மகா சர்ச்சை

13/43

அத்தியாயம் 11 - கிறிஸ்துவின் பரமேறுதல்

தமது பிதாவிடம் மீண்டும் வருவதற்காக இயேசு பரம் ஏறப்போவதை, பரலோகமே மிகுதியான அவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. மகிமையின் ராஜாவை ஏற்று, அவரை பரலோகினுள், வெற்றியின் ஆரவாரத்தோடு அழைத்துச் செல்ல தேவதூதர்கள் வந்தார்கள். இயேசு சீடர்களை ஆசீர்வதித்த பின்பு, அவர்களை விட்டு பிரிந்து, பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். திரளான பரம சேனைகள் அங்கு கூடியிருந்தன. அதே சமயத்தில், எண்ணிலடங்கா தூதர்கள் இயேசுவின் வருகைக்காக பரலோகத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள். பரிசுத்த நகரத்திற்கு ஏறியபோது, இயேசுவுடன் வந்த தூதர்கள் மிகுந்த சத்தத்துடன், “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” என்று பாடினார்கள். நகரத்திலிருந்த தூதர்கள் பரவசப்பட்டு, “யார் இந்த மகிமையின் ராஜா?” என வினவினார்கள். இயேசுவுடன் வந்த தூதர்கள், “அவர் வல்லமையும் பராக்கிரமமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே” என இசைப்பாடினார்கள். பரலோக தூதர்கள் மீண்டுமாக, “யார் இந்த மகிமையின் ராஜா?” என்று கேட்க,“அவர் சேனைகளின் கர்த்தரானவர்” என்ற பதில் வந்தது. இவ்விதமாக இயேசு பரலோகம் வந்தடைந்தார். பின்பு, பரலோகத்தின் திரளான சேனையும் அவரை சூழ நின்று, மிகுந்த துதிகளோடு வணங்கி, ஒளிரும் கிரீடங்களை அவருடைய பாதத்தில் சமர்ப்பித்தார்கள். அதற்கு பின்னர், தங்களுடைய பொன் வாத்தியங்களை மீட்டி, பரலோகத்தையே இனிமையான இசையால் நிறைத்தார்கள். அடிக்கப்பட்டும், மகிமையில் உலாவரும் ஆட்டுக்குட்டியானவரை வாழ்த்திப் பாடினார்கள். GCt 35.1

அடுத்ததாக, பரத்துக்கேறிக் கொண்டிருக்கும் இயேசுவை இறுதியாக பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து, ஆவலோடு மேல் நோக்கியிருந்த சீடர்களை நான் கண்டேன். வெள்ளங்கி தரித்த இரண்டு தூதர்கள் அங்கே தோன்றி, அவர்களை பார்த்து, “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” என்று சொன்னார்கள். இயேசுவின் தாயாரோடு சேர்ந்து இக்காட்சியை கண்ட சீடர்கள், இராமுழுவதும் இதனைக் குறித்துப் பேசி மகிழ்ந்தார்கள். குறுகிய காலத்தில் நடந்தேறிய அநேக மகிமையான காரியங்களை எண்ணி வியந்தார்கள். GCt 35.2

சாத்தான், அவனுடைய தூதர்களோடு கலந்தாலோசனை நடத்தி, இவ்வுலகின் அதிகாரம் தன் வசமிருக்கும்போதே தேவனின் அரசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டு, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எதிராக பத்து மடங்கு அதிகமாக செயலாற்ற வேண்டுமென தீர்மானித்தான். இயேசுவை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை; எனவே, தலைமுறை தலைமுறையாக அவர்மீது விசுவாசம் வைக்கிறவர்களை தாக்கி, அவர்களை பிடித்துக் கொள்ள முடிவெடுத்தான். இயேசு, தமது சீடர்களுக்கு, பிசாசை வெல்லும் வல்லமையை அருளியுள்ளதை தெளிவாக எடுத்துரைத்தான். இவையனைத்தையும் கேட்ட பின்பு, அவனுடைய தூதர்கள், கெர்ச்சிக்கிற சிங்கம் போல புறப்பட்டுச் சென்றார்கள். GCt 35.3

பார்க்க : சங்கீதம் 24:7-10
அப்போஸ்தலர் 1:1-11