மகா சர்ச்சை
அத்தியாயம் 26 - மற்றொரு விளக்கப்படம்
பூமியில் நடந்த அனைத்து கிரியைகளிலும் பரலோகம் காட்டிய அக்கறை எனக்கு காட்டப்பட்டது. தமது இரண்டாவது வருகையைக் குறித்து பூமியின் மனுபுத்திரருக்கு எச்சரிக்கும்படி, இயேசு, ஒரு மகத்தான தூதனை நியமித்தார். பரலோகில், இயேசுவின் பிரசன்னத்திலிருந்து புறப்பட்ட அந்த தூதனை நான் கண்டேன். அவனுக்கு முன்பாக மிகப்பிரகாசமான ஒளி ஓடியது. தனது மிகிமையினால் பூமியை நிறைத்து, வருகின்ற தேவ உக்கிரத்தைக் குறித்து மனுஷரை எச்சரிப்பதே இத்தூதனுடைய கடமையாகும். திரளானோர் இவ்வொளியை ஏற்றுக்கொண்டனர். சிலர் துக்கித்தனர். பிறரோ, அளவுகடந்த இன்பமடைந்தார்கள். இவ்வொளி யாவர் மேலும் பிரகாசித்தது. ஆகிலும், சிலர் இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதனை ஏற்றுக்கொண்டவர்கள், தங்கள் முகங்களை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். பலர் கடுங்கோபம் கொண்டனர். தேவதூதன் பரப்பிய ஒளியை எதிர்த்து அநேக ஊழியர்களும் மனிதர்களும் எழும்பினார்கள். அதனை ஏற்றுக்கொண்டவர்களோ, உலகை விட்டு விலகி, ஒன்று பட்டார்கள். GCt 73.1
மனிதரின் மனதினை ஒளியிலிருந்து திருப்புவதில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். இந்த ஒளியைபுறக்கனித்தவர்களோ இருளில் இருந்தார்கள். பரலோகத்திலிருந்து வந்த செய்தி, தேவனுடைய நாமத்தை தரித்தவர்களிடையே என்ன மாறுதல்களை விளைவிக்கும் என்பதை கணக்கிடுவதற்காக தேவதூதன் ஆவலோடு காத்திருந்தான். இயேசுவை நேசிப்பதாகக் கூறிவந்த அநேகர் இச்செய்தியை கேட்டவுடன், வெறுப்போடு திரும்பிச் சென்றதை, அந்த தூதன் தன் கையிலிருந்த தோல் காகிதத்தில் குறித்து வைத்தான். இயேசு இவ்விதமாக புறக்கணிக்கப்பட்டதை, பரலோகமே கோபத்துடன் கவனித்துக்கொண்டிருந்தது. GCt 73.2
அதே சமயத்தில், ஒளியை நம்பினோர்களின் ஏமாற்றத்தையும் நான் கண்டேன். அவர்கள் எதிர்பார்த்த நாளிலே தங்களுடைய கர்த்தரை காணவில்லை. வருங்காலத்தை மறைத்து, தம்முடைய ஜனங்களை ஒரு தீர்மானத்திற்கு கொண்டுவருவதே தேவனுடைய நோக்கமாக இருந்தது. இத்தகைய காலங்கள் இல்லாவிடில், கர்த்தருடைய திட்டங்கள் நிறைவேறாமல் போய்விடக்கூடும். எதிர்காலத்தை அறிந்துக்கொள்ளும் வாஞ்சையில் மனிதனின் மனதை வெகு தொலைவிற்கு சாத்தான் வழிநடத்தியிருந்தான். எனவே, தேவன் வருவார் எனக் கணக்கிடப்பட்ட ஒரு காலம் வந்தால் தான், மனிதனின் மனது, உண்மையை கற்க வாஞ்சிக்கும். காலம் கடந்து சொன்ற போது, தூதனின் ஒளியை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்களும் ஒளியை இகழ்ந்தவர்களுடன் இணைந்து, ஒளியை ஏற்று ஏமாற்றம் அடைந்தவர்களை நிந்தித்தார்கள். GCt 73.3
பரலோகத்தின் தூதர்கள் இயேசுவுடன் கலந்தாலோசித்ததை நான் கண்டேன். கிறிஸ்துவின் பெயரளவு சீடர்களை அவர்கள் குறித்து வைத்தார்கள். தீர்க்கத்தரிசன காலம் கடந்துச் சென்று அவர்களை சோதித்து, நிரூபித்திருந்தது. அநேகர் தராசில் நிறுக்கப்பட்டு, குறைவாய் காணப்பட்டார்கள். சாத்தான் குதூகலித்தான். அவன் விரித்திருந்த வலையில் அவர்கள் சிக்கியிருந்தார்கள். பெரும்பான்மையோரை நேரான வழியிலிருந்து விலக வைத்து, பரலோகத்திற்கு வேறு ஏதாவது வழியில் சென்றுவிடலாம் என்று முயற்சிக்க வைத்தான். சீயோனிலே, பாவிகளுடன் பரிசுத்தவான்களும் கலந்திருந்ததை தேவதூதர்கள் கவனித்தார்கள். இயேசுவை மெய்யாகவே நேசித்தவர்களை அவர்கள் காத்து வந்தார்கள். ஆகிலும், பாவிகள் பரிசுத்தவான்களை தாக்கினார்கள். GCt 74.1
இயேசுவை காண வேண்டுமென்று மிகுதியான வாஞ்சையோடு காத்திருந்தவர்களை, அவருடைய வருகையைக் குறித்து பேசாதபடி சிலர் தடுத்தார்கள். தேவதூதர்கள் இவை அனைத்தையும் கண்டு, சத்தியவான்களினிமித்தம் வருந்தினார்கள். வேறோரு பிரதான தூதன் பூமிக்கு இறங்கி வருவதற்காக நியமிக்கப்பட்டான். அவன் பூமிக்கு இறங்கி வந்தபோது, மிகுந்த சத்தத்துடன், “பாபிலோன் மகாநகரம் விழுந்தது! விழுந்தது” என்று கூறினான். ஏமாந்திருந்த விசுவாசிகள் மீண்டும் எழுச்சியடைவதையும், கண்களை பரலோகத்திற்கு நேராக நம்பிக்கையுடன் உயர்த்தியதையும் நான் கண்டேன். ஆகிலும், அநேகர் உறங்குவதைப் போல இருந்தார்கள். அவர்கள் முகக்குறியில் சஞ்சலம் இருந்ததை காண முடிந்தது. ஏமாந்திருந்தவர்கள் காத்திருக்கும் காலத்தில் தாங்கள் இருப்பதையும், தீர்க்கதரிசன காலம் நிறைவேறும்வரை தாங்கள் பொறுத்திருக்கவேண்டும் என்பதையும் வேதத்திலிருந்து கண்டெடுத்தார்கள். 1843ஆம் ஆண்டில் கர்த்தரை எதிர்பார்க்க வைத்த அதே காரணம் 1844ஆம் ஆண்டில் அவரை எதிர்பார்க்க வைத்தது. ஆகிலும், பெரும்பான்மையோர் 1843ல் பெற்றிருந்த விசுவாச வலிமையை இப்பொழுது பெற்றிருக்கவில்லை. அவர்களுடைய ஏமாற்றம் அவர்களுடைய விசுவாசத்தை குறைத்திருந்தது. கிறிஸ்தவ பெயர்களை கொண்டவர்கள் அநேகர், ஏமாற்றம் அடைந்திருந்தவர்களை மீண்டும் வெகுவாய் நிந்தித்ததை தூதர்கள் கவனித்தார்கள். அந்த பரியாசக்காரரின் உதட்டிலிருந்து “நீங்கள் இன்னமும் உயரே போகவில்லையே!” என்று வந்த ஏளனப் பேச்சை தூதர்கள் எழுதி வைத்தார்கள். இஃது தேவனை பரியாசம் செய்வதாகும் என ஒரு தூதன் உரைத்தான். GCt 74.2
எலியா மறுரூபமாக்கப்பட்ட காட்சிக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. அப்பொழுது பிள்ளைகள் அவனை பின்தொடர்ந்து, “மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று நிந்தித்தார்கள். அவர்கள் தேவனை நிந்தித்தபடியால், தண்டனையை அங்கே பெற்றார்கள். அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து அதனை கற்றிருந்தார்கள். அந்தப்படியே, பரிசுத்தவான்கள் உயரே எழும்புவதைக் குறித்து பரியாசம் செய்த யாவரும் தேவனின் வாதைகளுக்கு ஆளாவார்கள். GCt 74.3
தம்முடைய ஜனங்களிடையே சோர்ந்துப்போய்க் கொண்டிருந்த விசுவாசத்தை நிலைநிறுத்தும்படி மற்ற தூதர்களுக்கு இயேசு கட்டளையிட்டார். இரண்டாம் தூதனின் செய்தியை அவர்கள் புரிந்துக்கொண்டு, பரலோகத்தில் சீக்கிரமாக நிகழவிருக்கும் மாற்றங்களை அறிந்துக்கொள்ள உதவி செய்யும்படியாகவும் அத்தூதர்களுக்கு கட்டளையிடப்பட்டது. இயேசுவிடமிருந்து மகத்தான வல்லமையையும், ஒளியையும் பெற்ற தூதர்கள் துரிதமாக பூமிக்கு வந்து, இரண்டாம் தூதனுக்கு உதவியாக செயலாற்ற ஆரம்பித்ததை நான் கண்டேன். “ இதோ, மணவாளன் வருகிறார். அவரை சந்திக்கும்படி எதிர்கொண்டு புறப்படுங்கள்” என்று தூதர்கள் கூறியபோது, தேவ ஜனங்களின் மீது பிரகாசமான ஒளி வீசியது. அப்பொழுது, எமாற்றமடைந்திருந்தவர்களில் சிலர் எழும்பி அவர்களுடன் இணைந்து மணவாளனின் வருகையைக்குறித்து பேச ஆரம்பித்தார்கள். தூதர்களிடமிருந்து புறப்பட்ட ஒளி அனைத்து இடங்களிலும் பரவிற்று. இதனை தடுக்க சத்தானும், அவனுடைய தூதர்களும் முயற்சித்தார்கள். தேவதூதர்களோடும் அவர்கள் தர்க்கம் பண்ணினார்கள். தேவன் ஜனங்களை ஏமாற்றி விட்டதாகவும், அவர்களுடைய ஒளியினால் ஜனங்களின் ஏமாற்றத்தை சரி செய்ய இயலாது எனவும் தேவதூதர்களிடம் கூறினார்கள். எவ்வளவுதான் சாத்தான் தடைகளை எழுப்பினாலும், தேவதூதர்கள் தங்களுடைய வேலைகளை செய்துக்கொண்டே தான் இருந்தார்கள். இந்த செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். அவர்கள் பரலோகத்திற்கு நேராக கண்களை உயர்த்தி, இயேசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் வேறு சிலரோ, பெருந்துயரத்திலிந்துக் கொண்டு ஜெபிப்பதை நான் கண்டேன். அவர்களுடைய கண்கள் அவர்கள் மீதே இருந்தது. மேல்நோக்கி பார்க்க தைரியமற்றவர்களாக இருந்தார்கள். GCt 74.4
பரலோகத்திலிருந்து கிளம்பிய ஒரு அசாதாரண ஒளி அவர்களிடமிருந்த இருளை நீக்கி, அம் மனிதர்களின் கண்களை மேல் நோக்கி திருப்பியது. அவர்களுடைய முகத்தில் நன்றியுணர்வும், பரிசுத்த ஆனந்தமும் நிலவியது. இதனை, இயேசுவும் அவருடைய தூதர்களும் பெரும் உவப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். GCt 75.1
முதலாம் தூதனின் தூதை ஏற்காதவர்கள், இரண்டாம் தூதனின் ஒளியையும் தொலைத்துவிட்டார்கள். எனவே, மணவாளனை சந்திக்கப் புறப்படுங்கள் என்கிற செய்தியின் வல்லமையை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இயேசுவும் அவர்களிடமிருந்து திரும்பிவிட்டார். இத்தூதை ஏற்றுக் கொண்டவர்களை மகிமை மறைத்துக்கொண்டது. அவர்கள், தேவ சித்தத்தை அறிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்தார்கள். தேவனை வேதனைப்படுத்த அவர்கள் பயந்தார்கள். இந்த தெய்வீக ஒளியை மறைப்பதற்கு சாத்தானும் அவனுடைய தூதர்களும் முயற்சிப்பதை நான் கண்டேன். ஆகிலும், காத்திருப்பவர்கள், தங்களுடைய கண்களை இயேசுவை நோக்கி உயர்த்தியிருந்ததாலும், தேவ ஒளியை ஏற்றுக்கொண்ட படியினாலும், சாத்தானால் அவர்களை தடுக்கக்கூடாமற் போனது. பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செய்தி, சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் கடுங்கோபமடையச் செய்தது. அதே சமயத்தில், இயேசுவை நேசிப்பவர்கள் எனக்கூறி அவருடைய வருகையை நிந்தித்து, விசுவாசிகளை பரிகாசம் செய்தவர்களும் இருந்தனர் தேவதூதர்கள் ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டார்கள். இயேசுவின் வருகையை ஏற்காதவர்களையும், அவருடைய வருகையை குறித்து விமர்சிக்காதவர்களையும் விட்டு, அநேகர் “இதோ மணவாளன் வருகிறார்” என்று காத்திருக்கும் கூட்டத்தோடு இணைந்தார்கள். தேவதூதர்களின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டவர்கள் ஓற்றுமையாகவும், சுதந்திரமாகவும் நின்றார்கள். ஒரு மகிமையான ஒளி அவர்கள் மீது வீசியது. அவர்கள் உலகத்தை வெறுத்து, தங்களுடைய விருப்பங்களை பூமியிலிராதபடி எடுத்துக்கெண்டார்கள். உலக ஐசுவரியங்களை விட்டுவிட்டு, தங்களுடைய அன்பான மீட்பரை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களுடைய முகங்களில் காட்சியளித்த ஆனந்தம், தங்களுடைய உள்ளங்களில் குடியிருந்த சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் பிரதிபலித்தது. இவர்களுடைய சோதனைக் காலம் நெருங்கி வந்துக்கொண்டிருந்தபடியால், அவர்களை பலப்படுத்தும்படி தூதர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்னமும் சோதனைகளுக்குட் பட்டவர்களே என்பதை நான் கண்டேன். தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட எச்சரிப்புகளின் மூலம் தேவனின் கிருபையை நான் உணர்ந்தேன். இந்த செய்திகள் அவர்களுடைய நிலையை பெலப்படுத்தி, அவர்களை பாவத்திற்கு நீங்கலாக்கி, புறஜாதியாரிடமிருந்து நுழைந்த பாவக் கிரியைகளிலிருந்து விடுவிக்க பயன்பட்டது. இச்செய்திகளின் மூலமாக தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அதிகமாக கிரியை செய்யவும், இதினிமித்தமாக அவர்கள் தேவனின் கற்பனைகளை கைக்கொள்ளவும் முடியும். GCt 75.2
பார்க்க : II இராஜாக்கள் 2 : 11-25
தானியேல் 8 : 14
ஆபகூக் 2 : 1-4
மத்தேயு 25:6
வெளிப்படுத்தல் 14 : 8; 18 : 1-5