கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

53/73

53 - பண்டைய கால நியாயாதிபதிகள்

கானானில் குடியேற்றப்பட்ட பின்பு கோத்திரங்கள் தேசத்தின் வெற்றியை முழுமையாக்க எந்த தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சம்பாதித்திருந்த எல்லையில் திருப்தியடைய அவர்களுடைய வைராக்கியம் அசைந்து யுத்தம் நிறுத்தப்பட்டது. இஸ்ரவேலர் பலத்த போது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள் - நியா. 1:28. PPTam 707.1

இஸ்ரவேலுக்கு உண்டாக்கின வாக்குத்தத்தில் தேவன் தம்முடைய பங்கை உண்மையாகச் செய்திருந்தார். கானானியர்களின் வல்லமையை முறியடித்து யோசுவா தேசத்தை கோத்திரங்களுக்குப் பகிர்ந்திருந்தான். தெய்வீக உதவியின் நிச்சயத்தை நம்பி தேசத்தின் குடிகளைத் தூரத்தும் வேலையின் முழுமை மாத்திரமே அவர்களுக்கு மீதிமாயிருந்தது. ஆனால் இதை அவர்கள் செய்யத் தவறினர். கானானியர்களோடு ஒப்பந்தத்தில் நுழைந்ததன் வழியாக தேவனுடைய கட்டளையை நேரடியாக மீறி இவ்விதம் கானானை சுதந்தரிக்க அவர் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினர். PPTam 707.2

தேவன் முதலில் சீனாவில் அவர்களோடு தொடர்பு கொண்டதிலிருந்து விக்கிரகாராதனைக்கு எதிராக அவர்கள் எச்சரிக் கப்பட்டிருந்தனர். பிரமாணத்தை அறிவித்த உடனே கானானின் குடிகளைக் குறித்த செய்தி மோசேயினால் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்முலம் பண்ணி, அவர்களுடைய சி லைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் யாத் 23, 24, 25. கீழ்ப்படிந்திருக்கும் வரையிலும் தேவன் அவர்களுடைய சத்துருக்களை அவர்கள் முன் கீழ்ப்படுத்துவார் என்ற உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன். உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டு மிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்தி விடாமல் நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன். நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன், நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய். அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் (யாத். 23:27-33) என்றார். இந்தக் கட்டளைகள் மோசேயினால் அவனுடைய மரணத்திற்கு முன்பாக மிகவும் பவித்திரமாக கூறப்பட்டு யோசுவாவினால் திரும்பவும் சொல்லப்பட்டது. PPTam 707.3

சன்மார்க்கத் தீமை உலக முழுவதையும் வெள்ளமாக அடித்துக் கொண்டு போய் விடாதிருக்க அதன் அலைகளைத் தடுக்கும் வல்லமையான அரணாக தேவன் தமது ஜனங்களை கானானில் வைத்திருந்தார். இஸ்ரவேலர்கள் வெற்றியின் மேல் வெற்றி பெறுகிறவர்களாக இருக்க வேண்டுமென்பது ஆண்டவருடைய நோக்கமாயிருந்தது. கானானியர்களைக் காட்டிலும் மிகப்பெரியதும் வல்லமையானதுமான தேசங்களை அவர்களின் கைகளில் அவர் கொடுப்பார். அவர்களுக்கான வாக்குத்தத்தம். நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர் களானால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்தஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள். உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும், வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின் மேலெல்லாம் வரப்பண்ணுவார் (உபா. 11:22-25) என்பதாக இருந்தது. PPTam 708.1

ஆனால் தங்களுடைய உயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொள்ளாது இலகுவான சுயத்தில் திளைக்கும் முறையை அவர்கள் தெரிந்து கொண்டனர். தேசத்தை வெற்றி கொள்ளுவதை முழுமையாக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிட, உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து (எண். 33:55) என்று தீர்க்கதரிசி சொன்னதைப்போல மீந்திருந்த விக்கிரகாராதனை மக்களால் அவர்கள் அநேக தலைமுறைகளாக துன்புறுத்தப்பட்டனர். PPTam 709.1

இஸ்ரவேலர்கள் ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்றனர்று (சங். 10635). கானானியர்களோடு சம்பந்தம் கலக்க விக்கிரகாராதனை ஒரு வாதையைப் போல தேசமெங்கும் பரவியது. அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவர்களுக்குக் கண்ணியாயிற்று. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள் ....... தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார் - சங். 106:36-40. PPTam 709.2

யோசுவாவினால் போதனை பெற்றிருந்த தலைமுறை முடியும் வரையிலும் விக்கிரகாராதனைமிகக்குறைவாகவே இருந்திருந்தது. ஆனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் மீறுதலுக்கு வழியை ஆயத்தம் செய்திருந்தனர். கானானை சுதந்தரிக்க வந்தவர்கள் ஆண்டவருடைய கட்டுப்பாடுகளை கருத்தில் கொள்ளாததினால் தீமையின் விதைகளை விதைக்க, அது அநேக தலைமுறைகளுக்குக் கசப்பான கனியை தொடர்ந்து கொண்டுவந்தது. எபிரெயர்களின் எளிய பழக்கங்கள் அவர்களுக்கு சரீர ஆரோக்கியத்தைக் கொடுத்திருந்தது. ஆனால் புறஜாதிகளோடு கொண்ட தோழமை அவர்களைப் பசியிலும் உணர்ச்சியிலும் திளைக்கும் படி நடத்த, அது படிப்படியாக சரீர பலத்தைக் குறைத்து, மனம் மற்றும் சன்மார்க்கவல்லமைகளைப்பெலவீனப்படுத்தியது. அவர்களுடைய பாவங்களினால் இஸ்ரவேலர்கள் தேவனிட மிருந்து பிரிக்கப்பட்டனர். அவர்களுடைய பலம் அவர்களை விட்டு அகற்றப்பட, அதற்கு மேல் சத்துருக்களுக்கு எதிராக அவர்களால் நிற்கக்கூடாது போயிற்று. இவ்விதம் தேவன் மூலமாக அவர்கள் கீழ்ப்படுத்தியிருக்கக்கூடிய அதே தேசங்களுக்குக் கீழ் அவர்கள் கொண்டுவரப்பட்டனர். PPTam 709.3

தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின் அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டு போன அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். எனவே தேவன் தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, தமது பலத்தைச் சி றையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து (நியா. 212, சங்.78:52, 58, 60, 61). எனினும் அவர் அவர்களை முற்றிலுமாகத் தள்ளிவிடவில்லை. யெகோவாவிற்கு உண்மையாக இருந்த தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் இருந்தனர். விக்கிரக வணக்கத்தை அகற்றவும் சத்துருக்களிட மிருந்து இஸ்ரவேலரை விடுவிக்கவும் அவ்வப்போது உண்மையும் பலமுமுள்ள மனிதர்களை ஆண்டவர் அனுப்பினார். ஆனால் விடுவித்தவன் மரணமடைந்த பின்னர் மக்கள் அவனுடைய அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படிப்படியாக விக்கிரகங்களுக்குத் திரும்பினர். இவ்விதம் பின்வாங்குவதும் கடிந்து கொள்ளப்படுவதும் அறிக்கை செய்வதும் விடுதலை பெறுவதுமான சரித்திரம் மீண்டும் மீண்டும் நடந்தது. PPTam 710.1

மெசபத்தோமியாவின் இராஜாவும், மோவாபின் இராஜாவும், அவர்களுக்குப்பின் பெலிஸ்தியர்களும் ஆசோரிலிருந்த கானானியர்களும் சிசெராவினால் நடத்தப்பட்டு இஸ்ரவேலை ஒடுக்கினர். ஒத்னியேல், சம்கார், ஏகூத், தெபோராள், பாராக் இவர்கள் ஜனங்களை விடுவிக்கிறவர்களாக எழுப்பப்பட்டனர். ஆனால் பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். இதுவரையிலும் யோர்தானுக்குக்கிழக்கே வசித்திருந்தவர்கள் மேல் ஒடுக்குகிறவனின் கை குறைவாகவே இருந்திருக்க, இந்த பேரிடரில் அவர்கள் தான் முதலாவது துன்பப்பட்டனர். PPTam 710.2

கானானிற்குத் தெற்கே இருந்த அமலேக்கியர்களும் அதன் கிழக்கு எல்லையிலும் அதைத் தாண்டின் வனாந்திரத்திலும் இருந்த மீதியானியர்களும் இஸ்ரவேலர்களின் இடையறாத சத்துருக்களாயிருந்தனர். பின் சொல்லப்பட்ட தேசம் மோசேயின் நாட்களில் இஸ்ரவேலர்களால் ஏறக்குறைய அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் அவர்கள் மிக அதிகமாக வளர்ந்து, எண்ணிக்கைக்கு அடங்காததும் வல்லமையுமான மக்களாக ஆகியிருந்தனர். பழிவாங்க அவர்கள் தவனத்தோடிருந்தனர். இப்போது தேவனுடைய பாதுகாக்கும் கரம் இஸ்ரவேலிலிருந்து விலக்கப்பட்டிருக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கோத்திரம் மாத்திரமல்ல, முழு தேசமும் அவர்களுடைய நாசவேலையினால் துன்பப்பட்டது, வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் (நியா. 65 ) வனாந்தரத்தின் மூர்க்கமான குடிகள் தேசத்தின் மேல் திரள் கூட்டமாக தங்கள் ஆடுமாடுகளோடும் பரவினர். விழுங்கிப்போடும். PPTam 711.1

வாதையைப்போல அவர்கள் யோர்தானிலிருந்து பெலிஸ்தியரின் சமபூமி வரையிலும் பரவியிருந்தனர். அறுவடை முதிர்ந்ததும் வந்து, நிலத்தின் கடைசிக் கனி சேர்க்கப்படும் வரையிலும் தரித்திருந்தனர். வயலின் விளைவுகளை முற்றிலும் எடுத்து, அவர்களுடைய விளைச்சலை முற்றிலும் பறித்துக் கொண்டனர். தேசத்தின் குடிகளை கொள்ளையடித்து கீழ்த்தரமாக நடத்தி பின்னர் வனாந்தரத்திற்குத் திரும்பினர். இவ்விதம் திறந்த பட்டணங்களில் இருந்த இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளை விட்டு அரணான பட்டணங்களிலும் அல்லது குகைகளிலும் மலைகளிலும் அடைக்கலம் தேடினர். ஏழு வருடங்கள் இவ்விதம் தொடர்ந்தது. அதன்பின்னர் அவர்கள் தங்கள் துயரத்தில் ஆண்டவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு செவிகொடுத்து தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தேவன் மீண்டும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழுப்பினார். PPTam 711.2

கிதியோன் மனாசேயின் கோத்திரத்தைச் சார்ந்த யோவாசின் மகனாயிருந்தான். இந்தக் குடும்பத்தின் பிரிவு எந்த முக்கியத்துவமும் PPTam 711.3

பெற்றிருக்கவில்லை. ஆனால் யோவாசின் வீட்டார் தைரியத்திற்கும் உண்மைக்கும் பெயர்பெற்றிருந்தனர். அவனுடைய தைரியமான மகன்களைக்குறித்து ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப் போலிருந்தான் என்று சொல் லப்பட்டது. இவர்களில் ஒருவனைத்தவிர மற்ற அனைவரும் மீதியானியருக்கு எதிரான போராட்டத்தில் விழுந்தனர். அவன் படையெடுத்தவர்கள் பயப்படும்படியாக பெயரை பிரபலப் படுத்தியிருந்தான். கிதியோனுக்கு தம்முடைய ஜனங்களை விடுவிக்கும்படியான அழைப்பு வந்தது. அந்த நேரம் அவன் கோதுமையை போரடித்துக்கொண்டிருந்தான். குறைந்த அளவான கோதுமை மறைக்கப்பட்டிருந்து, சாதாரணமாகப் போரடிக்கும் களத்தில் அதை போரடிக்க தைரியமற்றவனாக, திராட்ச ஆலைக்கு அருகிலிருந்த ஒரு இடத்தை அவன் தெரிந்தெடுத்திருந்தான். திராட்சப்பழங்கள் முதிரும் காலம் வெகு தொலைவிலிருக்க திராட்சத் தோட்டங்களின் மேல் குறைவான கவனமே கொடுக் கப்பட்டிருந்தது. இரகசியமாகவும் மெளனமாகவும் உழைத்துக்கொண்டிருந்தபோது, தமது ஜனங்களை விட்டு இந்த ஒடுக்குகிறவனின் நுகம் எவ்வாறு உடைக்கப்படும் என்று இஸ்ரவேலின் நிலையைக் குறித்து வருத்தத்தோடு கிதியோன் எண்ணியிருந்தான். சடிதியாக கர்த்தருடைய தூதனானவர் தோன்றி : பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். PPTam 712.1

ஆ, என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச் சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்று அவன் பதில் தந்தான். PPTam 712.2

பரலோகத்தின் தூதுவர்: உனக்கு இருக்கிற இந்தப்பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய், உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். PPTam 712.3

தன்னோடு இப்போது பேசினவர் இஸ்ரவேலுக்காக கடந்த காலத்தில் கிரியை செய்திருந்த உடன்படிக்கையின் தூதன் என்பதற்கான சில அடையாளத்தை கிதியோன் வாஞ்சித்தான். ஆபிரகாமோடு பேசியிருந்த தேவதூதர்கள் அவனுடைய உபசரிப்பில் பங்கெடுக்க தாமதித்திருந்தனர். தன்னுடைய விருந்தாளியாக தங்கியிருக்கும்படி கிதியோன் இப்போது தெய்வீகத் தூதுவரை மன்றாடினான். தன்னுடைய கூடாரத்திற்கு விரைந்து சொற்பமாக மீந்ததிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி அவர் முன் கொண்டு வைத்தான். ஆனால் அந்தத் தூதர் : நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக்கற்பாறையின் மேல் வைத்து, ஆணத்தை ஊற்று. என்றார். கிதியோன் அவ்வாறே செய்ய, அவன் வாஞ்சித்திருந்த அடையாளம் பின்னர் கொடுக்கப்பட்டது. தூதர் தன் கையிலிருந்த கோலினால் மாமிசத்தையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார். கன்மலையிலிருந்து வந்த அக்கினி பலியைப் பட்சித்துப்போட்டது. பின்னர் தூதர் அவன் பார்வையிலிருந்து மறைந்து போனார். PPTam 712.4

தன்னுடைய நாட்டு மனிதரின் மீறுதலில் பங்குகொண்டிருந்த கிதியோனின் தகப்பனான யோவாஸ், தான் வசித்திருந்த இடமான ஓப்ராவில் பாகாலுக்கு பெரிய பீடத்தை எழுப்பியிருந்தான். அதில் அந்தப் பட்டணத்தின் மனிதர் ஆராதனை செய்தனர். இந்தப் பீடத்தை அழித்து காணிக்கைபட்சிக்கப்பட்ட அந்த மலையின் மேல் யெகோவாவிற்ஒரு பீடம் எழுப்பி, அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி செலுத்தும்படியாக கிதியோன் கட்டளையிடப்பட்டான். தேவனுக்குச் செலுத்தப்பட்ட பாலிகள் ஆசாரியருக்குக் கொடுக்கப்பட்டு, சீலோவிலிருந்த பலிபீடத்தைத் தவிர வேறு எங்கும் செலுத்தப்பட்ட தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் யாரை இந்தக் காணிக்கைகள் குறிப்பிட்டதோ அவர் இந்த சடங்கு ஆராதனையை நியமித்த அவர் தம்முடைய கோரிக்கைகளை மாற்றும் வல்லமை கொண்டிருக்கிறார். இஸ்ரவேலின் விடுதலை பாகாலின் ஆராதனைக்கு பவித்திரமான எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தொடரவேண்டும். தம்முடைய ஜனத்தின் சத்துருக்களோடு யுத்ததிற்குப் போகும் முன்பாக கிதியோன் விக்கிரகாராதனைக்கு எதிரான யுத்தத்தை அறிவிக்க வேண்டும். PPTam 713.1

தெய்வீகக் கட்டளை உண்மையாகச் செயல்படுத்தப்பட்டது. வெளிப்படையாக செய்யப்பட்டால் எதிர்க்கப்படும் என்று அறிந்து கிதியோன் இரகசியமாக வேலையை நடப்பித்தான். தன் வேலைக்காரரின் உதவியோடு ஒரு இரவிலேதானே முழு வேலையையும் இரகசியமாகச் செய்தான். மறுநாள் காலையில் பாகாலுக்கு தங்கள் அர்ப்பணிப்பைச் செலுத்த வந்த ஓப்ரா மனிதர்களின் கோபம் மிகப்பெரியதாக இருந்தது. தூதனின் சந்திப்பைக் குறித்து அறிவிக்கப்பட்டிருந்த யோவாஸ் தன் மகனைக் காப்பாற்றும்படி நின்றிருக்காதிருந்தால் கிதியோனின் உயிரை அவர்கள் எடுத்திருப்பார்கள். நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன். அது தேவனால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்று யோவாஸ் கூறினான். பாகாலால் தன் சொந்தப் படத்தைக் காப்பாற்றக்கூடாதிருந்தால், தன்னை ஆராதிப்பவர்களைப் பாதுகாப்பான் என்று அவனை எவ்விதம் நம்ப முடியும். PPTam 713.2

கிதியோனின் மேலிருந்த கொடுமையின் அனைத்து எண்ணங்களும் கலைந்து போயிற்று. அவன் யுத்தத்தின் எக்காளத்தை முழங்கின் போது அவனது கொடியின் கீழ் முதலாவது கூடிய வர்களில் ஓப்ராவின் மனிதர்களும் இருந்தனர். தன் சொந்தக் கோத்திரமான மனாசேக்கும் ஆசேர் செபுலோன் மற்றும் நப்தலிக் கும் செய்தி அனுப்பப்பட அனைவரும் அழைப்பிற்குச் செவிகொடுத்தனர். PPTam 714.1

தன்னுடைய வேலைக்கு தேவன்தான் தன்னை அழைத்தார் என்பதற்கான கூடுதலான சான்று இல்லாமல் படையின் தலைவனாக தன்னை நிறுத்துவதற்கு கிதியோன் தைரியமற்று இருந்தான். தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக் கவேண்டுமானால், இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன், பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினாலே இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்று அவன் ஜெபித்தான். காலையில் நிலம் காய்ந்திருக்க தோல் ஈரமாயிருந்தது. இப்போது மற்றொரு சந்தேகம் எழும்பியது. கம்பளி இயற்கையாகவே காற்றிலிருக்கும் ஈரத்தை எடுத்துக்கொள்ளுமாகையால், இது தீர்மானமான பரீட்சையாக இருக்கக் கூடாது. எனவே அந்த அடையாளம் மாற்றித் தரப்படும்படியாகவும் தன்னுடைய மிஞ்சின் எச்சரிக்கை ஆண்டவரை அதிருப்திப்படுத்தி விடக் கூடாது என்றும் மன்றாடினான். அவனுடைய விண்ணப்பம் பதிலளிக்கப்பட்டது. PPTam 714.2

இவ்விதம் உற்சாகப்படுத்தப்பட்டு, படையெடுத்தவர்களோடு யுத்தம் பண்ணும் படியாக தன்னுடைய படையை கிதியோன் நடத்தினான். மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்து வந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். கிதியோனின் கட்டளையின்கீழ் இருந்த முழுபடையிலும் முப்பத்தி இரண்டாயிரம் பேர் மாத்திரமே இருந்தார்கள். அவர்கள் முன் சத்துருக்களின் மிகப்பெரிய சேனை பரவியிருக்க, நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும். ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்று ஆண்டவருடைய வார்த்தை அவனுக்கு வந்தது. ஆபத்தையும் கடினத்தையும் சந்திக்க மனதில் லாதிருந்தவர்கள் அல்லது உலக விருப்பங்கள் தேவனுடைய ஊழியத்திலிருந்து யாருடைய மனதை திருப்பிவிடுமோ அவர்கள், இஸ்ரவேலின் சேனைகளுக்கு எந்த பலத்தையும் தரமாட்டார்கள். அவர்கள் இருப்பது பெலவீனத்தின் காரணமாகவே இருக்கும். PPTam 714.3

யுத்தத்திற்குப் போகும் முன்பாக புது வீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ண வேண்டியதாகும். திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப் போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அனுபவிக்க வேண்டியதாகும். ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு அவளை விவாகம் பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும். என்ற அறிவிப்பு சேனை முழுவதிலும் கொடுக்கப்படவேண்டும் என்பது இஸ்ரவேலில் ஒரு சட்டமாக இருந்தது. அதிபதிகள் பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப் போலக் கரைந்து போகப்பண்ணாதபடிக்கு, தன்வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன் (உபா.20:58) என்று ஜனங்களின் காதுகள் கேட்க பேசவேண்டும். PPTam 715.1

சத்துருக்களோடு ஒப்பிட்ட போது அவர்களுடைய எண் ணிக்கை மிகக்குறைவாக இருந்ததினால் வழக்கமான அறிவிப்பை கிதியோன் தராதிருந்தான். தன்னுடைய சேனை மிகவும் பெரியது என்ற அறிவிப்பை கேட்டபோது அவன் ஆச்சரியமடைந்தான். ஆனால் தமது ஜனங்களின் இருதயங்களில் இருந்த அகந்தையையும் அவிசுவாசத்தையும் ஆண்டவர் கண்டார். கிதியோனுடைய தூண்டும் மன்றாட்டுகளினால் எழுப்பப்பட்டு, அவர்கள் தங்களைக் கொடுத்திருந்தனர். எனினும் மீதியானியரின் திரளானவர்களைப் பார்த்தபோது அவர்களில் அநேகர் பயத் தினால் நிறைந்தனர். என்ற போதும் இஸ்ரவேல் வெற்றிபெற்றிருக்குமானால் அதே நபர்கள் வெற்றியின் மகிமையை தேவனுக்குக் கொடுப்பதற்குப்பதிலாக தங்களுக்கு எடுத்துக் கொள்வார்கள். PPTam 715.2

கிதியோன் ஆண்டவருடைய நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தான். அவனுடைய படையிலிருந்து இருபத்தீராயிரம் பேர் அல்லது மூன்றில் இரண்டு பங்கிலும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்குச் செல்வதை பாரமான இருதயத்தோடு அவன் பார்த்தான். ஜெனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப் போகப்பண்ணு, அங்கே அவர்களைப் பரிட்சித்துக் காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடே கூட வரக்கடவன்; உன்னோடே கூட வரலா காது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்று மீண்டும் ஆண்டவருடைய வார்த்தை அவனுக்கு வந்தது. ஜனங்கள் தண்ணீரின் ஓரமாக நடத்தப்பட் டார்கள். சத்துருவின் மேல் உடனடியான தாக்குதலை எதிர்பார்த்து சிலர் அவசரமாக கொஞ்சம் தண்ணீரை தங்கள் கைகளில் எடுத்து, போகும் போதே நக்கிக்கொண்டனர் ஆனால் ஏறக்குறைய அனைவரும் நிதானமாக நீரோடையின் மேலிருந்து குடித்தனர். தங்கள் கைகளினால் தண்ணீரை எடுத்தவர்கள் பத்தாயிரம் பேரில் முன்னூறு பேர் மாத்திரமே ! எனினும் அவர்களே தெரிந்து கொள்ளப்பட்டனர். மற்ற அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் படி அனுமதிக்கப்பட்டனர். PPTam 716.1

மிக எளிய முறைகளினால் தான் பல வேளைகளில் குணம் பரிசோதிக்கப்படுகிறது. ஆபத்தான காலங்களில் தங்களுடைய சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் மனிதர்கள் அவசரமான வேளைகளில் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. மந்தமாயிருக்கிற வர்களுக்கும் சுயத்தில் திளைக்கிறவர்களுக்கும் ஆண்டவர் தமது வேலையில் எந்த இடத்தையும் வைத்திருக்கவில்லை. அவர் தெரிந்து கொண்ட சொற்ப ஜனங்கள் கடமையைச் செய்வதில் செ ராந்தத் தேவைதங்களைத் தாமதப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். இந்த முன்னூறு தெரிந்து கொள்ளப்பட்ட மனிதர்களும் தைரியமும் சுயக்கட்டுப்பாடும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. விசுவாச மனிதர்களாகவும் அவர்கள் இருந்தனர். விக்கிரக ஆராதனையினால் அவர்கள் தங்களைத் தீட்டுப்படுத்தவில்லை. தேவன் அவர்களை நடத்தி அவர்கள் வழியாக இஸ்ரவேலுக்கு விடு தலையை நடப்பிக்க முடியும். வெற்றி எண்ணிக்கையைச் சார்ந் தில்லை. கொஞ்ச பேரை கொண்டாகிலும் அநேகரைக் கொண்டாலும் தேவனால் விடுவிக்க முடியும். அவரைச் சேவிக்கிற வர்களின் குணத்தைவிட மாபெரும் எண்ணிக்கையில் அவர் கனப்படுத்தப்படுவதில்லை. PPTam 716.2

படையெடுத்தவர்களின் சேனைகள் பாளயமிறங்கியிருந்த பள்ளத்தாக்கை எதிர்நோக்கியிருந்த மலையின் சிகரத்தில் இஸ்ரவேலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத்திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள். அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது நியா. 7:12. அடுத்த நாளின் போராட்டத்தை நினைத்தபோது கிதியோன் நடுங்கினான். ஆனால் இரவிலே ஆண்டவர் அவனோடு பேசி, தன்னை உற்சாகப் படுத்தும்படி சிலதை அவன் கேட்க வேண்டும் என்று அறிவித்து, அவனுடைய வேலைக்காரனான பூராவோடு மீதியானியரின் பாளயத்திற்கு இறங்கிச் செல்ல அழைத்தார். அங்கே இருட்டிலும் மௌனத்திலும் காத்திருந்தபோது ஒரு போர்வீரன் தன் சகவீரனுக்கு ஒரு சொப்பனத்தை அறிவிப்பதைக் கேட்டான். இதோ, ஒரு செ பாப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒருவாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரம் மட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்து கிடந்தது என்றான். அடுத்த வீரன், காணக்கூடாது கேட்டுக்கொண்டிருந்தவனின் இருதயத்தைத் தூண்டிவிடக்கூடிய வார்த்தைகளால் பதில் கொடுத்தான். இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல, தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத் தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். அந்த அஞ்ஞானமீதியானியர் வழியாகதன்னோடு பேசுகிற தேவனுடைய குரலை கிதியோன் உணர்ந்தான். அவனுடைய கட்டளைக்குக் கீழிருந்த சில மனிதர்களிடம் திரும்பி, எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று கூறினான். PPTam 717.1

தெய்வீக நடத்துதலினால் தாக்கும் திட்டம் அவனுக்கு ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டது. அதை அவன் உடனடியாக செயல்படுத்த இறங்கினான். முன்னூறு மனிதர்களுக்கும் ஒரு எக்காளமும் மண்பானைக்குள் மறைக்கப்பட்டிருந்த ஒரு தீவட்டியும் கொடுக்கப்பட்டது. வெவ்வேறு திசைகளிலிருந்து மீதியானியரின் பாளயத்தை நெருங்கும் விதமாக அந்த மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இரவின் அந்தகாரத்தில் கிதியோனுடைய யுத்தக் கொம்பின் வழியாக ஒரு அடையாளம் கொடுக்கப்பட, மூன்று கூட்டத்தாரும் தங்கள் எக்காளங்களை முழக்கினர். பின்னர் தங்கள் பானைகளை உடைத்து எரிந்து கொண்டிருந்த தீவட்டிகளைக் காண்பித்து கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்ற பயங்கரமான கூக்குரலோடு சத்துருக்களின் மேல் பாய்ந்தனர். PPTam 717.2

தூங்கிக்கொண்டிருந்த சேனை சடிதியாக எழுப்பப்பட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் எரிந்து கொண்டிருந்த தீவட்டிகளின் வெளிச்சங்கள் காணப்பட்டன. ஒவ்வொரு திசையிலும் பகைஞரின் கூக்குரலோடு எக்காளங்களின் சத்தம் கேட்கப்பட்டது. மூழ்கடிக்கும் வல்லமையின் இரக்கத்தில் தாங்கள் இருப்பதாக நம்பி மீதியானியர்கள் திகிலடைந்தனர். பயங்கரமான எச்சரிப்பின் கூக்குரலோடு உயிருக்காக ஓடி, தங்களுடைய கூட்டத்தாரையே தங்கள் சத்துருக்களாக தவறாக எண்ணி, ஒருவரையொருவர் கொலை செய்தனர். வெற்றியின் செய்திகள் பரவின் போது தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓடிக்கொண்டிருக்கும் தங்கள் சத்துருக்களைப் பின்தொடர்வதில் சேர்ந்தனர். யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த தங்களுடைய செ பரந்த எல்லையை அடையும் நம்பிக்கையில் மீதியானியர்கள் யோர்தானை நோக்கி ஓடினர். ஓடிக்கொண்டிருந்தவர்களை துறைகளில் இடைமறிக்க கிதியோன் எப்பீராயீம் கோத்திரத்திற்கு தூதுவர்களை அனுப்பினான். இந்த நேரத்தில் விடாய்த்திருந்தும் தன்னுடைய முன்னூறு பேர்களோடு கிதியோன் ஏற்கனவே அடுத்தப்பக்கம் சென்றிருந்தவர்களை கடினமாகப் பின்தொடர்ந்து ஓடையைக் கடந்தான். முழு சேனைக்கும் மேலிருந்த இரண்டு பிரபுக்களான சேபாவும் சல்முனாவும் பதினாயிரம் மனிதர்களோடு தப்பிப்போயிருந்தவர்களும் கிதியோனால் பிடிக்கப்பட, அவர்களுடைய சேனை முழுமையாக சிதறடிக்கப்பட்டு தலைவர்கள் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். PPTam 718.1

இந்தக் குறிப்பான தோல்வியில் இலட்சத்து இருபதினாயிரத் திற்கும் அதிகமான படைவீரர்கள் அழிந்து போயினர். மீண்டும் இஸ்ரவேலின் மேல் யுத்தம் செய்யக்கூடாதபடி மீதியானியர்களின் வல்லமை முறிக்கப்பட்டது. இஸ்ரவேலின் தேவன் மீண்டும் தமது ஜனங்களுக்காக யுத்தம் செய்தார் என்னும் செய்திகள் வேகமாக வெகு தூரத்திற்குப் பரவியது. மிகதைரியமான யுத்த ஜனங்களுக்கு எதிராக நின்றிருந்த மிக எளிய முறையைக் குறித்து கேள்விப்பட்ட போது, சுற்றிலுமிருந்த தேசங்களுக்கு உண்டான பயத்தை எந்த வார்த்தைகளாலும் விவரிக்கக்கூடாது. PPTam 718.2

மீதியானியரைக் கவிழ்க்கும்படி தேவன் தெரிந்து கொண்ட தலைவன் இஸ்ரவேலில் எந்த முன்னணி பதவியையும் பெற்றிருக்கவில்லை. அவன் ஒரு அதிகாரியல்ல, ஆசாரியனல்ல, ஒருலேவியனுமல்ல. தன்னுடைய தகப்பன்குடும்பத்தில் தன்னைச் சிறியவனாக அவன் எண்ணியிருந்தான் ஆனால் தேவன் அவனில் தைரியமும் உண்மையுமுள்ள ஒரு மனிதனைக் கண்டார். அவன் தன்னை நம்பாதவனாக ஆண்டவருடைய நடத்துதலை பின்பற்ற நம்பியிருந்தான். மிகச்சிறந்த திறமைகளுள்ள மனிதர்களை அல்ல; தாம் சிறப்பாக உபயோகிக்கக்கூடிய மனிதர்களைத்தான் தேவன் எப்போதும் தெரிந்து கொள்ளுகிறார். மேன்மைக்கு முன்னானது தாழ்மை - நீதி. 1533. தங்களுடைய சொந்த தகுதியின்மையைக் குறித்த அதிக உணர்வோடு இருந்து, தங்களுடைய தலைவராகவும் பலத்தின் ஆதாரமாகவும் அவரைச் சார்ந்து கொள்ள சித்தங் கொண்டிருக்கிறவர்கள் வழியாகவே ஆண்டவர்மிகவல்லமையாக வேலை செய்யமுடியும். அவர்களுடைய பலவீனத்தை தம்முடைய பலத்தோடு இணைப்பதின் வழியாக அவர்களைப் பலமுள்ள வர்களும், அவர்களுடைய அறியாமையை தம்முடைய ஞானத் தோடு இணைப்பதின் வழியாக அவர்களை ஞானிகளும் ஆக்குவார். PPTam 719.1

அவர்கள் மெய்யான தாழ்மையை நேசிப்பார்களானால் ஆண்டவர் தமது ஜனங்களுக்காக இன்னும் அதிகம் செய்யக்கூடும். ஆனால் அதிக அளவான பொறுப்புகளையோ அல்லது வெற்றியையோ ஆண்டவடமிருந்து பெற்றுக்கொள்ளத் தகுதி படைத்த, சுயத்தை நம்பாமலும் தேவனைச் சார்ந்திருப்பதை மறக்காமலும் இருக்கக்கூடிய மக்கள் வெகுசிலரே இருக்கிறார்கள். எனவேதான் தம்முடைய வேலைக்கான கருவிகளைத் தெரிந் தெடுக்கும் போது பெரியவர்களாகவும் திறமையானவர்களாகவும் பிரகாசமானவர்களாகவும் இந்த உலகம்கனம் பண்ணுகிறவர்களை ஆண்டவர் கடந்து செல்லுகிறார். அவர்கள் பல வேளைகளில் சுயதகுதியும் பெருமையும் உள்ளவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய ஆலோசனை இல்லாமலேயே செயல்பட தகுதியுள்ளவர்களாக அவர்கள் உணருகிறார்கள். PPTam 719.2

யோசுவாவின் சேனையால் எரிகோவைச் சுற்றி எக்காளம் ஊதும் எளிய செயலும், மீதியானியரின் சேனையைச் சூழ்ந்திருந்த கிதியோனின் சிறிய படையும், தேவனுடைய சத்துருக்களின் வல்லமையைக் கவிழ்ப்பதற்கு அவருடைய வல்லமையினால் பலமடைந்திருந்தது. மனிதன் வகுத்திருக்கிற மிகச் சிறந்த முழுமையான அமைப்பும் தேவனுடைய வல்லமையும் ஞானமும் இல்லாதபோது தோல்வியையே கொண்டுவரும். அதேநேரம் நம்பக்கூடாத முறைகளும் உறுதி அளிக்கக்கூடாத முறைகளும் தெய்வீகம் நியமிக்கும் போதும் தாழ்மையோடும் விசுவாசத்தோடும் நுழையும் போதும் வெற்றிபெறும். தேவனை நம்புவதிலும் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலும் கானானியர் களுடனான யுத்தத்தில் கிதியோனுக்கும் யோசுவாவிற்கும் இருந்ததைப்போல கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய போராட்டத்தில் மிக அத்தியாவசியமாயிருக்கிறது. இஸ்ரவேலுக்காகத் தமது வல்லமையை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டு வதன் வழியாகதம்மிடம் விசுவாசம் வைக்கும்படியாக ஒவ்வொரு அவச ரத்திலும் நம்பிக்கையோடு அவருடைய உதவியைத் தேடும்படியாக தேவன் அவர்களை நடத்துவார். தம்முடைய ஜனத்தின் முயற்சி களோடு கிரியை செய்யவும் பலவீனமான கருவிகளின் வழியாக மாபெரும் காரியங்களை நடத்தவும் அவர் இப்போதும் சித்தங்கொண்டிருக்கிறார். அதன் ஞானத்தையும் பெலத்தையும் நாம் மன்றாடவேண்டுமென்று முழு பரலோகமும் காத்திருக்கிறது. தேவன் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குச் செய்ய (எபே. 3:20) வல்லவ ராயிருக்கிறார். PPTam 720.1

தேசத்தினுடைய சத்துருக்களைப் பின்தொடருவதிலிருந்து தனது சொந்த நாட்டாரின் கடிந்துகொள்ளுதலையும் குற்றச்சாட் டுகளையும் சந்திக்கவே கிதியோன் திரும்பினான். அவனுடைய அழைப்பின்படி இஸ்ரவேலின் மனிதர்கள் மீதியானியர்களுக்கு எதிராக அணிவகுத்தபோது, எப்பிராயீமின் கோத்திரம் பின்தங்கியிருந்தது. இந்த முயற்சியை ஆபத்தான முயற்சியாக அவர்கள் பார்த்தனர். கிதியோன் அவர்களுக்கு எந்தவி சேஷ அழைப்பையும் அனுப்பாததால், தங்கள் சகோதரரோடு சேர்ந்து கொள்ளாதிருக்க அவர்கள் இதைக் காரணமாக்கிக்கொண்டனர். ஆனாலும் இஸ்ரவேலருடைய வெற்றியின் செய்திகள் அவர்களைச் சென்ற டைந்தபோது, அதில் தாங்கள் பங்கெடுக்காததால் பொறாமை கொண்டனர். மீதியானியர்களைத் தோற்கடித்தபின் எப்பீராயிமின் மனிதர்கள் கிதியோனின் நடத்துதலின்படி யோர்தானின் துறைகளைப் பிடித்து, இவ்விதம் தப்பியோடினவர்களைத் தப்பக் கூடாதபடி தடுத்தனர். இந்த முறையினால் சத்துருக்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஓரேபும் சீபுமான இரண்டு பிரபுக்களும் இருந்தனர். இவ்விதம் எப்பிராயீமின் மனிதர்கள் யுத்தத்தைப் பின்தொடர்ந்து வெற்றியை முழுமையாக்க உதவினர். எனினும் கிதியோன் தன்னுடைய சொந்த சித்தத்தின் படியும் யோசனைகளின்படியும் நடந்ததைப்போல அவர்கள் அவன் மேல் பொறாமையோடும் கோபத்தோடுமிருந்தனர். இஸ்ரவேலின் வெற்றியில் அவர்கள் தேவனுடைய கரத்தைப் பார்க்கவில்லை. அவர்களை விடுவித்ததில் அவருடைய வல்லமையையும் இரக்கத்தையும் அவர்கள் போற்றவில்லை. இதே செயல்தான் அவருடைய விசேஷக் கருவிகளாக தெரிந்து கொள்ளப்படக்கூடாத அவர்களுடைய தகுதியின்மையைக் காண்பித்தது. PPTam 720.2

வெற்றிக் கோப்பையோடு திரும்பி : நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிற போது, எங்களை அழைப்பிக்கவில் லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று கோபத்தோடு கிதியோனை அவர்கள் நிந்தித்தனர். PPTam 721.1

அதற்கு அவன் : நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம் மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப் பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா? தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்று கூறினான். PPTam 721.2

பொறாமையின் ஆவி சண்டையையும் இரத்தஞ்சிந்துதலையும் பிறப்பிக்கும் வாக்குவாதத்திற்குள் மிக எளிதாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஆனால் கிதியோனின் அடக்கமான பதில் எப்பீராயிமியரின் கோபத்தை தணிக்க, அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சமாதானமாகத் திரும்பினர். கொள்கை கருத்தில் கொள்ளப்படும் போது உறுதியாயும் விட்டுக்கொடுக்காதவனாயும், யுத்தத்தில் பராக்கிரமசாலியாயும் இருந்து, நாம் மிக அபூர்வமாகவே பார்க்கும் மரியாதையான ஆவியைகிதியோன் வெளிக்காட்டினான். PPTam 721.3

மீதியானியரிடமிருந்து தங்களை விடுவித்ததன் நன்றியாக கிதியோன் இராஜாவாகவேண்டும் என்றும் சிங்காசனம் அவனுடைய சந்ததிக்கு உறுதிபண்ணப்பட வேண்டும் என்றும் இஸ்ரவேல் மக்கள் ஆலோசனை கூறினர். மத அடிப்படையான கொள்கைகளை நேரடியாக மீறுவதாக இந்த ஆலோசனை இருந்தது. தேவன்தாமே இஸ்ரவேலின் இராஜாவாக இருந்தார். சிங்காசனத்தின் மேல் ஒரு மனிதனை இருத்துவது அவருடைய தெய்வீக அரசாட்சியை நிராகரிப்பதாக இருக்கும். கிதியோன் இந்த உண்மையை உணர்ந்தான். நான் உங்களை ஆளமாட்டேன், என் குமாரனும் உங்களை ஆளமாட்டான். கர்த்தரே உங்களை ஆளுவாராக என்ற அவனுடைய பதில் அவனுடைய நோக்கங்கள் எவ்வளவு உண்மையும் நேர்மையுமாயிருந்தது என்பதைக் காட்டுகிறது. PPTam 721.4

ஆனால் அனைத்து இஸ்ரவேலின் மேலும் பேரழிவைக் கொண்டுவந்த மற்றொரு தவறில் கிதியோன் காட்டிக்கொடுக் கப்பட்டான். மாபெரும் போராட்டத்தைத் தொடரும் செயலின்மை, போராட்டத்தின் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமான ஆபத்தால் பல வேளைகளில் நிறைந்திருக்கிறது. இந்த ஆபத்திற்கு கிதியோன் வெளியாக்கப்பட்டான். அவன்மேல் அமைதியின்மையின் ஆவி தங்கியிருந்தது. இதுவரையிலும் தேவன் கொடுத்திருந்த கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவன் திருப்தியடைந்திருந்தான். ஆனால் இப்போது தெய்வீக ஆலோசனைக்குக் காத்திராமல் தனக்குத்தானே திட்டம் போட இறங்கியிருந்தான். ஆண்டவரின் சேனைகள் குறிப்பிட்ட வெற்றியை அடைந்திருக்கும் போது தேவனுடைய கிரியைகளைக் கவிழ்க்கும்படி சாத்தான் தன் முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறான். இவ்விதம் இஸ்ரவேலை வழிதப் பிப்போகச் செய்த யோசனைகளும் திட்டங்களும் கிதியோனுக்கு ஆலோசனை கூறப்பட்டது. PPTam 722.1

தேவதூதன் தனக்குக் காணப்பட்ட கன்மலையின் மேல் பலி செலுத்தும்படி கட்டளையிடப்பட்டிருந்தால், ஆசாரியனாயிருக் கும்படி தான் நியமிக்கப்பட்டதாக கிதியோன் முடிவு செய்தான். தெய்வீக அங்கீகரிப்பிற்குக் காத்திராமல், அதற்கேற்ற ஒரு இடத்தை ஏற்படுத்தவும், ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யப்பட்ட அதே ஆராதனை அமைப்பிற்கு ஒத்த ஒன்றை நியமிக்கவும் அவன் தீர்மானித்தான். அவன் பக்கம் இருந்த பலமான பிரபலமான உணர்வுகளினால் அவனுடைய திட்டத்தைச் செயல்படுத்துவது கடினமாயிருக்கவில்லை. அவனுடைய கோரிக்கையின் பேரில் மீதியானியரிடமிருந்து எடுக்கப்பட்ட காதணிகள் அனைத்தும் கொள்ளையில் அவனுடைய பங்காக அவனுக்குக் கொடுக்கப்பட்டது. ஜனங்கள் மீதியானிய பிரபுக்களின் அலங்கரிக்கப்பட்ட ஐசுவரியமான ஆடைகளோடுகூட மற்ற அநேக விலையுயர்ந்த பொருட்களையும் சேகரித்தனர். இவ்விதம் சேரிக்கப்பட்ட பொருட்களை வைத்து பிரதான ஆசாரியன் உடுத்தியிருப்பதைப் போன்ற ஒரு ஏபோத்தையும் மார்ப்பதக்கத்தையும் கிதியோன் உண்டாக்கினான். அவனுடைய வழிமுறை அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் இஸ்ரவேலுக்குத்தானும் ஒரு கண்ணியாயிற்று. முடிவாக ஆண்டவரையே விட்டுவிட்டு விக்கிரகங்களை சேவிக்குமளவு அங்கீகரிக்கப்படாத இந்த ஆராதனை அநேகரை நடத்தியது. கிதியோனின் மரணத்திற்குப்பிறகு அவனுடைய சொந்தக் குடும்பம் உட்பட அநேக மக்கள் மருள்விழுகையில் இணைந்தனர். அவர்களுடைய விக்கிரகத்தை ஒருகாலத்தில் கவிழ்த்துப்போட்ட அதே மனிதனால் மக்கள் தேவனைவிட்டு அப்புறம் நடத்தப்பட்டனர். PPTam 722.2

தங்களுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களின் செல்வாக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்கிறதை வெகுசிலரே உணர்ந் திருக்கிறார்கள். PPTam 723.1

எவ்விதம் பல வேளைகளில் பெற்றோர்களின் தவறுகள் அவர்கள் கல்லறையில் வைக்கப்பட்டு வெகுநாளுக்குப்பின்னுங் கூட அவர்களுடைய பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் மிகவும் அழிவிற்கேதுவான பலனை உண்டாக்குகிறது! ஒவ்வொருவரும் மற்றவர்கள் மேல் ஒரு செல்வாக்கை ஏற்படுத்துகின்றனர். அதின் விளைவுகளுக்கு அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும். வார்த்தைகளும் செயல்களும் சொல்லக்கூடிய வல்லமை கொண்டவை. இங்கே நம்முடைய வாழ்க்கையின் விளைவுகளை வெகு நாள் கழித்து அது காண்பிக்கும். நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் ஏற்படுத்தப்படும் பதிவுகள் நிச்சயமாக ஆசீர்வாதத்திற்கோ அல்லது சாபத்திற்கோ நம்மீதே வேலை செய்யும். இந்த நினைவு வாழ்க்கைக்கு பயங்கரமான பவித்திரத்தைக் கொடுக்கிறது. அவருடைய ஞானத்தில் நம்மை நடத்தும்படியாக தாழ்மையான ஜெபத்தோடு இது தேவனிடம் நம்மைச் சேர்க்க வேண்டும். PPTam 723.2

மிக உயர்ந்த பதவிகளில் இருக்கிறவர்கள் வழிதவறிப்போக நடத்தலாம். மிகவும் ஞானமுள்ளவர்கள் தவறுகிறார்கள். பலசாலிகள் தவறி தடுமாறலாம். நம்முடைய பாதையில் மேலிருந்து வெளிச்சம் தொடர்ச்சியாக விழவேண்டிய அவசியம் இருக்கிறது. என்னைப் பின்பற்றிவா என்று சொன்னவரிடம் வெளிப்படையாக நம் வழியை கொடுப்பதுதான் நமக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு. PPTam 723.3

கிதியோனின் மரணத்திற்குப்பிறகு இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும், கிதியோன் என்னும் யொருபாகால் இஸ்ரவே லுக்குச் செய்த சகல நன்மைக்குத்தக்கதயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள். அவர்களுடைய நியாயாதிபதியும் விடுதலை நாயகனுமாயிருந்த கிதியோனுக்கு கடமைப்பட்டிருந்த அனைத்தையும் மறந்தவர்களாக இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்த்தரமாகப் பிறந்த அபிமெலேக்கை இராஜாவாகத் தெரிந்து கொண்டனர். அவன் தன்னுடைய வல்லமையை நிலைநாட்டும்படி கிதியோனுக்குச் சட்டப்பூர்வமாகப் பிறந்தவர்களில் ஒருவனைத் தவிர அனைவரையும் கொலை செய்தான். மனிதர் தேவனுக்கு பயப்படும் பயத்தை அப்புறப்படுத்தும் போது மரியாதையையும் உண்மையையும் விட்டு விலக நாள் செல்லாது. ஆண்டவருடைய இரக்கத்தை போற்றுவது, கிதியோனைப்போல அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்கும் படி உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளை போற்றுவதற்கு நடத்தும். தேவனுக்கு மாபெரும் நன்றியின்மையை வெளிக்காட்டின் மக்களிடமிருந்து, கிதியோனின் வீட்டாரின்மேல் இஸ்ரவேலர் காண்பித்த கொடுமையைத்தான் எதிர்பார்க்க முடியும். PPTam 723.4

அபிமெலேக்கின் மரணத்திற்குப்பிறகு வந்த தேவனுக்குப் பயந்த நியாயாதிபதிகள் சில காலம் விக்கிரகாராதனையைத் தடுக்கும் படி உழைத்தனர். ஆனால் காலம் செல்ல, தங்களைச் சுற்றிலுமிருந்த புறஜாதி கூட்டத்தாரின் பழக்கங்களுக்கு மக்கள் திரும்பினர். வடக்கே இருந்த கோத்திரங்களின் நடுவே சிரியா மற்றும் சீதோனியரின் தெய்வங்கள் அநேக ஆராதனைக்காரரைப் பெற்றன. தென்மேற்கில் பெலிஸ்தியர்களின் விக்கிரகங்களும் கிழக்கே மோவாப் மற்றும் அம்மோனியரின் விக்கிரகங்களும் இஸ்ரவேலின் மனதை அவர்களுடைய பிதாக்களின் தேவனிட மிருந்து திருப்பின. ஆனால் மருள விழுகை வேகமாக அதன் தண்டனையைக் கொண்டு வந்தது. அம்மோனியர்கள் கிழக்கத்திய கோத்திரங்களைக் கீழ்ப்படுத்தி, யோர்தானைக் கடந்து யூதா எப்பீராயிமின் எல்லைகள் மேலும் படையெடுத்தனர். மேற்குப்புறம் கடலுக்கு அருகிலிருந்த சம்பூமியிலிருந்து பெலிஸ்தியர்கள் வந்து வெகுதூரம் வரைக்கும் எரித்து கொள்ளையடித்தனர். மீண்டும் இஸ்ரவேல் இடைவிடாத சத்துருக்களின் வல்லமைக்கு விட்டுவிடப்பட்டதைப் போலத் தோன்றியது. PPTam 724.1

மீண்டும் ஜனங்கள் தாங்கள் கைவிட்டு அவமதித்திருந்தவரிடம் உதவியைத் தேடினர். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு : உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள். ஆனால் துக்கம் மெய்யான மனந்திரும்புதலைச் செயல்படுத்தியிருக்கவில்லை. அவர்களுடைய பாவங்கள் அவர்கள் மேல் துன்பங்களைக் கொண்டு வந்ததினால் துக்கித்தார்களே ஒழிய அவருடைய பரிசுத்தப் பிரமாணத்தை மீறி அவரை கனவீனப் படுத்தினதற்காக துக்கிக்கவில்லை. பாவத்திற்காக வருத்தப்படு வதைக்காட்டிலும் அதிகமானது மெய்யான மனந்திரும்புதல். தீர்மானமாக தீமையிலிருந்து திரும்புவதே அது. PPTam 724.2

ஆண்டவர் தம்முடைய தீர்க்கதரிசிகளில் ஒருவன் வழியாக : கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும், சீதோனியரும், அம லேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா? அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சே வித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன். நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்து கொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள், அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்று அவர்களுக்குப் பதிலளித்தார். PPTam 725.1

இந்த பவித்திரமும் பயப்படத்தக்கதுமான வார்த்தைகள் மனதை மற்றொரு காட்சிக்கு தேவனுடைய இரக்கத்தை நிராகரித்தவர்களும் அவருடையகிருபையை அவமதித்தவர்களும் அவருடைய நீதிக்கு முகமுகமாகக் கொண்டுவரப்பட போகிற மாபெரும் நியாயத்தீர்ப்பு நாளின் காட்சிக்குக் கொண்டுவந்தது. அந்த நீதிமன்ற நாளில் தேவன் கொடுத்திருந்த காலம், பொருள், ஞானம் போன்ற தாலந்துகளை இந்த உலகத்தின் தேவர்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணித்திருந்தவர்கள் கண்டிப்பாக கணக்குக் கொடுக்க வேண்டும். வசதியும் உலக இன்பமுமான பாதையை பின்பற்றும் படியாக அவர்களுடைய மெய்யான அன்பான நண்பரை அவர்கள் கை விட்டிருந்தனர். தேவனிடம் திரும்பும்படியாக சில காலம் அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் உலகம் அதன் அறிவீனத்திலும் வஞ்சகத்திலும் அவர்களுடைய கவனத்தை உறிஞ்சியது. அற்பமான பொழுதுபோக்குகளும் ஆடையின் பெருமையும் பசியின் திளைப்பும் இருதயத்தைக் கடினப்படுத்தி மனசாட்சியை உணர்வற்றதாக்க, சத்தியத்தின் குரல் கேட்கப்படாமற்போயிற்று. கடமை வெறுக்கப்பட்டது. மனிதனுக்காக இவ்வளவு அதிகம் கொடுத்திருந்தவருக்காக தியாகம் செய்யும் அனைத்து ஆசையையும் இருதயம் இழந்துபோகும் வரைக்கும் நித்தியமானவைகளின் மேலிருந்த மதிப்பு சாதாரணமாகக் கணிக்கப்பட்டது. ஆனால் அறுக்கும் சமயத்தில் அவர்கள் விதைத்திருந்ததைச் சேர்ப்பார்கள். PPTam 725.2

நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்கள், நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை . என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். நீங்கள் பயப்படுங்காரியம் புசல் போல் வரும் போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும் போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள் மேல் வரும்போதும், ஆகடியம் பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் மறுஉத்தரவு கொடுக்க மாட்டேன், அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்து கொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள், தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். எனக்குச் செவிகொடுக்கிற வன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் (நீதி. 1:24 - 31, 33 ) என்று ஆண்டவர் சொல்லுகிறார். PPTam 726.1

இஸ்ரவேலர் இப்போது தங்களை ஆண்டவர் முன்பு தாழ்த் தினர். அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார். அன்பான ஆண்டவரின் இருதயம் அவர்களுடைய துக்கத்தைப் பார்த்து வருத்தப்பட்டது. ஓ, நமது தேவனுடைய நீடிய பொறுமையான இரக்கம், அவருடைய ஜனங்கள் அவருடைய சமூகத்தை மறைத் திருந்த பாவங்களை அப்புறப்படுத்தின் போது, அவர்களுடைய ஜெபங்களை அவர் கேட்டு, உடனே அவர்களுக்காக கிரியை செய்யத் துவங்கினார். PPTam 726.2

யெப்தா என்ற ஒரு இரட்சகனை எழுப்பினார். கிலேயாத்திய னான அவன் அம்மோனியர்மேல் யுத்தம் பண்ணி அவர்களுடைய வல்லமையை முறியடித்தான். பதினெட்டு வருடங்களுக்கு அந்த சமயத்தில் இஸ்ரவேல் அவளுடைய சத்துருக்களின் ஒடுக்குத் லினால் துன்பப்பட்டிருந்தது. எனினும் துன்பத்தினால் கற்றுத்தரப் பட்ட பாடம் மீண்டும் மறக்கப்பட்டது. PPTam 726.3

அவருடைய ஜனங்கள் தீய வழிகளுக்குத் திரும்பின் போது, அவர்களுடைய வல்லமையான சத்துருக்களான பெலிஸ்தியர் களால் ஒடுக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை அனுமதித்தார். அநேக வருடங்களுக்குத் தொடர்ச்சியாக அவர்கள் இந்தக் கொடுமையும் யுத்த ஜாதியுமானவர்களால் தொல்லைப்படுத் தப்பட்டு, சில வேளைகளில் முழுமையாக அடிமைப்படுத்தப்பட்ட னர். விக்கிரகாராதனை மக்களுடைய ஆவியிலும் விருப்பங்களிலும் ஒன்றானதைப்போலத் தோன்றும் வரைக்கும் அவர்களோடு கலந்து, அவர்களுடைய இன்பத்திலும் ஆராதனையிலும் இணைந்திருந்தனர். இஸ்ரவேலின் நண்பர்கள் என்று கூறிக்கொண்ட இவர்கள்தான் அவர்களுக்கு மிகவும் கசப்பான சத்துருக்களாகி, அவர்களை அழித்துப்போட ஒவ்வொரு வழியையும் தேடியிருந்தனர். PPTam 727.1

இஸ்ரவேலர்களைப்போல கிறிஸ்தவர்களும் தேவபக்தியற்ற வர்களின் தோழமையைப் பெறும் படியாக பலவேளைகளில் உலகத்தின் செல்வாக்கிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அதன் கொள்கைகளுக்கும் பழக்கங்களுக்கும் ஒத்துப்போகின்றனர். ஆனால் நண்பர்கள் என்று அழைத்துக் கொண்டவர்கள் தான் மிகவும் ஆபத்தான சத்துருக்கள் என்பது முடிவில் காணப்படும். தேவனுடைய ஜனத்திற்கும் உலகத்திற்கும் இடையே எந்த ஒரு இணக்கமும் இருக்க முடியாது என்று வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள் (1யோவான் 3:13); அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள் (யோவான் 6:89; 15:18) என்று நம்முடைய இரட்சகர்சொல்லுகிறார். தேவனுடைய ஜனங்களை அவரிடமிருந்து பிரிக்கும் படி பாவத்திற்குள் அவர்களை வயப்படுத்த நண்பர்கள் என்னும் போர்வையில் இருக்கும் தேவபக்தியற்றவர்களின் வழியாக சாத்தான் கிரியை செய்கிறான். அவர்களுடைய பாதுகாப்பு அகற்றப்படும் போது அவர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை அழிக்கும்படியாக அவன் தமது முகவர்களை நடத்துவான். PPTam 727.2