சபைகளுக்கு ஆலோசனை

293/326

தவறு ஒளி போல் காணப்படல்

நாம் பெரிய ஒளியின் யுகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒளி என அழைக்கப்படுவது சாத்தானுடைய ஞானத்திற்கும் தந்திரங்களுக்கும் வழி திறக்கின்றது. உண்மையென தோன்றுமாறு அனேக காரியங்கள் காண்பிக்கப்படும். என்றாலும் அவைகளை மிகுந்த ஜெபத்தோடு அலசிப்பார்க்க வேண்டும். அவைகள் சத்துருவின் விசேஷித்த சாதனங்களாக இருக்கலாம். தவறான பாதை அடிக்கடி சத்திய பாதைக்கு அருகில் இருப்பதாகக் காணப்படும். பரலோகம், பரிசுத்தம் நோக்கி வழி நடத்தும் பாதையினின்று அதை வித்தியாசப் படுத்துவது சிரம்மாயிருக்கலாம். ஆனால் மனது பரிசுத்த ஆவியால் ஒளியடையும்போது, சரியான வழியினின்று அது விலகுவதாக கண்டறியலாம். சற்று காலம் சென்றபின் அவ்வழிகள் இரண்டும் ஒன்றினின்று ஒன்று வெகுவாக அகன்றிருப்பதைக் காணலாம். CCh 681.1

கடவுள் என்பது சர்வ சிருஷ்டிகளிலும் வியாபித்திருக்கும் சத்து என்னும் கொள்கை சாத்தானின் மகா வஞ்சகமான கோட்பாடாகும். அது தேவனை சரிவர எடுத்துக்காட்டாமல், அவரது உன்னதத்திற்கும் மாட்சிமைக்கும் கண்ணியக் குறைவை உண்டாக்குகிறது. CCh 681.2

தூணிலும் துரும்பிலும் தெய்வம் இருக்கிறார் என்ற கோட்பாட்டை தேவ வசனம் ஆதரிப்பதில்லை. அவரது சத்திய ஒளி, இவ்வித கோட்பாடுகள் ஆத்துமாவை அழிக்கும் ஏதுக்கள் என்று காட்டுகிறது. இருள் அவற்றின் மூலப்பொருள். இச்சை அவற்றின் எல்லை. அவை சுபாவ இருதயத்தை திருப்திப்படுத்தி மன விருப்பங்களுக்கு அனுமதி அளிக்கின்றன. இவ்வித கோட்பாடுகளை கடைபிப்பதன் பலன் கடவுளிடமிருந்து விலகுவதாகும். CCh 681.3

பாவத்தின் காரணமாக நமது நிலைமை கிரமம் தப்பிவிட்டது. அதை திரும்ப ஏற்படுத்துவதற்கான சக்தி CCh 681.4

தெய்வீக சக்தியாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் அதற்கு மதிப்பில்லை. மனுஷருடைய இருதயங்களை பிடித்திருக்கும் வல்லமையை நொறுக்க்க்கூடிய வல்லமை ஒன்று தான் உண்டு. அது இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய வல்லமை. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் இரத்தம் மட்டும் பாவத்தினின்று சுத்திகரிக்கும். அவருடைய கிருபை தான் நம்முடைய பாவ சுபாவத்தையும் தன்மையும் கீழ்ப்படுத்தி, அதை எதிர்ப்பதற்கான வல்லமையை நமக்கு அளிக்கிறது. இந்த வல்லமை ஆவேச மார்க்கத்தாரின் கோட்பாடுகளை பயனற்றதாக்கிவிடுகிறது. கடவுள் என்பது சர்வ சிருஷ்டிகளிலும் வியாபித்துருக்கும் சத்துருவானால், அவர் எல்லா மனிதர்களிலும் வாசம் செய்கிறார். பரிசுத்தம் அடைய மனிதன் தனக்குள் இருக்கும் வல்லமையை விருத்தி பண்ணினால் அதை அடையலாம் என்பது அவர்கள் கோட்பாடு. CCh 682.1

இக்கோட்பாடுகளை அவற்றின் தர்க்க ரீதியான முடிவு மட்டும் பின் தொடர்ந்தால் கிறிஸ்துவ ஒழுங்கை அவை நிராகரித்துவிடும். அவைகள் பிராயச்சித்த்த்தின் அவசியத்தை ஒன்றுமில்லாமையாக்கி, மனிதனை தனக்குத் தானே இரட்சகனாக்கி விடும். தேவனைப் பற்றிய இக் கோட்பாடுகள் அவரது வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுவதல்லாமல், அக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் வேதம் முழுவதையும் கட்டுக்கதையென நோக்கும்படியான ஆபத்திற்குள்ளாகிறார்கள். அவர்கள் துன்மார்க்கத்தை விட சன்மார்க்கத்தை மேலாக மதிக்கலாம். ஆனால் தேவனுக்குரிய ராஜரீக நிலையை நீக்கி விடும்போது, தேவனற்ற மானிட வல்லமையைச் சார்வது பிரயோஜனமற்றதாகும். உதவியற்ற மானிடசித்தம் தீமையை எதிர்த்து அதை மேற்கொள்ளும் மெய் வல்லமை அற்றதாகிறது. ஆத்தும பாதுகாப்புகள் இடிந்துவிடும். பாவத்திற்கு எதிராக தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தி மனிதனில் இல்லை. தேவ வசனத்தின் கட்டுப்பாடுகளும் பரிசுத்த ஆவியும் புறக்கணிக்கப் படும்போது ஒருவன் அமிழக்கூடிய ஆழம் எவ்வளவென நமக்குத் தெரியாது. CCh 682.2

ஆவேச மார்க்க கோட்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போர் தங்களது கிறிஸ்தவ அனுபவங்களைக் கெடுத்து, தேவனோடுள்ள தங்கள் தொடர்பை அறுத்தெரிந்து, நித்திய ஜீவனை இழந்து போகின்றனர். 8T 290-292. CCh 683.1