சபைகளுக்கு ஆலோசனை

233/326

வாழ்க்கைக் கடமைகளில் பயிற்சி அளிக்கும் முக்கியத்துவம்

இஸ்ரவேலரின் நாட்களைப் போலவே இளைஞர் ஒவ்வொருவரும் நடைமுறை வாழ்வில் கடமைகளைக் குறித்த போதனைகளை அறிய வேண்டும். அவசியமானால் ஏதாவது ஒரு வகையான சரீர உழைப்பின் மூலமாக உயிர் வாழ்வதற்கு தேவையான அறிவைப் பயிலுதல் வேண்டும். வாழ்வில் ஏற்றமும் தாழ்வும் ஏற்படுவதற்கு பாதுகாப்பாக மாத்திரம் அல்ல, சரீர, மானத, சன்மார்க்க அபிவிருத்தி ஏற்படுவதற்கு உதவுவதினாலேயே இது அத்தியாவசியமானது. CCh 550.1

நம்முடைய பள்ளிகளில் வெவ்வேறு விதமான தொழிலும் அமைக்கப்பட வேண்டும். அளிக்கப்படும் தொழிற் கல்வியுடனே கணக்கு வழக்கு பார்க்கவும், தச்சுத்தொழில் செய்யவும், விவசாய சம்பந்தப்பட்ட அனைத்தையும் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும். கொல்லுத்தொழில், வர்ணம் பூசுதல் செருப்பு தைத்தல், சமையற்கலை, ரொட்டி செய்தல், சலவைத் தொழில், தையல் தொழில், தட்டெழுத்துப் பயிற்சி, அச்சுத் தொழில் ஆகியவற்றைக் கற்பிக்க ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். இந்தப் பயிற்சி அளிப்பதற்கு நாம் செய்யக் கூடியவை யாவையும் செய்து நிறைவேற்ற வேண்டும். அப்பொழுது நடைமுறை வாழ்வின் கடமைகளை நிறைவேற்ற பயிற்சி பெற்றவர்களாக மாணவர் பள்ளிகளை விட்டு செல்வர். பெண் மாணவிகள் விரிவானதும் நடைமுறை பயிற்சியுடையதுமான பலவற்றை ஏற்படுத்த வேண்டும். தோட்டம் போடவும், உடை தைக்கவும், மலர் செடிகள் பயிர் செய்யவும், பழச் செடிகளை நடவும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரயோஜனமான உழைப்புக்கென்று பயிற்சி பெறும் பொழுது, அவர்கள் ஆரோக்கியமளிக்கும் திறந்த வெளியில் தேகாப்பியாசமும் அடைவர். CT 307-312. CCh 551.1

சரீரத்தின் மீது மனதிற்கு இருக்கும் செல்வாக்கும் மனதின் மீது சரீரத்திற்கு இருக்கும் செல்வாக்கும் வற்புறுத்திக் கூறப்பட வேண்டும். மனதின் அப்பியாசத்தால் மூளையின் மின்சார சக்தி அதிகரித்து, உடல் முழுவதையும் புத்துயிர் அடையச் செய்து, இவ்வாறு நோயை எதிர்ப்பதற்கு இன்றியமையாத உபகரணமாக விளங்குகின்றது. நாம் சிந்திக்க வேண்டிய உடற்கூறு சாஸ்திரத்துக் கடுத்ததோர் உண்மையைக் குறித்து வேதாகமத்திலே கூறப்படுகிறது. மன மகிழ்ச்சி நல்ல ஒளஷதம். Ed 197. CCh 551.2

குழந்தைகளும் இள வயதினரும் ஆரோக்கியமும் மனத்தெம்பும், புத்துணர்வும் பலமடைந்த தசைகளும், மூளையும் உடையவர்களாயிருக்க, பிள்ளைகள் திறந்த வெளியில் அதிக நேரம் செலவிடவும் கிரமத்திற்குட்பட்ட அலுவலும் விளையாட்டும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளியிலே வைக்கப்பட்டு, புஸ்தகப் படிப்பை மாத்திரம் அடையும் பிள்ளைகள் ஆரோக்கியமான சரீரங்களை உடையவர்களாயிருக்க மாட்டார்கள், படிக்கும் பொழுது மூளையை அப்பியசித்து அதற்கேற்றவாறு சரீர அப்பியாசம் செய்யாது விட்டால், அது மூளைக்கு அதிக இரத்தம் செல்லுமாறு செய்து, உடலின் வழியாக செல்லும் முழு இரத்த ஓட்டத்தையும் சம நிலையற்றதாக்குகின்றது. மூளை அதிக இரத்தத்தைப் பயன்படுத்துகின்றது. பாதங்களும் கரங்களும் மிகவும் குறைவாக அதை உபயோகிக்கின்றர். குறிப்பிட்ட சில மணி நேரங்களிலே பிள்ளைகள் மனதைப் பயிற்சி செய்யுமாறு விதிகள் அமைக்கப்பட வேண்டும். அப்புறமாக அவர்கள் நேரத்தின் ஒரு பகுதி சரீர உழைப்பிலே செலவழிக்கப்பட வேண்டும். அவர்கள் உணவை அருந்தும் பழக்கமும், உடை அணியும் பழக்கமும், நித்திரை பண்ணி இளைப்பாறும் பழக்கமும் சரீரப் பிரமாணத்திற்கு இசைவாக இருந்தால், சரீர, மானத ஆரோக்கியத்தை பலியிடாமல், அவர்கள் கல்வி பயிற்சி அடையலாம். CT 83. CCh 551.3