கடைசிகாலச் சம்பவங்கள்

282/334

தேவனுடைய ஜனங்கள் பட்டணங்களை விட்டு ஓடிவிடுவர்; அநேகர் சிறைப்படுத்தப்படுவர்!

கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற ஜனங்களுக்கு எதிராக, கிறிஸ்தவ உலகத்தின் வெவ்வேறு ஆட்சியாளர்களால் சட்டம் இயற்றப்படும் பொழுது, அந்தச் சட்டம் தேவனுடைய மக்களுக்கு இருக்கின்ற அரசாங்கப் பாதுகாப்பை விலக்கி, அவர்களை அழித்துப்போட விரும்புகிறவர்களிடத்தில் அவர்களை விட்டுவிடும்போது, தேவனுடைய ஜனங்கள் நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் தப்பியோடி, மிகவும் வனாந்தரமான மற்றும் தனிமையான இடங்களில் கூட்டங்கூட்டமாக ஒன்றிணைந்து வாசம்பண்ணுவார்கள். அநேகர், மலைகளின் கொடுமுடிகளில் போய் அடைக்கலம் தேடிக்கொள்வார்கள்… என்றாலும், அவர்களில் பலர் எந்த நாடு, எந்த வகுப்பினர் என்கிற வித்தியாசம் இல்லாமல், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பணக்காரர், ஏழை, கறுப்பர், வெள்ளையர் என்கிற பாகுபாடு இல்லாமல் மிகவும் அநீதியான முறையில் கொடிய சிறைச்சாலைக்குள்ளாகத் தள்ளப்படுவர். அங்கே, ஆண்டவரால் நேசிக்கப்படும் இந்த ஜனங்கள் சங்கிலிகளால் கட்டுண்டவர்களாக, சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாக, கொலை செய்யப்படும்படித் தீர்ப்பளிக்கப்பட்டவர்களாக, தவிப்போடு தங்களது சோர்வான நாட்களைக் கழிப்பார்கள். ஒரு சிலர் பட்டினியால் சாகும்படி இருளான, அருவருப்பான, காற்றுப்புகமுடியாத பாதாள அறைகளுக்குள் தள்ளி அடைக்கப்படுவார்கள். — GC 626 (1911). கச 190.1

தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக, ஒரு நேரத்தைக் குறித்து பொதுவான சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், குறிப்பிடப்பட்ட அந்த நேரத்திற்கு முன்னதாகவே, இந்தச் சட்டம் நிறைவேறும்வரை காத்திருக்கப் பொறுமையில்லாத அவர்களது எதிரிகள், அவர்களது உயிரை எடுத்துவிடும்படியாக முயற்சிப்பார்கள். ஆனால் விசுவாசமுள்ள ஒவ்வொரு ஆத்துமாவைச் சுற்றிலும் காத்துநிற்கும் வல்லமை நிறைந்த தேவத்தூதர்களைமீறி, எவராலும் அவர்களை நெருங்க முடியாது. நகரங்களையும் கிராமங்களையும்விட்டு ஓடும்போது, அவர்களில் சிலர் எதிரிகளால் தாக்கப்படுவர் என்றாலும், அவர்களுக்கு விரோதமாக உயர்த்தப்பட்ட பட்டயங்கள் ஒரு வைக்கோலைப்போல வல்லமையற்று உடைந்து கீழே விழும். மற்றவர்கள் போர்வீரர்களின் உருவத்தில் உள்ள தேவதூதர்களால் காக்கப்படுவார்கள். — GC 631 (1911). கச 190.2

இந்நேரத்திலே தேவனுடைய ஜனங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. அவர்கள் பூமியின் எல்லாப் பகுதிகளிலும், ஆங்காங்கே குழுக்களாக இருப்பார்கள்; அவர்கள் கூட்டமாக அல்ல, தனித்தனியாக சோதிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் சோதனையைச் சந்திக்க தனித்தனியாக நின்றாகவேண்டும். — 4BC 1143 (1908). கச 190.3

சபையின் ஒவ்வொரு விசுவாசியின் விசுவாசமும், அவரைத்தவிர இந்த உலகத்தில் வேறு ஒருவர்கூட இல்லை என்பதுபோன்ற விதத்தில் சோதிக்கப்படும். - 7BC 983 (1890). கச 191.1