சபைகளுக்கு ஆலோசனை

54/326

தானியேல் — பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியத்தின் முன் மாதிரி

பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியத்துக்கு தானியேல் ஒரு எடுத்துக்காட்டு. இது யாவருக்கு, விசேஷமாக வாலிபருக்கு ஒரு நல்ல மாதிரி. தேவ கட்டளைப்படி நடப்பது மனதுக்கும் சரீரத்திற்கும் ஆரோக்கியமாகும். சன்மார்க்கத்திலும் கல்வியிலும் உன்னத நிலையடைய தேவனிடமிருந்து ஞானமும் பல மும் பெற வழி தேடி, ஜீவியத்தின் சகல காரியங்களிலும் இச்சையடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். CCh 182.2

தானியேலுடைய நடத்தையில் எவ்வளவாய்க் குற்றமில்லாதிருந்ததோ அவ்வளவாய் அவனுடைய சத்துருக்களின் பகை பெருகிற்று. அவனுடைய சன்மார்க்க நெறியிலும், தன் கடமைகளைச் செய்வதிலும் யாதொரு குற்றமும் காணப்படாதபடியால் அவர்களை வெறிப்பிடித்தது. அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்தக் தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேத விஷயத்திலே குற்றப்ப்டுத்தும் முகாந்தரத்தைக் கண்டு பிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டு பிடிக்கக் கூடாது என்றார்கள். தானி. 6:5. CCh 183.1

கிறிஸ்துவர்கள் யாவருக்கும் எத்தகைய நற் போதனை இதில் அடங்கியிருக்கிறது. பொறாமையின் கூர்ந்த கண்கள் தினந்தினம் தானியேலை நோக்கின; பகையினால் அவர்களுடைய விழிப்பு அதிகப்பட்டது; ஆயினும் அவனுடைய வார்த்தையிலோ, செய்கையிலோ ஒரு குற்றமும் கண்டு கொள்ளக்கூடவில்லை. இருந்தாலும், தானியேல் தன்னைப் பரிசுத்தமாக்கப்பட்டவனென பாராட்டிக்கொள்ளவில்லை; ஆனால் அவன் அதைக் காட்டிலும் எல்லையில்லா அளவில், உண்மையுள்ளதும் ஒப்படைக்கப்பட்டதுமான ஜீவியஞ் செய்தான். CCh 183.2

அரசு கட்டளை வெளிப்பட்டது. தன்னை அழிக்க தன் சத்துருக்கள் இட்ட திட்டம் இன்னதென்பதைத் தானியேல் அறிந்தான். ஆனால் தன் ஜீவியத்தின் எச்சிறிய அம்சத்தையும் அவன் மாற்றவில்லை. மிக அமைதியுடன் தன் கடமைகளைச் செய்து, குறிக்கப்பட்ட ஜெப வேளையில் தன் அறைக்குட் செல்கிறான். எருசலேமுக்கு நேராக தன் பலகணிகளைத் திறந்து, பரலோக தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறான். உலக வல்லமை எதுவும் தனக்கும் தன் தேவனுக்குமிடையே வந்து யாரிடம் ஜெபிக்கலாம், ஜெபிக்கக்கூடாதென குறிக் கிட்டுச் சொல்ல முடியாதென்பதை தன் ஜீவியத்தால் வெளிப்படுத்தினான். இலட்சியமுள்ள பெருந்தன்மையுடைய புருஷன்! கிறிஸ்துவ உண்மைக்கும் தைரியத்துக்கும் புகழ்ச்சிகரமான எடுத்துக்காட்டாக உலகத்திற்கு இன்ரு விளங்குகிறான். மரணமே தன் உத்தம குணத்திற்கு பலன் என்று கண்டும் தேவனிடம் தன் இருதயத்தைத் திரும்புகிறான். CCh 183.3

“அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டு வந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.” தானி. 6:16. CCh 184.1

அதி காலையில் ராஜா சிங்கக் கெபியண்டை விரைந்து சென்று, துயரச் சத்தமாய்: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா? என்று கேட்டான். (வச. 20). தீர்க்கதரிசியின் சத்தம் பிரதியுத்தரமாக, ராஜாவே, நீர் என்றும் வாழ்க, சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால், அவருக்கு முன்பாக நான் குற்ற மற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.” CCh 184.2

அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான். அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான். தேவன் பேரில் விசுவாசிர்ஹ்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை. (வச. 22,23). இப்படித் தேவ ஊழியன் இரட்சிக்கப்பட்டான். சத்துருக்கள் அவனுக்கு நியமித்த கண்ணி அவர்களுடைய அழிவுக்குக் காரணமாயிற்று. ராஜாவின் கட்டளைப்படி அவர்கள் சிங்கக் கெபியில் போடப்பட்டார்கள்; அக் காட்டு மிருகங்கள் அவர்களை உடனே பட்சித்தன. CCh 184.3

சிறையிருப்பின் எழுபது வருஷம் முடியும் வேளை வந்த போது தானியேலுடைய மனது எரேமியாவின் தீர்க்கதரிசனங்களைக் குறித்து சிந்தித்தது. CCh 185.1

தன் உத்தமத்தைக் குறித்து தானியேல் தேவனிடம் கூறியறிவிக்கவில்லை. தான் பரிசுத்தமும் தூய்மையுமாயிருப்பதாகச் சொல்வதற்குப் பதிலாக தன்னைப் பாவ இஸ்ரவேலருடன் ஒன்றாக்குகிறேன். தேவன் அவனுக்கு அருளிய ஞானம் உலக ஞானத்துடன் ஒப்பிடப்பட்டால், அது, நடுப்பகலின் சூரிய ஒளி இரவில் மங்கி மினுக்கும் நட்சத்திர ஒளியைக் காட்டிலும் எம்மடங்கு விசேஷித்திருக்குமோ அம்மடங்கு விசேஷித்திருந்தது. பரலோகமே நன்குமதித்த இந்த மனிதனுடைய வாயிலிருந்து வந்த ஜெபத்தைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். மிகுந்த மனத்தாழ்மையோடும், கண்ணிரோடும் இருதய பாரத்தோடும் அவன் தனக்காகவும், தன் ஜனத்துக்காகவும் மன்றாடுகிறான். தன் ஆத்துமாவைத் தேவனிடம் வெறுமையாக்கி, தன் அபாத்திரத்தை அறிவித்து, தேவனுடைய மகத்துவத்தையும் மாட்சிமையையும் அறிக்கை செய்தான். CCh 185.2

தானியேல் ஜெபம் செய்தவுடனே பரலோகத்திலிருந்து காபிரியேல் தூதன் விரைந்து வந்து, அவனுடைய விண்ணப்பம் கேட்கப்பட்டு, உத்தரவு அருளப்பட்டதாக அறிவிக்கிறான். இந்த வல்லமையான தூதன் பிற்காலத்தைப் பற்றிய அறிவையும் ஞானத்தையும் தானியேல் உணர்ந்து கொள்ளும்படி உதவ அனுப்பப்பட்டான். இப்படியாக, சத்தியத்தை அறிய ஊக்கமாய் முயன்றுகொண்டிருக்கும் போது, தானியேல் பரலோகம் அனுப்பிய தூதனுடன் சம்பாஷிக்க வழி திறக்கப்பட்டது. CCh 185.3

அவன் விண்ணப்பத்திற்கு உத்தரவாக, தனக்கும் தன் ஜனத்துக்கும் மிக அவசியமான ஒளியும் சத்தியமும் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, உலக மீட்பர் வருங்காலமட்டும் சம்பவிக்கும் யாவையும் காணும் சிலாக்கியத்தையும் பெற்றான். பரிசுத்த மாக்கப்பட்டவர்களென உரிமை பாராட்டுகிறவர்கள் வேதத்தை ஆராயும் ஆவலின்றி, வேத சத்தியத்தை உணர்ந்துகொள்ளும்படி ஊக்கமாய் தேவனோடு ஜெபத்தில் போராடாமலிருந்தால், மெய்யான பரிசுத்தமாக்கப்படுதல் என்னவென்று அவர்கள் அறிந்து கொள்ள முடியாது. CCh 185.4

தானியேல் தேவனோடு பேசினான். பரலோகமே அவனுக்குத் திறக்கப்பட்டது. தாழ்த்தியதற்கும், ஊக்கமாய்த் தேடினதற்கும் பெருங் கண்ணியங்கள் அவனுக்கு அருளப்பட்டன. தங்கள் முழு மனதுடன் தேவ வசனத்துக்காக பசி தாகம் கொள்பவர்களுக்கு அவருடைய சித்தத்தைப் பற்றிய அறிவு கிடைக்கும். அவரே சத்தியத்திற்குக் காரணர். அவர் மங்கிய அறிவைப் பிரகாசிப்பித்து, மனித மனது அவர் வெளிப்படுத்திய சத்தியங்களைக் கிரகிக்க வல்லமை அருளுகிறார். CCh 186.1

உலக மீட்பர் வெளிப்படுத்திய பெருஞ்சத்தியங்கள் புதைக்கப்பட்டப் பொக்கிஷத்தை தேடுவதுபோல் தேடுகிறவர்களுக்கே கிடைக்கும். தானியேல் விருத்தாப்பியன், புற ஜாதியாரின் அரண்மனை கவர்ச்சிகளின் மத்தியில் அவன் வாழ்க்கை நடந்தது; மா விசாலமான சாம்ராஜ்யத்தின் பொறுப்புகளினால் அவன் மனம் பாரமடைந்திருந்தது. என்றாலும் தன் ஆத்துமாவைத் தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, உன்னதமானவருடைய திட்டங்களை அறிய வழி தேடினான். அவனுடைய விண்ண்பங்களுக்கு பிரதியுத்தரமாக கடைசி நாட்களிலிருக்கிறவர்களுக்கும் உதவக்கூடிய ஒளி பரத்திலிருந்து கொடுக்கப்பட்டது. அப்படியானால் நாம் நமக்குப் பரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சத்தியங்களை விளங்கிக் கொள்ளும்படி எவ்வளவு ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். CCh 186.2

தான்யேல் உன்னதமானவருக்குத் தன்னை முழுவதும் ஒப்படைத்த ஊழியன், அவனுடைய நீடித்த ஆயுசு தெய்வப் பணியின் உன்னத நற்கிரியைகளால் நிரம்பிற்று, அவனுடைய பரிசுத்த குணமும் அசைவற்ற உத்தமும், பணிந்த இரு தயத்தையும் தேவனுக்கு முன்பாக நொறுங்குண்ட தன்மையையும் பிறப்பித்தன. தானியேலின் ஜீவியம் மெய்யாய்ப் பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியத்திற்கு ஆவியின் ஏவுதலால் எடுத்துக்காட்டப்பட்ட உதாரணம் என்பதாக நாம் கூறுவோம். S. L. 42-52. CCh 186.3