கடைசிகாலச் சம்பவங்கள்
யுத்தங்களும் பேரழிவுகளும்
புயல் வந்துகொண்டிருக்கின்றது. தேவனிடத்தில் மனந்திரும்புவதன் மூலமாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் கொள்ளுவதன் மூலமாகவும், அதன் உக்கிரத்தை சந்திக்க நாம் ஆயத்தப்படவேண்டும். பூமியை பயங்கரமாய் அசைக்கும்படியாக கர்த்தர் எழுந்தருள்வார். எல்லாப் பக்கங்களிலும் நாம் உபத்திரவங்களைக் காண்போம். ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலின் ஆழங்களில் எறியுண்டுபோகும். கப்பற்படைகள் மூழ்கிப்போகும். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் பலியாக்கப்படும். எதிர்பாராத விதத்தில் தீ விபத்துக்கள் நேரிடும். அவைகளை அணைக்க மனித முயற்சியால் கூடாமற்போகும். பூமியின் அரண்மனைகள் தீப்பொறிகளின் உக்கிரத்தால் ஒன்றுமில்லாமல் போகும். இரயில் பாதையில் அழிவுகள் அடிக்கடி வெகு சாதாரணமாக நடக்கும், பிரயாணத்தின் பெரும் பாதைகளில், எவ்வித நொடிப்பொழுது எச்சரிப்புமின்றி, குழப்பமும் மோதலும் மரணமும் ஏற்படும். முடிவு சமீபமாயிற்று. கிருபையின் காலம் முடிந்துகொண்டிருக்கின்றது. ஆ! கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுவோம்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுவோம்! - MYP 89, 90 (1890) கச 16.5
இந்த பூமிக்குரிய சரித்திரத்தின் கடைசிக் காட்சிகளில் யுத்தங்கள் சீறியெழும்பும் கொள்ளைநோயும் வாதையும் பஞ்சமும் உண்டாகும். ஆழத்தின் தண்ணீர்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து பாய்ந்தோடி வரும். உடைமையும் உயிரும் அக்கினியாலும் வெள்ளத்தாலும் அழிக்கப்பட்டுவிடும். கிறிஸ்து தம்மை நேசிக்கின்றவர்களுக்காக ஆயத்தம்பண்ண சென்றிருக்கின்ற வாசஸ்தலங்களுக்காக, நாம் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும். - Mar174 (1897). கச 17.1