சபைகளுக்கு ஆலோசனை

278/326

நிபந்தனைகளின்பேரில் பிரார்த்தனைக்கு விடை

ஆயினும் அவருடைய திருவசனத்திற்கு தாம் கீழ்ப்படிந்து வாழும் பொழுது மாத்திரமே அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுமாறு உரிமை பாராட்டுவது கூடும். “என் இருதயத்திலே அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவி கொடார்.” சங். 65:18. நாம் அரைகுறையான, அரை மனதுடைய கீழ்ப்படிதலுடையலர் களாயிருப்போமானால், அவருடைய வாக்குத்தங்கள் நிறைவேற்றப்படமாட்டா. CCh 639.1

திருவசனத்திலே பிணியாளிக்காகச் செய்யப்படும் விசேஷித்த ஜெபத்தை குறித்த போதனை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜெபத்தைச் செய்வது பக்தி வினயமான ஒரு செய்கை. ஜாக்கிரதையாகப் பரிசீலனை செய்தல்லாமல், அது செய்யக்கூடாது. வியாதியஸ்தரைக் குணமாக்குவதற்காகச் செய்யப்படும் அனேக ஜெபங்கள் விசுவாசக் கிரியை என்று பெயர் பெற்றிருந்தும், துணிகரமான செய்கைகளாகவே இருக்கின்றன. பாவக் காரியங்களில் ஈடுபாடுயைவர்களாயிருப்பதினாலே அனேகர் நோய் வாய்ப்படுகின்றனர். கண்டிப்பான பரிசுத்த லட்சியங்களுக்கு மாறாகவும், இயற்கைப் பிரமாணத்திற்கு ஏற்காத விதமாகவும் அவர்கள் வாழுகின்றனர். வேறு பலர் தாங்கள் புசிப்பதிலும், குடிப்பதிலும், ஆடை தரிப்பதிலும், வேலை செய்வதிலும், ஆரோக்கிய பிரமாணங்களைப் புறக்கணித்து, தவறான பழக்கங்கள் உடையவர்களாயிருக்கின்றனர். மனோ பெலன் அல்லது சரீர பெலன் குன்றுவதற்கு பல சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு வகையான பாவம் தான் காரணமாக இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாகிய ஆசிர்வாதத்தைப் பெற்றால், நோய் வருவதற்கு முன் கடவுளுடைய இயற்கைப் பிரமாணங்களையும், ஆவிக்குரிய பிரமாணங்களையும் பொருட்படுத்தாது வாழ்ந்தது போலவே மறுபடியும் வாழுவார்கள். தெய்வமே தங்கள் பிரார்த்தனைக்கு இடங்கொடுத்து தங்களை குணமாக்கினபடியால், தங்களுடைய ஆரோக்கியமற்ற பழக்கங்களிலே தொடர்ந்து கட்டுப்படின்றி மாறுபாடான போஜனப் பிரியத்திலே ஈடுபாடுடையவர்களாயிருக்கவும் தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நியாயம் சொல்வார்கள். இவர்களை சொஸ்தமடைய செய்வதாகத் தெய்வம் ஓர் அற்புதத்தை செய்தால், அவரும் பாவம் செய்வதற்கு ஊக்கம் அளித்தவராவார். CCh 640.1

இத்தகையோர் தங்களுடைய ஆரோக்கியமற்ற பழக்கங்களை விட்டு விடுமாறு போதனை அளிக்கப்பட்டாலன்றி, தெய்வம் தங்கள் நோய்களைக் குணமாக்கத்தக்கதாக அவரை நோக்கிப் பார்க்கும்படி இவர்களுக்குக் கற்பிப்பது வீணான பிரயத்தனம் ஆகும். ஜெபத்திற்கு விடையாக அவர் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு அவர்கள் தீமை செய்வதை விட்டு நன்மை செய்யப் பழக வேண்டும். அவர்கள் வாழும் சுற்றுப் புறங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்றப்படி பாதுகாக்கப்பட்டும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சரியானதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தெய்வத்தின் ஆவிக்குரிய இயற்கைப் பிரமாணங்களுக்கு இசைவாக நடந்து ஜீவிக்க வேண்டும். தங்களுடைய ஆரோக்கியத்தைத் திரும்ப அளிக்குமாறு பிரார்த்தனை செய்யக் கேட்டுக் ஒள்ளுகிறவர்களிடமாக கடவுளுடைய ஆவிக்குரிய இயற்கைப் பிரமாணங்களை மீறுவது பாவமென்றும், அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு பாவத்தை அறிக்கையிட்டு விட்டு விட வேண்டுமென்றும் தெளிவு படுத்த வேண்டும். CCh 641.1

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்”. யாக். 5:16. பிரார்த்திக்குமாறு கேட்கின்றவர்களிடம் இதைப் போன்று சில ஆலோசனைகளைக் கூறுங்கள்: “நாங்கள் இருதயத்தைப் பார்க்கவும் உங்கள் வாழ்வின் இரகசியங்களையும் அறியவும் முடியாது. இவை உங்களுக்கும் கடவுளுக்கும் மாத்திரமே தெரியும். உங்கள் பாவங்களை விட்டு நீங்கள் மனந்திரும்பினால் அவற்றை, அறிக்கை செய்வதும் உங்கள் கடமை”. சொந்த பாவங்கள் தேவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒரு மத்தியஸ்தராக விளங்கும் கிறிஸ்துவினிடத்தில் அறிக்கையிடப்படவேண்டும். ஏனெனில், “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்”. 1 யோவா. 2:1, பாவம் ஒவ்வொன்றும் தெய்வத் திற்கு விரோதமான குற்றமே. கிறிஸ்துவானவர் மூலமாக நாம் இதை அறிக்கை பண்ண வேண்டும். உடன் மனிதன் ஒருவனுக்கு விரோதமாக செய்த பாவத்தைக் குறித்து அவனுடனே சீர் பொருந்த வேண்டும். பகிரங்கமான பாவம் அனைத்தும் பகிரங்கமாக அறிக்கை செய்யப்பட வேண்டும். ஆரோக்கியமடைய வழி தேடும் யாராவது தீமையைப் பேசுதலாகிய குற்றம் உடையவர்களாயிருந்து குடும்பத்திலோ, அயலாரிடையோ சபை அங்கத்தினர்களிடையோ, பிரிவினையையும் மனவேற்றுமையையும் உண்டு பண்ணியிருந்தார்களேயாகில், குற்றமான தங்களுடைய பழக்கத்தினால் பிறரும் பாவஞ்செய்வதற்கு வழி நடத்தியிருந்தால், இவை யாவும் குற்றம் இழைக்கப்பட்டவர்கள் முன்பாகவும் கடவுள் முபாகவும் அறிக்கை செய்யப்பட வேண்டும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் எல்லா அநியாயங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்க அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்”. 1 யோவா. 1:9. செய்த தவறுகளைச் சரிப்படுத்திய பிறகு, அமர்ந்த விசுவாசத்துடனே அவருடைய ஆவியானவர் காட்டுகின்றபடியே நோயாளியின் தேவைகளை தெய்வ சமூகத்தில் வைக்க வேண்டும். யாருக்காகத் தம்முடைய நேசகுமாரனை தெய்வம் ஒப்புவித்தாரொ அவர்கள் அனைவரையும், அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பெயரையும் அவர் அறிந்திருக்கின்றா. உலகத்திலே வேறு ஆத்துமா இல்லாதது போல, இவர்களுக்காக அவர் கவலை கொள்ளுகின்றார். தெய்வம் பேரன்புடையவராகயிருப்பதாலும், அவருடைய அன்பு குறைவற்றதாக இருப்பதாலும் நோயாளி அவர் பேரிலே நம்பிக்கை வைத்து மனோற்சாகமுடையவனாயிருக்க ஊக்கப்படுத்த வேண்டும். தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது பலவீனத்தையும் நோயையும் உண்டு பண்ணுகின்றது. தங்களுடைய மனச் சோர்வையும் துக்கத்தையும் விட்டு விடுவார்களேயாகில், அவர்களுடைய ஆரோக்கியம் திரும்புவது சுலபமாகும்”. ஏனெனில் தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் “கர்த்தருடைய கண் நோக்கமாக இருக்கிறது”. சங். 33:18, 19. நோயாளிகளுக்காகப் பிரார்த்தனை செய்யும் பொழுது, “நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமல்” இருக்கிறோமென்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ரோ. 8:26. நாம் தேடுகின்ற ஆசிர்வாதம் மிகுந்த நன்மையானது தானோ அல்லவோ என்று நாம் அறிந்து கொள்ள மாட்டோம். எனவே நம்முடைய பிரார்த்தனையிலே பின்வரும் கருத்து அடங்கியிருக்க வேண்டும். “கர்த்தாவே ஆத்துமாக்கள் ஒவ்வொன்றின் இரகசியத்தையும் நீர் அறிகிறீர். இந்நோயாளிகளை உமக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்காகப் பரிந்து பேசுகிற ஆண்டவர் தம்முடைய ஜீவனை அவர்களுக்காக கொடுத்தார். இவர்கள் மீது நாங்கள் வைக்கிற அன்பைப் பார்க்கிலும், அவரே இவர்களை அதிகமாக நேசிக்கிறார். அப்படியிருக்க, உம்முடைய மகிமைக்காகவும் துன்பமடைகிற இவர்களுடைய நன்மைக்காகவுமே இவர்கள் ஆரோக்கிய திரும்புமாறு இஅயேசுவானவருடைய நாமத்தினாலே வேண்டிக் கொள்ளுகிறோம். அவர்கள் ஆரோக்கியம் திரும்புவது உம்முடைய சித்தமாக இராவிடில், அவர்கள் வேதனை அடைகையிலும் உம்முடைய கிருபையானது அவர்களை ஆறுதல் படுத்தவும், உம்முடைய பிரசன்னம் அவர்களோடு தங்கவும் வேண்டுகிறோம்”. CCh 641.2

அந்தத்தில் இருப்பதை ஆதி முதல் கொண்டு தெய்வம் அறிகிறார். மனிதருடைய இருதயங்களை அவர் அறிந்திருக்கின்றார். ஆத்துமாவின் இரகசியம் ஒவ்வொன்றையும் அறிவார். யாருக்காக பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் வாழ் நாள் நீடிக்கப்பட்டால் அவர்களுக்கு முன் வைக்கப்படும் பரிட்சைகளைத் தாங்கக் கூடுமோ, கூடாதோ என்பதையும் அவர் அறிவார். தங்களுக்கும், உலகில் பிறருக்கும் ஆசிர்வாதமாகவோ, சாபமாகவோ, எவ்வாறு அவர்கள் விளங்குவார்களென்றும் அவர் அறிவார். இந்தக் காரணத்தினாலே நாம் வாஞ்சையுடனே தெய்வ சமூகத்தில் பிரார்த்தனையை ஏறெடுக்கும் பொழுது, “ஆனாலும் என்னுடைய சித்தமல்ல உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்று கூற வேண்டும். லூக்கா 22:42. கெத்சேமனே தோட்டத்திலே இயேசுவானவர் வேண்டுதல் செய்த பொழுது, கடவுளுடைய ஞானத்திற்கும், சித்ததிற்கும் தம்மை ஒப்புவித்து, “உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்” என்று வேண்டுதல் செய்த பொழுது இந்த வார்த்தைகளைக் கூறினார். மத். 26:39. தேவகுமாரனாகிய அவருடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்படுவது பொருத்தமென்றால், குறையுள்ளவர்களும் தவறு செய்கிறவர்களுமான மனிதர் இவற்றைக் கூறி வேண்டுதல் செய்வது எத்தனை பொருத்தமுடையது! CCh 643.1

சர்வ ஞானமுடைய பரம பிதாவினடத்தில் நம்முடைய விருப்பங்கள் யாவையும் கூறி, பின்னர் முழு நம்பிக்கையுடனே அவரிடத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடுவது பொருத்தமானதாகும். நாம் அவருடைய சித்தத்தின்படியே வேண்டிக் கொள்ளும்போது, அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்று நாம் அறிந்திருக்கிறோம் என்ற போதிலும் யாவையும் முற்றுமாக அவரிடத்திலே ஒப்புவித்துவிடாமல் நம்முடைய வேண்டுதல்களை வற்புறுத்துவது தவறாகும். கடவுளிடத்திலே நாம் பரிந்து பேசுகிறவர்களாகவேயன்றி, அவருக்குக் கட்டளையிடுகிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. CCh 644.1

தம்முடைய தெய்வ வல்லமையால் கடவுள் ஆரோக்கியம் திரும்புமாறு செய்கின்ற பல நோயாளிகள் இருப்பார்கள். ஆயினும் நோயாளிகள் அனைவரும் குணமடைவதில்லை. இயேசுவானவருக்குள் அனேகர் நித்திரை அடைகின்றனர். “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது. அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். அவர்கள் கிரியைகள் அவர்கலோடே கூடப்போகும்”. வெளி. 14:13. இதிலிருந்து ஆரோக்கியம் திரும்பாத காரணத்தினால் இவ்வாறு நித்திரையடை கிறவர்கள் விசுவாசக் குறைவுடையவர்களென்று நாம் தீர்த்து விடக்கூடாதென்று கவனிக்கிறோம். CCh 644.2

நாமெல்லாம் நம்முடைய பிரார்த்தனைக்கு நேரிடையான, உடனடியான பதிலை விரும்புகின்றோம். ஜெபத்திற்குப் பதில் தாமதமடைந்தாலும் அல்லது நாம் எதிர் பார்க்கிறதிலிருந்து மாறுபட்ட பதில் வந்தாலும் அதைரியமடையும் சோதனைக்குட்படுகின்றோம். நம்முடைய பிரார்த்தனைகளுக்கு அப்போதைக்கப்போது நாம் விரும்புகிற பதிலை அளிக்காமல் மிகுந்த ஞானமடையவராகவும் நன்மையை நிறைவேற்றுகிறவராகவும் தெய்வம் தம்மை விளங்கச் செய்கின்றார். நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதைப் பார்க்கிலும் அதிகமாகவும், அதிக நன்மையானவற்றையும் நவர் நமக்கு அருளுவார். நாம் அவருடைய ஞானத்திலும் அன்பிலும் நம்பிக்கை வைத்திருக்கிறபடியால் நம்முடைய சித்தத்துக்கு அவர் இணங்குமாறு கேளாமல் நம் காரியத்தை அவர் மேற்போட்டு அவர் அதை நிறைவேற்றக் கேட்க வேண்டும். நம்முடைய விருப்பங்களும் அபிலாஷைகளும் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றால், நம்முடைய விசுவாம் கடவுள் திருவசனத்துக்கிசைவாய் உண்மையும் நேர்மையுமாந்தோ, அல்லது சமய சந்தர்ப்பங்களுக்கிசைவான உறுதியற்றதும் மாறுபடுவதுமான போக்குடையதோ என்பது வெளியாகும். விசுவாசம் அப்பியாசத்தால் பலப்படும். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு திருவசனத்தில் மேன்மையான வாக்குத்தத்தங்கள் அருளப்பட்டிருப்பதை நாம் எண்ணி, பொறுமையானது தன் பூரண கிரியைச் செய்ய அனுமதிக்க வேண்டும். CCh 645.1

அனைவரும் இந்த இலட்சியங்களை உணருவதில்லை. சொஸ்தமாக்கும் கிருபையை கர்த்தரிடமாகத் தேடுகிற அனேகர் தங்களுடைய ஜெபத்திற்கு நேரிடையும் உடனடியுமான பதில் பெற்றால் அல்லது தங்களுடைய விசுவாசத்திலே குறைபாடு உண்டென்று எண்ணுகின்றனர். இக்காரணத்தினாலே நோயினாலே பலவீனமுற்றோர்கள் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும்படி அவர்களுக்கு ஞானமான முறையில் ஆலோசனை அளிக்க வேண்டும். தாங்கள் விட்டுப் பிரிய வேண்டியதான தங்களுடையவர்களுக்குச் செய்யும் கடமையை அவர்கள் அசட்டை பண்ணக்கூடாது. அன்றி ஆரோக்கியம் திரும்பும்படி இயற்கை அளிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தாமலிருக்கவும் கூடாது. CCh 645.2

பல தருணங்களிலே இதிலே தவறு நிகழ்கின்றது. பிரார்த்தனைக்கு விடை கிடைக்குமென்ற விசுவாசம் இருக்கும் சிலர், விசுவாசக் குறைவாகக் காணப்படும் எதையும் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மரணத்தினால் அகற்றப்படுவதை எதிர்பார்ப்பதைப் போன்றே அவர்கள் தங்கள் காரியங்களையெல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டும். மரண வேளை வரும் பொழுது தங்களுக்கு அன்பாயிருக்கிறவர்களிடம் கூற விரும்பும் ஆலோசனையும், தைரியமுமான வார்த்தைகளை அளிப்பதற்கு அஞ்சவும் கூடாது. CCh 646.1

பிரார்த்தனையின் மூலம் குணமடைய விரும்புவோர் தாங்கள் உபயோகிக்கக்கூடிய குணமாக்கும் ஏதுக்களை உபயோகிக்காமல் அவற்றைத் தள்ளுதலும் கூடாது. வேதனையை நீக்கவும் இயத்தையானது குணமாக்கும் தன்னுடைய வேலையைச் செய்வதற்கு துணையாகின்ற கடவுள் அளித்திருக்கும் ஒளஷதங்களை உபயோகம் பண்ணுவதும் விசுவாசத்தை மறுதலிப்பதாகாது. தெய்வத்துடனே ஒத்துழைத்துக் குணமடைவதற்கு ஏற்ற நிலையில் நம்மை வைத்துக் கொள்ளுவது விசுவாசத்தை மறுதலிப்பது ஆகாது. ஜீவ பிரமாணங்களைப் பற்றின அறிவை அடையுமாறு தெய்வம் நமக்கு சக்தி அளித்திருக்கின்றார். அவ்வறிவை நாம் அடையுமாறு அது நமக்கு அருகாமையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் திரும்பத்தக்கதான ஒவ்வொரு சாதனத்தையும் நாம் பயன்படுத்தி, எதிலும் குறை வைக்காமல் இயற்கைப் பிரமாணங்களுக்கிசைவாக கிரியை நடப்பிக்க வேண்டும். நோயாளி குணமடையுமாறு ஜெபித்து முடித்த பின்பு நாம் தெய்வத்துடனே ஒத்துழைக்கிற சிலாக்கியத்தைப் பெற்றிருப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்தி, அவர் தாமே அளித்திருக்கும் ஏதுக்களை அவர் ஆசிர்வதிக்குமாறு வேண்டுதல் செய்து, முன்னிலும் அதிகமாக கிரியை நடப்பிக்க வேண்டும். CCh 646.2

குணமாக்கும் ஏதுக்களை உபயோகிப்பதற்கு திருவசனம் நம்மை அனுமதிக்கிறது. இஸ்ரவேலின் இராஜாவாகிய எசேக்கியா நோய்வாய்ப்பட்டபொழுது கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர் எசேக்கியா மரித்துப் போவார் என்ற செய்தியைக் கொண்டு வந்தார். அவன் கர்த்தரை நோக்கி அழுதான். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனின் அழுகையைக் கேட்டு 15 வருடங்கள் அவனுடைய ஆயுசுடனே கூட்டப்படும் என்ற செய்தியை அனுப்பினார். தெய்வத்திடமிருந்து ஒரு வார்த்தை புறப்பட்டால், எசேக்கியா உடனே குணமடைந்திருப்பான். “அத்திப்பழத்து அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் பற்றுப் போடுங்கள் அப்பொழுது பிழைப்பார்” என்று பிரத்தியேக கட்டளை கொடுக்கப்பட்டது. ஏசா. 38:21. CCh 647.1

நோயாளி குணமடையுமாறு பிரார்த்தனை செய்த பின்பு பலன் யாதாயினும், தெய்வத்தினிடமாக நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை இழந்து போகக்கூடாது. நமக்கு அருமையானவர்களை நாம் இழக்கக் கொடுக்குமாறு நேர்ந்தால், பரம தகப்பனின் கையே கசப்பான பாத்திரத்தை நம்முடைய உதடுகளுக்கு நேராகக் கொண்டு வந்ததென்று அந்த பாத்திரத்தை ஏற்றுக் கொள்வோமாக. ஆரோக்கியம் திரும்புமானால், சொஸ்தமாக்கும் கிருபையை பெற்றவர், சிருஷ்டிகருக்கு செய்து நிறைவேற்ற வேண்டிய புதிய கடமைகளுக்கு உட்படுகிறார் என்பதை மறந்து விடக்கூடாது, குணமாக்கப்பட்ட 10 குஷ்ட ரோகிகளில் ஒருவனே திரும்ப வந்து இயேசுவானவாஇக் கண்டு அவருக்கு மகிமையைச் செலுத்தினால். தெய்வ கிருபையினால் தொடப்படாத இருதயங்களை உடையவர்களாயிருந்த ஒன்பது பேரப் போலவே நம்மில் எவரும் எண்ணமற்றிருக்கக் கூடாது. “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை”. யாக். 1:17; MH 225-233. CCh 647.2