சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம்-46
கிறிஸ்தவ கல்வி
இவ்வுலக சரித்திரத்தின் முடிவான போராட்டத்தை துரிதமாக நாம் நெருங்குகின்றோம். உலகப் பள்ளிகள் அளிக்கும் அனுகூலங்களைப் பார்க்கிலும் நம்முடைய பள்ளிகளில் அளிக்கப்படும் அனுகூலங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும். CT 56. CCh 534.1
கல்வியைப் பொறுத்த மட்டிலும் நமது கருத்துக்கள் மிகவும் குறுகியவையாகவும் தாழ்ந்த தரமான தாகவும் இருக்கின்றன. விசாலமான எல்லையும் உயரிய நோக்கமுமுடையதாக இவை அமைய வேண்டும். மெய்க் கல்வி என்று கூறும்பொழுது, ஒரு குறிப்பிட்ட பாடமுறையைக் கற்பதைக் காட்டிலும் அதிகமான பொருள் அதில் அடங்கி இருக்கின்றது. இந்த வாழ்விற்குரிய ஆயத்தத்தைப் பார்க்கிலும் அதிகமாக மனிதனுடன் சம்பந்தமுடைய அனைத்துடனும் மனிதன் உயிர் வாழக்கூடிய காலம் அனைத்துடனும் அது தொடர்புடையது. அது சரீர, மானத, ஆவிக்குரிய சக்திகளை ஒன்று போலவே விருத்தி செய்வதாகும். பணி செய்வதினால் இவ்வுலகில் அடையும் இன்பத்திற்கும் தோன்றப் போகும் உலகில் பெருமளவில் செய்யும் பணியினால் உண்டாகும் இன்பத்திற்கும், இது மாணவனை ஆயத்தமடையச் செய்கின்றது. Ed 13. CCh 534.2
மிகவும் உயர்ந்த கருத்திலே கல்வி பயிற்று வித்தலும் இரட்சிப்பை போதிப்பதிலும் ஒன்றேயாகும். கல்விப்பயிற்சிக்கும், இரட்சிப்படைவதற்கும் போடப்பட்ட அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவே யல்லாமல் வேறே அஸ்திபாரத்தை போடுவதற்கு ஒருவனாலும் கூடாது. Ed 30. CCh 534.3
மனிதனைக் கடவுளிடத்திற்குத் திருப்பி, அவருடனே இசைவு பெற செய்து, அவனுடைய சன்மார்க்க இயல்பு உயர்வும் மேன்மையும் அடைந்து, சிருஷ்டிகரின் சாயலை அவன் பிரதிபடிக்கச் செய்வதே, கல்விப்பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி ஆகிய இரண்டையும் இவ்வாழ்விலே பெறுவதின் பெரும் நோக்கமாகும். இவ்வேலையானது எத்தனை முக்கிய முடையதாயிருந்ததென்றால், இயேசுவானவர் பரலோகப் பிராகரங்களை விட்டு இறங்கித் தாமே நேரில் இவ்வுலகிற்கு வந்து, வரப்போகும் இவ் வாழ்விற் குரிய தகுதியை அடைவது எப்படியென்று மனிதருக்குப் போதித்தார். CT 49. CCh 535.1
உலக வாழ்விற்குரிய திட்டங்கள், செயல் முறைகள் இப் பழக்க வழக்கங்களால் இழுத்துச் செல்லப்பட்டு, நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போலவே நாம் வாழும் காலத்தில் செய்து நிறைவேற்றப்பட்ட வேண்டிய பெரும் வேலையைக் குறித்துச் சிறிதும் எண்ணாமலுமிருப்பது கூடியதாகும். யூதர்களைப் போலவே, கடவுள் கட்டளையிடாத பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களை நம்முடைய பிள்ளைகளுக்குக் கல்விப் பயிற்சி அளிப்போர் பின்பற்றி, அவர்கள் சென்ற்த வழியிலே இவர்களும் செல்லும் ஆபத்து இருக்கிறது. பிடிவாதமாகவும் உறுதியுடனும் பழைய வழக்கங்களிலிருந்தும் அத்தியாவசியமாக இராத அனேக பாடங்களைக் கற்கும் ஆசையினின்றும் நீங்காமல், அவர்களுடைய இரட்சிப்பு இவற்றைச் சார்ந்திருக்கிறதுபோலவே அவற்றைக் கற்கின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது கடவுள் நியமித்த விசேஷித்த ஊழியத்திலிருந்து வழி விலகி, குறைபாடும் தவறுடையதுமான பயிற்சியை மாணவருக்கு அளிக்கின்றனர். 5T 150, 151. CCh 535.2
ஆத்துமாக்கள் இயேசுவைப் பார்க்கும்படி திரும்பத்தக்கதாக நம்முடைய சபைகளிலுள்ள இளைஞரை விசேஷித்த அலுவல்களுக்கென்று பயிற்சி அளிக்கக் கூடியவர்களும் சபைகளிலே ஊழியம் செய்வதற்குத் தகுதியுடையவர்களுமான ஆண்களும் பெண்களும் தேவை. உலகப் பிரகாரமான கல்லூரிகளும் வேதக் கலாசாலைகளும் நடைபெறும் ஒழுங்கு முறையையோ, பிறசபைகள் ஸ்தாபித்திருக்கும் பள்ளிகளின் ஒழுங்குமுறையையோ பின்பற்றாமல் இந்த நோக்கத்திற்காகவே நமது பள்ளிகள் நடைபெற வேண்டும், முற்றுமாக உயரிய ஒழுங்கு முறையையோ கையாண்டு வரவேண்டும். எவ்வகையான உண்மைக் கேடு தோன்றவும் அனுமதிக்கவும் இடமளிக்கக் கூடாது. நடை முறையில் கிறிஸ்தவர் ஆவதற்கு மாணவர்கள் பயிற்று விக்கப்பட வேண்டும். வேதாகமமே மிக உயரிய மகா முக்கியமான பாடமுறைத்திட்டமாக இருக்க வேண்டும். FE 231. CCh 535.3