கடைசிகாலச் சம்பவங்கள்

296/334

இயேசு வல்லமையோடும் மகிமையோடும் இறங்கிவருவார்

கொஞ்சநேரத்தில் கிழக்குத் திசையில் கை அளவான சிறிய கருமையான மேகம் ஒன்று தோன்றும். வெகுதூரத்தில் இருக்கும்போது, இருளில் மூடிமறைக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றும் அது, இரட்சகரை சூழ்ந்திருக்கின்ற மேகமாகும். மனுஷகுமாரனுடைய அடையாளம் அதுதான் என்று தேவனுடைய மக்கள் அறிந்துகொள்வார்கள். அது பூமியை நெருங்க நெருங்க, பிரகாசமானதாகவும் மிகவும் மகிமையானதாகவும் அதன் அடிபாகம் பட்சிக்கிற அக்கினியைப்போன்றும் மாற, மிகப்பெரிய ஒரு வெண்மேகமாகக் காணப்பட்டு, அதற்கு மேலாக உடன்படிக்கையின் வானவில் தெரியும்வரை, அவர்கள் பக்திவிநயமான அமைதலோடு அதை மேல்நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இயேசு, மிகவும் வல்லமை நிறைந்த ஒரு வெற்றி வீரராகப் பயணித்து வருவார்… கச 201.3

பரலோக இன்னிசையின் இசைப்பாடல்களுடன், எண்ணிக்கைக்கு அடங்காத, மிகப்பெரிய ஒரு திரளகூட்டமான பரிசுத்த தேவதூதர்களும் அவரோடுகூட வருவார்கள். ஆகாயமண்டலம் “ஆயிரமாயிரமான, பதினாயிரம் பதினாயிரமான” பிரகாசமான தேவதூதர்களால் நிரம்பியதுபோலத் தோற்றமளிக்கும். அந்தக் காட்சியை எந்த ஒரு மானிட எழுதுகோலும் வர்ணிக்க முடியாது. எந்த ஒரு மானிட மனமும் அதனுடைய பிரகாசத்தின் தன்மையைப் போதுமான அளவிற்கு உணரமுடியாது… கச 201.4

இராஜாதி ராஜா, எரிகின்ற அக்கினி ஜீவாலையால் சூழப்பட்ட மேகத்தின்மீது இறங்கிவருவார். வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்படும்; பூமி அவருக்கு முன்பாக அதிரும்; ஒவ்வொரு மலையும், தீவும் தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். — GC 640- 642 (1911). கச 201.5