கிறிஸ்துவைச் சேரும் வழி
GROWING UP INTO CHRIST
கிறிஸ்துவுக்குள் வளர்தல்.
இருதயம் மாறும்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம், இந்த மாறுதலுக்கு வேதத்தில் பிறப்பு என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னும், விதைக்கிறவன் விதைத்த நல்ல விதையானது முளை கிளாம்புதலுக் கிணையானது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதே பிரகாரம், கிறிஸ்துவண்டை மனந்திரும்பினவர்கள் யார் யாரோ அவரெல்லாம் “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல” 1 பேது. 2:3 கிறிஸ்துவுக்குள்ளே மனுஷராகவும் ஸ்திரீகளாகவும் “வளரவேண்டியவர்களாய்” எபே. 4:5 இருக்கிறார்கள். அல்லது வயலிலே விதைக்கப்பட்ட நல்ல விதையைப்போல, அவர்கள் வளர்ந்து நல்ல பலன் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். “அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” ஏசா. 61:3 என்று ஏசாயா சொல்லுகிறான். ஆகையால் சராசரப்பொருள்களிலிருந்து எடுக்கிற திருஷ்டாந்தங் கள், ஆவிக்குரிய ஜீவியத்தின் இரகசியமான சத்தியங்களை நமக்கு ஏற்ற பிரகாரம் விளக்கிக்காட்டவேண்டியவைகளாயிருக்கின்றன. SC 116.1
மனுஷ ஞானமும் சாமர்த்தியமும்கூடி இயற்கைப் பொருள்களில் மிகவும் சிறியதொன்றுக்கு உயிர் கொடுக்க முடியாது. தேவன் தாமே அளித்திருக்கிற ஜீவன் மூலமாக மாத்திரம் செடிகளும் மிருகங்களும் பிழைத்திருக்க முடியும். அப்படியே தேவனிடத்திலிருந்து வருகிற ஜீவன் மூலமாக மாத்திரம் ஆவிக்குரிய ஜீவனானது மனுஷருடைய இருதயத்தில் பிறக்க்க்கூடியதாயிருக்கிறது. ஒரு மனிதன் “மேலிருந்து பிறவாவிட்டால்” யோ. 3:3. கிறிஸ்து வந்து நமக்கு அளித்திருக்கிற ஜீவனுக்குப் பங்காளியாகவே மாட்டான். SC 117.1
பிராணனுக்கு எப்படியோ அப்படியே வளர்ச்சிக்கும். மொக்கானது புஷ்பமாகவும், புஷ்பம் காயாகவும் செய்வது தேவனே. அவருடைய வல்லமையினால்தான் விதையானது “முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாக்க்” மாற்கு 4:28 கொடுக்கிறது. “அவன் லீலிப்ப்புஸ்பத்தைப்போல மலருவான்” என்றும் “தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்” ஓசியா 14:5, 7 என்றும் ஓசியா தீர்க்கதரிசி இஸ்ரவேலைப் பற்றிச் சொல்லுகிறான். “காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்” லூக். 12:27 என்றும் இயேசு நமக்குக் கற்பிக்கிறார். செடிகளும் புஷ்பங்களும் வளருவது தங்கள் சொந்த கவலையுனாலுமல்ல, சொந்த முயற்சியினாலுமல்ல, அவற்றின் உயிருக்கு இன்றியமையாததென்று தேவன் தெரிந்து கொடுத்திருக்கிறதைப் பெற்றுக்கொள்வதினால் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு சிறுபிள்ளை தன்னுடைய கவலையினாலாவது, சுயமுயற்சியினாலாவது, தன் வளர்ச்சியோடு ஏதேனும் கூட்டமுடியாது. அப்படியே நீயும் உன்னுடைய கவலையினாலாவது, சுயமுயற்சியினாலாவது, ஆவிக்குரிய வளர்ச்சியடைய முடியாது. ஒரு செடியானாலும் சரி, ஒரு பிள்ளையானாலும் சரி, அதின் பிராணனுக்கு ஆதாரமான ஆகாயம், சூரியவெப்பம், ஆகாரம் ஆகிய இவற்றைப்பெற்றுக் கொள்வதினாலேயே வளருகிறது. இயற்கையிலே பொருந்தியிருக்கிற இந்த ஈவுகள மிருகராசிக்கும் விருட்சராசிக்கும் எவ்வளவு அவசியமோ, கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கும் அவர் அவ்வளவு அவசியமாயிருக்கிறார். அவர் அவர்களுக்கு “நித்திய வெளிச்சமும்” ஏசா. 60:19, “சூரியனும் கேடகமுமாயிருக்கிறார்”. சங். 84:11. அவர் “இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார் ஓசியா 14:5” “புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல இறங்குவார்”. சங். 72:6. அவரே ஜீவதண்ணீர், அவரே “வானத்திலிருந்து இறங்கி, உலகத்துக்கு ஜீவனைக்கொடுக்கிற தேவ அப்பம்”. யோ. 6:33. SC 117.2
தேவன் தமது குமாரனை விலைமதிக்கப்பட முடியாத ஈவாக அளித்தபொழுது, பூமண்டலத்தைச்சூழ இருக்கிற ஆகாயம் எவ்வளவு உண்மையானதோ அவ்வளவு நிச்சயமாகப் பிரபஞ்சம் முழுவதையும் கிருபையென்னும் ஆகாயத்தால் சுற்றி வைத்திருக்கிறார். ஜீவனளிக்கிற இந்த ஆகாயத்தை யார் யார் சுவாசிக்கிறார்களோ அவர்களெல்லாரும் பிழைத்து, கிறிஸ்துவுக்குள்ளே மனுஷராகவும் ஸ்திரீகளாகவும் வளருவார்கள். ஒரு மலரானது, தன்னுடைய அழகும் இலக்ஷணமும் பூரணமாகும்படி சூரிய கதிர்கள் தன் மேல் படத்தக்கதாக சூரியன்பக்கம் திரும்புகிறது போல, நம்முடைய சுபாவமானது கிறிஸ்துவின் சாயலாக வளர்ந்தோங்கும்படி பரலோக ஒளி நம்மேல் பிரகாசிக்கத்தக்கதாக நீதியின் சூரியன் பக்கம் நாம் திரும்பவேண்டும். SC 119.1
“என்னிலே நிலைத்திருங்கள், நான் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய்க் கனிகொ டுக்கமாட்டாத்துபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள் ...... என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” யோ. 15:4, 5 என்று இயேசு சொன்னபொழுது மேலே சொல்லியதை வற்புறுத்துகிறார். ஒரு கிளையானது வளர்ந்து கனிகொடுக்க வேண்டுமானால் தாய் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பது எவ்வளவு அவசியமோ, நீயும் பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டுமானால் கிறிஸ்துபேரில் சார்ந்த்திருப்பது அவ்வளவு அவசியமாகிறது. அவரைப்பிரித்தால் உனக்கு உயிரில்லை; சோதனையை எதிர்க்கவாவது, கிருபையிலும் பரிசுத்தத்திலும் வளரவாவது உனக்குச் சக்தியில்லை. அவரில் நிலைத்திருந்தால், செழித்தோங்குவாய். உன் ஜீவனை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுவாயானால், நீ உலர்ந்துபோவதுமில்லை, பலனற்றுப்போவதுமில்லை. நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்ட விருட்சத்தைப்போலிருப்பாய். SC 119.2
அநேகர் இந்த வேலையின் ஒருபாகத்தைத்தாங்களே செய்யவேண்டுமென்று எண்ணுகிறார்கள். அவர்கள் பாவமன்னிப்புக்கு கிறிஸ்துவை நம்பியிருக்கிறார்கள், ஆனால் தங்கள் சுயமுயற்சியால் சன்மார்க்கமாக உயிர் வாழவேண்டுமென்று எத்தனிக்கிறார்கள். இவ்விதமான ஒவ்வொரு முயற்சியும் தவறிப்போகும், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லுகிறார். கிருபையில் நாம் வளரும் வளர்ச்சி, நம்முடைய மகிழ்ச்சி, நாம் இதரருக்குப் பிரயோஜனமுள்ளவர்களாயிருத்தல் ஆகிய இவை, நாம் கிறிஸ்துவுடனே ஐக்கியப்பட்டிருந்தால் பெருகி வளரும். நாடோறும், நாழிகைதோறும் அவரோடு அன்னியோன்னிய சம்பந்தமுடையவர்களாகி, அவரிலே தரித்திருக்கிறவர்களானால், நாம் கிருபையில் வளருகிறவர்களாவோம். நம்முடைய விசுவாசத்தைத் தொடங்குகிறவரும் முடிக்கிறவரும் அவரே. முதலிலும், கடைசியிலும் எப்பொழுதும் கிறிஸ்துவே. நம்முடைய ஓட்ட்த்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மாத்திரமல்ல நம்முடைய வாழ்நாள் முழுவதிலும் அவர் நம்மோடிருக்கவேண்டியது. “கர்த்தரை எப்பொழுதும் எனக்குன் முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” சங். 16:8 என்று தாவீது சொல்லுகிறான். SC 120.1
கிறிஸ்துவில் நிலைத்திருப்பது எப்படி என்று கேட்கிறாயோ? அவரை நீ முதலாவது எவ்விதமாக அடைந்தாயோ அவ்விதமாகவே நிலைத்திருக்கவேண்டியது. “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் நடந்துகொள் ளுங்கள்”. கொலோ. 2:6. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்”. எபி. 10:38. நீ முழுவதும் தேவனுக்குச் சொந்தமாய் இருக்கவும், அவருக்கு ஊழியஞ்செய்து கீழ்ப்படிந்திருக்கவும் வேண்டுமென்று உன்னை அவருக்கு ஒப்புக்கொடுத்தாய்; கிறிஸ்துவை உன்னுடைய இரட்சகராக அங்கீகரித்தாய். உன் பாவங்களை நீயே பரிகரித்துக்கொள்ளவுமுடியாது, உன்னுடைய இருதயத்தை மாற்றிக்கொள்ளவுமாட்டாய்; ஆனால் உன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபோதோ, அவர் கிறிஸ்துவினிமித்தம் இவற்றையெல்லாம் உனக்குச் செய்கிறார் என்று நம்பினாய். விசுவாசத்தினாலே நீ கிறிஸ்துவினுடைமையானாய்; கொடுத்து வாங்குவதினாலே நீ அவர்மேல், விசுவாசத்தால் வளரவேண்டியவனாயிருக்கிறாய். உன்னுடைய ஊழியமாகிய எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்து, அவருடைய கற்பனைகளின் பிரகாரம் கீழ்ப்படியும்படி அவருக்கு உன்னையும் கொடுக்க வேண்டியது தான், கீழ்ப்படிகிறதற்கு உனக்கு வல்லமை கொடுக்கத்தக்கதாக நீ எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவேண்டியது; அதாவது எல்லா ஆசீர்வாதங்களின் நிறைவாகிய கிறிஸ்து உன்னுடைய இருதயத்தில் வாசம்பண்ணவும், அவர் உனக்குப் பலமாகவும், உனக்கு நீதியாகவும், உனக்கு நித்திய சகாயராகவும், இருக்கத்தக்கதாக அவரை எடுத்துக்கொள்ளவேண்டியது உனது கடமை. SC 121.1
அதிகாலையில் தேவனுக்கென்று உன்னைப் பிரதிஷ்டை செய்; இதே உன்னுடைய முதல் வேலையாயிருப்பதாக. “ஆண்டவரே, என்னை முழுவதும் உம்முடையவனாக அங்கீகரித்துக்கொள்ளும். நான் செய்யும்படி யோசித்திருக்கிறவை எல்லாவற்றையும் உமது பாத்த்திலே வைக்கிறேன். உம்முடைய ஊழியத்தில் இன்று என்னை பிரயோஜனமுள்ளவனாக்கும். என்னிலே தங்கியிரும்; என்னுடைய வேலையெல்லாம் உம்மிலே தொடங்கி நட்த்தப்படுவதாக” என்று ஜெபம் செய். இது நாடோறும் நடத்தவேண்டிய காரியம். ஒவ்வொரு காலையிலும் அந்த நாளுக்கென்று உன்னைத் தேவனுக்குப் பிரதிஷ்டை செய். நீ செய்யும்படி உத்தேசித்திருக்கிற காரியங்களை அவருக்கு ஒப்புவி, அப்படியானால் திருவுளச் சித்தத்தின் பிரகாரம் அவற்றை நட்த்துகிறதோ இல்லையோ என்று அறிந்துகொள்வாய். இவ்விதமாக தினந்தினம் உன்னுடைய ஜீவியத்தைத் தேவனுடைய கரங்களில் கொடுக்கலாம், உன்னுடைய ஜீவியமானது கிறிஸ்துவினுடைய ஜீவியத்தைப்போல் மென்மேலும் உருவாக்கப்படலாம். SC 123.1
கிறிஸ்துவிலே பொருந்திய ஜீவியம் அமரிக்கையான ஜீவியமாயிருக்கும். மிதமிஞ்சின சந்தோஷ முதலியன இராது; சமாதானமான நம்பிக்கை நிலைத்திருக்கும். உன்னுடைய நம்பிக்கை உன்னிடத்திலல்ல, கிறிஸ்துவிலே இருக்கிறது. உன்னுடைய பலவீனம் அவருடைய பலத்தோடும், உன் அறிவீனம் அவருடைய ஞானத்தோடும், உன்னுடைய மெலிவு எக்காலும் நிலைக்கிற அவருடைய பராக்கிரமத்தோடும் இணைக்கப்படுகிறது. அவருடைய அன்பு, அழகு, பூரண தன்மையாகிய இவற்றைப்பற்றி எப்பொழுதும் சிந்தித்துக்கொள். கிறிஸ்து தன்னைத்தான் வெறுத்தது, அவருடைய தாழ்மை, அவருடைய தூய்மை, பரிசுத்தம், விலைமதிக்கமுடியாத அவருடைய அன்பு- ஆகிய இவைகள் ஆத்தும தியானத்திற்குத் தகுந்த பொருள்களாகும். அவரை நேசித்து, அவர் நடந்ததுபோல நீயும் நடந்து, அவர் மேல் முற்றிலும் சாருவதினால், நீ அவருடைய சாயலாக மறுரூபமாவாய். SC 123.2
“என்னில் நிலைத்திருங்கள்” என்று சொல்லுகிறார். இந்த வார்த்தைகள் அமைதி, நிலைத்திருத்தல், நம்பிக்கை-என்ற அர்த்தம் கொடுக்கின்றன. “நீங்கள் எல்லாரும் என்னிடத்திலே வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத். 11:28 சங்கீதக்காரனுடைய வார்த்தைகளும் இதே கருத்துடையவர்கள் : “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” சங். 37:7. “அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்” ஏசா. 30:15 என்று ஏசாயா நிச்சயங் கூறுகிறான். இந்த அமைதி சோம்பலல்ல, ஏனெனில் நமக்கு இளைப்பாறுதல் தருவதாக வாக்குத்தத்தம் செய்து நம்து இரட்சகர் நம்மை அழைக்கும்பொழுது, அத்துடனே நாம் கிரியை செய்யவேண்டுமென்றும் கேட்கிறார் “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள் ..... உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”. மத். 11;29. கிறிஸ்துவின்மேல் எந்த ஆத்துமா பூரணமாக அமர்ந்த்திருக்கிறதோ, அந்த ஆத்துமா அவருக்காக வெகு ஊக்கமாகவும் சுறுசுறுப்பாகவும் உழைக்கிறது. SC 124.1
தன்னயமானது மனதிலே குடிகொண்டிருக்கும் பொழுது, பலத்துக்கும் ஜீவனுக்கும் மூலாதாரமான கிறிஸ்துவைவிட்டு, மனமானது விலகுகிறது. ஆகையால் இரட்சகரிலிருந்து நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவுடனேகூட ஐக்கிய சம்பந்தம் அடையாதபடித் தடுப்பதே சாத்தானுடைய முக்கியவேலை. உலகத்தின் இன்பங்கள், ஜீவியத்தின் கவலைகள், மனக்கலக்கங்கள், துக்கங்கள், இதரருடைய குற்றங்கள், அல்லது உன்னுடைய சொந்தத் தவறுதல்கள், குறைகள் - இவற்றில் ஒன்றின்மேலாகிலும் அல்லது எல்லாவற்றின் மேலாகிலும் உன்னுடைய மனதைத் திருப்பிவிடக் காத்துக்கொண்டிருப்பான். அவனுடைய மாயதந்திரங்களால் மோசம் போகாதிரு. மெய்யாகவே உணர்வுள்ளவர்களும் தேவனுக்காக ஜீவிக்க விரும்புகிறவர்களுமான அநேகர் தங்கள் குற்றங்களையும் தவறுதல்களையுமே அடிக்கடி சிந்திக்கும்படியாகச் செய்து, இவ்விதமாக அவர்களை கிறிஸ்துவிலிருந்து பிரித்துவிடுவதால் ஜெயம் பெறலாம் என்று சாத்தான் எதிர்பார்க்கிறான். தன்னயத்தை விசேஷமுள்ளதாக நாம் பாவிக்காமலும், நாம் இரட்சிக்கப் படுவோமோ என்று கவலையும் கலக்கமுமில்லாமலுமிருக்கவேண்டும். இதெல்லாம் நம்முடைய பெலனுக்கு ஊற்றானவரிடமிருந்து நமது ஆத்துமாவைத் திருப்பிவிடுகிறது. உன்னுடைய ஆத்துமாவை தேவனுடைய ஆதரவுக்கு ஒப்புவித்து, அவரையே நம்பு. இயேசுவைக் குறித்துப்பேசு, அவரைப்பற்றி நினை. உன் நினைவானது அவரைப்பற்றியே இருக்க, தன்னயம் மறைந்துபோவதாக சந்தேகத்தை அகற்று; உன்னுடைய மனக்கலக்கம் உன்னைவிட்டு நீங்குவதாக. “ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறாதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” கலா. 2:20 என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல் நீயும் சொல்லு. தேவனுக்குள் இளைப்பாறு. நீ ஒப்புவித்திருக்கிறதைப் பத்திரமாய் வைத்துக்கொள்ளக் கூடியவராயிருக்கிறார். உன்னை அவர் கரங்களில் முழுவதுமாக ஒப்புவித்து விட்டால், உன்னை நேசித்த கிறிஸ்துவின் மூலமாய், ஜெயவீரனுக்கு மேலான கனம் உனக்குக் கிடைக்கச் செய்வார். SC 125.1
கிறிஸ்து மனுஷ சுபாவத்தைத் தரித்தபொழுது மனுக்குலத்தைத் தம்முடனே அன்பென்னும் கட்டினால் கட்டினார்; இந்த அன்பென்னும் கட்டு எப்படிப் பட்ட்தென்றால் மனுஷன் தானே வேண்டாமென்று வெறுத்தாலொழிய வெறெந்தச் சக்தியினாலாவது அறுந்துபோகக்கூடாத பலமுள்ளது. நாம் இந்தக் கட்டை அறுக்க, அதாவது கிறிஸ்துவினிடத்திலிருந்து நாம் பிரத்தியேகப் படுத்திக்கொள்ள நமது கண்களுக்குப் பகட்டானதைக் காட்டி இழுக்கும்படி சாத்தான் எப்பொழுதும் பிரயாசைப்படுகிறான். ஆகையால் இங்கே அவன் நாம் வேறொரு எஜமானைத் தெரிந்துகொள்ள நம்மை மயக்கிவிடாதபடி நாம் எச்சரிக்கையுடனே விழித்திருந்து ஜெபம் செய்யவேண்டியதவசியம், ஏனெனில் நமதிஷ்டம் போல செய்யும் சிலாக்கியம் நம்க்குண்டு. ஆனால் நாம் கிறிஸ்துபேரிலே கண்ணாயிருப்போமானால் அவர் நம்மைக் காப்பாற்றுவார். இயேசுவை நோக்குவோமாகில் நமக்கு யாதொரு அபாயமுமில்லை. ஒன்றாகிலும் அவர் கரங்களினின்று நம்மைப் பறித்துக் கொள்ளமுடியாது. எப்பொழுதும் நாம் அவரைப்பார்க்கும்பொழுது, “ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”. 2 கொரி. 3:18. SC 126.1
இப்படியே ஆதியில் சீஷர்கள் தங்களுடைய பிரிய இரட்சகருடைய சாயலை அடைந்தார்கள். அவர்கள் இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டபொழுது, அவர் தங்களுக்கு இன்றியமையாதவரென்று உணர்ந்த்தார்கள். அவர்கள் அவரைத்தேடிக் கண்ட்டைந்து பின்பற்றினார்கள். வீட்டிலும், சாப்பிடும் மேசையிலும், உள்ளறையிலும் வெளியிலும் அவருடனே இருந்தார்கள். உபாத்தியாயர் ஒருவரிடத்திலே மாணாக்கர்கள் இருக்கிறதுபோல, அவர்கள் அவரோடிருந்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட அமிர்தம் போன்ற சத்திய போதகத்தைத் தின்ந்தோறும் கற்றுக்கொண்டிருந்தார்கள். வேலைக்காரர் தங்கள் எஜமான்களை நோக்குகிறதுபோல, இவர்கள் தங்கள் கடமையை அறிந்துகொள்ளும்பொருட்டு அவரையே நோக்கினார்கள். அந்தச் சீஷர்கள் “நம்மைப்போலப்பாடுள்ள” யாக். 5:17 மனுஷர்தான். அவர்களும் நம்மைப்போலவே பாவத்தோடு போர் புரிய வேண்டியதாயிருந்த்து, பரிசுத்தமாக வாழ்நாள் கழிப்பதற்கு அதே கிருபையும் அவர்களுக்குத் தேவையாயிருந்தது. SC 128.1
கிறிஸ்துவுக்கு உகந்த சீஷனும், அவருடைய சாயலைத் தனது ஜீவியத்தில் பூரணமாக விளங்கச் செய்தவனுமாகிய யோவானிலும்கூட அந்தச் சிறந்த குணம் இயற்கையாகப் பொருந்தியிருக்கவில்லை. அவன் சுயநலப் பிரியனும் கனத்தின்மேல் ஆசை கொண்டவனுமாயிருந்ததுமன்றித் தனக்கு யாராவது ஒரு கெடுதி செய்தால் உக்கிரமும் பொறாமையும் கொள்ளுகிறவனாயுமிருந்தான். ஆனால் கிறிஸ்துவினுடைய குணாதிசயம் அவனுக்குக் காட்சியான பொழுது, தன்னுடைய சொந்தக் குறைவைக்கொண்டு, மனத்தாழ்வடைந்தான். தேவ குமாரனில் ஒவ்வொரு நாளும் விளங்கின பெலனையும் பொறுமையையும், பராக்கிரமத்தையும் உருக்கத்தையும், அதிகாரத்தையும் சாதுவையும் அவன் கண்டான்; கண்டு தனது ஆத்துமாவிலே வியப்பும் அன்பும் நிறைந்தவனானான். அவனுடைய இருதயமானது தின்ந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்துவுக்கு நேரே இழுப்புண்டது, கடைசியாக அவனுடைய ஆண்டவர்மீது அன்பு பெருகவே தன்னயமானது கண் மறைந்து போயிற்று. கிறிஸ்து தன்னைச் சீர்ப்படுத்தும்படியாகத் தன்னுடைய பொறாமையுள்ள சுபாவத்தையும் பேராசையையும் அவருக்கே ஒப்புவித்தான். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இருதயத்தைப் புதுப்பித்து உயிர் அளித்தார். கிறிஸ்துவினுடைய அன்பானது அவனுடைய நட்த்தையை மறுரூபப்படுத்திற்று. ஒருவன் இயேசுவோடு ஐக் கியப்படும்பொழுது உண்டாகிற மாறுதல் இது தான். கிறிஸ்து அவனுடைய உள்ளத்தில் நிலைத்திருக்கும் பொழுது அவனுடைய முழுச்சுபாவமும் மாறுகிறது. கிறிஸ்துவினுடைய தன்மையான அவருடைய அன்பானது, இருதயத்தை இளகச் செய்து, ஆத்துமாவை அடக்கி, தேவனுக்கும் பரலோகத்துக்கும் நேரே நம்முடைய, சிந்தனைகளையும், ஆசை விருப்பங்களையும் எழுப்புகிறது. SC 129.1
கிறிஸ்து பரலோகத்துக்கு எழுந்தருளின பின்னுங்கூட அவர் பிரசன்னம் தங்களுடனே இருப்பதாக சீஷர்கள் அறிந்தார்கள். அவர் அவர்களுடன் இருந்தது மாயையல்ல, அன்பும் ஒளியும் பொருந்தின ஒரு ஆள் போல இருந்தார். இயேசு இரட்சகர் அவர்களோடு நடந்து பேசி ஜெபித்துக்கொண்டு வந்தார்; அவர்களுடைய இருதயங்களுக்கு நம்பிக்கையையும் தேறுதலையும் அளித்தார்; இவ்வாறாகச் சமாதானத்தின் சுவிசேஷம் அவருடைய வாயிலிருக்கும்பொழுதே அந்த இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளினார்; தூதருடைய கூட்டம் அவரை ஏற்றுக்கொண்டபொழுதும் அவருடைய சத்தத்தின் தொனி அவர்களண்டை மீண்டும் வந்த்து, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” மத். 28.:20. மனுஷ ரூபமாக அவர் பரலோகத்துக்கு ஏறினார் அவர் தங்களுடைய சிநேகிதனாகவும் இரட்சகராகவும் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்னே வீற் றிருப்பதாகவும், அவருடைய உருக்கம் மாறாததாகவும், பாவத்தில் உழலுகிற மனுஷரைப் போன்ற தன்மை பொருந்தியவராகவுமே அவர்கள் அறிந்தார்கள். மகிமை சூழ்ந்த ஆசனங்களின் மத்தியிலிருந்துகொண்டு, கெட்டுப்போன மனுக்குலத்துக்காக மன்றாடும்பொழுது, காயப்பட்ட, அவருடைய கரங்களும், குத்துண்ட விலாப்பக்கமும், காயத்தின் தழும்புள்ள பாதங்களும், இவர் மீட்டுக்கொண்டவர்களின்மேல் எவ்வளவு அன்புள்ளவர் என்பதைத் தெளிவாக விளக்கிற்று. அவர் பரலோகத்துக்குப்போனது தங்களுக்காக ஸ்தலங்களை ஆயத்தப்படுத்த என்றும் அவர் திரும்பி வந்து அவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வார் என்றும் அறிந்திருந்தார்கள். SC 130.1
இயேசு பரலோகத்துக்குப் போனபின்பு அவர்கள் ஒருங்கே கூடினபொழுது பிதாவை நோக்கி இயேசுவின் நாமத்தினாலே பிரார்த்தனை செய்யும்படி விரும்பினார்கள். “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” யோ. 16:23, 24 என்ற வாக்கைச் சொல்லிக்கொண்டு பயபக்தியுடனே தலைவணங்கி ஜெபம் செய்தார்கள். “கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்து மிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலுமிருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” ரோமர் 8:34 என்ற பலமான நியாயத்தைக்காட்டி, விசுவாசக்கரங்களை உயர்த்தி ஜெபித்தார்கள். “உங்களுக்குள்ளே இருப்பார்.” யோ. 14:17 என்று கிறிஸ்து சொல்லியிருந்த தேற்றரவாளனை அவர்கள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் பெற்றார்கள். “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” யோ. 16:7 என்றும் கிறிஸ்து சொன்னார். இதுமுதல் ஆவியானவர் மூலமாகக் கிறிஸ்து தமது பிள்ளைகளுடைய இருதயத்தில் எப்பொழுதும் வாசஞ்செய்வார் என்றாயிற்று. அவர் மனுஷனாக அவர்களோடு இருந்ததைப்பார்க்கிலும், இப்பொழுது அவருக்கும் அவர்களுக்குமுள்ள ஐக்கியம் நெருங்கிற்று. அவர்களில் வசிக்கும் கிறிஸ்துவினுடைய ஒளி, அன்பு, வல்லமை ஆகிய இம்மூன்றும் அவர்கள் மூலமாகப் பிரகாசிக்கவே, ஜனங்கள் இவர்களைக்கண்டு “ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்துகொண்டார்கள்” அப். 4:13 SC 131.1
ஆதியில் கிறிஸ்து தமது சீஷர்களுக்கு எவ்விதமாயிருந்தாரோ அவ்விதமாகவே இப்பொழுதும் தமது பிள்ளைகளிடத்திலும் இருக்கவிரும்புகிறார்; ஏனெனில் தம்மைச் சுற்றி நின்ற சிறிய சீஷக்கூட்டத்தாரோடு அவர் செய்த கடைசி ஜெபத்தில் “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” யோ 17:20 என்றும் சொன்னார். SC 133.1
இயேசு நமக்காக ஜெபித்தார்; தாம்பிதாவோடு ஒன்றாயிருக்கிறதுபோல, நாமும் அவரோடு ஒன்றாயிருக்கும்படி கேட்டார். என்ன ஐக்கியம் பாருங்கள்! “குமாரன் வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” யோ. 5:19 என்றும், “என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்” யோ. 14:10 என்றும் இரட்சகர் தம்மைக்குறித்துப் பேசியிருக்கிறார். இப்படி கிறிஸ்து நம்முடைய இருதயங்களில் வசிக்கிறதுண்டானால், “தம்முடைய தயவுள்ள சித்தத்தின் படி விருப்பத்தையும் செய்கையையும்” பிலிப். 2:13 நம்மில் நடத்துவார். நாமும் அவரைப்போல கிரியை நடப்பித்து, அதே தன்மையைக் காட்டுவோம். இவ்விதமாக நாம் அவரை நேசித்து, அவரிலே நிலைத்திருக்கிறபடியால் “தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருப்போம்” எபே. 4:15. SC 133.2