கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

25/73

25 - விடுதலைப் பயணம்

தங்கள் அரையில் கச்சையைக் கட்டிக்கொண்டும், கால்களில் பாதரட்சையைத் தொடுத்துக்கொண்டும், கைகளில் தடியைப் பிடித்துக் கொண்டும், மௌனமாகவும் பயபக்தியோடும், கூடவே புறப்பட்டுச் செல்லும் படியாக கொடுக்கப்படப்போகிற அரச ஆணையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களாக இஸ்ரவேல் மக்கள் நின்றிருந்தார்கள். காலை விடியும் முன்பாக அவர்கள் தங்கள் பாதையில் இருந்தார்கள். வாதைகளின் காலத்தில், தேவனுடைய வல்லமைகளின் வெளிப்பாடு அடிமைகளின் மனங்களில் விசு வாசத்தைத் தூண்டி, அவர்களை ஒடுக்கினவர்களை பயப்படுத்தியிருந்ததால், இஸ்ரவேலர்கள் படிப்படியாக கோசேனில் தங்களை கூட்டிக்கொண்டார்கள். சடுதியாகப் புறப்பட வேண்டியதிருந்த போதும், நகரும் திரள் கூட்டத்தின் ஒழுங்கிற்காகவும் கட்டுப்பாட்டிற்காகவும் சில ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. நிய மிக்கப்பட்ட தலைவர்களின் கீழ் அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப் பட்டிருந்தார்கள். PPTam 340.1

அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் வெளியேறினார்கள். இந்த திரள் கூட்டத்தில், இஸ்ரவேலின் தேவன் மேல் வைத்த விசுவாசத்தினால் செயல்படுத்தப்பட்டிருந்தவர்கள் மாத்திரமல்ல, வாதைகளிலிருந்து தப்பிக்க மாத்திரம் விரும்பியிருந்த அல்லது ஆவலினிமித்தமும் கிளர்ச்சியினிமித்தமும் மாத்திரம் இந்த கூட்டத்தைப் பின்பற்றியிருந்த மாபெரும் எண்ணிக் கையிலானவர்கள் இருந்தார்கள். இந்தவகுப்பார் இஸ்ரவேலருக்கு எப்போதும் தடுக்கலாகவும் கண்ணியாகவும் இருந்தனர். PPTam 340.2

மக்களோடு மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன் களும் இருந்தன. இவைகள் எகிப்தியர்களைப்போல் தங்களுடைய சொத்துக்களை அரசனுக்கு ஒருபோதும் விற்றுப்போடாதிருந்த இஸ்ரவேலர்களின் சொத்துக்களாயிருந்தன. யாக்கோபும் அவன் குமாரரும் மிக அதிகமாக விருத்தியடைந்திருந்த எகிப்திற்கு தங்களுடைய மந்தைகளையும் மாடுகளையும் தங்களோடு கூட கொண்டுவந்திருந்தார்கள். எகிப்தை விட்டுச் செல்லும் முன்பாக, மோசேயின் நடத்துதலின்படி, தங்கள் ஊழியத்திற்குக் கொடுக் கப்படாதிருந்த சம்பளத்திற்கான பதிலீடை மக்கள் உரிமை கோரி னார்கள். எகிப்தியர்கள் அவர்களுடைய பிரசன்னத்திலிருந்து விடுபடமிகவாஞ்சித்திருந்ததினால் அவர்களுக்கு மறுக்கவில்லை. அடிமைகள் தங்களை ஒடுக்கினவர்களிடம் கொள்ளையடித் தவைகளைச் சுமந்தவர்களாக வெளியேறினார்கள். PPTam 341.1

உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன், பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப் பட்டு வருவார்கள் (ஆதி. 15:13,14) என்று ஆபிரகாமிற்கு வெளிப் படுத்தப்பட்ட தீர்க்கதரிசன சரித்திரத்தை அந்த நாள் முடிவிற்குக் கொண்டுவந்தது. நானூறு வருடங்கள் முடிவடைந்தன . கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. எகிப்தைவிட்டு போன போது இஸ்ரவேலர்கள் தங்களோடு, மிக விலையுயர்ந்த மரபான தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நிறை வேறுதலுக்காக நீண்ட காலம் காத்திருந்த, மேலும் அடிமைத்தனத்தின் இருண்ட வருடங்களில் இஸ்ரவேலின் விடுதலையை நினைவுபடுத்தியிருந்த யோசேப்பின் எலும்புகளை எடுத்துச் சென்றார்கள். PPTam 341.2

பெலிஸ்தியர்களின் தேசத்தின் வழியாக கானானுக்குச் செல்லும் நேர்பாதைக்குப் பதிலாக, ஆண்டவர் அவர்களுடைய வழியை தென்புறமாக சிவந்த சமுத்திரத்தின் கரைகளை நோக்கி நடத்தினார். ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப் துக்குத் திரும்புவார்கள் என்று தேவன் சொன்னார். அவர்கள் பெலிஸ்தியருடைய தேசத்தின் வழியாக செல்ல முயற்சித்திருந் திருப்பார்களானால், அவர்களுடைய முன்னேற்றம் எதிர்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் தங்கள் எஜமான்களிடமிருந்து தப்பிக்கிற அடிமைகளாக பெலிஸ்தியர்கள் அவர்களை கருதியிருந்ததால், அவர்களோடு யுத்தம் பண்ணத் தயங்கியிருந்திருக்கமாட்டார்கள். இஸ்ரவேலர்களும் வல்லமையான யுத்தஜனங்களோடு எதிர்த்து நிற்க ஆயத்தமில்லாதிருந்தார்கள். அவர்கள் தேவனைக்குறித்த மிகக்குறைவான அறிவும், அவர்மேல் மிகக் குறைவான விசுவாச மும் கொண்டிருந்ததால், பயமடைந்து சோர்ந்துபோயிருப்பார்கள். அவர்கள் ஆயுதமற்றவர்களாகவும் யுத்தத்தில் பழக்கப்படாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய ஆவிகள் நீண்ட அடி மைத்தனத்தினால் சோர்ந்திருந்தன. அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் மந்தைகளையும் மாடுகளையும் பற்றிய பொறுப்போடும் இருந்தார்கள். அவர்களை சிவந்த சமுத்திரத்தின் வழியாக நடத்திச் செல்வதினால், தேவன் தம்மை இரக்கமும் நீதி யுமுள்ளவராக வெளிப்படுத்தினார். PPTam 341.3

அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக்கூடும் படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. சங்கீதக்காரன்: அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக் குகிறதற்காக அக்கினியையும் தந்தார் (சங் 105:39) என்கிறான். 1கொரி. 10:1, 2 ஐயும் பார்க்கவும். அவர்களுடைய காணக்கூடாத தலைவரின் கொடி எப்போதும் அவர்களோடு இருந்தது. பகலில் மேகம் அவர்களுடைய பிரயாணங்களை நடத்தியது அல்லது அந்த சேனையின் மீது நிழலாக பரவியிருந்தது. தகிக்கும் வெப் பத்திலிருந்து அவர்களை பாதுகாத்து, தன்னுடைய குளிர்ச்சியி னாலும் ஈரப்பதத்தினாலும் வெடித்து தவனத்தோடிருந்த வனாந்தரத்தில் இனிமையான புத்துணர்ச்சியை அது அளித்தது. இரவில் அது அக்கினி ஸ்தம்பமாகி அவர்களுடைய பாளயத்தை ஒளிப் படுத்தி, தெய்விக பிரசன்னத்தின் நிச்சயத்தை தொடர்ந்து கொடுத்தது. PPTam 342.1

ஏசாயாவின் மிக அழகான ஆறுதலளிக்கும் வாக்கியங்கள் ஒன்றில், தீமையின் வல்லமைகளோடு தேவனுடைய மக்களுக்கு இருக்கும் மாபெரும் இறுதிப் போராட்டத்தில் தேவனுடைய கவனிப்பை எடுத்துக்காட்டும்படி, மேக ஸ்தம்பத்திற்கும் அக்கினி ஸ்தம்பத்திற்கும் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது கர்த்தர் சீயோன்மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின் மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப் பிரகாசத்தையும் உண்டாக்கு வார், மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக் கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். ஏசாயா 4:5,6. PPTam 343.1

வறண்ட, வனாந்தரத்தைப் போன்ற பரந்த நிலத்தின் குறுக்காக அவர்கள் பயணம் சென்றார்கள். தங்களுடைய பாதை எங்கு கொண்டு செல்லுமென்று அதற்குள்ளாக அவர்கள் வியக்கத் துவங்கினார்கள். உழைப்பு மிகுந்த பாதையில் அவர்கள்களைப் படைந்து கொண்டிருந்தார்கள். கூடவே, எகிப்தியர்களால் பின் தொடரப்படுவோம் என்கிற பயமும் சில மனங்களில் உதிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மேகம் முன் சென்றது; அவர்கள் பின் தொடர்ந்தனர். இப்போது மலைப்பாங்கான இடத்திற்குத் திரும்பி சமுத்திரத்தின் அருகே தங்கும்படியாக ஆண்டவர் மோசேயை நடத்தினார். பார்வோன் அவர்களை தொடருவான் என்றும், ஆனாலும் அவர்களை விடுவிப்பதில் ஆண்டவர் கனமடைவார் என்றும் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. PPTam 343.2

இஸ்ரவேலர்கள், ஆராதிக்கும்படி வனந்தரத்தில் காத்திருப் பதற்கு பதிலாக சிவந்த சமுத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எகிப்தில் பரவியது. அவர்களுடைய அடிமைகள் ஒருபோதும் திரும்பிவராதபடி ஓடிவிட்டார்கள் என்று பார்வோனின் ஆலோசகர்கள் இராஜாவிற்கு அறிவித்தனர். தங்களுடைய முதற்பிள்ளைகளின் மரணத்திற்கு தேவனுடைய வல்லமையை காரணங்காட்டிய தங்கள் மடத்தனத்தைக் குறித்து மக்கள் மிகவும் வருந்தினர். தங்கள் பயத்திலிருந்து மீண்டு வந்த அவர்களுடைய பெரிய மனிதர்கள், வாதைகள் இயற்கையின் விளைவுகளே என்று காரணம் காட்டினர். நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்பது அவர்களுடைய கசப்பான அழுகையாக இருந்தது. PPTam 343.3

குதிரை வீரர்களும் சேனைத்தலைவர்களும் காலாட்படை வீரர்களுமான பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்தி லுள்ள மற்ற சகல இரதங்களையும் பார்வோன் கூட்டினான். இராஜா தானும் தன்னுடைய அரசாங்கத்தின் பெரிய மனிதர்களோடு தாக்கு தல் நடத்தும் படைக்கு தலைமை தாங்கினான். தேவர்களின் தயவை சம்பாதிப்பதற்காகவும், இவ்வாறு தாங்கள் எடுத்த வேலையின் வெற்றியை உறுதி செய்வதற்காகவும் ஆசாரியர்களும் அவர்கள் ளோடு சென்றனர். தன்னுடைய வல்லமையை மிக ஆடம்பரமாக காட்டுவதன்வழியாக இஸ்ரவேலர்களை பயமுறுத்த இராஜா தீர்மானித்திருந்தான். இஸ்ரவேலின் தேவனுக்கு ஒப்புக்கொடுக் கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருந்ததால், மற்ற தேசங்களின் இகழ்ச்சிக்கு தாங்கள் உட்பட வேண்டியதிருக்கும் என்று எகிப் தியர்கள் பயந்தனர். ஆனால் இப்போது வல்லமையின் மாபெரும் வெளிக்காட்டல்களோடு முன் சென்று, நாடோடிகளை திரும்பக் கொண்டுவந்தால், தங்களுடைய மகிமையை மீட்பதோடு, தங்கள் அடிமைகளின் ஊழியத்தையும் மீண்டும் பெறலாம். PPTam 343.4

எபிரெயர்கள் கடலின் அருகே பாளயமிறங்கினர். கடலின் தண்ணீர் அவர்களுக்கு முன் கடக்கக்கூடாத தடையாகத் தோன்ற, தென்புறத்தில் கரடுமுரடான மலை முன்னேறிச் செல்வதற்கு அவர்களை தடுத்தது. சடிதியாக, தூரத்தில், மாபெரும் படையின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகிற மின்னும் பட்டயங்களையும் நகரும் இரதங்களையும் அவர்கள் கண்டார்கள். அந்தப் படை நெருங்கியபோது, எகிப்தின் சேனை முழு வேகத்தோடு தொடர்ந்து வருவதாக காணப்பட்டது. இஸ்ரவேலரின் மனங்களை மாபெரும் பயம் நிரப்பியது. சிலர் ஆண்டவரிடம் முறையிட்டனர். ஆனால் மிக அதிகமானோர் . எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லை யென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டு வந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்ற குற்றச்சாட்டோடு மோசேயிடம் தீவிரித்தனர். PPTam 344.1

அவர்களுக்காக அவருடைய வல்லமை வெளிக்காட்டப் பட்டதை மீண்டும் மீண்டும் அவர்கள் கண்டிருந்தும், தேவன்மேல் மிகக் குறைவான விசுவாசத்தை தன்னுடைய மக்கள் வெளிக்காட்டினதினால் மோசே மிகவும் கலங்கினான். அவன் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய கட்டளையை பின்பற்றி வந்திருந்தபோது, தங்களுடைய சூழ்நிலையின் ஆபத்துகளையும் கஷ்டங்களையும் அவர்கள் எவ்வாறு அவன் மேல் சுமத்தலாம்? ஆம். அவர்களுடைய விடுதலைக்காக தேவன்தாமே தலையிடாத பட்சத்தில் விடுதலைக் கான எந்த வாய்ப்பும் அங்கு இல்லாதிருந்தது மெய்தான். ஆனால் தெய்வீக நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்ததினிமித்தம் இப்படிப்பட்ட ஒரு நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததால், விளைவுகளைக் குறித்து மோசே எந்த பயத்தையும் உணரவில்லை. பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள், இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்பது அவனுடைய அமைதியான உறுதியான பதிலாக இருந்தது. PPTam 344.2

இஸ்ரவேலின் சேனையை ஆண்டவருக்கு முன்பாக காத் திருக்கச் செய்வது ஒரு இலகுவான காரியமாக இல்லை. ஒழுங்கும் சுயகட்டுப்பாடும் இழந்தவர்களாக, அவர்கள் கொடுமையும் காரணமின்றியும் போயினர். PPTam 345.1

தங்களை ஒடுக்குகிறவர்களின் கரங்களில் விரைவாக விழு வோம் என்று எதிர்பார்த்தனர். அவர்களுடைய கூக்குரல்களும் புலம்பல்களும் மிக சத்தமாகவும் ஆழமாகவும் இருந்தது. தேவன் முன் செல்வதன் அடையாளமாயிருந்த ஆச்சரியமான மேக ஸ்தம் பம்பின்தொடரப்பட்டிருந்தது. ஆனால் கடக்கக்கூடாத பாதைக்குள் ளாக, மலையின் தவறான பக்கத்தில் அது அவர்களை நடத்தி வந்த தினால், அது ஏதோ மாபெரிய அழிவைக் குறித்த அடையாளமாக இருக்கக்கூடாதோ என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டனர். இவ்வாறாக, வஞ்சிக்கப்பட்ட அவர்கள் மனங்களுக்கு தேவனுடைய தூதன் பேரழிவின் அறிவிப்பாக காணப்பட்டான். PPTam 345.2

ஆனால் இப்போது எகிப்திய சேனை அவர்களை இலகுவான இரையாக்கிக் கொள்ளும்படி நெருங்கின் போது, மேகஸ்தம்பம் கம்பீரமாக வானங்களில் எழும்பி, இஸ்ரவேலர்களை கடந்து சென்று, அவர்களுக்கும் எகிப்திய படைக்கும் நடுவாக இறங்கியது. பின்தொடர்ந்தவர்களுக்கும் தொடரப்பட்டவர்களுக்கும் இடையே இருண்ட ஒரு மதில் நின்றது. எகிப்தியர்கள் அதன்பின் எபிரெய பாளயத்தை காணக்கூடாது போய், நிற்கும்படியாக கட்டாயப்படுத் தப்பட்டனர். ஆனால் இரவின் இருள் ஆழமானபோது, மேகச்சு வர், எபிரெயர்களுக்கு மிகப் பெரிய வெளிச்சமாகி, பகலின் ஒளியினால் முழு பாளயத்தையும் நிரப்பிற்று. PPTam 345.3

அப்போது இஸ்ரவேலின் மனங்களில் நம்பிக்கை திரும்பியது. மோசே ஆண்டவரிடம் தன் சத்தத்தை உயர்த்தினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்து விடு, அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள் என்றார். PPTam 346.1

இஸ்ரவேலர்கள் சமுத்திரத்தை கடந்து வந்ததை விவரிக்கும் போது சங்கீதக்காரன். உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படா மற்போயிற்று. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல் வழி நடத்தினீர் (சங். 77:19, 20) என்று பாடினான். மோசே தன் கோலை நீட்டின் போது தண்ணீர்கள் பிரிந்தது. தண்ணீர்கள் இருபுறமும் மதிலாக நிற்க, வெட்டாந்தரையின் மேல் சமுத்திரத்தின் நடுவே இஸ்ரவேல் சென்றது. தேவனுடைய அக்கினி ஸ்தம்பத்திலிருந்து வந்த ஒளி, நுரைததும்பிய கடலின்மேல் பிரகாசித்து, சமுத்திரத்தின் தண்ணீர்களின் நடுவே வல்லமையான பள்ளத்தைப்போல ஒரு பாதையைப் போன்று வெட்டப்பட்டிருந்த வழியைப் பிரகாசிப்பித்து, அதன் அடுத்த கரையில் மறைந்துபோயிருந்தது. PPTam 346.2

அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமு மான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்தார். வியக்கத்தக்க மேகம், திகைத் திருந்த அவர்கள் கண்களுக்கு முன்பாக அக்கினி ஸ்தம்பமாக மாறியது. இடி முழங்கி மின்னல் ஒளிர்ந்தது. மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல் காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. சங் 77:17,18 PPTam 346.3

எகிப்தியர்கள் குழப்பத்தாலும் கலக்கத்தாலும் பிடிக்கப்பட்ட னர். கோபங்கொண்ட தேவனின் சத்தத்தை இயற்கையின் சீற்றத்திற்கு நடுவே அவர்கள் கேட்டு, தாங்கள் விட்டு வந்த கரைக்கு ஓடிவிடும்படி அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் மோசேதன் கோலை நீட்ட, குவிந்திருந்த தண்ணீர்கள் சீற்றத்தோடும் கர்ஜனையோடும் தங்கள் இரையின் மேல் பாய்ந்து, ஒன்றாகத் திரண்டு தங்களுடைய இருண்ட ஆழங்களுக்குள் எகிப்திய படையை விழுங்கிப்போட்டது. PPTam 346.4

ஆயுதந்தரித்திருந்த அவர்களுடைய சத்துருக்களின் பிரேதங்கள் கரையில் தள்ளப்பட்டிருந்ததை விடிந்த அந்தக் காலை இஸ்ரவேலின் திரளானவர்களுக்குக் காண்பித்தது. மிக பயங்கரமான ஆபத்திலிருந்து முழுமையான விடுதலையை ஒரு இரவு கொண்டுவந்திருந்தது. திரளான உதவியற்ற அந்தக் கூட்டம் யுத்தத்திற்கு பழகியிராத அடிமைகளும் பெண்களும் குழந்தை களும் மந்தைகளும், தங்கள் முன் சமுத்திரமிருக்க தங்கள் பின் வல்லமையான எகிப்திய படை நெருங்கிக்கொண்டிருக்க - தங்களுடைய பாதை தண்ணீர்களின் நடுவே திறந்ததையும், அவர்களுடைய சத்துருக்கள் வெற்றியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதையும் கண்டனர். யெகோவா மாத்திரமே அவர்களுக்கு விடுதலையை கொண்டு வந்தார். அவரிடம் அவர்களுடைய இருதயங்கள் நன்றியோடும் விசுவாசத்தோடும் திரும்பின. அவர்களுடைய உணர்வுகள் துதியின் கீதங்களால் உருப்பெற்றன. தேவ ஆவி மோசேயின் மீது அமர மனிதன் அறிந்திருக்கிற மிகவும் பயபக்திக்குரியவைகளில் மிகப் பழமையான நன்றியின் வெற்றி கீதத்திற்குள் அவன் அவர்களை நடத்தினான். PPTam 347.1

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு கர்த்தரைப் பாடுவேன், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார் ; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாச ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; கர்த்தரே யுத்தத்தில் வல்லவர், கர்த்தர் என்பது அவருடைய நாமம் . பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டார், அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள். ஆழி அவர்களை மூடிக்கொண்டது, கல்லைப் போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள். கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத் தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது, ஆழமான ஐலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம் போல் அமிழ்ந்து போனார்கள். கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினர். ஐனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள், பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும். ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும், கானானின் குடிகள் யாவரும் கரைந்து போவார்கள். பயமும் திகிலும் அவர்கள் மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்து போகும் வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்து போகும் வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப் போல அசைவற்றிருப்பார்கள் - யாத் 15:1-16 PPTam 347.2

ஆழமான தண்ணீர்களின் சத்தத்தைப்போல் திரளான இஸ்ரவேலின் சேனைகளிடமிருந்து பயபக்தியான அந்தத் துதி எழும்பினது. அவர்கள் தம்புரோடும் நடனத்தோடும் செல்லும் போது மோசேயின் சகோதரியான மிரியாம் அதை முன் கொண்டு செல்ல பெண்களால் திரும்பவும் பாடப்பட்டது. வனாந்தரத்திலும் சமுத்திரத்திலும் வெகு தூரத்திற்கு மகிழ்ச்சியான அந்த பல்லவி தொனிக்க, மலைகள் கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார். என்ற துதியின் வார்த்தைகளை மீண்டும் எதிரொலித்தது. PPTam 348.1

எபிரெய மக்களின் மனதிலிருந்து ஒருபோதும் அழிக்கப்படக் கூடாத பதிப்பை இந்தப் பாடலும் அது நினைவுகூர்ந்த மாபெரும் விடுதலையும் உண்டாக்கியது. யெகோவாதான் அவரை நம்புகிற வர் களுக்கு பலமும் விடுதலையுமாயிருக்கிறார் என்பதற்கு அது சாட்சி பகர்ந்து, காலங்காலமாக தீர்க்கதரிசிகளாலும் இஸ்ரவேலின் பாடகர்களாலும் அது எதிரொலிக்கப்பட்டது. அந்தப் பாடல் யூத ஜனங்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல, அது நீதியின் அனைத்து சத்துருக்களுடைய அழிவையும் தேவனுடைய இஸ்ரவேலின் கடைசி வெற்றியையும் முன்காட்டுகிறது. பத்முதீவின் தீர்க்கதரிசி வெள்ளை அங்கி தரித்த ஜெயங்கொண்ட திரளானவர்கள் தேவ சுரமண்டலங்களைப்பிடித்துக்கொண்டு அக்கினிகலந்த கண்ணாடிக் கடல் மேல் நின்று தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடு வதைக் கண்டான். வெளி. 15:2,3 PPTam 348.2

எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும் சங். 115:1. அப்படிப்பட்ட ஆவியே இஸ்ரவேலர்களுடைய விடுதலையின் பாடலில் இருந்தது. அந்த ஆவிதானே தேவனை நேசித்து, அவருக்குப் பயப்படு கிற அனைவருடைய இருதயங்களிலும் தங்கியிருக்கவேண்டும். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து ஆத்துமாக்களை விடுவிப்ப தில் சிவந்த சமுத்திரத்தின் அருகே எபிரெயர்களுக்கு நடப்பித்த வெற்றியைக் காட்டிலும் மாபெரும் வெற்றியை தேவன் நமக்காக நடப்பித்திருக்கிறார். எபிரெய சேனையைப் போல நாமும் மனதோ டும் ஆத்துமாவோடும் ஆண்டவரைத் துதித்து, மனுப்புத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் குரல் கொடுக்கவேண்டும். தேவனுடைய மாபெரும் கிருபைகளின் மேல் தங்கியிருந்து, அவருடைய குறைவான ஈவுகளைக் கவனத்தில் கொள்ளுகிற வர்கள், மகிழ்ச்சியின் ஆடையை உடுத்தி, தங்கள் இருதயங்களில் ஆண்டவரை பாடுவார்கள். தேவனுடைய கரங்களிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுகிற அனுதின ஆசீர்வாதங்களும், மற்ற எல்லா வற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியையும் பரலோகத்தையும் நம்முடைய தொடும் எல்லைக்கும் கொண்டு வந்த இயேசுவின் மரணமும், நிலையான நன்றி சொல்லுவதற்கான நோக்கமாக இருக்கவேண்டும். அவருக்கு சொந்த சம்பத்தாக இருக்கும்படியாக தொலைந்துபோன பாவிகளான நம்மை தம்மோடு இணைப்பதில் என்ன ஒரு மன உருக்கத்தையும் என்ன ஒரு ஒப்பற்ற அன்பையும் தேவன் நம்மிடம் காண்பித்திருக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படும்படியாக என்ன ஒரு தியாகம் மீட்பரால் செய்யப்பட்டிருக்கிறது. மாபெரும் திட்டத்தின் வழியாக நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பாக்கியமான நம்பிக்கைக்காக நாம் தேவனை துதிக்கவேண்டும். அவருடைய ஐசுவரியமான வாக்குத் தத்தங்களுக்காகவும் பரலோக சுதந்திரவீதத்திற்காகவும் நாம் தேவனைத் துதிக்கவேண்டும்! இயேசு நமக்காக பரிந்து பேச ஜீவித் திருக்கிறார் என்பதற்காக அவரைத் துதியுங்கள். PPTam 349.1

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் (சங். 50:23) என்று சிருஷ்டிகர் சொல்லுகிறார். தேவனை துதிப்பதில் பரலோகவாசிகள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். நாம் பிரகாசிக்கிற அவர்களுடைய கூட்டத்தில் சேரும்போது பாடுவதற்கேதுவாக இப்போதுதானே தூதர்களின் பாடலை கற்றுக்கொள்ளுவோமாக. சங்கீதக்காரனோடு சேர்ந்து : நான் உயிரோடிருக்குமட்டும் கர்த் தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன் தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக (சங்.1462,7:5) என்று சொல்லுவோமாக. PPTam 350.1

அவர்களுடைய விடுதலையில் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தவும், அவர்களை ஒடுக்கினவர்களுடைய அகந் தையை தாழ்த்தவும், தேவன் தம்முடைய ஏற்பாட்டினால் சமுத்திரத்திற்கு முன்பாக மலைகளின் மறைவிற்கு எபிரெயர்களை கொண்டுவந்தார். அவர் வேறு எந்த வழியிலாகிலும் அவர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய விசுவாசத்தைச் சோதிக்கவும், அவர்மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் இந்த முறையைத் தெரிந்து கொண்டார். ஜனங்கள்களைத்து திகைத்திருந்தனர். என்றபோதும் முன் செல்லும்படியாக மோசே அழைத்தபோது, அவர்கள் பின்தங்கியிருந் திருப்பார்களெனில் தேவன் அவர்களுக்கான பாதையை ஒருபோதும் திறந்திருக்கமாட்டார். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்து போவது போலக் கடந்துபோனார்கள். எபி. 11:29. PPTam 350.2

தண்ணீர்களுக்குள்ளாக நடந்து சென்றதினால் மோசேயினால் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை தாங்கள் நம்பின்தை அவர்கள் காண்பித்தனர். தங்களுடைய வல்லமைக்குள் இருக்கும் அனைத்தையும் அவர்கள் செய்தார்கள். அதன்பின் இஸ்ரவேலரின் வல்லமையானவர் சமுத்திரத்தை பிளந்து அவர்கள் பாதங்களுக்கு வழியை உண்டு பண்ணினார். PPTam 350.3

இங்கே போதிக்கப்பட்டிருக்கிற மாபெரும் பாடம் எல்லா காலத்திற்குமானது. கிறிஸ்தவ வாழ்க்கை பல வேளைகளில் ஆபத்துகளால் பின்தள்ளப்பட்டு, செய்வதற்கு கடமை கடினமாகத் தோன்றுகிறது. காத்திருக்கும் அழிவை முன்பும், அடிமைத்தனம் அல்லது மரணத்தை பின்புமாக கற்பனை படம்பிடித்துக் காட்டுகிறது. எனினும் முன் செல்லும்படியாக தேவனுடைய சத்தம் தெளிவாக தொனிக்கிறது. நம்முடைய கண்கள் இருளை துளைத்துச் செல்லக்கூடாதிருப்பினும், குளிர்ந்த அலைகளை நம் பாதங்கள் உணர்ந்தபோதும் இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். தரித்திருக்கிற, சந்தேகப்படுகிற ஆவியின் முன் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்கிற தடங்கல்கள் ஒருபோதும் மறைந்து போகாது. நிச்சயமின்மையின் ஒவ்வொரு நிழலும் மறைந்து போகும் வரையிலும், தோல்வியைக் குறித்த எந்தவித ஆபத்தும் இல்லை என்னும் வரையிலும் கீழ்ப்படிதலை தள்ளிப்போடுகிற வர்கள் ஒருபோதும் கீழ்ப்படியமாட்டார்கள். தடங்கல்கள் தடுக் கப்படும் வரை காத்திருப்போம், பின்னர் நம்முடைய பாதையை தெளிவாகக் காணலாம் என்று அவநம்பிக்கை கிசுகிசுக்கிறது. ஆனால் அனைத்து காரியங்களையும் நம்பி தைரியமாக முன்செல்லும்படியாக விசுவாசம் நம்மை நெருக்குகிறது. PPTam 350.4

எகிப்தியர்களுக்கு இருண்ட சுவராக இருந்த மேகம், எபிரெ யர்களுக்கு மாபெரும் ஒளிவெள்ளமாக, அவர்களுடைய பாளயம் முழுவதையும் ஒளிப்படுத்தி, அவர்கள் முன்னிருந்த பாதையை பிரகாசித்திருந்தது. அவ்வாறே, தெய்வத்தின் நடத்துதல்களும் நம்பாதவர்களுக்கு இருளையும் விரக்தியையும் கொண்டுவர, நம்பும் ஆத்துமாக்களுக்கு வெளிச்சமும் சமாதானமும் நிரம்பினதாக இருக்கிறது. ஆண்டவர் நடத்திச்செல்லுகிற பாதை, வனாந்தரத்தின் வழியாகவோ அல்லது சமுத்திரத்தின் வழியாகவோ இருக்கலாம் ஆனால் அது ஒரு பாதுகாப்பான பாதை. PPTam 351.1