கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

59/73

59 - இஸ்ரவேலின் முதல் ராஜா

இஸ்ரவேலின் அரசாங்கம் தேவனுடைய நாமத்தினாலும் அதிகாரத்தினாலும் ஆட்சி செய்யப்பட்டிருந்தது. மோசேயின் வேலையும் எழுபது மூப்பர்களின் வேலையும் அதிகாரிகள் நியாயாதிபதிகளின் வேலையும் தேவன் கொடுத்த கட்டளைகளை செயல்படுத்துவது மாத்திரமே . தேசத்திற்கான சட்டம் இயற்ற அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இதுவே இஸ்ரவேல் ஒரு தேசமாக இருந்தவரையிலும் அதன் நிலையாயிருந்தது. அவ்வப்போது தேவனால் ஏவப்பட்ட மனிதர்கள் ஜனங்களுக்குப் போதிக்கவும் பிரமாணங்களை செயல்படுத்தவும் அனுப்பப்பட்டனர். PPTam 789.1

இஸ்ரவேல் ஒரு இராஜாவை வாஞ்சிக்கும் என்பதை ஆண்டவர் முன்னதாகவே கண்டார். ஆனால் அந்த நாடு எதன்மேல் அஸ்திபாரமிடப்பட்டதோ அந்தக் கொள்கைகளை மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இராஜா உன்னதமானவரின் பிரதிநிதியாக இருக்கவேண்டும்; தேவனே தேசத்தின் தலைவராக உணரப்பட வேண்டும், அவருடைய பிரமாணம் தேசத்தின் உயர்ந்த சட்டமாக செயல்படுத்தப்பட வேண்டும். PPTam 789.2

இஸ்ரவேலர்கள் முதலாவது கானானில் நிலவரப்பட்டபோது இறையாண்மையின் கொள்கைகளை ஒப்புக்கொண்டிருந்தனர். யோசுவாவின் அதிகாரத்தின் கீழ் தேசம் செழித்திருந்தது. ஆனால் ஜனத்தொகையின் உயர்வும் மற்ற நாடுகளோடு கொண்ட உறவும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. மக்கள் புறஜாதிகளுடைய பழக்கங்களில் அநேகவற்றை ஏற்றுக்கொண்டு இவ்விதம் தங்களுடைய சொந்த வி சேஷமான பரிசுத்த குணத்தை பெருமளவில் தியாகம் பண்ணியிருந்தனர். படிப்படியாக தேவனுக்கான அவர்களுடைய பயபக்தியை இழந்து, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஐனமாக இருப்பதன் கனத்தைப் போற்றுவதை நிறுத்தினர். புற ஜாதி இராஜாக்களின் ஆடம்பரத்தினாலும் வெளிக்காட்டல்களினாலும் கவரப்பட்டு தங்கள் சொந்த எளிமையில் சோர்வடைந்தனர். பொறாமையும் வெறுப்பும் கோத்திரங்களுக்கு இடையே முளைத்தது. உள்நாட்டு கருத்துவேறுபாடுகள் அவர்களை பெலவீனப்படுத்தியது. தொடர்ச்சியாக புறஜாதி சத்துருக்களின் படையெடுப்பிற்கு அவர்கள் வெளியாக்கப்பட்டிருந்து, தேசங்களுக்கு நடுவிலே தங்களுடைய இடத்தை பராமரிக்க வேண்டுமென்றால் ஒரு பலமான மைய அரசாங்கத்தின் கீழ் கோத்திரங்கள் இணைய வேண்டும் என்று மக்கள் நம்பினர். தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலக்கின்போது, தங்களுடைய தெய்வீக அரசனின் ஆட்சியிலிருந்தும் விடுதலையாக அவர்கள் விரும்பினர். இவ்விதம் ஒரு அரசனைக்குறித்த கோரிக்கை இஸ்ரவேலெங்கும் பரவியது. PPTam 789.3

சாமுவேலின் ஆட்சியின்கீழ் இருந்ததைப்போல மகா பெரிய ஞானத்தோடும் வெற்றியோடும் யோசுவாவின் காலத்திலிருந்து ஒருபோதும் அரசாங்கம் நடத்தப்படவில்லை . நியாயாதிபதி, தீர்க்கதரிசி, ஆசாரியன் என்கிற மூன்று வித ஊழியத்திற்கு தெய்வீகத்தினால் நியமிக்கப்பட்டவனாக தளர்வடையாத பாரபட்சமற்றவைராக்கியத்தோடு மக்களின் நன்மைக்காக அவன் உழைத்தான். தேசம் அவனுடைய ஞானமான கட்டுப்பாட்டின் கீழ் செழித்தது. ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு தெய்வ பக்தி முன்னேற்றப்பட்டது. சில காலம் பிரிவினையின் ஆவி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அரச ரங்கத்தின் பொறுப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள தீர்க்கதரிசி கட்டாயப்படுத்தப்பட்டான். அவன் தன்னுடைய இரண்டு குமாரர்களையும் தன் உதவியாளராக நியமித்தான். சாமுவேல் தன்னுடைய ஊழியத்தை ராமாவில் தொடர்ந்து கொண்டிருந்தபோது, இந்த வாலிபர்கள் தேசத்தின் தெற்கு எல்லைக்கு அருகேயிருந்த பெயர் செபாவில் நியாயம் செய்யும்படியாக நிறுத்தப்பட்டனர். PPTam 790.1

தேசத்தின் முழு ஒப்புதலோடுதான் சாமுவேல் தன்னுடைய குமாரர்களை இந்தப் பதவியில் நியமித்தான். ஆனால் தங்களுடைய தகப்பனின் தேர்விற்குத் தகுதியானவர்களாக அவர்கள் தங்களை நிரூபிக்கவில்லை. ஆண்டவர் மோசேயின் வழியாக இஸ்ரவேலின் அதிபதிகள் நீதியாக நியாயம் செலுத்த வேண்டும் என்ற விசேஷ கட்டளைகளைக் கொடுத்திருந்தார். விதவையுடனும் திக்கற்றவர்களுடனும் நியாயமாக நடக்கவேண்டுமென்றும் பரிதானம் வாங்கக்கூடாதென்றும் விசேஷ கட்டளைகளைக் கொடுத்திருந்தார். ஆனால் சாமுவேலின் குமாரர்கள் பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். அவர்கள் மனதில் பதிக்கும்படியாக அவன் தேடின நியமங்களை தீர்க்கதரிசியின் மகன்கள் கருத்தில் கொண்டிருக்கவில்லை. தங்களுடைய தகப்பனின் தூய்மையான சுயநலமற்ற வாழ்க்கையை அவர்கள் பிரதிபலிக்கவில்லை. ஏலிக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு மனதில் ஒரு செல்வாக்கை செய்ய வேண்டிய பிரகாரம் ஏற்படுத்தவில்லை. அவன் குறிப்பிட்ட அளவு தன் பிள்ளைகளில் திளைத்திருந்தான். அதன் விளைவு அவர்களுடைய குணத்திலும் வாழ்க்கையிலும் வெளிப்படையாகத் தெரிந்தது . PPTam 791.1

இந்த நியாயாதிபதிகளின் அநியாயம் அதிக அதிருப்தியை கொண்டுவர, நீண்ட காலமாக இரகசியமாக வாஞ்சித்திருந்த ஒரு மாற்றத்தை வலியுறுத்துகிற ஒரு காரணம் அமைக்கப்பட்டது. இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து : இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை, ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். ஜனங்களின் நடுவே இருந்த தவறான நடத்தை சாமுவேலிடம் கொண்டு வரப்படவில்லை. அவனுடைய குமாரர்களின் தீங்கான நடத்தை அவனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கு மானால், தாமதமின்றி அவர்களை அவன் அகற்றியிருப்பான். ஆனால் விண்ணப்பதாரர்கள் விரும்பினது அதுவல்ல அவர்களுடைய மெய்யான நோக்கம் அதிருப்தியும் பெருமையும் என்பதையும் அவர்களுடைய கோரிக்கை ஆழ்ந்து ஆராய்ந்த தீர்மானமான நோக்கத்தின் விளைவு என்பதையும் சாமுவேல் கண்டான். அவனுடைய ஆட்சியின் உண்மையையும் ஞானத்தையும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனாலும் இந்த விண்ணப்பத்தை தன்மேல் வந்த கண்டனையாகவும் தன்னை அப்புறப்படுத்தும் படியான நேரடி முயற்சியாகவும் வயதான அந்தத் தீர்க்கதரிசி பார்த்தான். எனினும் அவன் தன் உணர்வுகளை வெளிக்காட்ட வில்லை, நிந்திக்கவுமில்லை. மாறாக, இந்த விஷயத்தை ஆண்டவரிடம் எடுத்துச்சென்று, அவரிடம் மாத்திரமே ஆலோசனையைத் தேடினான். PPTam 791.2

ஆண்டவர் சாமுவேலிடம் : ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள் மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்தது போல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள் என்று கூறினார். ஜனங்களின் நடக்கையை தனிப்பட்ட விதத்தில் தனக்கு எதிரானது என்று நினைத்து வருத்தப்பட்டதற்காக தீர்க்கதரிசி கடிந்துகொள்ளப்பட்டான். அவர்கள் அவமரியாதையை அவனுக்குக் காட்டவில்லை. மாறாக, தமது ஜனத்தின்மேல் அதிபதிகளை நியமித்திருந்த தேவனுடைய அதிகாரத்தின் மேல் காட்டினர். PPTam 792.1

தேவனுடைய மெய்யான ஊழியக்காரர்களை தள்ளி நிராகரிக்கிறவர்கள் வெறும் மனிதர்மேல் ஒரு அவமதிப்பைக் காண்பிக்கிறதில்லை, மாறாக அவனை அனுப்பின் அதிபதியின் மேல் காண்பிக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளும் அவருடைய கடிந்து கொள்ளுதல்களும் ஆலோசனையும் தள்ளப் பட்டிருக்கிறது; அவருடைய அதிகாரம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. PPTam 792.2

யெகோவாவை தங்களுடைய இராஜாவென்று ஒப்புக்கொண்டிருந்து - அவர் ஸ்தாபித்திருந்த சட்டங்களும் அரசாங்கமும் மற்ற அனைத்து தேசங்களைக் காட்டிலும் உன்னதமானது என்று ஒப்புக்கொண்டிருந்த நாட்களே இஸ்ரவேலின் மாபெரும் செழுமையான நாட்களாயிருந்தன. ஆண்டவருடைய கற்பனைகளைக்குறித்து மோசே இஸ்ரவேலிடம்: ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும், அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள் (உபா. 4:6) என்று அறிவித்திருந்தான். ஆனால் தேவனுடைய பிரமாணங்களிலிருந்து விலகினதால் தேவன் உண்டாக்கவேண்டுமென்று வாஞ்சித்திருந்த மக்களாவதிலிருந்து எபிரெயர்கள் தவறினர். பின்னர் அவர்களுடைய சொந்த பாவம் மற்றும் மதியீனத்தினுடைய விளைவுகளான அனைத்து தீமைகளையும் தேவனுடைய அரசாங்கத்தின் மேல் வைத்தனர். பாவத்தினால் மிக முழுமையாக அவர்கள் குருடாகினர். PPTam 792.3

ஆண்டவர் தமது தீர்க்கதரிசிகளின் மூலம் இஸ்ரவேல் ஒரு இராஜாவினால் ஆட்சி செய்யப்படும் என்று முன்னதாக அறிவித்தார். ஆனால் இப்படிப்பட்ட அரசாங்கமே அவர்களுக்கு மிகச் சிறந்தது என்றோ அல்லது அவரது சித்தப்படியானதென்றோ அவர் அறிவிக்கவில்லை. அவருடைய ஆலோசனைகளினால் நடத்தப்பட மறுத்ததினால் அவர்களுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலை பின்பற்ற மக்களை அவர் அனுமதித்தார். தேவன் அவர்களுக்கு தமது கோபத்தில் இராஜாவைக் கொடுத்தார் (ஓசியா 13:11) என்று ஓசியாக அறிவிக்கிறான். தேவனிடமிருந்து ஆலோசனையைத் தேடுவதற்குப் பதிலாக அல்லது வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய சித்தத்திற்கு எதிராக மனிதர் தங்களுடைய சொந்த வழியை தெரிந்து கொள்ளும் போது அதைப் பின்தொடரும் கசப்பான அனுபவங்களினால் தங்களுடைய மதிகேட்டை உணர்ந்து தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்த நடத்தப்படும்படி அவர் பல வேளைகளில் அவர்களுடைய விருப்பங்களை வழங்குகிறார். மனித அகந்தையும் பாவமும் ஆபத்தான வழிகாட்டிகளாக நிரூபிக்கப்படும். தேவனுடைய சித்தத்திற்கு முரணாக இருதயம் வாஞ்சிக்கிறது. முடிவில் அது ஆசீர்வாதமாயிருப்பதற்குப்பதிலாக சாபமாகக் காணப்படும். PPTam 793.1

பிரமாணத்தைக் கொடுத்தவராகவும் தங்களுடைய பலத்தின் ஆதாரமாகவும் தம்மை மாத்திரம் தம்முடைய ஜனங்கள் நோக்கிப் பார்க்க வேண்டுமென்று தேவன் வாஞ்சித்தார். தேவன் மேல் சார்ந்திருப்பதை உணர்ந்து அவர்கள் தொடர்ச்சியாக அவரிடம் நெருக்கமாக இழுக்கப்படுவார்கள். அவர்கள் உயர்த்தப்பட்டு, தகுதிப்படுத்தப்பட்டு, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக அவர்களை அழைத்த அந்த உயர்ந்த முடிவில் பொருத்தப்படுவார்கள். ஆனால் ஒரு மனிதன் சிங்காசனத்தின் மேல் வைக்கப்படும் போது அது மக்களின் மனங்களை தேவனிடமிருந்து திருப்ப முனையும் . மக்கள் தெய்வீக வல்லமையை குறைவாகவும் மனித பலத்தை அதிகமாகவும் நம்புவார்கள். அவர்களுடைய இராஜாக்களின் தவறுகள் அவர்களைப் பாவத்திற்குள் நடத்தி தேசத்தை தேவனிடமிருந்து பிரிக்கும். PPTam 793.2

ஜனங்களின் கோரிக்கையை அளிக்கும்படியும் ஆனாலும் ஆண்டவருடைய ஒப்புக்கொள்ளாமையைக் குறித்து எச்சரித்து அவர்களுடைய வழியின் விளைவு என்னவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கும்படியும் சாமுவேல் அறிவுறுத்தப்பட்டான். அப்பொழுது சாமுவேல், ஒருராஜாவேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொன்னான் அவன் அவர்கள் மேல் வைக்கப்படவிருக்கிற பாரங்களை அவர்கள் முன் உண்மையாக வைத்து இப்போது சு தந்தரமும் செழிப்புமான நிலைமையோடு ஒப்பிடும் போது இருக்கக்கூடிய மாறுபாடான ஒடுக்குதலின் நிலைமையைக் காண்பித்தான். அவளுடைய இராஜா மற்ற இராஜாக்களின் பகட்டையும் ஆடம்பரத்தையும் பின்பற்றுவான். அதற்கு ஆதாரமாக அவர்கள் மேலும் அவர்கள் சொத்துக்கள் மேலும் வருந்தக்கூடிய சுமைகளை வற்புறுத்துவான். அவர்களுடைய வாலிபரில் மேன்மையானவர்களைத் தன்னுடைய சேவைக்காக கேட்பான். அவர்கள் அவனுக்கு முன்பாக அவனுடைய இரத ஓட்டிகளாகவும் குதிரை வீரர்களாகவும் அவனுக்கு முன் ஓடுகிறவர்களாகவும் ஆக்கப்படுவார்கள். அவனுடைய படையை அவர்கள் நிரப்ப வேண்டும் அவனுடைய வயல்களை உழவும் அவனுடைய அறுவடையை அறுக்கவும் அவனுடைய சேவைக்கு யுத்தத்தின் ஆயுதங்களை உண்டாக்கவும் கோரப்படுவார்கள். இஸ்ரவேலின் குமாரத்திகள் அரச வீட்டிற்கு சமையல் செய்கிறவர்களாகவும் அப்பாஞ்சுடுகிறவர்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய அரச நிலைமையை ஆதரிப்பதற்காக யெகோவா தேவனால் தாமே மக்களுக்குக் கொடுக்கப்பட்ட அவர்களுடைய நிலத்தில் சிறப்பானதை அவன் எடுத்துக்கொள்வான். அவர்களுடைய வேலைக்காரரில் மிக மதிப்பானவர்களையும் அவர்களுடைய ஆடுமாடுகளையும் அவன் எடுத்துக் கொண்டு தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். இவையெல்லாந்தவிர, அவர்களுடைய அனைத்து வருமானத்திலும் அவர்களுடைய உழைப்பின் இலாபங்களிலும் அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களிலும் பத்தில் ஒரு பகுதியை கேட்பான். நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள் என்று தீர்க்கதரிசி முடித்தான். நீங்கள் தெரிந்து கொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள். ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார். அவனுடைய வற்புறுத்துதல்கள் எவ்வளவு பாரமாக இருந்தாலும் ஒரு முறை இராஜாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு அதை தங்கள் விருப்பம் போல ஒதுக்க முடியாது. PPTam 794.1

ஆனால் மக்கள். அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம், எங்கள் ராஜாங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்ற பதிலை திரும்பக் கொடுத்தனர். PPTam 795.1

மற்ற அனைத்து தேசங்களையும் போல இந்த விதத்தில் மற்ற தேசங்களைப் போல இல்லாதிருப்பது ஒரு விசேஷ வாய்ப்பும் ஆசீர்வாத என்பதை இஸ்ரவேலர்கள் உணரவில்லை. தேவன் இஸ்ரவேலர்களை தம்முடைய சொந்த பொக்கிஷமாக்கும்படியாக மற்ற தேசங்களிலிருந்து பிரித்திருந்தார். ஆனால் இந்த உயர்ந்தகனத்தை கருத்தில் கொள்ளாது அவர்கள் புறஜாதிகளின் உதாரணத்தைப் பின்பற்ற ஊக்கமாக வாஞ்சித்திருந்தனர், உலக பழக்கங்களோடும் வழக்கங்களோடும் ஒத்துப்போகும் ஏக்கம் இன்னமும் தேவனுடைய பிள்ளைகளென்று சொல்லிக்கொள்ளு கிறவர்களின் நடுவே இருக்கிறது. தேவனிடமிருந்து பிரிந்து செல்லும் போது உலகத்தின் கனத்திற்கும் ஆதாயத்திற்கும் பேராசை கொண்டவர்களாக மாறுகிறார்கள். இந்த உலகத்தின் தேவனை வணங்குகிறவர்களின் வழக்கங்களை பின்பற்ற கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாகத் தேடுகிறார்கள். உலகத்தாரோடு இணைவதாலும் அவர்களுடைய வழக்கங்களோடு இணங்கிப்போவதாலும் தேவபக்தியற்றவர்கள் மேல் வல்லமையான செல்வாக்கை செயல்படுத்தலாம் என்று அநேகர் நிர்ப்பந்திக்கிறார்கள். ஆனால் இந்த முறையைப் பின்பற்றுகிற அனைவரும் தங்களுடைய பலத்தின் ஆதாரத்திலிருந்து தங்களைப் பிரித்து கொள்ளுகிறார்கள். உலகத்திற்கு நண்பர்களாகும் போது அவர்கள் தேவனுக்குச் சத்துருக்களாகிறார்கள். பூமிக்குரிய உலக மேன்மைக்காக இருளிலிருந்து மாபெரும் வெளிச்சத்திற்கு அழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி தேவன் அழைத்திருக்கிற சொல்லக்கூடாத கனத்தை அவர்கள் தியாகம் செய்கிறார்கள். 1 பேதுரு 2:9. PPTam 795.2

ஆழமான வருத்தத்தோடு மக்களின் வார்த்தைகளை சாமுவேல் கவனித்தான். ஆனால் ஆண்டவர் அவனிடம் : நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள் ஒரு ராஜாவை ஏற்படுத்து என்று சொன்னார். தீர்க்கதரிசி தன்னுடைய கடமையைச் செய்திருந்தான். அவன் விசுவாசமாக உண்மையாக எச்சரிப்புகளைக் கொடுத்திருந்தான். அது நிராகரிக்கப்பட்டிருந்தது. பாரமான மனதோடு அவன் ஜனங்களை அனுப்பினான். அரசாங்கத்திற்கான மாபெரும் ஆயத்தம் செய்வதற்காக அவனும் பிரிந்து சென்றான். PPTam 795.3

சாமுவேலின் தூய்மையான வாழ்க்கையும் சுயநலமற்ற அர்ப்பணிப்பும் சுயத்திற்கு உழைத்த ஆசாரியர்களுக்கும் மூப்பர்களுக்கும் பெருமையானவர்களுக்கும் இஸ்ரவேலின் சிற்றின்பப் பிரியருக்கும் நிலையான கடிந்து கொள்ளுதலாக இருந்தது. எந்த ஆடம்பரமும் எந்த வெளிக்காட்டலும் அவனிடம் இல்லாதிருந்தும் அவனுடைய உழைப்பு பரலோகத்தின் முத்திரையைக் கொண்டிருந்தது. யாருடைய நடத்துதலின் கீழ் எபிரெய தேசத்தை அவன் ஆண்டுவந்தானோ அந்த உலக மீட்பரால் அவன் கனப்படுத்தப்பட்டிருந்தான். ஆனால் மக்கள் அவனுடைய பக்தியிலும் அர்ப்பணிப்பிலும் சே பார்வடைந்திருந்தார்கள். அவனுடைய தாழ்மையான அதிகாரத்தை புறந்தள்ளி அரசனாக அவர்களை ஆளப்போகிற ஒரு மனிதனுக்காக அவனை நிராகரித்திருந்தனர். சாமுவேலின் குணத்தில் கிறிஸ்துவின் சாயல் பிரதிபலிக்கப்பட்டதை நாம் காண்கிறோம். இரட்சகருடைய வாழ்க்கையின் தூய்மையே சாத்தானுடைய உக்கிரத்தை தூண்டி விட்டது. அந்த வாழ்க்கை உலகத்திற்கு ஒளியாக இருந்து மனிதருடைய இருதயங்களில் மறைந்திருந்த சீரழிவை வெளிக்காட்டியது. கிறிஸ்துவின் பரிசுத்தமே தேவபக்தியுள்ளவர்களென்று அழைத்துக்கொண்டவர்களின் பொய்யான இருதயத்தின் மூர்க்கமான உணர்ச்சிகளை அவருக்கு எதிராகத் தூண்டிவிட்டது. கிறிஸ்து பூமியின் செல்வத்தோடும் கனத்தோடும் வரவில்லை . எனினும் அவர் நடப்பித்த கிரியைகள் எந்த மனித பிரபுவைக் காட்டிலும் மகா பெரிய வல்லமையைக் கொண்டிருந்தவராக அவரைக் காட்டியது. ஒடுக்குகிறவனின் நுகத்தை முறிப்பார் என்று யூதர்கள் மேசியாவை பார்த்திருந்தனர். எனினும் அவர்களுடைய கழுத்தின் மேல் அந்த நுகத்தைப் பூட்டியிருந்த பாவங்களை அவர்கள் நேசித்திருந்தனர். கிறிஸ்து அவர்களுடைய பாவங்களை மூடி அவர்களுடைய பக்தியை புகழ்ந்திருப்பாரெனில் அவரை தங்களுடைய இராஜாவாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். மாறாக, அவர்களுடைய பொல்லாங்குகளை அவர் பயமின்றி கடிந்துகொண்டதை அவர்கள் தாங்கக்கூடாதிருந்தனர். தயவும் தூய்மையும் பரிசுத்தமும் உன்னதமுமாக ஆட்சி செய்திருந்து பாவத்தைத்தவிர வேறு எதன்மேலும் வெறுப்பை வளர்த்திராத அவருடைய குணத்தின் இனிமையை அவர்கள் தள்ளிவிட்டிருந்தனர். இவ்விதமே உலகத்தின் ஒவ்வொருயுகத்திலும் இருந்திருக்கிறது. பரலோகத்தின் ஒளி அதில் நடக்க மறுக்கிற அனைவர்மேலும் ஆக்கினையைக் கொண்டு வருகிறது பாவத்தை வெறுக்கிறவர்களின் உதாரணத்தினால் கண்டிக்கப்படும் போது மாய்மாலக்காரர்கள் உண்மையுள்ளவர்களை உபத்திரவப்படுத்தவும் தொல்லைப்படுத்தவும் சாத்தானுடைய முகவர்களாகின்றனர். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் - 2 தீமோ. 3:12. PPTam 796.1

இஸ்ரவேலின் இராஜ அரசாட்சி தீர்க்கதரிசனத்தில் முன்னதாகவே சொல்லப்பட்டிருந்தபோதும் அவர்களுடைய இராஜாவை தெரிந்தெடுக்கும் உரிமையை தேவன் தம்மிடமே வைத்திருந்தார். அந்த தெரிந்து கொள்ளுதலை முழுமையாக அவரிடமே கொடுக்குமளவு எபிரெயர்கள் இதுவரையிலும் அவருடைய அதிகாரத்தை மதித்திருந்தனர். தெரிந்து கொள்ளுதல் பென்யமீன் கோத்திரத்தைச் சார்ந்த கீசின் மகனாகிய சவுலின் மேல் விழுந்தது. PPTam 797.1

எதிர்கால அரசனின் தனிப்பட்ட தகுதிகள் இராஜாவை வாஞ்சித்திருந்த இருதயத்தின் அகந்தையை திருப்தி செய்வதாக இருந்தது. இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் ச வுந்தரியவான் இல்லை - 1 சாமு. 9:2. அவன் கௌரவமான மனிதனாக இருந்து, வாழ்க்கையின் உயிர் துடிப்போடு, அழகும் உயரமும் கொண்ட, அதிகாரம் செய்வதற்கென்றே பிறந்தவனைப்போன்று காணப்பட்டான். வெளிப்படையான இந்த கவர்ச்சியிருந்தும் மெய்யான ஞானத்தைக் கொடுக்கிற உயர்ந்த தகுதிகளை சவுல் பெறாதிருந்தான். தன்னுடைய அவசரமான மூர்க்கமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அவன் தன் வாலிபத்தில் கற்காதிருந்தான். தெய்வீக கிருபையின் புதுப்பிக்கும் வல்லமையை அவன் ஒருபோதும் உணராதிருந்தான். PPTam 797.2

சவுல் வல்லமையும் செல்வமும் கொண்ட ஒரு தலையானவனின் மகனாயிருந்தான். எனினும் அந்த கால எளிமையின்படி ஒரு வேலையாளின் தாழ்மையான கடமைகளில் தன் தகப்பனோடு கூட ஈடுபட்டிருந்தான். அவன் தகப்பனுடைய சில மிருகங்கள் மலைகளில் வழிதவறிப்போக, சவுல் ஒரு வேலைக்காரனோடு அவைகளைத் தேடச் சென்றான். மூன்று நாட்களுக்கு வீணாகவே தேடின அவர்கள் சாமுவேலின் இடமாகிய ராமாவிற்கு அருகில் வந்தபோது காணாமற்போன மிருகங்களைக்குறித்து தீர்க்கதரிசியிடம் விசாரிக்க வேண்டும் என்று வேலைக்காரன் ஆலோசனை கூறினான். என் கையில் இன்னும் கால் சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். இது அந்தக்கால் வழக்கத்திற்கு ஒத்ததாக இருந்தது. தன்னைவிடவும் உயர்ந்த பதவியிலோ அல்லது ஊழியத்திலோ இருந்த ஒரு மனிதனை ஒருவன் காணச் செல்லும் போது, மரியாதையின் வெளிப்பாடாக ஒரு சிறிய பரிசை கொடுப்பான். PPTam 797.3

அவர்கள் பட்டணத்தை நெருங்கின் போது தண்ணீர் எடுக்க வந்த சில் வாலிபப் பணிப்பெண்களிடம் ஞானதிருஷ்டிக்காரனைக் குறித்து விசாரித்தனர். ஒரு மத ஆரானை நடக்கவிருப்பதாகவும் தீர்க்கதரிசி ஏற்கனவே வந்துவிட்டதாகவும் மேட்டின் மேல் பலி செலுத்தப்போவதாகவும் அதன்பின்னர் பலி விருந்து இருப்பதாகவும் அவர்கள் பதிலளிக்கப்பட்டனர். சாமுவேலின் நிர்வாகத்தின் கீழ் பெரிய மாற்றம் வந்திருந்தது. முதலாவது அவனுக்கு தேவனுடைய அழைப்பு வந்தபோது ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியங்கள் ஒரு நிந்தனையில் இருந்தன. மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள் - 1 சாமு. 2:17. ஆனால் இப்போது தேவனுடைய ஆராதனைதேசமுழுவதிலும் பராமரிக்கப்பட்டு, மக்கள் மத ஆராதனைகளில் ஒரு விருப்பத்தை வெளிக்காட்டினர். ஆசரிப்புக் கூடாரத்தில் எந்த ஊழியமும் நடைபெறாதிருந்தும் அந்தக்காலத்தில் வேறு இடத்தில் பலிகள் செலுத்தப்பட்டன. இந்த நோக்கத்திற்காக போதனைக்காக மக்கள் சென்றிருந்த ஆசாரியர் மற்றும் லேவியரின் பட்டணங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இந்தப் பட்டணங்களின் உயர்ந்த இடங்கள் பலிக்காகத் தெரிந்துகொள்ளப்பட்டு இவ்விதம் மேடுகள் என்று அழைக்கப்பட்டன. PPTam 798.1

பட்டணத்தின் வாசலில் தீர்க்கதரிசியால் தானே சவுல் சந்திக்கப்பட்டான். இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட அரசன் அந்த நேரத்தில் அங்கு வருவான் என்று தேவன் சாமுவேலுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இப்போது அவர்கள் முகமுகமாக நின்றபோது ஆண்டவர் சாமுவேலிடம் : இதோ நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்று கூறினார். PPTam 798.2

ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்ற சவுலின் விண்ணப்பத்திற்கு சாமுவேல் : ஞானதிஷ்டிக்காரன் நான்தான் என்று பதிலளித்தான். தொலைந்து போன மிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற உறுதியையும் கொடுத்து, தாமதித் திருந்து விருந்தில் பங்குபெறும்படி PPTam 799.1

அவனை நிர்ப்பந்தித்தான். அதே நேரம் அவன் முன்னதாக இருந்த மாபெரும் எதிர்காலத்தைக் குறித்து : சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான். கேட்டுக்கொண்டிருந்தவனின் மனம் தீர்க்கதரிசியின் வார்த்தைகளால் சிலிர்த்தது. அப்படிப்பட்ட குறிப்பைக் குறித்த சில காரியங்களை அவனால் உணர முடியவில்லை. ஏனெனில் ஒரு இராஜா வேண்டுமென்ற கோரிக்கை முழு தேசத்தின் கவனத்தையும் ஆட்கொண்டது. எனினும் அடக்கமான சுயத் தாழ்மையோடு. நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்று சவுல் பதிலளித்தான். PPTam 799.2

சாமுவேல் புதியவனை பட்டணத்தின் முக்கிய மனிதர்கள் கூடியிருந்த இடத்திற்கு அழைத்துச்சென்றான். அவர்களுக்கிடையே கனமான இடம் சவுலுக்குக் கொடுக்கப்பட்டு, விருந்தில் தெரிந்துகொள்ளப்பட்ட பகுதி அவன் முன்பாக வைக்கப்பட்டது. ஆராதனை முடிந்தது. சாமுவேல் தன் விருந்தாளியை தன் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று மேல் வீட்டில் அவனோடு பேசி, இஸ்ரவேலின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாபெரும் கொள்கைகளை அவன் முன் வைத்து, இவ்விதம் அவனுடைய உயர்ந்த தகுதிக்கு ஓரளவு அவனை ஆயத்தப்படுத்த முயன்றான். PPTam 799.3

அடுத்த நாள் காலையில் சவுல் பிரிந்து சென்ற போது தீர்க்கதரிசி அவனோடு சென்றான். பட்டணத்தைத் தாண்டிச் சென்ற போது வேலைக்காரனை சற்று முன்செல்லும்படி கட்டளையிட்டான். பின்னர் தேவனிடமிருந்து அவனுக்கு அனுப்பப்பட்ட தூதை பெற்றுக்கொள்ளும்படி தரித்து நிற்க சவுலை அழைத்தான். அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து அவனை முத்தஞ் செய்து : கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்திரத்தின் மேல் தலைவனாக அபிஷே கம் பண்ணினார் அல்லவா? என்றான். தெய்வீக அதிகாரத்தினால் இது செய்யப்பட்டது என்பதன் சான்றாக வீடு நோக்கிய பயணத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை அவன் முன்னதாக அறிவித்து, அவனுக்காக காத்திருந்த பதவிக்கு தேவனுடைய ஆவியானவர் அவனைத்தகுதிப்படுத்துவார் என்று சவுலுக்கு உறுதி கொடுத்தான். கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார் என்று தீர்க்கதரிசி கூறினான். PPTam 799.4

சவுல் தன் வழியே போனபோது தீர்க்கதரிசி சொன்னதைப் போலவே அனைத்தும் சம்பவித்தது. பென்யமீனின் எல்லையில் தொலைந்துபோன மிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அறிவிக்கப்பட்டான். தாபோரின் சம்பூமியில் பெத்தேலில் தேவனைத் தொழுது கொள்ள போய்க்கொண்டிருந்த மூன்று மனிதர்களைச் சந்தித்தான். அவர்களில் ஒருவன் பலிக்காக மூன்று ஆட்டுக்குட்டிகளையும் மற்றவன் மூன்று அப்பங்களையும் மூன்றாமவன் பலிவிருந்திற்காக ஒரு துருத்தி திராட்சரசத்தையும் சுமந்து சென்றார்கள். அவர்கள் சவுலுக்கு வழக்கமான வாழ்த்து தலைக் கொடுத்து மூன்று அப்பங்களில் இரண்டு அப்பங்களையும் அவனுக்குக் கொடுத்தனர். அவனுடைய சொந்த பட்டணமான கிபியாவின் மேட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசிகளின் கூட்டம் குழல், வீணை, தம்புரு, யாழ் மற்றும் சிறு முரசின் இசைக்கு தேவனுக்குத் துதியாக பாடிக்கொண்டிருந்தனர். சவுல் அவர்களை நெருங்கின் போது ஆவியானவர் அவன்மேலும் வந்தார். அவர்களுடைய துதியின் பாடலில் அவனும் இணைந்து அவர்களோடு தீர்க்கதரிசனம் சொன்னான். மிகவும் சரளமாகவும் ஞானமாகவும் அவன் பேசி மிக ஊக்கமாக ஆராதனையில் கலந்து கொள்ள, அவனை அறிந்திருந்தவர்கள் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று ஆச்சரியத்தில் வியந்தனர். PPTam 800.1

சவுல் தீர்க்கதரிசிகளோடு ஆராதனையில் இணைந்தபோது பரிசுத்த ஆவியானவரால் பெரும் மாற்றம் அவனில் நடப்பிக்கப்பட்டது. இயற்கையான இருதயத்தின் இருட்டின் மேல் தெய்வீக தூய்மை மற்றும் பரிசுத்தத்தின் ஒளி பிரகாசித்தது. தேவன் முன்பு தான் இருந்தவண்ணமாகவே தன்னைக் கண்டான். பரிசுத்தத்தின் அழகை அவன் கண்டான். இப்போது பாவத்திற்கும் சாத்தானுக்கும் எதிரான யுத்தத்தைத் துவக்கும்படி அவன் அழைக்கப்பட்டு, இந்தப் போராட்டத்தில் அவனுடைய பலம் முழுமையாக தேவனிடமிருந்தே வரவேண்டும் என்கிறதை உணர நடத்தப்பட்டான். இதற்கு முன் மங்கலாகவும் நிச்சயமின்றியும் தோன்றிய மீட்பின் திட்டம் அவனுடைய புரிந்துகொள்ளுதலுக்குத் திறக்கப்பட்டது. அவனுடைய உயர்ந்த இடத்திற்கான தைரியத்தினாலும் ஞானத்தினாலும் ஆண்டவர் அவனை நிரப்பினார். பலம் மற்றும் கிருபையின் ஆதாரத்தை அவர் அவனுக்கு வெளிக்காட்டி, தெய்வீக கோரிக்கைகளையும் அவனுடைய சொந்தக் கடமைகளையுங்குறித்த அவனுடைய புரிந்துகொள்ளுதலை பிரகாசிப்பித்தார். PPTam 800.2

சவுலை இராஜாவாக அபிஷேகம் பண்ணினது தேசத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. தேவனுடைய தெரிந்தெடுப்பு சீட்டுப் போடுவதின் வழியாக அனைவருக்கும் வெளிக்காட்டப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக சாமுவேல் மக்களை மிஸ்பாவிற்கு அழைத்தான். தெய்வீக நடத்துதலுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கப்பட்டது. அதைச் சீட்டுப்போடும் பவித்திரமான சடங்கு தொடர்ந்தது. கூடியிருந்த திரளானவர்கள் மௌனமாக காத்திருந்தனர். கோத்திரம், குடும்பம், வீட்டார் அடுத்தடுத்து குறிக்கப்பட்டனர். பின்னர் கீசின் மகனாகிய சவுல் தெரிந்து கொள்ளப்பட்ட தனிநபராக காட்டப்பட்டான். ஆனால் சவுல் அந்தக் கூட்டத்தில் இல்லை. அவன்மேல் விழவிருந்த மாபெரும் பொறுப்பைக் குறித்த உணர்வினால் பாரமடைந்தவனாக அவன் இரகசியமாக வெளியேறியிருந்தான். எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்து இராஜ கம்பீரத்தையும் உருவத்தையும் கொண்டிருக்கிறான் என்று அகந்தையோடும் திருப்தியோடும் அவனைக் கவனித்த ச பையார்முன் அவன் திரும்பக் கொண்டுவரப்பட்டான். சாமுவேல் தானும் கூட்டத்தார் முன் அவனை வைத்தபோது கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள். சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்று வியந்து கூறினான். அதற்குப் பதிலாக திரளான கூட்டத்திடமிருந்து : ராஜா வாழ்க என்ற நீண்ட மகிழ்ச்சியின் சத்தம் எழுந்தது. PPTam 801.1

பின்னர் இராஜாங்கம் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கிறது என்பதையும், எதினால் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அறிவித்து, இராஜாங்கத்தின் முறையை சாமுவேல் மக்கள் முன்பு கூறினான். இராஜா முற்றிலும் தன்னாட்சி மன்னனாக இராது, உன்னதமானவரின் சித்தத்தின்கீழ் தன் வல்லமையை வைக்க வேண்டும். இந்தச் செய்தி புத்தகத்தில் பதிக்கப்பட்டு, அதிலே பிரபு வினுடைய தனிச்சிறப்பும் மக்களுடைய உரிமைகளும் வாய்ப்புகளும் எழுதப்பட்டன. உண்மையுள்ள தீர்க்கதரிசியான சாமுவேலின் எச்சரிப்பை தேசம் தள்ளியிருந்தபோதிலும், அவர்களுடைய விருப்பங்களுக்குக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போது கூடுமானவரையிலும் அவர்களுடைய சுதந்திரங்களைப் பாதுகாக்க அவன் இன்னமும் முயற்சித்தான். PPTam 801.2

சவுலை தங்களுடைய அரசனாக ஒப்புக்கொள்ள ஜனங்கள் பொதுவாக ஆயத்தமாயிருந்தபோது அதற்கு எதிராக பெரிய கூட்டம் ஒன்றும் இருந்தது. மிகப்பெரியதும் மிக வல்லமையானதுமான யூதா, எப்பீராயீமை நிராகரித்து, இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிகவும் சிறியதான பென்யமீன் கோத்திரத் திலிருந்து இஸ்ரவேலின் ஒரு அரசனை தெரிந்து கொள்ளுவதென்பது சகிக்கக்கூடாத அவமானமாக இருந்தது. சவுலுக்கு விசுவாசம் காண்பிக்கவும் வழக்கமான பரிசுகளை அவனுக்குக் கொண்டுவரவும் அவர்கள் மறுத்தனர். இராஜா வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் நிர்ப்பந்தித்தவர்கள் தான் தேவன் நியமித்த மனிதனை நன்றியோடு ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள். ஒவ்வொரு பிரிவில் இருந்தவர்களும் சிங்காசனத்தின்மேல் வைக்கப்பட தங்களுக்கு விருப்பமானவர்களைக் கொண்டிருந்தனர். தலைவர்களில் அநேகருங் கூட அந்த கனத்தை தாங்கள் பெற்றுக்கொள்ள விரும்பியிருந்தனர், பொறாமையும் வெறுப்பும் அநேகருடைய இருதயங்களில் எழும்பியது. அகந்தையும் பேராசையுங்கொண்ட முயற்சிகள் ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் முடிந்தது. PPTam 802.1

சம்பவங்களின் இப்படிப்பட்ட நிலையில் அரசாங்க கௌரவத்தை ஏற்றுக்கொள்ள தகுந்த நேரமில்லை என்று சவுல் கண்டான். முன்பிருந்ததைப்போலவே அரசாங்கத்தை நிர்வகிக்க சாமுவேலை விட்டுவிட்டு அவன் கிபியாவிற்குத் திரும்பினான். அவனை தெரிந்தெடுத்ததில் தெய்வீக தெரிந்து கொள்ளுதலைக் கண்ட ஒரு கூட்டத்தார் அவனை பாதுகாக்கும் தீர்மானத்தோடு மரியாதை கொடுத்து அவனோடு சென்றனர். ஆனால் சிங்காச னத்திற்கான தன் உரிமையை நிர்ப்பந்தத்தினால் நிலை நிறுத்த அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தன்னுடைய அதிகாரத்தை ஸ்தாபிப்பதை முழுமையாக தேவனிடம் விட்டவனாக பென்யமீனின் மேடுகளில் இருந்த தன்னுடைய வீட்டில் ஒரு உழவனின் கடமைகளில் மௌனமாக அவன் தன்னை ஈடுபடுத் தினான். PPTam 802.2

சவுலின் நியமனத்திற்குப்பின் விரைவில் அம்மோனியர்கள் தங்கள் இராஜாவான நாகாஷின்கீழ் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கோத்திரங்களின் மேல் படையெடுத்து யாபேஸ் கிலேயாத்தை பயமுறுத்தினர். அம்மோனியர்களுக்கு கப்பம் கட்டுவதாகக்கூறி அந்தப்பட்டணவாசிகள் சமாதான உடன்படிக்கை செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு அந்த கொடிய இராஜா இணங்காது, அவனுடைய வல்லமைக்கு நிலையான சாட்சிகளாக அவர்களை மாற்ற, அவர்கள் ஒவ்வொருவருடைய வலது கண் ணையும் பிடுங்கும் நிபந்தனையில் இதற்கு ஒப்புக்கொள்ளுவதாக அறிவித்தான். PPTam 803.1

முற்றுகையிடப்பட்ட அப்பட்டணத்தின் மக்கள் ஏழுநாள் தவணைக்காக இறைஞ்சினர். தாங்கள் எதிர்பார்த்திருக்கிற வெற்றியின் கனத்தை உயர்த்தலாம் என்று நினைத்து இதற்கு அம்மோனியர் சம்மதித்தனர். யோர்தானுக்கு மேற்கே இருந்த கோத்திரங்களிடம் உதவி கேட்டு யாபேசிலிருந்து தூதுவர்கள் உடனடியாக அனுப்பப்பட்டனர். பரவலான திகிலை உண்டாக்கின் இந்தச் செய்தியை அவர்கள் கிபியாவிற்குக் கொண்டுவந்தனர். வயலில் மாடுகளின் பின் சென்றிருந்த சவுல் இரவில் திரும்பின் போது, சில் மாபெரும் பேரிடரை அறிவித்த கூக்குரலைக் கேட்டான். ஜனங்கள் அழுத முகாந்தரம் என்ன? என்று அவன் கேட்டான். அவமானப்படக்கூடிய அந்த கதை திரும்பவும் கூறப்பட்டபோது அவனுக்குள் உறங்கியிருந்த வல்லமைகள் அனைத்தும் எழுப்பப்பட்டன. தேவனுடைய ஆவி அவன் மேல் இறங்கினதினால் ...... ஓரிணை மாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாதிபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடு களுக்கெல்லாம் அனுப்பி, சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான். PPTam 803.2

பேசேக்கின் சம் பூமியில் சவுலின் கட்டளையின்கீழ் மூன்று லட்சத்து முப்பதினாயிரம் பேர் கூடினர். அம்மோனியர்களுக்கு ஒப்புக்கொடுப்பதாக அறிவித்திருந்த அதே நாளில் உதவியை எதிர்பார்க்கலாம் என்ற உறுதியோடு செய்தியாளர்கள் உடனடியாக முற்றுகையிடப்பட்ட பட்டணத்திற்கு அனுப்பப்பட்டனர். இரவோடு இரவாக வேகமாக அணிவகுத்து சவுலும் அவனுடைய படையும் யோர்தானைக் கடந்து யாபேசின் முன்பு கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் வந்து சேர்ந்தது. கிதியோனைபோலவே தன் படையை மூன்று பங்காக பிரித்து, ஆபத்தை சந்தேகிக்காது பாதுகாப்பின்றி இருந்த அதிகாலையில் அம்மோனியரின் பாளயத்தில் அவர்கள் மேல் விழுந்தனர். அதைத் தொடர்ந்த பீதியில் அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். தப்பினவர்களில் இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சித றிப்போனார்கள். PPTam 803.3

சவுலின் உடனடியான செயலும் வீரமும் அவ்வளவு பெரிய படையை வெற்றிகரமாக நடத்தினதில் அவனுக்கிருந்த தலைமைத் தகுதியும் தாமற்ற தேசங்களை சமாளிப்பதற்கு ஏதுவாக இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைவனிடம் எதிர்பார்த்திருந்த தகுதிகளாக இருந்தன. அவர்கள் இப்போது அவனை தங்கள் தலைவனாக வாழ்த்தி, தேவனுடைய விசேஷ ஆசீர்வாதம் இல்லாதபோது தங்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானது என்பதை மறந்தவர்களாக வெற்றியின் கனத்தை மனித முகவர்கள் மேல் சாற்றினர். தங்களுடைய உற்சாகத்தில் சவுலின் அதிகாரத்தை ஒப்புக்கொள்ள முதலில் மறுத்திருந்தவர்களை கொலை செய்யவும் ஆலோசனை கூறினர். ஆனால் இராஜாதலையிட்டு: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது. இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்று கூறினான். இங்கே தன்னுடைய குணத்தில் வந்திருந்த மாற்றத்திற்கு சவுல் சாட்சி கொடுத்தான். கனத்தை தனக்கு எடுத்துக்கொள்ளுவதற்குப் பதிலாக மகிமையை அவன் தேவனுக்குக் கொடுத்தான். பழிவாங்கும் வாஞ்சையை காண்பிப்பதற்குப்பதிலாக இரக்கமும் மன்னிப்புமுள்ள ஆவியை அவன் வெளிக்காட்டினான். தேவனுடைய கிருபை இருதயத்தில் வாசம் செய்கிறது என்பதற்கு இது தவறில்லாத சான்றாக இருக்கிறது. PPTam 804.1

இராஜாங்கத்தை பொதுமக்கள் முன்னிலையில் சவுலிற்கு உறுதியளிக்கும்படியாக தேசமுழுவதும் கில்காலில் கூட வேண்டுமென்று இப்போது சாமுவேல் ஆலோசனை கூறினான். அப்படியே செய்யப்பட்டது. அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷம் கொண்டாடினார்கள். PPTam 804.2

வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேலர்களின் முதல் பாளயம் கில்காலில் போடப்பட்டது, இங்கேதான் தெய்வீக நடத்துதலின்படி யோசுவாயோர்தானை அற்புதமாகக் கடந்து வந்ததன் நினைவாக பன்னிரண்டு கற்களால் தூணை நிறுவியிருந்தான். இங்கே விருத்தசேதனம் புதுப்பிக்கப்பட்டது. இங்கே காதேசின் பாவத்திற்குப்பிறகும் வனாந்தர யாத்திரைக்குப்பிறகும் முதலாவது பஸ்காவை அவர்கள் ஆசரித்திருந்தனர். இங்கே மன்னா நின்று போயிருந்தது. இங்கே ஆண்டவருடைய சேனையின் அதிபதி இஸ்ரவேலின் படைகளின் தளபதியாக தம்மை வெளிப்படுத்தியிருந்தார். இங்கேயிருந்து தான் எரிகோவை கவிழ்க்கவும் ஆயியை வெற்றி கொள்ளவும் அவர்கள் அணிவகுத்திருந்தனர். இங்கே ஆகான் அவனுடைய பாவத்தின் தண்டனையை சந்தித்தான். இங்கேதான் தேவனுடைய ஆலோசனையைக் கேட்க நெகிழ்ந்திருந்த இஸ்ரவேலர்களை தண்டித்த கிபியோனியர்களுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த சம பூமியில் அநேக சிலிர்ப்பூட்டும் தோழமைகளால் இணைக்கப்பட்டவர்களாக சாமுவேலும் சவுலும் நின்றனர். இராஜாவை வரவேற்றும் குரல்கள் அமர்ந்தபின்பு தேசத்தின் அதிபதியான தன்னுடைய வேலையின் பிரிவு வார்த்தைகளை வயதான தீர்க்கதரிசி கொடுத்தான். PPTam 804.3

இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் செ பாற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்து வருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; ...... நான் என் சிறுவயது முதல் இந்நாள் வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்து வந்தேன் இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம் பண்ணிவைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்ச ராடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்று அவன் கூறினான். PPTam 805.1

ஒரே குரலில் மக்கள் அனைவரும் : நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்று பதில் அளித்தனர். PPTam 805.2

தன்னுடைய முறையை நியாயப்படுத்தமாத்திரம் சாமுவேல் தேடவில்லை. இராஜாவையும் மக்களையும் ஆட்சி செய்யவேண்டிய கொள்கைகளை இதற்கு முன்னதாகவே அவன் வைத்திருந்தான். தன்னுடைய வார்த்தைகளோடு தன்னுடைய செ பாந்த மாதிரியின் கனத்தையும் சேர்க்க அவன் வாஞ்சித்தான். குழந்தைப் பருவத்திலிருந்து அவன் தேவனுடைய ஊழியத்தோடு இணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய நீண்ட வாழ்க்கையில் தேவனுடைய மகிமையும் இஸ்ரவேலின் உயர்ந்த நன்மையுமே அவனுடைய ஒரே நோக்கமாக அவன் முன் இருந்தது. PPTam 805.3

இஸ்ரவேலின் செழுமையைக் குறித்த எந்த நம்பிக்கையும் கிடைக்கு முன்பு தேவன் முன் மனந்திரும்ப அவர்கள் நடத்தப்பட வேண்டும். பாவத்தின் விளைவாக தேவன் மேலிருந்த விசுவாசத்தையும், தேசத்தை ஆளும் அவருடைய வல்லமையையும் ஞானத்தையும் குறித்த உணர்வையும் அவர்கள் இழந்திருந்தனர். அவருடைய காரியத்தை நிரூபிக்கும் அவருடைய திறமையின் மேலிருந்த நம்பிக்கையை அவர்கள் இழந்திருந்தனர். மெய்யான சமாதானத்தை காணும் முன்பாக குற்றத்தோடிருந்த அதே பாவங்களை காணவும் அறிக்கை பண்ணவும் அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு இராஜாவிற்கான கோரிக்கையின் நோக்கமாக எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர். சாமுவேல் இஸ்ரவேலின் சரித்திரத்தை திரும்ப கூறினான். எகிப்திலிருந்து அவர்களைக் கொண்டுவந்திருந்த அந்த நாள் முதல் இராஜாதி இராஜாவான யெகோவா அவர்கள் முன் சென்று அவர்களுடைய யுத்தங்களை நடத்தியிருந்தார். பல வேளைகளில் அவர்களுடைய பாவங்கள் அவர்களுடைய சத்துருக்களின் வல்லமையில் அவர்களை விட்டிருந்தது. ஆனாலும் தங்களுடைய தீய வழியிலிருந்து அவர்கள் திரும்பின் போது தேவனுடைய வல்லமை ஒரு இரட்ச கனை அனுப்பியிருந்தது. ஆண்டவர் கிதியோனையும் பாராக்கையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கிரட்சித்தார். எனினும் ஆபத்தினால் பயமடைந்தபோது ஒரு ராஜா எங்கள் மேல் ஆளவேண்டும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர். PPTam 806.1

இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்; அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார், கோதுமை அறுவடை செய்யும் மே அல்லது ஜூன் மாதத்தில் கிழக்கத்திய தேசத்தில் மழை பெய்யாது. வானம் மேகமற்றிருந்து காற்று அமைதியும் மென்மையாகவும் இருக்கும். அந்த நேரத்தில் வந்த ஒரு கொடிய புயல் அவர்களை பயத்தினால் நிரப்பியது. தாழ்மையோடு தங்களுடைய பாவத்தை குற்றத்தோடிருந்த அதே பாவத்தை அறிக்கையிட்டனர். நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும், நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக் கொண்டோம். என்றனர். PPTam 806.2

சாமுவேல் மக்களை அதைரியமான நிலையில் விட்டுவிட வில்லை. மேன்மையான வாழ்க்கைக்கான அனைத்து முயற்சிகளையும் இது தடுத்திருக்கும். தேவனை கடுமையானவரும் மன்னிக்காதவருமாக பார்க்க சாத்தான் அவர்களை நடத்துவான். இவ்விதம் அவர்கள் அதிகப்படியான சோதனைகளுக்கு வெளியாக்கப்பட்டிருப்பார்கள். தேவன் கிருபையுள்ளவரும் மன்னிக்கிறவரும், அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியும் போது அவர்களுக்கு தயவுகாண்பிக்க எப்போதும் விருப்பமுள்ளவரு மாயிருக்கிறார். பயப்படாதே என்பதே அவருடைய ஊழியக்காரன் வழியாக வந்த செய்தியாக இருந்தது. நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவி யுங்கள். விலகிப்போகாதிருங்கள், மற்றபடி பிரயோஜனமற்றதும் ரட்சிக்க மாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்று வீர்கள்; அவைகள் வீணானவைகளே. கர்த்தர் தம்முடைய மகத் துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார். PPTam 807.1

அவர்கள் தங்கள் மேல் வருவித்துக் கொண்ட அவமானத்தைப்பற்றி சாமுவேல் எதுவும் கூறவில்லை. நீண்டகால அர்ப்பணிப்பான் அவனுடைய வாழ்க்கைக்கு பிரதிபலனாக இஸ்ரவேலர் காண்பித்திருந்த நன்றியின்மையை நிந்திக்கவில்லை. மாறாக அவர்களைக் குறித்த தன்னுடைய முடிவடையாத விருப்பத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினான். நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்கிறவனாயிருப்பேன், அது எனக்குத் தூரமாயிருப்பதாக, நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான். PPTam 807.2