மாரநாதா! (இயேசு வருகிறார்!)
இராஜாவை நம் கண்களால் காண்போம்!, நவம்பர் 15
“உன் கண்கள் ராஜாவை மகிமை போருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.” - ஏசாயா 33:17. Mar 637.1
இராஜாவை அவருடைய அழகிலே நாம் பார்க்கவிரும்பினால், முதலாவது இங்கே அதற்குப் பாத்திரராக நாம் நடந்து கொள்ள வேண்டும். சிறுபிள்ளைத்தனத்தை முதலாவது விட்டுவிட வேண்டும். நம்மைக் கோபப்படுத்தும்பொழுது, நாம் அமைதலாக இருக்கக்கடவோம். மெளனமே சரியான பதிலாக அமைகிற சூழ்நிலைகளுமுண்டு. தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் என்று அழைக்கப்படுவதற்கேற்ப, பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், தயவையும் நாம் காண்பிக்க வேண்டும். கிறிஸ்துவை முழுமையாக விசுவாசிக்க வேண்டும், நம்ப வேண்டும்; அவரைச் சார்ந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான்வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” - லூக்கா 9:23. ஒருவேளை அமைதியாய் இருக்கவேண்டிய நேரத்தில், அமைதியாக இருக்கக்கூடாதபடிக்கு அந்த சிலுவை ஒரு பாரமாக இருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் அமைதியாக இருப்பதும், மிக வேதனையான ஒழுங்கு முறையாக இருக்கலாம்; ஆனாலும், தீமையை வெல்ல, கோபமான புயல் அடிப்பதைப் போன்ற வார்த்தைகளைவிட, மெளனமே அதிக வல்லமையுள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன். Mar 637.2
பரலோக சபையிலே நாம் இருக்கவேண்டுமென்றால், இந்த உலகிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டியவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும். நமது இரட்சகர் ஜீவத்தண்ணீரண்டைக்கு நம்மை நடத்திச்சென்று, நாம் புரிந்துகொள்ளாத அநேக காரியங்களை நமக்கு விளக்கிச் சொல்லவிருக்கிற மேலோகப் பள்ளிக்கு ஆயத்தப்படவேண்டுமானால், எவைகளையெல்லாம் நமக்குக் கற்றுத்தர கிறிஸ்து விரும்புகிறாரோ, அவைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்... இங்கே நாம் ஒருபோதும் பார்த்திராத வண்ணமாக தேவனுடைய மகிமையை அங்கே காண்போம். ஆண்டவரை அறிந்துகொள்ளும்படி இவ்வுலகில் அவரை நாம் தொடர்ந்து பின்சொல்லாதபடியினால், இப்பொழுது அவரது மகிமையை ஒரு மினுக்கொளியளவே பெற்றுக்கொள்கிறோம். Mar 637.3
இந்த உலகப் பள்ளிகளிலே கற்றுக்கொள்ளுகிற ஒவ்வொரு சரியான கொள்கையும் ஒவ்வொரு சத்தியமும் பரலோகப்பள்ளியிலே அந்த அளவிற்கு நம்மை முன்னேறச் செய்யும். இந்த பூமியில் கிறிஸ்து ஊழியஞ்செய்தபொழுது, தமது சீடர்களோடு நடந்து பேசி - போதித்தவண்ணமாக, மேலோகப் பள்ளியிலும் நம்மை அவர் ஜீவத்தண்ணீர்களண்டையில் நடத்திச்சென்று, நம்மோடு பேசி, இவ்வுலக வாழ்க்கையிலே நம்முடைய அறிவு குறைவானதாலும், பாவத்தால் கெட்டுப்போனதாலும், மறைந்திருந்த இரகசியங்கள் அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார். பரலோகப் பள்ளியிலே, படிப்படியாக மிகவும் உயரிய படிப்புகளைப் படிக்கவும் நமக்குச் சந்தர்ப்பம் இருக்கும்; அங்கே இராஜாவை அவரது அழகிலே காண்போம். ஈடு இணையற்ற அவரது கவர்ச்சிக் கூறுகளையும் காண்போம். Mar 638.1
வெகுகாலமாக நாம் காத்திருந்துவிட்டோம்; எனினும் நமது நம்பிக்கை மங்கிப்போகக் கூடாது, இராஜாவை அவரது அழகிலே நாம் பார்க்கக் கூடுமானால், நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம்.⋆ Mar 638.2
வாக்குத்தத்த வசனம்: Mar 638.3
“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்குமுன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய்.” - 1 தீமோத்தேயு 6:12. Mar 638.4