேல் அவர் நியாயத்தீர்ப்பை செயல்படுத்துவார். பூமியின் குடிகள் முற்றிலும் தரந்தாழ்ந்து அழிந்து போகாதபடி இதைச் செய்ய அவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். சிலரைக்காக்கும்படியாக பாவத்தில் கடினப்பட்டுப் போனவர்களை அவர் அழிக்க வேண்டும். கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார். நாகூம் 13. மிதிக்கப்பட்ட தமது பிரமாணத்தின் அதிகாரத்தை தம்முடைய நீதியின் பயங்கரமான காரியங்களால் அவர் நிரூபிப்பார். நியாயத்தைச் செயல்படுத்த அவருக்கு இருக்கும் தயக்கம் தானும் அவருடைய நியாயத்தீர்ப்புகளை அழைக்கிற பாவத்தின் பெருங்கொடுமைக்கும் மீறுகிறவனுக்குக் காத்திருக்கிற தண்டனையின் கடுமைக்கும் சாட்சி பகருகிறது. PPTam 824.2

ஆனாலும் நியாயத்தீர்ப்பை செலுத்தும்போதே தேவன் இரக்கத்தை நினைவுகூர்ந்தார். அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் நடுவே இருந்த கேனியர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த மக்கள் விக்கிரகாராதனையிலிருந்து முழுமையாக விடுபட்டிருக்காவிடினும் தேவனை தொழுது கொண்டவர்களாகவும் இஸ்ரவேலின் நண்பர்களாகவும் இருந்தனர். இஸ்ரவேலின் வனாந்தர பிரயாணத்தில் அவர்களுக்குத் துணைவந்து தேசத்தைக் குறித்த தன்னுடைய அறிவினால் மதிப்புள்ள உதவியைச் செய்திருந்த மோசேயின் தமையனாகிய ஓபாப் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவனாயிருந்தான். PPTam 824.3

மிகமாசிலே பெலிஸ்தரைத் தோற்கடித்ததிலிருந்து, மோவாபியருக்கும் அம்மோனியருக்கும் ஏதோமியருக்கும் எதிராகவும் அமலேக்கியருக்கும் பெலிஸ்தியருக்கும் எதிராகவும் சவுல் எங்கெல்லாம் படையைத் திருப்பினானோ அங்கெல்லாம் புதிய வெற்றிகளைப் பெற்றான். அமலேக்கியருக்கு எதிரான கட்டளையைப் பெற்றதும் உடனடியாக யுத்தத்தை அறிவித்தான். அவனுடைய சொந்த அதிகாரத்தோடு தீர்க்கதரிசியின் அதிகாரமும் சேர்ந்து கொண்டது. யுத்தத்திற்கான அழைப்பில் இஸ்ரவேலின் மனிதர்கள் அவனுடைய கொடியின் கீழ் திரண்டனர். சுய செல்வாக்கை வளர்ப்பதற்கான நோக்கத்தில் இந்த பயணம் துவக்கப்படவில்லை. இஸ்ரவேலர்கள் வெற்றியின் கனத்தையோ அல்லது சத்துருக்களின் கொள்ளையையோ பெறக் கூடாது. தேவனுக்குக் கீழ்ப்படியவும் அமலேக்கியரின் மேல் அவருடைய நியாயத்தீர்ப்பை செலுத்தவும் மாத்திரமே அவர்கள் இதில் ஈடுபட வேண்டும். PPTam 825.1

அவருடைய ஆட்சியை நிந்தித்த ஜனங்களுக்கு வரும் அழிவை அனைத்து தேசங்களும் பார்த்து, யாரை அவர்கள் ஒடுக்கியிருந்தார்களோ அதேஜனங்களினால் அழிக்கப்பட்டார்கள் என்பதை சுற்றிலுமிருக்கிற தேசங்கள் குறித்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் எண்ணியிருந்தார். PPTam 825.2

அப்பொழுது சவுல் : ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லை மட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான் ; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம் பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான். அமலேக்கியரின் மேல் கிடைத்த வெற்றி இதுவரையிலும் சவுல் பெற்றிருந்த வெற்றிகளில் மிகவும் பிரகாசமானதாக இருந்து, அவனுக்கு மிகவும் ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய இருதயத்தின் அகந்தையை தூண்டிவிட்டது. தேவனுடைய சத்துருக்களை முழுமையாக அழிக்கவேண்டும் என்கிற தெய்வீகக் கட்டளை பகுதியே நிறைவேற்றப்பட்டது. அரச கைதியுடன் வெற்றியோடு திரும்பி வருகிற கனத்தை இன்னும் உயர்த்திக் காண்பிக்கும் பேராசையில், சுற்றிலும் இருந்த தேசங்களின் வழக்கத்தைப் பின்பற்ற சவுல் துணிந்து, அமலேக்கியரின் கொடிய ஆகாகை உயிரோடு விட்டான். ஆண்டவருக்கு பலி செலுத்தும்படியாக ஆடு மாடுகள் காப்பாற்றப்பட்டன என்று காரணம் கூறி, மந்தையிலும் மாடுகளிலும் சுமை சுமக்கும் மிருகங்களிலும் நேர்த்தியானதை தங்களுக்காக வைத்துக்கொண்டனர். எனினும் தங்களுடைய சொந்த மந்தையைக் காப்பாற்றும்படி இவைகளை வெறும் பதிலீடாக உபயோகிப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. PPTam 825.3

சவுல் இப்போது கடைசியான சோதனைக்கு உட்படுத்தப் பட்டான். தனிப்பட்ட அரசனாக சுதந்தரமான அரசனாக ஆட்சி செய்ய அவனுக்கிருந்த தீர்மானத்தைக் காண்பித்து தேவனுடைய சித்தத்தை துணிவாக அலட்சியம் பண்ணினதில், ஆண்டவருடைய பிரதிநிதியாக அவனிடம் அரசாங்க வல்லமை கொடுக்கப்பட முடியாது என்பதை நிரூபித்தான். வெற்றியின் மகிழ்ச்சியில் சவுலும் அவனுடைய படையும் வீடு நோக்கி வந்தபோது, சாமுவேல் தீர்க்கதரிசியின் வீட்டில் ஆழமான வேதனை இருந்தது. நான் ச வுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்று இராஜாவின் வழியை கண்டித்த செய்தியை ஆண்டவரிடமிருந்து அவன் பெற்றிருந்தான். கலக்குணங்கொண்ட அரசனின் வழியைக் குறித்து தீர்க்கதரிசி ஆழமாக வருந்தி, பயங்ரமான தீர்ப்பை மீண்டும் திருப்பும்படியாக இராமுழுவதும் அவன் அழுது ஜெபித்தான். PPTam 826.1

ஆண்டவருடைய மனஸ்தாபம் மனிதனுடைய மனஸ்தாபத் தைப் போன்றதல்ல. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல் லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை ; மனம் மாற அவர் மனுஷன் அல்ல. மனிதனுடைய மனவருத்தம் மனதின் மாற்றத்தைக் குறிக்கிறது. ஆண்டவருடைய மனவருத்தம் சூழ் நிலைகளிலும் உறவுகளிலும் வருகிற மாற்றத்தைக் குறித்தது. மனிதன் அவருடைய தெய்வீகதயவிற்குள் கொண்டு வரப்படுவதற்கு ஏதுவான நிபந்தனைகளோடு ஒத்துப்போவதினால் தேவனுடன் இருக்கும் உறவை மாற்றலாம், அல்லது தன்னுடைய சொந்த செயலினால் தயவுக்கேதுவான நிலைகளுக்கு வெளியே தன்னைவைக்கலாம். ஆனால் ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் எபி. 13:8. ச வுலின் கீழ்ப்படியாமை தேவனுடனான அவனுடைய உறவை மாற்றியது. ஆனால் அவர் மீண்டும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கும் நிபந்தனைகள் மாற்றப்படவில்லை. ஆண்டவருடைய கோரிக்கைகள் இன்னமும் ஒரே விதமாக இருக்கிறது. ஏனெனில் அவரிடம் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை யாக். 1:17. வலிக்கும் இருதயத்தோடு தீர்க்கதரிசி அடுத்தநாள் காலையில் தவறு செய்யும் இராஜாவை சந்திக்கப் புறப்பட்டான். திரும்பவும் கூறும் போது சவுல் தன் பாவத் தைக் குறித்து உணர்வடைந்து, மனவருத்தத்தோடும் தாழ்மை யோடும் தெய்வீகத் தயவிற்குள் மீண்டும் கொண்டுவரப்படுவான் என்று சாமுவேல் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் மீறுதலின் பாதையில் முதல் அடி எடுத்துவைக்கும் போது பாதை இலகுவாகிறது. கீழ்ப்படிதலினால் தரந்தாழ்த்தப்பட்ட சவுல் தன் உதடுகளில் பொய்யோடு சாமுவேலை சந்திக்க வந்து: நீர்கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று கூறினான். PPTam 826.2

கீழ்ப்படியாத அரசனின் வார்த்தைகளை தீர்க்கதரிசியின் காது களில் விழுந்த சத்தங்கள் பொய்யென்று கூறின . அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்ற குறிப்பிட்ட கேள்விக்கு சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும் படிக்குத் தப்பவைத்தார்கள், மற்றவைகளை முற்றிலும் அழித்துப் போட்டோம் என்று பதிலளித்தான். ஜனங்கள் சவுலின் கட்டளைக்குக் கீழ்ப்படிந் திருந்தனர். ஆனால் தன்னை மறைத்துக்கொள்ளும்படி தன்னுடைய கீழ்ப்படியாமையின் பாவத்தை அவர்கள் மேல் சுமத்த அவன் சித்தமாயிருந்தான். PPTam 827.1

சவுலை நிராகரித்த செய்தி சாமுவேலின் மனதிற்கு சொல் லக்கூடாத வருத்தத்தைக் கொண்டுவந்தது. தங்களுடைய இராஜா வின் வீரத்திற்கும் படைத்திறமைக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த வெற்றியின் களிப்பினாலும் அகந்தையினாலும் அவர்கள் நிறைந்திருந்தபோது, இஸ்ரவேலின் முழு படைக்கும் முன்பு இந்தச் செய்தி அறிவிக்கப்படவேண்டியதிருந்தது. ஏனெனில் இந்தப் போராட்டத்தில் இஸ்ரவேலின் வெற்றியை சவுல் தேவனுடன் தொடர்புபடுத்தாதிருந்தான். ஆனால் சவுலின் கலகத்திற்கான ச ரான்றை தீர்க்கதரிசி கண்டபோது, தேவனால் மிக உயர்வாக கனப்படுத்தப்பட்டிருந்தவன் பரலோகத்தின் கட்டளையை மீறி இஸ்ரவேலைப் பாவத்திற்குள் நடத்தியிருந்ததினால் மூர்க்கம் டைந்தான். அரசனின் தந்திரத்தினால் சாமுவேல் ஏமாற்றப்பட வில்லை. வருத்தத்தோடும் மூர்க்கத்தோடும் : அந்தப் பேச்சை விடும். கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் ...... நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்றான். அமலேக்கைக் குறித்த ஆண்டவருடைய கட்டளையை அவன் திரும்பவும் கூறி, இராஜாவின் கீழ்ப்படியாமைக்கான காரணத்தைக் கோரினான். PPTam 827.2

நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின் வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்திடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்று சவுல் தன்னை நியாயப்படுத்துவதில் தொடர்ந்தான். PPTam 828.1

உறுதியும் பவித்திரமுமான வார்த்தைகளில் பொய்யின் அடைக்கலத்தை துடைத்துப்போட்டு, கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லி சூனியப் பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது, நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்று திரும்ப எடுத்துக்கொள்ளப்படக்கூடாத தீர்ப்பை தீர்க்கதரிசி அறிவித்தான். PPTam 828.2

இராஜா பயங்கரமான இந்தத் தீர்ப்பைக் கேட்டபோது, நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ் செய்தேன், நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன் என்று அழுதான். தீர்க்கதரிசியின் கண்டனையினால் திகிலடைந்தவனாக, இதற்கு முன் பிடிவாதமாக மறுத்திருந்த குற்றத்தை சவுல் ஒப்புக்கொண்டான். ஆனால் இன்னமும் குற்றத்தை ஜனங்கள் மேல் சாற்றுவதில் தொடர்ந்து, அவர்களுக்குப் பயப்பட்டதினால் தான் பாவம் செய்ததாக அறிவித்தான். PPTam 828.3

பாவத்திற்கான துக்கமல்ல, தண்டனைக்கான பயமே நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பி வாரும் என்று சாமுவேலிடம் மன்றாட இஸ்ரவேலின் இராஜாவை நடத்தினது. சவுல் மெய்யாக மனந்திரும்பியிருப்பானானால் தன் பாவத்தை அனைவர் முன்பும் அறிக்கை செய்திருப்பான். ஆனால் தன்னுடைய அதிகாரத்தை பராமரித்து மக்களின் பற்றை தக்கவைத்துக்கொள்ளுவது அவனுடைய பிரதான எதிர்பார்ப்பாயிருந்தது. தேசத்தில் தன்னுடைய செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ளும்படி சாமுவேல் அங்கே இருந்து தன்னை கனம்பண்ண அவன் விரும்பினான். PPTam 829.1

நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை, கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்று தீர்க்கதரிசிபதிலளித்தான். சாமுவேல் போகும்படி திரும்பின் போது இராஜா பயத்தின் வேதனையில் அவனை தடுத்து நிறுத்த அவன் சால்வையைப் பிடித்தான். ஆனால் அது அவன் கைகளில் கிழிந்து போனது. அதைக்குறித்து தீர்க்கதரிசி : கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார் என்று அறிவித்தான். PPTam 829.2

தேவனுடைய அதிருப்தியைக் காட்டிலும் சாமுவேல் பிரிந்து சென்றதினால் சவுல் மிகவும் பாதிக்கப்பட்டான். ஜனங்கள் தன்மேல் இருந்ததைவிடவும் தீர்க்கதரிசியின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்ததை அவன் அறிவான். இப்போது தெய்வீகக் கட்டளையின்படி வேறொருவன் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டால் தன்னுடைய சொந்த அதிகாரத்தை பராமரிப்பது கூடாத்தாகிவிடும் என்று சவுல் உணர்ந்தான். PPTam 829.3

சாமுவேல் முற்றிலும் அவனைக் கைவிடுவானானால் உடனடியான கலகம் ஏற்படும் என்றும் அவன் பயந்தான். மத ஆராதனையில் அனைவர் முன்பும் தன்னோடு இணைந்திருப்பதன் மூலம் மூப்பர் முன்பாகவும் ஜனங்கள் முன்பாகவும் தன்னைக் கனப்படுத்தும்படி சவுல் தீர்க்கதரிசியை மன்றாடினான். கலகத்திற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்காதிருக்க, தெய்வீக நடத்துதலின்படி சாமுவேல் இராஜாவின் வேண்டுகோளுக்கு ஒப்புக்கொடுத்தான். எனினும் ஆராதனையில் மௌனமான சாட் சியாக மாத்திரமே அவன் நின்றிருந்தான். PPTam 829.4

கண்டிப்பும் பயங்கரமுமான நீதியான ஒரு செயல் இனிமேல் செய்யப்படவேண்டியதிருந்தது. சாமுவேல் பொதுமக்கள் முன்னிலையில் தேவனுடைய கனத்தை நிரூபித்து சவுலின் வழியைக் கண்டிக்க வேண்டும். அமலேக்கியரின் இராஜாவை கொண்டுவரும் படி அவன் கட்டளையிட்டான். இஸ்ரவேலின் பட்டயத்தினால் விழுந்த அனைவரையும் விட ஆகாக்தான் மிகவும் குற்றமுள்ளவனாகவும் இரக்கமற்றவனாகவும், தேவனுடைய ஜனங்களை வெறுத்து அவர்களை அழிக்கத் தேடினவனாகவும், விக்கிரக ஆராதனையை முன்னேற்றும் பலமான செல்வாக்கைக் கொண்டவனாகவும் இருந்தான். மரணத்தின் பயம் அற்றுப்போயிற்று என்று தன்னை ஏமாற்றினவனாக தீர்க்கதரிசியின் கட்டளையின்படி அவன் வந்தான். உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினது போல், ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான். இதைச் செய்த பிறகு சாமுவேல் ராமாவிலிருந்த தன் வீட்டிற்கும் சவுல் கிபியாவிலிருந்த தன்னுடையதற்கும் திரும்பிப் போனார்கள். அதற்குப்பின் தீர்க்கதரிசியும் இராஜாவும் ஒருமுறை மாத்திரமே ஒருவரையொருவர் சந்தித்தனர், PPTam 830.1

சிங்காசனத்திற்கு அழைக்கப்பட்டபோது சவுல் தன் தகுதிகளைக் குறித்து மிகத் தாழ்மையுள்ளவனாகவும் போதிக்கப்பட்ட சித்தமுள்ளவனாகவும் இருந்தான். அறிவிலும் அனுபவத்திலும் குறைவுள்ளவனாக, குணத்திலும் தீவிரமான குறைகளைக் கொண்டிருந்தான். ஆனால் ஆண்டவர் அவனுக்கு வழிகாட்டி யாகவும் உதவியாளராகவும் பரிசுத்த ஆவியானவரை கொடுத் திருந்து, இஸ்ரவேலின் அதிபதியாக இருப்பதற்கான தகுதிகளை அபிவிருத்தி பண்ணும் இடத்தில் அவனை வைத்திருந்தார். தாழ்மையாக இருந்து தெய்வீக ஞானத்தினால் தொடர்ந்து நடத்தப்படத் தேடியிருந்திருப்பானானால் தனது உயர்ந்த தகுதியின் கடமைகளை வெற்றியோடும் கனத்தோடும் நடத்த அவன் தகுதிப்படுத்தப்பட்டிருப்பான். தெய்வீகக் கிருபையின் செல்வாக்கின் கீழ் ஒவ்வொரு நல்ல குணங்களும் பலமடைந்திருக்க தீய குணங்கள் அவைகளின் வல்லமையை இழந்திருக்கும். தமக்கு அர்ப்பணிக்கிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் எண்ணங் கொண்டிருக்கிறது இந்த வேலையே. தாழ்மையையும் போதிக்கப் படும் ஆவியையும் கொண்டிருப்பதினால் அவர் அநேகரை தம்முடைய வேலையில் உயர்ந்த இடங்களுக்கு அழைத்திருக்கிறார். அவரைக் குறித்து அறிந்து கொள்ளக் கூடிய இடங்களில் அவருடைய ஏற்பாடு அநேகரைவைத்திருக்கிறது. அவர்களுடைய குணங்களின் குறைகளை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுடைய தவறுகளை சரிப்படுத்துவதற்கான பலத்தை அவருடைய உதவியை தேடுகிற அனைவருக்கும் அவர் கொடுப்பார். PPTam 830.2

ஆனால் தன்னுடைய உயர்வில் சவுல் துணிவாயிருந்து அவிசுவாசத்தினாலும் கீழ்ப்படியாமையினாலும் தேவனைக் கனவீனப்படுத்தியிருந்தான். சிங்காசனத்திற்கு அழைக்கப்பட்ட போது முதலாவது அவன் தாழ்மையும் சுயநம்பிக்கையற்றவனா கவும் இருந்தபோதும், வெற்றி அவனை சுய நம்பிக்கையுள்ளவனாக் கிற்று. அவனுடைய ஆட்சியின் முதல் வெற்றிதானும் அவனுக்கு ஆபத்தாயிருந்த இருதயத்தின் அகந்தையை அவனில் தூண்டியது. யாபேஸ் கிலேயாத்தை விடுவித்ததில் அவனுடைய பலமும் இராணுவத் திறமையும் முழு தேசத்தின் உற்சாகத்தையும் தூண்டியிருந்தது. தேவன் கிரியை செய்தவைகளுக்கு அவன் ஒரு முகவனே என்பதை மறந்தவர்களாக ஜனங்கள் தங்களுடைய இராஜாவை கனப்படுத்தினர். சவுல், முதலில் தேவனுக்கு மகிமையைக் கொடுத்திருந்தபோதும் பின்னர் கனத்தை தனக்கு எடுத்துக்கொண்டான். தேவன்மேல் சார்ந்திருப்பதை அவன் மறந்து இருதயத்தில் ஆண்டவரைவிட்டு விலகியிருந்தான். இவ்விதம் துணிகரமான அவனுடைய பாவத்திற்கும் கில்காலில் தேவனுடைய காரியத்தை மதிக்காது நடந்ததற்கும் பாதை ஆயத்தப்படுத்தப்பட்டது. அதே குருட்டுத்தனமான சுய நம்பிக்கைதான் சாமுவேலின் கடிந்து கொள்ளுதலை நிராகரிக்கவும் அவனை நடத்தியது. சாமுவேல் தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று சவுல் ஒப்புக்கொண்டான். அப்படியிருக்க, தான் பாவம் செய்ததைக் தன்னால் காணக்கூடாதிருந்தாலும் அவனுடைய கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். தனது தவறைக் காணவும் பாவ அறிக்கை செய்யவும் அவன் விரும்பியிருந்தானானால் இதே கசப்பான அனுபவம் எதிர்காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கும். PPTam 831.1

ஆண்டவர் அப்போது சவுலிடமிருந்து தம்மை முற்றிலும் விலக்கியிருந்தால், கடந்தகாலத்தின் தவறுகளைச் சரிசெய்யும்படியாக குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பொறுப்பை மீண்டும் தீர்க்கதரிசியின் PPTam 832.1

வழியாக அவனிடம் கொடுத்திருக்கமாட்டார். தேவனுடைய பிள்ளை என்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் அவருடைய சித்தத்தை செய்ய அலட்சியமாயிருந்து அவருடைய தடையுத்தரவிற்கு பயபக்தியில்லாமலும் கவனமில்லாமலும் இருக்கும் போதும், மற்றவர்கள் மேலும் தாக்குதலை ஏற்படுத்தும் போதும் மெய்யாகவே நொருங்கின் ஆத்துமாவோடு கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு தாழ்மையோடும் விசுவாசத்தோடும் தேவனிடம் திரும்ப விருப்பங்கொண்டால், அவனுடைய தோல்விகள் வெற்றியாக திரும்ப முடியும். தோல்வியின் சிறுமை பல வேளைகளில் தெய்வீக உதவியில்லாமல் அவருடைய சித்தத்தை செய்ய நமக்கு இருக்கும் தகுதியின்மையைக் காண்பிக்கும்படியாக ஒரு ஆசீர்வாதமாகவே இருக்கிறது. PPTam 832.2

சவுல் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து கொடுக்கப்பட்ட கடிந்துகொள்ளுதலிலிருந்து திரும்பி, சுயத்தை நியாயப்படுத்த பிடிவாதமாகத் தொடர்ந்தபோது, அவனிடமிருந்து அவனைக் காப்பாற்ற தேவன் செயல்படக்கூடிய ஒரே வழியை அவன் நிராகரித்துவிட்டான். அவன் மனதார தேவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டான். தன்னுடைய பாவத்தைக் குறித்த அறிக்கையோட அவன் தேவனிடம் திரும்பும் வரையிலும் தெய்வீக உதவியையோ அல்லது நடத்துதலையோ அவனால் பெறக்கூடாது. PPTam 832.3

இஸ்ரவேலின் படைகள் முன்பு நின்று கில் காலில் தேவனுக்கு பலி செலுத்தினதில் மிக ஆழமான மனசாட்சியோடு செய்யும் தோற்றத்தை சவுல் கொடுத்திருந்தான். ஆனால் அவனுடைய பக்தி மெய்யானதல்ல. தேவனுடைய கட்டளைக்கு நேரெதிராக மத ஆராதனையை நடத்தியது சவுலின் கைகளை பலவீனப்படுத்தி, அவனுக்குக் கொடுக்க ஆண்டவர் மிகவும் விரும்பியிருந்த உதவிக்கு அப்பால் அவனை வைத்தது. PPTam 832.4

அமலேக்கிற்கு எதிராகப் படையெடுக்க ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டதில் அத்தியாவசியமான அனைத்தையும் தான் செய்து முடித்ததாக சவுல் நினைத்தான். ஆனால் பகுதியான கீழ்ப்படிதலில் ஆண்டவர் விருப்பம் கொள்ளுவதில்லை. ஒரு நம்பத்தகுந்ததைப் போன்ற நோக்கத்தினால் நிராகரிக்கப்பட்டதைத் தாண்டிப் போகவும் அவர் விருப்பம் கொள்ளுவதில்லை. தமது கோரிக்கைகளிலிருந்து விலகிச் செல்ல மனிதனுக்கு எந்த உரிமையையும் தேவன் கொடுத்திருக்கவில்லை. ஆண்டவர் : அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறது போல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக என்றும், அதற்கு மாறாக, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் PPTam 832.5

நீ கவனித்துக் கேள் என்றும் அறிவித்திருந்தார். எந்த செயலைக் குறித்து தீர்மானிக்கும்போதும் அதிலிருந்து ஏதாகிலும் தீமை விளையுமா என்று அல்ல, மாறாக, தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்கிறதா என்றே நாம் கேட்க வேண்டும். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு ; அதின் முடிவோ மரண வழிகள். நீதி. 14:12. PPTam 833.1

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம். தியாகபலிகள் தேவன் பார்வையில் அவைகளில் எந்த மதிப்பையும் கொண்டிருக்கவில்லை. அதை செலுத்துகிறவனின் பங்கில் அவனுடைய பாவத்திற்கான மனவருத்தத்தையும் கிறிஸ்துவின் மேல் விசுவாசத்தையும் தேவனுடைய பிரமாணங்களுக்கு இனி கீழ்ப்படிவதற்கான உறுதி மொழியையும் வெளிப்படுத்தவே அவைகள் திட்டம் பண்ணப்பட்டிருந்தன. செய்த தவறுக்கான வருத்தமும் விசுவாசமும் கீழ்ப்படிதலான இருதயமும் இல்லாதபோது காணிக்கைகள் மதிப்பற்றவைகளே. தேவனுடைய கட்டளைகளை வெளிப்படையாக மீறன போது அழிவிற்கென்று தேவன் நியமித்திருந்ததில் அவருக்கு ஒரு பலியை கொடுக்க எண்ணினதில் தெய்வீக அதிகாரத்திற்கு வெளிப்படையான அவமதிப்பைக்காண்பித்தான். அந்த ஆராரதனை பாரலோகத்திற்கு ஒரு அவமரியாதையாகத்தான் இருந்திருக்கும். எனினும் சவுலின் பாவமும் அதன் விளைவுகளும் நம் முன் இருக்கும்போது அதே வழியை எத்தனை பேர் பின்தொடருகிறோம் ! ஆண்டவருடைய சில கோரிக்கைகளை விசுவாசிக்கவும் அவைகளுக்குக் கீழ்ப்படியவும் மறுக்கும் போது, மத சடங்கின் சேவைகளை அவருக்குக் கொடுப்பதில் அவர்கள் தொடருகிறார்கள். அப்படிப்பட்ட சேவைக்கு தேவனுடைய ஆவியிடமிருந்து எந்த பதிலும் இல்லை . மத சடங்குகளை கைக்கொள்ளுவதில் மனிதர்கள் எவ்வளவு வைராக்கியமுள்ளவர்களாக இருப்பினும், அவருடைய கற்பனைகளில் ஒன்றை மனதார மீறுவதில் தொடரும் போது, ஆண்டவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார். PPTam 833.2

இரண்டகம்பண்ணுதல் பில்லி சூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; கலகம் சாத்தானிடம் துவங்கியது. தேவனுக்கு எதிரான அனைத்து கலகமும் சாத்தானிய செல்வாக்கினாலேயே. தேவனுடைய அரசாட்சிக்கு எதிராக தங்களை நிறுத்துகிறவர்கள் பிரதான கலகக்காரனோடு கூட்டணி வைப்பதில் நுழைகிறார்கள். அவன் அவர்களுடைய உணர்வுகளை ஆக்கிரமித்து புரிந்து கொள்ளுதலை தவறாக நடத்தும்படி செயல்படுத்துவான். அனைத்தையும் பொய்யான வெளிச்சத்தில் காண்பிப்பான். நமது முதல் பெற்றோரைப் போலவே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வார்த்தைகளின்கீழ் தங்களை வைத்துக்கொண்டவர்கள் மீறுதலினால் பெற்றுக்கொள்ளப்படும் மாபெரும் நன்மைகளை மாத்திரமே காண்பார்கள். PPTam 834.1

தேவனுடைய சேவையில் இருப்பதாக நம்பும்படி அவனால் நடத்தப்படுகிற அநேகர் ஆண்டவருக்கு சேவை செய்வதாக தங்களை எண்ணிக்கொள்ளுவதைப்போன்ற வேறு எந்த பலமான சான்றையும் சாத்தானுடைய வல்லமைக்குக் கொடுக்க முடியாது. கோராகும் தாத்தானும் அபிராமும் தங்களைப்போன்ற ஒரு மனித தலைவனின் மோசேயின் அதிகாரத்தை எதிர்ப்பதாக மாத்திரமே நினைத்தனர். தேவனுக்கு மெய்யாக ஆராதனை செய்வதாகவும் நம்பினர். ஆனால் தேவன் தெரிந்து கொண்ட கருவியை நிராகரித்ததில் அவர்கள் கிறிஸ்துவை நிராகரித்து தேவனுடைய ஆவியை அவமதித்தனர். அதுபோலவேகிறிஸ்துவின் நாட்களிலும் தேவனுடைய கனத்திற்கு மிக அதிக வைராக்கியத்தைக் காண்பிப்பதாகக் கூறிய யூத வேதபாரகரும் மூப்பரும் அவருடைய குமாரனைக் கொலை செய்தனர். அதே ஆவி தேவனுடைய சித்தத்திற்கு எதிராக தங்களுடைய சித்தத்தைப் பின்பற்ற தங்களை நிறுத்துகிற அனைவருடைய இருதயத்திலும் இன்னமும் இருக்கிறது. | PPTam 834.2

சாமுவேல் தெய்வீகத்தினால் ஏவப்பட்டிருந்ததற்குப் போதுமான ஆதாரம் சவுலிடம் இருந்தது. தீர்க்கதரிசியின் வழியாக வந்த தேவனுடைய கட்டளையை கருத்தில் கொள்ளாதிருக்க அவன் துணிந்தது காரணம் கற்பிப்பதற்கும் தெளிவான நிதானத்திற்கும் எதிராக இருந்தது. அவனுடைய ஆபத்தான துணிகரம் அழிவிற்கேதுவான சாத்தானிய சூனியவேலையே, விக்கிரகாராதனையையும் பில்லிசூனியத்தையும் அடக்கும்படி சவுல் மாபெரும் வைராக்கியத்தை வெளிக்காட்டியிருந்தான். எனினும் தெய்வீகக்கட்டளைக்கு கீழ்ப்படியாத போது தேவனுக்கு எதிரான அதே ஆவியினால் தூண்டப்பட்டவனாக சூனியத்தில் ஈடுபடுகிறவர்களைப்போல சாத்தானால் தானே மெய்யாலும் ஏவப்பட்டான். கடிந்துகொள்ளப்பட்டபோது தன்னுடைய கலகத்தோடு பிடிவாதத்தையும் சேர்த்துக்கொண்டான். விக்கிரகா ராதனைக்காரரோடு வெளிப்படையாக இணைந்திருந்தால் கூட அவன் தேவனுடைய ஆவியானவருக்குமிக அதிக வேதனையைக் கொண்டுவந்திருக்கமாட்டான். PPTam 834.3

தேவனுடைய வார்த்தையையும் அல்லது அவருடைய ஆவியானவரின் எச்சரிப்புகளையும் அல்லது கடிந்துகொள்ளுதலையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தான அடியே. சவுலைப்போல அநேகர் பாவத்தின் மெய்யான குணத்திற்கு குருடாகும் வரைக்கும் சோதனைக்குத் தங்களைக் கொடுக்கிறார்கள். சில மாபெரும் நோக்கம் தங்கள் கண்ணோட்டத்தில் இருப்பதாகவும் தேவனுடைய கோரிக்கைகளிலிருந்து விலகுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் சொல்லி அநேகர் தங்களை ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள். இவ்விதம் அந்த சத்தம் இனி ஒருபோதும் கேட்கப்படாமல் போய் மாயைக்கு விடப்படும் வரையிலும் கிருபையின் ஆவியை அவர்கள் தள்ளிவிடுகிறார்கள். PPTam 835.1

நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்து கொண்ட ராஜா, இதோ, இருக்கிறார் (1 சாமு. 12:13) என்று கில்காலில் சவுலுக்கு இராஜ்ய பாரத்தை உறுதிபடுத்தின் போது சாமுவேல் சொன்னதைப்போல சவுலில் அவர்களுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற இராஜாவை தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்திருந்தார். பார்வைக்கு சரீரத்தில் அழகும் நல்ல உயரமும் பிரபுவைப் போன்ற தோற்றமும் அரசாங்க கௌரவத்தைக் குறித்து அவர்களுக்கு இருந்த கற்பனைக்கு ஒத்த தோற்றமும் அவனுடைய தனிப்பட்ட தைரியமும் யுத்தங்களை நடத்துவதில் அவனுக்கு இருந்த திறமையும் மற்ற தேசங்களிலிருந்து மரியாதையையும் கனத்தையும் பெற அவர்கள் கணக்குப்போட்டிருந்த மிகச் சிறந்த தகுதிகளாக இருந்தன. நீதியோடும் நியாயத்தோடும் ஆட்சி செய்ய தகுதிப்படுத்துகிற உயர்ந்த தகுதிகளை இராஜா பெற்றிருக்க வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் சிறிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. மெய்யான குண நேர்மையைப் பெற்றிருக்கிறவனையோ அல்லது தேவனை நேசித்து அவருக்குப் பயப்படுகிறவனையோ அவர்கள் கேட்கவில்லை. அவருடைய சொந்த ஜனங்களாக தங்களுடைய குறிப்பிட்ட பரிசுத்த குணத்தைப் பாதுகாப்பதற்கேற்ப ஒரு அதிபதி கொண்டிருக்க வேண்டிய குணங்களைக் குறித்து தேவனிடமிருந்து ஆலோசனையைத் தேடவில்லை. அவர்கள் தேவனுடைய வழியைத் தேடாது சொந்த வழியைத் தேடினர். எனவே அவர்கள் விரும்பினதைப்போல அவர்களுடைய குணத்தின் பிரதிபலிப்பையே கொண்டிருந்த ஒரு இராஜாவை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய இராஜாவும் தெய்வீகக் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை. இந்த இராஜாவின் ஆட்சியின் கீழ் அவர்கள் தங்களுடைய தவறைக் காணவும் தேவனுடனான உறவிற்கு திரும்ப வரவும் தேவையான அனுபவத்தை பெற்றுக்கொள்ளுவார்கள். PPTam 835.2

எனினும் சவுலின் மேல் இராஜ்யபார பொறுப்பை வைத்த ஆண்டவர் அவனை விட்டுவிடவில்லை. அவனுடைய சொந்த பலவீனங்களையும் தெய்வீக கிருபையின் அவசியத்தையும் வெளிக்காட்ட தமது பரிசுத்த ஆவியானவரை அவன்மேல் தங்கவைத்தார். சவுல் தேவனை சார்ந்திருப்பானானால் அவர் PPTam 836.1

அவனோடு இருந்திருப்பார். அவனுடைய சித்தம் தேவனுடைய சித்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் வரையிலும் அவருடைய ஆவியின் ஒழுங்கிற்கு அவன் கொடுக்கும் வரையிலும் அவனுடைய முயற்சிகளை வெற்றியினால் முடிசூட்ட முடியும். ஆனால் தேவனின்றி தானாகவே செயல்பட அவன் தெரிந்து கொண்டபோது, ஆண்டவர் அதற்கு மேல் அவனுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடாது. அவனைவிட்டு அப்புறம் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். பின்னர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை குணத்தில் குறைவற்ற மனிதனை அல்ல, மாறாக தன்னை சார்ந்திருப்பதைக்காட்டிலும் அவரை முழுமையாகச் சார்ந்து அவருடைய ஆவியினால் நடத்தப்பட்டு, பாவம் செய்யும் போதும் கடிந்து கொள்ளுதலுக்கும் சரிசெய்வதற்கும் தன்னை ஒப்புக்கொடுக்கிற ஒருவனை சிங்காசனத்திற்கு அவர் அழைத்தார். PPTam 836.2