மாரநாதா! (இயேசு வருகிறார்!)

307/366

நாம் நமது காவல்தூதர்களை சந்திப்போம்!, நவம்பர் 2

“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.” - சங்கீதம் 91:11. Mar 611.1

நித்தியத்தின் வெளிச்சத்தில், ஆண்டவருடைய நடத்துதல்களையெல்லாம் காணும்வரை, அவருடைய தூதர்கள் நமக்குச்செய்த உதவிகள் அனைத்திற்கும் நாம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மனிதர்களுடைய காரியங்களுல் பரலோக ஜீவிகள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மின்னலைப்போன்று பிரகாசிக்கிற உடையைத் தரித்தவர்களாக அவர்கள் காணப்பட்டிருக்கிறார்கள்; வழிப்போக்கரைப்போன்ற மனிதர்களாக வந்திருக்கிறார்கள்; மனிதர்களுடைய உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; இருளில் சிக்கிய பயணிகளுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கலைத்து, அழிம்பனுடைய அடிக்கு விலக்கியிருக்கிறார்கள். Mar 611.2

உலகின் அதிபதிகள் அறியாமலிருந்தாலும், அவர்களுடைய ஆலோசனை மன்றங்களிலே தூதர்கள் பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மானிடக்கண்கள் அவர்களைக் கண்டிருக்கின்றன. அவர்கள் கோரிக்கைகளுக்கு மனிதர்கள் செவி சாய்த்திருக்கிறார்கள். ஆலோசனைக்கூடங்களிலும், நியாயவிசாரணை மன்றங்களிலும் ஒடுக்கப்பட்ட-உபத்திரவப்படுத்தப்பட்ட மக்களுக்காக, பரலோகத்தூதுவர்கள் பரிந்துபேசியிருக்கிறார்கள். தேவனுடைய மக்களுக்கு தவறிழைக்கும்படி முயற்ச்சித்த எல்லாத் தீமைகளையும் கட்டுப்படுத்தி, நோக்கங்களையும் முறியடித்திருக்கிறார்கள். பரலோகப்பள்ளிக்கூடத்திலே பயிலப்போகின்ற மாணவர்களுக்கு இவைகளெல்லாம் வெளியாக்கப்படும். Mar 611.3

மீட்க்கப்பட்ட ஒவ்வொரு நபரும் தாங்கள் சொந்த வாழ்க்கையில் தூதர்கள்செய்த ஊழியங்களைப் புரிந்துகொள்வர். தனது ஆரம்ப நாட்களிலிருந்து தன்னைப் பாதுகாத்த தூதன்-தனது நடைகளை விழிப்போடு பார்த்திருந்த தூதன்-ஆபத்து நாளிலே தன்னைக் காப்பாற்றிய தூதன்-மரணபள்ளத்தாக்கிலே தன்னோடு இருந்த தூதன்-தன்னுடைய மரணப்படுக்கைக்கு இடங்குறித்த தூதன்-உயிர்த்தெழுதலின் காலையில், முதலாவது தன்னை வரவேற்ற தூதன்-ஆம், அந்தத்தூதனுடன் உரையாடல் நிகழ்த்தி, அவர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே இடைபட்ட தெய்வீகெ தலையீட்டின் வரலாற்றைக்குறித்தும், மனிதனுக்காக பரலோகம் எவ்வளவு ஒத்துழைத்தது என்பதைக் குறித்தும் அறிந்துகொள்வது எப்படிப்பட்ட இன்பமான அனுபவமாக இருக்கும்! Mar 611.4

ஒவ்வொரு மனிதனும் தனது கரங்களில் தேவனுடைய வார்த்தையை வைத்தவனாக, வாழ்விலே அவனது பங்கு எங்கு போடப்பட்டிருப்பினும், அவன் தெரிவுசெய்துகொள்கின்றபடி இப்படிப்பட்ட தோழமையைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த வேதாகமத்தின் பக்கங்களிலே, மனித இனத்தின் மேம்பட்ட- மிகச் சிறந்த மனிதனோடு, அந்த நபர் உரையாடல் நிகழ்த்தலாம். நித்தியமானவர் மனிதரோடு பேசுகிறபொழுது, அவரது குரலுக்குசச் செவிமடுக்கலாம். “தேவதூதர்களும் உற்றுப்பார்க்க ஆசையாயிருக்கிற” (பேதுரு 1:12) அந்த வசனங்களைப் படித்துத் தியானிப்பதின்மூலம், அவர்களுடைய தோழமையைப் பெற்றுக்கொள்ளலாம். ⋆ Mar 612.1

வாக்குத்தத்த வசனம்: Mar 612.2

“இரட்ச்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” - எபொரேயர் 1:14. Mar 612.3