கடைசிகாலச் சம்பவங்கள்
பெருந்திண்டியும் இச்சையடக்கமின்மையும்
பெருந்திண்டியும் இச்சையடக்கமின்மையும், நம்முடைய உலகில் ஒழுக்கநிலை பெருமளவில் சீர்கெட்டிருப்பதற்கு அடித்தளமாயிருக்கின்றன. சாத்தான் இதனை நன்கறிந்தவனானபடியால், உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல், ஏன் உயிரைக்கூட பொருட்படுத்தாதபடி, உணவின் ருசிக்கு ஆண்களையும் பெண்களையும் அடிமைப்படுத்திவிட, அவன் தொடர்ச்சியாக தூண்டிக்கொண்டே இருக்கின்றான். புசிப்பதும் குடிப்பதும் உடுத்துவதுமே, உலகத்திலே வாழ்வின் குறிக்கோளாக்கப்பட்டுவிட்டன. ஜலப்பிரளயத்துக்கு முன்பும் இதுபோன்ற நிலைதான் இருந்தது. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையின் இந்த நிலையே, இப்பூமியின் வரலாறு விரைவாக முடிவடையப் போகின்றது என்பதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்களில் ஒன்றாக இருக்கின்றது. - Letter 34, 1875. கச 15.2
ஜலப்பிரளயத்துக்கு முந்தின உலகத்தைப்பற்றி ஆவியானவரின் ஏவுதலால் அருளப்பட்டிருக்கின்ற விவரங்கள், இன்றைய சமுதாயம் வெகுவேகமாய் அடையப்போகின்ற நிலையை, மிகத் துல்லியமாக விளக்கிக்காட்டுகிறதாய் இருக்கின்றன. - PP 102 (1890) கச 15.3
கர்த்தர் வெகுசீக்கிரமாய் வர இருக்கின்றார் என்று நாம் அறிந்திருக்கின்றோம். இன்றைய உலகம், நோவாவின் நாட்களில் இருந்ததைப்போல வேகமாய் மாறிக்கொண்டு வருகின்றது. சுயத்தைத் திருப்திப்படுத்துவதிலேயே அது மூழ்கியிருக்கின்றது. புசிப்பதும் குடிப்பதுமான காரியங்கள் மிதமிஞ்சிப் போய்க்கொண்டிருக்கின்றன. மனிதர்கள், தங்களைப் பைத்தியங்களாக மாற்றுகின்ற விஷம் நிறைந்த மதுபானத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றார்கள். - Letter 308, 1907. கச 15.4